Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புத்தாக்க ஆய்வரங்கு 2018: மனிதர்களைத் தேடி அலைதல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புத்தாக்க ஆய்வரங்கு 2018: மனிதர்களைத் தேடி அலைதல்

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2018 ஒக்டோபர் 18 வியாழக்கிழமை, மு.ப. 02:29Comments - 0

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, உலகம் பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்குகிறது.  
ஒருபுறம் புவிவெப்பமடைதலின் தாக்கங்களை, எல்லோரும் உணர்கிறோம். இன்னொருபுறம், நான்காவது தொழிற்புரட்சி பற்றிய நம்பிக்கைகள், புதிய சவால்களை உருவாக்கியுள்ளன.  

இவையிரண்டும், புத்தாக்கத்தின் தேவையை முன்னிறுத்துகின்ற அதேவேளை, புத்தாக்கம் எல்லாப் பிரச்சினைகளையும் தீர்த்துவிடும் சர்வரோக நிவாரணி அல்ல என்பதும், உணரப்பட வேண்டும்.   

ஏனெனில், இயற்கையுடன் அபாயகரமான விளையாட்டொன்றில் மனிதகுலம் இறங்கியுள்ளது. அதன் விளைவுகளை, நாம் எல்லோரும் அனுபவித்து வருகிறோம்.   

இயற்கை திருப்பித் தாக்குகிறது. இப்போது, இரண்டு கேள்விகள் எழுகின்றன. நாம், எம்மைத் திருத்திக் கொள்ள வேண்டுமா?  

 அல்லது, புத்தாக்கங்களின் மூலம், எம்மால் இயற்கையின் சவால்களுக்கும் இன்னும் பல சவால்களுக்கும் முகங்கொடுக்க இயலுமா?   

கடந்த வாரம், நோர்வேயின் பெர்கன் நகரில் சர்வதேச பிராந்திய புத்தாக்கக் கொள்கை மாநாடு 2018 (Regional Innovation Policies Conference) இல் பங்குபற்றும் வாய்ப்புக் கிடைத்தது.   

image_87300a0dad.jpg

இம்மாநாட்டின், இவ்வாண்டுக்கான தொனிப்பொருள் ‘பொறுப்புமிக்க புத்தாக்கமும் பிராந்திய அபிவிருத்தியும்: ஆய்வுப்புலத்தை விரித்தல் (Responsible Innovation and Regional Development, Expanding the research agenda) என்பதாகும்.  

உலகின் மாற்றங்கள், புத்தாக்கத்தின் திசைவழிகள், பொறுப்புமிக்க புத்தாக்கம் உள்ளிட்ட பல விடயங்கள், இதில் கலந்துரையாடப்பட்டன. கல்விப்புலத்தின் தளத்தில், புத்தாக்கம் தொடர்பான விமர்சனக் கண்ணோட்டமும் எதிர்காலச் சந்ததியினர் வாழக்கூடிய மகிழ்ச்சியான பகுதியாக உலகை எப்படி மாற்றுவது உள்ளிட்ட கவலைகளும் முன்னெடுப்புகளும் இந்த இருநாள் மாநாட்டின் பேசுபொருட்களாக இருந்தன. அவ்வகையில், உலகின் ஏதோ ஒரு மூலையில், எதிர்காலம் குறித்த அக்கறையுடன், சிலர் கூடிய ஒரு நிகழ்வாக, இந்த மாநாட்டைக் கொள்ளவியலும்.   

புத்தாக்கத்தின் புதிய தளம்: மாறும் காட்சிகள்   

இம்மாநாட்டின் ஆரம்ப ஆய்வுரையை, பேராசிரியர் அன்ரீயஸ் ரொட்ரீகோ -போசே என்பவர் நிகழ்த்தினார். அவர், ‘மாறும் புத்தாக்கத்தின் தளங்கள்’ என்கிற தலைப்பில் உரையாற்றினார்.   

பாரம்பரியமாக, ஆய்வின் தளங்களாக முன்னிலையில் இருந்த அமெரிக்கா, ஐரோப்பிய பல்கலைக்கழகங்கள், மெதுமெதுவாக அந்நிலையை இழந்து வருவதை, அவர் சுட்டிக்காட்டினார். 

