Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எம்மா - தேவகாந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
எம்மா
-தேவகாந்தன்-
 
அதுவொரு மென்மையும் நுட்பமும் சார்ந்த விஷயமாக அவளுக்குப் பட்டது. இருந்தும் அதை வகைப்படுத்தி இதுதானெ புள்ளிவைக்க அவளால் கூடவில்லை. அங்கேயே நடந்திருந்ததும், வெவ்வேறுஇடங்களில் நடந்ததாய்க் கேட்டிருந்ததுமான அதுபோன்றசம்பவங்கள்கூட எம்மாவுக்கும் சண்முகநாதனுக்குமிடையே உள்ளோடியிருந்த மனவுணர்வைப் புரிந்துகொள்ளபோதுமானவையல்ல என்பதாய் அவளுக்குத் தெரிந்தது. பழகியவர்களும் புரிந்திட முடியாதளவு அதில் புதிர்கள் நிறைந்து கிடந்தன.
 
      அந்தத் தொழிற்சாலையில் வேலைபார்க்கும் ஆறு வருஷ அனுபவத்தில் ஒரு ஆணினதும் பெண்ணினதுமான நெருக்கத்தில் எழுந்த கதைகள் வெறும் வதந்திகளாய்க் கரைந்தழிந்ததை அவள் நிறையக் கண்டிருந்தாள். இருந்தும் அவர்கள் விஷயத்தில்ஏதோவொன்று இருக்கவே செய்கிறதென்று மனத்துள் குடைந்துகொண்டிருந்த எண்ணத்தை அவளால் துடைக்க முடியவில்லை.
 
      கடந்த சில மாதங்களாகவெனினும் எம்மாவோடு நெருக்கமானபழக்கமுண்டு லட்சுமிக்குவீடுகள் அண்மையில் இருந்ததில், வாகன வசதியற்றவர்களுக்கு அந்தச் சமீபத்தின் வெளிகூட சிரமத்தில் கடக்கவேண்டியதாயிருந்தும், வார இறுதி நாட்களில் ரிம் ஹோர்டனிலோ, வோல் மார்ட்டிலோ அல்லது அணித்தாயிருந்த பிறைஸ் சொப்பரிலோ அவர்கள்சந்தித்துக்கொள்வதுண்டு. பிள்ளைகளின் பிறந்தநாள்களிலும், நத்தார் புதுவருஷம் உயிர்த்த ஞாயிறுபோன்ற விசேஷதினங்களிலும் வீடுகளிலே கூடிக்கொள்ளவும் செய்தார்கள்இன்னும் அந்நியமாயிருந்த ஆங்கிலத்திலான உரையாடல் மூலம்தங்கள் குடும்பங்களைப்பற்றிநாட்டைப் பிரிந்துவந்தகாரணங்கள்பற்றிஇறுதியாக கனடா வந்து சேரும்வரை பட்டஅவலங்கள்பற்றியெல்லாம் அவர்கள் பேசியிருக்கிறார்கள்இலங்கையில் இருந்ததுபோன்ற இனக்கொடுமையை  ஆர்மீனியா  நெடுங்காலத்துக்கு அனுபவித்திருந்ததுஅதிலிருந்து தப்பிப்பிழைத்து ஒரு குழந்தையோடு கனடா வந்து சேர்வதொன்றும்எம்மாவுக்கு இலகுவான காரியமாய் இருக்கவில்லை.இலங்கையிலிருந்து இருபத்திரண்டு வயதில் தன்னந்தனியனாய் இந்தியாவென்றும் சிங்கப்பூரென்றும் தாய்லாந்தென்றும் அலைந்துழன்று லட்சுமி கனடா வந்துசேர்ந்த கஷ்டங்களை  பெரும்பாலும் அது நிகர்திருந்தது
    
  கணவனால் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் காரணங்கள் துரத்த எம்மா நாட்டைவிட்டு வெளியேறியிருக்கலட்சுமிக்கு கனடாவந்த பிறகு நடந்த திருமணத்திற்கு பிரிவு விதியாகியிருந்ததுவேறு பெண்ணோடுள்ள தன் கணவனின் தொடர்பு உறுதிப்பட்டநாளில் குடும்பத்தில் வெடித்துப் பெருகிய கலகம் பொலிஸ்வரைசென்று அன்று இரவே லட்சுமியின் கணவனை வீட்டைவிட்டுவெளியேற்ற அவள் தனியனாகியிருந்தாள்பிரிவு பின்னால் சட்டரீதியாகவும் உறுதியாயிற்று.
    
  ஏறக்குறைய ஒரேவிதமான தனித்தாயர் வாழ்க்கைஇருவருக்கும். ஒரேவிதமான கஷ்ரங்களின் எதிர்ப்படுகைகள்இவையே கூடி வேலைசெய்யும் அவ்விருவருக்குமிடையில் மிகுந்த அந்நியோன்யத்தை ஏற்படுத்தியிருந்தன
   
   இருந்தும் சண்முகநாதன்மேல் கிளர்ந்திருக்கக்கூடிய விருப்பம் ஈர்ப்புவென எதுபற்றியும் எம்மா அவளுடன்  என்றும் பிரஸ்தாபித்ததில்லை. அதுமாதிரியான இணக்கங்களை அனுமதித்துவிடாத ஒரு தொழிற்சாலையின் நடைமுறை விதிகளினால் மறைக்கப்பட்ட அவ்வுணர்வுகள் தெறிக்கும் கணங்களில் உருக்கொள்ளும் அனுமானங்களும், உள்ளே அசைந்து திரியும் வதந்திகளும் விசை கொள்கிறபோது லட்சுமியே எம்மாவிடம் கேட்டிருக்கிறாள். சிரிப்புக்கான விஷயம்போல் பாவித்து எம்மா அதற்கு 'ஒன்றுமேயில்லை, குழம்பாதே'யென பதிலளிக்கவும் செய்திருக்கிறாள்.
 
