Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முடிவுக்கு வந்துள்ள மஹிந்தரின் தேனிலவு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்சியேற்றதும் தங்கள் இனவாத மதவாத ஆதரவை அதிகரித்து, தங்கள் இனத்தின் விடுதலை நாயக(கியாக)னாக தங்களைக் காட்டிக்கொள்ள அவசரப்படும் நாட்டுத் தலைவர்கள், அதற்கு விலையாக பின்னர் தங்கள் சொந்தப் புகழை மட்டுமல்ல, நாட்டின் வளங்களையும் வசதிகளையும் பொருளாதாரத்தையும் கௌரவத்தையும் கூட விலையாகக் கொடுக்கின்ற நிலைமையை கடந்தகால வரலாறுகள் மட்டுமல்ல, நிகழ்கால வரலாறும் சுட்டிக்காட்டி நிற்கிறது.

வில்லங்கத்தை விலைக்கு வாங்குவான் ஏன்? என்று பேச்சுத்தமிழில் பலரும் சொல்வதைக் கேள்விப்பட்டிருக்கிறோம். அன்னக்காவடி எடுக்கப் புறப்பட்டால், ஆடி முடிப்பதற்குத் தயாரா என்பதையும் முன்னதாகவே முடிவு செய்து கொள்ள வேண்டும். ஊசிகள் சதையில் ஏற ஆரம்பித்தால், காவடி மட்டும்தான் கண்ணில் தெரிய வேண்டும்.

குத்த உட்கார்ந்த பொன்சேகாவுக்கு வலிக்காது, குத்தும்படி ஒத்தூதிய பசிலுக்கும் வலிக்காது. காவடிக்கு நேரம் குறிக்க மேற்குலகிலிருந்து புறப்பட்டு வந்த கோத்தபாயருக்கும் வலி எடுக்காது. வாக்காளரை ஏமாற்றி, ஹம்பாந்தோட்டை நிதியத்தை இரகசியமாக வளர்த்தெடுத்து, தன் காசுப்பையை நிறைப்பதில் குறியாக இருந்ததுடன், தமிழினத்தை, தமிழ் மக்களை, தமிழ் இளைய தலைமுறையை திவம்சம் செய்து, தன் சிங்கள இனவெறி மூலம் இனவாதிகளை குளிர்ச்சியடைய வைக்க முயற்சித்த, காவடிக்காரன் மஹிந்தவுக்குத்தான் இப்போது வலி.

வரவிருக்கும் வாரங்கள், கொழும்பு அரசியலின் சதிராட்டங்களை சுத்தியிருந்து ரசிக்கப்போகும் ஜோரான காலம். தற்போதைய மகிந்த சிந்தனாவ காலம் என்பது அழகிய தேன்கூட்டை கரடி சொறிந்த கதைதான். அனைத்துப் பகுதியும் கொட்டப்படவே போகின்றன, வேதனைகள் அனைவரையும் ஆட்கொள்ளவே போகின்றன, சுவையான தேன் எப்படியும் நிலத்தில் சிந்தி விரயமாகத்தான் போகின்றது.

~கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொத்த சீர்த்த இடத்து| - என்கிறார் திருவள்ளுவர்.

காலம் கைகூடும் வரையில், கொக்குபொல் பொறுமையாகக் காத்திருப்பர். காலம் வாய்ப்பாகக் கிடைத்ததும், அது குறி தவறாமல் குத்துவது போல் செய்து முடிப்பர் என்பதே விளக்கம்.

குறிவைப்பதாகக் கூறிக்கொண்டு, எங்கு வீசினாலும் பலிகொள்ளப்படுவது தமிழினம் தானே என்ற இறுமாப்புடன், தாறுமாறாகக் கொன்றழித்து வருகிறது ~ஹிட்லர்| மகிந்த தலைமையிலான சிறீலங்கா பயங்கரவாத அரசு.

