Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய பிரதமர் நியமனம்; அரசியலில் எதுவும் நடக்கும். எப்படியும் நடக்கும்!… கருணாகரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதிய பிரதமர் நியமனம்; அரசியலில் எதுவும் நடக்கும். எப்படியும் நடக்கும்!… கருணாகரன்.

அகரன்October 28, 2018
புதிய பிரதமர் நியமனம்;  அரசியலில் எதுவும் நடக்கும். எப்படியும் நடக்கும்!… கருணாகரன்.

மழை தூறிக்கொண்டிருந்த முன்னிரவில், இயக்கச்சியில் கடையொன்றின்  விறாந்தையில் நின்றபடி தேநீர் பருகிக் கொண்டிருந்தோம். எங்களுக்குப் பக்கத்தில் இன்னும் இரண்டுபேர் வெளி இருக்கையில் உட்கார்ந்திருந்தனர். இருந்தாற்போல ஒருவர் துடித்துப் பதைத்தபடி எழுந்து “மகிந்தவைப் பிரதமராக்கீட்டாங்கள்… இந்தா செய்தி வந்திருக்கு. படமும் போட்டிருக்கு…” என்றபடி கையிலிருந்த மொபைலைக் காட்டினார். முகமும் குரலும் பரபரத்துக் கிடந்தது.

இதை யார்தான் நம்புவார்கள்?

ஆனால், அவர் சொன்னது உண்மையே.

கடைக்காரர் தொலைக்காட்சியை இயக்கினார். நேரலையில் பதவியேற்புக் காட்சிகளும் அதைத் தொடர்ந்த நிகழ்வுகளும் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. கூட்டம் கூடியது. ஆளாளுக்கு வியப்பில் ஆழ்ந்து கிடந்தார்கள்.

“அரசியலில் எதுவும் நடக்கும். எப்படியும் நடக்கும்” என்பதற்கு இன்னொரு சாட்சிபூர்வமான உதாரணம் இந்தச் சம்பவம்.

26.10.2018 வெள்ளிக்கிழமை இரவு இலங்கையில் நடந்திருக்கும் புதிய பிரதமர் நியமனம், அண்மையில் ஏற்பட்ட இரண்டாவது அரசியல் ஆச்சரியம். முதலாவது ஆச்சரியம், மகிந்தவை விட்டு மைத்திரி ரணிலோடு கூட்டுச் சேர்ந்தது. இரண்டாவது ஆச்சரியம் ரணிலை விட்டு மீண்டும் மகிந்தவோடு சேர்ந்து கொண்டது.

முன்பு நடந்தது நல்லாட்சிக்கான மாற்றம் என்றார்கள். அப்படியென்றால் இது?

பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்கி விட்டு மகிந்த ராஜபக்ஸவிடம் அதை ஒப்படைத்திருக்கிறார் மைத்திரிபால சிறிசேன. இதன் மூலம் இதுவரையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஏற்படுத்திக் கொண்டிருந்த நெருக்கடியைப் போக்குவதற்கு மைத்திரிபால சிறிசேன முயற்சித்திருக்கிறார் எனலாம்.

இதை இன்னொரு விதமாகச் சொன்னால் 2014 இல் மகிந்தவுக்குச் செய்த பழிக்குப் பிராயச்சித்தம் தேடியிருக்கிறார் மைத்திரி. அப்போது கீழிறக்கப்பட்ட மகிந்த ராஜபக்ஸ இப்பொழுது மேலுயர்த்தப்பட்டிருக்கிறார். அப்பொழுது மேலுயர்த்தப்பட்ட ரணில் இப்போது கீழே வீழ்த்தப்பட்டிருக்கிறார்.

அரசியலில் எதுவும் நடக்கும் என்பது இதுதான்.

ஆனால், வெளியே அரசியல் நெருக்கடிகள் அதிகரித்துள்ளன.download-1.jpeg?resize=275%2C183

ஐக்கிய தேசியக் கட்சியினரும் ரணில் விக்கிரமசிங்கவும் இந்த விவகாரத்தை  இலகுவில் விட்டுவிட முடியாது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அலரிமாளிகையில் கூடி மந்திராலோசனையைச் செய்து கொண்டிருக்கிறார்கள். போதாக்குறைக்கு மேற்குலகப் பிரதானிகளை அழைத்து முறையிட்டுக் கொண்டிருக்கிறார் ரணில்.

