Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மழை வரும் காலம்-தாமரைச்செல்வி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மழை வரும் காலம்-தாமரைச்செல்வி

 %E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%B5%E0

இப்போது நேரம் ஆறு பத்து. ஆறுமணிக்கு வருகிறேன் என்று சொன்னவள் இன்னமும் வரவில்லை. நேரத்தைக் கடைப்பிடிக்காதவர்கள் மீது எனக்கு மதிப்பு இருந்ததில்லை. ஆனாலும் ஒருநாள் கூட சந்தித்திருக்காத பெண் மீது எந்த அபிப்பிராயமும் கொள்ள முடியாது என்பதால் பொறுமையோடு பார்த்துக் கொண்டிருந்தேன். இந்த தாமதத்திற்கு ஏதேனும் காரணங்கள் இருக்கலாம்.

புறப்படும் நேரத்தில் யாராவது விருந்தினர்கள் வந்திருக்கலாம். அல்லது அவசர தொலைபேசி அழைப்புக்கள் உரையாடல்கள் நேரத்தை விழுங்கியிருக்கலாம். அல்லது காரில் வரும் போது போக்குவரத்து நெரிசல் காரணமாய் தாமதமாகியிருக்கலாம். எதுவோ…. அந்தப் பெண் இன்னமும் வரவில்லை. படத்தில் பார்த்ததை வைத்துத்தான் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து கொள்ள வேண்டும். அல்லது பத்தாம் இலக்க மேஜையைப் பார்த்து அடையாளம் கண்டு அவள் வர வேண்டும்.

வட இந்திய உணவகம் இது. சிட்னியின் பரபரப்புக்கு பொருத்தமில்லாத அமைதியான ஒரு இடத்தில் அமைந்திருந்தது. ஆறு மணிக்கே உள்ளே இருள் பரவ, அதைப் போக்கலாமா விடலாமா என்ற தயக்கத்தோடு மின்னும் குழல்விளக்குகள்….

மெல்லிய வெளிச்சத்தில்தான் இங்கு பல உணவகங்கள் செயல்படுகின்றன.

சுற்றும் முற்றும் பார்த்தேன் . அநேகமான மேஜைகள் வெறுமையாய் இருந்தன. எட்டு மணிக்கு மேல்தான் ஆட்கள் வருவார்கள். இப்போது இருந்த சில பேரும் மெல்லிய குரலில் கதைத்துக்கொண்டு அவசரமற்று இருந்தார்கள் . பலவிதமான முகங்கள்….. பல மொழி பேசும் மனிதர்கள்… மேஜையைச் சுற்றி ஓடிய ஜப்பானியக் குழந்தை என் மீது மோதி மன்னிப்புக் கேட்டுக்கொண்டு போனது.

நான் வாசலைப் பார்த்தேன். கண்ணாடிக்கு வெளியே தெருவும் அப்பால் புல்வெளியும் அருகே வீடுகளும் மங்கலாய் தெரிந்தன.

அந்தப்பெண் …. பெயர் என்னவோ….ஒரு வினாடி தாமதத்தின் பின் நினைவு வந்தது.

நேத்ரா. பெயர் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனாலும் பெயரைப்பற்றியோ அந்தப் பெண்ணைப்பற்றியோ எந்த ஆவலும் மனதில் எழவில்லை.

அம்மாவின் வற்புறுத்தலினால்தான் இந்த சந்திப்புக்கு ஒப்புக்கொண்டேன்.

“ உன்னை மதிக்காத பொம்பிளையோட பத்து வருசம் வாழ்ந்து கஷ்டப்பட்டிட்டாய். அவள்தானே உன்னை வேண்டாம் எண்டு சொல்லி விட்டவள். இனியாவது ஒரு நல்ல பிள்ளையை கல்யாணம் செய்து நீ நல்லாய் இருக்க வேணும்.”

இப்படி கதைக்கும்போது அம்மாவின் கண்களில் நீர் தழும்பிவிடும். இரண்டு வருஷமாய் அம்மாவின் புலம்பல் இது.

“உன்னைப் போல ஒருத்தனை அவளுக்கு எப்பிடி பிடிக்காமல் போச்சு”

என்ற கேள்விதான் அம்மாவின் புலம்பலுக்கு ஆணிவேர்.

“விடுங்கோ அம்மா. நான் இப்பிடியே இருந்திட்டுப்போறன்.”