அதேவேளை, அறிவுத்தளத்தில் சீனாவின் அபரிமிதமான வளர்ச்சி, முக்கியமானது எனவும் அதைப் புறக்கணிக்க இயலாதபடி, புத்தாக்கத்தில் அவர்கள் ஏராளமான சாதனைகளைச் செய்துள்ளார்கள் என்பதையும் சுட்டிக் காட்டினார்.   

கல்வி மெதுமெதுவாகப் பல தளங்களில், தனியார் மயமாக்கப்படுவதும் பொருளாதார நெருக்கடியும் மேற்குலகு எதிர்நோக்கும் சவால்கள் என்றும், இதன் விளைவால், புத்தாக்கத்துக்கான வாய்ப்புகள் குறைவதாகக் குறிப்பிட்டார்.   

ஒருபுறம், கல்வியின் தனியார்மயமாக்கல் என்பது, கல்வியின் நோக்கங்களை மீள்வரையறை செய்கிறது. கல்வி என்பது, அறிவை அறிவதற்கும், புதியதை நோக்கி நகர்வதற்குமானதாக என்று இருந்த காலகட்டம் தாண்டி, இப்போது வேலையை மய்யப்படுத்தியதாக மாறிவிட்டது. வேலையை நோக்கிய கல்வியாக, கல்வி மாற்றப்பட்டுள்ளது.  

இம்மாற்றம், கடந்த இரண்டு தசாப்தகாலத்தில் மேற்குலகில் முக்கியமானதாக உள்ளது. அதேவேளை, கலாநிதிப் பட்ட ஆய்வு, முதலான மேற்படிப்புகளில் மேற்கத்தேய மாணவர்களின் ஆர்வம் தொடர்ச்சியாகக் குறைந்து வருகிறது.   

மறுபுறம், மேற்குலக நாடுகளின் அரசுகள், ஆய்வுகளுக்கு ஒதுக்கும் நிதியின் அளவைத் தொடர்ச்சியாகக் குறைத்துக் கொண்டே வந்துள்ளன. எனவே, ஆய்வுக்கான வாய்ப்புகள் தொடர்ச்சியாகக் குறைவடைகின்றன.   

இது, புத்தாக்கத்தைக் குறைத்துள்ளது; தனியார் நிறுவனங்களும் புதிய ஆய்வுகளுக்கான நிதியைத் தொடர்ச்சியாகக் குறைத்து வந்துள்ளார்கள். அவர்கள், தங்கள் இலாபம் எக்காலத்திலும் குறையக்கூடாது என்பதில் காட்டுகின்ற கவனத்தை, ஆய்விலும் புத்தாக்கத்திலும் காட்டுவதில்லை என்பதை பேராசிரியர் அன்ரீயஸ் ரொட்ரீகோ-போசே சுட்டிக்காட்டினார்.   

கடந்த ஒரு தசாப்த காலத்தில், பொருட்களையும் எண்ணங்களையும் கண்டுபிடிப்புகளையும் பதிப்புரிமை செய்துள்ள நாடுகளை, அவற்றின் எண்ணிக்கையோடு கோடிட்டுக் காட்டிய அவர், சீனாவிலிருந்து கண்டுபிடிப்புகளுக்காகப் பெறப்பட்டுள்ள பதிப்புரிமைகளின் எண்ணிக்கை, பத்து மடங்காக அதிகரித்துள்ள அதேவேளை, ஐரோப்பாவிலிருந்து பெறப்பட்ட பதிப்புரிமைகளின் எண்ணிக்கை, வீழ்ச்சி அடைந்திருப்பதையும் தரவுகள் காட்டுவதாகச் சொன்னார்.   

ஆய்வின் மய்யம், மெதுமெதுவாக மேற்குலகை நோக்கி நகர்ந்து, இப்போது கீழ்த்திசை நோக்கிச் செல்வதை, அவரது உரை, ஆதாரங்களுடன் சுட்டிக் காட்டியது.   

அவரது உரை, எழுப்பிய முக்கிய கேள்வி, அடுத்த பத்தாண்டுகளுக்குப் பிறகு, அறிவுற்பத்தியின் மய்யமாகவும் புத்தாக்கத்தின் மய்யமாகவும் விளங்கப் போவது எது?   