     ஆனால் லட்சுமிக்கு இப்போது மறுபடி சந்தேகம் வந்திருக்கிறது, எம்மா அந்த வதந்திகளுக்கும், உருத் தோற்றங்களுக்கும் பின்னாலுள்ள உறவின் உண்மையை தன் சிரிப்பால் போர்த்து மறைத்துவிட்டிருந்ததாக. 
 
     முதல்நாள் வெள்ளிக்கிழமை தொழிற்சாலையில் யாரும் எதிர்பாராதவிதமாக நடந்த அச்சம்பவம் குறித்து லட்சுமியின்நிலைப்பாடு அவளுடைய சிநேகிகளுடையதைவிட, குறிப்பாக மணியக்கா மற்றும் வர்த்தினியினதைவிட, வேறாகவே இருந்ததுஏதோ தமக்குள்ளான ஒப்பந்தத்தை எம்மா மீறினாள்போல வெடித்துச் சினந்து சண்முகநாதன் எம்மாவைத் தூற்றியதற்காக அவள் அவனைக் கோபிப்பாளே தவிர,  எம்மாவை அல்ல.
 
      எம்மாமீதான அவளது கோபமெல்லாம், அவ்வளவு கொதிநிலை அடையும்படியான உண்மையொன்று அதில் இருந்திருந்தும், தன்னிடத்தில் அதை முற்றுமாய் மறைத்திருந்தாளே என்பதில்தான். 
  
    வேலை முடிந்து வீடு திரும்பியவளுக்கு செய்ய நிறைய வேலைகளிருந்த கவனத்தைமீறி அன்றைய வேலைத்தல சம்பவத்தைச் சுற்றியே மனது அலைந்துகொண்டிருந்தது.
  
    சண்முகநாதன்மீது அவளுக்கு நல்ல அபிப்பிராயம் உண்டு. தொழிற்சாலையில் பத்து வருஷங்களாக வேலை செய்யும் அனுபவத்தை,  ஒரு முன்னுரிமையாக எடுத்துக்கொள்ளும் மற்ற ஆண்கள் போலன்றி, அதிகமாக பெண்களே வேலைசெய்யும் அத் தொழிற்சாலையில் அவன் கண்ணியமாக நடந்துகொண்டான்.
 
      நெருங்கி வேலைசெய்ய நேரும் இருபாலார் உடல்களிலும் அவ்வாறான தொழிற்கூடங்களில் ஒரு சபல அலையின் வீச்சுக்கு எப்போதும் குறைவிருப்பதில்லை. அதன் அதிர்வலைகள் எப்போதாவதெனினும் தம்மிருப்பை வெளிப்படுத்தவே செய்கின்றன. இறுக்கமான நெருக்கமொன்று அவர்களுக்குள் இருக்கிறதோவென்ற சந்தேகம் பலருக்கும் ஏற்கனவே இருந்திருந்தது. அவர்கள் அதில் நிச்சயம்கொண்டு  சிரிக்கும்படியாகவே அன்றைய சம்பவம் நடந்திருந்தது. ஆனால் லட்சுமியோ திகைத்து நின்றிருந்தாள். அந்த விஷயம் அவளுக்கு லேசானதில்லை.
 
      சின்ன விஷயங்களுக்குக்கூட வெடித்தெழும் இயல்புகொண்டவள் எம்மா. அங்கே வேலைசெய்ய வந்த அத்தனை சிறிய காலத்துள் அவள் பலபேரோடு வாக்குவாதப்பட்டு கதைபேச்சுக்களை அறுத்திருக்கிறாள். அது அன்றுவரையிலும்கூட சிலரோடு தொடர்ந்துகொண்டிருக்கிறது. கனடா வந்த ஆறு ஆண்டுகளில் செய்த பத்து வேலைகளில் ஒன்பதன் இழப்பு, முன்பின் யோசியாது அநீதியான எதையும் தூக்கியெறிந்து அவள் வெடித்ததின் காரணமாகவே சம்பவித்தது. அதில் பாதிக்குமேல் மற்றவர்களுக்கானதாகவே அவை இருந்தன. ஆனால் அன்று அந்தளவு கடூரமான வார்த்தைகள் தன்மேல் எறியப்பட்டபொழுதில் வெப்ப வலயத்தில் ஒரு மெழுகுச் சிலையின் உருகுநிலைக்கு முன்னான ஸ்திதியில் தகதகத்துக்கொண்டு தன் ஆளுமை சிதைய மௌனமாய் எம்மா நின்றிருந்தாளே, ஏன்? அவனும் அவ்வாறான வெடிப்பைக் காட்டுமளவு உள்ளுள்ளாகவேனும் ஒரு பாத்தியதையை சுவீகரித்தவனாய்த்தான் தென்பட்டிருந்தான். அவனது வெடிப்பும் அவளது மௌனம்போலவே கதைகளைப் பின்புலத்தில் கொண்டிருந்ததின் சாட்சியமென லட்சுமி எண்ணினாள்.
 
