Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகம் ஊழல் மிகுந்த மாநிலம்: அமித்ஷா புகார்

Featured Replies

தமிழகம் ஊழல் மிகுந்த மாநிலம்: அமித்ஷா புகார்

 

 
amithsha

ஊழல் மிகுந்த மாநிலம் தமிழகம்; இந்த ஊழலை அகற்ற பாஜக நிர்வாகிகள் உறுதியேற்க வேண்டும்' என பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கூறினார்.
பாஜகவின் தேசியத் தலைவர் அமித்ஷா வரும் 2019-இல் நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தைத் தொடங்கியுள்ளார். இதற்காக தமிழகப் பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்துவதற்காக சென்னைக்கு திங்கள்கிழமை அவர் வந்தார்.
பொறுப்பாளர்களுடன் தனித் தனியே ஆலோசனை: சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தங்க கடற்கரை அரங்கில் பாஜகவின் தமிழகம், புதுச்சேரி, அந்தமான் ஆகிய மூன்று மாநிலங்களில் உள்ள 41 நாடாளுமன்ற தொகுதிப் பொறுப்பாளர்களுடன் தனித் தனியாக ஆலோசனை நடத்தினார். 
15,000 பேர் முன்னிலையில்...: பின்னர், அங்கு அமைக்கப்பட்டிருந்த பிரமாண்ட மேடையில், பாஜகவில் ஐந்து வாக்குச்சாவடிக்கு ஒரு பொறுப்பாளர் வீதம் நியமிக்கப்பட்டுள்ள சக்தி கேந்திரம், மகா சக்தி கேந்திர நிர்வாகிகள் 15,000 பேர் முன்னிலையில் அமித்ஷா உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழகத்துக்கு நான் வரும்போதெல்லாம் நமது எதிரணியினர் கிண்டலும், கேலியும் செய்கின்றனர். தமிழகத்தில் பாஜக எங்கே இருக்கிறது என்று அவர்கள் கிண்டல் செய்கின்றனர். இந்த முறை வந்துள்ளபோதும், கிண்டல் செய்துள்ளனர். அவர்களுக்கு, வரும் விருந்தினரை காத்திருந்து வரவேற்பவர்களுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என்ற திருக்குறளை நினைவுகூற விரும்புகிறேன்.
வலிமை மிக்க கட்சியாக...: இப்போது இங்கே கூடியிருக்கும் பாஜக நிர்வாகிகளின் எண்ணிக்கை மட்டுமே 15 ஆயிரம் என்றிருக்கும் நிலையில், 2019 மார்ச் மாதத்துக்கு முன்பாகவே தமிழகத்தில் பாஜக எங்கிருக்கிறது என்பதை அந்த எதிரணியினர் நிச்சயம் தெரிந்து கொள்வர். நிச்சயமாக வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் வலிமை மிக்க கட்சியாக பாஜக உருவெடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஊழல் குற்றச்சாட்டு சொல்ல முடியாது: கடந்த 10 ஆண்டுகள் நாட்டை ஆண்ட காங்கிரஸ், ரூ. 12 லட்சம் கோடி ஊழலில் சிக்கியுள்ளது. அந்தக் கட்சியின் பெரிய தலைவர்கள் சிறைச்சாலைக்கு சென்று கொண்டிருக்கின்றனர். ஆனால், கடந்த 4 ஆண்டுகளாக ஆட்சி செய்யும் பாஜக மீது ஒரு ஊழல் குற்றச்சாட்டையும் சொல்ல முடியாது.
தமிழகத்தை மீட்கும் பொறுப்பு உள்ளது: தமிழகத்தின் நிலையைப் பார்க்கும் போது மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது. இந்தியாவிலேயே ஊழல் மிகுந்த மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. எனவே, நாம் தமிழகத்தில் ஊழல் இல்லாத ஆட்சியைக் கொண்டுவர உறுதியேற்க வேண்டும். தேர்தலில் ஊழல், ஓட்டுக்குப் பணம் என்ற நிலையிலிருந்து தமிழகத்தை மீட்கும் பொறுப்பு நமக்கு உள்ளது. 
வாக்காளர்கள் கேள்வி எழுப்ப வேண்டும்: மேலும் மத்திய திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக ரூ. 1.35 லட்சம் கோடி, சிறு பாசன வசதிகளுக்காக ரூ. 332 கோடி, மெட்ரோ திட்டத்துக்காக ரூ. 2,275 கோடி, மோனோ ரயில் திட்டத்துக்கு ரூ. 3,267 கோடி, 3200 கி.மீ. ரயில் பாதைத் திட்டத்துக்காக ரூ. 2,000 கோடி, பிரதமர் வீட்டு வசதி திட்டத்துக்காக ரூ. 3,694 கோடி எனப் பல்வேறு திட்டங்களின் கீழ் இந்த 4 ஆண்டு ஆட்சியில் ரூ. 5 லட்சத்து 10 ஆயிரம் கோடி நிதியை தமிழகத்துக்கு ஒதுக்கியுள்ளது. ஆனால், 70 ஆண்டுகள் இந்தியாவை ஆட்சி செய்தவர்கள் தமிழகத்துக்கு இந்த அளவிலான திட்டங்களையோ, நிதியையோ ஒதுக்கவில்லை. 
தமிழ் புறக்கணிப்பு-பொய் பிரசாரம்: மேலும், தமிழ் மொழியைப் புறக்கணிப்பதாக பாஜக குறித்து பொய்ப் பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. ரயில் டிக்கெட்டுகள் தமிழ் மொழியில் அச்சிடப்படுவதைக் கொண்டுவந்ததே பாஜக அரசுதான். தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால், தமிழ் மொழியை நாடு முழுவதும் முன்னிலை பெற வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். 
தமிழகத்துக்குக் கூடுதல் நிதி: தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை பாஜக அரசு செயல்படுத்தி வருகிறது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தபோது, 13-ஆவது நிதி ஆணையத்தில் தமிழகத்துக்கு ரூ. 94,540 கோடி நிதியை மட்டுமே ஒதுக்கியது. ஆனால், பாஜக அரசு 14-ஆவது நிதி ஆணையத்தில் தமிழகத்துக்கு 1,99,096 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது. அதாவது 1,04,000 கோடி கூடுதலாக தமிழகத்துக்கு மோடி அரசு ஒதுக்கியுள்ளது.
யாருடன் கூட்டணி?: தமிழகத்தில் பாஜக எந்தக் கட்சியுடன் கூட்டணி வைக்கப்போகிறது என கேள்வி எழுப்புகின்றனர். ஊழலை ஒழிக்க உறுதியேற்கும், ஊழலற்ற ஆட்சியைத் தர முன்வரும் கட்சியுடன்தான் பாஜக கூட்டணி வைக்கும் என்றார் அமித்ஷா.
நிகழ்ச்சியில், மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், முரளிதரராவ், பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், பாஜக முன்னாள் மாநில தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர்.

