Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பயம்-பசி-படிப்பில்லை... கதறியழும் கந்தளாய் தமிழர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பயம்-பசி-படிப்பில்லை... கதறியழும் கந்தளாய் தமிழர்

-டிட்டோ குகன், திம்பிரியாகம பண்டார-

"எமது கிராமத்திலிருந்து சுமார் ஒரு மைல் தூரத்திலேயே கந்தளாய் நகரம் இருக்கிறது. அங்கிருந்து, வேண்டிய வாகனத்தில் இங்கு வந்து செல்ல முடியும். எனினும், எமது வீடுகளுக்கு எப்போதும் தபால் கடிதங்கள் கொண்டு வந்து தரப்படுவதில்லை. எமக்கு தெரிந்த எவராவது வந்தால், கொடுத்து விடும்படி கடிதங்களை கடையொன்றில் கொடுத்து விட்டுச் சென்று விடுவார்கள். இதிலிருந்தே தெரிகிறது எம்மீதுள்ள அக்கறையின்மை.

இவ்வாறு கந்தளாய் நகரத்துக்கு அருகிலுள்ள "செஞ்சிலுவை கிராமத்தில்" (கோயிலடி மாதிரிக் கிராமம்) வசித்துவரும் முருகன் மயில்வாகனம், தனது கிராமத்து வாசிகள் முகம் கொடுத்து வரும் பொதுவான சிக்கல்களில் ஒன்றைக் கூறினார்.

பொதுவாக சைக்கிள்களில் தபால்காரர்கள் தபால் விநியோகத்தை மேற்கொள்ள முடியாத மிகவும் கஷ்டமான பிரதேசங்களில் நிலவும் இதுபோன்ற தபால் விநியோக சிக்கல்கள் அவ்வாறான பூகோள ரீதியான சிரமங்கள் எதுவுமற்ற பிரதேசத்திலும் காணப்படுவது எக் காரணத்திற்காக? இது குறித்து தெரிந்துகொள்ள வேண்டுமெனில் செஞ்சிலுவை கிராமத்தவர்களின் வாழ்க்கை நிலைமைகளை உள்ளார்ந்து பார்க்க வேண்டும்.

1985 ஆம் ஆண்டு கந்தளாய் குளக்கட்டு உடைப்பெடுத்ததால் பாரியளவில் சொத்தழிவுகளுடன் உயிர்ச்சேதங்களும் ஏற்பட்டன. இந்த குளக்கட்டு அருகே நகர எல்லையிருந்த கோவிலுடன் நூற்றுக்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வந்தன. இந்த குடும்பங்களைச் சேர்ந்த 81 பேர் குளக்கட்டு உடைப்பெடுத்தமையால் ஏற்பட்ட நீரின் அசுர வீச்சில் சிக்குண்டு பரிதாபகரமாக உயிரிழந்தனர்.

இதையடுத்து, இருப்பிடங்களை இழந்தவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க பல அமைப்புகள் முன்வந்தன. செஞ்சிலுவைச் சங்கமும் அதிலொன்று. இந்த அமைப்பினரால் கந்தளாய் குளக்கட்டுக்கும் வயல்வெளிக்கும் இடையிலுள்ள பிரதேசத்தில் நிர்க்கதியானவர்களுக்கென 41 சிறிய வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டன. இதில் வீடொன்றுக்கு 20 துண்டுகள் (பேர்ச்சஸ்) நிலப்பரப்பு ஒதுக்கப்பட்டுள்ளது.

வயல்வெளி வைத்திருப்பவர்களிடம் கூலிக்கு வேலை செய்வது அல்லது பங்குகள் அடிப்படையிலான அறுவடை என்பவையே இந்த கிராமத்தவர்களின் பிரதான ஜீவனோபாயமாகவுள்ளது. இதற்கப்பால் கந்தளாய் நகரப் பகுதியில் பல்வேறுபட்ட வேலை ஸ்தலங்களில் தொழிலாளர்களாக பணிபுரிபவர்களும் இங்கு இருக்கின்றனர்.