      புதிர்கள் விளைந்துகொண்டிருந்தவளின் மனத்தில் இன்னொரு முகம் தோன்றியது. அடித்த அந்தப் புயலில் மேற்பார்வையாளருக்கு என்ன பங்கிருக்கிறது? அவள் அதை நினைத்தே ஆகவேண்டும். ஏனெனில் அவன் எம்மாவின் வேலைகளில் அதிகமாகவும் குற்றமே கண்டுகொண்டிருந்தவன். அவளது வேலை நிரந்தரத்தை அதனால் கேள்விக்கு உள்ளாக்கிக்கொண்டு இருந்தவன். இதற்குப் பின்னாலுள்ள இவன் கதை என்ன? இந்த மூவர் கதைகளின் மோதலா வேலைத்தலத்தில் அன்றடித்த புயல்? 
 
     அன்றைய வெள்ளிக்கிழமை வழக்கமாக வேலைசெய்வதில் இல்லாமல் தூரத்து மெஷின் ஒன்றிலே வேலைசெய்யும் கட்டாயம் எம்மாவுக்கு நேர்ந்துவிட்டது. போகும்போது லட்சுமியைப் பார்த்து 'கஷ்ரம்! கஷ்ரம்' என்பதுபோல் தலையிலே தட்டி அலுத்துக்கொண்டுதான் அவளும் போயிருந்தாள்.
 
      சனி ஞாயிறு விடுமுறை கொண்ட அத் தொழிற்சாலையில் கிழமை நாளின் இறுதி நாளான வெள்ளிக்கிழமையின் கடைசி ஒரு மணி நேரத்தை மெஷின்களையும் வேலைத்தலத்தையும் துடைத்து துப்பரவுசெய்வதற்காக ஒதுக்கியிருந்தார்கள். 
 
      அன்று துப்புரவுப் பணிக்காக இரண்டு மணியளவில் மெஷின்கள் நிறுத்தப்பட்ட நிமிஷத்திலிருந்து எம்மா  எங்கும் பார்வையில் தட்டுப்படவில்லை. அவ்வாறான துப்புரவுப்பணியிலிருந்தான ஒதுக்கம் அவ்வப்போது மேற்பார்வையாளரின் அனுசரணையாளர்களுக்கு கிடைப்பதுதான். 
 
      தன்னுடைய மெஷினிலிருந்து எம்மா சென்றதில், அவளால் அதைத் தவிர்த்திருக்க முடியாதெனத் தெரிந்திருந்தபோதும், வெகுநேரமாய் கடுகடுத்துக்கொண்டிருந்த சண்முகநாதன், மெஷின்கள் நிறுத்தப்பட்டு வெகுநேரமாகியும் எம்மா காணப்படாததில், அவள் எங்கேயென்று ஒருமுறை லட்சுமியை வந்து விசாரித்துப் போனான். 'காணேல்லை. ஒஃபீசுக்கு போயிருப்பாவோ தெரியா' என பதிலளித்திருந்தாள் அவள். நேரமாகவாக அவன் தன்னிலை இழந்திருந்ததின் அடையாளமாக கூடவும், பக்கத்திலும் வேலைசெய்தவர்களோடெல்லாம் சண்முகநாதன் சினந்துகொண்டிருந்தான். 'சண்ணோட வேலைசெய்யிறது வலு சுகம்' என்று சொல்லிக்கொண்டிருந்த வர்த்தினிமேலேயே பலதடவைகள் வெடித்துப் பாய்ந்துவிட்டான். ஒருபோது அவள் அழுகையை அடக்கமுடியாமல் குலுங்கினாள்.
 
      மூன்று மணிக்கு சிறிதுநேரம் முன்பாகத்தான்  எம்மா மறுபடி அங்கே காணப்பட்டாள். 
      எம்மா கிட்ட வர, சண்முகநாதனின் பெருந்தொனி கூடத்தையே அதிர வைப்பதுபோல் வெடித்தெழுந்தது. வீடு செல்ல புறப்பட்டுக்கொண்டிருந்த அத்தனைபேருமே திடுக்கிட்டுத் திரும்பினார்கள்.  
 
     அப்போது வேலைநேரம் முடிவதற்கு ஐந்து நிமிஷங்கள் முன்பான சமிக்ஞை மணி அலறியது. உறைவுநிலை கலைந்தவர்கள் மெல்ல வாசலைநோக்கி நகரத் தொடங்கினர்.
 
      வேலை முடிந்து செல்லும் நேரத்தில் பெண்கள் கூட்டத்தில் நின்று எப்போதும் கலகலத்துக்கொண்டிருக்கும் எம்மா, மின்னல் தாக்கிக் கருகிய மரம்போல இறுதி மணியொலிப்பைக் காத்தபடி உள்வாசலில் தனியே நின்றிருந்தாள். 
 
      அன்று பஸ் எடுக்க லட்சுமியோடும் அவள் கூடச் செல்லவில்லை. வீடு செல்ல அதிக நேரமெடுக்கும் மாறுதிசையில்  வந்த பஸ் எடுத்துக்கொண்டு அவளுக்கு முன்னாலேயே போய்விட்டாள்.
 
     அவளோடு உரையாடாமல் சில விஷயங்களில் தன்னால் எவ்வளவு யோசித்தாலும் தெளிவுபெற்றுவிட முடியாதென்பது லட்சுமிக்குத் தெரிந்தது. அது வெளிப்பார்வைக்குத் தெரிந்துவிடாத பல நுட்பங்களை உடையதாயிருந்தது.
 