http://www.dinamani.com/tamilnadu/2018/jul/10/தமிழகம்-ஊழல்-மிகுந்த-மாநிலம்-அமித்ஷா-புகார்-2956689.html

  • தொடங்கியவர்

அமித் ஷா வருகையால் தமிழகத்தில் மழை; தாமரை தானாக மலரும்: தமிழிசை பேட்டி

 

 
tamilesai

சென்னை: அமித் ஷா வருகையால் தமிழகத்தில் தாமரை தானாக மலரும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
   
பாஜகவின் தேசியத் தலைவர் அமித்ஷா வரும் 2019-இல் நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தைத் தொடங்கியுள்ளார். இதற்காக தமிழகப் பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்துவதற்காக அமித்ஷா  நேற்று திங்கள்கிழமை சென்னை வந்தார்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தங்க கடற்கரை அரங்கில் பாஜகவின் தமிழகம், புதுச்சேரி, அந்தமான் ஆகிய மூன்று மாநிலங்களில் உள்ள 41 நாடாளுமன்ற தொகுதிப் பொறுப்பாளர்களுடன் தனித் தனியாக ஆலோசனை நடத்தினார். 

நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு சென்னை விமான நிலையத்தில் இருந்து தில்லிக்கு தனி விமானத்தில் புறப்பட்டு சென்றார். அவரை வழி அனுப்பி வைத்தப்பின் சென்னை விமான நிலையத்தில் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில், அமித் ஷா வருகையால் தமிழகத்தில் மழை பெய்துள்ளதாகவும், இந்த மழையால் குளங்கள் நிரம்பும் என்றும் குளங்கள் நிரம்பினால் தாமரை தானாக மலரும் என்றார். 

தமிழகத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்ற எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்தார். புள்ளி விவரங்கள் இல்லாமல் அமித் ஷா எதையும் பேச மாட்டார் என தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தில் யாரெல்லாம் தாமரை மலராது எனக் கூறி கிண்டல் அடித்துக் கொண்டு இருக்கிறார்களோ அவர்கள் அனைவரையும் கைக்கூப்பி தாமரை மலர்ந்துவிட்டது என சொல்ல வைப்போம். 

வார்டு வாரியாக தேர்தல் வேலை செய்ய நிர்வாகிகளை நியமித்துள்ளோம். இந்த திட்டத்திற்கு சிறந்த பலன் தேர்தலில் கிடைக்கும் என்று தமிழிசை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

http://www.dinamani.com/latest-news/2018/jul/10/அமித்-ஷா-வருகையால்-தமிழகத்தில்-மழை-தாமரை-தானாக-மலரும்-தமிழிசை-பேட்டி-2957117.html

  • தொடங்கியவர்

அமித்ஷா வருகை: பாஜக எடுக்கப் போகும் அரசியல் பாதை எது?

சமூக ஊடகங்களில் நடந்த 'அமித்ஷாவே திரும்பிப்போ' பிரசாரங்களுக்கு மத்தியில் தமிழகத்துக்கு வருகை புரிந்த பாஜக தலைவர் அமித்ஷா, கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசும்போது, முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியை விட நிதிக்கமிஷன் மூலம் தமிழகத்துக்கு பாஜக ஆட்சி அதிகம் நிதி ஒதுக்கியிருப்பதாகக் கூறியிருக்கிறார்.

