Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வங்கக் கடலோரத்து சிறு மணல் திட்டு மதராஸாகி, மெட்ராஸாகி ‘சென்னை’யான கதை!

Featured Replies

வங்கக் கடலோரத்து சிறு மணல் திட்டு மதராஸாகி, மெட்ராஸாகி ‘சென்னை’யான கதை!

 

 
madras_beach

 

சென்னப்பட்டிணம் உருவான கதை...

சிங்காரச் சென்னைக்கு இன்று வயது 379. ஒவ்வொரு வருடமும் ஆகஸ்டு மாதம் 22 ஆம் தேதி ‘சென்னை தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தின் பிற பெருநகரங்களோடு ஒப்பிடுகையில் சென்னைக்கென்று ஒரு நீண்ட தனித்துவமான வரலாறு உண்டு.  கி.பி ஒன்றாம் நூற்றாண்டு முதலே பல்லவ, சோழ, விஜயநகரப் பேரரசுகளின் ஆட்சிக் காலத்திலும் அவர்களை அடுத்து பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சிக் காலத்தில் சென்னை நகரம் மிக முக்கியமான வியாபார கேந்திர மையமாகவும், ஆட்சி அதிகார மையமாகவும் விளங்கியிருப்பதாக சரித்திரச் சான்றுகள் கூறுகின்றன. அயல்நாட்டு வர்த்தகர்களின் வருகைக்கும் மத போதகர்களின் வருகைக்கும் சென்னைக் கடற்கரை ஒரு முக்கியமான கேந்திரமாக விளங்கியிருக்கிறது.

சென்னப்பட்டிணம் பெயர்க்காரணம்...

சென்னை முதலில் சென்னப்பட்டிணம் என்ற சிறிய கிராமமாக இருந்து வந்தது. 1639 ஆம் ஆண்டு ஆகஸ்டுத் திங்கள் 22 ஆம் நாள் அந்தக் கிராமம் சென்னப்பட்டிணமாக முதல்முறை உதயமானது. அன்றைய தினம் கிழக்கிந்தியக் கம்பெனியைச் சேர்ந்த பிரான்சிஸ் டே, ஆண்ட்ரூ கோஹன் ஆகியோர் தங்களது வியாபார உதவியாளரான பெரிதிம்மப்பா மூலமாக செயிண்ட் ஜார்ஜ் கோட்டை உள்ளடக்கிய கடலோர மீனவக் கிராமங்களை விலைக்கு வாங்கினர். அந்த இடத்தை தங்களுக்கு விற்ற ஐயப்பன், வேங்கடப்பன் என்போரது தந்தை சென்னப்ப நாயக்கன் என்பவரது நினைவாக கோட்டைக்கு வடக்கே இருந்த ஊர் சென்னப்பட்டிணம் என்று அப்போது அழைக்கப்பட்டது. சென்னையின் பெயர்க்காரணத்திற்கு மற்றொரு கதையும் உண்டு. சென்னையில் தற்போதைய உயர்நீதிமன்றக் கட்டிடம் உள்ள இடத்தில் சுமார் 365 ஆண்டுகளுக்கு முன்பு சென்னகேசவர் கோவில் ஒன்று இருந்திருக்கிறது. அதனால் சென்ன கேசவபுரம் என்று அழைக்கப்பட்டு பின்னர் சென்னை என்று பெயர் மருவியதாகவும் கூறப்படுகிறது. ஆங்கிலேயர்கள் 1639 ஆம் ஆண்டு செயிண்ட் ஜார்ஜ் கோட்டையை கட்டி முடித்ததின் பின்பு தான் அதையொட்டிய கிராமங்கள் அனைத்தும் வியாபார நிமித்தமாக ஒன்றுடன் ஒன்று இணைந்தும், இணைக்கப்பட்டும் இன்றைய பெருநகரச் சென்னையின் தோற்றம் அன்றே சிறிது சிறிதாகப் புலனாகத் தொடங்கியது.

சென்னப்பட்டிணம் எனும் கிராமம் நகர அந்தஸ்து பெற்ற காலம்... 