தொழிற்புரட்சி 4.0: எல்லாம் தரவு மயம்   

இவ்வாய்வு மாநாட்டில், கலந்துரையாடப்பட்ட இன்னொரு விடயம், புத்தாக்கங்களுக்கும் தொழிற்றுறைகளுக்கும் உள்ள உறவும் மாறிவருகின்ற காலச்சூழலில் புத்தாக்கத்தின் எதிர்காலம் பற்றியதுமாகும்.   

குறிப்பாக, இப்போதைய தொழில்சார் உலகு, நான்காவது தொழிற்புரட்சிக் காலகட்டத்துக்குள் நுழைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.   

இப்பின்னணியில், புத்தாக்கம் எவ்வகையான பங்களிப்பை ஆற்ற வேண்டும் என்பது தொடர்பான விடயங்கள், இங்கு விவாதிக்கப்பட்டன. அவை பற்றிப் பார்க்க முன்னர், நான்காவது தொழிற்புரட்சி என்றால் என்ன, என்பது பற்றிச் சுருக்கமாக நோக்கலாம்.   

தொழிற்புரட்சி என முதலில் அழைக்கப்பட்டது, ஐரோப்பாவின் மறுமலர்ச்சிக் காலத்தில் ஏற்பட்ட விஞ்ஞான வளர்ச்சியை ஆகும். 1780இல் இருந்து 1840 வரையிலான காலப் பகுதியானது, மாறிய சமூகப் பொருளாதார அரசியல் சூழலின் காரணமாக, விஞ்ஞானத் துறையில் ஏராளமான புதிய கண்டுபிடிப்புகளை நோக்கி உந்தித்தள்ளியது.   

இக்காலத்தில் ஏற்பட்ட விஞ்ஞான ரீதியான முன்னேற்றமானது, கைவினைப் பட்டறைகளின் இடத்தை, ஒருங்கிணைந்த பெரிய ஆலைகள் பிடித்தன. நீராவியின் ஆற்றல் தொழிற்றுறையில் மலைக்கத்தக்க வளர்ச்சியைத் தூண்டியது.   

நீராவி இயந்திரங்கள், சிறு தொழில்களாக இருந்த உற்பத்தியை, இயந்திரங்களின் உதவிகொண்டு பாரியளவிலானவையாக மாற்றின.   

விவசாயத்தை நம்பியிருந்த பொருளாதாரங்கள் கைத்தொழில் மயமாகத் தொடங்கின. முதலாம் தொழிற்புரட்சி என, இப்போது அழைக்கப்படும் இது, மக்களின் அன்றாட வாழ்வில், மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், தாக்கம் செலுத்துவதாய் இருந்தது.   

இதைத் தொடர்ந்து, மின்சாரத்தின் வருகையும் தொழிற்றுறையில் அதன் பரந்துபட்ட பாவனையும் இரண்டாவது தொழிற்புரட்சிக்கு அடிப்படையாக அமைந்தன. 1870 முதல், முதலாம் உலகப்போர் வரையான காலப்பகுதி, இரண்டாம் தொழிற்புரட்சிக் காலகட்டம் என அழைக்கப்படுகிறது.   

இக்காலகட்டத்தில், தொழிற்றுறையில் ஏற்பட்ட நவீன வளர்ச்சியும் மிகப் பெருமளவில் உருக்கு சார் உற்பத்தித் தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டதும் இதில் முக்கியமானதாகும். 

அதேவேளை, பெரும் தொழிற்சாலைகளின் பொருத்தும் வரிசை, இயந்திரமயமானதும் இக்காலத்திலேயே நடந்தது. இதன்மூலம், தொழிற்சாலையின் செயற்பாடுகள், இலகுவாக ஒருங்கிணைக்கப்பட்டு வினைதிறனுடன் உற்பத்திகளை அதிகரித்தன.  