அமித் ஷாபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஅமித் ஷா

அத்துடன், தமிழகம் ஊழல் மிகுந்த மாநிலம் என்று கூறியதோடு கடந்த பத்தாண்டுகளில் ஆட்சியில் இருந்தவர்கள் ஊழலில் சிறை சென்றதாகவும் கூறியிருக்கிறார். ஆனால், அவர் குறிப்பிட்டது ஸ்பெக்ட்ரம் வழக்கில் விசாரணைக் கைதியாக சிறையில் இருந்த ஆ.ராசா, கனிமொழியையா அல்லது சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்த ஜெயலலிதாவையா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

அரசியல் பாதை எது?

பொதுவில் தமிழகம் ஊழல் மிகுந்த மாநிலம் என்று குறிப்பதன் மூலமும், சிறை சென்றதைக் குறிப்பதன் மூலமும் ஒரே நேரத்தில் அவர் திமுக, அதிமுக இரண்டையும் எதிர்க்கும் உபாயத்தை கையாள்கிறாரா என்ற ஐயம் எழுகிறது.

இது உண்மையானால், வழக்கமாக அதிமுக அரசுடனும், கட்சியுடனும் இணக்கமான உறவைப் பேணும் பாஜக, புதிய பாதையை தேர்வு செய்ய முயல்வதாகக் கருதலாம். ஒருவேளை, தமிழகத்தில் பாஜக சந்திக்கும் வழக்கமான எதிர்ப்புடன், அதிமுக ஆட்சி மீதான அதிருப்தியையும் தாங்கள் பகிர்ந்துகொள்ளவேண்டியதில்லை என்று பாஜக யோசனை செய்வதன் வெளிப்பாடாகவும் இது இருக்கலாம் என்று தெரிகிறது.

சென்னையில் கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசிய அவர், கட்சியை தமிழகத்தில் ஆட்சியில் அமர்த்த உறுதியேற்க வேண்டுமெனக் கூறியிருப்பதையும் இதோடு இணைத்துப் புரிந்துகொள்ளலாம். வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து கட்சி நிர்வாகிகளோடு விவாதிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம் இது. எனவே, தமிழகத்தில் இருந்து கூடுமானவரை நாடாளுமன்ற இடங்களைப் பெறவே பாஜக முயலும் என்பதால், அதிமுக உறவை உதறிவிட அத்தனை எளிதாக முயலுமா என்பதும் கேள்வியாகவே உள்ளது.

நிதி ஒதுக்கீடு

"இதற்கு முந்தைய பத்தாண்டுகளில் தி.மு.க. கூட்டணியுடன் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தது. அவர்கள் 13வது நிதி கமிஷனின் கீழ் தமிழகத்திற்குக் கொடுத்த தொகை, 94,540 கோடி. ஆனால், பா.ஜ.க. ஆட்சியில் 14வது நிதி கமிஷனின் கீழ் தமிழகத்திற்கு 1,99,096 கோடி கொடுக்கப்பட்டிருக்கிறது," என்று கூட்டத்தில் பேசும்போது குறிப்பிட்டார் அமித்ஷா.

அமித் ஷாபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

இதுதவிர மத்திய அரசின் திட்டங்களின் மூலம் 1,35,000 கோடி தரப்பட்டுள்ளது. சொட்டு நீர்ப் பாசனத் திட்டங்களுக்காக 340 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ திட்டத்திற்காக 2,875 கோடி ரூபாய் தரப்பட்டுள்ளது. மோனோ ரயில் திட்டத்திற்காக 3,267 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

தமிழகத்தில் 3,200 கி.மீ.க்கு ரயில் தண்டவாளம் அமைப்பதற்காக 20,000 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. 2017ல் தமிழகத்தில் வறட்சிக்கா 1750 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. வர்தா புயலுக்காக 265 கோடி ரூபாய் தரப்பட்டது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 1,500 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இப்படியாக இந்த நான்காண்டுகளில் 5 லட்சத்து 10,000 கோடி ரூபாய் மத்திய அரசு வழங்கியுள்ளது என்றும் அவர் கூறினார்.

இந்தப் பட்டியலை அவர் அடுக்கியதோடு, "இதற்கு முன்பாக ஆட்சியில் இருந்தவர்கள் தமிழகத்திற்காக என்ன செய்தீர்கள் என கணக்குக்கொடுங்கள். சென்னையிலே எனக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்களுக்கு நான் சொல்லிக்கொள்கிறேன், கடந்த ஆண்டுகளில் நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதைச் சொல்ல வேண்டிய கடமை இருக்கிறது," என்ற அரசியல் கணையையும் வீசினார்.

இதற்கான பதில்கள் எதிர்க்கட்சிகளிடம் இருந்து வரலாம் என்பதால், இந்த விவாதம் இன்னும் சில நாளைக்குத் தொடரக்கூடும்.