வசிப்பிட பற்றாக்குறை

குளக்கட்டு உடைப்பையடுத்து 41 குடும்பங்கள் குடியேற்றப்பட்ட போதும், தற்போது இங்கு நூற்றிற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன எனவும் இடப்பற்றாக்குறை மற்றும் நிரந்தர தொழில் இல்லாமை போன்றவை இந்த கிராமத்தவர்கள் முகம் கொடுக்கும் பிரதான பிரச்சினைகள் எனவும் முருகன் மயில்வாகனம் தெரிவித்தார்.

செஞ்சிலுவை கிராமத்தில் வசிக்கும் 58 வயதுடைய சிவகுரு 5 பிள்ளைகளின் தந்தையாவார்.

"எமக்கு இங்கு எப்போதாவது தான் வேலை கிடைக்கும். அதனால், தச்சுத் தொழில் உபகரணங்களையும் எடுத்துக் கொண்டு திருகோணமலை சென்று அங்கிருந்து திரியாய் செல்கிறோம். அங்கு இரண்டொரு வாரங்கள் தங்கியிருந்து விட்டே மீண்டும் திரும்புவோம். ஒரு பேருந்து மட்டுமே சேவையில் ஈடுபடுகிறது. அதுவும், சில நாட்களுக்கு இருக்காது. அத்துடன், பயணத்தின் போதும் எமக்கு சரியான பாதுகாப்பும் இல்லை. இருப்பினும், பசி பெரிதென்பதால் செல்கிறோம்" என்றார்.

"1941 ஆம் ஆண்டு அப்பா மட்டக்களப்பிலிருந்து இங்கு வந்து குடியேறிய போது இப்பகுதி காடாகவே இருந்துள்ளது. அத்துடன், காலி, மாத்தறை பகுதிகளிலிருந்து வந்த சிலரும் இவ்வாறே குடியேறியுள்ளனர்.

புதிய பரம்பரைகள் அவர்கள் மூலமே தோற்றம் பெற்றுள்ளன. சில குடும்பங்கள் முன்னேற்றமடைந்து நகரத்தில் உயர்நிலைக்கு வந்துள்ளன. கோவில் அடியில் குடியேறியிருந்தவர்கள் என்றால் இன்றைக்கும் அப்போதிருந்த நிலையிலேயே இருக்கின்றனர் என சிவகுரு தமது வரலாற்றுச் சான்றுகளை பகிர்ந்துகொண்டார்.

75 வயதுடைய வீரப்பன் பெருமாள் வரகாபொல தோட்டப் பிரதேசமொன்றை பிறப்பிடமாகக் கொண்டவர். இன வன்முறைகளுக்கு ஆளான இவரும் இவரது உறவினர்களும் தமது வாழ்க்கையின் மறு அத்தியாயத்தை கந்தளாய் குளக்கட்டுக்கு அருகிலேயே ஆரம்பித்தனர்.

"1977 ஆம் ஆண்டு வன்முறைகள் ஏற்பட்டபோது, நாம் வசித்துக் கொண்டிருந்த லயன்களை விட்டுவிட்டு துனுமாலே பிரதேசத்திலுள்ள எமது உறவினர் வீட்டுக்குச் சென்று விட்டோம். திரும்பி வந்து பார்த்த போது எமது வீட்டில் எதுவும் மீதமிருக்கவில்லை. சகல சாமான்களும் கொள்ளையடிக்கப்பட்டுவிட்டன. வீடும் தீயிட்டு எரிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் தான் கந்தளாய்க்கு வந்து குடியேறினோம். எனினும், அப்போதிருந்த நிலையிலேயே இன்றும் இருக்கிறோம். எந்த முன்னேற்றமும் இல்லை" என பெருமாள் கூறினார்.

