Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாகாண சபையை நடத்த வலுவற்ற முதல்வர் வடக்கில் வன்முறையை எப்படி அடக்குவார்? கேள்வி எழுப்புகிறார் தவராசா

Featured Replies

மாகாண சபையை நடத்த வலுவற்ற முதல்வர் வடக்கில் வன்முறையை எப்படி அடக்குவார்? கேள்வி எழுப்புகிறார் தவராசா

b5aa8ed46c64eb5ac312bb4e4042301e?s=48&d=

Capture-99.jpgமாகாண சபைக்கு உள்ள அதிகாரங்களைச் சரிவரச் செயற்படுத்த ஏறத்தாழ ஐந்து வருடங்களாக முடியாத முதலமைச்சர் இரண்டு மாதங்களில் வடக்கு வன்முறையை அடக்குவார் என்று எம்மை நம்பச் சொல்கின்றீர்களா?

இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித்தலைவர் சி. தவராசா. அவர் வெளியிட்டுள்ள கேள்வி – பதில் அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அதில் அவர் தெரிவித்துள்ளவை வருமாறு:-

கேள்வி: பொலிஸ் அதிகாரத்தை வழங்கினால் வடக்கு வன்முறையை இரண்டு மாதங்களில் அடக்கிக் காட்டுவேன் என முதலமைச்சர் மத்திய அரசிற்குச் சவால் விட்டிருக்கின்றாரே இது தொடர்பாகத் தங்களது கருத்து என்ன?

பதில்: “கூரை ஏறிக் கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போவேன் என்றானாம்’ என்றொரு பழமொழி உண்டு. கடந்த நான்கு வருடங்கள் ஒன்பது மாதங்களாக மாகாண சபையின் நிறைவேற்று செயற்பாடுகளை வினைத்திறனற்றனவாகவும் அதன் உச்சக் கட்டமாக இன்று அதன் அமைச்சரவையின் செயற்பாடுகளைக் கூட நிறுத்தி வைக்கும் அளவுக்கு மிகவும் கெட்டித்தனமாகவும் செயற்பட்ட முதலமைச்சர் நிச்சயமாக வன்முறையை அடக்கும் விடயத்திலும் அவ்வாறுதான் செயற்படுவார்.

2016 இறுதிப் பகுதியில் அரச அதிபரினால் முச்சக்கரவண்டிகளுக்கு தூரக்கணிப்பான் பொருத்தப்படல் வேண்டும் என்ற ஒழுங்கு விதி முறையைக் கொண்டு வரவிருந்தவேளையில் போக்குவரத்து தொடர்பான விடயங்கள் மாகாண சபையின் அதிகாரவரம்பிற்குள் உட்பட்ட விடயமாதலினால் அவ் விடயப்பரப்பு தொடர்பான விடயங்களில் அரச அதிபரைத் தலையிட வேண்டாம் என்று கடிதம் எழுதப்பட்டதன் நிமித்தம் அரச அதிபர் அம் முயற்சியைக் கைவிட்டார். கொழும்பில் ரூ.50.00 இற்குச் செல்ல வேண்டிய தூரத்திற்கு யாழில் முச்சக்கர வண்டியில் செல்வதானால் ரூ.250.00 வரை செலுத்த வேண்டியுள்ளது. ஒரு வர்த்தமானிப் பிரசுரத்தின் மூலம் ஓர் இரவில் செய்யக் கூடிய இவ் வேலையை இரண்டு வருடங்களாகச் செய்யத் தெரியாமலிருக்கும் முதலமைச்சர் இரு மாதங்களில் வன்முறையை அடக்குவார் என்பதை நம்பித்தான் ஆக வேண்டும்.

பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தின் மூலம் மாகாண சபை யின் முழுமையான அதிகார வரம்பிற்குட்பட்ட விடயங்களிலொன்று கூட்டுறவுத் துறை. கூட்டுறவுத் துறைக்கு வேண்டிய நியதிச் சட்டத்தை ஆக்கி இன்று தூர்ந்து போயிருக்கும் கூட்டுறவுத் துறையை ஒழுங்குபடுத்தித் திறமையான நிர்வாகச் செயற்பாட்டிற்குள் கொண்டு வந்திருக்க முடியும். இருக்கின்ற அதிகாரங்களைச் சரிவரச் செயற்படுத்த ஏறத்தாழ ஐந்து வருடங்களாக முடியாத முதலமைச்சர் இரண்டு மாதங்களில் வடக்கு வன்முறையை அடக்குவார் என்று எம்மை நம்பச் சொல்கின்றீர்களா?

முதலமைச்சரின் கடந்த காலச் செயற்பாட்டின்மையின் விளைவாக மாகாண சபை இன்று ஒரு கேலிக்கூத்தாகப் பலராலும் விமர்சிக்கப்படுகின்றது. மாகாண சபைக் காலப்பகுதியில் முதலமைச்சரினால் எமது அதிகார வரம்பிற்குள் செயற்படுத்தக் கூடிய – ஆனால் செயற்படுத்தத் தவறிய – விடயங்களை அடுக்கிக் கொண்டே போனால் ஊடகங்களில் பிரசுரிப்பதற்கு இடமில்லாமல் போய்விடும். அதற்கு மேலாக எமது பிரதேசத்திற்கு வரவிருந்த எவ்வளவோ அபிவிருத்தித் திட்டங்கள் முதலமைச்சரின் அசமந்தப் போக்கினால் எம்மை விட்டுச் சென்று விட்டன. அதனால்தான் அவரை நான் பகிரங்க விவாதத்திற்கு அழைத்திருந்தேன்.

அரசிற்குச் சவால் விட்டிருக்கும் முதலமைச்சர் முதலில் நான் விட்ட சவாலை ஏற்று பகிரங்க விவாதத்திற்கு வந்து கடந்த காலங்களில் மாகாண சபையை வினைத்திறனாகச் செயற்பட வைத்தார் என நிரூபித்துக் காட்டிவிட்டு பொலிஸ் அதிகாரத்தைக் கோரட்டும்.

கேள்வி: அண்மைய மேன் முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பின்படி டெனிஸ்வரன் தொடர்ந்தும் அமைச்சராக இருக்கின்றார் என்றும் அரசமைப்பிற்கு அமைவாக மாகாண சபையில் இருக்க வேண்டிய அமைச்சர்கள் தொடர்பான நடவடிக்கைகளை ஆளுநர் மேற்கொள்ள வேண்டுமென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆளுநர் இது தொடர்பாக முதலமைச்சரின் ஆலோசனையைக் கோரியுள்ளர் எனவும் இதுவரை முதலமைச்சர் அதற்குப் பதிலிறுக்கவில்லை எனவும் கூறுகின்றார். அதே வேளை மேன்முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பிற்கு அமையத் தனக்குப் பதவி நீக்கும் அதிகாரம் இல்லை என்றும் அது ஆளுநரையே சாரும் என்றும் ஆதலினால் அது தொடர்பான நடவடிக்கையை ஆளுநரே எடுக்க வேண்டுமென்றும் முதலமைச்சர் கூறியிருக்கின்றார். இது தொடர்பாகத் தங்களது கருத்து என்ன?

பதில்: தங்கள் கேள்வியில் கூறப்பட்டுள்ள முதலமைச்சரின் கூற்றினைப் பார்க்கும் போது ஏதோ ஒரு படத்தில் வரும் வாழைப் பழக் கதைதான் எனக்கு நினைவிற்கு வருகின்றது. மேன் முறையீட்டு நீதிமன்றத்தினுடைய தீர்ப்பு மிகவும் தெளிவாக உள்ளது. அதில் கூறப்பட்டுள்ள இடைக்காலத் தடை உத்தரவுகளில் கூறப்பட்டுள்ள விடயங்களாவன:

அ) டெனிஸ்வரன் அவர்கள் தொடர்ந்து அமைச்சராக(முன்பு வகித்த அமைச்சுப் பொறுப்புகள்) செயற்படுவதற்குப் பிரதி வாதிகள் (முதலமைச்சர், ஆளுநர் அடங்கலாகத் தற்போதைய அமைச்சர்கள்) தலையீடு செய்வதற்கு அல்லது தடுப்பதற்குத தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆ)முதலமைச்சரினால் டெனிஸ்வரன் அவர்களிற்கு அவரைப் பதவி நீக்கம் செய்வதாக எழுதப்பட்ட கடிதத்தினை (உங்களை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதற்கு முடிவெடுத்துள்ளேன். ஆதலினால் தங்களது சகல அலுவலக ஆவணங்களையும் உடனடியாக தங்கள் செயலாளரிடம் கையளிக்கும்படி கேட்டுக் கொள்கின்றேன்) நடைமுறைப்படுத்துவதனை நிறுத்தி வைத்தல்.

இ) ஏற்கனவே ஆளுநரினால் டெனிஸ்வரன் வகித்த அமைச்சுப் பொறுப்புகளிற்குப் பொறுப்பாக அமைச்சர்களை நியமித்து அறிவிக்கப்பட்டிருந்த வர்த்தமானிப் பிரசுரத்தின் மேற்படி அறிவிப்புகளின் செயற்பாட்டினை நிறுத்தி வைத்தல். இவ்விடைக்காலத் தடை உத்தரவிற்கு மேலதிகமாக நீதி மன்றத்தினால் கூறப்பட்டுள்ளவிடயங்களாவன:

இந் நீதிமன்றம் இடைக்கால நிவாரணத்தினை வழங்கியதன் அடிப்படையில், அரசமைப்பில் அமைச்சர்கள் தொடர்பான கட்டுப்பாடுகளைக் கவனத்திற் கொண்டு நியமன அதிகாரி (ஆளுநர்) தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளல் வேண்டும்.

(In view of the findings of this Court and the interim relief granted, it is for the appointing authority to consider the constitutional restriction on the number of Ministers and take suitable action)

இவ்விடைக்காலக் கட்டளை மனுதாரரை (டெனிஸ்வரன்) சட்டப்படி பதவியிலிருந்து நீக்குவதனை எவ் விதத்திலும் தடுக்காது. ஆதலினால் அவை சீர் செய்ய முடியாத விடயங்களாக பிரதி வாதிகளிற்கு (முதலமைச்சர், ஆளுநர் அடங்கலாகத் தற்போதைய அமைச்சர்கள்) அமையாது.

(On the other hand, the interim relief will not prevent the Petitioner from being duly removed from his post according to law. Hence there will be no irreparable mischief or injury to the Respondents.)

அரசமைப்பின் பிரகாரம் அமைச்சர்களை நியமிக்கும் இவ்விடயத்தில் ஆளுநர் முதலமைச்சரின் ஆலோசனைப்படியே செயற்பட வேண்டும். இங்கு ஆளுநர் நீதிமன்றக் கட்டளைக்கு அமைய அமைச்சர்களைக் குறைத்து மீள் நியமனம் செய்ய வேண்டியிருக்கின்றது. அவ்வாறு மீள் நியமனம் செய்ய வேண்டியவர்கள் யார், யார் என்பதை ஆளுநரிற்கு ஆலோசனை வழங்க வேண்டிய கடப்பாடு முதலமைச்சரிற்கே உரியது. இதுவரை அவர் அதனைச் செய்யத் தவறிவிட்டார்.
இதற்கு மேலும் இவ் விடயத்திற்கு விளக்கமளிக்க முற்படுவேனாயின் நானும் வாழைப் பழக் கதையின் ஓர் பாத்திரமாக மாற வேண்டியிருக்கும்.

http://www.newsuthanthiran.com/2018/08/02/மாகாண-சபையை-நடத்த-வலுவற்/

  • தொடங்கியவர்

தப்பித்தவறி அவர் முதலமைச்சராக வந்தால்..!!! தக்க பதிலடி கொடுத்த சி.வி.விக்னேஸ்வரன்