      அவள் எம்மாவுக்கு போனெடுத்து மறுநாள்  தாங்கள் அவசியம் சந்திக்கவேண்டுமென்றாள். ஆறு மணியளவில் சந்திக்க சம்மதித்தாள் எம்மா.
      மறுநாள் மாலை ஆறு மணியளவில் ரிம்ஹோர்டனில் இருவரும்சந்தித்தனர்.
 
     முதல்நாள் நடந்த  சம்பவத்துக்கு எம்மா அன்றைக்கும்அழுதாளாஅவ்வளவுக்கு அவளது முகம் நீண்டநேரம் அழுதஅதைப்பு கொண்டிருந்ததுபாவம்தான்அவ்வளவு மோசமானவார்த்தைகளைத் தாங்கிவிடுவது ஒரு வெள்ளைத் தோலிக்குக்கூடவலி நிறைந்ததாகவே இருந்திருக்குமென எண்ணினாலும்அவளைத் தேற்றுவதைப் பின்போட்டுவிட்டு தன் சந்தேகங்களைத் தீர்க்க முனைந்தாள் லட்சுமி. “நான் கேட்கப்போகிற கேள்விக்கு  வழக்கம்போல இன்று சிரித்துக்கொண்டு பதில்சொல்ல உன்னால் முடியாமலிருக்குமென்று எனக்குத் தெரியும்முன்பு ஒன்றோ இரண்டோ முறை  கேட்ட அதே கேள்விதான் இதுநீயும் பதில்சொல்லியிருக்கிறாய்தான்இல்லை இல்லையென்று நீ ஆயிரம் தரம் சொல்லியிருந்தாலும் இன்றைக்கு அந்தப் பதிலில் எனக்கு சந்தேகம் வந்திருக்கிறதுஅதனால் எங்கள் நட்பை நீ கனம் பண்ணுகிறவளாய் இருந்தால் என் கேள்விக்கு உண்மையான பதிலைச் சொல்லு. நான் என்ன சொல்கிறேன் என்பதை நீ சரியாக விளங்கிக்கொண்டாயா, எம்மா?
 
               "ம்… கேள்.”
               "சண்மீது.. அதுதான் சான்… உனக்கு விருப்பமேதாவது இருக்கிறதா?”
 
      எம்மா கோப்பியைக் குடித்தபடி சிறிதுநேரம் அவளையேபார்த்துக்கொண்டு இருந்தாள்எதிரே இருப்பவள் அவளது நெருங்கிய தோழி. அதே கேள்வியை அவ்வளவு அழுத்தமில்லாமல் முன்பு அவள் கேட்டபோது சிரித்து மழுப்பி அவளை சமாளித்ததுபோல் அன்றைக்கு முடிந்துவிடாதென்பதை எம்மாவால் உணர முடிந்தது. பலரினதும் ஊகங்களை ருசுப்பிப்பதும், பலருக்கு ஊகங்களை உருவாக்குவதுமான சம்பவமே முதல்நாள் நடந்திருக்கிறது. லட்சுமிக்கும் எந்தளவிலோ அது ருசுவாகியிருக்கிறது. அவளது பார்வை, இறுகிய முகபாவங்கள் எல்லாம் அதையே உறுதிசெய்துகொண்டு இருக்கின்றன. 'சரி, அந்தரங்கத்தைத் திறக்கிற நேரம் வந்துவிட்ட'தென எம்மா முடிவுபண்ணினாள். பின் ஆமென்று சுணக்கமாகத் தலையசைத்தாள்
 
               "வெளிப்படையாகவே அவனிடம் இதைச் சொல்லியிருக்கிறாயா?”
 
      சிரிக்க வராதென்று தெரிந்தும் எம்மா ஒரு முயற்சி மேற்கொண்டாள். வராதுபோக தலைகுனிந்தபடி கோப்பிக் கப்பை கையில் பிடித்து தணிந்துவரும் அதன் சூட்டை உணருவதுபோல் உருட்டியபடி இருந்தாள். பின் பதிலை தலையசைத்தாள். இல்லை!
 
      "ஏன்? அவன் உன்னை விரும்புவது விரும்பாதது உனக்குத் தெரிந்திருக்கவில்லையா?"
 
      "தெரிந்துதான் இருந்தது. ஆனாலும் சொல்லவில்லை" என்று தொடங்கி தன் மனத்தை ஒரு நிறை பனிப் பொழிவின் கனதியோடு சொல்லிமுடித்தாள். ஒரு பிரசங்கதையே அவள் செய்ததுபோல் இருந்தது. இடையிட்ட லட்சுமியின் கேள்விகளுக்கும் வேகமறாது பதிலளித்தாள். ஒரு கட்டத்தில் உறவுகளின் விசித்திர சேர்மானங்களைச் சொல்லியதோடு எல்லாம் கொட்டப்பட்டுவிட்ட வெறுமையுடன் அவள் தணிந்தாள்.
 
      லட்சுமியால் நம்பமுடியவில்லைஒருவர்மீது ஒருவர்கொள்ளக்கூடிய அதிக விருப்பம்அதீத விருப்பம் ஆகியனவற்றின்இருப்பையே அவள் அப்போதுதான் அறிகிறாள்அவற்றின் அர்தமும்அவளுக்கு அன்றேதான் தெரியவந்திருக்கிறது. லட்சுமியின்மனமெங்கும் அதிர்வலைகள் பரந்தன.
 
