Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளையராஜா - 75!: ’ராஜா சார்கிட்ட இருக்கிற கெட்டபழக்கம்!’ – ஏஆர்.ரஹ்மான் ஓபன் டாக்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
 
arrajaJPG
Published : 03 Feb 2019 20:32 IST
Updated : 03 Feb 2019 20:33 IST
 

இளையராஜா சாரிடம் இருக்கிற கெட்டபழக்கம் என்ன தெரியுமா? என்று இசையமைப்பாளர் ஏஆர்.ரஹ்மான் இளையராஜா 75 விழாவில் தெரிவித்தார்.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில், இளையராஜா 75 எனும் பிரமாண்டமான நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் ஏராளமான திரையுலகினர், ரசிகர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

தவறவிடாதீர்

நேற்று 2ம் தேதியும் இன்று 3ம் தேதியும் என இரண்டு நாள் விழா இது. நேற்றைய விழாவை, நடிகைகள் சுஹாசினியும் கஸ்தூரியும் தொகுத்து வழங்கினார்கள்.

அப்போது இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மேடைக்கு வந்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

நான் ராஜா சாரிடம் பணியாற்றிய காலங்களை மறக்கவே முடியாது. அவரிடம் நான் மூன்றாம் பிறை படத்தில் இருந்துதான் பணிக்குச் சேர்ந்தேன். அவருடைய ரிக்கார்டிங் ரூமிற்குச் செல்லும் போது, ஒரு ஹெட்மாஸ்டர் அறைக்குள் செல்வது போல் நான் உணர்ந்திருக்கிறேன்.

அவ்வளவு விஷயங்களை நான் அவரிடம் கற்றுக் கொண்டிருக்கிறேன்.

ராஜா சாரிடம் நான் கற்றுக்கொண்ட முக்கியமான விஷயம்… பொதுவாகவே இசைமைப்பாளர்கள் என்றாலோ திரையுலகினர் என்றாலோ கெட்டபழக்கங்கள் இருக்கும். ஆனால் ராஜா சாரிடம் எந்தக் கெட்டப்பழக்கமும் கிடையாது. இதில் நான் ரொம்பவே இன்ஸ்பையர் ஆனேன். இந்த நல்லப் பழக்கத்தை ராஜா சாரிடம் இருந்து நான் கற்றுக்கொண்டேன். ராஜா சாருக்கும் எனக்கும் இருக்கிற ஒரே கெட்டப்பழக்கம் இசைதான்!

அதேபோல் இன்னொன்றையும் சொல்லவேண்டும். நான் விருது பெற்றதும் ராஜா சார் எனும் மேதை என்னைப் பாராட்டினார். அதில் நான் ரொம்பவே நெகிழ்ந்து போனேன். யார் வேண்டுமானாலும் பாராட்டிவிடலாம். பாராட்டுக்கா இங்கு பஞ்சம். ஆனால் ஒரு இசைமேதையிடம் இருந்து வருகிற பாராட்டு, ஆத்மார்த்தமானது. ஆகவே ராஜா சார் பாராட்டியதை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது.

இவ்வாறு ரஹ்மான் தெரிவித்தார்.

அப்போது சுஹாசினி, ‘சின்னப்பையனா பாத்த ரஹ்மான் பத்தி சொல்லுங்க சார்’ என்று இளையராஜாவிடம் கேட்டார்.

அதற்கு இளையராஜா, ‘அவரோட அப்பாகிட்ட இருந்த நேரத்தைவிட, எங்கூட இருந்த நேரம்தான் அதிகம். என்ன, சரியா?’ என்று ரஹ்மானிடம் கேட்டார். ‘ஆமாம் சார்’ என்றார் ரஹ்மான். ‘இதெல்லாம் நீதான் சொல்லணும். நீ சொல்லவேண்டியதையெல்லாம் நான் சொல்லிக்கிட்டிருக்கேன்’ என்று இளையராஜா சிரித்துக்கொண்டே சொல்ல, ரஹ்மான் உட்பட மேடையில் இருந்தவர்களும் அரங்கில் இருந்த பல்லாயிரக்கணக்கான ரசிகர்களும் கரவொலி எழுப்பினார்கள்.

https://tamil.thehindu.com/cinema/tamil-cinema/article26168115.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

‘ரஹ்மான் எங்கிட்ட 500 படத்துல ஒர்க் பண்ணிருக்கார்’- இளையராஜா; ‘உங்களோட ஒருபடம் பண்றதே பெருமை சார்’ – ஏ.ஆர்.ரஹ்மான்

  •  
rahmanjpg
Published : 03 Feb 2019 19:52 IST
Updated : 03 Feb 2019 20:28 IST

ஏ.ஆர்.ரஹ்மான், எங்கிட்ட 500 படத்துல ஒர்க் பண்ணிருக்கார்’ என்று இளையராஜா, ரஹ்மானை வைத்துக்கொண்டு சொல்ல, 'உங்களோட ஒரு படம் பண்றதே பெருமை சார்’ என்று நெகிழ்ந்து போனார் ரஹ்மான்.

