Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'மாமனிதர் தில்லை ஜெயக்குமாரும், பன்முக ஆளுமையும்'

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

'மாமனிதர் தில்லை ஜெயக்குமாரும், பன்முக ஆளுமையும்' -சபேசன்

'கடல்கள் தாண்டி, கண்டங்கள் கடந்து, தனது தாயகத்திற்கு வெளியே, தூரதேசத்திலே ஒருவர் எத்தனை பெரும் பணியை தனது தேச விடுதலைக்கு ஆற்ற முடியுமோ அதனைத்தான் திரு ஜெயக்குமார் அவுஸ்திரேலிய மண்ணில் புரிந்தார். இந்த நல்ல மனிதரை இழந்து எமது தேசம் இன்று சோகக் கடலிலே மூழ்கிக் கிடக்கின்றது.'

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்:

'அடி தாங்கும் உள்ளம் இது இடிதாங்குமா?' என்று ஒரு பாடலின் வரிகள் கூறும். அடிகளை மட்டுமல்ல, இடிகளையும் தாங்கி நிமிர்ந்து நின்றவர்தான் எங்கள் மாமனிதர் தில்லை ஜெயக்குமார் அவர்கள். தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக, அவுஸ்திரேலியாவில் பேரினவாதச் சார்புச் சக்திகள் கொடுத்த அனைத்து அழுத்தங்களையும் ஓர் ~இடிதாங்கி| போல் மாமனிதர்; ஜெயக்குமார் தாங்கி நின்று, தனது தேச விடுதலைக்கான பணியை மிகச் சிறப்பாக முன்னெடுத்தார். இன்று அந்த இடிதாங்கியின் எதிர்பாராத சாவு, அவுஸ்திரேலியத் தமிழ்மக்களுக்கு மட்டுமல்ல, மற்றைய உலக நாடுகளில் வாழுகின்ற புலம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கும் ஒரு பேரிடியாகவே அமைந்து விட்டது. அந்த அளவிற்கு தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கான அளப்பரிய பணியைத் தன்னுடைய அயராத உழைப்பினால் பண்பமைந்த முறைகளினால் மேற்கொண்டு வந்தவர் அமரர் ஜெயக்குமார் அவர்கள்.

கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாகத் தன் தேச மக்களின் விடுதலைக்காக அவர் அயராது ஆற்றிய பெரும் பணியைப் பாராட்டி அவரின் இனப்பற்றிற்கும், விடுதலைப் பற்றிற்கும் மதிப்பத்து தமிழீழத் தேசியத்தலைவர் அவர்கள் ~மாமனிதர்| என்ற அதியுயர் தேசிய விருதை அமரர் தில்லை ஜெயக்குமார் அவர்களுக்கு வழங்கி கௌரவித்துள்ளார்.

தில்லை நடராஜா - லீலாவதி தம்பதியினருக்குப் புதல்வனாக 19-12-1951 அன்று, யாழ் வண்ணார் பண்ணiயில் பிறந்த திரு ஜெயக்குமார், தனது ஆரம்பக் கல்வியை யாழ். வைத்தீஸ்வராக் கல்லூரியிலும், கணணித்துறைக்கான முதுமானிப் பட்டப்படிப்பை லண்டனிலும் முடித்து விட்டு, 1982 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவிற்கு குடிபெயர்ந்தார். 1983 ஆம் ஆண்டின் தமிழினப் படுகொலைகளுக்கு முன்னரேயே, அதாவது 1982 ஆம் ஆண்டிலேயே அவுஸ்திரேலியாவிற்கு ஜெயக்குமார் குடிபெயர்ந்தபோது, அவரை நோக்கிச் சுகமான, ஆடம்பர, உல்லாச வாழ்க்கை காத்திருந்தது. ஆனால் அவற்றையெல்லாம் உதறித் தள்ளிய அவர் தமிழீழத் தேச விடுதலைக்கான உயரிய பணிகளிலேயே தன்னை முழுமையாக அர்ப்பணித்தார். மெல்பேர்ண் CHISHOLM INSTITUTE இல் விரிவுரையாளராகக் கடமையாற்றிய ஜெயக்குமார் அவர்களின் நினைவிலும், கனவிலும், எமது தேச விடுதலையே கனன்று கொண்டிருந்தது. தமிழீழ விடுதலைப் போராட்ட வாழ்வில் அவர் முழுமையாகவே மூழ்கியமையானது, மிக இயல்பாகவே அமைந்தது.

