Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாலுணர்வை அறிதலும் எழுதுதலும் - ஜெயமோகன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாலுணர்வை அறிதலும் எழுதுதலும் - ஜெயமோகன்

ஹாவ்லக் எல்லிஸ்

ஹாவ்லக் எல்லிஸ்

சமீபத்தில் ஓர் இளம் எழுத்தாளர் எழுதிய நாவலை வாசித்தேன். பாலியல் நிகழ்ச்சிகளை விரிவாக எழுதியிருந்தார்.  ‘துணிந்து’ எழுதியிருப்பதாக அவர் எண்ணிக்கொண்டிருந்திருக்கலாம். இதற்குமுன் இல்லாதவகையில் எழுதியிருப்பதாக பெருமிதம் கொண்டிருக்கவும்கூடும். இளம்வாசகர்கள் சிலர் அதை வாசித்து  “ஆகா!” போட்டிருக்கலாம். அப்படி ஒருவர் கவனம் பெற்றுவிட்டால் பலர் உருவாகி வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் பாலியல்வரட்சி மிகுதி. ஆகவே என்றுமே பாலியலெழுத்துக்கு வாசகர்கள் அதிகம். அத்துடன் பெரும்பாலான வாசகர்கள் பாலுறவு மட்டுமே வாழ்க்கை என எண்ணிக்கொண்டிருக்கும் முதிரா இளமையில் வாசிக்க வருகிறார்கள். அவர்கள் இவ்வகை எழுத்துக்களையே தெரிவுசெய்கிறார்கள். அவர்களில் சிலரே அடுத்தகட்ட வாசிப்புக்கு வருகிறார்கள்

இன்று எழுதுபவர்கள் தாங்கள் துணிச்சலாக எழுதுபவர்களாக எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் எல்லா காலகட்டத்திலும் எழுத்தாளர்கள் அவ்வாறு  ‘துணிந்து’ எழுதுவது நடந்துகொண்டேதான் இருக்கிறது. அத்துணிவான எழுத்து இருபதாண்டுகளுக்குள் சாதாரணமாக ஆகிவிடுகிறது, அடுத்த தலைமுறை வந்து மேலும் துணியவேண்டியிருக்கிறது.

உண்மையில் இதில் துணிவென்று ஏதும் இல்லை. ஒவ்வொரு காலகட்டத்தில் சமூகவெளியில் பாலியல்வெளிப்பாட்டுக்கு ஒர் எல்லை ஒருவகையான பொதுப்புரிதலாக உருவாகி நிலைகொள்கிறது.. அந்த எல்லையை எந்த அளவுக்கு மீறவேண்டும் என்பதை அந்தப்படைப்பின் ஆசிரியன் முடிவெடுக்கிறான். அதற்கு அளவீடாக இருப்பது அந்தப் படைப்பு எந்த அளவுக்கு பாதிப்பை உருவாக்கவேண்டும், எப்படிப்பட்ட பாதிப்பை உருவாக்கவேண்டும் என்ற கணிப்புதான்.

உதாரணமாக, மென்மையான உள்ளமோதல்களைச் சொல்லும் ஒரு காதல்கதையில் அப்பட்டமான உடலுறவுக்காட்சி விரிவாக விவரிக்கப்பட்டிருந்தால் அதன் அழகியல் ஒருமை சிதையும். வாசகனிடம் உருவாக்கும் அதிர்வு அந்த படைப்பை அந்த பாலுறவுக் காட்சியை அடிப்படையாகக் கொண்டு யோசிக்கவைக்கும். அவனுக்கு அதிர்ச்சியை அளித்து அதிலுள்ள நுண்மையான காட்சிகள் அவனுடன் தொடர்புறுத்தமுடியாமல் செய்யும். மென்மையான வண்ணங்கள் நடுவே அடர்வண்ணங்களைச் சேர்ப்பதுபோலத்தான் அது. எந்த வண்ணத்தையும் ஓவியத்தில் பயன்படுத்தலாம். எவ்வாறு கலக்கிறோம் என்பதே கேள்வி.  இ

இந்த அளவீடு மாறிக்கொண்டே இருக்கும் விதம் வியப்பூட்டுவது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புள்ள கவிதைகளில் உடல்வர்ணனைகளும் உடலுறவு வர்ணனைகளும் ஏராளமாக உள்ளன. தமிழிலும் சரி, சம்ஸ்கிருதத்திலும் சரி பெண்ணுடலின் வர்ணனைகள் கட்டற்று சென்றிருக்கின்றன. மானின் குளம்புபோல என பெண்குறியை வர்ணிக்கும் இடம்வரை. ஆனால் எங்கும் ஆண்குறி வர்ணனை இல்லை. ஏனென்றால் அது அன்றைய சமூகத்திற்கு அதிர்ச்சி அளித்திருக்கலாம். சுவைத்திரிபு உருவாகியிருக்கலாம்.

நவீன இலக்கியம் உருவானபோது பாலியலெழுத்து கடுமையான தணிக்கைக்கு உள்ளானது – வாசகனாலும் எழுத்தாளனாலும். ஆகவே இடக்கரடக்கல்கள் உருவாயின. அன்றைய விக்டோரிய ஒழுக்கவியல் ஒரு காரணம் என்றாலும் அதைவிட முக்கியமான காரணம் நவீன இலக்கியம் அச்சு வழியாக மேலும் பரவலாகச் சென்றது, இன்னும் பெரிய மேடையை அடைந்தது என்பதுதான். பழங்காலக் கவிதைகள் சிறிய அரங்குகளுக்கும், அவைகளுக்கும் உரியவை. அங்கே கவிச்சுவை நுகரவந்த அறிஞர்களே இருந்தனர். நவீன இலக்கியத்தில் பொதுமக்கள் வாசகர்களாக அமைந்தனர். ஆகவே ‘தெருவில்நின்று’ பேசுவனவே இலக்கியத்திலும் அமையவேண்டும் என்ற உளநிலை அமைந்தது.