சென்னை, என்ற இன்றைய மாநகரத்தின் தோற்றம் இப்படி உருவானது தானென்றாலும்... சென்னப்பட்டிணத்தை ஒட்டியிருந்த அப்போதைய  பேரூர் அமைப்புகளான மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, திருவொற்றியூர், திருவான்மியூர், போன்ற இடங்கள் சென்னப்பட்டிணத்தைக் காட்டிலும் மேலும் பல நூற்றாண்டுகள் தொன்மையானவையாக இருந்தன. சென்னையிலுள்ள மயிலாப்பூர் பல்லவ அரசின் முக்கியத் துறைமுகமாக விளங்கியது. புனித தாமஸ் இங்கு கிபி 52 முதல் 70 வரை கிறிஸ்தவ மத போதகராக இருந்து வந்ததாக நம்பப்படுகிறது. அதற்கான சரித்திரச் சான்றுகளும் சுட்டப்படுகின்றன. 16 ஆம் நூற்றாண்டில் இங்கு வந்த போர்த்துகீசியர்கள் 1522 ஆம் ஆண்டு ‘சாந்தோம்’ என்ற பெயரில் ஒரு துறைமுகத்தை நிறுவியிருந்தனர். பின்பு 1612 ஆம் ஆண்டில் சாந்தோம் பகுதி டச்சுக்காரர்களுக்குக் கைமாறியது. 1639 ஆம் ஆண்டு ஆங்கிலேயே கிழக்கிந்தியக் கம்பெனியின் ஏஜெண்டுகளான பிரான்சிஸ் டே மற்றும் ஆண்ட்ரூ கோஹன் உள்ளிட்டோரால் ஆங்கிலேயருக்கான குடியிருப்பாக சாந்தோம் பகுதி தேர்வு செய்யப்பட்டது. தேர்வு செய்யப்பட்ட ஓராண்டுக்குப் பின் புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது. இந்தக் கோட்டையை மையமாகக் கொண்டு ஆங்கிலேயர்களுக்கான குடியிருப்புப் பகுதிகள் அடுத்தடுத்து பெருமளவில் வளர்ச்சி கண்டன. சென்னப்பட்டிணத்தை ஒட்டியிருந்த கிராமப்புறப் பகுதிகளான திருவல்லிக்கேணி, எழும்பூர், சேத்துப்பட்டு, புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகள் சென்னப்பட்டிணத்துடன் இணைந்தன. 1522 ஆம் ஆண்டில் இங்கு வந்த போர்த்துகீசியர்கள் செயிண்ட் தாமஸ் கோட்டையைக் கட்டினர். அதைத் தொடர்ந்து அந்தப் பகுதி போர்த்துகீசியர் வசம் வந்தது. தற்போதையை சென்னைக்கு வடக்கே 1612 ஆம் ஆண்டில் புலிக்காடு என்ற பகுதியில் போர்த்துகீசியர்களின் குடியிருப்புகள் உருவாகின. 1688 ஆம் ஆண்டில் சென்னை முதல்நகர அவையாக இரண்டாம் ஜேம்ஸ் மன்னரால் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் இந்தியாவின் முதல் நகராட்சி என்ற பெருமை சென்னைக்கு வந்தது.

கிளைவின் போர்ப்பாசறையாக சென்னப்பட்டிணம்...

பின்னர் கிழக்கிந்தியக் கம்பெனியின் ராணுவத் தளபதியான ராபர்ட் கிளைவ் தனது படை நடவடிக்கைகளுக்கான தளமாக சென்னையைப் பயன்படுத்தினார். பின்னர் பிரிட்டானியக் குடியிருப்பு எல்லைக்கு உட்பட்ட நான்கு மாகாணங்களில் சென்னையும் ஒன்று என்ற அங்கீகாரம் இந்த நகருக்குக் கிடைத்தது.

