Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிக் கொலை - குற்றமும் கொண்டாட்டமும் - கருணாகரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலிக் கொலை - குற்றமும் கொண்டாட்டமும்

கருணாகரன்

4e49f455-904a-4d57-b6dc-4fe1a0c97bf31.jp

 

புலியைக் கொல்லும்போது அது கொண்டாட்டமாகவே மாறி விடுகிறது.

இது ஏன்?

புலி பயங்கரமாக இருப்பதாலா? அல்லது அப்படி உணர்வதனாலா? அல்லது புலியை எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்ற உள்ளுணர்வின் தூண்டலினாலா?

02

கிளிநொச்சி அம்பாள்குளம் என்ற காட்டோரக் கிராமத்தினுள் புகுந்த (சிறுத்தை) புலியை 2018.06.21 இல் அந்தக் கிராமவாசிகள் அடித்துக் கொன்றனர். பிறகு அதைப் படமெடுத்து முகப்புத்தகம் உட்படச் சமூக வலைத்தளங்களில் பரவினார்கள்.

ஊருக்குள் வந்த புலியைத் தேடுவதும் பிறகு அதைச் சுற்றி வளைத்துப் பலர் தாக்குவதும் கொல்வதும் கொன்றபின் இறந்த புலியின் உடலைத் தூக்கிக் கூட்டாகக் கொண்டாடுவதும் இந்தக் காட்சிகளில் தெரிந்தன.

கொன்ற புலியைத் தூக்கிக்கொண்டு நின்று 'செல்பி' மற்றும் 'வீடியோ' எடுத்துப் பகிரங்க வெளியில் போடுவது தற்காப்பு நிலையின் வெளிப்பாடல்ல. அது ஒரு கொண்டாட்ட மனநிலையின் வெளிப்பாடே.

இதைத் தொடர்ந்து இரண்டு மூன்று நாட்களாக இந்தப் படங்களும் இதைப்பற்றிய விவாதங்களுமாகவே பொதுவெளி நிரம்பியது. இப்பொழுது இது சட்டப் பிரச்சினையாகவும் மாறியுள்ளது. அதாவது குற்றமாகியிருக்கிறது.

4e49f455-904a-4d57-b6dc-4fe1a0c97bf34.jp

விலங்குகள் பாதுகாப்புச் சட்டம், இயற்கை பேண் விதிமுறைச் சட்டம், சூழலியல் தகவமைப்புச் சட்டம் என்ற அடிப்படைகளில் இது குற்றமாகக் கருதப்பட்டு, புலியைக் கொன்றவர்களும் அதைத் தூக்கிக் கொண்டாடியவர்களும் குற்றவாளிகளாகக் கருதப்படுகிறார்கள்.

'புலியைக் கொன்று செல்பி – வீடியோ எடுத்து முகநூலில் பதிவேற்றி சொந்தக் காசில் சூனியம் வைத்திருக்கிறார்கள்' என இந்த நிலைமையப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார் ஊடகவியலாளர் மு.தமிழ்ச்செல்வன்.

இப்பொழுது புலியைத் தாக்கிக் கொன்றவர்களையும் அதைப் படமெடுத்துப் பரப்பியவர்களையும் கைது செய்யும்படி ஆணையிட்டிருக்கிறது நீதிமன்றம். இதன்படி கொண்டாடியவர்களைத் தேடி வலைவிரித்திருக்கிறது பொலிஸ்.

இதுவரையில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏனையவர்கள் விரைவில் கைது செய்யப்படலாம். அல்லது அவர்களாகவே பொலிசிலோ நீதிமன்றத்திலோ சரணடையக் கூடும்.

ஆனால், இந்தக் கைதுகள் சனங்களின் மத்தியில் பதற்றத்தையும் கோபத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளன. என்றாலும் அடுத்ததாக தாங்கள் என்ன செய்வது? தங்களால் என்ன செய்ய முடியும் என்ற குழப்பத்தில் இருக்கிறார்கள் எல்லோரும்.

இதேவேளை 'என்னதானிருந்தாலும் புலியைத் தாக்கியிருக்கத் தேவையில்லை. கொன்றிருக்கத் தேவையில்லை. சரி தவிர்க்க முடியாத சூழலில் அப்படித்தான் பாதுகாப்பின் நிமித்தமாகக் கொன்றிருந்தாலும், கொன்ற பிறகு அதை இப்படிக் கொண்டாடியிருக்கவே கூடாது' என்கின்றனர் பலர்.

அது நியாயமான கருத்தே.