 

 

கூரை மேல் ஏறி குறை கூறி பிழை பிடிப்பவர் எப்பொழுதும் குதர்க்கமாகவே பேசுவார். நாம் எதுவும் செய்ய முடியாது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் தவராசா அவர்கள் மாகாணசபையை நடத்த வலுவற்ற முதல்வர் வடக்கில் வன்முறையை எப்படி அடக்குவார் என்று கேட்டுள்ளார். இது குறித்து உங்கள் பதில் என்னவென்று ஊடகங்கள் கேள்வியெழுப்பியுள்ளன.

இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர்,

“தன் கட்சி தன்னை எதிர்க்கட்சிப் பதவியில் இருந்து நீக்கியும் அவர் தொடர்ந்து அந்தப் பதவியில் இருக்கின்றாரே அது போல்த்தான் முடியாது என்று எதுவும் இல்லை. பொலிஸாருடனும் நீதியுடனும் தொடர்புடையவன் நான்.

குற்றவாளிகள் சம்பந்தமாக தொழில் ரீதியாக நான்பல வருடகாலம் செயற்பட்டவன். இப்பொழுது கூட பல தடயங்கள் எனக்குத் தரப்பட்டுள்ளன. ஆனால் வேலிகள் பயிரை மேய விடக் கூடாது.

சட்ட ஒழுங்கு எனக்குப் பரீட்சயமான ஒரு துறை. ஆனால் அதற்கு அதிகாரம் கையில் இருக்க வேண்டும். அதிகாரம் கையில் இல்லாமல் எம்மால் செயலாற்ற முடியாது.

எமது அதிகாரங்களை மற்றவர்கள் மடக்கிப் பிடித்ததால்த்தான் நாங்கள் பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வந்துள்ளோம். எதிர்க்கட்சித் தலைவர் மாகாணசபைச்சட்டத்தில் உள்ள அதிகாரங்களை மட்டும் படித்துவிட்டு பத்திரிகைகளுக்கு ஒப்புவித்தால் அது போதாது.

மற்றைய சட்டங்கள் எவ்வாறு மாகாணசபையை வளைத்துப் பிடித்து செயலற்றதாக்கின்றன என்பதையும் அவர் உணர வேண்டும். உதாரணத்திற்கு உள்ளூராட்சியின் முன்னேற்றம் நகர அபிவிருத்தி அதிகாரசபையால் கட்டுப்படுத்தப்படுகிறது.

காணிகள் மீது எமக்கிருக்கும் உரித்துக்களை மகாவலிச்சட்டம் நலிவடையச் செய்துள்ளது. மாகாணப் பாடசாலைகளின் பாடசாலைகளை வைத்து அவற்றுள் உள்நுழைந்து கட்டுப்படுத்தப்படுகின்றன.

எமது வைத்தியசாலைகளின் முன்னேற்றம் தேசிய வைத்தியசாலைகள் ஊடாக மத்திய அரசால் கட்டுப்படுத்தப்படுகின்றன. சுகாதார அதிகாரியின் நிர்வாகம் கூட மாகாணத்திற்கு வழங்கப்படவில்லை.

மாகாணப் பொது நிர்வாகம் கூட ஆளுநரின் நிறைவேற்று அதிகாரங்களால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

கூரை ஏறிக் கோழி பிடிக்க முடியாதிருந்த தவராசா வானம் ஏறி அவைத்தலைவர் ஆசியினால் வைகுண்டத்திலேயே இப்பொழுது காலம் கழிக்கின்றார் என்பதை மறந்து விட்டார்.

நண்பருக்கு தெரிந்தவை பற்றி அல்லது அவருக்கு வேண்டியவை பற்றி அவர் பேசுகிறார். அவை அவருக்குக் கிடைகாததால் எம் மீது கோபம் கொள்கின்றார்.