குறி தவறாமல், தீர்மானித்த இலக்கை நோக்கி வான்புறாக்களை நகர்த்தி, சீரிய தாக்குதலின் பின் தளம் திரும்பியிருக்கிறது புலிகளின் வான்படை. உலகில் உருவான கரந்தடி படைகளில், பல வரலாற்றுச் சாதனைகளை விடுதலைப் புலிகள் படைத்திருக்கிறார்கள். உலகின் முதலாவது கடற்படை உருவாக்கிய புலிகள், இப்போது உலகின் முதலாவது வான்படையையும் இயக்கி, சர்வதேசத்தை வியப்பில் ஆழ்த்தியதுடன், சிறீலங்கா அரசை அசையா நிலைக்குக் கொண்டுவந்திருக்கிறார்கள். சிங்கள இனம், இனியும் தங்களது ஆட்சியாளர்களை நம்புவது அடிமுட்டாள்தனம் என்பதையும் இந்த புதிய அத்தியாயம் பதிவு செய்திருக்கிறது.

80 களில் துவிச்சக்கர வண்டியுடன் ஆரம்பித்தது தமிழர்களின் ஆயுதப் போராட்டம். தற்போது, சிறீலங்காவின் அதி உச்சக்கட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், உலக தரத்திலான வான் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக நம்பப்பட்ட சர்வதேச விமானப் படைத்தளத்தினுள் வான்மார்க்கமாக விமானத்தில் பறந்து, தளம்தட்டி, தாக்குதல் நடாத்தி, பத்திரமாக மீண்டும் களம் திரும்பியிருக்கிறது என்றால், அது உலக தமிழினம் அனைத்தும் நெஞ்சு நிமிர்த்தி பெருமைப்பட்டுக் கொள்ளவேண்டிய விடயம் தான்.

தமிழினத்தை அழித்தொழிக்க சிங்கள அரசுகள் வகுத்த திட்டங்களெல்லாம், சிங்கள நாட்டை ஒரு தோல்வியடைந்த வறிய ஏதிலி நாடாக்கியிருக்கிறது. சிங்கள ஆட்சியாளர்கள் விரித்த வலைகளிலெல்லாம், அவர்களே விழுந்து தொலைக்கிறார்கள். இப்போது பசில் நோர்வேயில் விவாதிக்கிறார், போகல்லாகம தூதுவர்களை அவசர அவசரமாக ஆலோசிக்கிறார், கோத்தபாய பெரும்பாலும் சொல்ஹெய்முடன் கதைத்திருப்பார். 300 பேர் கொல்லப்பட்டபோது, மூன்று பேரின் மரண வீட்டிற்குப் போய்விட்டு வந்து, தொலைக்காட்சியில் கதையளந்த மகிந்தரின் சத்தத்தையே தற்போது காணவில்லை. சப்த நாடியும் அடங்கிப்போய், அடுத்தது எந்த நாட்டிற்குப் போய் பிச்சை கேட்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்.

இரு இனங்களும், தாம் தாம் விரும்பிய வழியில், வாழட்டும் வளரட்டும் நிமிரட்டும் உயரட்டும் என்று, தோல்வியிலும் வெற்றிகண்ட எஃப்.டபிள்யூ டி கிளார்க், மனத்திரையில் தெரிகிறார். கிளார்க் அப்படி விரும்பியதால்தான், நெல்சன் மண்டேலா ஜனாதிபதியாகி சமாதானப் பரிசு பெற முடிந்தது. அப்படி ஆட்சியாளர்கள் சிறீலங்காவில் இல்லாமல்போனதால் தான், இன்று மேற்குலகிடம் விற்கப்பட்ட நாடாக ~லங்க| காட்சி தருகிறது.

56 இல் சிங்களம் மட்டும் என்ற சட்டத்தை எதிர்த்து காலி முகத்திடலில் சத்தியாக்கிரக போராட்டம் நடத்திய ஜனநாயகவாதிகளை சிங்களக் காடையர்கள் அடித்து விரட்டினார்கள். தொடர்ந்த இனக்கலவரத்தில் 150-க்கும் அதிகமான தமிழர்கள் வெட்டியும் எரித்தும் கொல்லப்பட்டார்கள். இது ஐம்பதுகளில் நடந்த கொடூரம்.