இரண்டாம் உலகப் போர், ஏற்படுத்திய மோசமான விளைவுகளிலிருந்து, உலகம் தன்னை மீட்டுக்கொள்ள, கால்நூற்றாண்டு காலம் தேவைப்பட்டது. அதன் பின்னரான அடுத்த இரண்டு தசாப்த காலங்கள், மூன்றாம் தொழிற்புரட்சிக் காலகட்டம் எனப்படுகிறது. 1970களில் ஆய்வுக்கட்டத்தில் இருந்த மின்னணுவியல் தொழில்நுட்பம், 1980களில் பரவலான பாவனைக்கு வந்ததன் மூலம், மூன்றாம் தொழிற்புரட்சி நிகழ்ந்தது.  

 இந்தக் காலகட்டத்தைத் தொடர்ந்து, தொழிற்றுறை அதிவேகமாக கணினி மயமாகியது. உலகை ஆளும் ஒரு கருவியாக, கணினி மாறியது. இப்போது வரை, உலகில் செல்வாக்குச் செலுத்தும் ஒன்றாக, கணினி இருந்து வருகிறது.   

இதைத் தொடர்ந்து, இப்போதைய காலப்பகுதியை நான்காம் தொழிற்புரட்சியின் ஆரம்பக் கட்டம் என்று அழைக்கிறார்கள். அதாவது, மூன்றாவது தொழிற்புரட்சியில் முன்னிலைக்கு வந்த கணினி மய்யச் செயற்பாடுகள், இப்போது அடுத்த கட்டத்தை அடைந்துள்ளன. இதை உந்தித் தள்ளிய பெருமை, இணையத்தைச் சாரும்.   

இணையத்தின் பரவலால், உற்பத்தியாகும் மின் தரவுகளை மய்யப்படுத்தியதே நான்காவது தொழிற்புரட்சிக் காலகட்டமாகும். இப்போக்கைத் தனித்து அடையாளம் காட்டுவது, இணையத்தின் பாவனையால் உருவாகும் மின்தரவுகளை எப்படிப் பயன்படுத்துவது, அதை எப்படி விற்பனைக்குரியதாக்குவது, எப்படி விற்பனை செய்வது என்பது பற்றிய சிந்தனையாகும்.   

மேம்போக்காகக் பார்க்கும் போது, இத்தரவுகளால் அப்படி என்ன செய்துவிட முடியும் என நீங்கள் யோசிக்கக் கூடும். இவ்விடத்தில், இரண்டு விடயங்களைச் சொல்ல விரும்புகிறேன்.   

முதலாவது, இன்று கணினித் துறையிலும், தொழிற்சாலை மய்ய உற்பத்தித் துறையிலும் ஏற்பட்டுள்ள வளர்ச்சிகள் அனைத்தும், ஏதோ ஒரு வழியில் இணையத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. இணையத் தொழில்நுட்பத்தின் மூலம், மய்யப்படுத்தப்பட்ட வகையிலேயே, அவற்றின் அன்றாடச் செயற்பாடுகள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. இது பொருட்களின் இணையம் (Internet of Things) என அழைக்கப்படுகிறது. இது, பல்வேறு வகைகளில் மின்தரவுகளை உற்பத்தி செய்கிறது.   

இரண்டாவது, இப்போது எல்லாமே தரவுமயமாகி வருகிறது. உதாரணமாக, தொலைபேசியின் அழைப்புகளை எடுத்துக் கொள்ளுங்கள். நீண்ட காலமாக, நீங்கள் பேசும் கால அளவுக்கான கட்டணமே அறவிடப்பட்டு வந்தது. இன்று நிலை மாறிவிட்டது. குரல் அழைப்புகள் மெல்ல மெல்ல, மின் தரவுப் பொதிகளின் பரிமாற்றங்களாக மாறி வருகின்றன. வைபர், வட்ஸ்அப், ஐஏம்ஓ போன்ற குரல் அழைப்புக்குப் பயன்படுத்தபடும் செயலிகள் தரவை (data) அளவுகோலாக்கியுள்ளன. எனவே, இன்று நாம் தரவுகளின் உலகில் வாழ்கிறோம்.   

இந்த மாற்றம் தொலைபேசி அழைப்புகளுக்கு மட்டும் நிகழவில்லை. அனைத்திலும் நிகழ்கிறது. இப்போது, தொலைகாட்சிப் பெட்டி, வீடுகளில் உள்ள மின்னணுவியல் சாதனங்கள் அனைத்தும் திறன் சாதனங்களாக (smart devices) மாறுகின்றன. இவையனைத்தும், இணையத்தின் மூலம் இயக்கப்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ள அதேவேளை, இவற்றின் அடிப்படையாக இணையம் இருக்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சி அத்திசையிலேயே செல்கிறது.   