"கடந்த பத்தாண்டுகளில் ஆட்சியில் இருந்தவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, சிறை சென்றார்கள். ஆனால், எதிர்க்கட்சிகளால், இந்த நான்காண்டு ஆட்சி மீது ஒரு ஊழல் குற்றச்சாட்டும் சுமத்த முடியவில்லை," என்றும் அவர் குறிப்பிட்டார்.

தமிழகத்தை நினைத்தால் வருத்தம்...

ஆனால், தமிழகத்தைப் பற்றி நினைக்கும்போது மிகவும் வருத்தம் ஏற்படுகிறது. இந்த நாட்டிலேயே ஊழல் மிகுந்த மாநிலமாக தமிழகம் இருக்கிறது. தமிழகத்திலும் ஊழல் இல்லாத ஆட்சியை கொண்டுவருவோம் என இங்கிருக்கும் ஊழியர்கள் உறுதிமொழி ஏற்க வேண்டும். எல்லா மட்டங்களிலும் ஊழலை வெளியேற்றும் பணியில் நாம் ஈடுபட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

அமித்ஷா வருகை: பாஜக எடுக்கப் போகும் அரசியல் பாதை எது?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

"தமிழுக்கு பாரதீய ஜனதாக் கட்சி நிறைய செய்திருக்கிறது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, ரயில்வே டிக்கெட்டுகள் இந்தியில்தான் அச்சடிக்கப்பட்டன. ஆனால், பாஜக ஆட்சியில் தமிழிலில் கொண்டு வந்துள்ளோம். இது நரேந்திர மோதியின் ஆட்சியில்தான் நடக்கும். 2019ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் தமிழகத்தில் பா.ஜ.க. எந்த இடத்தில் இருக்கிறது என்பதை நீங்கள் பார்ப்பீர்கள்" என்றும் அமித் ஷா பேசினார்.

அமித் ஷா இந்தியில் பேசியதை அக்கட்சியின் தேசியச் செயலர் எச். ராஜா தமிழில் மொழிபெயர்த்தார். அவர் மைக்ரோ இரிகேஷன் என்று என்று கூறியதை எச். ராஜா 'சிறுநீர்ப் பாசனம்' என்று மொழிபெயர்த்தது, சமூக வலைதளங்களில் உடனடியாக கேலிக்குள்ளானது. #சிறுநீர்பாசனம் என்ற ஹாஷ்டாகுடன் பலரும் இதுதொடர்பான பதிவுகளை வெளியிட்டுவருகின்றனர்.

இதற்கு முன்பாக, காலையில் #gobackamitsha என்ற ஹாஷ்டாக் சென்னை மற்றும் இந்திய அளவில் சிறிது நேரத்திற்கு ட்ரெண்ட் ஆனது

https://www.bbc.com/tamil/india-44775557

  • தொடங்கியவர்

வாதம் விவாதம்: ''தமிழகத்தில் ஊழல் இருந்தால் மத்திய அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?''

அமித்ஷாபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

இந்தியாவிலேயே ஊழல் மிகுந்த மாநிலம் தமிழ்நாடு என பாஜக தலைவர் அமித்ஷா கூறியிருப்பது ஏற்கத்தக்கதா? என நேற்றைய வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம். இதற்கு நேயர்கள் தெரிவித்த கருத்துகள் இங்கே.

``ஒவ்வொரு சம்பவத்துக்கும் மத்திய அரசிலிருந்து ஒரு குழு ஆய்வுக்கு வந்து விட்டு ஆட்சி எல்லாமே மிக சிறப்பாக நடைபெறுகிறது என்று சொல்லி சென்றார்களே அது வேறு தமிழ் நாடா. இதே தமிழ் நாடு இதே மத்திய அரசு குழுக்கள்தானே.``என்று கேள்வி எழுப்புகிறார் சுப்புலஷ்மி என்னும் முகநூல் நேயர்.

``அமித்ஷா கூறியிருப்பது உண்மைதான். பெரும்பாலன அரசு காரியங்கள் லஞ்சம் கொடுத்தால்தான் நடக்கிறது. குப்பை தொட்டிகள் முதல் கோபுரம் கட்டுவது வரை ஒப்பந்தங்களை போட்டு அதில் கமிஷனை சுருட்டிக்கொள்கிறார்கள். திறப்பு விழா காணும் முன்னரே பாலங்களில் விரிசல்கள் விழுந்த காட்சிகள் எல்லாம் அதிகம் கண்டுவிட்டது தமிழகம். ஓட்டுக்கு காசை வாங்கிவிட்டதால் மக்கள் கேள்வி கேட்கும் தகுதியை இழந்து நிற்கிறார்கள்`` என்று சொல்கிறார் நெல்லை.டி.முத்துசெல்வம் என்னும் முகநூல் நேயர்.

``கருப்பு கண்ணாடி வழியே காணும்போது பாலும் கருப்பாகவே தெரியும் என்பது போல், ஊழல் ஊழல் என்று ஊரை எல்லாம் நம்ப வைத்து ஆட்சியைப் பிடித்தோர், தூக்கத்தில் கனவு விரவில்லை என்றாலும் எதிர்க்கட்சியின் ஊழலே காரணம் என்பர்.`` என்கிறார் சக்தி சரவணன் என்னும் நேயர்.

