Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கற்பு! - வரதர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கற்பு!… ( சிறுகதை ) வரதர்.

July 03, 2018
   

சிறப்புச் சிறுகதைகள் (6) – மூத்த படைப்பாளர்களின் சிறுகதைகளை இளம் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் – தி.ச.வரதராசன் எழுதிய ‘கற்பு’ என்ற சிறுகதை இடம்பெறுகின்றது. தொடரும் காலங்களில் ஏனைய சிறுகதைகள் வெளிவரும்.

thumbnail_VARATHAR.jpg?zoom=3&resize=221

மாலை நாலரை மணி. பிள்ளையார் கோயில் கணபதி ஐயர் வீட்டில் முன்விறாந்தையில் மூர்த்தி மாஸ்டரும் ஐயரும் கதைத்துக் கொண்டிருக்கிறார்கள். எங்கெல்லாமோ சுற்றிவந்து கடைசியில் இலக்கிய உலகத்திலே புகுந்தார்கள். ”மாஸ்டர், நீங்கள் ‘கலைச்செல்வி’யைத் தொடர்ந்து படித்து வருகிறீர்களா?” என்று கேட்டார் ஐயர். ”ஓமோம், ஆரப்பத்திலிருந்தே ‘பார்த்து’ வருகிறேன். ஆனால் எல்லா விடயங்களையும் படித்திருக்கிறேனென்று சொல்ல முடியாது. ஏன் என்ன விசேஷம்?” ”கலைச்செல்வி பழைய பிரதி ஒன்றை இன்றுதான் தற்செயலாகப் படித்துப் பார்த்தேன். அதிலே ஒரு சிறுகதை….” ”யார் எழுதியது?” ”எழுதியவர் பெயரைக் கவனிக்கவில்லை. அந்தச் சம்பவந்தான் மனதை உறுத்திக்கொண்டே இருக்கிறது.” ”சொல்லுங்கள். நினைவு வருகிறதா பார்க்கலாம்?” ”மூன்றாம் வருஷம் இலங்கையில் பெருவெள்ளம் ஏற்பட்டதல்லவா? அந்தச் சூழ்நிலையை வைத்துக் கதை எழுதப்பட்டிருக்கிறது.

குளக்கட்டை உடைத்துக்கொண்டு ஒரு கிராமத்துக்குள் வெள்ளம் பெருகி வருகிறது. சனங்கள் உயரமான இடத்தைத் தேடி ஓடுகின்றார்கள். அந்த ஊரில் ஒரு பணக்காரனின் வீட்டுக்கு ‘மேல் வீடு’ம் இருக்கின்றது. அங்கே அவன் தனியாக இருக்கிறான். வெள்ளத்துக்கு அஞ்சி ஒரு ஏழைப்பெண் – இளம் பெண் – அந்த மேல் வீட்டுக்குச் செல்கிறாள், பணக்காரன் அவளைப் பதம் பார்க்க முயல்கிறான். அவள் இசையவில்லை. அவன் பலாத்காரம் செய்தேனும் அவளை அடைந்துவிடத் துணிந்து விட்டான். அவள் உயிரைவிடக் கற்பையே பெரிதாக மதிப்பவள். மேல் வீட்டிலிருந்து கீழே குதித்து உயிரைத் துறந்தாள். கற்பைக் காப்பாற்றிக் கொண்டாள்…. இந்தக் கதையைப் பற்றி என்ன நினைக்கீர்கள் மாஸ்டர்?” ”என்ன நினைக்கிறது? புராண காலத்தில் இருந்து திருப்பித் திருப்பிப் படித்த ‘கருத்து’த் தான். கதையை அமைத்த முறையிலும், வசன நடையின் துடிப்பிலும் தான் இந்தக் கதைக்கு வாழ்வு கிடைக்கும். நான் படிக்கவில்லை படித்தால் தான் அதைப் பற்றிச் சொல்லலாம்.” ”நான் கதைக்கு விமர்சனம் கேட்கவில்லை மாஸ்டர். புராண காலத்திலிருந்து படித்ததாதச் சொன்னீர்களே. அந்தக் கருத்தைப் பற்றித்தான் உங்கள் அபிப்பிராயம் என்ன என்று கேட்கிறேன்.” ”எதைக் கேட்கிறீர்கள் ஐயா? தனது கற்பைக் காப்பாற்ற உயிரைத் துறந்தாளே, அதைப்பற்றியா?” ”ஓமோம், அதையே தான்” ”ஒரு பெண்ணின் – முக்கியமாகத் தமிழ்ப் பெண்ணின் சிறப்பே அதில்தானே இருக்கிறது. மானம் அழிந்தபின் ‘வாழாமை இனிதென்பதல்லவா தமிழின் கொள்கை?”’ ஐயர் பெருமூச்சு விட்டார். பிறகு, ”நீங்களும் இப்படிச் சொல்கிறீர்களா?” என்று கேட்டார்.

