Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய போரியல் பரிணாமங்களும் பாதுகாப்புச் செலவு ஈடு கொடுக்குமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதிய போரியல் பரிணாமங்களும் பாதுகாப்புச் செலவு ஈடு கொடுக்குமா? -அருஸ்

தமிழ் மக்களின் உரிமைக்காக விடுதலைப் புலிகள் ஆயுதம் ஏந்தி போராட புறப்பட்டு தற்போது 30 வருடங்களுக்கு மேல் உருண்டோடிவிட்டன. இந்த காலப்பகுதியில் போராட்ட வரலாறு பேச்சு போர் பேச்சு போர் என்ற சக்கரத்தில் சுழன்று நான்காவது கட்ட ஈழப்போரின் உக்கிரத்தில் வந்து தொங்கி நிற்கின்றது.

அதற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் இந்திய இராணுவத்துடனான போரும் உள்ளடங்கியிருந்தது. எனினும் இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான இந்த நான்கு கட்ட ஈழப்போர்களையும் கருதினால் ஒவ்வொரு கட்டத்திலும் போரின் பரிணாமங்களும், களத்தின் தன்மையும் விரிவடைந்தே சென்றுள்ளன.

முதலாவது ஈழப்போரில் இலங்கையின் காவல்துறையினரும், தரைப்படையினரும் ஒரு முடக்க நிலைக்கு கொண்டு வரப்பட்டிருந்தனர். இரண்டாம் கட்ட ஈழப்போரில் கடற்படையினர் மீதான தாக்குதல்கள் உக்கிரமடைந்ததுடன், தரைப்படையினர் மீதான அழித்தொழிப்புச் சமரும் உத்வேகம் பெற்றது. அதாவது விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் உருவாக்கம் பெற்றிருந்தனர்.

மூன்றாம் கட்ட ஈழப்போரை கருதினால் அதில் முக்கிய அம்சமாக பீரங்கிப்படையணி, மோட்டார் படையணி, வான்காப்பு படையணி ஆகியவற்றின் தோற்றங்களையும், வளர்ச்சியையும் குறிப்பிடலாம்.

தற்போது சத்தமின்றி நிகழ்ந்து கொண்டிருக்கும் நாலாம் கட்ட ஈழப்போரில் விடுதலைப் புலிகளின் வான்படை தோற்றம் பெற்றதும் அதன் தாக்குதல் வலிமை நிரூபிக்கப்பட்டதும் போரின் அடுத்த பரிணாமமாக பேசப்படுகின்ற போதும், விடுதலைப் புலிகள் நீர்மூழ்கிக் கப்பல்களை நிர்மாணித்து விடுவார்கள் என்ற அச்சமும் தற்போது தென்னிலங்கையை ஆட்கொண்டுள்ளது.

செக்கொஸ்லாவாக்கியா நாட்டு தயாரிப்பான சிறிய Zlin Z-143 ரக பயிற்சி விமானங்களை குண்டு வீச்சு விமானங்களாக வடிவமைத்து அதனைக் கொண்டு இலங்கையின் அதியுயர் பாதுகாப்பைக் கொண்ட விமானப்படைத் தளத்தை தாக்கியதும். 400 கி.மீ தூரம் நவீன ராடர்களின் கண்களில் படாமல் பயணித்து திரும்பிச் சென்றதும் விடுதலைப் புலிகளின் தொழில்நுட்ப வல்லமை தொடர்பாக பாரிய திருப்புமுனையை உலகில் ஏற்படுத்தியுள்ளது.

மார்ச் 26 ஆம் நாள் கட்டுநாயக்காவில் நடைபெற்ற இந்த வான் தாக்குதலை தொடர்ந்து விடுதலைப் புலிகளின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு உலகெங்கும் வாழும் தமிழ் புத்திஜீவிகள், பொறியியலாளர்கள், விஞ்ஞானிகள் உதவி வருவதாக அரசு கூறியிருந்தது. ஆனால், அது தவிர்க்க முடியாததே, ஒடுக்கப்படும் தமது இனத்தை காக்க அதன் மக்கள் கைகொடுப்பது உலக நியதி. 1948 ஆம் ஆண்டு இஸ்ரேலை உருவாக்கியதிலும் யூத மக்களின் புத்திஜீவிகளின் பங்குகள் அளப்பரியன.