“இப்பிடி தனிமரமாய் எத்தினை நாளைக்கு இருப்பாய் சொல்லு.”

கவலைப்படும் அம்மாவை அக்காவும் அத்தானும் சமாதானப்படுத்துவார்கள். என்னைப் பற்றிய கவலை அவர்களுக்கும் இருந்தது. மெல்பேர்ணில் அவர்களோடுதான் அம்மாவும் இருக்கிறா. அத்தான் போனவாரம் கதைக்கும் போது சொன்னார்.

“ எங்களுக்கு தெரிஞ்ச ஆட்கள் மூலம் ஒரு இடம் வந்திருக்கு. அந்தப்பிள்ளை நேத்ராவும் டிவோர்ஸ் எடுத்ததாம். ஒருக்கா அந்தப் பிள்ளையைப் பார்த்துக்கதை. உனக்கு பிடிச்சிருந்தால் பார்ப்பம். இல்லாட்டில் பரவாயில்லை. ஒருக்கா கதைக்கிறதில என்ன இருக்கு. அம்மாவும் ஒரே கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறா.”

அவர்களின் ஆதங்கத்தை எடுத்தெறிய முடியவில்லை. ஒப்புக்கொண்டு இங்கே வந்து அமர்ந்திருக்கிறேன்.

அந்தப் பெண் நேத்ராவிடம் பேச கொஞ்சம் விஷயங்கள் இருக்கின்றது. என்ன பேசுவது எப்படி பேசுவது என்று யோசித்து வார்த்தைகளை சேகரித்து வைத்திருக்கிறேன். அவள் என்ன மனநிலையில் வருகிறாளோ தெரியவில்லை.

ஒரு பெண்ணுக்காக காத்திருத்தல் என்பது என் வாழ்வில் இரண்டாவது தடவையாக நிகழ்கிறது.

முதல் தடவையாக இதே போன்ற ஒரு ரெஸ்ரோரண்டில் இதே போன்ற ஒரு மாலை நேரத்தில் முன் பின் பார்த்திராத அகில் என்ற பெண்ணுக்காக காத்திருந்தது நினைவில் வந்து நெருடியது. மனம் நிறைந்த ஆவலோடும் பரபரப்போடும் காத்திருந்த தருணம் அது. அகில் ஆறு வயதில் பெற்றோருடன் அவுஸ்திரேலியா வந்தவள். ஒரே பெண். சிட்னியில் படித்து நல்ல வேலையிலும் இருப்பவள். திருமணம் பேசியதும் ஒரு தடவை சந்தித்து கதைக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

அன்றும் நான்தான் முதலில் வந்து காத்துக் கொண்டிருந்தேன். பத்து நிமிட தாமதத்தின் பின் தயங்கித் தயங்கி வந்தாள். வாசலில் நின்று பார்வையை சுழற்றிப் பார்த்த போதே அந்தப் பெண் அகில்தான் என்பதைப் புரிந்து கொண்டேன்.

என்னை அடையாளம் கண்டு எதிரே வந்து அமர்ந்தாள்.

படத்தில் பார்த்ததை விட அழகாய் இருந்தாள். தலைமயிரை தோள் அளவில் வெட்டியிருந்தாள். மலர்ச்சியான முகம். பார்வை தயக்கத்துடன் என் முகத்தில் பதிந்து மீண்டது.

“தமிழ் தெரியுமா”

தலையசைத்தாள்.

“கொஞ்சம் கொஞ்சம்.”

“சரி. உங்களைப் பற்றி சொல்லுங்கோ”

சொன்னாள். அவளின் தமிழ் மழலையின் குரலாய் கொஞ்சிக் கொஞ்சி ஒலித்தது. அப்படியே தொடராய் கதைக்க இயலாமல் ஆங்கிலத்திற்கு தாவினாள். தன் படிப்பு , வேலை பற்றியும், அம்மா அப்பா தன்னை வளர்த்த விதம் பற்றியும் நிறைய பேசினாள். அவர்கள் தெரிவில் தனக்கு நம்பிக்கை இருப்பதாகவும் சொன்னாள்.

நான் பேசுவதையும் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தாள். இப்படி ஒரு சூழலில் காலங்காலமாக ஒரு ஆண் கேட்கும் அதே கேள்வியை நானும் கேட்டு வைத்தேன்.

