Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு கவடு தூரம் -வாசுதேவன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கவடு தூரம் -வாசுதேவன்

KinseyBanner.jpg?resize=300%2C300

பாரிஸ் முதலாவது குறிச்சியில் உள்ள உணவகமொன்றில் சமையற்காரனாக வேலை செய்யும் கண்ணன் பிரஞ்சுக் குடியுரிமை பெற்றுக்கொண்ட வேகத்திலேயே கம்யூனிஸ்ட் கட்சி உறுபினராகவும் தன்னைப் பதிவு செய்துகொண்டிருந்தான்.

அதற்கு மூன்று வருடங்களுக்கு முன்னரே பிரஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பான தொழிற்சங்கத்திலும் உறுப்புரிமை பெற்றிருந்தான். தொழிற் சங்கத்தில் இணைந்ததிலிருந்து சிறிது சிறிதாக இடதுசாரிச் சிந்தனை அவனை ஆக்கிரமித்துக்கொண்டது.

தொழிற்சங்கக் குறிச்சிப்பொறுப்பாளனான டானியல் ப்ரௌவ்ஸ்கிதான் கண்ணனுக்கு கம்யூனிசச் சிந்தனைகளின் கதவுகளைத் திறந்துவிட்டவன். கண்ணனுக்கும் ப்ரௌவ்ஸ்கிக்கும் இடையில் ஒரு முக்கியமான பொதுவிடயம் உண்டு. ப்ரௌவ்ஸ்கி பரிசில் கோவில் வீதியில் வசிக்கிறான். கண்ணன் யாழ்ப்பாணத்தில் கோவில் வீதியில் வசித்தவன். ப்ரௌவ்ஸ்கி  கண்ணனை மற்றை ய கட்சி உறுப்பினர்களுக்கு அறிமுகம் செய்யும்போது இவ்விடயத்தைக் குறிப்பிட மறப்பதில்லை.

கண்ணன் யாழ்ப்பாண நடுத்தர பூர்சுவாக் குடும்பம் ஒன்றில் பிறந்தவன். ப்ரௌவ்ஸ்கியின் இரண்டாவது தலைமுறையினர் போலந்து நாட்டைச் சேர்ந்தவர்கள். இரண்டாவது உலக யுத்தத்தின் பின் பிரான்சில் குடியேறியவர்கள். வேலை தவிர்ந்த நேரங்களில் கட்சிவேலைகளில் இருவரும் சேர்ந்தே ஈடுபடுவார்கள். இருவரும் முப்பத்தாறு வயதானவர்கள் என்பதால் இருவரினதும் நட்பு இலகுவாக வளர்ந்து இறுக்கமடைந்திருந்தது. கண்ணன் விடுமுறைகளில் சென்று வரும்போது ப்ரௌவ்ஸ்கிக்கு பரிசில்கள் வாங்கிவருவான், ப்ரௌவ்ஸ்கியும் கண்ணனுக்குப் பரிசில்கள் கொடுப்பான்.

வார இறுதி நாட்களில் இருவரும் சந்தை வாசல்களில் நின்று கட்சியின் துண்டுப்பிரசுரங்களை வழங்குவதை வழமையாகப் பார்ப்போர் சிலர் இருவரும் சமபாலுறவுக்காரர்களோ என்று சந்தேகப்படுமளவிற்கு அவர்களின் நெருக்கம் அந்நியோன்னியமானது.

கட்சிக்கூட்டங்களில் ப்ரௌவ்ஸ்கி ஆற்றும் உரைகள் கண்ணனை எப்போதும் ஆச்சரியத்திற்குள்ளாக்கும். அத்தனை அழகாகவும், தெளிவாகவும் முக்கியமாகக் கவர்ச்சியாகவும் ப்ரௌவ்ஸ்கி உரையாற்றுவான். உலகத் தொழிலாளர்களின் ஒற்றுமை மற்றும் சமத்துவம் பற்றிய அவனின் கருத்துகள் சமரசங்களை மறுப்பவை. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமே மானிட விடுதலையின் மறுக்கமுடியாத பாதை என்பான். ஓரளவு சரியாக பிரஞ்சு மொழி கதைப்பான் எனினும், தானும் ப்ரௌவ்ஸ்கியைப் போல் ஒரு நாள் கவர்ச்சியான உரையாற்றுவேன் எனும் நம்பிக்கை கண்ணனிடமிருந்து.