     அந்த உரையாடல் இவ்வாறு இருந்தது
               'சான் என்னை விரும்பியது எனக்குத் தெரியும்லக்சோவேலைசெய்ய வந்த ஒன்றிரண்டு நாட்களிலேயே அதை நான் தெரிந்துகொண்டேன்.  எனக்கும் ஒரு விருப்பம் அவனது அணுகுதல்களில், ஆதரவான கதைகளில் இருந்ததென்பதை இனி நான் மறைக்கப்போவதில்லைஒரு வாரத்துக்குள்ளாக அந்த ஈர்ப்பு என்னில் தீவிரமாகியும் போனது. நம்பமாட்டாய், நான் கனவுகள் காணவே தொடங்கிவிட்டேன். கனடாவுக்கு நான் ஓடிவந்ததே அவனுக்காகத்தான்போல நான் உள்ளமெல்லாம் சிலிர்த்திருந்தேன். இருந்தும்  என் விருப்பத்தை வாய் திறந்துஎன்றைக்கும் நான் அவனிடத்தில்  தெரியப்படுத்தியதில்லை.'
 
              'ஏன்?'
 
               'ஏனென்றால், தன் விருப்பத்தை அவன் என்னிடத்தில்சொல்லாதிருந்தான்அவனே அதை என்னிடத்தில் முதலில்சொல்லவேண்டுமென்று நான் எதிர்பார்த்தேன்.'
               'அதிலென்ன வித்தியாசமிருக்கிறது?'
 
      'அவன் கல்யாணமாகாதவன். நான் கல்யாணமாகி ஒரு குழந்தையோடு இருக்கிறவள். சட்டப்படியான இணைவு என்ற எல்லையை நோக்கி நகராமல் ஒரு ஈர்ப்பு… ஒரு விருப்பம்… ரகசியமான சில ஸ்பரிசங்களோடுமட்டும் அடங்கிக்கொண்டு என்னால் இருந்துவிட முடியாது.'
 
               'இப்போதெல்லாம் அதிகமாகவும் சேர்ந்து வாழ்தல்தானே நடைமுறை… உங்கள் விருப்பம் அந்த எல்லைக்குக்கூட செல்லாதென எப்படித் தீர்மானித்தாய்?
 
               'என்னால் முடிந்திருந்தது, லக்சோ. ஒருசில வாரங்களிற்கு உள்ளாகவே முடிந்திருந்தது. அவனது கண்களிலும், உடம்பிலும் திமிர்த்த வேட்கையில் அதை நான் கண்டேன்.அவனது அதீதமான விருப்பம்லக்சோஎன்னை அப்படியே விழுங்கிவிடுகிற… கபளீகரம் செய்துவிடுகிற… விருப்பமாய் அது இருந்தது. அது எதார்த்தத்தில் ஆழமாக ஆதாரம் கொள்ளாததுஇவ்வாறாக தொழிற்சாலைகளில் ஓய்வுநேர பொழுதுபோக்குப்போல சில அன்புகள் தலையெடுக்கும். அந்த அளவிகந்ததும் உடனடிச் சுகம் தேடுவதுமான விருப்பங்களை, ஒருவரையொருவர் முழுமையாகத் தெரிந்து உருவாகும் அளவான விருப்பங்களிலிருந்து வேறுபிரித்துக் காண ஒரு நம்பிக்கையான, நிலைத்திருக்கக்கூடிய வாழ்க்கையை எதிர்பார்க்கும் எவருக்கும் தெரிந்திருக்கவேண்டும்.' 
 
      சொல்வதில் அவளது சிரமங்கள் வெளித்தெறித்து காட்ட முயன்றன. அதில் அவள் கரிசனம் கொஞ்சமும் கொள்ளவில்லை. வார்த்தைகள் தடுமாறியபடி விழுந்துகொண்டிருந்தன. 'அளவானவிருப்பத்துக்கும் அதீதமான விருப்பத்திற்கும் இடையேயுள்ளவித்தியாசத்தை காதலுக்கும் காமத்துக்கும் இடையேயான வித்தியாசமாகத்தான் நான் காண்கிறேன்அவனுக்கு எனதுமுடிந்துபோன திருமண வாழ்க்கைஇப்போது நான்வாழ்ந்துகொண்டிருக்கிற வாழ்க்கைத் தரம்எனக்கு குழந்தைஇருக்கிற விஷயம்அதற்கு எட்டு வயதாகிறது… பள்ளி செல்கிறது… மூன்றாவது பாரம் படிக்கிறது… என்பதுபற்றிக்கூட ஒன்றும்   தெரிந்திருக்கவில்லைதெரிந்துகொள்கிற முனைப்பும் அவன் என்றும் காட்டியதில்லைஇது எதுவுமே தெரிந்திராதஒருவனின் என்மீதான விருப்பம் எதுவாக இருக்குமென்று நீநினைக்கிறாய்அந்த நிலையில் நான் உன்னைக்காதலிக்கிறேனென்று  ஓடிப்போய் என்னால் சொல்லிவிடமுடியுமாசொல்லு?
 