“என்னைப் பிடிச்சிருக்கா”

“அம்மா அப்பா சொன்னா சரி. அவைக்கு ஓக்கே எண்டால் எனக்கும் ஓக்கே.”

முதல் தடவையாக சந்திக்கும் ஆணோடு இப்படித்தான் ஒரு பெண்ணால் பேச முடியும் என்பதால் நான் அதை பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை .ஆனால் பின் நாட்களில் எங்களுக்குள் இடைவெளி ஏற்படவும் இதுவே காரணமாக இருக்கப் போகிறது என்று அப்போது புரியவில்லை.

சிட்னியில் உள்ள ஆடம்பர மண்டபம் ஒன்றில் நாநூறு பேர் வரை வந்து வாழ்த்தி நிற்க எங்கள் திருமணம் நடந்தது. எங்கள் பக்கத்து ஆட்களை விட அகில் பக்கத்து ஆட்களே அதிகம். சம்பந்தி என்ற முறையில் தனக்கு சரியான மரியாதை தரப்படவில்லை என்ற அம்மாவின் முணு முணுப்பு எனக்கும் கொஞ்சம் நெருடலைத்தான் ஏற்படுத்தியது. எனினும் அந்த நேர அவசரத்தில் எதையும் ஆழ்ந்து யோசிக்கத் தோன்றவில்லை.

திருமணம் முடிந்ததும் அவர்களின் வற்புறுத்தலால் அகில் வீட்டிலேயே எங்கள் வாழ்க்கை தொடங்கியது. கொஞ்சம் காசு சேர்ந்ததும் சொந்தமாய் ஒரு வீடு வாங்கவேண்டும் என்ற நினைப்பு இருந்தது. அதுவரை அவர்களுடன் தங்கலாம்என்று நினைத்துத்தான் போனேன். ஒன்றாக இருந்தபோதுதான் சில விஷயங்கள் புரியவந்தது

அவர்களின் சிந்தனைகள் பழக்கவழக்கங்கள் வேறுமாதிரி இருந்தன. எனக்கு பரிச்சயமற்ற வேறு உலகம் அது. பணத்தால் ஏற்படுத்திக்கொண்ட அந்தஸ்த்து , வெள்ளைக்காரர்களின் வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற விருப்பம் …

இதெல்லாம் என் இயல்புக்கு மாறான வாழ்க்கை முறை. தாய் தந்தையோடு எங்கேனும் போவாள் வருவாள். நான் எதுவும் கேட்பதில்லை. அது அவளின் சுதந்திரம் என்ற தெளிவு எனக்கு இருந்தது. ஆனால் என் விஷயத்தில் தலையிட்டபோது எனக்கு அது கொஞ்சம் நெருடலைத் தந்தது. ஏதாவது நிகழ்வுகளுக்கு போவதெனில் எனது உடுப்புக்களையும் அவளே தெரிவு செய்வாள். எனக்குப் பிடிக்காவிட்டாலும் போட்டுக்கொள்ள வேண்டும்.

நான் வைத்திருந்த டொயாற்றா காரை மாற்றி பெராறி கார் வாங்கலாம் என்றாள்.

“அப்பா சொன்னவர் பெராறி கார் வைச்சிருந்தால் மதிப்பு என்று. வாங்குவமே”

“அதுக்கு எவ்வளவு காசு தேவைப்படும். இப்போதைக்கு இது போதும். “

“அப்பா காசு தாறாராம். பென்ஸ் காரெண்டாலும் இப்ப வாங்குவம்.”

“அதொண்டும் வேண்டாம். வீடு வாங்கி செட்டிலான பிறகு காரை வாங்குவம்.”

நான் சொல்லும் போது என்னவோ சரி என்றுதான் கேட்கிறாள். பிறகு வந்து அப்பா சொன்னார் அம்மா சொன்னா என்று சொல்லும்போது கோபமாக வரும்.

எங்களுக்கான ஒவ்வொரு விஷயங்களிலும் அகிலின் அப்பா அம்மாவின் தலையீடு. எங்களின் விஷயங்களையும் தீர்மானிப்பவரகளாக அவர்கள் இருந்தார்கள். அகில் ஒரே பெண். அதுவும் அவர்களுக்கு திருமணமாகி நீண்ட காலத்தின் பின் பிறந்தவள் என்பதால் அவர்களின் அக்கறையை உணர்ந்து நான் எவ்வளவோ விட்டுக்கொடுத்துத்தான் நடந்திருக்கிறேன். எனது பழக்கவழக்கங்களையும் மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற போதுதான் எரிச்சல் ஏற்படத் தொடங்கியது.