மதராஸ் மாகாணத்தின் தலைநகர் ‘சென்னை’ 

1746 ஆம் ஆண்டில் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையையும், சென்னை நகரையும் ஃப்ரெஞ்சுப் படைகள் கைப்பற்றின. 1749 ஆம் ஆண்டு இப்பகுதிகள் மீண்டும் ஆங்கிலேயர் வசம் வந்தன. அதன்பின் சென்னை நகரம் மிகப்பெரிய வளர்ச்சி கண்டது. இந்தியாவின் முக்கிய நகரங்கள் அனைத்தும் ரயில் மார்க்கமாக சென்னையுடன் இணைக்கப்பட்டன. 1947 ஆம் ஆண்டு இந்திய விடுதலைக்குப் பின் சென்னை, அன்றைய மதராஸ் மாகாணத்தின் தலைநகரமாக அறிவிக்கப்பட்டது. 1969 ஆம் ஆண்டு மதராஸ் மாகாணம், தமிழ்நாடு எனப் பெயர் மாறுதலுக்கு உள்ளானது. 

சென்னை என்று பெயர் மாறுதலுக்கு உள்ளாவதற்கு முன்பு சென்னையை சென்னப் பட்டிணம் என்றும், மதராஸப் பட்டிணம் என்றும் இருபெயர்களில் அதன் பூர்வ குடிமக்கள் அழைத்து வந்தனர். 

சென்னைக்கு, சென்னை எனப் பெயர் வந்ததற்கான காரணங்கள் தெளிவாக விளக்கப்பட்ட போதும் மதராஸப்பட்டிணம் என்ற பெயர்க்காரணம் வந்தமை குறித்த தெளிவான காரணங்கள் அறியப்படவில்லை. அதில் குழப்பங்கள் நிலவுகின்றன. சிலர் வங்கக் கடல் பகுதியில் சிறிய மணல்திட்டாக இருந்த சில கிராமங்களை ஒன்றிணைத்து சென்னப்பட்டிணம் உருவான போது அதற்கு குறிப்பிடத்தக்க பெயர்கள் இல்லாமல் மேட்டில் இருந்த நகரம் எனும் பொருள் கொள்ளும்படியாக ‘மேடு ராச பட்டிணம்’ என்ற பெயர் வழங்கி வந்து காலப்போக்கில் அது மருவி ‘முத்துராசப் பட்டிணமாகி’ பின்பு ‘மதராஸப் பட்டிணம்’ என்று மாறியதாகக் கூறுகிறார்கள்.

சென்னை எனும் அதிகாரப் பூர்வ பெயர் அறிவிப்பு!

மதராஸ் என்பதை “மெட்ராஸ்” என்று பிற மொழிகளில் எழுதினார்கள். எனவே சென்னை நகரின் பெயரை சென்னை என்று ஒரே பெயரில் மட்டுமே எல்லா மொழிகளிலும் அழைக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதை கலைஞர் கருணாநிதி தாம் முதல்வராக இருந்த காலத்தில் 17/7/1996 ஆம் ஆண்டில் ‘சென்னை’ என ஒரே அதிகாரப் பூர்வப் பெயராக மாற்றம் செய்து அறிவித்தார். அது முதல் மெட்ராஸ் என்ற பெயர் பேச்சு வழக்கில் மட்டுமே நிலைத்து அனைத்து ஆவணங்களிலும் ‘சென்னை’ என்ற பெயர் வழங்கி வருகிறது.
 

Image courtesy: 

Life11.org

http://www.dinamani.com/editorial-articles/special-stories/2018/aug/22/வங்கக்-கடலோரத்து-சிறு-மணல்-திட்டு-மதராஸாகி-மெட்ராஸாகி-சென்னையான-கதை-2985429.html

  • கருத்துக்கள உறவுகள்

39925393_2326652110694656_41350346624959

39623949_10214876235234135_4734206514665

  • தொடங்கியவர்

பிறந்தநாள் கொண்டாடும் சென்னை: குடியேறிகளின் நகராக மாறிவிட்டதா?

மு. நியாஸ் அகமதுபிபிசி தமிழ்

திருவல்லிகேணி பார்த்தசாரதி கோயிலும், மண்ணடி காளிகாம்பாள் கோயிலும், திருவொற்றியூர் வடிவுடை அம்மன் கோயிலும் பல நூறு ஆண்டுகள் பழமையானவை. கோயிலே ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்றால், அப்பகுதி மக்களின் நாகரிகமும், அதன் பிற கட்டமைப்புகளும் அதனினும் பழமையானதாக இருக்க வேண்டும். பின் மெட்ராஸுக்கு 379 வது பிறந்தநாள் என்று குறிப்பிடப்படுவது ஏன்?

