Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நவதாராளவாதத்துக்கு எதிரான இறையாண்மையைப் பரப்புதல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நவதாராளவாதத்துக்கு எதிரான இறையாண்மையைப் பரப்புதல்

Editorial / 2018 நவம்பர் 20 செவ்வாய்க்கிழமை, மு.ப. 05:22 Comments - 0

image_4f320c20eb.jpg

- அகிலன் கதிர்காமர்

மூன்று வாரங்கள் நீடித்த பரிகாசமான அரசாங்கமும் நாடாளுமன்றத்துக்குள் காணப்பட்ட மூர்க்கத்தனமான செயற்பாடுகளும், பாரதூரமான அரசியல் நெருக்கடிக்குள் நாட்டைத் தள்ளியுள்ளன. நாடாளுமன்ற ஜனநாயகம், அரசமைப்புச் சட்டபூர்வத்தன்மை ஆகியன தொடர்பான கேள்விகளிலேயே, ஊடகங்களின் கவனமும் பொதுமக்களின் கலந்துரையாடலும் கவனஞ்செலுத்துகின்ற போதிலும், இந்த நெருக்கடியின் அடிப்படையான காரணங்களாக, பல தசாப்தங்களாகத் தொடர்ந்த நவதாராளவாதப் பொருளாதாரக் கொள்கைகள் மூலமாக உருவாக்கப்பட்ட ஸ்திரமற்ற நிலைமையும் உடைமையழிப்பும் காணப்படுகின்றன.

கடந்த சில வாரங்களில், ராஜபக்‌ஷவுக்குச் சார்பான கொள்கை வகுப்பாளர்கள், நவதாராளவாதத்தைப் பற்றிய திரிபுபடுத்தப்பட்ட புரிதலை வெளிப்படுத்தி, தங்களது தேசியவாதப் பிரசாரத்தை முன்னெடுத்தனர். பொருளாதாரப் பேரழிவு, ராஜபக்‌ஷவின் நியமனத்தைத் தேவைக்குரியதாக மாற்றியது என அவர்கள் வாதிடுகின்றனர். கடந்த 3 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட நவதாராளவாதத் தாக்குதல்கள், இலங்கையின் இறையாண்மையைப் பலவீனப்படுத்தியுள்ளன என அவர்கள் கூறுகின்றனர். அவர்களின் கருத்தின்படி, இலங்கையின் சொத்துகளின் விற்பனையை நிறுத்துவதன் மூலமும் நாட்டின் இறையாண்மையைக் காப்பதன் மூலமும் தான், பொருளாதார நெருக்கடி தீர்க்கப்பட முடியுமென்கின்றனர். ஜனநாயகத்துக்கு எதிரான ராஜபக்‌ஷவின் அரசியலை ஒரு பக்கமாக விடுத்து, நவதாராளவாதம் பற்றிய அவர்களின் பிழையான புரிதலை, இப்பத்தி கேள்விக்குட்படுத்துகிறது.

ராஜபக்‌ஷ குழுவினரின் இறையாண்மை பற்றிய கலந்துரையாடல், வெளிநாட்டு வெறுப்புடனான தேசியவாதத்தை வெளிப்படுத்துவதோடு, நவதாராளவாத முதலாளித்துவம் காரணமாகச் சாதாரண மக்கள் எதிர்கொள்ளும் மிகப்பாரியளவு உடைமையழிப்பைப் பற்றித் தெரிவிப்பதில்லை. எனவே, இக்கலந்துரையாடல் ஆபத்தானது.

முரண்பாடுகள்

ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி, சர்வதேச நிதியியல் மய்யத்தையும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களையும் ஊக்குவிப்பதில் ஆக்ரோஷமாகக் காணப்பட்டமை என்பது உண்மையானது. ஆனால், நிதிமயமாக்கம், வர்த்தகத் தாராளமயமாக்கல், சர்வதேசத்தால் நிதியளிக்கப்பட்ட பாரிய உட்கட்டமைப்பு/ நகர அபிவிருத்திச் செயற்றிட்டங்கள் ஆகியன, ராஜபக்‌ஷவின் பொருளாதார நிகழ்ச்சித் திட்டத்தின் மத்திய அம்சங்களாக இருந்தன என்பதில், நாம் தெளிவாக இருக்க வேண்டும். இப்படி இருந்தாலும், ராஜபக்‌ஷவின் துறைமுக நகரம்,

ஷங்ரி-லா, ஹம்பாந்தோட்டைத் துறைமுகம் உள்ளிட்ட ஏனைய வேலைத்திட்டங்கள் உள்ளடங்கலான பொருளாதாரக் கொள்கைகள் தவிர்க்கப்படும் அதே நேரத்தில், ஹம்பாந்தோட்டைத் துறைமுகம், கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையம் ஆகியன குத்தகைக்கு வழங்கப்பட்டமை, சிங்கப்பூருடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ஆகியன, ராஜபக்‌ஷ தரப்பினரால் “நவதாராளவாதம்” என வர்ணிக்கப்படுகின்றன.