ரணில் அரசோடு இணைந்திருந்த முஸ்லிம் காங்கிரஸ், றிசாத் பதியுதீன், தமிழ் முற்போக்கு முன்னணி போன்றவை அடுத்து என்ன செய்வது என்று தெரியாத நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளன. அவர்களும் தங்கள் தங்கள் ஆட்களோடு மந்திராலோசனை செய்து கொண்டிருக்கிறார்கள்.

இதேயளவுக்கு இல்லை என்றாலும் புதிய நெருக்கடியில் தாம் என்னவகையான பாத்திரத்தை வகிக்க முடியும்? என்னமாதிரியான முடிவுகளை எடுக்கலாம் என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் சிந்திக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

மகிந்த ராஜபக்ஸ – மைத்திரி தரப்பும் புதிய மாற்றத்தை பலப்படுத்துவதற்காக முடிந்தளவுக்கு முயற்சிக்கின்றது. இது தொடர்பாக மக்களுக்கு விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று கொழும்பிலுள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் நடத்தப்பட்டிருக்கிறது.

ஆனால், நடப்பு நிலவரப்படி தமிழ், முஸ்லிம், மலையகக் கட்சிகளின் தயவைப் பெற்றால்தான் எந்தத் தரப்பும் ஆட்சியை அமைக்க முடியும். ஏனென்றால், ஐ.தே.கவிடம் தற்போது 105 ஆசனங்கள் உண்டு. மைத்திரி – மகிந்த தரப்பிடம் 95 ஆசனங்களே உள்ளன. இரண்டு தரப்பும் பெரும்பான்மையை நிரூபிப்பதற்குக் குறைந்தது 113 ஆசனங்களைத் தமது பக்கத்தில் வைத்திருக்க வேணும். இதற்கு தமிழ், மலையக, முஸ்லிம் தரப்புகள்தான் கைகொடுக்க வேணும்.

இந்த நிலையில் இந்தத் தரப்புகள் ஒரு முகப்பட்டுச் சரியான தீர்மானங்களை எடுத்தால் மிகப் பெரிய நன்மைகளைப் பெறலாம். சிங்கள அதிகார வர்க்கம் அல்லது ஆளும் தரப்பு நெருக்கடிக்குள்ளாகும்போதே சிறுபான்மைத் தேசிய இனங்கள் தமக்குரிய பலத்தைப் பெறக்கூடிய சூழலே இலங்கை நிலவரமாகும். இவ்வாறான சூழல் எப்போதும் ஏற்படாது. ஏற்படும் சந்தர்ப்பங்களைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வதே புத்திபூர்வமானது. அதுவே வெற்றிகரமான அரசியலாகும்.

இதற்குக் கட்சி நலன், சொந்த நலன் என்பவற்றைப் பற்றிப் பொருட்படுத்தாமல் சனங்களை முதன்மைப்படுத்தித் தீர்மானங்களை எடுக்க வேணும். அரசியலில் பெருநன்மைகளை – பொது நன்மைகளைக் குறித்து தீர்மானமெடுப்பவர்களே அரசியல் தலைவர்கள். மற்றவர்கள் கட்சித் தலைவர்கள் என்பதற்கு அப்பால் நகர முடியாதவர்கள். இதனால்தான் பலரும் அந்தந்தக் கட்சி அரசியலோடு காலாவதியாகிப் போய் விடுகிறார்கள்.

இது ஒரு புறமிருக்க, இந்த அரசியல் அதிரடியைக் குறித்து பல தரப்பிலும் பல்வேறு வகையான வாதப்பிரதிவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

ரணில் அரசாங்கம் தன்னுடைய செல்வாக்கை இழந்து கொண்டிருக்கும் நிலையில் மைத்திரியும் மகிந்த ராஜபக்ஸவும் எதற்காக அவசரப்பட்டனர்? என்று ஒருசாரர் கேட்கின்றனர்.

இன்னொரு தரப்பின் அவதானிப்பின்படி, மக்கள் செல்வாக்கில் உயர்ந்து கொண்டிருந்த மகிந்த ராஜபக்ஸவும் அவருடைய தரப்பும் சற்றுப் பொறுத்திருந்தால் பெரு வெற்றியைப் பெற்றிருக்க முடியும். இப்படிப் பின்கதவு அரசியலைச் செய்து நெருக்கடியை மடியில் வாங்கியிருக்கத் தேவையில்லை என்று சொல்லப்படுகிறது.

இது மக்கள் தீர்ப்புக்கு மாறான நடவடிக்கை என்பதும் அரசியல் நாகரீகத்துக்கு அப்பாலான செயல் என்றும் பலமான விமர்சனங்கள் உண்டு.