மெட்ராஸ் பிறந்த கதை ! - சுவாரஸ்ய பகிர்வுபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

இதற்கான பதில் மிகவும் சுவாரஸ்யமானது. குறிப்பாக இந்தியா அடிமைப்பட்ட வரலாற்றுக்கும் இதற்கும் மிக நெருங்கிய தொடர்பும் உள்ளது.

'மெட்ராஸ் பிறந்த கதை'

"இன்று சென்னை என்று அழைக்கபடும் மாநகர் அன்று சிறு சிறு கிராமங்களின் தொகுப்பாக இருந்தது. அப்போது கடற்கரையை ஒட்டிய பகுதி வெங்கடப்ப நாயக்கரின் கட்டுப்பாடில் இருந்தது. 379 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்தான் அந்த பகுதியை வெங்கடப்பரிடமிருந்து பிரான்ஸிஸ் டே என்ற வணிகர் 16 ஆயிரம் வராகன் கொடுத்து வாங்கினார். பின் கோட்டை கட்டினர்கள், உள்கட்டமைப்பை மேம்படுத்தினார்கள். இப்படியாகதான் இந்த நகரம் உருபெற்றது. பிரான்சிஸ் டே நாயக்கரின் ஆளுகையில் இருந்த பகுதியை வாங்கிய இந்த நாளைதான் நாம் மெட்ராஸ் டேவாக கொண்டாடுகிறோம்" என தனது புத்தகத்தில் பதிவு செய்கிறார் எழுத்தாளர் தமிழ்மகன்.

அன்னிபெசன்டும் அடையாறும்

சென்னை என்றவுடன் நமக்கு கூவமும், அடையாறும்தான் நினைவுக்கு வரும். இப்போது நகரத்தின் கழிவுகளை சுமந்து செல்லும் அடையாறு அப்போது ஏகாந்தமான நிலப்பரப்பாக இருந்திருக்கிறது.

மெட்ராஸ் பிறந்த கதை ! - சுவாரஸ்ய பகிர்வுபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

அடையாறு குறித்து அன்னிபெசன்ட், "பல நாடுகளை சென்று பார்ப்பது எவ்வளவு நல்லதோ அவ்வளவு நல்லது அடையாறில் வாழ்வதும்..." என்கிறார்.

அதுபோலதான் பக்கிங்கம் கால்வாயும் இருந்திருக்கிறது. கூவத்தையும், அடையாறையும் இணைக்கும் இந்த கல்வாயில் ஒரு காலத்தில் படகு போக்குவரத்து நடந்திருக்கிறது.

ஆந்திராவிலிருந்து சென்னைக்கு இந்த படகுகளில் பொருட்கள் வந்திருக்கிறது. இந்த படகு போக்குவரத்தில் ஆய்வறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி, பொதுவுடைமை இயக்கத்தின் தலைவர் ஜீவானந்தம், பாவேந்தர் பாரதிதாசன் பயணித்து இருக்கிறார்கள்.

மெட்ராஸ் பிறந்த கதை ! - சுவாரஸ்ய பகிர்வுபடத்தின் காப்புரிமைGETTY IMAGES மெட்ராஸ் பிறந்த கதை ! - சுவாரஸ்ய பகிர்வுபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

இந்த படகு போக்குவரத்து குறித்து தனது அனுபவத்தை பாவேந்தர் பாரதிதாசனார், "ஒரு நாள் மாலை 4 மணிக்கு சென்னை பக்கிங்கம் கால்வாயில் தோணி ஏறி, அடுத்த நாள் காலை 9 மணிக்கு மகாபலிபுரம் சேர்ந்தோம்...வழிப்போக்கின் இடைநேரம் இனிமையாகக் கழிந்தது" என்று குறிப்பிட்டதாக 'கூவம் அடையாறு பக்கிங்கம்' புத்தகத்தில் பதிவு செய்கிறார் கோ.செங்குட்டுவன்.