மாமனிதர் ஜெயக்குமார் பன்முக ஆளுமையுள்ள, நேர்மையான நல்ல மனிதராக விளங்கினார். மிகத் தீர்க்கமான அரசியல் அறிவும், சிந்தனைத் தெளிவும் அவருக்கு இருந்தன. இவற்றை சரியான முறையில் நெறிப்படுத்திச் செயல் உருவம் கொடுக்கக் கூடிய மகத்தான நிர்வாகத் திறமை அவருக்கு கைவந்த கலையாகும். அவருடைய மனித நேயமோ வரம்பற்றதாகும். எந்த வேளையிலும், சிரித்த முகத்துடன், அன்போடு, அரவணைத்து, இன்சொல் பேசி, பண்பமைந்த வகையில் பழகுவது மாமனிதர் ஜெயக்குமாரின் இதயத்திலும், இரத்தத்திலும் ஊறிப்போன விடயங்களாகும். தேச விடுதலைக்கான பணிகளை மட்டுமல்லாது, தனிப்பட்டோரின் சுக துக்கங்களிலும் பங்கு கொண்டு அவர்களது பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கும் பணிகளையும் அவர் மேற்கொண்டார்.

பொறுப்பாளர்களுக்கெல்லாம் பொறுப்பாளராக அவர் விளங்கிய போதும், அவர் சகல பொறுப்பாளர்களையும் தன் தோளிலே தாங்குபவராக இருந்தார். இப்படியான பன்முக ஆளுமை மாமனிதர் ஜெயக்குமாருக்கு இருந்தபோதும் அவர் ஒரு தொண்டனாகவே விளங்கினார். தனது அன்பென்ற அறுக்க முடியாத நூலினூடே அனைவரையும் ஒருங்கிணைத்த பெருமகன் ஆவார்.

மாமனிதர் ஜெயக்குமார் அவர்களின் பன்முக ஆளுமையைப் பற்றி முழுமையாகச சொல்வதற்குரிய திறன் எனக்கில்லை. எனினும் அவருடைய பரிமாணத்தின் ஒரு கூறையாவது சொல்வதற்கு எத்தனிக்கிறேன்.

1982 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவிற்கு குடிபெயர்ந்த உடனேயே விக்ரோரியா இலங்கைத் தமிழ்ச்சங்கத்துடன் ஜெயக்குமார் இணைந்து கொண்டார். இலங்கைத் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், செயற்குழு அங்கத்தவராகவும் ஜெயக்குமார் பல்லாண்டுகள் தொடர்ந்து பணியாற்றினார். தற்போது விக்ரோரியா ஈழத் தமிழ்ச் சங்கம் என்று அழைக்கப்படுகின்ற அன்றைய இலங்கைத் தமிழ்ச்சங்கம், தமிழ்ச் சங்கங்களுக்கெல்லாம் தாய்ச் சங்கமாக அமைந்தது. அதனூடே அரசியல் சமூக ரீதியாக பல செயற்பாடுகள் திடமாக வேரூன்றின. இக்கால கட்டத்தில் மாமனிதர் பேராசிரியர் எலியேசர் அவர்களின் அன்புக்கும், நம்பிக்கைக்கும் ஜெயக்குமார் உரித்தானார். மாமனிதர் பேராசிரியர் எலியேசர் அவர்களின் நட்பும், வழிநடத்தலும் தனக்குக் கிட்டியது தனக்கு ஒரு பேறு என்று மாமனிதர் ஜெயக்குமார் அடிக்கடி குறிப்பிடுவதுண்டு. மாமனிதர் ஜெயக்குமாருக்கு கிட்டிய அந்தப் பேறினால் எமது தாய்த் திருநாடு பலனடைந்தது.

மாமனிதர் ஜெயக்குமார் அவர்கள் தன்னுடைய தீர்க்க தரிசனமான சிந்தனையின் காரணமாகப் பல அமைப்புக்களை உருவாக்கினார். அவுஸ்திரேலியத் தமிழ் அமைப்புக்களின் கூட்டமைப்பு 3CR தமிழ்க்குரல், தமிழீழ மகளிர் அமைப்பு, சோலை சிறுவர் பராமரிப்புச் சங்கம், தமிழ் இளையோர் சங்கம் போன்ற எத்தனையோ அமைப்புக்கள் உருவாகுவதற்கும் அவற்றின் ஆக்கபூர்வமான தேச விடுதலைச் செயற்பாடுகளுக்கும் மாமனிதர் ஜெயக்குமார் காரணகர்த்தாவாக இருந்தார். 1985 ஆம் ஆண்டிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் அவுஸ்திரேலியக் கிளையின் பொறுப்பாளராக மிகுந்த கடமையுணர்வுடனும், தேசப்பற்றுடனும் கடமையாற்றிய இவர், தன்னுடைய பணிகளை மற்றைய நாடுகளுக்கும் விரிவுபடுத்திச் செயற்பட்டார். நியூசிலாந்து, மலேசியா, தென்னாபிரிக்கா போன்ற நாடுகளில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் கிளைகளும், அவற்றின் பணிகளும் உருவாகுவதற்கு மாமனிதர் ஜெயக்குமார் காரணமாக இருந்தார்.