இவ்விரண்டு விடயங்களும் தரவுகளின் முக்கியத்துவத்தைச் சொல்கின்றன. அதேவேளை, உலகம் எவ்வாறு ஆபத்தான திசைவழியில் சென்றுகொண்டிருக்கிறது என்பதையும் இங்கு சொல்லியாக வேண்டும்.   

தொழில்நுட்ப வளர்ச்சி யுகத்தின் முதலாளித்துவம் என்பது, தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள், படைப்புகளின் கீழ், வேர்பிடித்து நிற்கிற, சந்தை முதலாளித்துவத்தின் இன்னொரு வடிவமாகவே உருப்பெறுகிறது.  

 தற்போது இது ஆரம்பப் படிநிலையிலேயே இருக்கிறது. இன்னும் பத்தாண்டுகளில் உலகை ஆளும், நவீன முதலாளித்துவ ஏகாதிபத்திய வடிவமாக இது உருமாறும். அப்போது, சமூகத்தின் படைப்பாக்கத்திறனும் செறிந்த அறிவு வளர்ச்சியுமே முதலாளித்துவத்தின் அடிப்படையான மூலதனமாக இருக்கும். இது வேறுபட்ட முதலாளித்துவக் கட்டமாகும்.  

தொழில்சார்ந்த முதலாளித்துவத்தின் அடிப்படை அம்சமாக மூலப்பொருட்கள், மூலதனம், தொழிற்சாலைகள், வேலைசெய்யும் தொழிலாளியின் உழைப்பு என்பன இருந்தன. அவற்றால் பயன்படுத்தப்பட்ட மூலப்பொருட்கள் அதிக மதிப்புவாய்ந்தவையாக இருந்தன.   

அந்தத் தொழிற்சாலையில் நடக்கும் உற்பத்தி, அதற்காக செலுத்தப்படும் உழைப்பு, அதன் விளைவாக மிகப்பெருமளவில் கிடைக்கும் இலாபம் என்பதே அடிப்படையாக இருந்தன.  

ஆனால், தொழில்நுட்ப வளர்ச்சி யுகத்தில் வளர்ந்து வரும் முதலாளித்துவத்தின் சகாப்தத்தில், இந்த உற்பத்திச் சாதனங்களெல்லாம் இரண்டாமிடத்துக்குச்  சென்றுவிட்டன.   

இந்தப் புதிய தொழில்நுட்பங்களும் அறிவுச் சொத்துகளும் முழுக்க முழுக்க ஏகபோக பல்தேசியக் கம்பெனிகளின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. 

புதிய தொழில்நுட்பங்களும் அவற்றின் முழுமையான பலன்களும் ஒட்டு மொத்த மக்களையும் சென்றடையவிடாமல், அவற்றுக்கு மிக அதிகமான விலையை நிர்ணயிக்கும் அதிகாரத்தையும் இந்த ஏகபோகக் கம்பெனிகளே பெற்றிருக்கின்றன.  

சமூகத்தின் படைப்பாக்கத் திறன்,  அறிவு வளர்ச்சியின் விளைவாக ஏற்பட்ட புதிய தொழில்நுட்ப வளர்ச்சியின் பலன், அனைத்தும் முற்றிலும் ஒரு பொதுச் சொத்தே ஆகும். ஆனால், அதைத் தனது இலாபத்துக்காக முதலாளித்துவம் முற்றிலும் கைப்பற்றியுள்ளது.  

 மூன்றாவது தொழிற்புரட்சியின் தொடர்ச்சியாக, உருவாகும் நான்காவது தொழிற்புரட்சிக் காலகட்டம், இதையே செய்ய விளைகிறது. இங்கு கேள்வி யாதெனில், புத்தாக்கத்தில் ஈடுபடுவோர், இது குறித்து என்ன செய்யவிலும்.   