தவறவிடாதீர்

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில், இளையராஜா 75 எனும் நிகழ்ச்சி நேற்றும் இன்றுமாக நடைபெற்று வருகிறது. இளையராஜாவின் கலை நிகழ்ச்சி மற்றும் இளையராஜாவுக்கு பாராட்டு விழா என இரண்டு நாள் விழாவாக நடைபெற்று வருகிறது.

முதல் நாள் நிகழ்ச்சியில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்துகொண்டார்.

விழாவின் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய நடிகை கஸ்தூரி, ரஹ்மான் கீபோர்டு வாசிக்க, ராஜா சார் பாடவேண்டும் என்றார்.

இதையடுத்து, இளையராஜா, மணிரத்னம் இயக்கிய ‘மெளனராகம்’ படத்தின் ‘மன்றம் வந்த தென்றலுக்கு’ பாடலைப் பாடினார். உடனே ரஹ்மான் கீபோர்டு வாசித்தார்.

அப்போது இசையில் ஏதோ விட்டுவிட்டார் ரஹ்மான். உடனே இளையராஜா, ‘ஏன் இப்படி வாசிக்கிறே? உனக்குத்தான் இந்த டியூன் தெரியுமே?’ என்றார்.

பின்னர், ‘மூன்றாம் பிறை படத்திலிருந்து ரஹ்மான் என்னிடம் வேலை பார்த்தார். கிட்டத்தட்ட ஒரு 500 படமாவது என்னிடம் வேலை பார்த்திருப்பார்’ என்று சொன்னார் இளையராஜா.

உடனே ரஹ்மான், ‘உங்களிடம் ஒரு படத்துக்கு வேலை பார்ப்பதே பெரியவிஷயம் சார்’ என்று ரஹ்மான் நெகிழ்ந்து சொன்னார்.

மொத்தக் கூட்டம் கைத்தட்டி ஆர்ப்பரித்தது

https://tamil.thehindu.com/cinema/tamil-cinema/article26168020.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இளையராஜா75 நிகழ்ச்சியின் இரண்டாம் நாளான இன்று அந்த நிகழ்ச்சியில் இளையராஜாவுடன் ரஜினி மேடையேறினார்.

இளையராஜா - ரஜினி

நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில், தமிழ்த் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் இளையராஜா 75 நிகழ்ச்சி, நேற்று மாலை தொடங்கியது. இரண்டு நாள்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியின் முதல் நாளான நேற்று பல்வேறு திரையுலகப் பிரபலங்கள் கலந்துகொண்டனர். முதல்நாள் நிகழ்வில், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தென்னிந்திய நடிகர்கள் சங்கம் சார்பில், இளையராஜாவுக்கு தங்க வயலின் நினைவுப் பரிசாக அளிக்கப்பட்டது.

 

இளையராஜாவுடன் ஏ.ஆர்.ரஹ்மான்

முதல்நாள் நிகழ்ச்சியின்  உச்சமாக, இசைஞானி இளையராஜாவுடன் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் மேடையேறினார். அப்போது பேசிய இளையராஜா, ''ஏ.ஆர்.ரஹ்மான் தன்னுடன் 500 படங்களுக்கு மேல் பணியாற்றியுள்ளார்'' எனக் குறிப்பிட்டார். அப்போது ஏ.ஆர்.ரஹ்மான், ''உங்களுடன் ஒரு படத்தில் பணியாற்றுவதே பெரிய விஷயம்''என்று நெகிழ்ந்தார். 