இப்போது சென்னை எப்படி இருக்கிறது?

மெட்ராஸ் பிறந்த கதை, செழிப்பாக இருந்த நதி... இவையெல்லாம் கடந்த காலம். இப்போதுச் சென்னை எப்படி இருக்கிறது? இப்போது அந்த நகரம் எப்படி உருமாறி இருக்கிறது? செயற்பாட்டாளரும், சென்னையின் பூர்வக்குடியுமான ஷாலின் மரியா லாரன்ஸிடம் பேசினோம்.

மரியா, "இந்த மண்ணின் மக்களை மெல்ல வெளியே அனுப்பிவிட்டு வேறொரு நிறத்திற்கு எங்கள் நிலம் மாறிக் கொண்டிருக்கிறது சென்னை" என்கிறார்.

மெட்ராஸ் பிறந்த கதை ! - சுவாரஸ்ய பகிர்வுபடத்தின் காப்புரிமைFACEBOOK

"நான் வடசென்னைகாரி. என் சிறு வயதில் நான் என்ன பார்த்தேனோ, எதை உண்டு வளர்ந்தேனோ அது எதுவும் இப்போது இங்கு இல்லை. வெளியிலிருந்து வந்து குடியேறியவர்கள், மெல்ல அந்த நகரத்தை தனதாக்கிக் கொண்டு, எங்களை வெளியே அனுப்பி கொண்டிருக்கிறார்கள். ஒரு நகரம் காலத்திற்கு ஏற்றவாரு மாறும். மாற வேண்டும். ஆனால், அந்த மாற்றம் அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். ஆனால், எங்கள் நிலத்தை எங்கிருந்தோ வந்தவர்கள் ஆக்கிரமித்துவிட்டு, அவர்களின் பண்பாட்டை எங்களிடம் திணிக்கிறார்கள். நாங்கள் ஓடி ஆடி வளர்ந்த வீதிகளில், அந்நியராக நாங்கள் வெளியே நிற்கிறோம்" என்கிறார்.

மெட்ராஸ் தினத்தை கொண்டாடுவது என்பது எங்கள் நிலத்தை எங்களுக்கு உறுதிப்படுத்துவது என்கிறார் ஷாலினி

https://www.bbc.com/tamil/india-45269234

  • தொடங்கியவர்

பிரான்ஸ் கொடி பறக்க வேண்டிய இடத்தில் பிரிட்டிஷ் கொடி..! மெட்ராஸ் உருமாறிய வரலாறு

 

இறுதிப் போட்டியில் பிரான்ஸும், இங்கிலாந்தும் மோதின. அதில் இங்கிலாந்து வெற்றி பெற்று நம்மை ஆளத் தொடங்கினார்கள். இந்தப் பின்னணியில்தான் சென்னையும் தோன்றி வளர்ந்திருக்கிறது. 

பிரான்ஸ் கொடி பறக்க வேண்டிய இடத்தில் பிரிட்டிஷ் கொடி..! மெட்ராஸ் உருமாறிய வரலாறு
 

கிராமமாக இருந்த மெட்ராஸ், கடந்த 400 ஆண்டுகளில் `கிரேட்டர் சென்னை'யாக மாறியிருக்கிறது. தனது ஆக்டோபஸ் கரத்தை சென்னை எப்படி வலுப்படுத்தியிருக்கிறது என்பதற்கு, தனி வரலாறே உண்டு. மசூலிப்பட்டனத்தில் இருந்த பிரிட்டிஷின் கிழக்கிந்திய நிறுவனம், கொஞ்சம் கொஞ்சமாகத்தான் சென்னைக்கு இடம்பெயர்ந்தது. ஒரு கட்டத்தில் செயின்ட் ஜார்ஜ்கோட்டையில் பிரான்ஸ் நாட்டின் கொடி பறந்திருக்கிறது என்கிறார்கள் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள். 