ப்ரௌவ்ஸ்கியும் அவனின் வாழ்க்கைத் துணைவி இரினாவும் கண்ணனை அவ்வப்பொழுது இராப்போசனத்திற்கு அழைக்கும் வழமைகொண்டிருந்தார்கள். இரினா பேரழகி அல்லவென்றாலும் அவளிடம் அதீதமான ஒரு கவர்ச்சியிருந்தது. எல்லோரையும் சிரிக்கவைக்கும் நகைச்சுவை நிரம்பியது அவளின் உரையாடல். ஒரு தடவை இவ்வாறு உணவருந்தும்போது ப்ரௌவ்ஸ்கியைப் போன்று அழகான பிரஞ்சு மொழியில் தானும் கட்சியில் உரையாற்றக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசையைக் கண்ணன் வெளியிட்டான். அது ப்ரௌவ்ஸ்கிக்குப் பிடித்திருந்தது. தன்னை ஒரு ‘மொடலாக’ கண்ணன் ஏற்றுக்கொண்டிருப்பதை எண்ணும் போது அவனுக்குள் ஒரு மமதை பூத்தது.  இரினாவின் முன்னால் தன்னைக் கண்ணன் முதன்மைப்படுத்தியது அவனின் சுயமதிப்பை வியாகப்படுத்தியது. இருப்பினும் தன்னுடைய பேச்சு வன்மைக்கு தன்னைத் தயார் செய்தவள் இரினாதான் என்ற விடயத்தை வெளிப்படையாகவே ப்ரௌவ்ஸ்கி கண்ணனிடம் சொன்னான்.

கண்ணனின் ஆர்வம் இரினாவிற்குப் பிடித்திருந்தது. “உன்னை நான் ப்ரௌவ்ஸ்கியைப் போன்று  நாவல்லுனாக மாற்றுகிறேன். உன்னைப் போன்றவர்கள்தான் கட்சியின் எதிர்காலம் என்பதால் அந்தக் கடமையை நான் ஏற்றுக்கொள்கிறேன்” என்று முகம் மலர இரினா கூறினாள். இந்த விடயம் ப்ரௌவ்ஸ்கிக்கும் பிடித்திருந்து.

கண்ணணோ கடினமான உழைப்பாளி. குறிகிய காலத்துள் தனக்கென ஒரு வீட்டை விலைக்கு விலைக்கு வாங்கவேண்டும் எனும்  இலக்கில் அவன் உழைத்துக் கொண்டிருந்தான். இருப்பினும் இவ்வியடத்தைக் கண்ணன் ப்ரௌவ்ஸ்கியிடம் சொல்லவில்லை. தனிச்சொத்துச் சேகரிப்பிற்கு அவன் எதிரானவன். குடும்ப அமைப்பு என்பது கம்யூனிசக் கொள்கைக்கு முரண்பாடனது எனும் கருத்தில் அவன் தான் திருமணம் செய்யப்போவதில்லை என்பதையும் இரினாவிற்கு ஆரம்பத்திலேயே அறிவித்தும் இருந்தான்.

பொதுவிடங்களில் அரசியலுரைகளை எவ்வாறு முன்னெடுப்பது என்பது பற்றி கண்ணனுக்கு வாரத்தில் இருநாட்கள் இரினா வகுப்பெடுப்பது என்று தீர்மானமாகியது. ஆர்வமிகுதியாக இருந்தபோதும் கண்ணனின் வேலைப்பழுவினால் ஆரம்பத்தில் ஒரு நாள் மட்டுமே ஒதுக்கமுடியும் கூறிக்கொண்டான்.