 

கமல் - ரஜினி

இன்று நடந்த விழாவில் திரையுலக பிரமுகர்களுடன் பொதுமக்களும் திரளாகக் கலந்து கொண்டனர். அப்போது மேடை ஏறிய ரஜினிகாந்த், இளையராஜாவுடன் கலந்துரையாடினார். தொகுப்பாளர் சுஹாசினி ரஜினியிடம், `உங்களுக்கு பிடித்த ராஜா சார்  பாட்டு எது’ என்று கேட்டார். ரஜினி, ``அவர் இசையமைச்ச எல்லா பாட்டும் எனக்கு பிடிக்கும். ஒரு ஹீரோவுக்கு முரட்டுகாளைல வர்ற `பொதுவாக என் மனசு தங்கம்’ பாட்டவிட வேற என்ன வேணும். `ராமன் ஆண்டாலும் ’ பாட்டு இப்ப இதுவா இருக்கு. `ஊர தெரிஞ்சிக்குட்டேன்’ மாதிரி ஒரு பாட்டு வருமா?. இருந்தும் அவர் கமலுக்குதான் நிறைய நல்ல பாட்டு போட்டுருக்காரு’’என்றார். அப்போது பேசிய இளையராஜா, `இவருக்கு நல்ல பாட்டு போடறதா கமல் சொல்வார். நான் யாரையும் பாத்து மியூசிக் போட்டதில்ல’ என்றார்.

 

https://www.vikatan.com/news/cinema/148759-rajini-speech-in-ilaiyaraaja75-program.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

`ரஹ்மான் இசையில் பாடிய இளையராஜா!’ - #Ilaiyaraaja75 நிகழ்ச்சியில் நெகிழ்ச்சி

சென்னையில் நடைபெற்றுவரும் இளையராஜா 75 நிகழ்ச்சியின்போது, ஏ.ஆர்.ரஹ்மான் கீ போர்டு வாசிக்க, இளையராஜா பாடிய நிகழ்வு பார்வையாளர்களை நெகிழவைத்தது. 

ஏ.ஆர்.ரஹ்மான் - இளையராஜா


நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில், தமிழ்த் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் இளையராஜா 75 நிகழ்ச்சி, இன்று மாலை தொடங்கியது. இன்றும் நாளையும் நடைபெறும் இந்த நிகழ்ச்சியை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியின் முதல் நாளான இன்று, பல்வேறு திரையுலகப் பிரபலங்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியின்போது, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தென்னிந்திய நடிகர்கள் சங்கம் சார்பில், இளையராஜாவுக்கு தங்க வயலின் நினைவுப் பரிசாக அளிக்கப்பட்டது.

 

 

இளையராஜா 75 நிகழ்ச்சி

 முதல்நாள் நிகழ்ச்சியின்  உச்சமாக, இசைஞானி இளையராஜாவுடன் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் மேடையேறினார். அப்போது பேசிய இளையராஜா, ''ஏ.ஆர்.ரஹ்மான் தன்னுடன் 500 படங்களுக்கு மேல் பணியாற்றியுள்ளார்'' எனக் குறிப்பிட்டார். அப்போது ஏ.ஆர்.ரஹ்மான், ''உங்களுடன் ஒரு படத்தில் பணியாற்றுவதே பெரிய விஷயம்''என்று நெகிழ்ந்தார். 

இளையராஜா


``ஏ.ஆர்.ரஹ்மான் கீ போர்டு வாசிக்க, இளையராஜா ஒரு பாடல் பாட வேண்டும்'’ என்று நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கஸ்தூரி கோரிக்கை வைக்க, சிரித்துக்கொண்டே அதை இளையராஜாவும் ஏற்றுக்கொண்டார். அப்போதுதான் அந்த மேஜிக் நிகழ்ந்தது. `மன்றம்வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சமில்லையா..!’ என இளையராஜா தனது வசீகரக் குரலில் பாட, அரங்கமே அதிர்ந்தது. உடனே ஏ.ஆர்.ரஹ்மான் கீ போர்டை வாசிக்கத் தொடங்க, அரங்கம் கைதட்டலால் அதிர்ந்தது.

https://tamil.thehindu.com/cinema/tamil-cinema/article26162976.ece?utm_source=HP&utm_medium=hp-cinema

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

``இளையராஜாவின் கலாய், ரஜினியின் செல்லக்கோபம், ஷங்கரின் தயக்கம்!’’ - #Ilaiyaraja75

`` `நாயகன்’ படத்தின் `தென்பாண்டிச் சீமையிலே’ பாடலின் வரிகளை மாற்றியமைத்து இளையராஜா இந்த வரிகளைப் பாடியவுடன், ஆனந்தக் கண்ணீர் வழிய அனைவரும் அதை ஆமோதித்தனர்.’’

