Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குழப்புதலும் அதிகாரத்தை ஒன்றுதிரட்டலும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குழப்புதலும் அதிகாரத்தை ஒன்றுதிரட்டலும்

Editorial / 2018 நவம்பர் 06 செவ்வாய்க்கிழமை, மு.ப. 05:33 Comments - 0

image_d242b7577e.jpg

 - அகிலன் கதிர்காமர்

பதினொரு நாள்களுக்கு முன்னர், அதிகாரம் கைப்பற்றப்பட்டமையும் அதற்குப் பின்னர் இடம்பெற்ற நிகழ்வுகளிலும், 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்‌ஷ தோல்வியடைந்த பின்னர், அவரால் போடப்பட்ட திட்டங்களின் உச்சநிலையே என்பதில் எவ்விதச் சந்தேகமுமில்லை. அது தொடர்பான உத்தியாக, சிறிசேன - விக்கிரமசிங்க அரசாங்கத்தைக் குழப்புதலும், பின்னர் இயக்கச் செயற்பாடுகள், தேர்தல்கள் மூலமாக, அதிகாரத்தை ஒன்றுதிரட்டலும் என்ற வகையில் அமைந்திருந்தது. இவ்வாண்டு பெப்ரவரியில் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ராஜபக்‌ஷ பிரிவினர் பெற்ற வெற்றியும், இவ்வுத்தியில் உள்ளடங்குகிறது.

குழப்பதற்கு வாய்ப்பானதும் அதற்கென உருவாக்கப்பட்டதுமான அரசியல் சூழலுக்குள், சிறிசேன - விக்கிரமசிங்க அரசாங்கத்தின் தோல்வியும், ராஜபக்‌ஷவின் உத்தி வெற்றிபெற்றமைக்கான காரணமாகும். ஆரம்பத்திலிருந்தே, அத்தோடு, 2015ஆம் ஆண்டு ஓகஸ்டில் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னரும், தேசிய அரசாங்கம், பொதுமக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை உதாசீனம் செய்தது.

ராஜபக்‌ஷ அரசாங்கத்தால் கொண்டுநடத்தப்பட்ட வர்த்தக, நிதித் தாராளமயமாக்கல் கொள்கைகள், கடந்த நான்கு ஆண்டுகளில் துரிதமாக்கப்பட்டன. இதன் காரணமாக, தேசிய பொருளாதாரமும் உழைக்கும் மக்களின் வாழ்வும், நிலையற்ற ஒன்றாக மாறியது. அரசமைப்புச் சீர்திருத்தம் போன்றவற்றால், தேசத்தினதும் சமூகத்தினமும் ஜனநாயகக் கட்டமைப்பைப் பலப்படுத்துவதற்கான தெளிவான அரசியல் தூரநோக்கொன்றை முன்வைப்பதற்குப் பதிலாக, விக்கிரமசிங்க தலைமையிலான ஐ.தே.கவுக்கும் ஸ்ரீ.ல.சு.கவின் சிறிசேன பிரிவுக்கும் இடையிலான அரசியல் சீண்டல்கள், அரசியல் ஸ்திரமற்ற நிலைமை வளர வழியேற்படுத்தியது.

நாடு இன்று எதிர்நோக்கும் பொருளாதாரப் பிரச்சினைகளும் அரசியல் ஸ்திரமற்ற நிலைமையும், பல்வேறு அம்சங்களைக் கொண்டுள்ளன. சுருங்கிவரும் ஜனநாயக வெளி, இனத் துருவப்படுத்தல், பொருளாதார உடமையிழப்பு ஆகிய, இந்நெருக்கடியின் மூன்று விடயங்களை நான் இங்கு ஆராய்கிறேன்.