ஒவ்வொரு ஞாயிறு தினமும் தொண்ணூறு நமிடங்கள் செயின் நதிதீரத்திலுள்ள ஒரு பிரபல கபே ஒன்றில் இருவரும் சந்தித்தார்கள். ஞாயிறு தினங்களில் தான் உள்வாங்கும் விடயங்களை இரினாவிடமிருந்து கற்றுக்கொள்ளும் நுட்பங்களை கண்ணன் மற்றைய நாட்களில் பரீட்சித்துப் பாரத்துக்கொண்டான்.  வேலை செய்தவாறே தன் மூளையின் ஒரு பகுதியை அவன் பேச்சுவன்மையின் நுட்பங்களை ஆய்வு செய்வதற்கே ஒதுக்கிக்கொண்டான். இரினா தன் பாடங்களை இரண்டு பகுதியாக வகுத்து விரிவுரை செய்தாள். முதலாவுது கோட்பாட்டியல், இரண்டாவது மொழியியல் நாவன்மை. இவ்விரண்டையும் எவ்வாறு சரியான விகிதத்தில் கலந்து உரையாற்றல் கலையை வளர்க்க வேண்டும் என்பதை இரினா கண்ணனுக்குத் தெளிவுபடுத்தினாள்.  கண்ணனுக்கு பிரபல வழக்கறிஞர்கள் எவ்வாறு தம் வழக்குரைகளைக் கட்டமைக்கிறார்கள் என்பது பற்றிய நுட்பங்கள் பற்றிய வீடியோக்களையும் காண்பித்தாள்.

சிறிது காலத்தில் கண்ணனின் வளர்ச்சியைக்கண்டு ப்ரௌவ்ஸ்கி அதிசயித்தான். கம்யூனிச வளர்ச்சிக்கு முண்டு கொடுக்க தன்காரணமாக இன்னொரு தூண் நிமிர்வதைப்பார்க்க அவனுக்குப் பெருமையாக இருந்தது.  வாரத்தில்  இரண்டு நாட்கள் வகுப்பு நடாத்துவது எனத் தீர்மானமாகியது.

“கண்ணன், இந்த நாட்டில் கம்யூனிசக் கட்சிக்கான ஆதரவு சரிந்து கொண்டே செல்கிறது. பாசிசக் கட்சியான தேசிய முன்னணி கடந்த தேர்தலில் பாரிய வெற்றியை ஈட்டியிருக்கிறது. அது இந்தத் தேசத்தை ஆபத்து நிலைக்குக் கொண்டு செல்லலாம். அந்நிலையைத் தவிர்ப்பதற்கு உன்போன்றவர்களின் திறமையும் அறிவும் பயன்படவேண்டும்” என்று ப்ரௌவ்ஸ்கி கண்ணனிடம் அடிக்கடி கூறிக்கொள்வான்.

இரினாவும் கண்ணனும் வாரத்தில் இருமுறை சந்தித்துக் கொண்டார்கள். கண்ணனின் அபார முன்னேற்றம் இரினாவிற்கு ஆச்சரியத்தை அளித்தது. அறிவியல் ரசனையையும் தாண்டி அவர்களுக்கிடையில் பரஸ்பர ஈர்ப்பொன்று உருவாகிக்கொண்டிருந்தது. ஆரம்பத்தில் அவர்கள்கூட அதை அறிந்திருக்கவில்லை. கண்ணன் கட்டுமஸ்தான உடல்வாகு கொண்டவன். அவன் பேச்சிலும் நடையிலம் ஒருவித உறுதிப்பாடும், ரம்மியமும் இருக்கும். கணீர் என்ற அவன் குரலும் பெண்களிடத்தில் அவனக்கு ஒரு செல்வாக்கை ஏற்படுத்தியிருந்தது.