“உன்ர அவருக்கு ஊரில இருந்து வந்த பழக்க வழக்கம் இன்னமும் மாறேலை. இடத்துக்கு தக்கபடி இருக்கவேண்டாமே…நல்ல படிப்பு நல்ல உத்தியோகம் என்று செய்தம். அதுக்கு தக்கபடி கௌரவமாய் நடக்கத்தெரியாதே.”

என்று அகிலின் அம்மா முணு முணுத்ததைக் கேட்ட நேரம் சுள்ளென்று கோபம் வந்தது. அந்த நேரம் சண்டை நடக்கிற என் ஊரைப்பற்றிய கவலையோடு இருந்தவன் நான். மன்னாரிலிருந்து இராணுவம் முன்னேறி வந்து கொண்டிருக்கிறது என்ற அன்றைய செய்திகளில் கலங்கிப் போயிருந்தவன். ஊரிலிருக்கும் என் சொந்த பந்தங்கள், தெரிந்தவர், தெரியாதவர்கள் எல்லாம் எங்கே அலையப்போகிறார்களோ என்ற தவிப்போடு உறங்கி எழுந்தவன். என்னோடு கூட இருக்கும் இயல்புகளை நான் பிற தேசம் வந்ததும் மாற்றிக்கொள்ள வேண்டுமா என்று கோபம் வந்தது.

அகிலுக்கு எங்கள் ஊர்க்கதைகளை சொல்லும்போது ஆர்வமாகத்தான் கேட்கிறாள். அவளுக்கு அவையெல்லாம் புதிய அனுபவங்கள். ஊரிலிருக்கும் மாமா பிள்ளைகளின் கஷ்டத்திற்காக காசு அனுப்ப வேண்டும் என்ற போது பாவங்கள் அனுப்புங்கோ என்பாள். அம்மா அக்காவுடனும் தொலைபேசியில் சுகம் விசாரித்துக்கொள்வாள். எல்லோருடனும் அன்பாய்த்தான் இருந்தாள். ஆனால் அவளுக்குள் இன்னொரு முகம் இருந்ததை போகப்போகத்தான் என்னால் உணரமுடிந்தது. நான் எதை சொன்னாலும் தலையாட்டித்தான் கேட்கிறாள். பிறகு அவர்கள் சொல்வதைக்கேட்டு இன்னொரு தோற்றம் காட்டி நிற்பாள்.

எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டிருந்த நான் முதல்தடவையாக நொந்து வெடித்தது நிலா பிறந்த நேரம். பெயர் வைப்பதிலிருந்து ஆரம்பித்தது பிரச்சனை.

“நிலாமதி எண்டு வைப்பம். நிலா எண்டு கூப்பிடலாம்.” ஆசையாக சொன்னேன்.

“அம்மா சொல்லுறா அது பட்டப்பழைய பேராம். வேண்டாமாம்.”

“பழைய பேரெண்டாலும் நல்ல பேர்தானே “

“இங்க வெள்ளைக்காரரும் கூப்பிடக்கூடிய பேராய் இருக்கவேணுமாம். அன்ஷா எண்டு வைப்பம் எண்டு சொல்லுறா.”

“அன்ஷாவோ… அது எனக்கு பிடிக்கேலை. வெள்ளைக்காரர் கூப்பிடவே பேர் வைக்கிறது. நிலா எண்டு சொல்லிப்பார். எவ்வளவு நல்லாய் இருக்கு.”

“நிலா நல்லதுதான். ஆனால் அம்மா..”

அகில் தயங்கிக் கொண்டு நின்றாள்.

“நீ அம்மாட்ட போய் சொல்லு. நிலா நல்ல பேர் எண்டு”

போனவள் அதே வேகத்தில் திரும்பி வந்து “ நிலா வேண்டாமாம். அன்ஷாதான் வைக்கிறதாம். “ என்றாள்.

அன்றோடு மனம் வெறுத்துப் போனது. அவர்கள் அன்ஷா என்று வைத்தாலும் நான் நிலாக்குட்டி என்றுதான் கூப்பிடுவேன். தங்கள் கௌரவமே பாழாய் போனது மாதிரி அவர்கள் முணு முணுப்பதை நான் கண்டு கொள்வதில்லை.