``ஆமாம்!உண்மைதான்!ஏன் மத்திய அரசு தெரிந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.வாய் திறக்கவில்லை. குற்றவாளியை தனக்கு சாதகமாக பயன்படுத்தி தன் தேவைகளை பூர்த்தி செய்துகொள்வதால் பாஜகவும் ஊழல்வாதிதான்`` என்ற தனது கருத்தை பகிர்ந்துள்ளார் ஸ்ரீனிவாசன் புலி என்னும் நேயர்.

`` குழந்தை சாப்பிடவேண்டுமென்பதற்காக நிலவில் "பாட்டி வடை சுடுகிறது பார்" என்று தாய் பொய் சொல்வதில்லையா? அதுபோலத்தான்...பாஜக தமிழகத்தில் காலூன்ற இதுபோன்ற பொய்களை சொல்லித்தான் ஆகவேண்டும்`` என்கிறார் குலாம் மொஹிதீன் என்னும் முகநூல் நேயர்

'தமிழகத்தில் ஊழல்

``ஜெயலலிதா இறந்தபின் தமிழ்நாடு இவர்கள் பிடியில்தான் உள்ளது. அதற்கு பின் எத்தனை ரைடுகள். எதிலாவது உண்மை நிலையை மக்களுக்கு தெரியும்படி வெளிக்கொண்டுவந்ததுண்டா??`` என்று கேள்வி எழுப்புகிறார் தங்கம் தங்கம் என்னும் நேயர்.

``சரிதான். தற்போது தமிழகத்தை ஆள்வது அவர்கள்தானே. பிஜேபி ஆளும் மாநிலங்களில் ஊழல் அதிகமாகயிருப்பது உண்மைதானே``என்கிறார் மன்சூரலி என்னும் நேயர்.

``ஊழல் மிகுந்த மாநிலம் தமிழ்நாடு என்றால் ஆட்சியை கலைக்கவேண்டியது தானே அதிகாரம் உங்கள் கையில் தான இருக்கு`` என்று கேள்வி எழுப்புகிறார் முகமத் ரில்வான் குலாம் என்னும் முகநூல் நேயர்.

``அமித்ஷா இதை உணர்வுடன் உண்மையாக கூறியிருந்தால், மோடியிடம் சொல்லி இந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க சொல்லலாமே!`` என்கிறார் பன்னீர் செல்வம் லோகநாதன் என்னும் நேயர்

https://www.bbc.com/tamil/india-44786046

  • தொடங்கியவர்

தமிழ்நாட்டிற்கு அதிக நிதி ஒதுக்கீடு: அமித் ஷா உரையில் இவ்வளவு ஓட்டைகளா?

 
 

சென்னையில் பாரதிய ஜனதாக் கட்சியின் ஊழியர்கள் மத்தியில் பேசிய அக்கட்சியின் தலைவர் அமித் ஷா, வேறு எந்த ஆட்சியிலும் இல்லாத அளவுக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கடந்த நான்காண்டு கால ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இது சரியான கணக்குத்தானா?

தமிழ்நாட்டிற்கு அதிக நிதி ஒதுக்கியதாக அமித் ஷா கூறியது உண்மையா?

2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளைத் துவங்கியிருக்கும் பா.ஜ.கவின் தலைவர் அமித் ஷா ஒவ்வொரு மாநிலத்திலும் சக்தி கேந்திர காரியகர்த்தாக்கள் எனப்படும் வாக்குச்சாவடி ஊழியர்களைச் சந்தித்து, தேர்தல் பணிகள் குறித்துப் பேசிவருகிறார்.

தமிழ்நாட்டில் உள்ள சக்தி கேந்திரப் பொறுப்பாளர்களின் கூட்டம் சென்னையை அடுத்துள்ள ஈஞ்சம்பாக்கத்தில் திங்கட்கிழமையன்று நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில் பேசிய அமித் ஷா, காங்கிரஸ் - தி.மு.க கூட்டணியைக் கடுமையாகச் சாடியதோடு, கடந்த நான்காண்டு கால பா.ஜ.க. ஆட்சியில்தான் தமிழகத்திற்கென மத்திய அரசிலிருந்து அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

முரணான மோதி, அமித் ஷா கணக்குகள்

முதலாவதாக, தேசிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் கீழ் 13வது நிதி ஆணையத்தின் பரிந்துரையின்படி தமிழகத்திற்கு 94 ஆயிரத்து 540 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டதாகவும் ஆனால், பா.ஜ.க. ஆட்சியில் 14வது நிதி ஆணையத்தின் கீழ் 1 லட்சத்து 96 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தமிழ்நாட்டிற்கு அதிக நிதி ஒதுக்கியதாக அமித் ஷா கூறியது உண்மையா?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

இதற்கு முன்பாக கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதியன்று தமிழகத்தில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தைத் துவக்கி வைப்பதற்காக வந்த பிரதமர் நரேந்திர மோதி, 13வது நிதி ஆணையத்தின் கீழ் தமிழகத்திற்கு 81 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட்டதாகவும் 14வது நிதி ஆணையத்தின் கீழ் ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட்டதாகவும் கூறினார்.