ஆனால் ஒவ்வொரு படைப்பும் அந்த எல்லையை முட்டி விரிவாக்கிக் கொண்டே இருந்தது. தமிழிலக்கியத்தில் புதுமைப்பித்தன் பாலுறவை எப்படி எழுதியிருக்கிறார் [விபரீத ஆசை] தி.ஜானகிராமன் எப்படி எழுதியிருக்கிறார் [அம்மா வந்தாள், தண்டபாணி- அலங்காரம் உறவு] ஜி.நாகராஜன் எப்படி எழுதியிருக்கிறார் [நாளை மற்றுமொருநாளே கந்தன்- வள்ளி உறவு] என்று கூர்ந்து வாசிப்பவர்களால் அந்த எல்லை தள்ளித்தள்ளி வைக்கப்படுவதைக் காணமுடியும்.

ஏன் தள்ளிவைக்கப்படுகிறது என்றால் ஒரு காட்சி சற்று அழுத்தமான பாதிப்பை உருவாக்கவேண்டும் என்று விரும்பும் எழுத்தாளன் முன்பு எழுதப்பட்டு பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட அளவை விட சற்றே முன்னகர்ந்து அதைச் சித்தரிப்பான். மிகவும் முன்னகர்ந்துவிட்டால் அது சுவைத்திரிபு ஆகிவிடுமென்றும் அறிந்திருப்பான். நம் சமூகத்தின் அளவுகோல் மேலைநாடுகளை விட இன்னும் இறுக்கமானது. ஆகவே நாம் பாலியலை எழுதும்போது மேலைநாடுகள்போல எழுதுவதில்லை. எழுதினால் அது அதைமட்டுமே பேசும் நாவலாக ஆகிவிடும். ஒரு ஓவியத்திரைச்சீலையில் நீலமோ. கருமையோ கையாளப்பட்டால் அந்த ஓவியத்தின் மையநிறமே அதுவாக இருக்கவேண்டும் என்பதுபோல. ஆகவே பாலியல் எழுத்தைத் துணிச்சலாக எழுதுவது என்பதொன்றும் சிறப்பல்ல. எல்லா எழுத்தாளர்களும் தேவையான துணிச்சலுடன்தான் எழுதுகிறார்கள்

ஆனால் அவ்வாறு எழுதுபவர்களில் எத்தனைபேர் அதை நுட்பமாக, மெய்யாக எழுதுகிறார்கள்? கணிசமான தமிழ் எழுத்தாளர்கள் பாலியல்வரட்சியால் அவதிப்படுபவர்கள். பூஞ்சையான உள்ளமும் அதற்கேற்ற சம்பிரதாயமான வாழ்க்கையும் கொண்டவர்கள். ஆகவே அனுபவத்திலிருந்து எவரும் எழுதுவதில்லை. பெரும்பாலும் அவை பகற்கனவின் சித்தரிப்புகள். தஞ்சைப் பிரகாஷ் எழுதியதைப்போல. ஆகவே பகற்கனவுகளை நாடுபவர்களால் வாசிக்கத்தக்கவை

உதாரணமாக ஜி.நாகராஜனின் நாளை மற்றுமொருநாளே நாவலில் கந்தன் மீனாவுடன் உறவுகொண்டு முடிந்ததும் மீனா சுருண்டு கிடந்து அழுகிறாள். உளஅழுத்தம் கொண்ட பெண்களின் இயல்பு அது. அந்த அழுகைக்குப்பின் அவள் அதற்கான காரணமாக காணாமல்போன தன் மகனைப்பற்றி நினைத்துக்கொள்கிறாள். இது ஆசிரியரின் நுண்ணிய அனுபவ அவதானிப்பின் வெளிப்பாடு. இத்தகைய இடங்கள் தமிழிலக்கியத்தில் மிகக்குறைவே.

ஆனால் பாலியல் அறியாமையின் வெளிப்பாடுகள் நிறைய. சமீபத்தில்  கர்நாடகத்தில் அருவிப்பயணத்தின்போது காரில் இதைப்பற்றிப் பேசிக்கொண்டு சென்றோம். நான் ஜெயகாந்தனிடம் பேசிக்கொண்டிருந்தபோது  அவர் சொன்னதைச் சொன்னேன். ‘பெண்களுக்கு காமத்தில் உடலின்பம் கிடையாது, உள்ளத்தால்தான் இன்பம் அனுபவிக்கிறார்கள்’ என்றார் ஜெயகாந்தன். அவரை நேரில் மறுக்கமுடியாது. நான் வியப்புடன் கேட்டுக்கொண்டிருந்தேன். பாலகுமாரனின் மெர்க்குரிப்பூக்களில் ஓர் இடம் வரும். பெண்களுக்குப் பாலியல் இன்பம் என்பது உடலில் அல்ல ‘அய்யோ இந்த ஆம்புளைக்கு என்னாலே எவ்ளவு சந்தோஷம்’ என்று நினைப்பதில்தான் என்கிறார் ஆசிரியர்.

இது தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிலேயே எண்பதுகள் வரை பரவலாக இருந்த எண்ணம். எழுபதுகளில் டாக்டர் பிரமிளா கபூர் என்ற ஆய்வாளர் தன் மாணவிகளைக்கொண்டு ஒரு பாலியல் கணக்கெடுப்பை நிகழ்த்தினார். இந்தியப்பெண்களில் மிகப்பெரும்பான்மையின பாலுறவுச்சம் குறித்து ஏதும் அறியாதவர்கள் என்றது அந்த ஆய்வு. பலர் வாழ்நாள் முழுக்க ஒருமுறைகூட அதை அடையாதவர்கள். ஆண்களில் அனேகமாக எவருக்கும் அப்படி ஒன்று பெண்களுக்கு உண்டு என்றே தெரியாது.அன்று மிக அதிகமாகப் பேசப்பட்ட ஓர் ஆய்வுமுடிவு அது

Alfred_Kinsey_1955

கின்ஸி

இன்றும் அதே அறியாமை நிலவுகிறது. சாரு நிவேதிதாவின் சீரோ டிகிரி நாவலில் ஒரு  ‘பாலியல்வித்தகன்’ ஒரு ‘கள்ளமில்லா’ பெண்ணுக்கு தன்னின்பம் செய்துகொள்ள தொலைபேசி வழியாகக் கற்றுக்கொடுக்கிறான்.அவன் சொல்லும் அந்த  ‘நுட்பமான’ வழி என்பது சுட்டுவிரலை உள்ளே விட்டு அசைப்பதுதான்.பெண்களுக்கு பெண்குறியின் உட்பகுதியில் நுண்ணுணர்வே இல்லை என்றும், பெண்கள் தன்னின்பம் கொள்ளும் வழிகளே வேறு என்றும் அந்த திறனாளனுக்குத் தெரியவில்லை. இதை அப்போது அந்நூலுக்கு எழுதிய மதிப்புரையிலேயே சுட்டிக்காட்டியிருந்தேன்.