மெட்ராஸ்

ஐரோப்பா கண்டத்திலிருந்து முதன்முதலில் இந்தியாவுக்கு வந்தவர்கள் போர்ச்சுகீசியர்கள்தாம். இவர்கள் கோவாவை தலைநகராகக்கொண்டு இந்தியப் பகுதிகளை கொஞ்சமாகப் பிடித்து ஆட்சிசெய்ய தொடங்கினார்கள். அவர்கள் சென்னைப் பகுதிக்கு வந்து முதன்முதலில் தங்கள் வணிகத்தை ஆரம்பித்தபோது, அவர்கள் குறிப்பிட்ட பெயர் `சாந்தோம் டி மெலியாபூர்’. இதன் பொருள் தற்போதைய மயிலாப்பூரின் சாந்தோம் என்பதாகும். 

 

 

மெட்ராஸ்

வியாபாரம் செய்ய வந்த ஐரோப்பியர்கள், இந்தியாவில் நிலவிய ஒற்றுமையின்மையைப் பயன்படுத்திக்கொண்டு இந்தியாவைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பிடித்து ஆட்சிசெய்யலாம் என்ற முடிவுக்கு வந்தார்கள். இதற்கிடையே ஆங்கிலேயர்கள், பிரெஞ்சுக்காரர்கள், போர்ச்சுகீசியர்கள், டச்சுக்காரர்கள், டேனியர்கள் என ஐந்து நாட்டவர்களிடையே யார் இந்தியாவில் முழுமையான அதிகாரம் செலுத்துவது என்ற போட்டிவந்தது. அவர்களுக்குள் சண்டைகள் நடந்து ஒவ்வொருவராக வெளியேற, இறுதிப்போட்டியில் பிரான்ஸும் இங்கிலாந்தும் மோதின. அதில் இங்கிலாந்து வெற்றி பெற்று நம்மை ஆளத்தொடங்கியது. இந்தப் பின்னணியில்தான் சென்னையும் தோன்றி வளர்ந்திருக்கிறது. 

கி.பி.1600-ம் ஆண்டுகளில், இங்கிலாந்தில் ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனம் உருவாக்கப்பட்டது. இந்தியாவுடன் வியாபாரம் செய்ய ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனத்தின் பணியாளர்கள் இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் பயணம் செய்து, அங்கு உள்ள வளங்களுக்கு ஏற்ப தங்க ஆரம்பித்தனர். இந்த வகையில், மசூலிப்பட்டினத்திலும், நெல்லூருக்கு அருகில் அர்மகாம் பகுதியிலும் ஆங்கிலேயர்கள் தங்கினர். 

மசூலிப்பட்டினம் மற்றும் அர்மகாம் பகுதிகளுக்கு ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனத்தின் பிரதிநிதியாக இருந்தவர் பிரான்சிஸ்டே. இவர், `அர்மகாம் மற்றும் மசூலிப்பட்டினம் தவிர, வேறு பாதுகாப்பான இடம் பார்க்க வேண்டும்' என்று பிரிட்டிஷ் நிறுவனத்திடம் கேட்டுக்கொண்டார். இடத்தைத் தேர்வுசெய்யும் அதிகாரம் அவருக்கே வழங்கப்பட்டது. 

பிரான்சிஸ்டே, ஆங்கில கிழக்கிந்திய கம்பெனிக்காகப் பார்த்த இடங்களுள் மெட்ராஸ் மிகவும் பிடித்துப்போய்விட்டது. அப்போது மெட்ராஸ் பகுதி, சந்திரகிரி மன்னனின் ஆளுகைக்குக் கீழ் இருந்தது. இந்தச் சந்திரகிரி, ஆந்திராவில் இப்போதும் இருக்கிறது. சந்திரகிரி அரசரின் வரிவசூல் அதிகாரியாக பூந்தமல்லி நாயக்கர் வேங்கடகிரி இருந்தார். சென்னையை வாங்குவதற்கான பேச்சுவார்த்தைகள் பூந்தமல்லி நாயக்கருடன் நடத்தப்பட்டன. பிறகு, சந்திரகிரி அரசரிடம் பேச்சுவார்த்தைகள் இறுதிசெய்யப்பட்டன. 

