Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காலநிலை மாற்றமும் எதிர்காலமும்: குழந்தைகள் கோரிய நீதி

Featured Replies

காலநிலை மாற்றத்தின் கோர விளைவுகளை, எல்லோரும் அனுபவிக்கிறோம். இடைவிடாத மழை, வெள்ளம், வரட்சி, நீர்ப்பற்றாக்குறை என, எதிர்மறையான அனைத்தையும் ஒருசேர நாம் அனுபவிக்கிறோம்.  

 இவற்றை வெறுமனே, வானம் பொய்த்ததென்றோ, எதிர்பாராத மழை என்றோ புறந்தள்ளவியலாதபடி, இவை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஆனால், சூழலை மாசாக்குதல், புவி வெப்பநிலையை அதிகரிக்கச் செய்யும் செயற்பாடுகள் என, எமது பூமிப்பந்தின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் செயல்களை, நாம் விடாது செய்து வருகிறோம்.   

எமது எதிர்காலத் தலைமுறைக்கு, நாம் எவ்வாறான உலகத்தை விட்டுச் செல்லப் போகிறோம்; நாம், எமது பிள்ளைகளுக்கான எதிர்காலத்தை மட்டுமல்ல, அவர்களது பேரப்பிள்ளைகளது எதிர்காலத்தையும் சேர்த்து, கேள்விக்குறியாக்கிக் கொண்டிருக்கிறோம்.   

அண்மையில், கொலம்பிய நீதிமன்றம், காலநிலை மாற்றம் தொடர்பான நீதி தொடர்பில், புதிய அத்தியாயம் ஒன்றைத் தொடக்கி வைத்துள்ளது.   

image_07face4f9d.jpg

கடந்தாண்டு, ஏழு வயது முதல் 25 வயது வரையுள்ள குழந்தைகள், இளையோர் ஆகியோரை உள்ளடக்கிய 25 பேர் கொண்ட குழு, கொலம்பிய நீதிமன்றத்தில், கொலம்பிய அரசாங்கத்துக்கு எதிராக வழக்கொன்றைத் தாக்கல் செய்தது.   

இதில், தங்களுக்குப் பாதுகாப்பான சுற்றுச்சூழலை உறுதிசெய்வதற்கான கடப்பாடு, கொலம்பிய அரசமைப்பின்படி, அரசாங்கத்துக்கு இருப்பதாகவும் அரசாங்கம் அதைத் தொடர்ச்சியாக மீறுவதாகவும் குற்றம் சாட்டினர். 

அதேவேளை அரசமைப்பின்படி, தங்களுக்குள்ள உரிமையை நிலைநாட்ட, நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் கோரினர்.   

குறிப்பாக, மோசமான முறையில் தொடர்ச்சியாக அழிக்கப்பட்டு வரும், அமேசன் காடுகளைப் பாதுகாப்பதை குறிக்கோளாகக் கொண்டே, இவ்வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.   

இவ்வழக்கின் தீர்ப்பானது, எதிர்காலச் சந்ததிக்கு, வளமான எதிர்காலத்தை உறுதி செய்வதற்கான பொறுப்பு, இப்போதுள்ள அனைவருக்கும் உண்டு என்று தீர்ப்பளித்ததன் மூலம், புதிய திசைவழியில் காலநிலை நீதியை (Climate justice) நகர்த்தியுள்ளது.   

உலகில் இவ்வாறு, சுற்றுச்சூழலையும் குழந்தைகளையும் இணைத்துத் தொடரப்பட்ட வழக்கு, 1993ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸில் தாக்கல் செய்யப்பட்டது. டொனி ஒப்போசா (Tony Oposa) என்ற வழக்கறிஞர், தனது குழந்தைகளுக்காகவும் மேலும் குழந்தைகள் குழுவொன்றின் சார்பிலும் பிலிப்பைன்ஸ் அரசமைப்பின்படி உறுதிசெய்யப்பட்டுள்ள, நலமான சுற்றுச்சூழலில் வாழ்வதற்கான உரிமையை, காடழிப்புச் செயற்பாடுகள் மீறுவதாக, நீதிமன்றில் வழக்கொன்றைத் தாக்கல் செய்தார்.  