பெரும்பாலும் எளிமையான பாலியல்புனைகதைகளில் இருந்தே தமிழ் இளைஞன் பாலியலறிவை அடைகிறான். அவை ஆண்களின் பகற்கனவை சீண்டும்பொருட்டு எழுதப்படுபவை.  எழுத்தாளன் என்பவன் சற்றேனும் முறையாக பாலியலைக் கற்றிருக்கவேண்டும். எண்பதுகளில் நான் வாசிக்கவந்தபோது மலையாளத்தில் இ.எம்.கோவூரின் உரைகள் வழியாக பாலுறவியல் [sexology] வாசகர்களிடையே புகழ்பெற்றிருந்தது. அவர் வழியாகவே ஹாவ்லக் எல்லிஸ், ஆல்ஃப்ரட் சார்ல்ஸ் கின்ஸி இருவரைப்பற்றியும் அறிந்தேன். என் உலகப்புரிதலில் மிகப்பெரிய திறப்பை அளித்தன. அவர்கள் இருவரையும், அறியாதபோதுதான் நமக்கு தஞ்சைப் பிரகாஷ் பரபரப்பை அளிக்கிறார்

அந்த இருபெயர்களையுமே இளம் தலைமுறையினர் அறிந்திருக்கவில்லை என்று தெரிந்தமையால்தான் இந்தக்குறிப்பு.அவர்களைப்பற்றி எவரும் தமிழில் எழுதியும் நான் வாசித்ததில்லை. எண்பதுகளின் இறுதியில்நான் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன். இணையத்திலேயே அவர்களின் நூல்களை தரவிறக்கம் செய்யலாம் என நினைக்கிறேன்.

 

ஹென்றி ஹாவ்லக் எல்லிஸ் [Henry Havelock Ellis 1859 – 1939] உளவியலுக்கு ஃப்ராய்ட் எப்படியோ அப்படி பாலுறவியலுக்கு முன்னோடியான அறிஞர். லண்டனில் பிறந்தவர். லண்டன் கிங்ஸ் கல்லூரியில் மருத்துவப் படிப்பு முடித்தவர். பொதுவாக இடதுசாரி எண்ணங்கள் கொண்டிருந்தார்.கார்ல். மாக்ர்ஸின் மகள் எலியனேர் மார்க்ஸ் எல்லிஸின் அறிவுலகத் தோழமைகளில் ஒருவர். பெர்னாட் ஷாவுடனும் தொடர்பிருந்தது.ஒருபாலுறவைப் பற்றிய தன் முதல் நூலை இன்னொருவருடன் சேர்ந்து ஜெர்மன் மொழியில் எழுதினார். பின்னர் அது ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டது

பாலுறவு குறித்து அன்றுவரை இருந்த பெரும்பாலான நம்பிக்கைகளும் புரிதல்களும் மதத்தலைவர்களால் உருவாக்கப்பட்டவை. ஒழுக்கவியலை அடிப்படையாகக் கொண்டவை. அது ஒரு மானுடச் செயல்பாடு என்றவகையில் தரவுகளின் அடிப்படையில் புறவயமாக அதை அணுகவேண்டும் என்ற கண்ணோட்டமே எல்லிசை ஒரு மாபெரும் முன்னோடியாக ஆக்கியது. தரவுகளைச் சேர்த்து அறிவியல் முறைமைப்படி ஆராய்ந்தபோது ஏராளமான பழைய நம்பிக்கைகள் சிதைந்தன. குறிப்பாக பெண்களின் பாலுணர்வு, பாலுறவுச்சம் குறித்த புதிய கொள்கைகள் வெளியாயின.

உதாரணமாக கந்து [ clitoris] பெண்களின் பாலுறவுவிருப்பத்தின் மையம் என்ற நம்பிக்கை அன்று இருந்தது. அது ஓர் நரம்பு முடிச்சே ஒழிய மையமல்ல என்று எல்லிஸின் ஆய்வுகள் காட்டின. பெண்களின் பாலுணர்வில் அவர்களின் பெண்ணுறுப்பின் உட்பகுதிகள் எவ்வகையிலும் பங்கெடுக்கவில்லை என்று நிறுவின. ஒருபாலுறவு போன்றவை உளப்பிறழ்வுகளோ தீயபழக்கங்களோ அல்ல, இருபாலுறவுபோலவே இயல்பான மூளைசார்ந்த தனிவிருப்பங்கள்தான் என்றும், புறத்தே தெரிவதைவிட ஒருபாலுறவு சூழலில் அதிகம் என்றும் அவருடைய ஆய்வுகள் காட்டின. அக்காலத்தில் எல்லிஸின் நூல்கள் தடைசெய்யப்பட்டன. ஆபாச இலக்கியம் படைத்தமைக்காக அவர் சட்டநடவடிக்கைக்கும் உள்ளானார்.

எல்லிஸின் ஆய்வுகளை நிறுவன உதவியுடன் மிகவிரிவான முறையில் ஆய்வுசெய்து அறிக்கைகளை உருவாக்கியவர் ஆல்ஃப்ரட் கின்ஸி. Alfred Charles Kinsey  [ 1894 –  1956] . அமெரிக்க உயிரியலாளர்.  1947 இவர் இண்டியானா பல்கலையில் நிறுவிய பாலுறவியல் ஆய்வு நிறுவனம் மானுடரின் பாலியல்பழக்கவழக்கங்களைப் பற்றி மிக விரிவான ஆய்வுகளை தொடர்ந்து வெளியிட்டது. இது  Kinsey Institute for Research in Sex, Gender, and Reproduction என அழைக்கப்பட்டது. தன் மாணவர்களையும் தொழில்முறை தகவல்சேகரிப்பாளர்களையும் கொண்டு பெருமளவில் தரவுகளைச் சேகரித்து ஒருங்கிணைத்து தன் கொள்கைகளை உருவாக்கி முன்வைத்து  நிறுவினார் கின்ஸி.

