Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பு பெற்ற லெப்கேணல். சித்தா மாஸ்டர் 20ம்ஆண்டு நினைவு நாள்

_16865_1538083151_6BD283CF-AC19-4214-B949-A9A4B95308A2.jpeg

மட்டக்களப்பு மாவட்டத்தின் விடுதலைப்புலிகளின் தளப்பகுதி. அடிப்படைப் பயிற்சி முகாம் ஒன்று நிறைவடைந்து புதிய போராளிகள் பல்வேறு முகாம்களுக்கும் அனுப்பப்பட்டுக் கொண்டிருந்தனர். அத்தகைய வேளைகளில் இயல்பாகக் காணப்படும் புத்துணர்வும், கலகலப்பும் அவர்களின் முகங்களில் வெளிப்படையாகவே தெரிந்தது. ஆயினும் எமது முகாமிற்கு வரவிருந்த புதிய போராளிகள் அநேகரின் முகங்களில் ஒருவகையான கலக்கத்தை அவதானிக்க முடிந்தது.

காரணத்தை ஊகிப்பது அவ்வளவு கடினமல்ல.

படைத்துறைப் பயிற்சிப் பிரிவாக செயற்பட இம் முகாம் சற்று வேறுபாடானதுதான். மிகக் கடுமையான விதிமுறைகளுக்கும், விசித்திரமான தண்டனைகளுக்கும் பெயர் பெற்றது. அதேவேளை ஆற்றல் விருத்திக்கு அது அடித்தளமாகவும் இருந்தது.

“பாவம் நல்லா மாட்டுப்பட்டுத்துகள், எப்படித்தான் நிண்டு பிடிக்கப்போகுதுகளோ” மூத்தபோராளி ஒருவன் பரிதாபப்பட்டான். “ஏன் அண்ண, உயிரையும் கொடுப்பம் எண்டுதானே போராட வந்தனாங்க, நிட்சயம் எதுக்கும் நிண்டுபிடிப்பம்.” மிக அமைதியான சுபாவம் கொண்ட அந்தப் புதிய போராளியிடமிருந்து வந்த நம்பிக்கையும், உறுதியுமிக்க வார்த்தைகள் எம்மை ஆச்சரியப்பட வைத்தன.

“தம்பி உங்கட பேரென்ன?”

“சித்தார்த்தன்”

ஆம். அவனிடம் தொனித்த அந்த நம்பிக்கை, உறுதி அவன் போராளியாக வாழ்ந்த காலம் முழுவதும் அவனிடம் நிறைந்தே இருந்தது... இன்னும் வலிமையாய்....

* * * * * * * * * * * * * * * * * * * * * *

மட்டக்களப்பில் 1992இல் தனது தொடக்கப்பயிற்சியை நிறைவுசெய்த “சித்தா” (நாங்கள் அவனை அப்படித்தான் அழைப்போம்) படைத்துறைப் பயிற்சிப் பிரிவில் இணைக்கப்படுகின்றான்.

இந்தப் பிரிவில் நின்றுபிடிப்பது கஸ்டம் என்று கூறப்பட்ட அந்த நாட்களில் அவன் இங்கு தன்னை மிக விரைவாக தகவமைத்துக் கொண்டான். தொடர்ச்சியான பயிற்சிகள், மிகக் கடினமான வேலைகள், புதிரான பாடங்கள், எதிரியின் தாக்குதல்கள், எமது வலிந்த தாக்குதல் முன்னெடுப்புகள் என்றிருந்த அந்த நாட்களில், சராசரிக்கு மேற்பட்ட ஒரு போராளியாக அவன் இனங்காணப்பட்டான்.

மிக அமைதியான சுபாவமும், உதவும் பண்பும், கடினமான வேலைகளைக்கூட தானாக விரும்பி ஏற்றுச் செய்யும் பக்குவமும், அவனது செயற்திறணும் போராளிகள் மத்தியில் அவனுக்கென்றொரு இடத்தை ஏற்படுத்திக் கொடுத்தன.

* * * * * * * * * * * * * * * * * * * * * *

பூநகரி கூட்டுப்படை முகாம் மீதான “தவளை” நடவடிக்கையே வடதமிழீழத்தின் அவனது முதற் களமாக அமைந்தது. சமர் முடிந்த கையோடு எழுதுமட்டுவாள் பகுதியில் பயிற்சி ஆசிரியர்களுக்கான மேலதிக பயிற்சிகள் தொடங்கப்பட்டன. இப் பயிற்சிக் காலத்தில் பயிற்றுவித்த ஆசிரியர்களே பெருமைப்படக்கூடிய அளவிற்கு அவனது செயற்பாடுகள் அமைந்திருந்தன.