ஜனநாயக வெளி

இரண்டாயிரத்துப் பதினைந்தாம் ஆண்டிலிருந்து அண்மையில் சரிவடைந்தது வரை, சிறிசேன - விக்கிரமசிங்க அரசாங்கம் மீது, எவ்வாறான விமர்சனங்களை ஒருவர் கொண்டிருந்தாலும், இக்காலப்பகுதியில் மறுக்கப்பட முடியாத ஒரு அம்சமாக, ஜனநாயக வெளி திறக்கப்பட்டமை காணப்படுகிறது. பல தசாப்தகாலப் போர், போருக்குப் பின்னரான காலப்பகுதியில் காணப்பட்ட அதிகாரவய ராஜபக்‌ஷ ஆகியன, கருத்து வெளிப்பாடு, ஒன்றுகூடல் ஆகிய சுதந்திரங்களைப் பாதித்திருந்தன. போராட்டங்கள் கடுமையாக ஒடுக்கப்பட்டன; எதிர்ப்புக் குரல்கள் நசுக்கப்பட்டன; ஊடகங்கள் தாக்குதலுக்குள்ளாகின: இவையெல்லாமே, அச்சத்துடனான ஒரு சூழலுக்கு நடுவில் நடந்தன. சிறிசேன - விக்கிரமசிங்க அரசாங்கத்தில், மாணவர், தொழிற்சங்கப் போராட்டங்கள் கடுமையாகக் கையாளப்படுவது தொடர்ந்தாலும், நீதிக்குப் புறம்பான விதத்தில் ஒடுக்குதலுக்குக் காணப்பட்ட அச்சம், அண்மைய ஆண்டுகளில் குறைவடைந்திருந்தது.

ஜனநாயக வெளி என்று நான் குறிப்பிடுவது, போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் உள்ளடங்கலாக, பொதுமக்களின் நேரடிப் பங்குபற்றலையும் நடவடிக்கைகளையும் இடம்பெற வாய்ப்பு வழங்குகின்ற அரசியல் சூழலைத் தான். வடக்கிலும் கிழக்கிலும் திறக்கப்பட்ட ஜனநாயக வெளி, இரவும் பகலும் போன்ற வித்தியாசத்தைக் கொண்டது. சிறிய கூட்டங்களிலும் கூட உரையாற்றுவதற்கு மக்கள் அச்சமடைந்த, இராணுவமயப்படுத்தப்பட்ட கண்காணிப்புக் சூழலிலிருந்து, அந்த அச்சச் சூழல் விலக்கப்பட்டு, பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாகப் போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்றன. அவ்வாறான போராட்டங்களுக்கான பதிலை அரசாங்கம் வழங்கியிருக்காவிட்டாலும் கூட, போராடுவதற்கான அந்த உரிமை, நாட்டிலுள்ள சிறுபான்மையின மக்களின் பாதுகாப்புக்கும் கண்ணியத்துக்கும் பெரிதளவில் பங்களித்தது. இப்போதிருக்கின்ற கேள்வி என்னவென்றால், ராஜபக்‌ஷவின் ஆட்சிக்காலமொன்று இன்னொரு தடவை ஏற்படுமாயின், அந்த ஜனநாயக வெளி மூடப்பட்டு விடுமா என்பது தான்.

இனங்களுக்கிடையிலான உறவு

ராஜபக்‌ஷ ஆட்சியின் ஒடுக்குமுறையின் எதிர் விளைவுகளை, போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழ்ந்த தமிழ்ச் சமூகமும், நாட்டில் எல்லா இடங்களிலும் வாழ்ந்த முஸ்லிம் சமூகமுமே எதிர்கொள்ள வேண்டியிருந்தது. சிறுபான்மையின மக்களின் பிரச்சினைகளுக்கு, மெகா அபிவிருத்தி பதிலெனத் தெரிவித்து, அரசமைப்பு ரீதியான அரசியல் தீர்வொன்று, ராஜபக்‌ஷவால் நிராகரிக்கப்பட்டது. அரசமைப்பின் 18ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, அரச அதிகாரங்கள், நிறைவேற்று ஜனாதிபதி முறையால் கைப்பற்றப்பட்டன. அதேநேரத்தில், சிவில் நிர்வாகம், இராணுவமயப்படுத்தப்பட்டது. குறிப்பாக, போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கான ஆட்சி, அவ்வாறு இராணுவமயமாக்கப்பட்டதோடு, நாடு முழுவதற்குமான நகர அபிவிருத்தி, பாதுகாப்புக் கட்டமைப்புகளின் கீ ழ் கொண்டுவரப்பட்டது. போருக்குப் பின்னரான சூழலில், சகவாழ்வை ஊக்குவிப்பதற்குப் பதிலாக, ராஜபக்‌ஷ ஆட்சியின் அதிகாரத்தை ஒன்றுதிரட்டுவதற்காக, சமூகங்கள் துருவப்படுத்தப்பட்டன.

பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு முஸ்லிம் சமூகத்தைப் பலியாடுகளாக்கி, அவர்களுக்கெதிராக, கொள்கை ரீதியான போரொன்று முன்னெடுக்கப்பட்டது. முஸ்லிம் கடைகளுக்கும் வணிகங்களுக்கும் எதிராக இனக்கலவரங்கள் உள்ளடங்கலான வன்முறைகள் தூண்டிவிடப்பட்டன. பூகோள ரீதியாகவும் பிராந்திய ரீதியாகவும் முஸ்லிம்களுக்கு எதிராகக் காணப்படும் வெறுப்பைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட இவ்வாறான தாக்குதல்கள், முஸ்லிம் சமூகத்தை அச்சத்தின் நிலையில் வைத்தன.

ஏற்பட்ட ஆட்சி மாற்றம், சிறுபான்மையினங்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் வெற்றியாகவோ அல்லது முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு முடிவாகவோ அமையவில்லை என்றாலும், ஆகக்குறைந்தது, அவ்வாறான பிரச்சினைகளைக் கொள்கை மட்டத்தில் தீர்ப்பதற்கான ஏற்புடைமை ஒன்று காணப்பட்டது.

அரசமைப்பை உருவாக்குவதற்கான முயற்சிகள், பல்வேறான நல்லிணக்கப் பொறிமுறைகள் ஆகியன, கலந்துரையாடலுக்கான பாதையொன்றை ஏற்படுத்தின. இந்தச் சூழ்நிலையில், அரசமைப்புச் சீர்திருத்த முயற்சிகளை இடைநிறுத்துதல், போர்க்காலத் தவறுகளை எதிர்கொள்ளலில் மிகக்குறைவான முன்னேற்றம், அண்மையில் ஏற்பட்ட முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுத்து நிறுத்தத் தவறியமை ஆகியன, கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிகரித்த இனத் துருவப்படுத்தலினது காரணங்களாகவும் அறிகுறிகளாகவும் அமைந்தன. ராஜபக்‌ஷ தலைமையிலான ஒன்றிணைந்த எதிரணி, அவ்வாறான இனத் துருவப்படுத்தலுக்கு, கணிசமான பங்கை வகித்தது. இதன்போது கேட்கப்பட வேண்டிய தர்க்க ரீதியான கேள்வியாக, அரச அதிகாரத்தை அவர்கள் தக்கவைத்துக் கொண்டால், அவர்களது பிளவுகளை ஏற்படுத்தும் தேசியவாத அரசியல், சிறுபான்மையின மக்களுக்கு எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதாகும்.

பொருளாதாரப் பிரச்சினைகள்

நாம் இன்று எதிர்கொண்டுள்ள அரசியல் நெருக்கடி, கடந்த சில மாதங்களாக நாட்டைப் பாதிப்புக்குள்ளாக்கிய பொருளாதார ஸ்திரமற்ற நிலைமை, நெருக்கடி ஆகியவற்றோடு, நிச்சயமான தொடர்பைக் கொண்டுள்ளது. ஆனால் இந்நிலை, கடந்த சில தசாப்தங்களில் இருந்தது.

நிதிமயமாக்கத்தின் விளைவாக அதிகரித்த கடன், விவசாயமும் மீன்பிடியும் புறக்கணிக்கப்பட்டதால் அழிக்கப்பட்ட வாழ்வாதாரங்கள், சிறு கைத்தொழில்கள் தொடர்பில் பாரிய உட்கட்டமைப்பு முதலீடுகள் ஆகியன எல்லாம், உழைக்கும் மக்களின் உடமையழிப்புப் பங்களித்துள்ளன. வாழ்க்கைச் செலவு அதிகரித்த வந்த நேரத்தில், பலரது வருமானங்கள் இல்லாமற்போயுள்ளன.