வெற்றிகள் எப்போதுமே குளிர்ச்சியானவை தான். பழைய தலைவர்களும், இது போல்தான் முயற்சித்தார்கள். ஜே.ஆர். அழித்தபோது, இதைத்தான் சொன்னார். கண்டியிலிருந்து பாதயாத்திரை போய், பௌத்த சிங்கள நாட்டுக்காக உயிர்கொடுக்கப் போவதாய்ச் சொன்ன ஜே.ஆர், தமிழினத்தை அழிப்பதில் தொடர் வெற்றி கண்டாலும், சிங்கள இனத்திடம் அவர் எதிர்பார்த்த புகழ்ச்சியைப் பெறவில்லை. புலிகளை அழித்து முடித்துவிட்டு, தமிழருக்கு பாரிய தீர்வுத்திட்டமொன்றை முன்மொழியப்போவதாக சொல்லிச்சொல்லி நாட்டையே அழித்ததுதான் மிச்சம். இடையிலே, திட்டம் தகர்ந்து, திம்பு வரை சென்று, பின்னர் இந்தியாவை நம்ப வைத்து, கந்தலறுந்து, நூலாய்த் தேய்ந்து, மார் தட்டியவர்களையெல்லாம் ஈனமாய் இழந்து, இறுதியில் அவரே ஒழிந்து வாழ்ந்த நிலை.

பின்னர் பிரேமதாசா வந்து, இந்தியாவைக் கலைப்பதற்காக விடுதலைப் புலிகளுக்கே ஆயுதம் வாரி வழங்கி, இந்தியப் படைகளை பலாத்காரமாக கட்டாய வெளியேற்றம் செய்தார். பிரேமதாசா என்ற சிங்கள அரச தலைவரின் ஆணைக்கு அடிபணிந்து, இந்தியப் படைகள் தலைகுனிந்து நாட்டை விட்டு வெளியேறின. அவர்களைக் கலைத்துவிட்டு, பின்னர் புலிகளை அழிக்கலாம் என்று முயற்சித்தார். புலிகள் முடிந்ததும் தமிழருக்கு தீர்வு என்றார். பிரிகேடியர் ரிச வீரதுங்க தலைமையில் வடக்கில் பாரிய படை நகர்வை மேற்கொண்டு, தேனிலவில் சுகமான செய்தி வரும் என்று கனவு கண்டார். அவரது தேனிலவு பாதியிலேயே தடம்புரண்டது. இறுதியில், அந்த தீர்வு வரை பாவம் அவர் வாழக் குடுத்து வைக்கவில்லை. அவரது கனவும் பலிக்கவில்லை.

இதற்கிடையில் லலித், காமினி என்று அடுக்கடுக்காய் பலர், புலிகளை முடிப்பதாகச் சொல்லி சொல்லி முடிந்து விட்டார்கள். சிறிய தொய்வின் பின்னர், சந்திரிகா. அது வடக்கு நோக்கிய மிகப்பெரிய போர் முகம். ரத்வத்தை தலைமையில் பாரிய படை நகர்வு. அழிப்பு. இன அழிப்பு. மக்கள் இடப்பெயர்வு. அப்போது பலர் சொன்னார்கள். எல்லாம் முடிந்தது. இனி தமிழினம் எழும்ப முடியாது என்று. பண்டாரநாயக்க பரம்பரைக்கு நிரந்தரப் புகழ்தேடித்தருவதற்குப் புறப்பட்ட சந்திரிகா, அந்தப் பரம்பரையின் முகவரியையே தொலைத்துவிட்டு, அந்நிய நாட்டில் தலையணை தேடி அலையும் நிலை வந்தது. சிங்கள இனத்திற்கு விடிவு தேடி, அந்த தேனிலவில் குளிர்காய நினைத்த சந்திரிகா, பின்னர் தலை தப்பினால் தம்பிரான் புண்ணியம் என்று தன்னைக் காத்துக்கொள்ள சீமைக்கு ஓடி, ஆமை போல் வாழும்நிலை வந்தது.