ஏனென்றால், புலி (சிறுத்தை) இலங்கையில் அரியவகை உயிரினம் என்பது ஒரு காரணம். இலங்கையில் மட்டுமல்ல, உலகிலேயே அருகிவரும் உயிரினங்களில் ஒன்றும் கூட. இந்தோனேசியா, இந்தியா, சீனா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளில்தான் இந்த வகைப் புலிகள் உள்ளன. அதுவும் மிகக் குறைந்தளவு பரம்பலையே கொண்டிருக்கின்றன. இதனால் இவற்றின் பெருக்கத் தொகை வீழ்ச்சி நிலையிலேயே உள்ளது. இதன் காரணமாக சர்வதேச இயற்கை பேண் சமவாயத்தினால் அருகி வரும் நிலையை உள்ள இனமாக இந்தப் புலியினம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

ஆகவே இவ்வாறான அரியவகை உயிரினங்களைப் பாதுகாக்க வேண்டுமே தவிர, எந்த நிலையிலும் அவற்றை அழிக்கக் கூடாது.

உயிரினங்களின் பாதுகாப்பு என்பது ஒரு வகையில் நமது பாதுகாப்பும்தான். அது சிதையுமாக இருந்தால் இயற்கையின் அனைத்துத் தளங்களிலும் சிதைவுகள் உண்டாகும். இயற்கையின் சமநிலைக் குலைவு நேரடியாகவே சூழலைத் தாக்கும். அதைத் தடுத்து நிறுத்துவது கடினம்.

இயற்கையானது உயிரினங்களிடையே சமனிலையைப் பேணுவதற்கான தகவமைப்பை தன்னகத்திலே கொண்டுள்ளது. உணவுச் சங்கிலி முறைமை அதிலொன்று. மரங்களும் தாவரங்களும் பெருகாதிருக்க தாவர உண்ணிகளை இயற்கை உருவாக்கியுள்ளது. இந்தத் தாவர உண்ணிகளால் காடு அழியாமலிருக்க விலங்குண்ணிகளை அது உருவாக்கியிருக்கிறது. விலங்குண்ணிகள் வலிமையாக இருந்தால்தான் வேட்டையாடலாம். அப்படி வலிமையாக இருக்கும் விலங்குண்ணிகளைப் பெருகாமல் தடுக்க வேண்டும். இல்லையென்றால் அவற்றினால் தாவர உண்ணிகள் முழுமையாக வேட்டையாடப்பட்டுவிடும். ஆகவே அவை பெருகாமல் தடுப்பதற்கும் இயற்கை ஒரு ஏற்பாட்டைச் செய்திருக்கிறது. புலிகளும் சிங்கங்களும் தங்கள் குட்டிகளைத் தாமே தின்பதும் கொன்றொழிப்பதும் இந்தச் சமனிலையின் மாறா விதிக்காகவே.

ஆனால், 'ஊருக்குள் வந்து சனங்களைத் தாக்கிய புலியைக் கொல்லாமல்  என்ன செய்வது? தற்காலிகமாக விரட்டி விடலாம். மறுபடியும் அது ஊருக்குள் வராது என்பதற்கு என்ன உத்தரவாதம்' என்று அந்தக் காட்டோரக் கிராமவாசிகள் யதார்த்தமாகக் கேட்கிறார்கள்.

மேலும் அவர்கள் கேட்கிறார்கள், 'அன்று பாடசாலைக்குள் அந்தப் புலி நுழைந்திருந்தால் நிலைமை என்னாகியிருக்கும்? அதை விட நாங்கள் பொறுப்பானவர்களுக்கெல்லாம் அறிவித்தோம். வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு அறிவித்தோம். பொலிசுக்குச் சொன்னோம். கல்வித் திணைக்களத்துக்குத் தகவல் அனுப்பினோம்.

'இதனையடுத்து உடனடியாக கல்வி அதிகாரிகள் அந்தப் பகுதிக்கு விரைந்து வந்து மாணவர்களைப் பாதுகாப்பான பகுதிக்கு (பாடசாலையின் மேல் மாடிகளுக்கு) நகர்த்தினார்கள்.

'காவல்துறையினர் வந்து நிலைமையைப் பார்த்துக் கொண்டு நின்றனரே தவிர உரிய முறையில் செயற்படவில்லை. அதோடு நிலைமையைக் கட்டுப்படுத்தக்கூடிய அளவிலான காவல்துறையினர் அங்கே வரவும் இல்லை.