"இரவில் நாய் குரைத்தால் கூட பயப்பட வேண்டிய நிலையிலேயே நாம் இங்கிருக்கிறோம். எமது பிள்ளைகள் குறித்து தான் நாம் அதிகம் பயப்படுகிறோம். எப்படியிருப்பினும் பெண் பிள்ளையொன்று 12 அல்லது 13 வயதை எட்டும் போது, கல்யாணம் செய்து கொடுத்து விடுவோம். பாதுகாப்பு கருதியே நாம் அப்படி செய்கிறோம்" என மேலும் கூறினார் பெருமாள்.

"எனது மகள் வெளிநாட்டில் பணிபுரிய சென்றாள். பல மாதங்களாகியும் தகவல் எதுவுமில்லை. இறுதியில், அவர் அனுப்பிய கடிதமொன்று டவுண் கடையொன்றில் இருப்பதாக தகவல் கிடைத்தது. பிள்ளைக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டாலும் அதை தெரிந்து கொள்ள வழியில்லை. ஏன் எமக்கு இப்படி செய்கிறார்கள்? நாம் என்ன தவறு செய்தோம்? இதை நான் கூறியதாக எழுதிவிட வேண்டாம். பின்னர் எமக்கு பிரச்சினையாகிவிடும்" என பயந்து பயந்து கூறினார் தாயொருவர்.

செஞ்சிலுவை கிராமத்தில் வசித்து வரும் எஸ். அரங்கா 9 ஆம் ஆண்டு வரை படித்துவிட்டு திருகோணமலை தொழில்நுட்ப கல்லூரியில் ஒட்டுவேலை (வெல்டிங்) கற்கைநெறியை கற்று முடித்துள்ளார். அதன் பின்னர் அங்கேயே பயிற்றுவிப்பாளராக பணிபுரிந்த அவருக்கு மாதாந்தம் 7 ஆயிரம் ரூபா சம்பளமாக கிடைத்துள்ளது. எனினும் அதன் பின்னர் நடந்தது என்ன?

"வவுனியாவிலுள்ள பயிற்சி மத்திய நிலையத்திற்கு இடமாற்றம் வழங்கப்பட்டதன் பின்னர், எனக்கு வேலையிலிருந்து விலக வேண்டிய நிலைமை ஏற்பட்டது. உண்மையில் வவுனியா சென்று வருவது, கஷ்டம். அவ்வளவு தூரம் செல்வதற்கு பாதுகாப்பு இல்லை. இறுதியில் வேலையை கைவிட்டு விட்டேன்."

இவரது நிலை செஞ்சிலுவை கிராமத்தில் கட்டுண்டு கிடக்கும் இளைஞர்கள் மற்றும் யுவதிகளின் சிறை வாழ்க்கையின் அவலத்தை வெளிக்காட்டின. செஞ்சிலுவை கிராமத்துவாசியான அந்தோனி சகுந்தலாவின் வீடு சில வருடங்களுக்கு முன்னர் வீசிய புயல் காற்றில் சிக்கி பாதி உடைந்துவிட்டது. மீதப் பகுதியும் உடைந்து விழும் நிலையிலேயே இருக்கிறது. எனினும், உடைந்து விழும் நிலையிலுள்ள அந்த வீட்டிலேயே சகுந்தலா தனது 5 பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். அவரது மூத்த மகளான 16 வயதுடைய சிவகங்கா 8 ஆம் ஆண்டு வரை மட்டுமே கல்வி கற்றுள்ளார். பொருளாதார நெருக்கடி அவரது கல்விப் பயணத்திற்கு தடைபோட்டுவிட்டது.

"எமது அம்மா வெளிநாடு சென்று பிரச்சினை காரணமாக 3 மாதங்களில் திரும்பி வந்துவிட்டார். அவர் இப்போது வீடுகளுக்குச் சென்று கூலி வேலை செய்கிறார். நாளொன்றுக்கு 200 ரூபா கிடைக்கிறது. நான் தம்பி, தங்கைகளை பார்த்துக் கொள்கிறேன். சமைப்பதும் நான் தான். எனது பாட்டியும், சித்தியும் கந்தளாய் குளக்கட்டு உடைப்பெடுத்தில் சிக்குண்டு உயிரிழந்துவிட்டனர். தாத்தா எங்கு சென்றாரென்று தெரியவில்லை" சிவகங்கா தனது வாழ்க்கை அனுபவத்தை கூறும் போது அவரின் கண்கள் சோகத்தில் கனப்பது தெரிகிறது.