     வாசிப்புப் பழக்கம்கூட அவளிடம் பெரிதாக இருக்கவில்லை. அவள் அறிந்துகொண்ட அரசியலும் வெளியுலகும் சார்ந்த விஷயங்கள் அவளால் காட்சியூடகங்கள் மூலம் தெரிந்துகொள்ளப்பட்டவையே. இருந்தும் என்னமாதிரி மூடுண்டு கிடந்த ஒரு உணர்வின் வெளியை வெளிச்சமிட்டுக் காட்டிவிட்டாள்! 
 
     லட்சுமிக்கு அந்தத் திகைப்பிலிருந்து மீள வெகுநேரம் பிடித்தது.
 
      அவளது பார்வையில் தவறிய அம்சம் அதுஆயினும் அவளால்விளங்கமுடியாத பகுதி இன்னும் அதில் இருந்தது. “அப்படியானால் தன்னை  விரும்புவதாக  அவன் எண்ணும்படி தொடர்ந்தும் நீபழகியிருக்கத் தேவையில்லையே?
 
      அவள் தன்னைப்பற்றி நிறையவே யோசித்திருக்கிறாள் என்பது தெரிந்தது எம்மாவுக்கு. “நீண்டநாளாய் வேலை செய்கிறவனும், திறமான வேலைகாரனுமான அவனோடு வேலைசெய்ய எனக்கு விருப்பமில்லையென நான் கூறிவிட முடியுமா, ம்? மேலும், அவன்மீதான விருப்பம் இன்னும் என்னுள் இருந்துகொண்டிருக்கிறதை எனக்கே நான் மறைத்துவிடுவது எப்படி?  அவனது உள் அறிந்த பின்னாலும் அவனிலிருந்து என்னால்முழுவதுமாய் ஒதுங்க முடியாதிருந்தது.”
 
              "சரிஅவ்வாறு இருக்கிறபோது சுப்பர்வைசருடன் ஏன்அந்தமாதிரிப் பழகினாய்?”
               "எந்தமாதிரி…?”
               "நெருக்கமாக நின்று… சிரித்து…”
 
               "அது ஒரு விஷயமாலக்சோஒரே இடத்தில் வேலைசெய்கிறவர்கள் கதைப்பதுசிரிப்பது, கதைக்காமலிருப்பது, முகத்தைச் சிடுசிடுவென வைத்திருப்பதெல்லாம் எவ்வாறுஒருவரின் விருப்பமோ விருப்பமின்மையோ ஆகமுடியும்அவன் தொட்டுத் தொட்டுத்தான் என்னோடு பேசுவான், சிலவேளை நான்கூட அவனோடு அப்படித்தான் பேசியிருக்கிறேன். இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை, லக்சோ. ஆனாலும் அந்தச் சாதாரணமான செயற்பாடுகளை ஒரு திட்டமான நாடகமாகவேநான் புரிந்தேன்அப்படிச் செய்திருக்கக்கூடாதென்று இப்போது தெரிகிறதுஆனாலும் வேறு வழியில்லை. அதுவொரு நிர்ப்பந்தம்.
               "யாருடைய நிர்ப்பந்தம்?
               "யாரினதுமில்லைவாழ்க்கையின் நிர்ப்பந்தம்எவருக்கும் ஒரு வேலை அவசியமெனச் சொல்லிக்கொண்டிருக்கிறஇங்குள்ள வாழ்க்கையின் நிர்ப்பந்தமே அதுஅந்தவகையில் நான்இப்போது பார்க்கிற வேலை எனக்கு மிகமுக்கியமானதுலக்சோ.சம்பளம் ஒழுங்காகக் கிடைக்காத பல கம்பெனிகளிலே நான்வேலைசெய்து களைத்திருக்கிறேன்வெள்ளிக்கிழமைகளில்சம்பளத்தைப் பெற ஏஜன்ரின் அலுவலகம் போய் ஒன்றரை இரண்டுமணத்தியாலங்களென கால்கடுக்க  காத்து நின்றிருக்கிறேன்அந்த வாரச் சம்பளம் கிடைக்காமல் அடுத்த வெள்ளிவரைசெலவுக்கு வழியில்லாமல்  சிரமப்பட்டிருக்கிறேன்நானே சில வேலைகளை ரோஷத்தில் தூக்கியெறிந்துவிட்டு மேலே வேலை தேடியலைந்து சலிப்பேறியிருக்கிறேன். உனக்கு இந்தமாதிரிஅனுபவங்கள் ஏற்பட்டிருக்கிறதாலக்சோஅவ்வாறு நான்நொந்துபோயிருக்கிற நேரத்தில்தான் இந்த வேலை எனக்குக்கிடைத்ததுசானுக்கு விருப்பமில்லையென்று சுப்பர்வைசருடன், அவனது நோக்கம் தெரிந்திருந்தாலும், கதைக்காமலும் முரண்டிக்கொண்டும் இந்த வேலையை என்னால் தக்கவைக்கமுடிந்திருக்குமென்று நான் நினைக்கவில்லைஆறு மாதங்களாகியும் கிடைக்காத வேலை நிரந்தரம் வரப்போகும் இந்தக் கோடை விடுமுறையோடு கிடைக்கவிருக்கிற சமயத்தில்அப்படியொரு முறுகல் நிலை ஏற்படுவதை யாரும் விரும்பமாட்டார்கள். நான் விரும்பவில்லைமூன்று மாதங்களுக்கு முன்னரே கிடைத்திருக்கவேண்டிய வேலைநிரந்தரம் விலகிப்போனதற்கு நான் அவனது அணுகுமுறைக்குக் காட்டிய எதிர்ப்பே காரணமென்பது யாருக்குத் தெரியும்? அதனால்தான் சான் விரும்பமாட்டானென்று தெரிந்திருந்தும் சுப்பர்வைசருடன் அந்தமாதிரி நடந்துகொண்டேன்நிரந்தரமான ஒரு வேலை… திட்டமான ஒரு சம்பளம்… இவற்றின்மீதுதான் இங்கே ஒரு வாழ்க்கை எவருக்கும் உழன்றுகொண்டிருக்கிறது, மறந்துவிடாதே.
 