எனக்கு அந்த நேரம் ஊரைப்பற்றிய கவலைகளும் பதறல்களும்……

முள்ளிவாய்க்காலிலிருந்து சனங்கள் மீண்டு செட்டிகுளம் முள்ளுக்கம்பி முகாமில் அடைக்கப்பட்ட நேரங்கள். அந்தக் கவலைகளில் இருந்தவனுக்கு இவர்களின் செயல்கள் மேலும் மேலும் நோக வைத்தது.

தங்கள் நடப்பு நாகரீகத்துக்கு ஒத்து வராதவன் என தீர்மானிக்கப்பட்டதால்

எனக்கும் அகிலுக்கும் இடையே தூரம் அதிகமானதுதான் மிச்சமானது. இவர்களோடு இருந்தால் இவர்களின் சொல்லைக்கேட்டு இன்னும் அகில் விலகிவிடுவாள் என்ற பயத்தில் ஒரு வீடு வாங்கி தனியாய் போகலாம் என்ற எண்ணத்தில் வீடு தேடத்தொடங்கினேன். பார்க்கும் வீடுகளெல்லாம் அது சரியில்லை இது சரியில்லை நீச்சல் குளமில்லை தியேட்டர் ரூம் இல்லை அந்த ஏரியா சரியில்லை என்று ஒவ்வொரு காரணம் சொல்லி தட்டுப்பட்டுப் போனது. சிட்னியில் இவர்கள் எதிர் பார்க்கும் வீடு வாங்குவதை நினைத்தும் பார்க்க முடியாது. இப்படியே மூன்று வருஷங்கள் இழுபட்டுப் போய்விட்டது. அவர்கள் வீட்டில் இருப்பதே பெரும் துன்பமாக இருந்தது. அவர்கள் பழகும் பெரிய மனிதர் கூட்டத்தில் என்னால் பொருந்திக்கொள்ள முடியவில்லை. நான் அழைக்கும் மனிதர்களுக்கு இவர்கள் மதிப்பு தருவதில்லை. அதனால் நான் ஒதுங்கிக் கொண்டேன். அவர்களுடன் எந்த நிகழ்விலும் பங்கு கொள்வதில்லை. நிலாவுக்காக அத்தனையையும் பொறுத்துக் கொண்டேன்.

அத்தானுடன் மனம் விட்டுப் பேசும் போதெல்லாம் “ வாழ்க்கையில இப்பிடி எத்தனையோ பிரச்சனையள் வரும். கொஞ்சம் பொறுத்துப்போ. எல்லாம் சரிவரும்”

என்று ஆறுதல் சொல்வார். சில அலட்சியப்படுத்தல்கள் அவமானங்கள் மனதை ரணப்படுத்தும். கடைசியில் தெரியாத்தனமாய் ஒரு பட்டிக்காட்டானைக் கட்டி வைச்சு பிள்ளையின்ர வாழ்க்கையை பழுதாக்கிப் போட்டம் என்று அவர்களே முடிவு செய்து அது விவாகரத்தில் வந்து முடிந்தது. தாய் தந்தையின் குரலாக பேசுபவளிடம் எதையும் சொல்லி புரிய வைக்க முடியவில்லை . தோற்றுப் போனவனாய் திரும்பி வந்தேன்.

நிலாவை விட்டு விலகிய வேதனையைத்தான் தாளமுடியவில்லை. விலகிய பின்பும் எங்கேனும் நிகழ்வுகள் நடக்கும் இடங்களிலோ முருகன் கோவிலிலோ நிலாவைக் கூட்டி வரக் கூடிய இடங்களிலோ அவளைப் பார்ப்பதற்காகவே போவேன். என்னைப் பார்த்ததும் இரு கைகளையும் விரித்துக் கொண்டு ஓடி வருவாள் .தூக்கியதும் கழுத்தைக் கட்டிக் கொண்டு “ ஏம்பா வீட்ட வரேலை” என்று கேட்பாள்.

கண்களில் நீர் மறைக்க “ வருவனடா செல்லம். அப்பா தூர இடத்தில வேலை செய்யிறன் அதுதான்.” என்பேன். அந்த வினாடி நேர துன்பம் வெகுநேரத்துக்கு மனதில் தங்கி நிற்கும்.