ஆனால், ரணில் அரசின் மந்தமான நடவடிக்கைகளும் தளம்பல் ஆட்சியும் விலைவாசி உயர்வுகளும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்த சூழலில் மகிந்தவின் தலைமையை வரவேற்றிருப்பவர்களும் உண்டு.

மகிந்த ராஜபக்ஸ பதவியேற்றதை வரவேற்று நாட்டின் அனைத்துப் பிரதேசங்களிலும் பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடப்பட்டுள்ளது. வடக்குக் கிழக்கிலும் பட்டாசு வெடிக்கப்பட்டது. ஆனாலும் வடக்குக் கிழக்கில் பெரிய அளவுக்கு மகிழ்ச்சியைக் காண முடியவில்லை.

மகிந்த ராஜபக்ஸவின் மீள் வருகை தமிழர்களில் பெரும்பாலானவர்களுக்கு விருப்பமற்றே இருக்கிறது. புலம்பெயர் சூழலிலும் ஒரு மெல்லிய பதற்றம் ஏற்பட்டுள்ளதை அங்கிருந்து பேசுவோரின் தொனியில் உணர முடிகிறது. ஆனாலும் நிலைமைகள் இதற்கு வெளியில் தன்போக்கில் நடந்துகொண்டேயிருக்கப்போகிறது. இதில் இடையீடு செய்யக் கூடிய அளவுக்குத் தமிழர்களின் அரசியல் இல்லை என்பது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியது.

“நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு அரசியல் சாசனத்தின் அடிப்படையில் சரியான தீர்வு காணப்படும்” என சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்திருக்கிறார்.

அரசியலமைப்புச் சாசனமோ பெரும்பான்மையை நிரூபிக்குமாறே இரண்டு தரப்பையும் கோரப்போகிறது. மற்றப்படி அது ரணில் விக்கிரமசிங்கவை பதவி நீக்கம் செய்ததையிட்டு எதுவும் சொல்லும் என்று எதிர்பார்க்க முடியாது. இதற்கு ஏற்றவாறு கணிக்கப்பட்டு சாதகமான நிலையில் பிரதம நீதியரசர் கடந்த மாதங்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டுள்ளதாக ஒரு தரப்பினர் கூறுகிறார்கள்.

இதேவேளை அரசியலமைப்பின் 19 திருத்தத்தின் 46 (2) சரத்தின்படி பிரதமரை நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை என்று சொல்லப்பட்டுள்ளது. ஜனாதிபதி பிரதமரை நியமிக்க முடியுமே தவிர நீக்க முடியாது. பதவியிலிருக்கும் பிரதமர் அதிலிருந்து சுயவிருப்பத்தில் விலகலாம். அல்லது மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார் என்ற அடிப்படையில் பதவி நீக்கப்படலாம். அல்லது சதி முயற்சிகளில் தொடர்புபட்டிருக்கிறார் என்ற வகையில் பதவிநீக்கம் செய்யப்படலாம். அல்லது பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலமாகப் பதவி நீக்கப்படலாம். இதுவே விதிமுறை.

ஆனால், இப்பொழுது நடந்திருப்பது அப்படியல்ல. பிரதமரை விலக்குவதற்கு  ஜனாதிபதி பாவித்த அஸ்திரம், 46 வது சரத்துக்கு அமைய கபினெட் உறுப்பினர்கள் 30 ஐ விட அதிகரிக்க முடியாது என்றும் குறித்த கபினெட் நடைமுறையில் இருக்கும் வரைதான் 46 (2) பிரதமரை நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வரையறை செய்துள்ளது.

தற்போதைய கபினெட் உறுப்பினர்களின் எண்ணிக்கை ‘இரண்டு கட்சிகளை’ கொண்ட தேசிய அரசாங்கம் என்பதை வரையறுத்து அதிகரிக்கப்பட்டது. இந்த இரு கட்சிகளில் ஒரு கட்சி தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகும் போது,  தேசிய அரசாங்கம் கலைகிறது. அதையொத்து (அதிகரிக்கப்பட்ட) கபினெட்டும் கலைகிறது.

UPFA, தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகுகிறது என்று தனது செயலாளர் ஊடாக முதலில் அறிக்கைவிடுத்தது. தேசிய அரசாங்கம் கலைக்கப்படும் என்றால் நடைமுறையில் இருந்த கபினெட்டும் தானாகக் கலைந்துவிடும்.