கட்சித் தலைவர் அமித் ஷா சொல்வதற்கும் பிரதமர் நரேந்திர மோதி சொல்வதற்கும் இடையில் பெரிய அளவில் வித்தியாசம் இருப்பது ஒரு புறமிருந்தாலும் இந்தக் கணக்கே தவறானது என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.

வரி வீதம் அதிகரிப்பை பாஜக கொடுத்ததாக கூறலாமா?

வரி தொகுப்பில் 32 சதவீதத்தை மாநிலங்களுக்கு அளிக்க வேண்டும் என 13வது நிதி ஆணையம் பரிந்துரைத்திருந்தது. ஆனால், 14வது நிதி ஆணையம் இதனை 42 சதவீதமாக உயர்த்தியது. இதனால், இயல்பாகவே மாநிலங்களுக்கு வழங்கப்படும் நிதியின் அளவு அதிகரித்தது.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம், 14வது நிதி ஆணையத்தை அமைத்தது, பா.ஜ.கவுக்கு முன்பு ஆட்சியிலிருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுதான்.

2013ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் தேதி 14வது நிதி ஆணையம் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ஒய்.வி. ரெட்டியின் தலைமையில் அமைக்கப்பட்டது.

தமிழ்நாட்டிற்கு அதிக நிதி ஒதுக்கியதாக அமித் ஷா கூறியது உண்மையா?படத்தின் காப்புரிமைAMIT SHAH

அந்த ஆணையத்தின் பரிந்துரையின்படி, நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டதை பா.ஜ.க. எப்படி தன்னுடைய சாதனையாக சொல்ல முடியும் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.

ஓப்பீட்டில் குறைந்துள்ள தமிழக நிதி

"இதைவிட அபத்தமான வாதம் இருக்கவே முடியாது. 14வது நிதி ஆணையத்தை அமைத்தது காங்கிரஸ் ஆட்சி என்பது ஒரு புறமிருக்க, முந்தைய ஆணையம் வழங்கிய நிதி சதவீதத்தோடு ஒப்பிட்டால், 19 சதவீதம் தமிழகத்திற்குக் குறைவாகக் கிடைத்திருக்கிறது என்பதுதான் உண்மை" என்கிறார் பொருளாதார நிபுணரும் நிதி ஆணையங்களின் நிதிப் பங்கீடு குறித்து தொடர்ந்து எழுதி வருபவருமான ஆர்.எஸ். நீலகண்டன்.

இதற்கு முந்தைய நிதி கமிஷன்களில் 1971ஆம் வருட மக்கள் தொகைக் கணக்கிற்கு முக்கியத்துவம் அளித்த நிலையில், 14வது நிதி கமிஷன்தான் முதல் முறையாக 2011ஆம் வருட மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு முக்கியத்துவம் அளித்தது.

தமிழ்நாட்டிற்கு அதிக நிதி ஒதுக்கியதாக அமித் ஷா கூறியது உண்மையா?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

இதனால், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. அதேபோல, ஒழுங்காக நிதியை நிர்வகிப்பது முந்தைய நிதி கமிஷன்களில் கணக்கில் கொள்ளப்பட்டது.

ஆனால், 14வது நிதி கமிஷனில் அதற்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. இதன் காரணமாக, தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய நிதியில் 6 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்குக் கிடைக்காமல் போனது என்று சுட்டிக்காட்டுகிறார் நீலகண்டன்.

இது தவிர, பா.ஜ.க. ஆட்சியில் 2017ஆம் ஆண்டில் என்.கே. சிங்கைத் தலைவராகக் கொண்டு அமைக்கப்பட்ட 15வது நிதிக் கமிஷன், 1971ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பிற்கு எந்த மதிப்பும் வழங்காமல், 2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பிற்கே முழு மதிப்பையும் வழங்க முடிவுசெய்தது.

இதனால், 1970களின் மத்தியில் இருந்து மக்கள் தொகையைக் குறைப்பதில் தீவிரமாக ஈடுபட்ட தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களுக்கு நிதிப் பகிர்வு கடுமையாக பாதிக்கப்படும்.

"இதையெல்லாம்விட, அமித் ஷா ஏதோ தன்னுடைய பணத்தை எடுத்து மக்களுக்குக் கொடுப்பதைப்போல அந்தக் கூட்டத்தில் பேசியிருப்பது மிக மோசமானது. அது மாநில மக்களின் வரிப்பணம். அவர்களுக்குச் சேர வேண்டிய பணம்" என்கிறார் நீலகண்டன்.

பன்னீர்செல்வம் பிரதமர் மோதிக்கு கடிதம்

இந்த விவகாரம் குறித்து 2015ஆம் ஆண்டு மே மாதம் 8ஆம் தேதி அப்போதைய முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பிரதமர் மோதிக்குக் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.