``இளையராஜாவின் கலாய், ரஜினியின் செல்லக்கோபம், ஷங்கரின் தயக்கம்!’’ - #Ilaiyaraja75

‘நீயும் நானும் ஒன்றுதான்... எங்கே பிரிவது’. ‘இதயகோயில்’ படத்தின் ‘இதயம் ஒரு கோயில்...’ பாடலில் வரும் இந்த வரிகளைப் போன்றதுதான் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கும் தமிழ் இசை ரசிகர்களுக்குமான உறவு. சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்ற ‘இளையராஜா 75’ நிகழ்ச்சியின் இரண்டாம் நாள் இசைக் கச்சேரியிலும் இந்தத் தீரா உறவு தன்னைத் தானே வெளிக்காட்டிக்கொண்டது.

பாடகி உஷா உதுப் ஒட்டுமொத்தக் கூட்டத்தையும் கைகளை உயர்த்தி கைப்பேசியின் விளக்கைக் காற்றில் அசைத்தபடி, ‘கண்ணே கலைமானே...’ பாடவைத்தபோது உலகுக்கு மீண்டும் ஒருமுறை தெரிந்தது, இளையராஜா என்ற கலைஞன் அதில் பதித்தது இசையை மட்டுமல்ல, அதற்கும் அப்பாலான உணர்வுகளை என்று! 

இளையராஜா

 

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும், ``இந்த நிகழ்ச்சிக்கு வந்தவுடன் நான் பார்த்தது பார்க்கிங் ஏரியாவைத்தான். அப்போது எனக்குத் தோன்றியது இங்கே பார்க் பண்ணப்படுவது கார்கள் மட்டுமல்ல, நம் இதயங்களில் இருக்கக்கூடிய பாரங்களும்தான். கார்களைத் திரும்பிச் செல்லும்போது எடுத்துச் செல்வோம். ஆனால், இன்று வீட்டுக்குத் திரும்பும்போது பாரங்களை எடுத்துச் செல்ல வேண்டிய நிலை வராது என நம்புகிறேன்’’ என இளையராஜா ஒவ்வொரு தமிழரின் வாழ்விலும் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார் என்று ஒப்பிட்டுப் பேசினார். 

 

 

நடிகர் ரஜினிகாந்த் மேடை ஏறியபோது, இளையராஜாவைக் கடவுளாகவே பாவித்துப் பேசினார். ``லிங்கங்களில் மூன்று வகை உண்டு. ஒன்று நீரில் தோன்றுவது. இரண்டாவது, மனிதர்களால் செய்யப்படுவது. ஆனால், மூன்றாவதாக ஒன்று உண்டு. அதுதான் சுயம்புலிங்கம். பெரும் ஆற்றல் கொண்டது, தானாக உருவாவது. அப்படி உருவான ஒரு சுயம்பு லிங்கம்தான் ராஜா சாமிகள். முதல் படம் ‘அன்னக்கிளி’. அன்று, அந்தக் கணமே உச்சத்துக்குச் சென்றவர்’’ என இளையராஜாவை 'இசை சுயம்பு லிங்கம்' என்றார் ரஜினிகாந்த்.

மேலும், ``இவ்வளவு நாள் சரஸ்வதியின் அருளோடு இருந்தவரிடத்தில், இப்போது லக்ஷ்மியும் குடியிருக்கிறாள் என்று கேள்விப்பட்டேன்’’ என்று சிரித்தபடி பேசிய ரஜினியிடம், தொகுப்பாளர் சுஹாசினி, ``உங்களுக்குப் பிடித்த ராஜா சார்  பாட்டு எது?’’ என்று கேட்டார். அதற்கு ரஜினி, ``அவர் இசையமைத்த எல்லாப் பாடல்களும் எனக்குப் பிடிக்கும். ஒரு ஹீரோவுக்கு ‘முரட்டுகாளை’யில் வரும் 'பொதுவாக என் மனசு தங்கம்’ பாட்டைவிட வேறென்ன வேண்டும். `ராமன் ஆண்டாலும்’ பாடல் இன்று வரை ஹிட்டாக இருக்கிறதே! அதேபோல, `ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன்’ பாடலுக்கு இணையான ஒரு பாடல் இன்று வருமா?’’ எனப் பல பாடல்களை வரிசைப்படுத்தினார். தொடர்ந்து பொய்யான ஒரு கோபத்துடன், ``இருந்தாலும் இவர் என்னைவிட கமலுக்குத்தான் நிறைய ஹிட் பாடல்களைப் போட்டுருக்காரு’’ என்றார்.