 நீதிமன்றம் அவருக்குச் சார்ப்பாகத் தீர்ப்பு வழங்கியதோடு, வளமானதும் நலமானதுமான எதிர்காலத்தை உறுதி செய்வது, அரசின் கடமை எனச் சுட்டிக் காட்டியது.   

1993ஆம் ஆண்டுக்குப் பிறகு, இவ்வாறு முற்போக்கான தீர்ப்பு வேறெங்கும் கிடைக்கவில்லை. அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில், சுற்றுச்சூழல் தொடர்பான ஏராளமான வழக்குகள் தொடுக்கப்பட்ட போதும் அவை வெற்றியளிக்கவில்லை.   

கொலம்பியாவில் தொடரப்பட்ட வழக்கின் முக்கியத்துவம் யாதெனில், முதலாவது, குழந்தைகளே, தங்கள் எதிர்காலத்தை உறுதி செய்யக்கோரி, நேரடியாக வழக்குத் தொடுத்துள்ளார்கள்.   

இரண்டாவது, காலநிலை மாற்றத்தைக் காரணியாகக் கொண்டு, வழங்கப்பட்ட முதலாவது தீர்ப்பு என்ற வகையில் இது முக்கியமானது. 

இதற்கு முன்னர், உகண்டா, உக்ரேன் ஆகிய நாடுகளில், வாழ்வதற்கான வளமான சுற்றுச்சூழல் என்பதன் அடிப்படையிலேயே தீர்ப்புகள் வழங்கப்பட்டு வந்தன.  

 ஆனால் இதுவே, ‘காலநிலை மாற்றம் நீதி’ வழங்கும்போது, முக்கியமானதாகக் கருதப்பட்டு வழங்கப்பட்ட வழக்காகும்.   

வெறுமனே, காடழிப்பை நிறுத்த வேண்டும் என்று மட்டும் தெரிவிக்காமல், ஆழமான விளக்கங்களுடன் தனது தீர்ப்பை, கொலம்பிய நீதிமன்றம் வழங்கியுள்ளது. 

அத்தீர்ப்பில், ‘உலகமும் இயற்கையும் எமக்கான பண்டங்கள் அல்ல; அவற்றின் தயவில்தான் நாம் வாழ்கிறோம். எனவே, இயற்கையும் உலகமும் நாம் வாழ்வதற்கானவையே அன்றி, சூறையாடிச் சீரழிப்பதற்கானவை அல்ல’ என்று கூறப்பட்டுள்ளது.   

மேலும், ‘அமேசன் மழைக்காடுகள் தனியார் சொத்தல்ல; அதன்மீது அனைவருக்கும் சட்டரீதியான உரிமை உண்டு. எனவே, அனைவருக்குமான பிரதிநிதியாகவும் நிர்வாகியாகவும் உள்ள அரசாங்கம், அதைப் பாதுகாப்பதற்கும் அது தொடர்பில், மக்களுக்குப் பொறுப்புச் சொல்லவும் கடமைப்பட்டுள்ளது’ என்றும் கூறியுள்ளது.   

இது சட்டரீதியாக, மிகவும் வேறுபட்டதாகவும் புரட்சிகரமானதாகவும் கருதப்படுகிறது. ஏனெனில், கொலம்பிய அரசாங்கம், அமேசன் காடுகள் அழிக்கப்படுவதைத் தடுக்க, நடவடிக்கை எடுக்காதவிடத்து, எந்தவொரு கொலம்பியரும், தனது சட்டரீதியான உரிமை மீறப்படுவதாக, நீதிமன்றை நாடமுடியும்.   

அதேவேளை இத்தீர்ப்பானது, குழந்தைகளின் உரிமைகள், வளமான சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் ஆகிய முப்பரிமாண நோக்கில் வழங்கப்பட்டுள்ளது. இது, எதிர்காலத்தில் சட்டரீதியாக, காலநிலை மாற்றத்தை அணுகுவதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளது.   

இவ்வழக்கின் முன்னோடி நிலையானது, காலநிலை மாற்றத்தை, முக்கியமான நீதி சார்ந்த கணிப்பானாகக் கருதுவதற்கான வாய்ப்பை, உருவாக்கியுள்ளது.   