மாமனிதர் ஜெயக்குமாரின் பன்முக ஆளுமைகளில் ஒன்றாக அவரது பரந்த சிந்தனைப் பார்வையைக் கூறலாம். இந்த அவுஸ்திரேலியக் கண்டத்தில் எமது தேச விடுதலைக்கான பணியை ஒருங்கிணைத்து முன்னெடுத்துச் செல்வதற்கு ஜெயக்குமாரின் இந்த ஆளுமை கைகொடுத்தது. இதன் ஒரு முக்கிய கூறாக அவுஸ்திரேலிய அரசியல்வாதிகளுடனான அவரது அணுகுமுறையையும் எமது போராட்டத்தின் நியாயத்தை அவர்களுக்கு புரிய வைப்பதற்காக அவர் தொடர்ந்து மேற்கொண்ட செயற்பாடுகளையும் நாம் குறிப்படலாம்.

ஊடகங்களின் வலு குறித்து மாமனிதர் ஜெயக்குமார் சரியாகவே புரிந்து வைத்திருந்தார். இந்த வேளையில் தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனை ஒன்றைக் குறிப்பிடுவது பொருத்தமானதாக இருக்கும்.

'பொய்களையே ஆயுதமாகக் கொண்டு நடாத்தப்படுகின்ற சிங்களத்தின் விசமத்தானமான கருத்துப்போரை முறியடிப்பதே இன்று நாம் எதிர் கொண்டிருக்கும் முக்கியமான சவாலாகும். எமது இயக்கத்தின் வெகுசன ஊடகங்களே இந்த பெரும் பணியைச் செய்ய வேண்டும்' என்று தமிழழீத் தேசியத் தலைவர் அவர்கள் பல்லாண்டுகளுக்கு முன்பு தெரிவித்திருந்தார். களத்தில் நிற்கின்ற தலைவன் முக்கிய சவால் என்று கருதுவது சிங்களத்தின் விசமத்தனமான பொய்யான கருத்துப் போரைத்தான். அதனால்; தான் இதனை முறியடிப்பதைப் பெரும் பணி என்று தேசியத் தலைவர் குறிப்பிட்டிருந்தார்.

சிறிலங்கா அரசுகளின் பேரினவாத பொய்ப் பரப்புரைகளை முறியடித்து தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்துப் பணி புரிய வேண்டியதன் முக்கியத்துவத்தைச் சுமார் 23 ஆண்டுகளுக்கு முன்னரேயே உணர்ந்து அதற்காகத் தமிழ் வானொலி ஒன்றை அவுஸ்திரேலியாவில் உருவாக்க வேண்டும் என்று உழைத்த முன்னோடிகளில் மாமனிதர் தில்லை ஜெயக்குமார் முக்கியமானவர் ஆவார். அப்போது மெல்பேர்ண் நகரில் சிறியதொரு 'கராஜ்' ஒன்றில் இயங்கி வந்த 3CR ஒலிபரப்பு நிலையத்தில் இரவு ஒன்பது மணிக்குப் பின்னர் மாமனிதர் ஜெயக்குமார் அவர்களும், அவர்களது நண்பர்களும் சென்று அங்கே தொழில்நுட்பப் பயிற்சியை பெற்று இலங்கைத் தமிழ்ச் சங்கத்தின் ஆதரவில் தமிழ்க்குரலின் முதலாவது ஒலிபரப்பை 03.04.84 இல் ஆரம்பித்தார்கள்.