எனவேதான் நீர்மூழ்கிக் கப்பல்களின் வடிவமைப்பிலும் விடுதலைப் புலிகள் வெற்றி பெற்று விடுவார்கள் என்ற கருத்து நிலவுகிறது. விடுதலைப் புலிகளும் ஒரு முழுத்தேசத்திற்குரிய படைக்கட்டுமானங்களை வடிவமைப்பதிலும், அதிர்ச்சியான தாக்குதல்களை நடத்துவதற்கு ஏதுவாக படைக்கலங்களையும், தாக்குதல் உத்திகளையும் வடிவமைப்பதிலும் ஒருபோதும் பின்னிற்பதில்லை.

1990 களின் பிற்பகுதியில் தமது விமானப்படையின் வடிவமைப்பில் விடுதலைப்புலிகள் கவனம் செலுத்திய அதே சமயம் நீர்மூழ்கிக் கப்பல்களின் வடிவமைப்பிலும் அதிக அக்கறை செலுத்தி வந்துள்ளனர். இலங்கை அரசின் புலனாய்வுப் பிரிவினரும் அதனை உறுதிப்படுத்தும் விதமாக அவ்வப்போது தகவல்களை வெளியிட்டே வந்துள்ளனர்.

1990 களின் முற்பகுதியில் விடுதலைப் புலிகளால் வடிவமைக்கப்பட்ட சிறிய நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று வடமராட்சிக் கடலில் பரிசோதிக்கப்பட்டது. பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட அந்த படகு நீரை உள்ளிழுத்து வெளியேற்றும் பொறிமுறை மூலம் அன்று பரீட்சிக்கப்பட்டது.

பொதுவாக நீர்மூழ்கிக் கப்பல்கள் அவை கொண்டிருக்கும் மேலதிக கொள்கலன்களுக்குள் (Ballast tanks) வெளியில் உள்ள நீரை உள்வாங்குவதால் அல்லது அமுக்கப்பட்ட வாயு மூலம் நீருக்குள் அமிழ்ந்து மிதக்கும் பொறிமுறையை கொண்டுள்ளன.

விடுதலைப் புலிகளினால் வடிவமைக்கபட்ட சிறிய நீர்மூழ்கிக் கப்பலும் நீரை உள்வாங்குவதன் மூலம் நீருக்குள் அமிழ்ந்து மிதக்கும் பொறிமுறையை கொண்டிருந்ததாக அன்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் பின்னர் 2000 ஆம் ஆண்டு தாய்லாந்தின் தென்பகுதியில் உள்ள தீவுகளின் கப்பல் கட்டுமிடம் ஒன்றில் அரைகுறையாக வடிவமைக்கப்பட்ட சிறிய நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றை (Half-built miniature submarine) காவல்துறையினர் மீட்டதாகவும், அது விடுதலைப் புலிகளினுடையதாக இருக்கலாம் என்று இலங்கை அரசு தெரிவித்திருந்தது.

இரண்டு அல்லது மூன்று பேர் பயணம் செய்யக்கூடிய இந்த சிறிய நீர்மூழ்கிக் கப்பல் 1990 களில் விடுதலைப் புலிகளால் வடிவமைக்கப்பட்ட கப்பலை ஒத்த வகை எனவும் இலங்கையின் புலனாய்வுத்துறை அன்று தெரிவித்திருந்தது. ஆனால் விடுதலைப் புலிகள் வன்னியில் அதை வடிவமைக்க முயற்சிக்காமல் தாய்லாந்தில் ஏன் முயற்சித்தார்கள் என்ற கேள்வியால் அந்த தகவல் அடிபட்டு போய்விட்டது.