வேலைசெய்யுமிடத்தில் அவனுக்கு விசேட நண்பிகள் இருந்திருக்கிறாரகள். எந்த உறவையும் அவன் நீண்டகாலம் தொடர்வதில்லை. இருப்பினும் புத்திஜீவிதப் பெண்ணான இரினா சார்பாக தன்னில் எழுந்து நிற்கும் உணர்வு இதுவரையும் தனக்கு ஏற்பட்டிருக்காத ஒரு புதிய அனுபவமாக அவனுக்குப் பட்டது.

அந்த வசந்தகாலத் தொடக்கத்தில் இரினாவைச் சந்திப்பதற்காக செய்ன் நதிக்கரையின் கபேயிற்குச் சென்றபோது வழியில் தென்பட்ட பூக்கடைக்குச் சென்று ஒரு ரோசாப் பூவை வாங்கிக்கொண்டான். கபேக்குள் நுழையும்போது தனக்காக இரினா காத்திருப்பது கண்ணில் பட்டபோது அவனது மனம் படபடத்துக் கொண்டது. துணிவுடன் அவளை அணுகித் தன்கையில் இருந்த பூவை அவளிடம் நீட்டியபோது இரினா அதை எதிர்பார்த்திருந்தவள் போல் பெற்றுக்கொண்டு கண்ணனைக் கட்டியணைத்து அவன் கன்னத்தில் ஆழமான முத்தமொன்றைப் பதித்தாள்.

“இன்று உனக்கும் நான் ஒரு பரிசு கொண்டு வந்திருக்கிறேன்” என்று கூறிய இரினா தன் கைப்பையிலிருந்த ஒரு சிறிய பொதியை எடுத்து அவனிடம் நீட்டினாள். பிரித்துப்பார்த்த கண்ணனின் கண்ணில் ஒளிபிறந்தது. அது றோலாண் பார்த் எழுதிய ‘காதலுரையாடல் துண்டங்கள்’. தன் தடைவைக்குத் தானும் இரினாவை அணைத்து அவள் கன்னத்தில் முத்தத்தைப் பதித்தான் கண்ணன். இத்தடவை அணைப்பு அதிக நேரம் நீடித்ததை இருவருமே உணர்ந்து கொள்ளவில்லை.

“கண்ணன் எனக்கு அச்சமாக இரக்கிறது. நாங்கள் ஒரு ஆபத்தான விளையாட்டில் ஈடுபட்டிருக்கிறோம். ப்ரௌவ்ஸ்கியின் மீது எனக்குக் காதல் இல்லை. ஆனால் அவன்துன்பப்படுவதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது. நான் இனிவரும் நாட்களில் உனக்கு வகுப்பெடுவதற்கு வரமாட்டேன். என்னை மன்னித்து விடு என்று கூறியவாறு இரினா தன் ஒறேஞ் யூசைக் குடித்து முடித்தாள். அவள் கண்கள் பனித்திருந்தன. கண்ணன் பேயறைந்தது போலிருக்க அவள் தன் கைப்பையை எடுத்தக்கொண்டு புறப்பட்டாள்.

சோகம் கவிந்த நாட்கள் வாழ்வை மந்தப்படுத்தியிருந்தன. கட்சி அலுவல்களுக்கு போவதைக் கண்ணக் குறைத்துக்கொண்டான். ப்ரௌவ்ஸ்கியின் தொலைபேசி அழைப்புகளுக்குப் பதிலளிப்பதையும் குறைத்துக்கொண்டான். வேலையில் அவனது கவனம் அதிகம் திரும்பியது. இரண்டாவது வேலையையும் பெற்றுக்கொண்டான். தினமும் பதின்நான்கு மணிநேரம் வேலைசெய்தான். அவனின் மனமெங்கும் இரினா நிறைந்திருந்தாள். பல தடவைகள் பெண்களின் சாதகச் சமிக்கைகள் கிடைத்தபோதும் அவன் அதை உள்வாங்கவில்லை. இரினா அவனுக்கு அன்பளிப்புச் செய்த ‘காதலுரையாடல் துண்டங்கள்’ முழுவதையும் வாசித்து வாசித்து மனப்பாடம் செய்து கொண்டான்.