அதேபோன்று, அவன் பயிற்சி வழங்கத் தொடங்கியபோது, வழமையான “பயிற்சி ஆசிரியர்கள்” என்ற தோற்றப்பாட்டிற்கு அப்பால் ஒரு வேறுபாடான பயிற்சி ஆசிரியராக அவன் இனங்காணப்பட்டான். செயற்திறண், முன்மாதிரி, அணுகுமுறை என்பவற்றால் “சித்தா மாஸ்ரர்” என்ற பெயர் போராளிகளின் மனங்களில் நிலைபெற்ற ஒன்றாக மாறிவிட்டிருந்தது.

படைத்துறை தொடர்பிலான தொழிநுட்பக் கற்கைநெறி ஒன்றினைப் நிறைவு செய்து தென்தமிழீழம் திரும்பத் தயாரான வேளை சிறிலங்காப் படையினரால் “முன்னேறிப்பாய்தல்” நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இந்நடவடிக்கைக்கு எதிராக எம்மால் முன்னெடுக்கப்பட்ட “புலிப்பாய்ச்சல்” உட்பட்ட தாக்குதல்களில் பங்கு கொண்டான். இவற்றைத் தொடர்ந்து கொக்குளாய் இராணுவமுகாம் தாக்குதலிலும் பங்கெடுத்தான். அவன் சார்ந்திருந்த ஜெயந்தன் படையணி மீண்டும் தென்தமிழீழம் திரும்பியபோது சித்தாவும் புறப்பட்டான்.

* * * * * * * * * * * * * * * * * * * * * *

பயிற்சி ஆசிரியர் பிரிவில் 1992 இல் இணைந்து கொண்டவன் மிக விரைவிலேயே அப்பிரிவின் பொறுப்பாளராக உயர்ந்தான். இக் காலகட்டத்தில் மட்டக்களப்புப் பகுதியில் இடம்பெற்ற பல தாக்குதல்களில் பங்கு கொண்டான். 1993இல் ஜெயந்தியாய இராணுவ முகாம் தாக்குதலுடன் தொடங்கிய இவனது சமர்க்களப் பட்டறிவு, மாவடிவேம்பு படை முகாம் , கிண்ணையடி படை முகாம், குடாப்பொக்கணை காவல்துறை நிலையம், புளுகுணாவ சிறப்பு அதிரடிப்படை முகாம், மாவடிவேம்பு படை முகாம், கறப்பள படை முகாம், வவுணதீவு படை முகாம் என விரிந்ததுடன் எம்மால் நடாத்தப்பட்ட பல்வேறு பதுங்கித் தாக்குதல்களும் முற்றுகை முறியடிப்புகளும் அப்பட்டறிவிற்கு மேலும் வலுச்சேர்த்தன.

* * * * * * * * * * * * * * * * * * * * * *

யாழ்.குடாநாட்டிற்கு பாதை திறக்கவென சிறிலங்காப் படைத்தரப்பு முன்னெடுத்த “ஜெயசிக்குறு” நடவடிக்கை தொடங்கப்பட்டபோது மீண்டும் தென்தமிழீழப் படையணிகள் வன்னி நோக்கி விரைந்தன. எதிர்கொள்ளப் போகும் சமரின் பரிமாணத்தைக் கருத்தில் கொண்டு ஜெயந்தன் படையணி மீள் ஒழுங்கு செய்யப்பட்டது.

இதன்போது ஆற்றல் மிக்க அணித்தலைவர்களின் தேவையும் உணரப்பட்டது. இவ் அடிப்படையில் ஒரு கொம்பனி கொமாண்டராக சித்தா நியமனம் பெற்றான். அந்நாட்களில் கொம்பனி கொமாண்டராக, கொம்பனி மேலாளராக, குறித்ததொரு வேளையில் படையணியின் தாக்குதற் தளபதி என, பொறுப்பேற்று களங்களில் அணிகளை வழிநடத்தினான்.

* * * * * * * * * * * * * * * * * * * * * *

“ஜெயசிக்குறு” எதிர்ச் சமர்முனையின் மாங்குளப் பகுதி, முன்னணிக் காவலரண் பகுதியில் அவனை சந்திக்கிறோம். கையில் ஏற்பட்ட விழுப்புண் முற்றாக மாறாத நிலையில் அவன் இயல்பாகச் செயற்பட்டுக் கொண்டிருந்தான். “என்ன சித்தா வழமைபோல காயம் மாறமுதல் வந்தாச்சி போல.... இது எத்தனையாவது....” சித்தாவிடமிருந்து அந்த வழமையான புன்னகையே பதிலாகக் கிடைத்தது.

“முதல் மூண்டு... ஜெயசிக்குறுவில நாலு.... மொத்தம் ஏழு” அருகில் நின்ற போராளி அழுத்தமாய் கூறுகின்றான்.