கடந்த காலத்தில், இரண்டு அரசாங்கங்களும், தேர்தல்களுக்கு முன்னர், பரப்பியல்வாத நடவடிக்கைகள் மூலமாக, வாக்காளர்களின் ஆதரவைக் கோரியிருந்தன. தேர்தல்களுக்கான ஆண்டை நாம் நெருங்கும் நிலையில், பொருளாதாரம் தொடர்பில் ஐ.தே.கவின் கொழும்பை மய்யப்படுத்திய பார்வை, அரசாங்கத்துக்கெதிரான எதிர்ப்பு உணர்வு ஆகியன, மக்களின் பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்க்கப் போவதாக உறுதியளிக்கும் ராஜபக்‌ஷவுக்கு, அதிகப்படியான ஆதரவாக மாறும். ஆனால், பூகோளச் சந்தைகளுடனும் நிதித் தலைநகரத்தோடும் இணையும் நவதாராளவாத நிலைமையைத் தொடரும் ராஜபக்‌ஷவின் பொருளாதாரக் கொள்கைகளும் அடிப்படையில் வித்தியாசமில்லாதது என்ற அடிப்படையில், இது நடக்காது.

இரண்டாயிரத்துப் பதினைந்தாம் ஆண்டு இடம்பெற்ற தேர்தல், எதிர்ப்பு வாக்குகள் மூலமாக, ராஜபக்‌ஷ அரசாங்கத்தை வீழ்த்தியது. அதிகாரவயத்தை எதிர்ப்பது தொடர்பில் கவனஞ்செலுத்திய தேர்தல் விவாதம், பொருளாதாரம் தொடர்பான கேள்விகள் தொடர்பில் காத்திரமாக அணுகவில்லை. மாறாக, பொருளாதாரம் தொடர்பான எந்தவொரு கலந்துரையாடலும், ஊழலிலும் குடும்ப ஆட்சியிலுமே கவனஞ்செலுத்தியது. அடுத்ததாக இடம்பெறவுள்ள தேர்தல்களில், பொருளாதாரமே விமர்சன ரீதியாக விவாதிக்கப்பட வேண்டிய போதிலும், அண்மையில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்களால், அது நடைபெறாது. எதிர்வரும் மாகாண, நாடாளுமன்ற, ஜனாதிபதித் தேர்தல்கள், தனிப்பட்ட நபர்களின் ஆளுமைகள், துரோகங்கள், ஊழல்கள் ஆகியவற்றிலேயே கவனஞ்செலுத்தவுள்ளன.

ஸ்திரமற்ற நிலைமையும் நெருக்கடியும், பொருளாதாரத்துக்கு மிகப் பாதிப்பாக அமையுமென்பதோடு, நம்பகத்தன்மை வாய்ந்த பொருளாதாரத் தூரநோக்கொன்று இல்லாத நிலையில், அதன் விளைவுகள், பொதுமக்களிடமே வந்து சேரும். ராஜபக்‌ஷ ஆட்சியின் கீழ், அரச அதிகாரம் ஒன்றுதிரட்டப்படுதல், நிதிமயமாக்கல், தனியார்மயப்படுத்தல் உள்ளிட்ட ஒடுக்குமுறை மிக்க அரச அதிகாரம் தேவைப்படும் நவதாராளவாதக் கொள்கைகளை நடைமுறைப்படுத்த இலகுவாக அமையும். இது, சிறிசேன - விக்கிரமசிங்க அரசாங்கத்தை விட இலகுவாக அமையும்.