இன்று தமிழ்க்குரல் எத்தனையோ வகையான எதிர்ப்புக்களையும், பயமுறுத்தல்களையும், முட்டுக்கட்டைகளையும் எதிர்கொண்டு அவற்றைக் கடந்து மிகப்பாரிய வளர்ச்சியை அடைந்துள்ளது. தமிழ்க்குரலின் ஒலிபரப்பைத் தடுக்க வேண்டும் என்பதற்காகச் சிங்களப் பேரினவாதம் தொடர்ந்தும் கொடுக்கும் அழுத்தங்களையும் எச்சரிக்கைளையும் இன்னல்களையும் கொலைப் பயமுறுத்தல்களையும் இன்று வரை தமிழ்க்குரல் நேர் கொண்டே வருகின்றது. உலகத்தமிழ் வானொலிகளுக்கு முன்னோடியாகக் கடந்த 14 ஆண்டுகளாகத் தமிழர் புனர் வாழ்வுக் கழகத்திற்கும் கடந்த நான்கு ஆண்டுகளாக அவுஸ்திரேலிய மருத்துவ நிதியத்ததுக்கும் தனது 'ரேடியோ தோன்' நிதி சேகரிப்பு நிகழ்வுகளின் மூலம் மாபெரும் நிதி சேகரிப்பு நிகழ்ச்சிகளை தமிழ்க்குரல் நடாத்தி வருகின்றது.

தமிழீழத் தேசியத் தவைரின் சிந்தனைகளின் வழி நடத்தலில் தமிழீழ விடுதலைப் போராட்ட வெற்றிக்கான பரப்புரைகளைத் தமிழ்க் குரல் சிறப்பாக மேற்கொண்டு வருகின்றது. இவை யாவற்றிற்கும் அடித்தளமாக மாமனிதர் ஜெயகுமார் விளங்கினார். 3CR வானொலி ஊடாக ஆங்கிலத்திலும் எமது பரப்புரையை ஆரம்பிக்க வேண்டுமென்று நான் கூறிய ஆலோசனைக்கு முக்கியத்துவம் கொடுத்து 1997 ஆம் ஆண்டு MANIFEST (நிதர்சனம்) நிகழ்ச்சி ஆரம்பமாவதற்கு மாமனிதர் ஜெயக்குமார் துணை நின்று, தோள் கொடுத்து உதவினார்.

தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் தமிழ்க்குரல் வானொலியின் தோற்றம் குறித்துக் குறிப்பிட்டு மாமனிதர் ஜெயக்குமாரைப் பாராட்டியுள்ளமையானது ஜெயக்குமார் அவர்களின் பன்முக ஆளுமையின் சிறப்பைப் புலப்படுத்தி நிற்கின்றது. அன்று மாமனிதர் ஜெயக்குமார் அவர்கள் வித்திட்டதால் இன்று 3CR தமிழ்க்குரல் விருட்சமாகியுள்ளது.

மாமனிதர் ஜெயக்குமார் அவர்கள் தமிழீழத் தேசியத் தலைவரைத் தன் நெஞ்சிலே நிறுத்தித் தன் தேசவிடுதலைப் பணியை மிகுந்த உத்வேகத்துடன் மேற்கொண்ட பெருமகனாவார். தனது பன்முக ஆளுமையை அவர் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வளர்ச்சிக்கும், உயர்ச்சிக்குமே உபயோகப் படுத்தினார். சிந்தனை- செயல்திறன்- பணிவு- பண்பாடு- நேர்மை-தூய்மை- பெருந்தன்மை- அன்பு- அமைதி என்று மானுடத்தின் அதி உன்னதக் குணச் சிறப்பியல்புகளைக் கொண்டிருந்த பன்முக ஆளுமையாளர் மாமனிதர் ஜெயக்குமார் அவர்கள்!

மாமனிதர் ஜெயக்குமார் அவர்களுக்கு எப்போதும் அருந்துணையாகவும் பக்கபலமாகவும் நின்ற அவருடைய பேரன்புத் துணைவியார் யோகராணிக்கும், அருமை மகன் கார்த்திக்குக்கும் எமது ஆழ் நெஞ்சத்து அனுதாபங்கள்.

மாமனிதர் ஜெயக்குமார் அவர்களின் ஒப்புயர்வற்ற தேசப்பணியைத் தொடர்ந்து நாமனைவரும் உத்வேகத்துடன் முன்னெடுத்துச் செல்வதே நாம் அன்னாருக்குச் செய்யக்கூடிய உரிய மரியாதையாகும். எமது தேச விடுதலையையே முழுமூச்சாகக் கொண்டிருந்த எமது பேரன்பிற்குரிய மாமனிதர் ஜெயக்குமார் அவர்களுக்கு எமது வீர வணக்கம்.!

-தமிழ் நாதம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.