பொதுவாக கடற்சமர் மூன்று வகையாக பிரிக்கப்படுவதுண்டு மேற்பரப்பின் மீது நடைபெறும் சமர், வான்வழித் தாக்குதல், நீரடித் தாக்குதல் என்பனவாகும். இந்த ஒவ்வொரு தாக்குதல்களும் போருக்கு ஒவ்வொரு வகையான வியூகங்களை கொடுக்கக் கூடியவை.

இந்த சமர்களில் நீரடித் தாக்குதலானது தாக்குதல் நடத்தும் கலம் எதிரியின் கண்களில் படாமல் பயணிப்பது அனுகூலமானது. அதாவது அது அதிக ஆழத்தில் பயணிக்கும் போது அதனை கண்டுபிடித்து தாக்கி அழிப்பது கடினமானது. மேலும் கலம் எதிரியின் கண்களில் படாமல் பயணிப்பதனால் அது தனது இலக்குகளை மிகவும் அண்மையில் நெருங்கி அழித்து விடக்கூடியது.

நீர்மூழ்கிக் கப்பலானது இந்த நேரடியான தாக்குதல் அனுகூலங்களுக்கு அப்பால் பாரிய உளவியல் தாக்கத்தையும், எதிரிப்படைகளின் ஆள், ஆயுத வளங்களின் வீண் விரயங்களையும் ஏற்படுத்தக் கூடியது.

உதாரணமாக 1982 ஆம் ஆண்டு பிரித்தானியாவிற்கும் ஆர்ஜன்ரீனாவுக்கும் இடையில் நடைபெற்ற பேக்லன்ட் போரில் (Falklands War). பிரித்தானியாவின் எச்.எம்.எஸ் ஹெங்குறொர் (HMS Conqueror) என்ற நீர்மூழ்கிக் கப்பல் ஆர்ஜென்ரீனாவின் ஏ.ஆர்.ஏ ஜெனரல் பெல்கிரேனோ (Argentine light cruiser, ARA General Belgrano) என்ற கப்பலை தாக்கி மூழ்கடித்திருந்தது. இதில் 323 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.

இந்த தாக்குதலின் பின்னர் தமது கப்பல்கள் நீர்மூழ்கிக் கப்பல்களின் தாக்குதல்களுக்கு இலகுவாக உட்படலாம் என்பதை உணர்ந்த ஆர்ஜென்ரீனா கடற்படையினர் தமது கப்பல்களை போர் முடியும் வரை துறைமுகம்களுக்குள்ளேயே பாதுகாப்பாக வைத்திருந்தனர்.

அதாவது மிகவும் பரந்த கடற்பிரதேசத்தில் ஏதாவது ஒரு இடத்தில் நடைபெறும் தாக்குதல்களை தடுப்பதற்கு எதிர்த்தரப்பு தனது அதிகளவான வளங்களை பயன்படுத்த வேண்டும் அல்லது களத்தில் இருந்து ஒதுங்க வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்படுகின்றது. இது தான் அதன் நேரடியற்ற மற்றும் உளவியல் தாக்கங்களுக்கான சிறு உதாரணம்.

இலங்கையைப் பொறுத்த வரையிலும் நீர்மூழ்கிக் கப்பலின் தாக்குதல் ஒன்று எதிர்காலத்தில் நடைபெறுமாக இருந்தால் அது அரசின் கப்பல் வர்த்தகத்துறையிலும் கடுமையான தாக்கத்தை உண்டு பண்ணக் கூடியது.