அதைவிட முக்கியமாக, நவதாராளவாதத்தின் அவ்வளவு குறுகிய வர்ணனையென்பது போதுமானதன்று. ஏனெனில், மக்களின் வாழ்வைப் பாதிக்கின்ற பொருளாதாரச் செயன்முறைகளையும் இயங்கியலையும் பற்றி இது கவனஞ்செலுத்தவில்லை. அரச சொத்துகளும் தேசிய செயற்றிட்டங்களும் வெளிநாட்டு அமைப்புகளுக்கு வழங்கப்படுகின்றன என்பது பற்றி முக்கியத்துவம் வழங்கும் அவர்களது நவதாராளவாதத்தின் வடிவம், பொருளாதார தேசியவாத அரசியலுக்கு ஒப்பானதாகும். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், பொருளாதாரச் செயற்பாட்டில், வெளிநாடு அல்லது தேசிய முதலுக்கு ஆதாயமடைகிறார்களா என்பதைப் பற்றிக் கவனஞ்செலுத்தும் அவர்கள், குறித்த முதல் பற்றியும், சுரண்டலும் உடமையளிப்பும் பற்றியுமான விமர்சனங்களை வழங்க மறுக்கிறார்கள்.

நிதி மூலதனம்

மார்க்ஸிஸ புவியியலாளர் டேவிட் ஹார்வி உள்ளிட்ட ஏனையோரால் வெளிப்படுத்தப்பட்டதைப் போன்று, நவதாராளவாதம் என்பது, நிதி மூலதனத்தின் வர்க்கச் செயற்பாடொன்றாகும். முதலாளித்துவ உற்பத்திச் செயன்முறையில், தொழிலாளர்கள் சுரண்டப்படுவதற்கு மேலதிகமாக, நவதாராளவாத யுகத்தில் நிதி மூலதனமானது, மக்களின் செல்வத்திலிருந்தும் சொத்துகளிலிருந்தும் உரிமைத் தகுதிகளிலிருந்தும் அவர்களைப் பறிக்கிறது. இதற்கு மேலதிகமாக, காணிகளையும் வளங்களையும் மக்களிடத்திலிருந்து பறிப்பதற்கு உட்பட, இச்செயற்பாடுகளுக்குத் தேவையான போது பலம் பயன்படுத்தப்படுகிறது.

மேலதிகமாக, நவதாராளவாதப் பூகோளமயமாக்கலின் கீழ், ஒவ்வொரு நாட்டினதும் நிதி, வங்கியியல் துறைகள் ஒருங்கிணைக்கப்பட்டு, பூகோள நிதியியல் திட்டமொன்று உருவாக்கப்படுவதால், பூகோள, தேசிய நிதி மூலதனத்துக்கு இடையிலான வித்தியாசம் தொடராது. இதில், பூகோள நிதியியல் நிறுவனங்களும் அவற்றின் உள்ளூர்ப் பங்காளர்களும் உட்பட, நிதி மூலதனமே அடைவுகளைப் பெற, உழைக்கும் மக்கள் தோல்வியடைகின்றனர்.