மூர்த்திமாஸ்டர் திகைத்தார். நான் என்ன தவறுதலாகச் சொல்லிவிட்டேன்? இந்த ஐயர் என்ன இப்படிக் கேட்கிறார்? ஒரு நிமிஷநேரம் மௌனம் நிலவிற்று. ஏதோ எண்ணித் துணிந்து விட்டவர் போல கணபதி ஐயரே மீண்டும் மௌனத்தைக் கலைத்தார். ‘மாஸ்டர், எனக்கும் என் மனைவிக்கும் தெரிந்த ஒரு இரகசியத்தை உங்களுக்கு சொல்லப் போகிறேன். உங்களுக்கு சொல்லலாம். சொல்வதால் ஒரு தீமையும் ஏற்படாது. இதைக் கேட்ட பிறகு ‘கற்பு’ பிரச்சனையைப் பற்றிப் பேசுவோம்.

.....

போன வருஷம் பெரியந்தனை முருகமூர்த்தி கோயிலில் நான் பூசை செய்து கொண்டிருந்தது உங்களுக்குப் தெரியும். அங்கே தமிழர்கள் தொகை ஐம்பது பேர் கூட இருக்காது. விசேட தினங்களுக்கு மட்டும் பிற இடங்களில் இருந்தெல்லாம் வந்து கூடுவார்கள். சிங்களவர் கூடப் பலர் கோயிலுக்கு வந்து அருச்சனை செய்விப்பது வழக்கம். சிங்களவர் – தமிழர் கலகம் துவங்கினவுடனே அங்கே இருந்த தமிழர்களில் முக்கால்வாசிப் பேரும் யாழ்ப்பாணத்துக்கு ஓடி வந்து விட்டார்கள். நான் பூசையை விட்டு விட்டு எப்படிப்போக முடியும்? என் மனைவியைப் போகும்படி சொன்னேன். எனக்கு வருவது தனக்கும் வரட்டும் என்று அவள் மறுத்து விட்டாள். சிங்களவரும் அக்கோயிலிலே கும்பிட வரும் வழக்கம் இருந்ததால் கோயில் விஷயத்தில் தலையிடமாட்டார்கள். எங்களுக்கும் ஆபத்து நேராது என்ற துணிவில், அவளை மேலும் வற்புறுத்தாமல் விட்டு விட்டேன்.