தமிழ்நாட்டிற்கு அதிக நிதி ஒதுக்கியதாக அமித் ஷா கூறியது உண்மையா?படத்தின் காப்புரிமைTNDIPR

நிதிக் குழுவின் புதிய பரிந்துரைகளால் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தொகையில் 19.14 சதவீதம் குறைவாகவே கிடைக்கும் என்பதை அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இதனால் வருடத்திற்கு ஆறாயிரம் கோடி ரூபாய் இழப்பை தமிழ்நாடு எதிர்கொள்ளும் என்பதையும் ஓ. பன்னீர்செல்வம் குறிப்பிட்டிருக்கிறார்.

கைவிடப்பட்ட மோனோ ரயில் திட்டத்திற்கு முழு செலவையும் கொடுத்ததா?

அடுத்ததாக, அமித் ஷா சென்னை மோனோ ரயில் திட்டத்திற்காக 3,267 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டதாகக் கூறினார்.

சென்னையில் ஏற்கனவே மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டுவந்த நிலையில், புதிதாக இரு வழித்தடங்களில் மோனோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படுமென 2012ஆம் ஆண்டில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.

மேனோ ரயில்படத்தின் காப்புரிமைSAJJAD HUSSAIN

முதற்கட்டமாக பூந்தமல்லியிலிருந்து கத்திபாரா இடையில் 20.68 கி.மீ. தூரத்திற்கு போக்குவரத்துத் துவங்குமென அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்திற்கு 3,267 கோடி ரூபாய் செலவாகுமென மதிப்பிடப்பட்டது.

இந்தத் திட்டத்திற்கு மத்திய அரசு 2014 நவம்பரில் ஒப்புதல் அளித்தது. அந்த ஒப்புதலில் இந்தத் திட்டத்திற்கான செலவு முழுவதையும் மாநில அரசும், மாநில அரசின் ஏஜென்சிகளும் திட்டத்தில் பங்குபெறும் தனியார் நிறுவனங்களுமே ஏற்றுக்கொள்ள வேண்டுமெனவும் மத்திய அரசு இதற்கென நிதியுதவி ஏதும் அளிக்காது என்றும் கூறப்பட்டது.

2015 மே மாதத்தில் ஓ. பன்னீர்செல்வம் எழுதிய கடிதத்தில், இந்தத் திட்டத்திற்கான viability gap fundingஐ (விஜிஎஃப்) செய்யும்படி வலியுறுத்தியிருந்தார்.

மத்திய அரசின் இந்த விஜிஎஃப் நிதி என்பது ஒட்டுமொத்த திட்டச்செலவில் அதிகபட்சமாக 20 சதவீதமாகும். 3,267 கோடி ரூபாய் திட்டச்செலவு கொண்ட மோனோ ரயில் திட்டத்திற்கான விஜிஎஃப் நிதி என்பது சுமாராக 650 கோடி ரூபாயாக அமையும்.

ஆனால், இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சம், மோனோ ரயில் திட்டமே மாநில அரசால் கொள்கை ரீதியில் கைவிடப்பட்ட திட்டம் என்பதுதான்.

கைவிடப்பட்ட திட்டத்திற்கு, அதுவும் மாநில அரசு - தனியார் ஒத்துழைப்பில் செயல்படுத்தப்படவிருந்த திட்டத்திற்கு எப்படி முழுத் தொகையும் மத்திய அரசு அளித்ததாக அமித் ஷா குறிப்பிட்டார் என்ற கேள்விக்கு விடையில்லை.

"இந்தத் திட்டத்திற்கான சாத்திய அறிக்கையிலேயே, திட்டத்தில் பெரும் இடர்பாடுகள் இருக்கும் எனக் குறிப்பிடப்பட்டு, மோனோ ரயில் திட்டமே ஓரங்கட்டப்பட்டுவிட்டது. அப்படிப்பட்ட ஒரு திட்டத்திற்கு, முழுத் தொகையையும் மத்திய அரசு வழங்கியிருப்பதாகச் சொல்வது எப்படி உண்மையாக இருக்க முடியும்?" என்கிறார் தமிழக திட்டக் குழுவின் முன்னாள் துணைத் தலைவர் நாகநாதன்.

வறட்சிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

வறட்சி நிதியிலும் அமித் ஷா வழங்கிய குளறுபடி கணக்கு

இதற்கு அடுத்தபடியாக, 2017ஆம் ஆண்டில் தமிழகத்தில் வறட்சி ஏற்பட்டபோது 1,750 கோடியும், வார்தா புயலினால் ஏற்பட்ட பாதிப்பைச் சரிசெய்ய இழப்பீடாக 256 கோடி ரூபாயும் கொடுத்ததை அமித் ஷா சுட்டிக்காட்டியிருக்கிறார்.

2017ஆம் ஆண்டில் தமிழகத்தில் கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வறட்சி ஏற்பட்டதாக தமிழக அரசு கூறியது. இதற்காக நிவாரண உதவியாக தேசியப் பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து 39 ஆயிரத்து 565 கோடி ரூபாய் நிதி அளிக்க வேண்டுமென முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமரிடம் கோரினார்.