"படிக்க ஆசையில்லையா?" என நாம் அவரிடம் கேட்டோம், "படித்து நல்ல உத்தியோகம் பார்க்க ஆசை. இருப்பினும்..." சிவகங்காவின் பெருமூச்சிலிருந்து செஞ்சிலுவை கிராமத்துக்கு உரித்துடைய வேதனைகளும் எதிர்பார்ப்புகளும் வெளிப்பட்டன.

பொது வசதிகள்

செஞ்சிலுவை கிராம வீடுகள் நிர்மாணிக்கும் போது அமைத்து கொடுக்கப்பட்ட சில மலசல கூடங்கள் தற்போது உடைந்து பாவனைக்கு உதவாத நிலையில் காணப்படுகின்றன. சுமார் 10 வீடுகளுக்கு மலசல கூட வசதிகளென்பதே இல்லை. சில வீடுகளின் கூரைகள் பாழடைந்து நடுவில் தாழ்ந்து காணப்படுகின்றன. ஆபத்து மிக்க இவ்வறானா வீடுகளில் சில குடும்பங்கள் வசிக்கின்ற போது அவர்களின் உயிர் பாதுகாப்புக்கு என்ன உத்தரவாதம்?

கல்வி

செஞ்சிலுவை கிராமத்துக்கு அருகிலுள்ள கந்தளாய் விக்னேஸ்வரா வித்தியாலயம் தமிழ் மொழி மூல பாடசாலையாகும். 58 மாணவர்கள் கல்வி கற்கும் இப் பாடசாலையில் 8 ஆம் ஆண்டு வரை இருக்கிறது. 7 ஆசிரியர்கள் இங்கு பணியாற்றுகின்றனர்.

1990 ஆம் ஆண்டிலிருந்து அங்கு பணியாற்றி தற்போது அதிபராக பணிபுரியும் திருமதி பி.குணரட்னம் தனது பாடசாலையில் நிலவும் குறைபாடுகள் குறித்து இவ்வாறு கூறுகிறார்.

"மேலதிகமாக 5 ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர். கனிஷ்ட பிரிவுக்கு 4 ஆசிரியர்கள் அவசியம். கணிதத்திற்கும் சங்கீதத்திற்கும் ஆசிரியர்கள் இல்லை. ஆசிரியர்களின் குறைபாடுகள் நிலவினாலும் நாம் கஷ்டத்திற்கு மத்தியிலும் பிள்ளைகளுக்கு முடிந்த வரையில் பாடம் நடத்தி வருகிறோம். பிள்ளைகளின் பாடசாலை செல்லும் ஆர்வம் குறைந்து வருகின்றது" என அதிபர் கூறினார்.

"பிள்ளைகள் பெற்றோர்களுடன் கூலி வேலைக்கு செல்ல ஆரம்பித்துள்ளனர். இந்த நிலைமையை மாற்றாமல் கிராமத்தில் முன்னேற்றத்தை காண முடியாது" என அதிபர் மேலும் கூறினார்.

"கிராமத்தில் பெரியவர்கள் பலரும் மதுபானங்களுக்கு அடிமையாகி பிள்ளைகளும் அவ் வழியிலேயே செல்வதால், எமக்கு அவர்களை திருத்துவது கடினம்". இவ்வாறு தாய்மார்கள் பலரும் எழுப்பும் குற்றச்சாட்டுகளில் நியாயமான பின்னணி இருப்பதை எம்மால் புரிந்து கொள்ள முடிந்தது.