ஒரு புதன்கிழமை, அன்று பேபிநோனா என்ற சிங்களக் கிழவி – அவள் எங்களோடு நன்கு பழகியவள் – கோயிலுக்கும் நாள் தவறாமல் வருகிறவள் – அவள் சொன்னாள் – ‘நீங்கள் இனி இங்கேயிருப்பது புத்தியில்லை ஐயா. காலியிலிருந்து சில முரடர்கள் மூன்று லொறிகளில் வருகிறார்களாம். வருகிற வழியெல்லாம் தமிழர்களை இல்லாத கொடுமை செய்கிறார்களாம். இன்றிரவோ நாளையோ இந்தப் பக்கம் வரக்கூடுமென்று கதைக்கிறார்கள். நீங்கள் இப்போதே புறப்பட்டு பொலீஸ் துணையோடு கொழும்புக்குச் செல்லலாம்’ – என்றாள். அவள் சொன்னதைக் கேட்ட பிறகு, ‘அப்பனே முருகா! என்னை மன்னித்துக்கொள்’ மனதுக்குள் வேண்டிக் கொண்டு கையோடு கொண்டுபோகக் கூடிய பொருட்களை இரண்டு பெட்டிகளுள் சேகரித்தோம். என் மனைவியின் நகைகளையும் – நூலில் கட்டிய தாலி ஒன்றைத் தவிர – எல்லாவற்றையும் கழற்றிப் பெட்டியில் பூட்டினோம். இந்த ஆயத்தங்கள் செய்வதற்குள் மாலை ஐந்து மணியாகிவிட்டது. பேபி நோனா அவசரம் அவசரமாக ஓடிவந்தாள். ‘ஐயா, ஐயா சில்வாவும் வேறு இரண்டு பேருமாக வாறாங்கள். அம்மாவை அவர்கள் கண்ணில் படாமல் எங்கேயாவது ஒளித்திருக்கச் சொல்லுங்கோ! கேட்டால் ‘நேற்றே ஊருக்குப் போய்விட்டா’ என்று சொல்லுங்கோ. நான் இங்கே நின்றால் எனக்கும் ஆபத்து, உங்களுக்கும் ஆபத்து’ கவனம் ஐயா’ – என்று சொல்லிவிட்டு பேபிநானோ ஓடி மறைந்து விட்டாள்.

சில்வாவை எனக்குத் தெரியும், ஆள் ஒருமாதிரி ‘ஐயா ஐயா, என்று நாய் மாதிரிக் குழைந்து ஐப்பது சதம், ஒரு ரூபா என்று இடைக்கிடை என்னிடம் வாங்கி இருக்கிறான். ஆள் காடைத் தரவளியாதலால் நானும் பட்டும் படாமலும் நடந்து வந்திருக்கிறேன். இரண்டொரு நாள் என் மனைவியை றோட்டில் தனியாகக் கண்டபோது அவனுடைய பார்வையும், சிரிப்பும் நன்றாக இருக்கவில்லை என்று அவள் சொல்வதுண்டு. இப்போது அவன் வருகிறானென்றால் எனக்கு ஒரு கணம் ஒன்றும் தோன்றவில்லை. யோசிக்கவும் நேரமில்லை. வீட்டுக்குள் உயரத்தில் பரண் மாதிரி மூன்று மரங்களைப் போட்டு அதன்மேல் சில பழைய பெட்டிகளைப் போட்டிருந்தோம். என் மனைவியை நான் தூக்கி அந்த மரங்களின் மேல்விட்டு மெதுவாக அந்தப் பெட்டிகளின் பின்னால் மறைந்திருக்கும்படி விட்டேன். பின் எங்கள் பயணப் பெட்டிகளை எடுத்துச் சற்று மறைவாக ஒரு மூலையில் வைத்துவிட்டேன். பிறகு முன் விறாந்தைப் பக்கம் வந்தேன்.