முற்போக்குப் பாதை

விக்கிரமசிங்க, ராஜபக்‌ஷ, சிறிசேன ஆகியோரோடு இணைந்த தரப்புகளுடனான அதிகாரத்துக்கான மோதல் தொடர்கின்ற நிலையில், முற்போக்கான பாதையாக எது அமையும்? அடிக்கடி விற்பனைக்குத் தயாராக இருக்கின்ற எமது நாடாளுமன்ற உறுப்பினர்களின் குறைபாடுகள் எங்களுக்குத் தெரியுமென்ற போதிலும், நாடாளுமன்றம் உடனடியாகக் கூட்டப்பட வேண்டும். மக்களின் உரிமைகள் துஷ்பிரயோகப்படுத்தப்படுவதற்கு முன்னரான பாதுகாப்புக் கட்டமைப்பாக, நாடாளுமன்றமே உள்ளது. அத்தோடு, ராஜபக்‌ஷவுக்கு அரசாங்கமொன்றை வழங்குவதற்கான முயற்சி, நாடாளுமன்றிலும் வீதிகளிலும் சவாலுக்குட்படுத்தப்பட வேண்டும்.

ராஜபக்‌ஷ இம்முறை வித்தியாசமாக இருப்பார் என்று சொல்வோர், ஒன்றிணைந்த எதிரணியின் தலைமைத்துவத்தை வைத்துப் பார்க்கும் போதும், தனது ஆட்சிக்காலத்தில் காணப்பட்ட அதிகாரவய நிலைமை தொடர்பான சுய விமர்சனம் இல்லாத நிலைமையும், அவ்வாறில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். உண்மையில், நாடாளுமன்றம், அரச நிறுவனங்களின் அரசியல்மயப்படுத்தப்பட்டமை ஆகியன உட்பட எமது அரசியல் கலாசாரத்தின் வீழ்ச்சி, ஒரு தசாப்தகாலத்துக்கு நீடித்த ராஜபக்‌ஷ ஆட்சியின் விளைவுகளே ஆகும்.

image_17956b65e8.jpg

ஒரு பிரதமராக, விக்கிரமசிங்க தொடர்ந்தும் தோல்வியடைந்துள்ளார். குறைந்த காலம் பதவி வகித்த 2003ஆம் ஆண்டும் முதல் இப்போது வரை இந்நிலை தான். அவரது அரசியலும் கொள்கைகளும், பொதுவான எதிர்ப்பையே வரவைக்கின்றன. ஐ.தே.கவின் தோல்விகளுக்கு, அதன் தலைமைத்துவத்தைப் பொறுப்புக்கூற வைப்பதற்கான தருணம் இதுவென்பதோடு, கவலைதரக்கூடிய எதிர்காலக் காலங்களை எதிர்கொள்ளக்கூடிய தலைமைத்துவமொன்றுக்குத் தயாராகுதல் வேண்டும்.

கடந்த சில ஆண்டுகளில், மாணவர்களாலும் தொழிற்சங்கங்களாலும் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்கள் தாக்குதலுக்கு உள்ளானபோது, அதற்கெதிராகக் குரல்கொடுக்கத் தவறியமையின் மூலம், சம்பந்தனால் தலைமைதாங்கப்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியென்ற வகையில் தோல்வியடைந்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவம், அதன் ஆதரவாளர்களை இயக்கநிலையில் வைத்திருக்கத் தவறியமையின் காரணமாக, கூட்டமைப்பின் அதன் வாக்காளர்களும், சிதறிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனும் ஏனைய குறுகிய தமிழ்த் தேசியப் பிரிவுகளும், தற்போதைய நெருக்கடி தொடர்பில் ஆனந்தத்துடன் உள்ளனர். ஏனெனில், மேலதிக இனத் துருவப்படுத்தலிலேயே அவர்களது சந்தர்ப்பம் தங்கியுள்ளது.