முழு வட மாகாண நிர்வாகத்திலும் அவருக்கு நன்மை தரும் விடயங்களைத்தான் நாங்கள் இதுகாறும் கவனித்திருக்க வேண்டும் என்று எண்ணுகின்றார். அவை செய்யப்படாவிட்டால் எமது செயற்பாடு செயற்றிறம் அற்றது என்கிறார்.

தப்பித்தவறி அவர் முதலமைச்சராக வந்தால் (கடவுள் அதனைத்தடை செய்வாராக!) அவ்வாறான நடவடிக்கைகளில்த்தான் ஈடுபடுவார் என்று தெரிகின்றது.

அபிவிருத்தித் திட்டங்களை நான் தான் இங்கு கொண்டு வந்துவிட்டேன் என்று மார்தட்டிக்கூறி அரியாசனத்தில் இருப்போரின் அடியை ஆசையுடன் பற்றிச் செயற்படுவார் போல்த் தெரிகின்றது.

உரிமைகள் இல்லாமல் உதவியை நாடுவது எம் உருக்குலைவுக்கு வழிவகுக்கும். அவர் அடுத்த தேர்தலில் தமக்கு வழி அமைக்க என்னைச் சீண்டுகின்றார்.

முதலில் தனக்கு வாக்களிக்கப் போகும் மக்களிடம் சென்று அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றட்டும். அவர்கள் நன்மதிப்பைப் பெறட்டும். என்னுடன் மோதி மக்களின் நன்மதிப்பைப் பெறலாம் என்று அவர் நினைத்தால் அது அவரின் பகல் கனவாகும்.

கூரை மேல் ஏறி குறை கூறி பிழை பிடிப்பவர் எப்பொழுதும் குதர்க்கமாகவே பேசுவார். நாம் எதுவும் செய்ய முடியாது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

http://www.tamilwin.com/politics/01/189747?ref=home-feed

  • தொடங்கியவர்

நான் ஒன்றும் வாயால் வடை சுடுபவன் அல்ல! சி.வி.விக்னேஸ்வரனுக்கு பதிலடி கொடுத்த எதிர்க்கட்சி தலைவர்

 

 

 

நான் ஒன்றும் வாயால் வடை சுடுபவன் அல்லவென வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார்.

வடமாகாண முதலமைச்சர் தெரிவித்திருந்த கருத்து தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“வடமாகாண எதிர்க்கட்சி தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்கியும் அவைத் தலைவரின் ஆசியினாலேயே பதவியில் உள்ளதாக முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்து பேசிய அவர்,

நான் இன்றோ நேற்றோ பதவிக்காக அரசியலிற்கு வந்தவனும் அல்ல, “வாயால் வடை சுடுபவனும்” அல்ல. “வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்” என்பார்கள்.

இருக்கின்ற அதிகாரங்களை வினைத்திறனாகச் செயற்படுத்துவதற்கு ஆளுமையும், விவேகமும் தேவை. அங்குதான் எமது திறமையை வெளிக்காட்டல் வேண்டும்.

வட மாகாண சபை கடந்த 5 வருடங்களில் எங்களிற்கு இருக்கும் அதிகார வரம்பிற்குள் வினைத்திறனாகச் செயற்பட்டு எத்தனையோ விடயங்களைச் செயற்படுத்தி இருக்க முடியும். அந்த இயலாத் தன்மையை நிரூபிக்க என்னிடம் நிறைய ஆதாரங்கள் உண்டு.

ஆதலினாற்தான் முதலமைச்சரினைப் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு கோரியுள்ளேன், தற்போதும் கோரி வருகின்றேன்.

முதலமைச்சர் தான் கடந்த ஐந்து வருடங்களில் மாகாண சபையினை வினைத்திறனாகச் செயற்படுத்தியுள்ளார் என்பதைப் பகிரங்க விவாதத்தில் நிரூபித்துக் காட்டட்டும், நான் எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து அல்ல, அரசியலில் இருந்தே ஓய்வு பெறுகின்றேன்.