மருமகள் சந்திரிகா சந்தோசத்திற்காக, வடக்கில் கொடியேற்றப்போன ரத்வத்தை, தன் சொந்த புத்திரர்கள் சகிதம் நீதிமன்றத்திற்கு அலையும் நிலை வந்தது. பிச்சை வேண்டாம் நாயைப் பிடி என்ற கதையாக, தான் தப்பினால் போதும் என்று, தன் வீட்டையும் கொடுத்துவிட்டு லண்டன் ஓடித் தப்பினார் அக்கா.

இப்போது மகிந்த காலம். ஆரம்பம் மகிழ்ச்சிதான். அடிக்க அடிக்க, மக்கள் இறக்க இறக்க, அங்கே சிங்கள மக்கள் பூமாலை தூவ, எல்லாம் மனதில் மின்மினிப் பூச்சிகள் வட்டமடிக்கும், நாடே தன்னைத் தாங்கிவைத்துப் புகழ்வது போல குதூகலமான உணர்வு வரும். ஆனால், உண்மை என்னவென்றால், வாய்ப்புக்களை சுயநல தேவைக்கானதாக மாற்றிப் பயன்படுத்தும்போது, ஆரம்பம் மட்டும் தான் இனிக்கும். பின்னர் எல்லாமே கந்தலாகி விடும்.

மகிந்த நிலையும் இது தான். மகிந்த கூட்டுக் குடும்ப ஆட்சியின் முன்பகுதி, வழமைபோன்று சிங்கள இனவாதிகளுக்கு இனிப்பானதாக இருந்தாலும், அந்த தேனிலவுக்காலம் விடுதலைப் புலிகளின் வான்படைத் தாக்குதலுடன் முடிவுக்கு வந்திருக்கிறது.

உணவுத் தடை, மருந்துத் தடை, பயணத் தடை, கல்வித்தடை, பேச்சுத்தடை, தகவல் தடை, மனித உரிமை மீறல்கள் என்று ஒரே நேரத்தில் அநியாய அட்டூழிய மனித அவலங்கள். விமானத் தாக்குதல்கள் ஒருபுறம், கடத்தல்கள் மறுபுறம், இவற்றிற்கிடையே பட்டப்பகலில் யாரையும் சுட்டுத்தள்ளிவிட்டு இராணுவத்தினருடனேயே சேர்ந்து திரும்பிச்செல்லும் அசாதாரண அச்சமூட்டும் சூழ்நிலை இன்னுமொரு புறம்.

கிழக்கில், மக்களை மனிதக் கேடயங்களாக தங்கள் பகுதிக்குள் அகதிகளாக்கிவிடுவது. பின்னர் மக்கள் பகுதியை ஆக்கிரமிப்பது. ஆக்கிரமித்த பகுதிகளில் எல்லாவற்றையும் சூறையாடிவிட்டு, பின்னர் முக்கிய தளங்களில் முகாம்கள் அமைத்து தளத்தைப் பலப்பபடுத்துவது.

மீள் குடியமர்வு என்ற பெயரில் மக்களை மனிதக் கேடயங்களாக மீளவும் கொண்டுவந்து கட்டாயமாக கூடாரங்களில் இருத்துவது. அவர்கள் விரும்பினாலும் மீண்டும் போக முடியாதபடி, தங்களுக்கான மனிதக் கேடயங்களாக அவர்களை அச்சுறுத்தி வைத்திருப்பது. அரசின் அடாவடித்தனமான இந்த திட்டங்களை, சர்வதேசமும் சர்வதேச அமைப்புக்களும் தெளிவாக அறிந்திருந்தும் அமைதி காக்கும் சூட்சுமமான நிலை.