ஓ... இவன் என்ன மாதிரியான மனிதன். ஏற்கனவே மூன்றுமுறை, அதில் கறப்பளையில் மார்பை ஊடறுத்த ரவை அவனை சாவின் வாசலுக்கே கொண்டுசென்றது. தாண்டிக்குளத்தில் காயமடைந்து அது மாறமுன்பே களம் வந்தான், மீண்டும் பெரியமடுவில்... அது மாறுமுன் மீண்டும் களம், அடுத்தது ஓமந்தையில்... குணமாகும் முன் மாங்குளம் வந்தான், மாங்குளத்திலும் அவனைத்தேடி ரவை வந்தது. இதோ இப்போது கைக்காயத்துடன் முன்னணியில்....

* * * * * * * * * * * * * * * * * * * * * *

ஓயாத அலைகள் - 2. கிளிநொச்சி பிரிகேட் தளத்தைக் கைப்பற்றுவதற்கான தாக்குதல்கள் தொடங்கின. இத் தாக்குதல்களில் ஜெயந்தன் படையணியின் கொம்பனிகள் வெவ்வேறு முனைகளில் சண்டையிட வேண்டியிருந்தது. சித்தாவின் அணிக்கு கிளிநொச்சி குளப்பகுதி முன்னணி அரண் வரிசையைக் கைப்பற்றி குறித்த இலக்கு நோக்கி தாக்குதல் தொடுக்கும் பணி வழங்கப்பட்டிருந்தது. நீர் நிறைந்திருந்த குளத்தின் ஊடாக மிக இரகசியமாக நகரவேண்டியிருந்தது. நகர்வை மிகச் சிறப்பாகச் செய்த அவ்வணி குள பண்டை கடந்து கொண்டிருந்தபோது அங்கு சண்டை மூண்டது.

சாதகமற்றதொரு சூழ்நிலையில், தரையமைப்பில் சண்டை தொடங்கி விட்டது. உக்கிரமான தாக்குதல், அந்த அணியின் வீரர்கள் அதன் தலைவனைப்போல் உறுதியானவர்கள், இறுதிவரை போராடக்கூடியவர்கள்.....

அடுத்த நாள் கிளிநொச்சி பிரிகேட் தளம் அழிக்கப்பட்டு, கிளிநொச்சி நகர் மீட்பு வெற்றிச் செய்தி வெளியாகிக் கொண்டிருக்கின்றது....

* * * * * * * * * * * * * * * * * * * * * *

குறித்ததொரு பயிற்சித் திட்டம் தொடர்பாகக் கதைப்பதற்காக தேசியத் தலைவரால் அழைக்கப்பட்டிருந்தோம். மூத்த தளபதிகள் சிலருடன் தேசியத் தலைவர் உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது எல்லைப்படை வீரர்களுக்கான பயிற்சிப் பாசறைக்கு பொருத்தமான பெயர் சூட்ட வேண்டும் என மூத்த தளபதி ஒருவர் கோரிக்கை வைக்கிறார். பலரும் பல்வேறு பெயர்களை முன்மொழிகின்றனர். தேசியத் தலைவரின் முகத்தில் சிந்தனை ரேகைகள்.... “சித்தா பயிற்சிப் பாசறை என்று பெயர் வையுங்கோ.”

“லெப்.கேணல் சித்தா ஒரு அமைதியான சுபாவம் கொண்ட ஆற்றல் மிக்க லீடர், ஒரு நல்ல பயிற்சி ஆசிரியர், களத்தில் பலதடவை காயப்பட்டவர், கடைசிச் சண்டையில்கூட மிக உறுதியாகச் செயற்பட்டவர்....” என சித்தா மாஸ்ரரைப் பற்றி தேசியத் தலைவர் கூறிக்கொண்டு போக எமக்கு ஆச்சரியமாகவும், அதேவேளை மிகப் பெருமையாகவும் இருந்தது. ஒரு உண்மை வீரனுக்குக் கிடைக்கக்கூடிய அதியுயர் மதிப்பு இதைத்தவிர வேறு எதுவாக இருக்க முடியும்?.

எமது போராட்ட வரலாற்றில் ஒரே களத்தில் நான்குமுறை விழுப்புண் ஏற்று ஒவ்வொரு விழுப்புண்ணும் மாறும் முன்பே களம் வந்து படைநடத்திய வீரன் அவன் ஒருவனாகத்தான் இருக்க முடியும். அந்தப் பெரும் சமர்க்களத்தில் அவன் ஐந்தாவது முறையாகவும் காயப்பட்டான். மீண்டும் அவன் களம் வரவில்லை, வரவேயில்லை.

சித்தா....அமைதியான ஆழுமை. ஆர்ப்பாட்டமற்ற ஆற்றல்.

 

http://www.battinaatham.net/description.php?art=16865

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.