இதேபோன்ற வழக்குகள், இப்போது அமெரிக்காவிலும் போர்த்துக்கல்லிலும் தீர்ப்பை எதிர்நோக்கியுள்ளன. 

கடந்த மாதம், குழந்தைகளால் அமெரிக்க அரசாங்கத்துக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கை, அமெரிக்க உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ய மறுத்துவிட்டது.   

2015ஆம் ஆண்டு, காலநிலை மாற்றங்களால் ஏற்படும் கேடுகளை நிறுத்தத் தவறியதன் மூலம், குழந்தைகளினதும் பிறக்கப்போகும் தலைமுறையினரதும் எதிர்காலத்தை, அமெரிக்க அரசாங்கம் கேள்விக்குறியாக்கியுள்ளது என, 21 அமெரிக்கக் குழந்தைகள்  வழக்குத் தாக்கல் செய்தனர்.   

அப்போது அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த பராக் ஒபாமாவின் அரசாங்கம், இவ்வழக்கைத் தள்ளுபடி செய்யும்படி, வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட, ஒரேகன் மாவட்ட நீதிமன்றில் கோரியது.  

 ஆனால், எதிர்பாராத விதமாக, மாவட்ட நீதிபதி வழக்கைத் தள்ளுபடி செய்ய மறுத்தவிட்டார். இது அமெரிக்காவில், அதிர்வலைகளை உருவாக்கியது.   

இதன் தொடர்ச்சியாக, அமெரிக்க அரசாங்கம், உயர் நீதிமன்றில் முறையீடு செய்தது. இதன்போது, அவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், “இவ்வழக்கு, தள்ளுபடி செய்யக் கூடியதல்ல” என்று கூறியதோடு, “இவ்வழக்கின் முக்கியத்துவமும் எதிர்கால நோக்கும் தள்ளுபடி செய்வதற்கு உரிய காரணிகளைக் கொண்டவையல்ல” என்றும் “இவ்வழக்கை விசாரிக்கும் ஓரேகன் மாவட்ட நீதிமன்றம், இவ்விடயங்களைக் அவதானமாகக் கவனத்தில் கொள்ளவேண்டும்” என்றும் வலியுறுத்தியிருந்தது.   

இவ்வாறான வழக்குகள் தொடர்பில், அரசாங்கங்கள் அஞ்சுவதற்கான காரணங்கள் நிறையவே உண்டு. இது தொடர்பில், ‘அரசாங்கங்களை காலநிலை மாற்றங்களுக்குப் பொறுப்பாளியாக்குவது எப்படி’ என்ற தலைப்பில், அண்மையில் தனது கலாநிதிப் பட்ட ஆய்வை மேற்கொண்ட, கொலம்பிய நாட்டைச் சேர்ந்த கத்தலீனா வலீஜா (Catalina Vallejo) பயனுள்ள கருத்துகளை முன்வைத்தார்.   

காலநிலை மற்றும் சக்தி மாற்றத்துக்கான நிலையத்தில் (Centre for Climate and Energy Transformation) நடந்த கலந்துரையாடலில், “அரசாங்கங்களுக்கு மட்டுமன்றி, சட்டத்துக்கும் காலநிலை மாற்றமானது, சிக்கலானதும் சவாலானதுமான நெருக்கடிகளைக் கொடுத்துள்ளது” என்று கத்தலீனா தெரிவித்தார்.   

முன்னரை விட, காலநிலை மாற்றங்கள் தொடர்பில், மக்கள் விழிப்படைந்துள்ளார்கள். இவ்விழிப்புணர்வுக்குக் காரணங்கள் பல உண்டு. அதில் பிரதானமான காரணம், மக்கள் இப்போது முன்னெப்போதும் இல்லாதளவு, காலநிலை மாற்றங்களை உணர்கிறார்கள்.   

குறிப்பாக, கடந்த பத்தாண்டுகளுக்கு முதல் ஆசியா, ஆபிரிக்கா, இலத்தீன் அமெரிக்கா ஆகிய நாடுகளிலேயே, காலநிலை மாற்றத்தின் கோரவிளைவுகள் உணரப்பட்டன.   

image_a149aa0397.jpg

இன்று பாரபட்சம் இன்றி, உலகின் எல்லா மூலைகளிலும் காலநிலை மாற்றத்தின் விளைவுகள் உணரப்படுகின்றன. இதனால் மக்கள் இதன் தீவிரத்தை அறிவார்கள்.   