வனஜீவராசிகள் திணைக்களத்தினர் வந்தார்கள். ஆனால் அவர்களிடம் புலியைக் கட்டுப்பாட்டில் கொண்டு வரக்கூடிய பொருத்தமான உபகரணங்கள் எதுவும் இல்லை. 'மயக்க மருந்தடிக்கக் கூடிய துப்பாக்கியை யாழ்ப்பாணத்திலிருந்தே எடுத்து வரவேணும்' என்று கூறினார் அங்கே வந்த வனஜீவராசிகள் உத்தியோகத்தர் ஒருவர்.

'இப்படிப் பொறுப்பானவர்கள் பாதுகாப்பில்லாத – உத்தரவாதம் இல்லாத பதில்களைச் சொல்லிக் கொண்டிந்தனரே தவிர, ஊருக்குள் நிற்கும் புலியை விரட்டவோ கட்டுப்பாட்டில் கொண்டு வரவோ கூடிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

'இந்த நிலையில்தான் கிராம மக்கள் தங்களுக்குத் தெரிந்த வழிமுறைகளைப் பின்பற்றிப் புலியைக் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு முயற்சித்தனர். இதன்போது வனஜீவராசிகள் திணைக்களத்தைச் சேர்ந்தவர்கள் சற்றுப் பொறுமை காத்து, தமக்கு ஒத்துழைக்குமாறு கேட்டனர். அது உண்மையே.

'ஆனால் பதற்றத்தோடும் பாதுகாப்பின்மையோடும் நிற்கும் ஒரு அபாயச் சூழலில் இந்தப் பதிலைக் கேட்டுக் கொண்டு மக்கள் நிற்க மாட்டார்கள் என்பது யதார்த்தம்.

'இதிலே மக்களுக்கு வந்த ஆகக்கூடிய கோபம் என்னவென்றால், வனஜீவராசிகள் திணைக்களத்தின் அலுவலகம் அந்தச் சுற்றயலில்தான் உள்ளது. அப்படியிருந்தும் அவர்களால் எப்படிப் புலியின் நடமாட்டம் பற்றி அறியமுடியாதிருந்தது? இன்னொன்று, காடிருக்கும் கிளிநொச்சியில் விலங்குகளால் ஏற்படும் அபாய நிலையைக் கட்டுப்படுத்துவதற்கான கருவிகள் இல்லாமல், அவை யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டிய காரணம் என்ன?' என.

இந்தக் கேள்விகளுக்கான பதில்களை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் சொல்ல வேணும். காவல்துறையும் நீதித்துறையும் கண்டறிய வேண்டும். அரசாங்கம் பதில் கூறவேண்டும்.

இதேவேளை மறுபக்கத்தில் மக்களாகிய நாம் கண்டறிய வேண்டிய – பொறுப்பேற்க வேண்டிய உண்மைகளும் உள்ளன.

அன்று சனங்களைத் தாக்குவதற்காகவோ வளர்ப்புப்பிராணிகளை வேட்டையாடுவதற்காகவோ அந்த ஊருக்குள் வந்ததாகக் கருத முடியாது. அப்படியான நோக்கில் வந்திருக்குமாக இருந்தால் அது ஏற்கனவே பல நாட்களாக ஊருக்குள்ளும் ஊருக்கு வெளியிலும் வளர்ப்புப் பிராணிகளை வேட்டையாடியிருக்கும். மேய்ச்சல் நிலங்களில் அச்சுறுத்தலாக இருந்திருக்கும். ஊருக்குள் சனங்களைக் கிலியூட்டியிருக்கும். அல்லது தாக்கியிருக்கும்.

ஆனால், அப்படியெல்லாம் நடக்கவேயில்லை. மாறாக சம்பவம் நடைபெற்ற அன்று எதிர்பாராத விதமாக வழிதவறியோ வேறு காரணமாகவோ அது ஊருக்குள் நுழைந்து விட்டது. அந்தப் பதற்றத்தில்தான் அது வழியில் காண்போரைத் தாக்கியிருக்கிறது. புலியைச் சனங்கள் நெருங்க நெருங்க அது சீற்றத்தோடு ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பத்துப் பேரைத் தாக்கியுள்ளது.

'பத்துப்பேரைத் தாக்கிய புலி கொல்லப்பட்டது' என்ற செய்தி அளிக்கை மட்டும் வெளியரங்கில் காட்டப்பட்டது. ஆனால், உண்மை நிலவரம் மேலே கூறப்பட்டதேயாகும். இதையும் விட இன்னொரு விசயமும் இதன் பின்னே மறைந்துள்ளது.