மாகாண சபையின் அசமந்தப் போக்கினால் நாம் இழந்த அபிவிருத்தி வேலைத்திட்டங்களோ ஏராளம். அபிவிருத்தி என்பது ஏதோ கெஞ்சிப் பெறும் விடயமல்ல.

அது எமது உரிமையின் ஓர் அம்சம். ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்திக்கான உரிமை சாசனம் இதனைத் தெட்டத் தெளிவாகக் குறிப்பிடுகின்றது.

Development is a human right: Everyone is “entitled to participate in, contribute to, and enjoy economic, social, cultural and political development, in which all human rights and fundamental freedoms can be fully realized,” the groundbreaking UN Declaration on the Right to Development proclaimed in 1986 that development is a right that belongs to everyone.

பதவி மோகத்தினால் நான் மாகாண சபையின் செயற்பாட்டின்மையினை விமர்சிக்கவில்லை. நாற்பத்தைந்து வருடங்களிற்கு மேலாக நான் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றேன்.

தமிழ் மக்களின் உரிமைக்கான ஆயுதப் போராட்டத்தின் ஆரம்ப கர்த்தாக்களில் நானும் ஒருவன். பொன் சிவகுமாரன், லோறன்ஸ் திலகர், பொன் சத்தியசீலன் போன்றோருடன் ஆயுதப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களிலிருந்தே (1970) செயற்படுபவர்களில் நானும் ஒருவன்.

மாவை சேனாதிராஜா, வண்ணை ஆனந்தன், காசி ஆனந்தன், குட்டிமணி, தங்கத்துரை, புஸ்பராஜா, வரதராஜப் பெருமாள், பாலகுமார் போன்றோருடன் சம காலத்தில் சிறையில் இருந்தவன் (1976/1977).

அண்மையிற்தான் அரசியலிற்கு வந்த முதலமைச்சரிற்கு நான் இங்கு குறிப்பிடும் பெயர்களே சில வேளைகளில் தெரியாமலிருக்கலாம். எனது அரசியல் செயற்பாட்டினால் எனது சொந்த வாழ்வில் இழந்தவை ஏராளம்.

நான் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டதனால் எனது மேற்படிப்பிற்குக் கூட முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

சந்திரிகா அம்மையாருடைய ஆகஸ்ட் 2000ம் ஆண்டு புதிய அரசியலமைப்பு வரைபு தொடர்பான அமர்வுகளில் தொடர்ச்சியாகப் பங்கேற்றுப் பங்களிப்புச் செய்தவர்களில் நானும் ஒருவன்.

பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையிலான சர்வ கட்சி மாநாட்டு (2006/2007) தொடர் அமர்வுகளில், வடக்கைச் சேர்ந்த தனி மனிதனாக நின்று தமிழர்களின் உரிமையை அங்கீகரிக்கும் வண்ணம் அரசியலமைப்பு வரைபினை ஏற்படுத்தக் கூடிய வகையிலான அறிக்கையினைத் தயாரிப்பதில் பாரிய பங்களிப்பினை வழங்கியவன்.

தற்போதைய அரசியல் யாப்பு வரைபிற்கான பொது மக்கள் கருத்தறி குழுவின் உறுப்பினராக இருந்து அக்குழுவின் அறிக்கையில் அதிகாரப் பகிர்வு தொடர்பான விடயங்களில் 13வது திருத்தத்தில் உள்ள குறைபாடுகள் எல்லாவற்றையும் நிவர்த்தி செய்யும் வகையில் அவ் அறிக்கையினைத் தயாரிப்பதில் முழுமையாகப் பங்களிப்புச் செய்தவன்.

அத்துடன் அரசியலமைப்புச் சபையின் மத்தி – மாகாணங்களிற்கிடையிலான உறவு தொடர்பான உபகுழுவின் நிபுணத்துவ உறுப்பினராக இருந்து அதன் அறிக்கை வரைபில் அதே போல் பங்காற்றியுள்ளேன்.