இளையராஜா

அப்போது பதிலளித்த இளையராஜா, ``ரஜினிக்குத்தான் நல்ல பாட்டு போடுறதா கமல் சொல்வார். ஆனால், நான் யாரையும் பார்த்து இசையமைத்ததில்லை. எனக்கு இசை எப்போதுமே ஒன்றுதான். ராமராஜனுக்கும் நிறைய நல்ல பாடல்கள் போட்டிருக்கேனே! என் பாடல்களைப் பாடி ஒருத்தர் ‘மைக்’ மோகன்னே பெயர் வாங்கியிருக்காரே...’’ என்றதும் அரங்கமே ஆர்ப்பரித்தது. 

அதையும் தாண்டி புனிதமானது :

அப்போது எங்கோ இருந்து தீடீரென நடிகர் கமலின் குரல். `ரகுபதி ராகவ ராஜாராம்’ என `ஹே ராம்’ படத்தின் தீம் பாடலைப் பாடும் ஒலி கிளம்பியது. ரஜினியின் அருகில் அமர்ந்திருந்த கமல் எழுந்து, கூட்டத்திலிருந்து மேடையை நோக்கி நடந்து வர, பார்வையாளர்கள் எழுப்பிய கரவொலி அடங்க வெகுநேரம் பிடித்தது. தொடர்ச்சியாக, `ராம் ராம்... ஹே ஹே ராம்' பாடலை அவரும் ஸ்ருதிஹாஸனும்  முழுவதும் பாடி முடித்த பின்தான், நிகழ்ச்சியில் பேசினார். 

``நான் முதல் முதலா இவரோட ரீ-ரெக்கார்டிங்கைத்தான் பார்த்தேன். அப்படியே வாயடைத்துப் போய்விட்டேன். அங்கிருந்து நான் கற்றுக்கொண்ட இசைதான் இன்று இந்த மேடை வரை தொடர்ந்து வந்து என்னைப் பாட வைத்துள்ளது’’ என இளையராஜாவை சுட்டிக் காட்டிப் பேசினார். 

மேலும், தான் அரசியலுக்கு வர வேண்டும் என்ற அறிவுரையும் முதலில் இளையராஜா தந்ததுதான் என்றார் கமல். பதிலுக்கு இளையராஜா, ``அது நான் எப்போதோ சொன்னது. இசையைப் போலத்தான் எல்லாவற்றுக்கும்! ஒரு காலப் பிரயாணம் வேண்டும். நான் அன்று சொன்னது, இத்தனை காலம் கழித்து இன்று நடந்திருக்கிறது’’ என்றார்.

தொடர்ந்து கமல் மேலும் சில பாடல்களைப் பாடினார். ‘குணா’ படத்தின் ‘கண்மணி அன்போடு’ பாடலைப் பாடும்போது, அதில் வரும் தன் வசனங்களை இன்றும் அதே முகபாவனையுடன் கமல் பாடியதும், பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்த ரஜினி, விஜய் சேதுபதி, இயக்குநர் ஷங்கர் உட்பட அனைவரும் கைதட்டி உற்சாகப்படுத்தினர். இசை நிகழ்ச்சி ஒன்றில் பாடகர்களுக்கு நிகராக கமல் ஐந்து பாடல்கள் பாடியது இந்நிகழ்ச்சியில்தான். 

இளையராஜா

அந்தப் பாடலைப் பாடியபின் இளையராஜாவின் கால்களைத் தொட்டு வணங்கி கட்டித்தழுவி முத்தமிட்டார் கமல். ``இதெல்லாம் இதுவரை நான் இவருக்குச் செய்ததில்லை. ஆனால், இன்று செய்யத்தோன்றியது’’ எனக் கமல் சொன்னவுடன், ``நீங்க ஹீரோயினுக்குத் தர்றதெல்லாம் எனக்கு எதுக்குக் கொடுக்குறிங்க?’’ எனக் கேலியாகக் கேட்டார் இளையராஜா. ஆனால், கமலோ, ``ஏன்னா, நம் காதலும் அப்படித்தான். அதையும் தாண்டிப் புனிதமானது’’ என ‘குணா’ வசனத்தைப் பேச, அரங்கத்தில் எழுந்த சிரிப்பலை அடங்க வெகுநேரமானது. 