Sexual Behavior in the Human Male (1948) மற்றும்  Sexual Behavior in the Human Female (1953) ஆகிய இரு நூல்களும் கின்ஸி அறிக்கைகள் என்றபேரில் பொதுவாக சமூக, மானுடவியல் அறிஞர்கள் நடுவில்கூட பெரிதாக வாசிக்கப்பட்டன. அன்று திருவனந்தபுரம் தெருக்களிலேயே போலிப்பதிப்பாக இவை வாங்கக்கிடைத்தன. உலக அளவில் மானுடப் பாலியல்பழக்கங்களைப் புரிந்துகொள்வதற்கான முன்னோடி வழிகாட்டிகளாக இவை கருதப்படுகின்றன. சட்டம், ஒழுக்கவியல், இலக்கியம், சமூகவியல், மானுடவியல் ஆகியவற்றில் ஆழ்ந்த செல்வாக்கைச் செலுத்தின

கின்ஸியின் கணக்கெடுப்புகளைப் பற்றி பலவகையான ஐயங்களும் மறுப்புகளும் பின்னர் உருவாயின. அவர் நோயாளிகளையும் குற்றவாளிகளையும் தனியாகப்பிரித்து கணக்கிடவில்லை. பெரும்பாலும் வித்தியாசமான பாலுணர்வும் பழக்கங்களும் கொண்டவர்களை நேர்காணல் செய்தார். பாலுறவு குறித்த செய்திகளை அளிப்பவர்கள் நேர்மையாக சொல்லவேண்டுமென்பதில்லை, பலசமயம் அவர்கள் மிகையாக்கவோ நியாயப்படுத்தவோதான் பேசுவார்கள் – இவ்வாறெல்லாம் சுட்டிக்காட்டப்பட்டாலும் இன்றுவரை மானுடப்பாலுணர்வு குறித்து அறிவியல்நோக்கில் உருவாகியிருக்கும் பெரும்பாலான புரிதல்களுக்கான தொடக்கம் கின்ஸிதான்.

இன்று இவ்வறிதல்கள் வெகுவாக முன்னேறிவிட்டன. உடற்கூறியலில் பல்வேறு நவீன கருவிகள் வந்துவிட்டன. நரம்பியல் மிகப்பெரிய பாய்ச்சல்களை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது. பாலியல்கல்வியின் தேவை உலகளாவ உணரப்பட்டிருக்கிறது. பாலியல் நிபுணர்கள் ஊடகங்களில் தோன்றி விளக்குகிறார்கள். பாலியல் அறிதல் பரவலாகியிருக்கிறது. ஆனால் மறுபக்கம் பாலியல்தளங்கள் பெருகிவிட்டிருக்கின்றன. இவை பாலுறவியலுக்கு நேர் எதிரான பகற்கனவு சார்ந்த புரிதலை உருவாக்குகின்றன. அவற்றைத்தான் இளைஞர்கள் மிகுதியாக பார்க்கிறார்கள். வருத்தமென்னவென்றால் எழுத்தாளர்களும் அவற்றையே பார்த்துக் கற்றுக்கொண்டு எழுதுகிறார்கள்

 

 

https://www.jeyamohan.in/113632#.W69UkxbTVR4

  • 1 year later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாலியலை எதுவரை எழுதுவது?

ஜெயமோகன்

goat.jpg

பாலுணர்வை அறிதலும் எழுதுதலும்

அன்புள்ள ஜெ,

ஒரு சங்கடமான கேள்வி, தவறாக நினைக்கமாட்டீர்கள் என நினைக்கிறேன். உங்கள் படைப்புலகில் நேரடியான காமச்சித்தரிப்புக்கள் இல்லை, அல்லது குறைவாகவும் மென்மையாகவும் உள்ளன. அல்லது நான் சொல்வதை இப்படி மாற்றிச் சொல்கிறேன். நீங்கள் காமத்தை எழுதும்போது அதை உடல்சார்ந்து வர்ணிப்பதில்லை. அந்நிகழ்ச்சிகளை நீடிக்கவிடுவதில்லை.

நான் சரியாகச் சொல்கிறேனா என்று தெரியவில்லை. பல இடங்களில் ஒரு ஜாக்ரதையுடன நின்றுவிடுகிறீர்கள். அல்லது கவித்துவமான மொழியைக்கொண்டு போர்த்திவிடுகிறீர்கள். இதை நாங்கள் நண்பர்கள் பேசிக்கொண்டோம். பாலியலை எழுதுவதை தவறு என நினைக்கிறீர்களா? அல்லது பாலியல் எழுத்து இலக்கியம் அல்ல என்று எண்ணுகிறீர்களா? அல்லது இப்படி கேட்கிறேன், பாலியலை எழுதுபவர் எங்கே நிறுத்திக்கொள்ளவேண்டும் என்று நினைக்கிறீர்கள்

ஆர்.பிரதீப் பாஸ்கரன்

அன்புள்ள பிரதீப்,

kaju.jpg

இது சங்கடமான கேள்வி எல்லாம் ஒன்றும் இல்லை. நானே ஓரிருமுறை பதில் சொல்லிவிட்ட ஒன்றுதான்.

பாலியலை மட்டும் அல்ல வன்முறையை, உளப்பிறழ்வுகளை, அருவருப்பை, துயரை எதை வேண்டுமென்றாலும் எவ்வளவு வேண்டுமென்றாலும் எழுத்தாளன் எழுதலாம். எழுத்தின் தரமோ தரமின்மையோ அதனால் முடிவாவதில்லை. எழுத்தாளன் எதை எவ்வளவு எப்படி எழுதவேண்டும் என்பதை அவனுடைய தேடலும், அவனுடைய இலக்கும் மட்டுமே முடிவுசெய்யவேண்டும்.

இலக்கியத்தில் பாலியல் என்று பேசும்போது இரு புலங்களை நாம் கருத்தில்கொள்ளவேண்டும். ஒன்று ஐரோப்பிய சமூகச்சூழல். இன்னொன்று கலையின் கட்டமைப்பு

ஐரோப்பா நெடுநாட்களாக கடுமையான பாலியல் ஒறுப்பை மதநெறியாக கொண்டிருந்த நாடு. ஐரோப்பிய மறுமலர்ச்சி என்பது ஒட்டுமொத்தமாக ஐரோப்பாவின் கிறித்தவ மதநெறிகளுக்கு எதிரான ஒரு சிந்தனைப்போக்குதான்.