      லட்சுமியால் அவளை இப்போது ஓரளவு புரிய முடியும்போலஇருந்ததுஆனாலும் இன்னும் ஒரு புதிர் அங்கே இருக்கிறது. “சரிஅப்படியே இருக்கட்டும்ஆனால் தொடர்ந்தும் ஏன்  சுப்பர்வைசர்கோபம் கொள்கிற அளவுக்கு சானுடன் பழகவேண்டும்?உள்ளுக்குள்ளே விருப்பமிருந்தது என்றுமட்டும் சொல்லிவிடாதே."
 
      எம்மா லட்சுமியைப் பார்த்தபடி சிறிதுநேரம் இருந்தாள். பிறகு, "ம்…" என்று தன்னைச் சுதாரித்தாள். "சொன்னால் நம்பமாட்டாய். அதன் உண்மை என்னவென்றால் அந்த இருவரின் அபிமானமும் எனக்கு அவசியமாயிருந்தது."
 
     இப்போது லட்சுமியில் சிறிது கோபமேறத் துவங்கியது. ஒருவரது சுயாதீனத்தில் இந்தவகை மிக அருவருப்பானது. அவளால் ஒப்புக்கொண்டுவிட முடியாதது. அதை எம்மா உணர்ந்திருந்தாளா? அவள் கேட்டாள்: "இருவரையும் விரும்புவதாகக் காட்டிய உன் நாடகம் உண்மையில் தரக்குறைவானதாகவும், சான் அந்தமாதிரி உன்னைத் திட்டித் தீர்ப்பதற்குக் காரணமானதாகவும் இருந்ததை நீ எதுவுமாக நினைக்கவில்லையா, எம்மா? உன் குணநலம் நேற்று மிகவும் கேவலமாக நிந்தைப்படுத்தப்பட்டது என்பதையாவது நீ உணர்கிறாயா?” 
 
     எம்மா யோசித்தாள். சிறிது கோப்பியை உறிஞ்சினாள். பிறகு  பலஹீனமாகச் சிரித்தாள்ஒருவர் கொண்டிருக்கக்கூடிய மொத்தஅவலத்தினதும் பருண்மையாக அது தோன்றியது லட்சுமிக்கு
 
     பின் தனது மௌனமுடைத்து சொன்னாள்: நான் அவன்மீது செலுத்திய விருப்பத்தின் பரிசாக அதைக் கொள்வதைத் தவிர வேறு நான் என்ன செய்யமுடியும்? ஒருவிதமான தேவையின் அணுக்கமொன்று ஆரம்பத்தில் என்னிடத்தில் இருந்திருந்தாலும், அவனை நான் தெரிந்துகொண்ட கணத்திலிருந்து எல்லை கடவாததும், எல்லை கடக்க விடாததுமான ஒரு அவதானத்தில் நின்றுதான் பழகிக்கொண்டிருந்தேன். காயாகவோ பழமாகவோ முடியாத ஒரு பூவின் மலர்வாக அந்த அபிலாசை இப்போதும் அவன்மீது இருக்கிறதுதான். அது என் கனவென்று வைத்துக்கொள்ளேன். மனிதர்கள் கனவு காணக்கூடாதா, என்ன? ஆனால் அந்த என்  மனவுணர்வை வெளிக்காட்டும்படி, அவனுக்குப் பிடித்த கேக் வகைகளாக வீட்டிலே செய்துவந்து கொடுக்காமல் இருந்திருக்கலாம்தான்.  இவ்வளவு காலமாக எந்த ஆண்சுகமும்இல்லாமல் வாழ்ந்துவிட்ட எனக்கு அது பெரிய காரியமாகவும்இருந்திருக்காதுஒருவேளை அவனைக் கண்டு திமிறத் துவங்கிய என் ஆசைகள் அடங்க மறுத்து இருந்துவிட்டனவோ என்னவோமனம்கூட சொல்கிறபடி கேட்காத புதிர் கொண்டது, லக்சோ. எவரது மனதும்தான். அது மென்மையானதோ கடினமானதோ,  நுட்பமாகவே இருக்கிறது. எப்படியோ, அது என்னுடையபிழையென்பதை நான் ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும்அது எனக்கு முன்பே தெரிந்திருந்ததுதான். ம்…! தெரிந்தும்தான் அதைச் செய்தேன்."
 
      திடுக்கிட்டாள் லட்சுமி. "தெரிந்துகொண்டுமா செய்தாய்? என்னால் உன்னைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை, எம்மா."  
 
      "அது கஷ்டம்தான், லக்சோ. மனத்துக்குள் எவ்வளவு விகாசம் கொண்டிருந்தாலும் பாதி வாழ்க்கையைத்தான் நாமெல்லோரும் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். அதில் பாதியையேனும் சொல்ல எனக்கு மொழி இல்லாமல் இருக்கிறது. எஞ்சியதை எப்படியோ சொல்லித் தொலைக்கிறேன், சிரமப்பட்டென்றாலும் புரிந்துகொள், தோழி. உண்மையில் ஒரு தேவை…  ஒரேயொரு தேவைதான்… தொடர்ந்தும் என்னை அவ்வாறு இயங்க வைத்தது." 
 