சனி ஞாயிறுகளில் நிலாவைப் பார்க்க சட்டப்படி எனக்கு அனுமதி உண்டு. அந்த நேர சந்தோஷத்தையும் ஏதும் காரணம் சொல்லி தடுக்கப் பார்ப்பார்கள். அதையும் மீறி அவளைக் காரில் ஏற்றிக்கொண்டு அவளுக்கு பிடித்தமான இடங்களுக்கு கூட்டிப் போவேன். மாலை திரும்ப அவர்கள் வீட்டு வாசலில் இறக்கி விடும் போது என் உயிரே போவது போலிருக்கும். இதென்ன வாழ்க்கை என்று சலிப்பு தோன்றும்.

அகில் நினைத்தால் ஓரளவேனும் சரிப்படுத்தக் கூடிய நிலமைதான்.ஏனோ அவளும் சேர்ந்து இறுக்கி இந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டதாகவே தோன்றியது.

இப்போது நிலாவுக்கு ஒன்பது வயதாகிறது. அந்த குழந்தை மனதைக்கூட அவர்கள் நினைத்துப் பார்க்கவில்லை. நல்ல இடத்தில் அவளுக்கு திரும்பவும் கல்யாணம் செய்து வைக்கிறம் பார் என்று வீறாப்பாய் சொன்னவர்கள் இப்போது அமைதியாய் இருக்கிறார்கள் . காசு பணத்தால் எல்லாம் நிறைவு பெற்று விடும் என்ற அவர்களின் நினைப்பு ஒருநாள் பொய்யாகும் போது காலம் அவர்களை மீறி போய் விட்டிருக்கும். எங்காவது பார்த்தால் கூட முகத்தைத் திருப்பிக் கொள்ளும் அகிலுடன் இனி பேசுவதற்கும் எதுவுமில்லை.

என்னுடைய நிலையைப் பார்த்து அக்காவும் அத்தானும் மெல்பேர்ணில் வேலை எடுத்துக் கொள்ளலாம் வா என்று சொன்னபடி இருந்தார்கள். எப்போதேனும் ஒரு தடவை நிலாவைப் பார்க்கும் சந்தர்ப்பத்தை விட்டு விட்டு என்னால் எங்கேயும் போக முடியவில்லை. அதை மறுத்ததில் அம்மாவுக்கு மிகுந்த மன வருத்தம்.

“அப்பிடியெண்டால் தனிய இருக்காதை. ஒரு கலியாணத்தைச் செய்” என்று நெருக்கத் தொடங்கி இன்று இந்த மேஜையில் வந்து அமர்வதில் முடிந்திருக்கிறது.

ஒரு பெண்ணின் வரவை எதிர்பார்த்துக் கொண்டு இருப்பது பெரும் சங்கடத்தைத் தருகிறது . நேரத்தைப் பார்த்தேன் . ஆறு இருபது.

அப்போதுதான் கவனித்தேன் . வாசல் கடந்து உள்ளே வருவது நேத்ராவாக இருக்கலாம். படத்தில் பார்த்ததை வைத்து அவள்தான் என்று தோன்றியது. மெலிந்த உயரமான தோற்றம். சுற்றும் முற்றும் பார்த்து என் மேஜையை நோக்கி வந்தாள். என்னைப் புரிந்து கொண்டு ஒரு மெல்லிய புன்னகையோடு ஹலோ என்று கை நீட்டினாள். ஹலோ என்று கை கொடுத்ததும் “ சொறி. இருபது நிமிஷம் லேற். வெளிக்கிட ஒரு கோல் வந்திட்டுது. சொறி. “ என்று சொல்லி அமர்ந்தாள்.

“பரவாயில்லை. தமிழ் கதைக்கிறீங்கள்.”

“பத்து வயதிலதான் இங்க வந்தனான். அதெப்பிடி மறக்கும். கவிதை கூட எழுதுவன். சில ஒன்லைன் மகசீன்களில எழுதியிருக்கிறன். “

“ஆ.. நல்ல விஷயம் “

இயல்பான உரையாடலாக ஆரம்பித்தது தொடர்ந்து பேச வசதியாய் இருந்தது. தன்னைப்பற்றி தன் வேலை பற்றி நாலு வயது மகள் தருணியைப் பற்றி சொல்லிக்கொண்டே போனாள்.