கலை இலக்கியம் தத்துவம் மட்டும் அல்ல தொழிற்புரட்சி, நுகர்வுப்பண்பாடு, ஜனநாயகம் எல்லாமே கிறித்தவத்திற்கு எதிரான சிந்தனைகளாக உருவாகி வந்தவை. தனிமனிதன் என்னும் கருதுகோளே கிறித்தவ சிந்தனைக்கு எதிராக எழுந்ததுதான். தனிமனித உரிமை, தனிமனிதனின் தேடல், தனிமனிதனின் அதிகாரம் என்னும் கருத்துக்களே ஜனநாயகம் என்னும் அமைப்பு வரை வந்துசேர்ந்தன.

மேலுலகுக்காக இக உலகை நிராகரிப்பது, அதன்பொருட்டான கடுமையான விரதங்கள் கிறித்தவத்தின் அடிப்படைகள். சதை என்பது சாத்தானின் ஊர்தி என்பது அதன் நம்பிக்கை. இன்றும், இங்கும்கூட தீவிரமான கிறித்தவத்தின் வழி அதுவே.கத்தோலிக்கர்கள் சீர்திருத்தக் கிறித்தவர்கள் இருவருமே பாலியல் ஒறுப்பை ஒர் அடிப்படை சமூக ஒழுங்காக முன்வைத்தனர்

ஆகவே ஐரோப்பிய மறுமலர்ச்சியுடன் இணைந்து எழுந்த இலக்கியங்களில் தனிமனிதனின் பாலியல் விழைவை அங்கீகரிப்பது, அதை முழுக்கமுழுக்க சமூகக் கட்டுப்பாட்டுக்கு விட்டுக்கொடுக்காமலிருப்பது ஆகியவை முதற்பொருளாகப் பேசப்பட்டன.

நவீன ஐரோப்பிய இலக்கியத்தில் பாலியல் மையப்பேசுபொருளானது இவ்வண்ணம்தான். சில எல்லைகளை தொட்டுக்காட்டி இதை விளக்கலாம். அன்னா கரீனினா [தல்ஸ்தோய்] , எம்மா [ஜேன் ஆஸ்டின்] மேடம் பவாரி [ஃப்ளாபர்ட்] போன்ற ஆரம்பகால நாவல்கள் பாலியல்கட்டுப்பாட்டுக்கும் மானுடவிழைவுக்கு இடையிலான மோதலை, மானுட உள்ளத்தின் சுதந்திர நாட்டத்தை காட்டுபவை. அந்த மோதல் இட்டுச்செல்லும் இறுதி வீழ்ச்சியை முன்வைப்பவை.

அவ்வரிசையை அப்படியே நீட்டிக்கொண்டுவந்தால் லேடி சாட்டர்லிஸ் லவர் [டி.எச். லாரன்ஸ்] ஐ அடைகிறோம். அது அப்பாலியல் விடுதலையை கொண்டாடி, அதை ஒரு மாற்றுவாழ்க்கையாக மட்டுமல்ல மாற்றுமெய்யியலாகவும் முன்வைக்கிறது.

இன்னொரு உதாரணம் என்றால் ஹென்ரிக் இப்சனின் எ டால்ஸ் ஹௌஸ் என்னும் நாடகம் பெண்ணின் விடுதலை குடும்பத்திற்கு வெளியே என்று அறைகூவுகிறது. பியரி லாக்லோஸின் டேஞ்சரஸ் லயசன்ஸ் கட்டற்ற பாலியல்- அதிலிருக்கும் குற்றம் அளிக்கும் கொண்டாட்டத்தை முன்வைக்கிறது

இது ஐரோப்பியப் பார்வையில் நிகழ்ந்த ஒரு கருத்துப்பரிணாமம். ஐரோப்பிய – அமெரிக்க எழுத்தில் பாலியல்சுதந்திரம் முதன்மைப்பேசுபொருள் ஆனது இவ்வண்ணம்தான். அந்த பரிணாமத்தின் கடைசிக்கட்டம் என ஹென்றி மில்லரின் நாவல்களைச் சொல்லலாம்.

ஆனால் அந்தப்புள்ளியிலேயே அந்த கருத்தியல் பரிணாமம் முடிவுற்றுவிட்டது. அதன்பின் எவருக்கும் எதுவும் புதிதாகச் சொல்வதற்கில்லை. அதன்பின் எழுதியவர்கள் ஏற்கனவே எழுதப்பட்டவற்றைத்தான் திரும்பத்திரும்ப எழுதினார்கள். எழுதிக்கொண்டிருக்கிறார்கள்

ஏன்? ஒன்று, ஏற்கனவே நான்கு தலைமுறைகளாக பேசப்பட்ட பாலியல்சுதந்திரம் பெருமளவுக்கு அங்கே சாத்தியமாகிவிட்டிருக்கிறது. ஒரு வாழ்க்கைமுறையாக அது ஆகிவிட்டது. அவ்வாழ்க்கைமுறையில் இருப்பவர்கள் அதை இலக்கியத்தில் வாசிக்க விரும்புகிறார்கள். முன்பு பாலியல் சித்தரிப்பு அளித்த எந்த அதிர்ச்சியும் இன்று உருவாவதில்லை. அது தெரிந்த, பழகிய ஒரு கதையம்சம். ஆகவே எளிதாக வாசிக்க ஏற்றது, அவ்வளவுதான்.