               "நிர்ப்பந்தம், அவசியமென்று சொல்லிச் சொல்லி எல்லாவற்றிற்கும் பணிந்து போய்விட்டாய்.  இப்போது ஒரு தேவைக்குப் பணிந்துபோனதாய்ச் சொல்லப்போகிறாயா?"
 
      "இப்போது பார்லக்சோ,  சுப்பர்வைசருடன் நான் சரஸமாகப்பழகத் துணிந்தேனென்றால்அதற்கு என்னிடமிருந்த ஒரே பலம்சான் அங்கே இருக்கிறானென்பதுதான். அவன் ஒருவகையில்எனக்கொரு பாதுகாப்பாக அங்கே இருந்தான்நிர்ப்பந்தங்களால் எவரும் என்னை அணுகமுடியாத நெருப்பு வளையமாக இருந்தான். தொட்டும் பட்டும் சிரித்தும் பேசுவதை நான் இளகிவிட்டேனெனகொண்டுவிட்டாலும் சுப்பர்வைசர் நெருங்கமுடியாதபடி எல்லைக் காவலனாக அவன்தான் இருந்தான்உனக்கு ஆச்சரியமாக இருக்கிறதா? ஆனால் அதுதான் உண்மை. சானின் பலமும் உக்கிரமும்தான் இப்போதும் என்னை அங்கே காவல்செய்துகொண்டு இருக்கின்றன.
 
     நீண்டநேரமாயிற்று லட்சுமியின் உறைவு தெளிய.
      'வாழ்க்கை எவ்வளவு மகத்துவமானதென எவரும்பரவசப்பட்டுக்கொள்ளட்டும்ஆனால் அது பயங்கரங்களையும் கூடவே கொண்டிருக்கிறதுஅதை மிக அவதானமாக வாழ்ந்துகழிக்கவேண்டிய நிலைமைதான் எல்லோருக்கும் இருக்கிறது.எனக்கோ எம்மாவுக்கோ எம்போன்ற வேறு பெண்களுக்கோ அது இன்னும் சிக்கலானது. மேலும் சிக்கலானது ஒரு தனித்தாய்க்கு. அவள் ஒருவகையில் வேரில் பழுத்த பழம்போல நினைக்கப்பட்டு விடுகிறாள். உறவுக்கு ஏங்கும் உணர்ச்சிகளின் சாத்தியம் அவளை எவரின் இலக்காகவும் ஆக்கிவிடுகின்றது.'
  
    ஒரு புரிதலின் அமைதி லட்சுமியில் விழுந்தது
               "என்ன, லக்சோ, பேச்சைக் காணவில்லை?"
               “ம்… உன்னுடைய அந்தத் தேவைதான்மூலப்பிரச்னையாய் எல்லாக் குழப்பங்களையும் உள்ளடக்கிக்கொண்டு இருந்திருக்கிறது. நேற்றைய ரஸாபாசம் அதன் ஒரு விளைவுதானே? ஒரு அவசியத்திலானதாக உன் நடத்தையை ஏற்கமுடியுமாயினும், நானே அவ்வாறு என்றைக்கும் ஒழுகிவிடமாட்டேன் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது” என்றாள் லட்சுமி.
 
      சிறிதுநேரம் கோப்பியைக் குடித்தபடி எம்மா இருந்தாள்.  வெளியே சென்றுவர அந்தரம்பட்டவள்போல் தோன்றினாள்.கோப்பியின் பின் அவளுக்கு சிகரெட் புகைக்கவேண்டியதாலாய் அது இருக்கலாம்ஆனாலும் இன்னும் அமர்ந்திருந்தபடியேசொன்னாள்: “நீ சொல்வது சரிதான்பெரும்பாலான இந்தியப் பெண்களால் அவ்வாறெல்லாம் நடந்துவிட முடியாது. ஏற்றுக்கொள்வதே பலருக்கு கஷ்ரமாக இருக்கும். ஆனாலும் இதைஎம்மாவாகிய என்னுடைய தேவை என்பதாக இல்லாமல்ஒருபெண்ணுடையதாக  உன்னால் பார்க்கமுடிந்தால் நீ இன்னும் தெளிவடைந்துவிடுவாய். அவ்வாறு நான் செய்யாது விட்டிருந்தால்அந்த இரண்டு பேரில் யாராவது ஒருவனால் வெறும் பெண்ணுடலாய் நான் பாவிக்கப்பட்டிருக்கும் அபாயமும்நேர்ந்திருக்கலாம். சிலவேளை இரண்டுபேராலுமே. வாழ்வின் தேவையை நிறைவேற்றச் செல்கையில்  ஒரு பெண்ணாய் என்தப்புகைக்கான வழி எனக்கு இதுவாக இருந்துவிட்டது. அவ்வளவுதான். தனித்தாயாய் வாழும் ஒரு பெண்ணைநோக்கிய இந்தவகை அபாயங்களை எது செய்து சமாளித்தால்தான் என்ன, ம்?
 
     இனி அதுபற்றிப் பேச எதுவுமில்லைப்போல் இருவரிடையிலும் ஒரு நிறைவின் மௌனம் விழுந்தது.
000

 

 நன்றி: தீராநதி, அக். 2018
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.