நானும் வர, அந்தக் காடையர்களும் வாயிலில் நுழைந்தார்கள். எனக்கு உள்மனது நடுங்க ஆரம்பித்துவிட்டது. இருந்தாலும் சமாளித்துக்கொண்டு, ‘என்ன சில்வா, இந்தப் பக்கம்?’ என்று சிரிக்க முயன்றேன். ”சும்மாதான், நீங்கள் இருக்கிறீகளா இல்லாவிட்டால் யாழ்ப்பாணத்துக் கம்பி நீட்டி விட்டீர்களா என்று பார்க்கத்தான் வந்தேன்” என்றான். ”முருகனை விட்டு நான் எங்கே தான் போக முடியும்?” என்று சொன்ன என் குரலே தெளிவாக இல்லை. ‘எங்களுக்குக் கொஞ்சம் தண்ணீர் குடிக்க வேண்டும்.’ என்றான் சில்வா. நான் சரியென்று குசினிப் பக்கம் போனேன். எனக்குப் பின்னால் அவர்கள் தொடர்ந்து வருவதை உணர்ந்தேன். ஆனாலும் திரும்பிப் பார்க்கவில்லை. ஒரு செம்பில் தண்ணீரை வார்த்துக் கொண்டு நிமிர்ந்தேன். எனக்கு முன்னால் அந்த மூன்று காடையர்களும் நின்றார்கள். செம்பைப் பிடித்த எனது கையில் நிதானமில்லை.’ ”அது சரி ஐயா, எங்கே அம்மாவைக் காணவில்லை.” நான் திரும்பித் திரும்பி மனதிற்குள் ஒத்திகை பார்த்து வைத்திருந்த வசனங்களை ஒப்புவித்தேன். ‘அவ நேற்றே ஊருக்குப் போய் விட்டாவே.’ ‘பளீர்’ என்று என் கன்னத்தில் ஒரு அறை விழுந்தது. செம்பும் தண்ணீரும் உருண்டு சிதறிற்று. என் கண்களுக்குப் பார்வை வரு முன்பே என் மடியில் கையைப் போட்டு ஒருவன் இழுத்தான். மற்றக் கையினால் வயிற்றில் ஒரு குத்து விட்டான்.

தமிழ்பண்டி, பொய்யா சொல்லுகிறாய்? இன்று காலையில் கூட உன் பொண்டாட்டியைப் பார்த்தேனே!’ மற்றவன் கேட்டான்: ‘சொல்லடா! அவளை யார் வீட்டில் கொண்டுபோய் ஒளித்து வைத்திருக்கிறாய்?’ –எனக்கு நெஞ்சில் கொஞ்சம் தண்ணீர் வந்தது. இந்த முரடர்கள் நான் அவளை வேறு யார் வீட்டிலோ ஒளித்து வைத்திருப்பதாக நினைத்து விட்டார்கள். ஆகையால் இந்த வீட்டில் அதிகம் பார்க்க மாட்டார்கள். என் உயிர் போனாலும் சரி, அவள் மானம் நிலைக்கட்டும் என்று நினைத்துக் கொண்டேன். ”என்னடா பேசாமல் நிற்கிறாய்?” குத்து! அடி! உதை! குத்து! அடி! உதை! குத்து! அடி! உதை! நான் இயக்கமின்றிக் கிழே விழுந்து விட்டேன். அம்மட்டிலும் அவர்கள் விடவில்லை. இரண்டு பேர் என்னைப் பிடித்து தூக்கினார்கள். ”அவள் இருக்கிற இடத்தை நீ சொல்லமாட்டாய்? கடைத் தெருப்பக்கம் காலியிலிருந்து லொறியில் வந்திருக்கிறான்கள். அவன்களிடம் உன்னைக் கொண்டு போய்க் கொடுத்தால் உன்னைத் தலை கீழாகக் கட்டித் தூக்கித் தோலை உரித்த பிறகு கீழே நெருப்பைக் கொழுத்திச் சுடுவான்கள். உனக்கு அது தான் சரி! வாடா!” என்று சொல்லி இழுத்தார்கள். என்னால் நடக்கவும் முடியவில்லை. அவ்வளவு அடி அகோரம். அவர்கள் என்னை இழுத்துக்கொண்டு நடு வீட்டுக்கு வந்து விட்டார்கள்.

மேலே என் மனைவி…. அந்த அறையையும் கடந்து வெளியே காலை வைத்து விட்டார்கள். ”நில்லுங்கள்! நில்லுங்கள்!” என்ற கூச்சலோடு என் மனைவி பரணிலிருந்து குதித்தாள். ”அவரை விட்டு விடுங்கள்!” என்று அலறிக் கொண்டே என்னிடம் ஓடி வந்தாள்.