நிலையற்ற பின்னணி

20 பேர்ச் விகிதம் இடங்களை வழங்கி வீடுகளை நிர்மாணித்துக் கொடுத்த பின்னர், இந்த கிராமத்தின் இயல்பு நிலைமை குறித்து செஞ்சிலுவை சங்கத்தினால் எந்த கண்காணிப்புகளும் மேற்கொள்ளப்படவில்லை. அத்துடன், தனியான கொலனியாக (குடியேற்ற பிரதேசம்) கருதி அரசினாலும் கணக்கிலெடுக்காமல் இந்தப் பகுதி விடுபட்டிருப்பது தெரிகிறது. இங்குள்ள பிள்ளைகளின் போசாக்கின்மை மட்டம் மிகவும் உயர்வாக இருப்பது தரவு மதிப்பீடுகள் இல்லாமலேயே சொல்லக் கூடியதாக உள்ளது.

பல்வேறு பிரதேசங்களிலிருந்து வந்த குடியேறியவர்களின் பரம்பரை என்பதால் சுயகௌரவம் மற்றும் ஒருமைப்பாடு தொடர்பான கருத்து வளர்ச்சி தாமதமாகியிருப்பதை காணக்கூடியதாகவுள்ளது. எனினும், சிங்கள மொழி பேச முடிந்திருப்பதும், சிங்கள விவசாயிகளின் விளை நிலங்களில் வேலை செய்வதன் மூலம், அவர்களுடன் நட்புறவை ஏற்படுத்திக் கொண்டிருப்பதும் செஞ்சிலுவை கிராம மக்களிடையே காணக் கிடைத்த சாதகமான பெறுபேறாகும்.

கந்தளாய் தபால் அதிபர்

செஞ்சிலுவை கிராமத்துக்கு தபால் விநியோகம் மேற்கொள்ளப்படாமை குறித்து கந்தளாய் தபால் அதிபரிடம் கேட்டபோது;

"எமக்கு தபாற்காரர்கள் 6 பேர் மட்டுமே இருக்கின்றனர். இருக்கும் வீடுகளின் எண்ணிக்கையை வைத்து பார்க்கும் போது கடிதங்களை விநியோகிக்க இன்னும் இருவராவது தேவை.

இவற்றை தீர்த்துக் கொள்ள தபால் மறுசீரமைப்பு அறிக்கையொன்றை எடுக்க வேண்டும். நான் இது குறித்து மாகாண அமைச்சருடனும் பேசினேன். விரைவில் இதற்கு தீர்வு கிடைக்கும். அண்மைக் காலத்தில் கந்தளாய் பிரதேசத்தில் புதிய கிராமங்கள் உருவாகியுள்ளன. புதிய வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. அதிகரிக்கும் தேவைகளுக்கு ஏற்ப பணியாளர்களை இணைத்துக் கொள்வதும் அத்தியாவசியம்" என்றார்.

- தினக்குரல்

என்ன கொடுமை இப்படி எத்தனையோ கிராமங்கள் இலங்கையில் இருக்கும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ம் ம், ஈழவன் , தமிழனாகப் பிறந்ததினால் எத்தனை சோகக்கதைகள்.

இவர்களின் சோகம் இப்படி லட்சக்கணக்கில் தமிழ் மக்கள் எமது தாயகத்தில் வாழ்வா? சாவா போரட்டம் நடத்திற்கொண்டு இருக்கிறார்கள்...

இவர்களை மட்டுமல்ல எதிர்கால ஈழத்தைக்கூட காப்பாற்ற வேண்டிய கடமை உலகத்தமிழ் இனத்திடம் உள்ளது.

எல்லைக்கிராமங்களை காப்பாற்ற எதிர்காலத்தில் சீனப்பொரும் மதில் போன்ற மதில் எல்லை முழுவதும் கட்டவேண்டிய தேவையும் வரலாம்....

மனம் வைத்தால் முடியாது எது உண்டு?

ஒற்றுமை பலத்தை கொடுக்கும்

பலம் பலவாய்ந்த கட்டமைப்பைத்தரும்.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.