கபினெட் கலைந்தவுடன் அரசியமைப்பின் 42(4) இற்கு அமைய பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் என்று கருதும் ஒரு பாராளுமன்ற உறுப்பினரை பிரதமராக நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வந்துவிடுகிறது.

இந்தத் துரும்பையே ஜனாதிபதி பாவித்துள்ளார்.

இதையே இந்தப் பத்தியை எழுதிக் கொண்டிருக்கும்போது (27.10.2018 பி.ப.2.30 அளவில்) இலங்கை மன்றக்கல்லூரியில் நடக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் ஜீ.எல். பீரிஸ் விளக்கிக் கொண்டிருக்கிறார்.

இதற்கெல்லாம் அடுத்து வரும் நாட்களில் நடக்கப்போகும் நடவடிக்கைகளே  பதிலாக இருக்கும்.

இந்தச் சூழலில் தீவிரமாகச் செயற்பட வேண்டியவை தமிழ், முஸ்லிம், மலையகக் கட்சிகளே.

இதை இவை உணர்ந்து கொள்ளவில்லை என்றால் பிரித்தாளும் தந்திரத்துக்குத் தாமும் பலியாகித் தமது மக்களையும் பலி கொடுக்கவே நேரும்.images-2.jpeg?resize=300%2C102

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தன் இதில் பிரதான பாத்திரமேற்பது அவசியமானது. அவரின் வசம் 16 உறுப்பினர்கள் உள்ளனர். தன்னுடைய எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பற்றியும் பழைய கூட்டாளி ரணிலைப்பற்றியும் சிந்திக்காமல் சனங்களைப் பற்றிச் சிந்திக்க வேண்டும் அவர். அப்படிச் சிந்தித்தால் நல்வாய்ப்புகளை நோக்கிய பேரம்பேசுதல்களைச் செய்ய முடியும்.

இந்த நிலையில் அவர் யாருடைய பக்கமும் சாயத் தேவையில்லை. மக்களைச் சார்ந்து நின்று நிபந்தனைகளை விதிக்க வேண்டும். கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும். காலக்கெடுவை விதித்து உடன்படிக்கைகளை எழுத வேண்டும். ஒவ்வொரு விடயமும் செய்யப்படுமிடத்தே ஆதரவு தொடரும். இல்லையென்றால் விலக்கப்படும் என எச்சரிக்க வேண்டும்.

இவ்வாறே மலைய மற்றும் முஸ்லிம் கட்சிகளும் நிதானமாக இந்தச் சந்தர்ப்பத்தில் சிந்திக்க வேண்டியிருக்கிறது. பொருத்தமான முறையில் கள நிலவரத்தை மதிப்பிட்டுத் தமது பேரம்பேசும் ஆற்றலை மக்களின் நிலை நின்று பிரயோகிக்க வேண்டும். இல்லையென்றால் உறிஞ்சப்பட்ட சக்கையாக்கவேபடுவர்.

தற்போதைய சூழலில் கட்சித் தாவல்களுக்கான வாய்ப்புகளும் உள்ளன. இதையெல்லாம் அடுத்து வரும் இரண்டொரு நாட்களில் தெளிவாகவே பார்த்து விடலாம்.

இதற்கெல்லாம் பின்னணியாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு தரப்பையும் சொன்னாலும் எந்தத் தரப்பு பின்னணியிலிருந்து அசைவுகளை மேற்கொண்டன – தூண்டல்களைச் செய்தன என்று அறுதியிட முடியவில்லை. 2014 இல் அமெரிக்கா – இந்தியா உள்ளிட்ட வெளித்தரப்பின் நிகழ்ச்சி நிரலில் காரியங்கள் நிகழ்த்தப்பட்டன. இப்பொழுது சீனாவா இந்தியாவா பின்னணியாக இருக்கிறது? என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

2015 இல் ஒரு இரகசிய நடவடிக்கையின் மூலம் மகிந்த ராஜபக்ஸவைத் தோற்கடித்திருந்தார் மைத்திரிபால சிறிசேன. அப்பொழுது அவர் மகிந்த ராஜபக்ஸவின் நெருங்கிய கூட்டாளி.

“காலையில் மகிந்த ராஜபக்ஸவுடன் கூடிக் கிரிபத் (பாற்சோறு) சாப்பிட்டவர், மதியம் ரணிலுடன் கைகோர்த்து மகிந்தவைத் தோற்கடித்தார்” என்று விமர்சிக்கப்பட்டார்.