இன்னொன்று, பொதுவாக புனைவுகளை அதிகமாக வாசிப்பவர்கள் இளைஞர்கள். மூளை ஒரு பாலியலுறுப்பாக இருக்கும் வயது அது. அப்பருவத்தில் பாலியல் சித்தரிப்புகளே அவர்களை ஈர்த்து உள்ளே கொண்டுவருகிறது. ஆகவே அது வாசிப்புவணிகத்தின் முக்கியமான ஒரு கூறாக மாறிவிட்டது

இன்று பாலியலில் எந்த புதிய தத்துவச் சிக்கலும் இல்லை, எந்த ஆழ்ந்த அதிர்வையும் அது அளிப்பதில்லை. நடைமுறையில் இன்னமும்கூட பலர் இலக்கியம் சென்றடைந்த பாலியல்சார்ந்த புரிதல்களைச் சென்றடையாமலிருக்கலாம். ஆனால் இலக்கியம் அதைக் கடந்துவிட்டது. உதாரணமாக இன்னமும்கூட தமிழ்ச்சமூகத்திற்கு விதவைத்திருமணத்திற்கு உளத்தடைகள் உள்ளன. ஆனால் இலக்கியம் அதை குபரா காலத்திலேயே பேசித் தெளிந்து கடந்துவிட்டது.

இன்னொன்றும் உண்டு, சென்ற ஐம்பதாண்டுகளுக்குள் பாலுறவியல் [ ] என்னும் துறை உருவாகி ஓர் மருத்துவமுறையாகவே நிலைகொண்டுவிட்டது. ஹாவ்லக் எல்லிஸ், கின்ஸி போன்ற மேதைகளால் உருவாக்கப்பட்ட அத்துறை அதற்குமுன் இலக்கியங்கள் பேசிய பல தளங்களை வெகுவாக விளக்கி முன்சென்றுவிட்டது

நான் முன்னரும் எழுதியிருக்கிறேன், ஹாவ்லக் எல்லிஸ் போன்ற பாலுறவியலாளர்களை ஓரளவேனும் வாசித்த ஒருவர் இன்றைய புகழ்பெற்ற பாலியலெழுத்தாளர்களின் படைப்புக்களை வாசித்தால் அவை எவ்வளவு மேலோட்டமானவை, எவ்வளவு பிழையான புரிதல்கள் கொண்டவை என உணர்வார். அவற்றுக்கு ஒருவகை பகற்கனவு என்னும் இடம் மட்டுமே உள்ளது

ஆகவே பாலியலை எழுதுவதொன்றும் அதிர்ச்சியோ புரட்சியோ மீறலோ அல்ல. செல்பேசியில் எட்டாம் வகுப்பு மாணவன் பார்க்கும் பாலுறவுக்காட்சிகளுக்கு, பாலுறவுசார்ந்த மீறல்களுக்கு சமானமாக எவரும் எழுதிவிடவுமில்லை. ஒரு மெல்லிய கிளுகிளுப்புக்காக இலக்கியத்திலும் பாலியலையே வாசிக்க விரும்புவது ஒரு தனிமனித விருப்பம். ஆனால் இலக்கியம் என்பது இத்தகைய எளிமையான சொறிதல்சுகம் அல்ல.

இன்று ஒருவர் பாலியலெழுத்தை எழுதினால் உடனே ‘சரோஜாதேவிபுத்தகம்’ என்ற விமர்சனம் வருகிறது. அது வசை அல்ல, ஒரு பொத்தாம்பொதுவான ஆனால் உண்மையான விமர்சனம்தான். அதைத்தான் நாங்கள் பாலியல்நூல்களி வாசிக்கிறோமே, மலையாகக் குவிந்துகிடக்கிறதே, மேலதிகமாக நீ என்ன சொல்கிறாய் என்பதுதான் அந்த விமர்சனமாக ஆகிறது.

இந்தியச்சூழலில் இந்த ஐரோப்பியபாணி பாலியல்விடுதலையை பேசுவதன் சிக்கல் என்ன? ஒன்று தமிழ்ச்சூழலிலேயே பொதுவான, அனைவருக்கும் உரிய இறுக்கமான பாலியல்நெறிகள் இல்லை. இங்கே பாலியல் ஒடுக்குமுறை பற்றியெல்லாம் பேசுபவர்கள் பெரும்பாலும் உயர்சாதியினரின் பாலியல்சூழலை மட்டுமே அறிந்திருக்கிறார்கள். பெரும்பாலான அடித்தள – உழைக்கும் மக்கள் தங்களுக்குரிய பாலியல் சுதந்திரத்தை கொண்டிருக்கிறார்கள்.

இரண்டு, இங்கே பாலியல் நெறிகள் என்பவை குடும்பநெறிகள், குலநெறிகள்தானே ஒழிய ஒவ்வொரு தனிமனிதரும் உணரும் அகச்சிக்கல்களாக அவை இல்லை. ஏனென்றால் இங்கே மதம் அப்படி எந்த ஆழ்ந்த கட்டுப்பாட்டையும் விதிக்கவில்லை. இந்துமதம் போன்ற நெகிழ்வான மதம் அப்படி எதையும் விதிக்கவும் முடியாது. ஆகவே குலநெறிகள், குடும்பநெறிகள் மாறும்போது எந்த சிக்கலுமில்லாமல் இன்னொரு ஒழுக்கமுறைக்குள் மக்கள் வந்துசேர்வதைக் காணலாம். சென்ற பத்தாண்டுகளில் விவாகரத்து- மறுமணம் ஆகியவை எத்தனை இயல்பாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன என்பதை பார்த்தால் இது தெரியும்

ஆகவே எங்கோ உள்ள சிக்கலை இங்கே கொண்டுவந்து கடைபரப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்பதே இதைப்பற்றிய என் புரிதல். சிக்கல்கள் இருப்பது இதை எழுதுபவர்களின் உள்ளத்தில்தான். சமீபத்தில் பேசிக்கொண்டிருக்கையில் ஒரு நண்பர் சொன்னார். ஓர் இளம் எழுத்தாளர், பாலியலை நிறையவே எழுதுபவர், ஆலயச் சிற்பங்களை பார்த்துக்கொண்டிருந்தார். பாலியல்சிற்பங்களைப் பார்க்கையில் எல்லாம் வெடித்துச் சிரித்தார், ஆபாசமான கருத்துக்களைச் சொன்னார். அப்படியென்றால் சிக்கல் இருப்பது எவரிடம்? அவர் எழுதுவது தேடலை அல்ல, அவருடைய நோய்க்கூறை