அவர்கள் என்னை விட்டு விட்டார்கள். ஆறு முரட்டுக் கரங்கள் அவளை மறித்துப் பிடித்தன. பிறகு…. என்னை ஒரு மேசையின் காலோடு பின் கட்டாகக் கட்டினார்கள். அவளை – என் மனைவியை குசினிப் பக்கம் இழுத்துக் கொண்டு போனார்கள். இரண்டொரு நிமிஷங்களில் அவளுடைய அலறல் கேட்டது. பிறகு அவள் அலறவில்லையோ, அல்லது நான் தான் இரத்தம் கொதித்து மூளை கலங்கி, வெறி பிடித்து, மயங்கி விட்டேனோ?

மறுபடி எனக்கு நினைவு வரும் பொழுது அதே மேசையடியில் அவ்விதம் ஒருவருடைய மடியில் படுத்திருப்பதை உணர்ந்தேன். என்னை அவ்விதம் ஆதரவாகத் தூக்கி மடிமீது வைத்திருப்பது யாரென்று அறிய ஒரு ஆவல். கண்களைத் திறந்து பார்த்தேன். என் மனைவி. மானம் அழிந்த என் மனைவி… எத்தனையோ நூற்றாண்டுகளாக ஊறிப்போன ‘கருந்து’ என்னைச் சித்திரவதை செய்தது. மானத்தை இழந்த என் மனைவியின் மடிமீது தலை வைத்துப்படுத்திருக்கிறேன்…. என் உடம்பு கூனிக் குறுகியது. எழுந்து வெளியே நிலத்தில் விழுந்து விடவேண்டுமென்று மனம் உன்னிற்று. என் முகத்திலே ஒரு சொட்டுக் கண்ணீர். இன்னொன்று இன்னொன்று என் முகம் அவள் கண்ணீரால் நனைய, மனமும் சிந்திக்கத் தொடங்கியது. மூன்று விஷப்பாம்புகள் அவளைக் கடித்து இன்பத்தை உறுஞ்சின. அவள் உடலும் உள்ளமும் வேதனையால் துடித்தன. எரிந்து போகிற உடலை யாரோ என்னவோ செய்தார்கள். மனம் சிறிதும் சம்பந்தப்படாத போது வெறும் உடலுக்கு நேர்ந்த தீங்கினால் மானம் அழிந்து விடுமென்றால் பிரசவத்திற்காக டாக்டரிடம் போகும் பெண்களெல்லாம்…. என் மனதில் எழுந்த அருவருப்பை வெளியே இழுத்தெடுத்துத் தூர வீசினேன். பரிதாபப்படவேண்டிய, பாராட்டப்பட வேண்டிய என் மனைவியின் பெருமை என் நெஞ்செல்லாம் நிறைந்தது. மெதுவாக அவள் கைகளைப் பற்றி என் மார்போடு அணைத்துக் கொண்டேன்.

பிறகு பொலிஸ் வந்தது. பேபி நோனா தான் அந்த உதவியைச் செய்தாளென்று பின்னால் தெரிந்து கொண்டேன். என்னவோ கஷ்டங்களெல்லாம் பட்டு, அகதி முகாமில் கிடந்துழன்று எப்படியோ இங்கு வந்து சேர்ந்தோம்.

.....