“சரி. உங்களுக்குள் என்ன பிரச்சனை வந்து டிவோர்ஸ் வரைக்கும் கொண்டு வந்தது”

“அதைப் பற்றி நிறையச் சொல்லலாம். நான் பிறந்து பத்து வயது வரை வளர்ந்தது கொழும்பில. அவருக்கும் சொந்த இடம் கொழும்புதான். அவரும் சின்னனிலயே இங்க வந்திட்டார்.இங்க வந்து படிச்சு நல்ல வேலையில இருந்தவர். அதாலதான் அப்பா எனக்கு அவரை செய்து வைச்சவர். ஆனா அவர் எங்களோட ஒத்துப் போகேலை. நான் அப்பா அம்மாவுக்கு ஒரே ஒரு பொம்பிளைப் பிள்ளை. அண்ணாவும் அமெரிக்காவில இருக்கிறார். அப்பா அம்மாவோட நான் இருக்கத்தானே வேணும். அது அவருக்கு பிடிக்கேலை. நான் அவையின்ர சொல்லைக் கேட்டு நடக்கிறன் எண்டு பிரச்சனை. தனக்கு பிரைவசி இல்லையாம். அவையளை விட்டிட்டு வா எண்டால் நான் எப்பிடி போறது. அப்பா அம்மாவை மதிக்கிறதில்லை. ஏதும் அவையள் கதைக்க ஏலாது. உடன பிரச்சனை. பட்டதெல்லாம் போதும் எண்டு டிவோர்ஸ் எடுத்தாச்சு.”

கொஞ்சம் நிறுத்தினாள். இன்னொரு அகிலாவோ என்று கணநேரம் தோன்றியது.

“ஏதோ தருணி எனக்கு இருக்கிறாள். அம்மா அப்பா இருக்கினம். இப்பிடியே இருந்திடலாம் எண்டுதான் நினைச்சன். ஆனா அப்பா அம்மா விடுகினமில்லை. இன்னொரு கல்யாணம் செய் எண்டு நிற்கினம். என்க்கு ஒரே யோசனை. ஒருக்கா பட்டு எழும்பினது பயமாய் இருக்கு. சரி ஒருக்கா கதைச்சுப் பார்ப்பம் எண்டு வந்தனான். “

நிறுத்தி நிதானமாய் பேசும் இவள் கொஞ்சம் தெளிவான பெண் போல் தெரிந்தாள்.

“சரி. தருணி எப்பிடி நினைக்கிறாள்.”

“நாலு வயதுப் பிள்ளைக்கு என்ன தெரியும் .ஒவ்வொரு ஞாயிறும் வந்து தருணியை கூட்டிப்போய் பின்னேரம் கொண்டு வந்து விடுவார். அவளும் வளர வளர எல்லாத்தையும் விளங்கிக் கொள்வாள். “

மனதுக்குள் வலித்தது. குழந்தைகளின் மனங்கள் நொறுங்கிப் போவதை உணர்ந்தும் ஏதும் செய்ய முடியாதவர்களாகத்தான் இருக்கிறோமா…..

“சரி உங்கள் அவரின் நல்ல விஷயங்கள் எதையாவது எப்போதாவது நினைச்சுப் பார்ப்பீங்களா.”

இதென்ன கேள்வி என்பது போல புருவம் சுருக்கிப் பார்த்தாள்.

“சொல்லுங்கோ”

ஒரு வினாடி பேசாமல் இருந்தாள். கையால் நெற்றியைப் பிடித்துக்கொண்டாள்.

“தொடக்கத்தில் நல்லாய்த்தான் இருந்தவர். கவிதைகள் பற்றி பெரிதாய் ஆர்வமில்லாவிட்டாலும் வாசிச்சுப் பார்ப்பார். என்ர பேர்த்டே எல்லாம் சேர்ப்பரைசாய் கொண்டாடுவார். தருணியை வயிற்றில வைச்சிருக்கிற நேரம் அந்த மாதிரிதான் பார்த்தவர். தருணியிலயும் பாசம்தான். நல்ல குணமும் இருக்குதுதான். ஆனா சின்ன சின்ன விஷயங்களை பெரிசாக்கி சண்டை போடுவார். எதையும் ஸ்போர்ட்டிவ்வாக எடுக்கத் தெரியாது. அப்பிடி சண்டை போடுற நேரம் வேற ஆளாய் நிற்பார். எவ்வளவு நாளைக்குத்தான் மனதால கஷ்டப்படுறது. அவரோட சரியாய் களைச்சுப் போனன்.