மக்கள் மத்தியில், காலநிலை மாற்றத்தின் மோசமாக விளைவுகள் பற்றி, முன்னெடுக்கப்பட்ட விழிப்புணர்வு செயற்பாடுகள் குறிப்பிட்ட தாக்கத்தைச் செலுத்தியுள்ளன.   

இன்னொருபுறம், அரசாங்கங்கள் எவ்வாறு பல்தேசியக் கம்பெனிகளுக்கும் கோடீஸ்வரர்களுக்கும் தரகு வேலை பார்க்கிறது என்பதை, மக்கள் அறிவார்கள்.   

உலகம், 1% க்கு எதிராக  99% த்தினர் என்று, தீர்க்கமாகப் பிளவுபட்டிருப்பதை அவர்கள் நன்கு உணர்கிறார்கள். உலகமே இலாப வெறிக்கும், ஆதிக்க ஆசைக்கும் பலியிடப்படுகிறது என்பது வெளிப்படையாகிறது. இதற்கு ஓர் உதாரணமே போதுமானது.   

லிபியா மீதான ஆக்கிரமிப்புப் போரானது, ஏகாதிபத்திய எண்ணெய் நிறுவனங்களின் ஆதாயத்துக்கானதே என்பதையும் மேற்குலக நாடுகளின் தலைவர்கள், அந்த எண்ணெய் முதலாளிகளின் நிகழ்ச்சி நிரலையே நடைமுறைப்படுத்துகிறார்கள் என்பதையும் லிபியாவின் மீதான ஆக்கிரமிப்பை அடுத்துத் தொடர்ந்த செயல்கள், எடுத்துக்காட்டின.   

உலகின் மொத்த எண்ணெய் உற்பத்தியில், லிபியாவின் பங்கு இரண்டு சதவீதமாகும். லிபிய எண்ணெயில், கந்தகத்தின் அளவு குறைவாக உள்ளதால், சுத்திகரிப்பதற்கான செலவு குறைவாக இருப்பதன் காரணமாக, ஐரோப்பிய எண்ணெய் வர்த்தக நிறுவனங்கள், லிபிய எண்ணெய் மீது, எப்போதும் ஒரு கண் வைத்திருந்தன.   

லிபியப் பாலைவனப் பகுதிகளில், எண்ணெய் வளம் அகழ்ந்தாராயப்பட்டு, புதிய எண்ணெய் வயல்களில் உற்பத்தி தொடங்கப்பட்டால், அடுத்த பத்தாண்டுகளில் லிபியாவின் எண்ணெய் உற்பத்தி, இருமடங்கு அதிகரிக்கும் என்பதால், ஐரோப்பாவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனங்களே, ஆக்கிரமிப்புக்கு உந்தி, அவ்வெண்ணெய் வயல்களைத் தமதாக்கிக் கொண்டன.   

இந்நிலையில், கவனிக்க வேண்டிய விடயம் என, கத்தலீனா சுட்டிக்காட்டுவது   யாதெனில், நீதிமன்றங்கள் இலகுவில் இவ்வெண்ணெய் நிறுவனங்களுக்கு எதிராகவோ, அரசாங்கங்களுக்கு எதிராகவோ, தீர்ப்புகளை வழங்கமாட்டா என்பதாகும்.   

ஏனெனில் அவ்வாறு அரசியல் நிறுவனத்துக்கு எதிராக வழங்கப்படும் ஒரு தீர்ப்பானது, தொடர்விளைவுகளை  ஏற்படுத்தவல்லது. இது, அரசாங்கத்தை மிகப்பெரிய சிக்கலுக்குள் கொண்டு சேர்க்கவல்லது.   

இன்னொருபுறம், நீதிபதிகளுக்கு காலநிலை நீதி என்பது, புதிய துறையாகும். எனவே, நீதிபதிகளுக்கு இது தொடர்பில் விளக்கமளிப்பது என்பது, வழக்கறிஞர்களின் கடமையாகிறது.   