மாதங்கள் பல உருண்டோடின. கடின உழைப்பின் பயனாய் கண்ணன் பாரிஸின் புறநகர்  ஒன்றில் புதிய பெரிய வீடொன்றையும் வாங்கியிருந்தான். பாரிஸில் உள்ள தன் அடுக்குமாடி வீட்டிலிருந்து குடிபெயர்ந்து கொண்டிருந்தான். பொருட்கள் அனைத்தையும் பெரிய வாகனம் ஒன்றில் அவன் ஏற்றிக்கொண்டிருந்து போது அந்த அதிசயம் நடைபெற்றது. இரினா இவனைத் தேடி வந்திருந்தாள். இவனுக்குத்தன் கண்களை நம்பவே முடியவில்லை. ஓடிவந்து கண்ணனைக் கட்டியுணைத்து அவன் உதடுகளில் முத்தம் கொடுத்தாள்.

“நான் என் மனஉணர்வுகள் அனைத்தையும் ப்ரௌவ்ஸ்கியிடம் சொல்லிவிட்டேன். அவனுடன் பொய்யான ஒரு உறவு நீடிப்பதை நான் விரும்பவில்லை. சதா உன்னையே மனதில் வைத்துக்கொண்டு அவனுடன் இருப்பது நான் அவனுக்கிழைக்கும் மாபெரும் துரோகம். மூன்று மாதங்களுக்கு மேலாக நான் பிறிதொரிடத்தில் என் வேலைக்கு அணிமித்துத் தனியாக வாழ்கிறேன்.”

அதுபற்றி எதுவுமே பதிலளிக்காது “இந்தப் பொருட்களை வாகனத்தில் ஏற்றுவதற்கு உதவிசெய் இரினா” என்றான் கண்ணன். புத்தகப்பெட்டியை வாகனத்தில் ஏற்றும்போது ‘காதலுரையாடல் துண்டங்கள்’ ஐ வெளியே எடுத்து அவனிடம் அதைக்காட்டி முழுதாக மனப்பாடம் செய்துவிட்டேன் என்று சொல்லிச் சிரித்தான்.

இரினாவின் தோழி ஒருத்தியுடன் தனக்கிருந்த தொடர்பால் கண்ணனும் இரினாவும் புதிய வீட்டில் குடிபோனதிலிருந்து அனைத்து விடயங்களையும் ப்ரௌவ்ஸ்கி அறிந்திருந்தான்.  ஒரு வித விரக்திநிலை அவனை ஆக்கிரமித்திருந்தது.  கட்சி அலுவல்களையும் கைவிட்டிருந்தான்.

சிலமாதங்களுக்குப் பின் கண்ணன் வேலைக்குச் செல்லும் வழியில் ப்ரௌவ்ஸ்கியின் கட்சித்தோழர் டியூறோணைச் சந்திக்க நேர்ந்தபோது அவனின் கதை கண்ணனைத் தூக்கிவாரிப்போட்டது.  ப்ரௌவ்ஸ்கி கம்யூனிஸ்ட் கட்சியிருந்து விலகிப் பாசிசக் கட்சியான  தேசிய முன்னணியில் இணைந்து அக்கட்சியின் பிரச்சாரப் பிரிவில் தீவிரமாக இயங்குகிறானாம் என்பதே அச்செய்தி.

இரினாவிடம் இவ்விடயத்தைக் கண்ணன் கூறியபோது தானும் அதைக் கேள்விப்பட்தாகக் கூறினாள். ப்ரௌவ்ஸ்கியைப் பொறுத்தவரையிலும் கம்யூனிசத்திற்கும் பாசிசத்திற்குமிடையில் ஒரு கவடுதான் இருந்தது எனக்கூறிச்   சிரித்துக்கொண்டாள்.

வாசுதேவன்-பிரான்ஸ்

 

http://www.naduweb.net/?p=8660

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.