அவரைப் பற்றி வேற என்ன சொல்லுறது.”

சில வினாடி அமைதிக்கு பிறகு ஜூஸை ஸ்ரோவில் மெதுவாய் உறிஞ்சிக் குடித்தாள். நிமிர்ந்து என்னைப் பார்த்து “ இனி நீங்கள் சொல்லுங்கோ” என்றாள்.

“கிட்டத்தட்ட ஒரே கதைதான். ஒவ்வொரு மனிதருக்கும் இரண்டு பக்கங்கள் இருக்கு. கெட்டதை விட்டிட்டு நல்லதை மட்டும் எடுத்துக்கொள்வோமே.”

அவள் புரியாதவளாய் பார்த்தாள்.

“அப்பா அம்மா எங்களுக்கு நல்லதைத்தான் சொல்லுவினம். ஆனா அதை தங்கட நிலையிலயிருந்து சொல்லுவினம்.அது எங்களுக்கு பொருத்தமானதா இல்லையா எண்டதை நாங்கள்தான் தீர்மானிக்க வேணும். அகில் செய்த பிழையைத்தான் நீங்களும் செய்யிறீங்களோ எண்டு நினைக்கிறன். “

சிறிது வியப்போடு பார்த்தாள்.

“நீங்கள் இப்பவும் அகிலை லவ் பண்ணுறீங்களா.”

“அவளின்ர நல்ல பக்கத்தை நினைச்சுப் பார்ப்பன். அப்பிடி நினைக்கிற நேரம் அந்த அன்பும் அப்பிடியே இருக்கிறதாய்த்தான் நான் உணர்றனான்.”

“அப்போ….. இந்த சந்திப்புக்கு என்ன அவசியம்.”

“சொறி. தவிர்க்க முடியாமல் போயிட்டுது. பிரச்சனையள் இல்லாமல் ஆருமே இல்லை. கொஞ்சம் கதைச்சுப் பார்க்கலாம் எண்டு நினைச்சன். நான் எந்த குழப்பமும் இல்லாமல்தான் இருக்கிறன். அதை உங்களிட்ட சொல்லலாம் எண்டதும் ஒரு காரணம். “

அவள் முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை தோன்றி மறைந்தது.

“சொல்லுங்கோ.”

“காலம் எதையுமே மாத்தி வைக்கும். அதில எனக்கு நம்பிக்கை இருக்கு. இப்ப தாய் தகப்பன்ர சொல்லுக்கேட்டு நடக்கிற அகில் அவை இல்லாத காலத்திலயோ அல்லது தங்கட மகளின்ர வாழ்க்கை வீணாய்ப்போயிட்டுதே என்று அவை உணருகின்ற நேரத்திலயோ அந்தரிச்சுப்போயிடக்கூடாது. அப்ப அவளுக்கு கை குடுக்க நான் இருக்கவேணும். தவிர நிலாவுக்கு அம்மா அப்பா ரெண்டு பேரின் அன்பும் கிடைக்கவேணும். எங்கட அன்புக்காக ஏங்கிற நிலை அவளுக்கு வரவே கூடாது.. அதுக்காக நான் இப்பிடியே இருக்கிறதுதான் சரியாய் இருக்கும்.இன்னொரு கல்யாணம் செய்யிற நோக்கம் என்க்கு இல்லை. சொறி.”

அவள் கண்களை மலர்த்தி பார்த்தாள்.

“நீங்கள் சொல்லுறது விளங்குது. ஓக்கே. நான் வாறன்.”

எழுந்தவள் ஒரு வினாடி நின்றாள்.

“நீங்கள் என்னையும் குழப்பிப் போட்டியள்.”

சிரித்துக்கொண்டே சொன்னாள்.

“அதுவும் நல்லதுதான்.” என்றேன்.

நானும் போவதற்காக எழுந்தேன்.

மனது என்னமோ லேசானது போல் உணர்ந்தேன். அடுத்த ஞாயிறு நிலாவைப் பார்க்கப் போகும் போது என்ன வாங்கிக் கொண்டு போகலாம் என்று யோசித்துக் கொண்டே காரை நோக்கி நடந்தேன்..

தாமரைச்செல்வி-அவுஸ்திரேலியா

 

http://www.naduweb.net/?p=8168

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.