இப்பொழுதும் அதைப்போலவே புதிய கூட்டாளியான ரணிலுடன் கூடியிருந்து விட்டு மாலையில் மகிந்தவுடன் சேர்ந்து ரணிலைத் தோற்கடித்திருக்கிறார் மைத்திரி.

இரண்டு சம்பவங்களுமே யாரும் எதிர்பார்த்திராதவை.

அப்போதையைப்போலவே இப்பொழுதும் மைத்திரிபால சிறிசேன கடுமையாக விமர்சிக்கப்படுகிறார்.

வெளிப்பார்வையில் இரண்டுமே ஒருவகையில் சதி நடவடிக்கைகளைப் போலத் தோற்றம் காட்டுபவை. ஆனால், அதிர்ச்சிகரமான அரசியல் நடவடிக்கைகள். இரண்டும் சனங்களுக்குப் பெரிய நன்மைகளைத் தரக்கூடியனவல்ல.

இந்த மாற்றம் நாட்டின் எதிர்காலம் தொடர்பாகப் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இலங்கையின் அரசியலமைப்பு, ஆட்சி போன்றவற்றிலும் கேள்விகளைத் தோற்றுவித்துள்ளன. இந்த அரசியல் நிகழ்ச்சிகள் சில விடயங்களைப் பற்றிச் சிந்திக்க வைக்கின்றன.

1.   2004 இல் புலிகளுடன் பேச்சுகள் நடத்திக் கொண்டிருந்த ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தை சந்திரிகா குமாரதுங்க கலைத்தார். இப்பொழுது (2018 இல்) தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் பேசிக் கொண்டிருந்த ரணில் விக்கிரமசிங்க அரசைக் கலைத்திருக்கிறார் மைத்திரிபால சிறிசேன. ஆகவே எதிர்த்தரப்பில் அதிகாரமுடைய ஜனாதிபதி இருக்கும் வரையில் பிரதமரின் தலைக்குமேலே அபாயக் கத்திதான்.

2.   நல்லாட்சி அரசு உருவாக்கிய அரசியலமைப்புத் திருத்தம் எந்த வகையில் பாதுகாப்பான சூழலை உருவாக்கியுள்ளது? என்ற கேள்வி எழுந்துள்ளது.

3.   பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நெருக்கடி நிலையை இரண்டு தரப்பிற்கும் ஏற்படுத்தியுள்ளது. தற்போதுள்ள சூழலில் இரண்டு வாரத்தில் இதைச் செய்ய வேணும் என ஜனாதிபதி அறிவித்திருக்கிறார். அது எந்தத் தரப்புக்குச் சாத்தியமாகப் போகிறது என்பது கேள்வி. நாளை இது தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா சிறப்புரை ஒன்றை ஆற்றவுள்ளார். திங்கட் கிழமை புதிய அமைச்சரவை அறிவிக்கப்படவுள்ளது.

4.   கூட்டரசாங்கம் – நல்லாட்சி அரசாங்கம் என்ற கனவு கலைந்து விட்டது. பதிலாக ஜனநாயக நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

5.   புதிய பிரதமர் நியமனத்தால் ஏற்படக் கூடிய சட்டச் சிக்கலை உடனடியாகச் சீர் செய்ய முடியாதவாறே வெள்ளிக்கிழமை இரவு மகிந்த ராஜபக்ஸ பதவிப்பிரமாணம் செய்திருக்கிறார். இது தவறு என்று ரணில் தரப்பு நீதித்துறையை நாடுவதற்கு அடுத்து வரும் சனி, ஞாயிறு நாட்கள் சாத்தியப்படாது. இதற்குள் மகிந்த ராஜபக்ஸ தரப்பு தமக்கான ஆதரவுப் பலத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் என நம்புகிறது. இதற்கான முயற்சியில் பஸில் ராஜபக்ஸ தலைமையிலான அணி பேரம்பேசுதல்களில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இவ்வாறு ஒரு அரசியல் கொந்தளிப்பு இலங்கையில் ஏற்பட்டுள்ளது. இது நாட்டின் வளர்ச்சிக்கும் பாதுகாப்புக்கும் நல்லதல்ல. பாகிஸ்தானைப்போல ஸ்திரமற்ற நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளது. இந்த  நெருக்கடிக்குள் தமிழ் அரசியல் பரப்பில் பேசப்பட்ட – பேசப்பட வேண்டியவை எல்லாம் எங்கோ போய் மறைந்து விட்டன.

 

http://akkinikkunchu.com/?p=66405

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.