மொழி தாண்டிய அன்பு :

நிகழ்ச்சிக்கு வந்திருந்த தெலுங்கு மற்றும் மலையாளத் திரைத் துறையினரும் இளையராஜாவை மேடையில் கௌரவப்படுத்தினர். தெலுங்கு நடிகர் மோகன் பாபு, ரஜினியையும் கமலையும் மேடைக்கு அழைத்து அவர்களுடன் இணைந்து இளையராஜாவுக்கு மரியாதை செய்தார். ராஜாவைப் பற்றிப் பேசிய மோகன்பாபு, ``இந்தியாவின் அதிகாரத் தலைநகரம் டெல்லிதான். ஆனால், இசைத் தலைநகரம் என்றால், அது இளையராஜா பிறந்த பண்ணைபுரம்தான்’’ என்றார். மேலும், தான் நடத்தும் கல்வி நிறுவனத்தில் ஒருமுறை ராஜா, இலவச இசை நிகழ்ச்சி நடத்திக்கொடுத்த நிகழ்வையும் பகிர்ந்தார்.

பின்னர் பேசிய நடிகர் வெங்கடேஷ், ``இந்திய சினிமாவுக்கு ராஜாவின் பங்களிப்பு என்பது அளவில்லாதது’’ எனப் பாராட்டிவிட்டு, ராஜாவின் இசையில் அவர் நடித்த `பொப்பிலி ராஜா' படத்திலிருந்து, `பலப்பம் பட்டி' என்ற பாடலையும் பாடிக்காட்டினார்.

மலையாள இயக்குநர் சித்திக் பேசுகையில், ``என் குழந்தைகளிடம் நான் இன்றும் பெருமையாகச் சொல்வது ராஜாவுடன் நான் பணியாற்றியிருக்கிறேன் என்பதைத்தான்!’’ என்றார்.

அதேபோல, மற்றொரு மலையாள இயக்குநர் சத்தியன் அந்திக்காடு, ``ஒரே ஒரு படத்தில் இவருடன் இணைய ஆசைப்பட்டு வந்து, கடைசியில் 9 படங்களில் பணியாற்றினோம்’’ எனப் பெருமையாகப் பேசினார்.

புனேவிலிருந்து வந்திருந்த பாடகி விபாவரி, ஆனந்த ராகம், என்னுள்ளே என்னுள்ளே போன்ற பாடல்களை மொழிவளம் குன்றாமல், அதே ராகத்தில் பாடினார். இளையராஜா, `இவருக்குத் தமிழ் தெரியாது’ எனச் சொன்னபோது, அரங்கம் அதிசயித்தது. 

வழி வந்தவர்கள் :

``நான் இன்றுவரை உங்கள் பாடல்களைத் தழுவித்தான் என் இசையை உருவாக்கிக்கொண்டிருக்கிறேன். புதிதாக இசையமைக்க சினிமாவுக்கு வரும்போது எல்லோரும் கர்நாடக சங்கீதம், மேற்கத்திய இசை எனப் பலவற்றைக் கற்றுக்கொண்டு வந்துள்ளோம் என்பார்கள். ஆனால், நான் சினிமாவுக்கு வரும் முன் கற்றுக்கொண்டதெல்லாம் இளையராஜாவை மட்டும்தான்’’ என இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி கூறினார்.

உடனிருந்த தேவி ஸ்ரீபிரசாத்தோ, இளையராஜாவைக் கண்டவுடன் கால்களில் விழுந்து ஆசிபெற்றார். பின்பு பேசும்போது, ``இவர் இல்லையென்றால் நான் இசையமைப்பாளனாக ஆகியிருப்பேனா என்றே எனக்குத் தெரியவில்லை. என் ஸ்டுடியோவில் இருக்கும் ஒரே சாமி படம் ராஜா சாரோடதுதான்! தவிர, சாரின் ஏகப்பட்ட புகைப்படங்களைச் சேகரித்து வைத்துள்ளேன். இளையராஜா சாரின் அத்தனை புகைப்படங்கள் அவர் குடும்பத்தாரிடம்கூட இருக்காது, என்னிடம் இருக்கிறது’’ எனப் பெருமிதத்துடன் கூறினார்.

மேலும், ``ஸ்டுடியோவில் உள்ள அந்தப் படத்தில் அவர் பியானோவில் கடவுள்போல அமர்ந்திருப்பார். அது ஒரு பழைய புகைப்படம். அதனால், அதில் நிறைய கீறல்கள் இருந்தன. பல போட்டோஷாப் கலைஞர்களை வைத்து அத்தனை கீறல்களையும் நீக்கி, ஒரு பெரும் சுவர் உயரத்துக்கு அந்தப் படத்தை வைத்திருக்கிறேன்’’ என நெகிழ்ச்சியுடன் கூறினார்.