எனவே, இச்செயற்பாடு வழக்கறிஞர்களின் கடின உழைப்பைக் கோருகிறது. இருந்த போதும், கொலம்பிய நீதிமன்றத் தீர்ப்பானது, புதிய சாளரங்களைத் திறந்துள்ளது.   

இனி மீண்டும், குழந்தைகளின் எதிர்காலம் குறித்த வினாவுக்குத் திரும்புவோம்.   
காலநிலை மாற்றங்கள், எவ்வாறு குழந்தைகளைப் பாதிக்கின்றன என்று நோக்கினால், முதலில் வெள்ளப் பெருக்கு எவ்வாறு குழந்தைகளைப் பாதிக்கிறது என்று பார்த்தால், உலகெங்கும் 530 மில்லியன் குழந்தைகள், வெள்ளத்தால் மோசமான பாதிப்புகளைச் சந்திக்கக் கூடிய பகுதிகளில் வசிக்கிறார்கள்.   

அதேவேளை, 270 மில்லியன் குழந்தைகள் சுகாதார வசதியற்றும், வெள்ளப்பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய பகுதிகளிலும் வசிக்கிறார்கள். 100 மில்லியன் குழந்தைகள், வெள்ளப்பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய அதேவேளை, சுத்தமான குடிநீர் இல்லாத பகுதிகளில் வசிக்கிறார்கள்.  

 வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், வயிற்றுப்போக்கால் அதிகளவானோர் உயிரிழக்கும் பகுதிகளில், 400 மில்லியன் சிறுவர்கள் வாழ்கிறார்கள்.   

அதேபோலவே, வரட்சியாலும் உலகெங்கும் குழந்தைகள் மோசமாகப் பாதிக்கப்படுகிறார்கள்.  
 160 மில்லியன் குழந்தைகள், வரட்சியை எதிர்நோக்கும் பகுதிகளில் வாழ்கிறார்கள். 60 மில்லியன் குழந்தைகள், வரட்சிப் பகுதியில் மட்டுமன்றி, சுத்தமான குடிநீரற்ற பகுதிகளிலும் வாழ்கிறார்கள்.   

கடந்த 10 ஆண்டுகளில், ஆண்டொன்றுக்கு சராசரியாக 150,000 பேர் காலநிலை மாற்றங்களுடன் தொடர்புபட்டு மரணமடைந்துள்ளனர். இவ்வாறு, மரணமடைந்தவர்களில் பத்தில் ஒன்பது பேர் குழந்தைகள்.   

அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் மரணத்துக்கான பிரதான காரணியாக, காலநிலை மாற்றம் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் 1,600 குழந்தைகள் வயிற்றுப்போக்கால் மரணிக்கிறார்கள்.   

இப்போது ஆபிரிக்காக் கண்டத்தில், ஆண்டொன்றுக்கு எட்டு இலட்சம் குழந்தைகள் மலேரியாவால் இறக்கிறார்கள். மோசமான காலநிலை மாற்றங்களின் விளைவால், இத்தொகை 60 மில்லியனாக அதிகரிக்கக்கூடும் என, உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.   

காலநிலை நெருக்கடிக்குத் தீர்வு எனக் கொண்டாடப்பட்ட பரீஸ் பருவநிலை மாற்ற உடன்படிக்கையில் இருந்து, அமெரிக்கா விலகுவதாக, கடந்தாண்டு அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார்.    
உலகத் திருடர்கள் ஒன்று சேர்ந்து, ஒப்பனை ஒத்திகையுடன் அரங்கேற்றிய நாடாகத்தின் அவலச்சுவை, அமெரிக்க வடிவில் வெளிப்பட்டது. திருடர்களிடையே ஏற்பட்ட முரண்பாடுகளின் பகுதிதான், இந்த அவலமான திருப்பம் என்பதை, நாம் உணர வேண்டும்.   

பூவுலகிலே, பல வடிவங்களிலும் அளவுகளிலும் உயிரினங்கள் வாழ்கின்றன. திமிங்கிலங்கள் போன்ற மிகப் பெரிய உயிரினங்களும் கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர்களும் நம்மிடையே உள்ளன.  