முன்னர் இரண்டாம் ஈழப்போர் காலத்தில் கட்டுமரங்களில் வந்த விடுதலைப் புலிகள் தாக்குதலை நடத்திவிட்டார்கள் என அரசு கூறியதுண்டு. ஆனால் அன்று சிறுகச் சிறுக உருவாகிய கடற்புலிகள் இலங்கைக் கடற்படையினருக்கு சவாலாக இன்று மாறியுள்ளது மிகப்பெரும் போரியல் மாற்றம். அதேபோலவே தற்கொலை தாக்குதலை மட்டும் நடத்துவார்கள் என எண்ணியிருந்த வான்புலிகள் தாக்குதலை நடத்திவிட்டு தளம் திரும்பியதும் ஒரு போரியல் பரிணாமம். எனவே தான் தற்போது விடுதலைப் புலிகள் நீர்மூழ்கிக் கப்பல்களை பயன்படுத்தலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

எனினும் போரியலில் ஏற்படுத்தப்படும் இந்த புதிய தாக்குதல் உத்திகள், அறிமுகப்படுத்தப்படும் புதிய தாக்குதல் கலங்கள். நடந்துவரும் போரில் நேரடியான மற்றும் நேரடியற்ற தாக்கங்களை பெருமளவில் ஏற்படுத்துவதுடன். போரின் போக்கிலும் பாரிய மாற்றங்களை ஏற்படுத்துவதுண்டு.

இரண்டாம் ஈழப்போரில் கடற்புலிகளின் வளர்ச்சியை அடுத்து இலங்கைக் கடற்படையினர் தமது சவட்டன், நீருந்து விசைப்படகுகளின் தாக்குதல் பாவனையை கைவிட நிர்ப்பந்திக்கப்பட்டதுடன், தாக்குதல் வலிமை மிக்க அதிவேக டோரா படகுகளையும் தொடரணிகளாக பயன்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருந்தது.

மூன்றாம் ஈழப்போரில் வளர்ச்சி கண்ட வான்காப்பு படையணியினால் சியாமாச்செற்றி, புக்காரா போன்ற குண்டு வீச்சு விமானங்களை விமானப்படை கைவிட வேண்டி வந்ததுடன், எம்.ஐ24, பெல்212 உலங்குவானூர்திகளின் தாக்குதல்களும் மட்டுப்படுத்தப்பட்டன.

மேலும் கிபீர், மிக்27 ரக நவீன குண்டு வீச்சு விமானங்களையும், ஏவுகணை எதிர்ப்பு சாதனங்களையும் அதிக செலவில் கொள்வனவு செய்ய வேண்டிய நிலைக்கு அரசு தள்ளப்பட்டது. விடுதலைப் புலிகளின் பீரங்கிப் படையணியின் தோற்றமும் அரசிற்கு அதிக செலவு மிக்க போருக்கே வழிவகுத்திருந்தது. பீரங்கிகள் மற்றும் மோட்டார்களை கண்டறியும் கருவிகளை அதிக செலவில் கொள்வனவு செய்ததுடன், பல்குழல் உந்துகணை செலுத்திகளையும் கொள்வனவு செய்யவேண்டிய நிலைக்கு அரசு தள்ளப்பட்டது.

தற்போது உருவாகியுள்ள வான்புலிகளின் தாக்கமும் கடுமையானது, அதாவது நவீன ராடர்கள், வான் தாக்குதல் விமானங்கள், வானில் இருந்து வானுக்கு பாயும் ஏவுகணைகள், விமான எதிர்ப்பு பீரங்கிகள், விமான எதிர்ப்பு ஏவுகணைகள், இவற்றை கையாளக்கூடிய நன்கு பயிற்றுவிக்கப்பட்ட வீரர்கள் என அரசின் முன் உள்ள பட்டியல் மிக்க நீளம்.

புதிதாக திறக்கப்படும் ஒவ்வொரு களமுனையும் அதிக படைவலுவையும், அதிக பொருளாதார வளத்தையும் உறிஞ்சுபவையாகவே உள்ளன. அதாவது அரசினால் வாங்கப்படும் நவீன ஆயுதங்களும், அதன் பாவனையும், அதன் பாராமரிப்புச் செலவுகளும் மிக மிக அதிகமானவை. அவை நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணக்கூடியவை. 2007 ஆண்டிற்கான 139.5 பில்லியன் ரூபா பாதுகாப்பு செலவு ஒதுக்கீடு அரசின் மொத்த செலவீட்டில் பெரும் பகுதியாகும்.