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபத்து எட்டாம் (1978) ஆண்டு கொண்டுவரப்பட்ட திறந்த பொருளாதாரக் கொள்கைகளைத் தொடர்ந்து, நிதியியல் நிறுவனங்களும் சில வங்கிகளும் கூட தகர்ந்துபோவதால் தூண்டப்படும் நெருக்கடிகள், அவ்வப்போது ஏற்பட்ட வண்ணம், இலங்கையின் நிதித்துறை விரிவடைந்து வருகிறது. கடந்த ஒரு தசாப்தகாலமாக, நிதியியல் துறையின் வளர்ச்சி, கணிசமானளவு துரிதமாகியுள்ளது. குறிப்பாக, போர் முடிவடைந்த பின்னர், பூகோள மூலதனத்தின் உள்வருகை ஆகியவற்றின் பின்னர், இந்நிலைமை உருவாகியுள்ளது. இலங்கையிலுள்ள பல நிதியியல் நிறுவனங்கள், உள்ளூர் நிதியாளர்களால் உருவாக்கப்பட்டு, உரிமைப்படுத்தப்பட்டுள்ள போதிலும், பெரிய வங்கிகள், அரசால் உரிமைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிதியியல் நிறுவனங்களும் வங்கிகளும், பூகோள நிதியியல் கட்டமைப்பொன்றுடன் ஒருங்கிணைக்கப்பட்டு, பூகோள நிதியாளர்களிடமிருந்து முதலீடுகளும் கடன்களும் பெறும் வகையில் காணப்படுகின்றன. அவ்வாறான நிதி மூலதனமே, குத்தகைக்கு வழங்குதல், நுண் நிதி, அடைவு வைத்தல் வணிகங்கள் ஆகியவற்றின் பிரதான விரிவுபடுத்தலின் பின்னணியில் உள்ளதோடு, அதிகரிக்கும் கடன் நிலைமைக்கு மத்தியில், உழைக்கும் மக்களின் உடைமையழிப்பில், இவையே அதிகளவு பொறுப்பானவையாக உள்ளன.

எங்களது ஞாபகத்திறன், குறைந்தளவிலேயே உள்ளது போலுள்ளது. நிதி மூலதனம் பெருகுவதற்கான வழியேற்பாடுகளை வழங்குவதில், ராஜபக்‌ஷ அரசாங்கம் முன்னின்றது. கொழும்பு பங்குச் சந்தையைப் பெருப்பிப்பதற்காக ஊழியர் சேமலாப நிதியைத் திசைதிருப்பியமை, காப்புறுதித் துறையின் விரிவாக்கம், போரின் பின்னர் பாரிய சர்வதேசக் கடன்களை அரச வங்கிகள் பெறுவதற்கான அழுத்தம் போன்ற, மூலதனச் சந்தைகளின் ஊக்குவிப்பு நடவடிக்கைகள், தேசிய பொருளாதாரத்தை மிகப்பாரிய அளவில் நிதிமயமாக்குதல் நோக்கிச் செலுத்தியமையோடு, பூகோள நிதி மூலதனத்தோடு நாட்டை ஒருங்கிணைக்க வைத்தது. உள்வந்த பெருமளவிலான பூகோள மூலதனங்கள், தொடர்மாடி வீடுகள் உள்ளிட்ட மனை விற்பனைத் துறையில் முதலிடப்பட்டன. கொழும்பின் நகரமயமாக்கல், அழகுபடுத்தல் ஆகியவற்றை ஊக்குவிக்கும் கொள்கைகளால், இவை ஆதரவளிக்கப்பட்டன.

பங்குச் சந்தையின் வளர்ச்சி, மனை விற்பனைத் துறையின் விரிவாக்கல் ஆகியன, ஊகத்தின் அடிப்படையிலும் நிதி மூலதனத்துக்கான பெருமளவு இலாபத்தை ஈட்டிக் கொடுப்பதன் அடிப்படையிலும் காணப்பட்டன. ஆனால், மீள மீள முன்வைக்கப்பட்ட ஊக அடிப்படையிலான வளர்ச்சிகள் உடைந்து, சமூக நலன்புரித் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டுக் குறைப்பும் அரச சேவைகள் தனியார்மயப்படுத்தப்படுவதையும் நியாயப்படுத்தப் பயன்படுத்தப்பட்டதால், உழைக்கும் வர்க்க மக்கள், உடைமையழிக்கப்பட்டனர்.

நவதாராளவாதச் சொத்துக் குவிப்பு என்பது, இலவசக் கல்வி, இலவச சுகாதாரம் போன்ற, பொதுமக்களின் உரித்துகளை இலக்குவைக்கிறது. கல்வியின் தனியார்மயப்படுத்தலும் வர்த்தமயப்படுத்தலும், தனியார் சுகாதார, சுகாதாரக் காப்புறுதி சேவைகளின் ஊக்குவிப்பும், இலாபமீட்டும் வணிகங்களுக்கான புதிய வழிகளாக மாறியுள்ளன.