அமெரிக்காவின் அருங்காட்சியகம் ஒன்றில் பான் என்னும் கிரேக்க தெய்வம் [பாதி ஆட்டு உடல்கொண்டது] தேவதை ஒன்றை வல்லுறவுகொள்ளும் சலவைக்கல் சிலை இருந்தது. ஆனால் தட்டிவைத்து மறைக்கப்பட்ட ஒரு வளைப்புக்குள் அதை மட்டும் தனியாக வைத்திருந்தார்கள். அதைப்பற்றி பேசியபோது நண்பர் சொன்னார். அமெரிக்க அருங்காட்சியகம் ஒன்றின் முகப்பில் ஒரு இந்திய மோகினி சிலை இருந்தது. அது ஆபாசமாக உள்ளது, தனியாக பிரித்துவைக்கவேண்டும் என்று மக்களிடமிருந்து கோரிக்கை வந்தது என்று

அச்சூழலை நோக்கிப் பேசும் இலக்கியங்களின் இலக்கு வேறு, அவை உருவாக்கும் விளைவும் வேறு. இந்தியச்சூழலில் அவை எந்த ஆழ்ந்த தத்துவ அடித்தளத்தையும் சென்று தொடுவதில்லை. ஒரு மெல்லிய கிளர்ச்சியை அளித்து, வாசிக்க ஆரம்பித்திருக்கும் பையன்களுக்கு கிளுகிளுப்பூட்டி நின்றுவிடுகின்றன.

ஒர் எழுத்தாளனுக்கு மெய்யாகவே மேலதிகமாக கேள்விகள் இருந்து, கண்டடைதல்கள் இருந்தால் அவன் பாலியலை எந்த எல்லைக்கு வேண்டுமென்றாலும் எழுதலாம். கடைசியில் நீ கொண்டுவந்ததுதான் என்ன என்பதுதான் இலக்கியத்தில் என்றுமுள்ள கேள்வி

greek.jpg

இரண்டாவது புலம், கலையொருமை. ஓவியம் பார்ப்பவர்களுக்கு தெரியும், சிவப்பு நீலம் கருமை ஆகிய மூன்று வண்ணங்களும் கடுமையானவை. ஓவியர்கள் மிகுந்த கவனத்துடன் மட்டுமே அவற்றை கையாள்வார்கள். அவை திரைச்சீலையிலிருந்து எழுந்து நிற்பவை. பிறவண்ணங்களை மறைப்பவை

காமச்சித்தரிப்பு, அருவருப்புச் சித்தரிப்பு, வன்முறைச் சித்தரிப்பு ஆகியவை கடும்வண்ணங்கள். காமம் உடல்சார்ந்ததாக ஆகும்போது அது மிக எளிதில் அருவருப்பு சார்ந்ததாக மாறக்கூடும். கலைஞர்கள் இம்மூன்றையும் சார்ந்து கட்டுப்பாட்டுடன் செயல்படுவது இதனால்தான்.

இவை வாழ்க்கையின் கூறுகள். இவை இல்லாமல் கலை இல்லை. ஆனால் இவை அந்த ஆசிரியனின் கலைசார்ந்த நோக்கங்களை மறைக்கக் கூடும். ஆகவே அவன் அவற்றின் அளவையும் தீவிரத்தையும் கட்டுப்படுத்துகிறான்

ஓர் எழுத்தாளனின் தேடலும் கண்டடைதலும் காமம் சார்ந்தவை மட்டும் என்றால் அவன் அதை தன் தேடலின் எல்லைவரை கொண்டுசெல்லலாம். அருவருப்பு வன்முறை என்றாலும் அவ்வாறே. உதாரணமாக, ஏழாம்உலகம் அருவருப்பு ஓங்கிய நாவல். ஒருவேளை தமிழிலேயே அவ்வுணர்ச்சி மிகுந்துள்ள ஆக்கம் அதுதான். ஏனென்றால் அந்நாவலின் தேடல் இருப்பதே அந்த தளத்தில்தான்.

அந்த அருவருப்பு விஷ்ணுபுரத்திலும் வெண்முரசிலும் உண்டு. ஆனால் அவற்றின் தேடலும் கண்டடைதலும் வேறு தளத்தில் நிகழ்கின்றன. அவற்றை மறைக்காதபடி, திசைதிருப்பாதபடி, அந்த புனைவுப்பரப்பில் எவ்வளவு தேவையோ அவ்வளவு மட்டுமே அது பயன்படுத்தப்பட்டுள்ளது.

என் எழுத்தைப் படிப்பவர்களுக்குத் தெரியும், என் கேள்விகளும் கண்டடைதல்களும் காமம் சார்ந்தவை அல்ல. என் வாழ்க்கை அவ்வாறு அமைந்தது. இளமையிலேயே சந்திக்கநேர்ந்த சாவுகள் வழியாக மானுட இருப்பின் அடிப்படைகளை நோக்கி சென்றவன். அதற்காக வீடுவிட்டு கிளம்பியவன். நான் எழுதுவது அதையே

அந்த உசாவலை என்னுள் மட்டும் நிகழ்த்திக்கொள்ளாமல் என்னுள் இருந்து வெளியே விரிந்திருக்கும் வரலாற்றை, பண்பாட்டை, மதத்தை, மானுடவாழ்க்கைப்பெருக்கை நோக்கி விரித்துக்கொள்கிறேன். அதுதான் என் இலக்கு. அதில் ஆர்வமில்லாத வாசகர்கள் என் எழுத்துக்களை வாசிக்கக்கூடாது என்பதே என் கோரிக்கை. அது உங்களுக்கானது அல்ல.

என்றும் காமமோ வன்முறையோ என்னை திடுக்கிடச் செய்ததில்லை. இங்கே எந்தத் தமிழ் எழுத்தாளரும் காணாத அளவுக்கு கட்டற்ற காமத்தை, வன்முறையை நான் என் அலைதல்களில் கண்டிருக்கிறேன். அவற்றை இங்கே விரிந்திருக்கும் மானுடவாழ்க்கையின் இயல்பான பக்கங்களாக மட்டுமே நான் பார்க்கிறேன்.