கடந்த காலங்களுடன் ஒப்பிடும் போது இது மிக மிக அதிகம். எனினும் தற்போது உருவாகியுள்ள தீவிரமான போர் நிலைமைகள் இந்த செலவீனத்தை மேலும் அதிகரிக்கவே செய்யும்.

அதாவது ஒவ்வொரு வருடமும் பல பில்லியன் ரூபாய்களை போருக்கு செலவழிப்பதை விட, ஒரே ஆண்டில் அதனை இரண்டு மடங்காக செலவிட்டு நவீன ஆயுதங்களையும், தொழில்நுட்பங்களையும் பெற்று போரை முடித்துவிட்டால் வரும் வருடங்களில் இந்த பாதுகாப்பு செலவுத்தொகையை மீதப்படுத்தலாம் என்பது தான் எல்லா அரசுகளும் ஒவ்வொரு முறையும் போடும் திட்டம்.

ஆனால் விடுதலைப் புலிகளின் புதிய போரியல் வியூகங்கள் அரசின் இந்தத் திட்டங்களை தடுமாற வைப்பதுண்டு. அதாவது காகிதத்தில் போட்டுப்பார்க்கும் போது சரியாகத் தெரியும் கணக்குகள் களத்தில் சரிவருவதில்லை. உதாரணமாக 1992 ஆம் ஆண்டிலிருந்து 2007 ஆம் ஆண்டு வரையான பாதுகாப்புச் செலவுகளை அவதானிக்கலாம்.

அதிகரித்த பாதுகாப்பு செலவு போரை முடிவுக்கு கொண்டுவரவில்லை. மாறாக பொருளாதாரத்தை பாதாளத்திற்கு இட்டுச்சென்றதுடன், போரும் தீவிரமடைந்தே வந்துள்ளது. பொருளாதாரத்தின் மீதான போரின் தாக்கம் வெறும் பாதுகாப்பு செலவை சார்ந்தது அல்ல. அன்னிய முதலீடுகளின் முடக்கம், உள்ளூர், வெளிநாட்டு தொழிலதிபர்களின் வெளியேற்றம், உல்லாச பயணத்துறையின் வீழ்ச்சி, பொருளாதார மையங்கள் மீதான தாக்குதல்கள் என்பனவும் பொருளாதாரத்தில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது.

இவை நேரடியற்ற காரணிகளாக இருந்த போதும் இவற்றின் தாக்கம் சிலவேளைகளில் கணிப்பிட முடியாத மிகப்பெரும் தாக்கத்தை பொருளாதாரத்தில் ஏற்படுத்த கூடியன. உதாரணமாக கட்டுநாயக்க விமானப்படை தளம் மீதான தாக்குதல் 2001 ஆம் ஆண்டின் பொருளாதார வளர்ச்சியை 1.4 ஆக மாற்றி இருந்தது.

அரசின் பாதுகாப்புச் செலவீன அதிகரிப்புக்களுக்கு ஏற்ப விடுதலைப் புலிகள் தமது களங்களை விரிவாக்குவதால் அரசின் கணிப்பீடுகள் ஒவ்வொரு தடவையும் எதிர்மறையாகிப் போவதுண்டு.

தற்போது புதிதாக உருவாகியுள்ள வான்புலிகளின் அச்சுறுத்தல்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கும், அரசினால் 2006 ஆம் ஆண்டு முன்மொழியப்பட்ட பாதுகாப்புச் செலவு ஒதுக்கீடு ஈடுகட்டுமா என்பதுடன், அதன் மூலம் உருவாகும் நேரடியற்ற பொருளாதார தாக்கங்களுக்கும் மக்கள் தாக்குபிடிப்பார்களா? என்பது தான் இன்று அரசை அச்சுறுத்தும் கேள்விகள்.

-வீரகேசரி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.