13வது திருத்தச் சட்டத்தில் உள்ள குறைபாடுகளினை முழுமையாக இனங்கண்டு அவற்றை நிவர்தி செய்யும் விதத்தில் அரசியலமைப்பு மாற்றம் அல்லது திருத்தம் அமையக் கூடிய வகையிலேயே எனது முன்மொழிவுகள் எப்போதும் அமைந்திருந்தன.

எனது இந்த நிலைப்பாட்டினையே முதலமைச்சரும் கொண்டிருப்பதனால்தான் முதலமைச்சர் சார்பில், அன்றைய அமைச்சர் குருகுலராஜாவையும் இணைத்துச் சென்று, அரசியலமைப்பு சபையின் வழிப்படுத்தும் குழுவின் முன்னால் நான் பரிந்துரைகளை வழங்கியிருந்தேன்.

13வது திருத்தச் சட்டத்தில் குறைபாடுகள் உள்ளன அல்லது அதனை முழுமையாகச் செயற்படுத்துவதில் தடைகள் உள்ளன என்பதற்காக அது முற்றாக நிராகரிக்கப்பட வேண்டிய ஒன்றல்ல.

கூட்டுறவுத்துறை, கல்வி (வடக்கில் இயங்கும் 1098 பாடசாலைகளில் 22 தேசிய பாடசாலைகள் தவிர), சுகாதாரம் (யாழ் போதனா வைத்தியசாலை தவிர 110 வைத்தியசாலைகள்), விவசாயம் என இவ்வாறாக 35 விடயங்கள் மாகாணத்திற்கான விடயப் பரப்பாக ஒதுக்கப்பட்டிருக்கின்றன.

இவ்விடயப் பரப்புகளினை முற்றாக மாகாண சபையினுடைய அதிகார வரம்பிற்குட்பட்ட விடயங்களாகச் செயற்படுத்துவதற்கு ஏறத்தாழ 300 நியதிச் சட்டங்கள் வரை இயற்ற வேண்டுமென நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இது வரை மாகாண சபையினால் பதின்நான்கு நியதிச்சட்டங்களே ஆக்கப்பட்டுள்ளன. நியதிச் சட்டங்களை ஆக்குவதற்கு மாகாண சபையில் ஆளணிப் பற்றாக்குறை இருப்பதனால் துறைசார் நிபுணர்கள் ஊடாக அவற்றினைத் தயாரிப்பதற்கு வெளிநாட்டுத் தூதரகங்கள் கூட உதவ முன்வந்தன.

அவற்றினைக் கூடப் பாவித்து மாகாண சபையினால் நியதிச் சட்டங்களை ஆக்கத் தெரியவில்லை. இவர்களது மந்தப் போக்கினைக் கண்டு எதிர்க்கட்சித் தலைவராக இருந்தும், நான் மீன்பிடி தொடர்பான நியதிச்சட்டத்தை இயற்றிக் கடந்த பெப்ரவரி மாதத்தில் கொடுத்திருந்தேன்.

இதுவரை அதற்கு என்ன நடந்தது என்று தெரியாது. மாகாண சபைக்கு ஒதுக்கப்பட்ட விடயப்பரப்புகளிற்கான நியதிச் சட்டங்களை ஆக்குவதன் மூலமே அவ்விடயப் பரப்புகளிற்கான மத்திய சட்டவாக்கங்களை வட மாகாணத்திற்குள் செயலிழக்கச் செய்ய முடியும்.

அதுவரை மாகாண விடயங்களில் மத்தியின் தலையீடு சட்ட ரீதியாகத் தவிர்க்க முடியாத ஒன்றாகும்.

இவ்வாறே என்னால் மாகாண சபையின் நிறைவேற்றுச் செயற்பாட்டின்மையினை அடுக்கிக் கொண்டே போகலாம். “ஆடத் தெரியாதவர் மேடை கோணல்” என்று கூறிக் கொண்டே இருப்பர் என அவர் மேலும் கூறியுள்ளார்.

 

http://www.tamilwin.com/politics/01/189831?ref=home-feed

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.