இந்தப் பின்னணியில், குறிப்பாகக் கடந்த தசாப்தகாலத்தில், நாட்டில் ஏற்றத்தாழ்வு அதிகரித்த வண்ணமிருக்கிறது. வருமானமும் செல்வமும் ஆகியவற்றில் காணப்படும் வித்தியாசம், ஏற்றுக்கொள்ளப்படத்தக்க சமூக நலன்புரிக்கான அணுக்கம் ஆகியவற்றில், இந்த ஏற்றத்தாழ்வு அதிகரிக்கிறது. மறுபக்கமாக, நிதி, கட்டுமானத் தொழிற்றுறைகளின் மூலமாக, சிறிய செல்வந்த வர்க்கமொன்று உருவாகி, தங்களுடைய மிகப்பெரிய மாளிகைகளையும் சொகுசு வாகனங்களையும் காண்பிக்கின்றன.

பொருளாதாரத் தேசியவாதம்

உண்மையில் பார்த்தால், போருக்குப் பின்னரான ராஜபக்‌ஷ அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகளோடு ஒப்பிட்டால், 2015ஆம் ஆண்டுக்குப் பின்னரான சிறிசேன - விக்கிரமசிங்க அரசாங்கத்தின் நவதாராளவாதப் பொருளாதாரக் கொள்கைகளோடு வித்தியாசத்தைக் கொண்டிருக்கவில்லை. இதன் காரணமாகத் தான், பொருளாதாரத்தின் நவதாராளவாதப் பாதைக்கான ராஜபக்‌ஷவுக்கு ஆதரவானவர்களின் விமர்சனங்கள், பலவீனமாக உள்ளன. இறையாண்மைக்குப் பாதிப்பு என்ற வகையான, தேசியவாத வாதங்களைப் பிடித்துக்கொண்டிருக்க, அவர்களுக்குக் கட்டாயமேற்பட்டுள்ளது. முரண்நகையாக, இறையாண்மைப் பிணைமுறிகளை விற்கும் முன்னெடுப்புகளை, ராஜபக்‌ஷ அரசாங்கம் தான் ஒரு தசாப்தத்துக்கு முன்னர் ஆரம்பித்தது என்பதை, அவ்வாறான ஆதரவாளர்கள் கருத்திற்கொள்வதில்லை. அடுத்த சில ஆண்டுகளில், பில்லியன் கணக்கான ஐக்கிய அமெரிக்க டொலர்கள், இறையாண்மைப் பிணைமுறிகளுக்காக மீளச்செலுத்தப்பட வேண்டியுள்ள நிலையில், சர்வதேச நாணய நிதியம், பூகோள நிதி மூலதனத்தால் ஆதரவளிக்கப்படும் ஏனைய தரப்படுத்தல் முகவராண்மைகளுக்கு, மேலதிக நவதாராளவாத சீர்திருத்தங்களை உந்துவதற்கு, இக்கடன்கள் வாய்ப்பை வழங்குகின்றன.

இறையாண்மையைப் பற்றிய தேசியவாத வாதங்கள், வர்த்தகத்திலும் முதலீட்டிலும் கைச்சாத்திடப்பட்ட இருதரப்பு ஒப்பந்தங்கள், இலங்கையின் சொத்துகளும் செல்வங்களும் எவ்வாறு விற்கப்படுகின்றன ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டுள்ளன. ஆனால், உள்ளூர் நிதியாளர்களால் முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்கள் காரணமாகச் சுரண்டலும் உடைமையழிப்பும் இடம்பெறுவதைப் பற்றியோ அல்லது உள்ளூர், வெளிநாட்டு மூலதனங்கள் இணைதல் பற்றியோ, அவர்களிடம் பதிலில்லை. மேலதிகமாக, மூன்று வாரங்களாக நீடித்த ராஜபக்‌ஷ அரசாங்கத்தின் பொருளாதாரக் கருத்துகள், வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்ப்பது என்ற மட்டத்திலேயே காணப்பட்டது. இக்கருத்துகள், ராஜபக்‌ஷவின் கொள்கை பரப்பாளர்களால் தவிர்க்கப்பட்டிருந்தன.

இந்த முரண்பாடுகள் ஒருபக்கமாகவிருக்க, ராஜபக்‌ஷவுக்கான ஆதரவான இந்த விமர்சனங்களின் உண்மையான கருத்து, நவதாராளவாதம் பற்றியோ அல்லது மக்களின் இறையாண்மை பற்றியோ இல்லை. ஏனெனில், உண்மையான எந்தவொரு விமர்சனமும், மக்களின் சுரண்டலும் உடைமையழிப்பும் பற்றிக் கவனஞ்செலுத்தியிருக்கும். எனவே இவ்விமர்சனங்கள், தேசம், தேசிய இறையாண்மை ஆகியன பற்றிய அவர்களின் கருத்துருவாக்கம் பற்றியதே. இவ்விரு விடயங்களும், ராஜபக்‌ஷ அரசாங்கத்துக்கான தேசியவாத ஆதரவை உயர்த்துவதற்கான முயற்சியாகும்.