அதேபோல, 2016ஆம் ஆண்டில் ஏற்பட்ட வார்தா புயலினால் பாதிப்பை எதிர்கொள்ள மத்திய அரசு 22 ஆயிரத்து 573 கோடி நிதியுதவி அளிக்க வேண்டுமென்றும் உடனடி உதவியாக ஆயிரம் கோடி ரூபாயை அளிக்க வேண்டுமென்றும் தமிழக அரசு கோரியது.

ஆனால், வறட்சி நிவாரண நிதியாக 1748 கோடி ரூபாயும், வார்தா புயல் சேதங்களுக்காக 266 கோடி ரூபாயும் மத்திய அரசால் ஒதுக்கப்பட்டன.

இது மாநில அரசு கோரிய நிதியில் வெறும் 3.24 சதவீதம். மாநில அரசு கோரிய நிதி எவ்வளவு என்பது தற்போது மக்கள் மனதில் இருக்காது என்பதால், அதனை மத்திய அரசின் ஒரு சாதனையாக அமித் ஷா முன்வைத்திருக்கிறார்.

மருத்துவ கல்லூரிகளுக்கு உதவியது மத்திய அரசா? பாஜகாவா?

அடுத்ததாக, தஞ்சாவூர், நெல்லை மருத்துவக் கல்லூரிகளுக்காக 250 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக அமித் ஷா சுட்டிக்காட்டியிருக்கிறார்.

மத்திய அரசு, நாட்டில் மருத்துவக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக பிரதான் மந்த்ரி ஸ்வஸ்தீய சுரக்ஷா யோஜனா என்ற திட்டத்தை 2006ஆம் ஆண்டிலிருந்து செயல்படுத்தி வருகிறது.

அதன்படி, நாடு முழுவதும் எய்ம்ஸ் போன்ற மருத்துவமனைகளை உருவாக்குவது, ஏற்கனவே இருக்கும் மருத்துவக் கல்லூரிகளை மேம்படுத்துவது ஆகியவை மத்திய அரசின் நிதியுதவியுடன் நடத்தப்படும்.

 

 

இந்தத் திட்டம் துவங்கியதிலிருந்து இதுவரை நான்கு கட்டங்களாக மருத்துவக் கல்லூரிகள் தேர்வுசெய்யப்பட்டு நிதியுதவி அளிக்கப்பட்டது.

முதல் இரண்டு கட்டங்களில் மதுரை மருத்துவக் கல்லூரி, சேலம் மருத்துவக் கல்லூரிகளுக்கும் நான்காவது கட்டத்தில் தஞ்சாவூர், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரிகளுக்கும் இந்த நிதியுதவி அளிக்கப்பட்டது.

இந்த நான்கு கட்டங்களிலும் சேர்ந்து இதுவரை இந்தியா முழுவதும் 71 மருத்துவக் கல்லூரிகளுக்கு நிதியுதவி அளிக்கப்பட்டதில், நான்கு கல்லூரிகள் மட்டுமே தமிழகத்தைச் சேர்ந்தவை.

இந்தியா முழுவதுமுள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு நிதியுதவி அளிக்கும் இந்தத் திட்டத்தில் நிதியுதவி அளித்ததை, தமிழகத்திற்கு அளித்த சலுகையாக அமித் ஷா தன் உரையில் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

தவிர, இந்தத் திட்டமும் 2006ல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் துவங்கப்பட்டது.

அரசியல் சாசனத்திற்கு எதிரான கருத்து

"இந்தக் கூட்டத்தில் அமித் ஷா நிதிக் குழு குறித்து பேசியது முழுக்க முழுக்க அரசியல் சாஸனத்திற்கு விரோதமானது. நிதிக் குழுக்கள் என்பவை அரசியல் அமைப்புச் சட்டத்தின் 280வது பிரிவின் கீழ் சுயேச்சையாக செயல்படும் வகையில் அமைக்கப்பட்டவை. அதன் மூலம் மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை, தங்கள் கட்சி ஒதுக்கீடு செய்வதாக பேசுவதே தவறு" என்கிறார் நாகநாதன்.

கடந்த 20 ஆண்டுகளாகவே தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் நிதி குறைந்துவரும் நிலையில், அமித் ஷா இவ்வாறு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ததாகக் கூறுவது ஏற்க முடியாதது என்கிறார் அவர்.

தவிர மத்திய அரசுத் திட்டங்களுக்கு வழங்கப்படும் மானியங்கள் பெரும்பாலும் வட மாநிலங்களுக்கே வழங்கப்படுகின்றன என்கிறார் நாகநாதன்.

நரேந்திர மோதி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, திட்டக்குழு கலைக்கப்பட்டு அதற்குப் பதிலாக நி்தி ஆயோக் உருவாக்கப்பட்டது. இதனால், திட்டக்குழுவின் நிதியுதவியோடு நடத்தப்பட்டுவந்த திட்டங்களுக்கான மத்திய அரசின் நிதி நிறுத்தப்பட்டது என்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

https://www.bbc.com/tamil/india-44794195

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.