புத்தாக்கத்தின் திசைவழிகள்   

மாநாட்டின் இறுதி உரை, மேற்குறித்த கேள்விகளை ஆராய்ந்தது. நிறைவு ஆய்வுரையை ஆற்றிய பேராசிரியர் ஆர்ன்ட் புளொய்சான்ட், பொறுப்புமிக்க புத்தாக்கத்தின் தேவையை முன்னிறுத்தினார்.   

புத்தாக்கம் என்பது, வெறுமனே தொழிற்றுறைக்கு மட்டும் உரியதல்ல; மாறாக, அது மனித குலத்துக்கானதாக இருக்க வேண்டும். ‘புத்தாக்கத்தின் முப்பரிமாணத்தை ஆராய்வதும் பயன்படுத்துவதும்’ (Exploring and exploiting the trinity of innovation) என்ற தலைப்பில், அவரது உரை இருந்தது.   

தொழில்நுட்பம் (technology), அமைப்பாதல் (organisation), உரையாடல் (discourse) ஆகிய முப்பரிமாண நோக்கில், புத்தாக்கம் இருக்க வேண்டும் என்று அவர் வாதிட்டார்.   

தொழில்நுட்பம், எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வாக முடியாது. அத்தொழில்நுட்பத்துக்கு, உரையாடலொன்று அவசியம், அதுவே, அதனால் மக்களுக்கு விளைகின்ற பயனைச் சுட்டி நிற்கும். 

இறுதியில், அதை மக்களிடம் கொண்டு சேர்க்க, தொழில்நுட்பம் அமைப்பாக்கம் பெறல் வேண்டும். இவ்விடத்திலேயே, பொறுப்பு வாய்ந்த புத்தாக்கத்தின் தேவையை அவர் முன்னிறுத்திப் பேசினார். அவரது உரையில், அடிநாதமாக இருந்தவற்றை, பின்வருமாறு தொகுக்கவியலும்.   

இன்று, ஏகபோக பல்தேசியக் கம்பெனிகளின் நவீன இராஜ்யம் ஒட்டுமொத்த மனித சமூகத்தையும் இயற்கையையும் பூமியையும் தனது கொலனியாக மாற்றியிருக்கிறது. இதற்கான, பிரதான கருவியாகத் தொழில்நுட்பம் இருக்கிறது. அதன் உதவியோடு, மக்களிடையோன உரையாடலை, அதுவே கட்டமைக்கிறது. அதன் ஊடு, அரசு என்கிற கட்டமைப்பை, அது கட்டுப்படுத்துகிறது.  

 இதன் விளைவுகள் யாதெனில், இது மனித குலத்தின் விலை மதிக்க முடியாத படைப்பாக்கத் திறன்களை எல்லாம், இலாபம் சம்பாதிக்கிற பண்டங்களாக மாற்றியிருக்கிறது. 

நமது படைப்பாக்கத்திறன், நமது அறிவு, நமது கற்றுக் கொள்ளும் ஆர்வம் ஆகியவை, நம்மை மேம்படுத்திக் கொள்வதற்கான தகுதிகளாகக் கருதப்படுவதற்கு மாறாக, ஒவ்வொரு மனிதனையும் சக மனிதனிடமிருந்து, சமூகத்திடமிருந்து, இயற்கையிடமிருந்து தனிமைப்படுத்தி, வெறுமனே உற்பத்திப் பண்டங்களாக மாற்றியுள்ளது.   

மனித மாண்புகளை, இப்படி மலினப்படுத்தியிருப்பது என்பது, நிச்சயமாகத் தொழில்நுட்பம் சார்ந்தது அல்ல. ஆனால், இதற்குத் தொழில்நுட்பமும் புத்தாக்கங்களும் பங்களிக்கின்றன. இந்த ஆபத்தை, புத்தாக்கதில் ஈடுபடுவோர் உணர வேண்டும்.   

மனிதர்கள் தொழில்நுட்பங்களைத் தேடி அலைந்த காலம் போய், இன்று எல்லாத் தொழில்நுட்பங்களையும் கையில் வைத்துக் கொண்டு, மனிதர்களைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறோம்.  

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/புத்தாக்க-ஆய்வரங்கு-2018-மனிதர்களைத்-தேடி-அலைதல்/91-223803

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.