இன்று காடுகள் பெருமளவில் அழிக்கப்பட்டு வருகின்றன. இதற்குப் பல காரணங்கள். போரினால் பெருமளவு காடுகள் வடக்குக் கிழக்கில் அழிந்துள்ளன. குறிப்பாக வன்னியிலும் கிழக்கில் படுவான்கரையிலும் மூன்றில் ஒரு பகுதி காடுகள் அழிந்து போயுள்ளன. போதாக்குறைக்கு இந்தப் பிரதேசங்களில் இப்பொழுது காடுகள் முழுவதிலும் படையினர் நிரம்பிக் கிடக்கிறார்கள். இன்னொரு பக்கத்தால் துரித அபிவிருத்தி என்ற பெயரில் கிறவல் அகழ்வு, மணல் அகழ்வு, கல்லுடைப்பு, மரம் வெட்டுதல் என்றெல்லாம் காட்டுப்பிரதேசங்கள் குறிவைத்த அழிக்கப்படுகின்றன. மறுபக்கத்தில் காடுகளை அழித்துச் சனங்கள் குடியேறுகின்றனர். அம்பாள்குளம் பிரதேசத்துக்கு அண்மையாக உள்ள ஊற்றுப்புலம் பிரதேசத்தில் தற்போது சனங்கள் அத்துமீறிக் குடியேற்றப்படுவது இதற்கு அண்மைய உதாரணம்.

இந்தமாதிரியான காரணங்களினால் கானுயிர்கள் வழிதடுமாறுகின்றன. யானைகளும் காட்டுப்பன்றிகளும் ஊர்களுக்குள் நுழைகின்றன. 'யானையும் வெள்ளமும் ஊருக்குள் ஒரு போதுமே வருவதில்லை. அவற்றின் வழியை இடைமறித்து நாம்தான் குடியிருக்கிறோம்' என்று சொல்வார் எங்கள் அப்பா. இது நூறு வீதம் உண்மை.

'காட்டிலிருந்து ஒரு சிறுத்தை

நாட்டுக்கு வருகிறது என்றால்

ஓராயிரம் பாலை மரங்களும்

ஓராயிரம் தேக்கு மரங்களும்

ஓராயிரம் முதிரை மரங்களும்

கொள்ளை போய்விட்டன என்று அர்த்தம்

ஒரு பேராற்றின் குடும்பமே

இறந்துவிட்டது என்று அர்த்தம்

பத்தாயிரம் பறவைகள்

கடல்கடந்து பறந்துவிட்டன என்று அர்த்தம்

நூறாயிரம் வண்ணத்துப்பூச்சிகளும்

ஆயிரமாயிரம் தேனீக்களும்

செத்துப்போய்விட்டன என்று அர்த்தம்

ஒரு போகமல்ல

பல போகங்கள்

பொய்க்கப்போகின்றன என்று அர்த்தம்

மோப்பம் பிழைத்து

வழிதவறி

வந்த அச்சிறுத்தையை கொன்ற நாங்கள்

எங்களுடைய குடும்ப

குழந்தைகளையும் பெண்களையும்

உயிரோடு

கொளுத்திக் களித்தோமென்று அர்த்தம்'

என்று எழுதியிருக்கும் நட்சத்திரன் செவ்விந்தியனின் கவிதை இங்கே கவனத்திற்குரியது.

ஆகவே, புலி நம்மை நோக்கி, மக்கள் குடியிருப்பை நோக்கி வருவதற்கான காரணமாக இருந்தது மனிதர்களாகிய நாமே தவிர, புலியல்ல. இந்த நிலையில் முதல் குற்றவாளிகளும் நாமே. தொடரும் குற்றவாளிகளும் நாமே. இந்த நிலையில் புலியை எப்படித் தண்டிக்க முடியும்? கொல்ல முடியும்? இதற்கான உரிமை எந்த வகையில் நமக்குண்டு?

03

2009 இல் புலிகளைத் தோற்கடித்த படையினர் அதை வெற்றியாகக் கொண்டாடினார்கள்.

களத்தில் நின்ற படையினர் மட்டுமல்ல, அரசும் அதைக் கொண்டாடியது.

அரச தலைவர்கள், பிற கட்சியினர், மதகுருக்கள், சிங்கள மக்கள் எனச் சகலரும் அப்பொழுது வெற்றிக்களிப்பில் கொண்டாடினார்கள்.

கொல்லப்பட்ட புலிகளின் உடல்கள் பல கோணங்களில் படமாக எடுக்கப்பட்டது. சிறைப்பிடிக்கப்பட்ட புலிகள், சரணடைந்த புலிகள் எனச் சகலரும் படமாக்கப்பட்டனர். சீரழிக்கப்பட்ட பெண்புலிகளும் கொண்டாட்டத்தின் காட்சிப் பொருளாக்கப்பட்டனர்.