 பல நூறு ஆண்டுகளுக்கு வாழ்பவை முதல், சில நாள்கள் மட்டுமே உயிருடன் இருப்பவை வரை, பல்வேறு உயிரினங்கள் உள்ளன.  

சுட்டெரிக்கும் பாலைவனங்களில் சில உயிரினங்கள் வாழ்கின்ற அதேநேரம், பனி படர்ந்த கடுங்குளிர்ப் பிரதேசங்களிலும் உயிரினங்கள் வாழ்கின்றன.   

உணவு, வாழிடம் (Habitat) போன்ற பல்வேறு அம்சங்களில், பல்வேறு வகைகளில், வேறுபடுகிற ஏராளமான உயிரினங்கள், ஒன்றுக்கொன்று தொடர்புடன் வாழ்ந்துவருகின்றன.   

இப்படி ஒரு பகுதியில், பல்வேறு உயிரினங்கள் செழித்து வாழ்வதே உயிரினப் பன்மை, உயிரினப் பன்மயம், பல்லுயிர் பெருக்கம் எனப் பல பெயர்களில் வழங்கப்படுகிறது.   

இப்போதுவரை, பூவுலகில் கண்டுபிடிக்கப்பட்டு வகைப்படுத்தப்பட்ட 80 இலட்சம் உயிரினங்களும் இன்னும் கண்டறியப்படாத, பெயரிடப்படாத தாவர, விலங்கினங்களும், நம்முடன் வாழும் வளர்ப்பு விலங்குகளும் சேர்ந்த, ஒட்டுமொத்த உயிரின வளமே, உயிர்ப்பல்வகைமை (Bio Diversity) ஆகும். சூழலியலில் (Ecology) ஒவ்வோர் உயிரின வகையும் மற்றொன்றுடன் பின்னிப் பிணைந்துள்ளது.   

எனவே, ஓர் உயிரினம் அழிக்கப்பட்டால், அதன் விளைவு சங்கிலித் தொடராக, மற்றொன்றைத் தாக்கும். காலநிலை மாற்றத்தின் மிகப்பெரிய அவலமும் ஆபத்தும் இதுவே.   

நாம், நமது குழந்தைகளுக்கும் பேரக்குழந்தைகளுக்கும் சுடுகாட்டையா பரிசளித்துச் செல்லப்போகிறோம் என்ற கேள்வியை, நாம் ஒவ்வொருவரும் கேட்டுக் கொள்ள வேண்டும். 

வண்ணத்துப் பூச்சிகளும், தேனீக்களும், வண்டினங்களும், சிட்டுக்குருவிகளும், மண்புழுக்களும் பாடப்புத்தகத்தில் மட்டுமே படங்களாகவும் கதைகளாகவும் இருப்பது, எவ்வளவு கொடுமை என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.   

நாம் எடுத்துவைக்கத் தயங்கிய, தவறிய அடியை, குழந்தைகள் எடுத்துவைத்துள்ளார்கள். அவர்கள் நீதியைக் கோரி நிற்கிறார்கள்; அவர்கள் வாழ்வதற்கான உலகைக் கோரி நிற்கிறார்கள். 

அக்கோரிக்கையின் நியாயம் மட்டுமல்ல, எம் தலைமுறையின் அநியாயமும் சேர்ந்தே, இங்கு வெளிப்படுகிறது.  குழந்தைகள் நீதியை வேண்டுவதன் மூலம், எம்மீது காறி உமிழுகிறார்கள். நாம் ஒவ்வொருவரும், எம்மைக் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்விகள் நிறைய உள்ளன. அவை ஒருபுறம் இருக்கட்டும். ஏனெனில் அக்கேள்விகளின் வரிசை மிக நீண்டது. அக்கேள்விகள், மிகுந்த சங்கடத்தை எம்மிடம் உண்டு பண்ணவல்லவை.   

எமது சூழலைப் பாதுகாக்க, நாம் என்ன செய்கிறோம் என்ற கேள்வியை நாம் ஒவ்வொருவரும், எம்மிடமே கேட்டுக் கொள்வோம்; இக்கேள்வியில் இருந்து நாம் தொடங்குவோம்.   

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/காலநிலை-மாற்றமும்-எதிர்காலமும்-குழந்தைகள்-கோரிய-நீதி/91-220966

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.