அதிகாரத்தைத் தக்கவைப்பதற்கான இந்தத் தேசியவாதப் பிரசாரம், வெளிப்புறத் தலையீடு என்ற வெளிநாட்டவர்களுக்கு எதிரான அச்சத்தை அடிப்படையாகக் கொண்டதோடு, அவ்வாறான வெளிப்புற அழுத்தங்களை எதிர்த்து நிற்கக்கூடிய தேசியவாத நடவடிக்கைக்குப் பொருத்தமான பலமான தலைவராக, மஹிந்த ராஜபக்‌ஷ காண்பிக்கப்படுகிறார். ஏகாதிபத்தியத் தலையீட்டுக்கு எதிரான சில இடதுசாரிகளும், இவ்வாறான பிரசாரத்தில் வீழ்ந்துபோனார்கள். ஏனென்றால், வெளிப்புறச் சக்திகளுக்கான தமது எதிர்ப்பு, ஜனநாயகம், சமத்துவம், பொருளாதார நீதி ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் காணப்பட வேண்டுமென்பதை அவர்கள் மறந்துவிட்டார்கள். கவலைக்குரிய விதமாக அவர்கள், ஜனநாயகம், மக்களின் பொருளாதார வாழ்வுகள் ஆகியவற்றுக்கு எதிராக, தேசிய இறையாண்மை என்ற பெயரில் தாக்குதல்களை மேற்கொள்ளும் அதிகாரவய தேசியவாதியின் கீழ் வீழ்ந்துவிட்டார்கள்.

சிங்கள - பௌத்த தேசியவாதமாக இருந்தாலும், தமிழ்த் தேசியவாதமாக இருந்தாலும், தேசியவாதமென்பது, தேர்தல் பிரசாரங்களுக்கான வலிமையான சக்தியாகும். இனச் சமூகங்களைப் பிளவுபடுத்தி, தேர்தல் ஆதரவை வலுப்படுத்த அது பயனுள்ளது என்பது, காலங்காலமாக நிரூபிக்கப்பட்டதாகும். ஆனால் அந்தச் செயன்முறையில், அச்சத்தையும் எதிர்ப்புக் கொள்கைகள் மீதான வன்முறையையும் ஏவுகிறது. அவ்வாறான தேசியவாதப் பிரசாரங்களால் தூண்டப்படும் வெளிநாட்டு வெறுப்பு, “உள்ளுக்குள் காணப்படும் எதிரிகள்” மீதான பழிவாங்கலாக அமையும். அவ்வாறானவற்றில், நாட்டுக்குள் காணப்படும் ஒன்று அல்லது வேறு சிறுபான்மைச் சமூகம் மீதான தாக்குதல்கள் அல்லது கடந்த 5 ஆண்டுகளில் முஸ்லிம் சமூகம் மீதான தாக்குதல்கள் ஆகியன உள்ளடங்குகின்றன.

காத்திரமான பொருளாதார மாற்றுத் திட்டமொன்று இல்லாத நிலையில், ராஜபக்‌ஷவின் பொருளாதாரம் நிலைபெறுவதற்கு வாய்ப்பு வழங்கப்படுமாயின், இறையாண்மை பற்றிய தேசியவாதப் பிரசாரங்கள், பிரிவினை பற்றிய அச்சமூட்டலுடன் இணைந்து, கடந்த தசாப்தத்தில் நாங்கள் பார்த்த நவதாராளவாதக் கொள்கைகளாகவே அமையும். சமூகங்களைத் துருவப்படுத்தலும் அதிகாரவய அதிகாரத்தை நிலைநிறுத்தலும், நவதாராளவாதப் பொருளாதாரமொன்று உறுதியடைவதற்கான நிலைமைகளை ஏற்படுத்துமென்பதூடு, அதில், எதிர்ப்பை நசுக்குதல், மக்களைச் சுரண்டுதல், உடைமையழித்தல் ஆகியனவும் தொடரும் ஆபத்துக் காணப்படுகிறது.

image_534473a499.jpg

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/நவதாராளவாதத்துக்கு-எதிரான-இறையாண்மையைப்-பரப்புதல்/91-225506

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.