கி.பி.1639-ம் வருடம் ஆகஸ்ட் மாதம் 22-ம் தேதி, சந்திரகிரி அரசரிடமிருந்து பிரான்சிஸ்டே மெட்ராஸ் பகுதியை விலைக்கு வாங்கினார். ஆங்கிலேயர் வியாபாரம் செய்துகொள்ளவும், கடைகளும் கோட்டையும் கட்டிக்கொள்ளவுமே இடம் விற்பனை செய்யப்பட்டது. விற்பனை ஒப்பந்தம் செய்துகொண்ட ராஜமகால் அரண்மனை, சந்திரகிரி ரயில்வே ஸ்டேஷன் அருகில் (காட்பாடி-கூடூர் ரயில் பாதையில்) இருக்கிறது. 

சந்திரகரி அரசரிடமிருந்து நிலம் வாங்கிய ஒரு வருடம் கழித்து, 1640-ம் ஆண்டில் செயின்ட் ஜார்ஜ்கோட்டை கட்டப்பட்டது. அந்தக் கோட்டையை மையமாகக்கொண்டு ஆங்கிலேயரின் குடியிருப்புகள் உருவாகின. சென்ன பட்டினத்தையொட்டி இருந்த திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், எழும்பூர், சேத்துப்பட்டு ஆகிய கிராமங்கள் இத்துடன் இணைந்தன. 

மெட்ராஸ்

Photos Courtesy: gutenberg.org

ஆங்கிலேயர்கள் வந்தவுடனே வசதியாக கோட்டை கட்டிவிடவில்லை. மெட்ராஸ் ஒரு மணற்பாங்கான கடற்கரை. அங்கே மூங்கிலும் பனைமரங்களும் அதிகம் இருந்தன. எனவே, அவர்கள் வைக்கோல்நார் குடிசைகளைக் கட்டி வசிக்க ஆரம்பித்தார்கள். ஆரம்பத்திலிருந்தே இந்தக் குடியேற்றக் குடிசைகள் `புனித ஜார்ஜ்கோட்டை' என்றே அழைக்கப்பட்டன. பல ஆண்டுகளுக்குப் பிறகே வலிமையான கோட்டையும் குடியிருப்புகளும் முழுமைபெற்றன. எல்லாவிதமான ராணுவத் தாக்குதல்களையும் எதிர்பார்த்து எல்லாத் திசைகளிலும் கோட்டைச் சுவர்கள் வலிமையாக்கப்பட்டன. 

ஐரோப்பாவில் இங்கிலாந்தும் பிரான்ஸும் சண்டைபோட்டுக்கொண்டிருந்தன. அதன் எதிரொலியாக சென்னையிலும் பிரான்ஸுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே பெருங்கலகம் மூண்டது. 1746-ம் ஆண்டு பிரான்ஸின் கடுமையான தாக்குதலுக்குள்ளானது புனித ஜார்ஜ்கோட்டை. இதுவே `முதல் கர்நாடகப் போர்' எனக் குறிப்பிடப்படுகிறது.

இந்தப் போரில் பிரான்ஸின் கடற்படைத் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் ஆங்கிலேயர்கள் பிரான்ஸிடம் சரணடைந்துவிட்டார்கள். மெட்ராஸில் பிரெஞ்சுக் கொடி பறந்தது. ஆனால், பிறகு ஏற்பட்ட போர் சமாதான உடன்படிக்கையைத் தொடர்ந்து மெட்ராஸ், பிரிட்டிஷிடம் ஒப்படைத்திருக்கிறது பிரான்ஸ். இதனால், பிரான்ஸ் கொடிக்குப் பதிலாக மீண்டும் பிரிட்டிஷ் கொடி பறக்க ஆரம்பித்திருக்கிறது. 

ஒருவேளை, புனித ஜார்ஜ்கோட்டையில் பிரான்ஸ் கொடி பறந்திருந்தால், சென்னையின் வரலாற்றில் மட்டுமல்ல கலாசாரத்திலும் பல்வேறு மாற்றங்களைச் சந்தித்திருப்போம்.

https://www.vikatan.com/news/miscellaneous/134767-transformation-of-chennai-in-the-past-400-years.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.