இன்று நினைவுகூர்கிறேன். திருவண்ணாமலையில் ஒருமுறை அறுபதுவயதான ஒரு விபச்சாரிப்பெண்ணை பத்து பையன்கள், அனைவருக்குமே பதினெட்டுக்குள்தான் வயது, மாறிமாறி பாலுறவுகொள்வதை ஒரு பழைய மண்டபத்தின் படிக்கட்டின்மேல் இருந்து பார்த்துக்கொண்டிருந்தேன். நிலவு நேரம். பாலுறவுமீறல்களின் எல்லா நிலைகளும் நிகழ்ந்தன. எனக்கு ஒரு துளிகூட அதிர்ச்சி எழவில்லை. என் வயது இருபத்திரண்டுதான் அப்போது. அதை இப்போது எழுதும்போது மட்டுமே நினைவுகூர்கிறேன்.  ‘ஆமாம், அவ்வளவுதான், அதற்கென்ன?’ என்பதே அன்றும் இன்றும் என் எண்ணம்.

ஆனால் அன்றும் இன்றும் சாமியார்கள் என்னை திகைப்படையச் செய்கிறார்கள். ஒருவகை உறவும் இன்றி, அடுத்தவேளை உணவுக்கான எண்ணமே இன்றி வாழ்பவர்கள் அவர்கள். இமைய மலைக்குகைகளில் தன்னந்தனியாக கடுங்குளிரில் வாழ்பவர்கள், துணியில்லாமல் பல்லாயிரம் மானுடர் நடுவே இயல்பாக உலவும் அகோரிகள், நாளையும் நேற்றுமில்லாதவர்களே என்னை ஈர்க்கிறார்கள்

ஹண்டர் சமவெளியில் இமையமலையை நடந்தே கடக்கும் அமெரிக்க தம்பதிகளைப் பார்த்தேன். தோளில் பையுடன் கிளம்பி இந்தியாவழியாக உலகைச் சுற்றும் ஹிப்பி ஒருவரை பலிதானாவில் கண்டேன். அவர்களே நான் அறியவிரும்புபவர்கள். மானுடனுக்கு இங்குள்ள உறவுகளுடன் உள்ள தொடர்பு என்ன, இந்த ஒட்டுமொத்த மானுடப்பண்பாட்டில் ஒரு தனிமனிதன் பெறுவதும் அளிப்பதும் என்ன, எங்கே அவன் அதன் பகுதியாக இருக்கிறான், எங்கே உதிர்கிறான்?

நான் எழுதுவது, என் வாசகர்களைக் கொண்டுசெல்ல விரும்புவது அந்த வினாக்களை, விடைகளை நோக்கித்தான். அல்லது சிலசமயம் நானே சென்றடையும் விடைகளில்லாத திகைப்பை. அதன்பொருட்டு நான் உருவாக்கும் புனைவுப்பரப்பில் சித்தரிக்கப்படும் வாழ்க்கைக்குள் எந்த அளவுக்கு வேண்டுமோ அந்த அளவுக்கு காமமும் வன்முறையும் அருவருப்பும் இருக்கும் . அவை மையத்தை ஒருபோதும் மறைக்க அனுமதிக்க மாட்டேன்

என் படைப்புகளில் காமம் உண்டு, ஆனால் அதன்பொருட்டு எவரும் என்னை வாசிக்க வருவதில்லை. அப்படி எவராவது வந்தால்கூட என் வாசகர்களே ‘தம்பி உங்க ஏரியா இது  இல்லை” என்று சொல்லிவிடுவார்கள். தமிழினி புத்தகக் கடையில் கொற்றவை நாவலை எடுத்து பில்போடக் கொண்டுவந்த ஒருவரிடமிருந்து அதை வாங்கி அப்பால் வைத்துவிட்டு “நீங்க எதுக்கு தம்பி இதெல்லாம் படிக்கிறீங்க? நீங்க வாசிக்கவேண்டிய புக்கு வேறல்ல” என்று சொன்ன வசந்தகுமாரை நான் கண்டிருக்கிறேன்.

நான் காமத்தில் எழுதவிரும்புவது மனித உடல் அதில் என்னவாகிறது என்று அல்ல. பலர் சொல்லிக்கொண்டிருப்பதுபோல மனிதக் காமம் உடல்சார்ண்டதும் அல்ல. மனிதன் அதை கடந்துவந்து பல நூற்றாண்டுகள் ஆகின்றன. மனித உடல் ஒரு குறியீடு, மண்ணிலுள்ள அனைத்துமே மானுட உடலின் குறியீடுகளும்கூட. பலநூற்றாண்டுக்கால கலை, இலக்கியம், தொன்மங்கள் கலந்து மானுட உடல் அவன் உள்ளத்தின் வடிவை அடைந்துவிட்டிருக்கிறது. மானுடக் காமம் என்பது அவன் அகத்தில் நிகழ்வதுதான். உடலில் நிகழ்வது மிகமிகமிகக் குறைவே. உள்ளம் செல்லும் தொலைவே எழுத்தாளனின் அறைகூவல். உடலை வர்ணித்துக்கொண்டிருப்பவனுக்கு இன்னமும் இலக்கியம் வசப்படவில்லை.

உள்ளத்தின் வீச்சைச் சொல்ல உடலை குறியீடாக ஆக்கலாம். மேலும் மேலும் நுட்பமாக ஆக்கலாம். அவ்வளவுதான் உடலின் எல்லை. அதற்கு அப்பால் எவர் உடலை எழுதினாலும் அது ஒன்றுபோலத்தான் இருக்கும். ஏனென்றால் ஒரு மானுட உடலுக்கும் இன்னொன்றுக்கும் வேறுபாடு ஏதுமில்லை. வேறுபாட்டை உருவாக்குவது உள்ளம். உடலை எழுதுவதன் மிகப்பெரிய சிக்கல் அது உள்ளத்தை எழுதுவதற்கான மிகப்பெரிய தடையாக ஆகிவிடும் என்பதே. இதை ஹென்றிமில்லர் போன்ற பெரிய படைப்பாளிகளிடமே காணமுடியும்.

அதற்கு அப்பாலும் ஒரு புதியமேதை வந்து எல்லைகளை கடந்துசெல்லக்கூடும் என நான் அறிவேன். ஆனால் என் தேடலும் இலக்கும் மானுடன் தான் என உணரும் ஒன்றைச்சார்ந்து மட்டுமே. ஆகவே எனக்கு உடற்சித்தரிப்புகளால் பெரிய பயன் ஏதுமில்லை

ஜெ

 

https://www.jeyamohan.in/127773#.Xdp_cC-nxR5

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.