வெளிநாடுகளுக்கு அகதிகளாக ஓடித்தப்பி, சிறீலங்காவை முழுமையான பௌத்த சிங்கள நாடாக மாற்றுவதற்கு வழிதாருங்கள் என்று, வெளிநாட்டுக் கதவைத் திறந்துவிட்டவர் ஜே.ஆர்.ஜயவர்த்தன. அப்போது அவரது கபட நோக்கத்தை ஆதரித்த சிங்கள இனம், இப்போது அதையெண்ணி கண்ணீர் வடிக்கிறது. வெளிநாட்டில் வாழ விட்டதால், ஆங்காங்கே ஆலவிருட்சமாய் வேரூன்றி, தொடர்ந்தும் தாயகத்தின் பற்றுறுதியோடு பாசத்தையும் வளர்த்துக்கொண்டு வாழும் வெளிநாட்டுத் தமிழினத்தைப் பார்த்து, சிங்கள தேசம் அச்சமடைந்துள்ளது.

ஒவ்வொரு தடவையும் தமிழர் தரப்பின் மன உறுதியையும் பலத்தையும் விடுதலைப் புலிகள் நிரூபிக்கும்போது, சிங்கள அரசின் பயங்கரவாதத்தை பரிகரித்து, போஷித்து, ஆதரித்து சிறுபான்மைத் தமிழினத்தின் படிக்கட்டுகளில் தடைக்கற்களாக இருப்பதாக தொடர்ச்சியாக இனம் காணப்பட்டிருப்பது இந்திய வல்லாதிக்க புலனாய்வு சக்திகள் தான். இம்முறை தமிழீழம் நோக்கிய இறுதிப் பயணத்தில், இந்தியா தனது வழமையான ஆதிக்க சிந்தனையைத் தவிர்த்துக்கொண்டு, ஆசியாவில் கடந்த அரை நூற்றாண்டு காலமாக அடக்கி ஒடுக்கப்படும் தமிழ் சிறுபான்மை இனத்திற்கு நிரந்தர விடுதலையைப் பெற்றுக்கொடுக்க முன்வருவது, இந்தியாவுக்கு ஒரு ஜனநாயக கௌரவத்தை ஆசியப் பிராந்தியத்தில் உருவாக்கும்.

ஈழத் தமிழினத்தை சிறீலங்கா அரசு திட்டமிட்டு அழிப்பதை உணர்ந்துகொண்டு, அதற்கு ஆயுதப் போராட்டம் மூலமே மாற்றுத்தீர்வைக் கொண்டுவரலாம் என்று இலவம் காட்டில் சில இளைஞர்கள் விவாதித்து முடிவெடுத்தபோது, அதற்கு செயல்வடிவம் கொடுத்து, புகலிடம், பயிற்சி, பாசறை, கருவிகள் என்று அனைத்தையும் வழங்கி முத்தாய்ப்பு வைத்து கப்பலேற்றி அனுப்பி வைத்தது இந்தியா தான். அந்த யதார்த்தத்தை உணர்ந்துகொண்டு, இன்று மட்டுமல்ல, என்றுமே தமிழர் தரப்பு, இந்தியாவுக்கு ஒரு நேசக்கரமாக செயற்படும் என்பதை அந்நாடு ஏற்றுக்கொள்வது அவசியம். சேது சமுத்திரத் திட்டம் உட்பட, இந்தியாவின் அனைத்து அடுத்தகட்ட நகர்வுகளுக்கும் தமிழீழம் என்ற தனிநாடு, ஒரு திடமான இராஜாங்க செயற்பாட்டுக்கான இணைந்த களமாக விளங்கும் என்பதை இந்தியா ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.

விரும்பியோ விரும்பாமலோ பாக்கிஸ்தான் பிரிந்துசெல்வதற்கு இந்தியா பச்சைக் கொடி காட்டியது. இழுத்து வைத்துக்கொண்டு, இணைப்பாட்சியிலோ இறைமையிலோ சமஷ்டியிலோ காலம்தள்ள முயலவில்லை. பின்னர் பங்களாதேஷ், அதற்கும் அதே தீர்ப்புத்தான். கிழக்குப் பாக்கிஸ்தானில் கிளர்ச்சி உச்சக்கட்டத்தைத் தொட்டபோது, ஓடிச்சென்று தனிநாடாகப் பிரித்துக்கொடுத்ததும் இந்தியாதான்.