”இப்பொழுது சொல்லுங்கள் மாஸ்டர். பலாத்காரத்தினால் ஒரு பெண்ணின் உடல் ஊறு செய்யப்பட்டால் அவள் மானம் அழிந்து விடுமா? அதற்காக அவள் உயிரையும் அழித்து விடவேண்டுமா…? அப்படி உயிரை விட்டவளைப் பத்தினித் தெய்வமென்று கும்பிட வேண்டுமா? கணவன் இறந்தவுடன் உடன் கட்டை ஏறியவள் அப்படிச் செய்வதே கற்புடைய மகளிர் கடமை என்ற சமூகக் கருத்தினால் உந்தப்பட்டு ஏற்றப்பட்டவள் பத்தினித் தெய்வமா, அல்லது பகுத்தறிவற்ற சமுதாயத்திற்குப் பலியான பேதையா?…. சொல்லுங்கள் மாஸ்டர்….!” கணபதி ஐயர் உணர்ச்சி மேலீட்டினால் பொருமினார். ”என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் ஐயா! இப்படித்தான் பரம்பரை பரம்பரையாக இரத்தத்தில் ஊறிப்போன பல விஷயங்களைப் பற்றிச் சிந்திக்காமலே அபிப்பிராயம் கொண்டு விடுகிறோம். நான் கூட எவ்வளவு முட்டாள் தனமாக அபிப்பிராயம் சொல்லிவிட்டேன்… ஐயா, பகுத்தறிவு, பகுத்தறிவு என்று சொல்லிக் கொண்டு தேவையில்லாத விஷயங்களிலெல்லாம் வாய்வீச்சு வீசுகின்ற பலரை எனக்குத் தெரியும். ஆனால் உண்மையான பகுத்தறிவு வாதியை இன்றைக்குக் கண்டு பிடித்து விட்டேன்” என்று சொன்னார் மூர்த்தி மாஸ்ரர். ஐயர் வீட்டுச் சுவரிலே இருந்த மகாத்மா காந்தியின் படம் – அதிலே ஐயரின் சாடை தெரிவது போலத் தோன்றிற்று மூர்த்தி மாஸ்டருக்கு.

 

http://akkinikkunchu.com/?p=59606

  • கருத்துக்கள உறவுகள்

அந்த நாளிலேயே  அப்படி ஒரு பகுத்தறிவுத் சிந்தனை.

கடைசியில் காந்தியை சேர்த்தது  அன்று பொருந்தியிருக்கும். இன்று?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kavi arunasalam said:

கடைசியில் காந்தியை சேர்த்தது  அன்று பொருந்தியிருக்கும். இன்று?

இன்று அநேகமான தமிழர்கள் வீட்டில் கலண்டரில் இருப்பவர்தான் ஐயர் வீட்டுச் சுவரிலும் இருந்திருப்பார்.

  • கருத்துக்கள உறவுகள்

பகுத்தறிவு என்பதே பொல்லாதது அல்லாததுகளை பகுத்துணர்ந்து வாழ்வதில்தானே அடங்கியுள்ளது. கலவரம் நிகழும்போது காமக்களியாட்டம் நடத்துவதற்காகவே சில கயவர் கூட்டம் காத்திருக்கும். இது தவிர்க்க முடியாதது....!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

சிறுகதைக்கு கற்பு என்று பெயரிட்டதால், கதையை வாசிக்கும் பொழுது மனது கற்பு என்ற வட்டத்துக்குள்தான் சுழல்கிறது. கதைக்குள் ஆழமாக நுளைந்து பார்த்தால் எழுத்தாளர் வரதர் பல விசயங்களை சொல்லி இருப்பது புரிகிறது. அத்தோடு அன்றைய இனக்கலவர நிலையை மெதுவாக அவர் தொட்டுமிருக்கிறார்.

 

58 இனக்கலவரத்தில் பாணந்துறையில் ஐயர் ஒருவர் உயிருடன் ரயர் போட்டு எரிக்கப்பட்டது இந்தக் கதையை வாசிக்கும் போது  நினைவுக்கு வருகிறது. ஒருவேளை இந்தக் கதையில் வரும் ஐயர் ஒரு உண்மையான பாத்திரமாகக் கூட இருந்திருக்கலாம்

சேர்ந்து பழகிய சில்வா சின்னப்புத்தி கொள்வதும், பேபிநோனா முன் வந்து உதவுவதும், இறுதியில் பொலீஸ் வருவதும் என்று சிங்களவர்களில் சிலரது உள்ளங்களையும் வரதர் சொல்லியிருக்கிறார்.

 

ஒரு பெண் ஆணை ஏறெடுத்துப் பார்த்தால், புன்னகைத்தால்ஓரிரு வார்த்தைகள் பேசினால்எல்லாமே போட்டுதுஎன்று புலம்பும் அன்றைய காலத்தில் இப்படி ஒரு கதையை அதுவும் ஒரு ஐயர் குடும்பத்துக்குள் வைத்து எழுதிய வரதர் அன்று நன்றாக வாங்கிக்கட்டியிருப்பார் என்று நினைக்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.