ராஜபக்‌ஷவை 2015இல் சவாலுக்கு உட்படுத்தியமையிலிருந்து, அவருக்கு அரசாங்கமொன்றை வழங்கியது வரை, சிறிசேன, ஒரு சுற்றுச் சுற்றியிருக்கிறார். ஒன்றுபட்ட சுதந்திரக் கட்சி, ராஜபக்‌ஷவின் கீழ் திரள, சிறிசேனவின் பங்கும் அதிகாரமும், பாரியளவில் குறைவடையும். அத்தோடு, ராஜபக்‌ஷவை எதிர்த்தோரின் கடுஞ்சினத்தையும் அவர் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இந்த அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியமைக்காக, குறிப்பாக, ஜனநாயக மாற்றத்துக்காக மக்கள் வழங்கிய ஆணையை மீறியமைக்காக, சிறிசேனவை, வரலாறு மன்னிக்காது.

இந்தத் தனிநபர்களையோ அல்லது அவர்களின் கட்சி இயந்திரங்களையோ, பொதுமக்கள் தங்கியிருக்க முடியாது. இக்கட்சிகள், தமக்காகவே காணப்படுகின்றன. அதேபோல், தம்மைச் சிறந்தவர்களாகக் காட்டிக்கொள்ளும் சர்வதேச அமைப்புகளையும் நம்ப முடியாது. உண்மையில், தேசிய நெருக்கடியொன்று, இவ்வாறான சர்வதேசப் பிரிவினர், நாட்டைத் தவறாக வழிநடத்தவே வாய்ப்பளிக்கிறது. ராஜபக்‌ஷவுக்கு இன்று எதிர்ப்பாக உள்ள சர்வதேசத் தரப்புகள், அவர் தனது அதிகாரத்தைத் தக்கவைத்து, நவதாராளவாதக் கொள்கையைப் பின்பற்றினால், அவரோடு இணைவர். அதேபோல், சர்வதேசத் தரப்பினரால் ராஜபக்‌ஷவுக்கு விடுக்கப்படும் இவ்வெதிர்ப்பு, ராஜபக்‌ஷவுக்கான, “தேசத்தைக் காப்பாற்றப் போகிறோம்” என்று சொல்லிக் கொண்டிருக்கின்ற சிங்கள - பௌத்த தேசியவாத ஆதரவையே அதிகரிக்கும். இங்கு தான், ஊடகங்கள் தவறுவிடுகின்றன. தற்போதைய தருணம், வெறுமனே தேசியத் தலைவர்கள், சர்வதேசத் தரப்பினர் ஆகியோரில் மாத்திரம் உள்ளடக்கப்பட முடியாது.

யதார்த்த நிலைமைக்கு எதிராக, கடினமான கேள்விகளுடன் மல்யுத்தம் செய்ய வேண்டிய நேரமிது. ஜனநாயகத்துக்கான வெளி மூடப்படாது என்பதை நாம் உறுதிப்படுத்த வேண்டும். அரசு, அரச அதிகாரப் பயன்பாடு உள்ளிட்ட, தன்னிலையான விவாதங்கள் ஊடக, ஜனநாயக வெளியை விரிவுபடுத்துவதற்கான வழிகளைக் கண்டறிய வேண்டும். இனங்களுக்கிடையிலான தொங்கல் நிலையிலுள்ள உறவுகளை மீளநிர்மாணிக்க வேண்டுமென்பதோடு, இனத் துருவப்படுத்தலின் பிரிவினைவாத அரசியலையும் நாம் சவாலுக்குட்படுத்த வேண்டும். இறுதியாக, வடக்கிலும் தெற்கிலும் மக்களுக்கான சமத்துவம், நீதி ஆகிய கொள்கைகளின் அடிப்படையில், அர்த்தபூர்வமான பொருளாதாரத் தூரநோக்கொன்றை வெளிப்படுத்த வேண்டும். மக்களின் இயக்கங்களாலும் தேசிய விவாதங்களிலும் எதிர்வரும் தேர்தல்களிலும், இவ்வாறான விடயங்கள் எழுப்பப்பட்டால், ஒடுக்குமுறை மிக்க ஆட்சியாளர்களால் அரச அதிகாரம் திரட்டப்படுவதற்கு எதிரான எதிர்ப்பில், முக்கியமான ஒரு விடயமாக அமையும்.

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/குழப்புதலும்-அதிகாரத்தை-ஒன்றுதிரட்டலும்/91-224766

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.