ஆக, இனங்கள் ஒன்றுபட முடியாத அளவுக்கு பெரும்பான்மையின் இனவெறி தாண்டவமாடினால், பிரிந்து வளர்வதுதான் மேல் என்று கொள்கையளவில் மட்டுமல்ல, செயலிலும் காட்டிநின்ற இந்திய அரசு, ஈழத்தமிழர் விடயத்திலும் அதே முடிவை எடுக்கவேண்டிய காலம் வந்துவிட்டது.

ஈழப் பிரச்சனையை முற்று முழுதாக 50-களில் இருந்து தெளிவாக அறிந்து வைத்திருக்கும் ஒரு பழுத்த அரசியல்வாதி என்று பார்த்தால், இந்தியாவில் மட்டுமல்ல, ஈழத்திலும் அகில உலகத்திலும் கூட, கலைஞர் கருணாநிதியை விட அதிகம் அறிந்தவர் யாரும் இல்லை.

ஈழத் தமிழர் பிரச்சனையில் கலைஞர் உத்வேகமாக எதையாவது செய்ய வேண்டுமென்று நினைத்தால், நிறையவே செய்யலாம் என்பதும், நிரந்தரத் தீர்வைக்கூட கொண்டுவரலாம் என்பதும், ஒட்டுமொத்த ஈழத் தமிழருக்கும் தெரியும். திராவிட நாட்டின் தலைவர் என்று பெருமை கொள்ளும் கலைஞரை, ஈழத் தமிழர்களும் தங்கள் நெஞ்சில் என்றும் பூசித்து மகிழும் வகையில், நிரந்தர தாயகமொன்றை தமிழினத்திற்கு வழங்குவதற்கு, மத்திய அரசினூடாக பரிந்துரை செய்வது காலத்தின் தேவையாக, கலைஞரின் இறுதி முன்னெடுப்பாக விரிந்து கிடக்கிறது.

கலைஞரின் மௌனத்தை மட்டுமல்ல, கலைய மறுக்கும் சிங்கள இனவாதிகளையும், மனித அவலத்தின் உச்சக்கட்டத்திலும் கலையாது அமைதி காக்கும் சர்வதேச சக்திகளையும், விடுதலைப் புலிகளின் வான்படை தகர்த்தெறிந்திருக்கிறது என்பதுதான் உண்மை. தொடரும் நாட்கள், சர்வதேசத்தில் ஈழத் தமிழினத்திற்கு புகழ் சேர்க்கப்போகும் கரிகாலன் காலத்தின் தொடக்க நாட்கள். புலம்பெயர் தமிழர்கள், களத்திலுள்ள இலகு விமானங்களை, விரைவில் கனரக படை விமானங்களாக மாற்றுதற்கு மனவிருப்புக் கொள்வார்களெனின், தமிழினம் இன்னும் பல புதிய வரலாறுகள் படைக்க வழிபிறக்கும்.

வான்படை வைத்திருக்கும் தொடக்கப் புள்ளியில் ஆரம்பிக்கும் அடுத்த அத்தியாயம், சில மாதங்களுக்குள் அல்ல, சில வாரங்களுக்குள்ளாகவே முடிவுப் புள்ளியையும் திடமாக வைத்துவிடும் என்பதே களநிலைமை சுட்டிக்காட்டும் நிஜம். அடுத்த உலகக்கிண்ணத்தில் தனித்தனி அணிகள் பங்குபற்றுவதற்கான ஒளிக்கீற்று ஓரமாகக் துலங்குகிறது. கொட்டட்டும் முரசு.

குயின்ரஸ் துரைசிங்கம்

http://www.tamilnaatham.com/articles/2007/...tus20070330.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.