`காதல் ஓவியம்’ பாடலை ராஜாவைப் போன்றே பாடினார் கார்த்திக் ராஜா. `ஏ... உன்னைத்தானே' என்னும் எஸ்.பி.பி பாடலை யுவன் அவரது டோனிலேயே பாடி, அப்பாடலுக்கு வேறொரு வடிவம் கொடுத்தார். யுவனின் மகளும் ராஜாவும் மாங்குயிலே பாடலைப் பாடிக்கொண்டது நிகழ்ச்சியின் க்யூட் குட்டி சர்ப்ரைஸ். 

நெடுங்காலப் பயணம் :

நடிகர் விக்ரம் பேசும்போது, ``என்னுடைய முதல் ஹிட் பாடலே, இளையராஜா இசையமைத்ததுதான்’’ என, ‘மீரா’ படப் பாடலான ‘ஓ... பட்டர்ஃபிளை’ பாடலின் இரண்டு வரிகளைப் பாடினார். அதுமட்டுமன்றி, ``இது ஓர் அரிதான விழா. இதில் நானும் ஒரு பங்கேற்பாளன் என்பதில் எனக்குப் பெருமை’’ எனக் கூறினார்.

இளையராஜா

பின்பு மேடையேறிய நடிகர் விஜய் சேதுபதி, ``எந்த விதமான சூழ்நிலையிலும் இளையராஜா நம்முடன் இருப்பார். உருகி, மயங்கி, கடவுள் பிரார்த்தனை செய்வதுபோன்றதுதான், இவரது இசை’’ என்றார். உடனிருந்த நடிகர் கார்த்தி, ``வெளிநாட்டுக்கெல்லாம் செல்லும்போது ரெக்கே, ராக் என்றெல்லாம் பல ஜானர்களைப் பற்றிப் பேசுவார்கள். அவர்களிடம் நான் சொல்வதெல்லாம் ஒன்றுதான். எங்களுக்குத் தெரிந்த ஒரே ஜானர் இளையராஜா மட்டும்தான்’’ என்றார். 

பாடல்களும் பாடியவர்களும் : 

* ஜனனி ஜனனி - இளையராஜா

* ஓம் சிவோஹம் - ஹரிச்சரண் 

* இளமை இதோ இதோ - மனோ

* பூவே செம்பூவே - மது பாலக்கிருஷ்ணன்

* வேகம் வேகம் - உஷா உதுப்

* ஆனந்த ராகம் - விபாவரி 

* இதயம் ஒரு கோயில் - இளையராஜா

* ராம் ராம் - கமல் & ஸ்ருதி

* ஒளியிலே தெரிவது - பிரசன்னா & பவதாரணி

* பூவே இளைய பூவே  - முகேஷ்

* மடைதிறந்து - மனோ

* நினைவோ ஒரு பறவை - கமல் & ஸ்ருதி 

* உன்ன விட இந்த உலகத்தில் - கமல் & சித்ரா 

* ராஜ ராஜ சோழன் - மது பாலகிருஷ்ணன்

* என் இனிய பொன் நிலாவே - இளையராஜா & MOP, QueenMary கல்லூரி மாணவிகள்

* ஓ பட்டர் ஃபிளை - மனோ

* கண்மணியே காதல் என்பது - மனோ & விபாவரி 

* காதல் ஓவியம் - கார்த்திக் ராஜா & விபாவரி

* தண்ணித்தொட்டி - ஹரிச்சரண் & உஷா உதுப்

* ரம்பம்பம் ஆரம்பம் - மனோ& உஷா உதுப் 

* சுந்தரி கண்ணால் ஒரு சேதி - மனோ & சித்ரா

* நான் பொறந்து வந்தது ராஜ வம்சத்துல - இசைக்கருவிகள் அற்ற கோரஸ் பாடல்

* தென்றல் வந்து தீண்டும் போது - இளையராஜா

* என்னுள்ளே என்னுள்ளே - விபாவரி

* கண்மணி அன்போட காதலன் - கமல் & ஸுர்முகி

* வனிதாமணி - மனோ, பிரியா, கமல்

* ராக்கம்மா கையத்தட்டு - ஹரிச்சரண , பிரியா 

* மாரோகோ மாரோகோ (வெற்றி விழா ) - மனோ & சித்ரா 

* ஏ உன்னைத்தானே - யுவன் 

* சுந்தரி கண்ணால் ஒரு சேதி - மனோ & சித்ரா

* கண்ணே கலைமானே, சுக்மி (சத்மாவில் கண்ணே கலைமானே இந்தி வெர்ஷன் )  - மதுபாலகிருஷ்ணன் & உஷா உதுப்