இந்தக் காட்சிகள் எல்லாம் எப்பொழுதும் உங்கள் கண்களில் தோன்றும். மனதில் விரியும்.

இதையிட்டு 'இவர்களில்' யாரும் வெட்கப்படவோ வருத்தப்படவோ இல்லை. யாரும் கண்டிக்கவில்லை. எந்தச் சட்டங்களும் இதைப்பற்றி வாய் திறக்கவேயில்லை.

அநேகமான சிங்கள, ஆங்கில ஊடகங்களும் இதைப் பார்க்காமல், பார்க்க விரும்பாமல் 'அறத்தின் கண்களை' இறுக மூடிக்கொண்டன. வெட்கத்தினாலோ குற்றவுணர்ச்சியினாலோ அப்படி இருந்தன என்று சொல்ல முடியாது. 'தோற்கடிக்கப்பட்டது புலி' என்ற மகிழ்ச்சி உண்டாக்கிய 'கண் மறைப்பு' அது.

ஏன் மதபீடங்கள், புத்திஜீவிகள் போன்ற தரப்புகளும் கூட இதைப்பற்றிப் பேசவில்லை. அல்லது அவற்றுக்கு இதெல்லாம் பொருட்டாகத் தோன்றவில்லை.

புலிகளைக் கொன்றதும் வென்றதும் அதைக் கொண்டாடிக் களித்ததும் இலங்கைக்குள் மட்டுமல்ல, நாட்டுக்கு வெளியே உலகரங்கிலேயே அது பகிரங்கமாகப் பெருங் காட்சியாக்கப்பட்டுள்ளது.

இதனையிட்டு எந்தச் சட்டமும் மனிதாபிமானமும் யாரையும் கேள்வி கேட்டதில்லை. யாரையும் கைது செய்ய உத்தரவிட்டதில்லை. இதற்காக யாரும் கைது செய்யப்பட்டதோ சிறையில் அடைக்கப்பட்டதோ இல்லை. யார் மீதும் குற்றச்சாட்டுகளைச் சுமத்தியதும் இல்லை. யாரும் தேடப்பட்டதும் இல்லை.

ஆனால், இந்தக் கொண்டாட்டத்தில் பங்கேற்றவர்கள், படமெடுத்துக் களித்தவர்கள் அத்தனைபேரின் அடையாளங்களும் துலக்கமாக, சான்றாக உள்ளன.

அவர்கள் அத்தனைபேரும் பணியில் இருக்கிறார்கள். பதவிகளை வகிக்கிறார்கள். பதவி உயர்வுகளையும் பாராட்டுகளையும் பெற்றிருக்கிறார்கள்.

காலம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டேயிருக்கிறது.

இது எப்படி நிகழ்கிறது?

'மான் சுட்டால் அன்றி

மரை சுட்டால், மயில் சுட்டால்

ஏன் என்று கேட்க இந்நாட்டில் சட்டமுண்டு

மாடடித்தல் கூட, மறைவான ஓரிடத்தில்

சாகடிக்க வேண்டுமெனச்

சட்டத்தில் இடமுண்டு.

கொக்குச் சுடுதல் குற்றம்

பயிரழித்து

திக்கெட்டும் நடந்து திரிகின்றன ஆனையினை

சுட்டால் அது குற்றம்

'சுதந்திர பூமியிலே'

சட்டம் இதற்கெல்லாம் தண்டிக்கும்;

தண்டிக்க வேண்டியதே..

நாய்பிடிக்கக் கூட நகரசபைக் காரர்கள்

நீபிடிக்கலாமென்று நியமனங்கள் செய்துள்ளார்

மானுக்கு, மாட்டுக்கு

மரையோடு, மயிலுக்கு

ஆனைக்குக் கூட அனுதாபப்படும் நாட்டில்

மனித உயிர் மட்டும் மலிவு

மிக மலிவு'

என எழுதினார் கவிஞர் புதுவை இரத்தினதுரை. இறுதியில் அவரும் ஒரு 'புலி' என்ற அடையாளத்தோடு பலியாக்கப்பட்டு விட்டார். எல்லாப் புலிக் கொலைகளும் இன்று கொண்டாட்டமாகி விட்டன.

ஆனால், இவை மன்னிப்புக்கு அப்பாலான, மனித நாகரீகத்துக்கு மாறான முழுத்தவறுகளாகும்.

00

 

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=7&contentid=4e49f455-904a-4d57-b6dc-4fe1a0c97bf3

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.