* காட்டுவழி கால்நடையா - இளையராஜா 

 

அவரப் பார்த்தா பயம் :

இயக்குநர் ஷங்கரிடம் தொகுப்பாளர் ரோகிணி, ``நீங்கள் இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றியதில்லை...’’ என்று கேள்வியைத் தொடங்கும்போதே குறுக்கிட்ட இளையராஜா, ``இந்தக் கேள்வி தேவையில்லாதது. அவருக்கு யார் கம்ஃபர்டபிளா இருக்காங்களோ, அவங்க கூட சேர்ந்து படம் பண்ணிக்கிட்டு இருக்கார். இப்போ ஏன் இந்தக் கேள்வியைக் கேட்குறீங்க?’’ என்றார்.

பிறகு பேசிய ஷங்கர், ``இவர்கிட்ட கதை சொல்லி, என் படத்துக்கு இசையமைக்கக் கேட்கலாம்னு அப்பாயின்மென்ட் வாங்கி வைத்திருந்தேன். ஆனால், இவருடன் வேலை செய்யும் அளவுக்கு எனக்கு முதிர்ச்சி இருக்குமா எனப் பயம். அதனால், பின் வாங்கிவிட்டேன்’’ என்றார். அதுமட்டுமன்றி, இளையராஜாவுடன் சேர்ந்து வருமான வரித்துறைக்காக தான் எடுத்த ஒரு விளம்பரப்படத்தைப் பற்றியும் குறிப்பிட்டார். ``நான் அதில் இணைவதற்கு முன்பே அதற்கான இசை மெட்டுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. எனக்கு அதில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும் எனத் தோன்றியது. தயக்கத்துடன் அவரிடம் கூறினேன். அவரும் மகிழ்வுடன் அதை மாற்றி அமைத்துக் கொடுத்தார்’’ என்றார் ஷங்கர்.

முன்னதாகப் பேசிய இயக்குநர் பால்கி, ``இளையராஜாவைப் பற்றி வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது. இளையராஜா என்பவர் உணர்வுகள் சம்பந்தப்பட்டவர்’’ எனச் சொல்லிவிட்டு, அதற்கு ஓர் உதாரணத்தையும் கூறினார். ``என் மனைவியிடம் அடிக்கடி சண்டையிடுவதுண்டு. அப்போதெல்லாம் அவளை சமாதானப்படுத்த இளையராஜாவின் பாடல் ஒன்றைப் பாடினால், அவள் உடனே உருகிவிடுவாள். என் கல்யாண வாழ்க்கையைக் காப்பாற்றுவதே இவர்தான்!’’ என சிரித்துக்கொண்டே கூறினார்.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் மேடையேறிய இயக்குநர் மணிரத்னத்தைப் பார்த்து, `என்ன மணி, வயசாயிடுச்சா?' என நக்கலாகக் கேட்டார் இளையராஜா. அதற்குப் பதிலளித்த மணிரத்னம், `உங்களுக்குத்தான் வயசே ஆகலையே!’ என்றார். உடனே ராஜா, `எங்கங்க, அதான் 75 வயசாயிடுச்சுனு விழா கொண்டாடுறாங்களே!' என்றதும், `75 வெறும் நம்பர்தாங்க’ எனச் சொல்லி கலகலத்தார் மணிரத்னம்.

மாலை 6.50 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கியது முதல், நள்ளிரவு 12.30-க்கு முடிந்த வரை பெரும்பான்மையான பார்வையாளர்கள் கலையவில்லை என்பதுதான், இசையில் இளையராஜா நிகழ்த்தியுள்ள சாதனைக்கான சான்று. இத்தனைக்கும் அன்றைய கச்சேரியில் பாடிய பாடல்களில் பெரும்பான்மையான பாடல்கள் 80 மற்றும் 90-களில் வந்தவை. ஆனால், அவை இன்றைய இளைஞர்களையும் ஆர்ப்பரிக்க வைத்தது என்பதுதான் இளையராஜாவுக்கும் நமக்குமான பிணைப்பு! 

https://cinema.vikatan.com/tamil-cinema/148898-ilayaraaja-75-day-2-concert.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.