Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஃபேல் ஒப்பந்தம்: இன்னும் பல ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன - என்.ராம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
  •  
     
ரஃபேல்படத்தின் காப்புரிமை Getty Images

ஃபிரான்ஸ் நாட்டின் தஸால் நிறுவனத்திடமிருந்து இந்திய விமானப் படைக்கு ரஃபேல் விமானங்களை வாங்குவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்தபோது, பிரதமர் அலுவலகமும் மற்றொரு பக்கம் பேச்சுவார்த்தைகளை நடத்தியதில் பாதுகாப்புத் துறை அமைச்சக அதிகாரிகள் அதிருப்தி அடைந்தது தொடர்பாக தி ஹிந்து நாளிதழ் சமீபத்தில் சில ஆவணங்களை வெளியிட்டது.

தற்போது, இந்த ஒப்பந்தம் தொடர்பாக மேலும் சில தகவல்களையும் தி ஹிந்து வெளியிட்டுள்ளது.

தி ஹிந்து குழுமத்தின் தலைவரும் இந்தக் கட்டுரைகளை எழுதியவருமான என். ராமிடம் இந்த விவகாரம் குறித்து விரிவாகப் பேசினார் பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதன். பேட்டியிலிருந்து.

கேள்வி: இந்த விவகாரத்தில் என்ன நடந்திருக்கிறது?

தில்: இந்த விவகாரம் தொடர்பாக தி ஹிந்துவில் இதுவரை மூன்று கட்டுரைகளை எழுதியிருக்கிறேன். இது தொடர்பாக சில ஆவணங்களை விளக்கியிருக்கிறோம். இதில் நாங்கள் கண்டுபிடித்தவற்றை சொல்கிறேன்.

முதலாவதாக ரஃபேல் விமானங்களின் விலை. இந்த விமானங்களை வாங்குவதற்கான ஆயத்தப் பணிகள் 2007லேயே துவங்கிவிட்டன.

2012ல் இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்தன. 2016ல் திடீரென எல்லாவற்றையும் மாற்றி, 126 விமானங்களுக்குப் பதிலாக 36 வாங்கலாம் என முடிவுசெய்தார்கள்.

தவிர, உள்நாட்டு உற்பத்தியை ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிட்டெட் மேற்கொள்ளும் என்பதும் ரத்துசெய்யப்பட்டது.

ஒட்டுமொத்தமாக பார்த்தால், ஒரு விமானத்தின் விலை மிகவும் அதிகரித்துவிட்டது. அது ஏன் என்று பார்க்கலாம். அந்த விமானத்தில் இந்தியாவுக்குத் தேவையான 13 சிறப்பம்சங்களைச் செய்ய வேண்டும்.

இதற்காக அந்த விமானத்தின் வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டிற்காக 1.4 பில்லியன் யூரோ தேவை என்றார்கள். பிறகு அது 1.3 பில்லியனாக குறைக்கப்பட்டது.

ஆனால், இந்த 1.3 பில்லியன் யூரோ என்பது ஒரு நிலையான செலவு. ஒரு விமானம் வாங்கினாலும் சரி, 100 விமானம் வாங்கினாலும் சரி - 1.3 பில்லியன் யூரோவைக் கொடுத்தாக வேண்டும்.

ஆனால், 126 வாங்குவதற்குப் பதிலாக வெறும் 36 விமானங்களை வாங்கியதால், ஒரு விமானத்தின் விலை மிகவும் ஏறிவிட்டது.

2007ல் பேசப்பட்ட விலையைவிட இது 41 சதவீதம் அதிகம். 2011ல் பேசப்பட்ட விலையை விட 14 சதவீதம் அதிகம். இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் பலரும் கேள்வியெழுப்பியபோதும் அரசு இது குறித்து பேச மறுத்துவிட்டது.

விலை விவகாரங்களை வெளியிட்டால் பிற நாடுகள் அந்த விமானத்தின் விவரங்களைக் கண்டுபிடித்துவிடும் என்றார்கள்.

இது ஒரு பக்கமிருக்க, இந்த விமானத்தை வாங்குவதற்கான பேச்சுவார்த்தை பாதுகாப்பு அமைச்சகத்தால் நடத்தப்பட்டுக் கொண்டிருந்தபோது, மற்றொரு பக்கம் அரசுத் தரப்பும் பேச்சுவார்த்தையை நடத்திக்கொண்டிருந்தது என்பதையும் நாங்கள் அம்பலப்படுத்தியிருக்கிறோம்.

ராணுவத்திற்கு ஆயுதங்கள், பிற பொருட்களை வாங்குவதற்கென விரிவான விதிகள் வகுக்கப்பட்டிருக்கின்றன.

ஒரு விற்பனை தொடர்பான பேரத்தைத் துவங்குவதற்கு முன்பாக, நிபுணர் குழு ஒன்று அமைக்கப்படும். அவர்கள்தான் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். அவர்கள் நிறுவனங்களோடும் பேசுவார்கள், அரசுகளோடும் பேசுவார்கள்.

இந்த நிபுணர் குழு தஸால் நிறுவனத்தோடும் இந்த விமானத்திற்கு ஆயுதங்களை சப்ளைசெய்யவிருக்கும் எம்பிடிஏ நிறுவனத்தோடும் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தபோது, அதற்கு இணையாக அரசுத் தரப்பும் பேச்சு வார்த்தை நடத்தியது என்பது பாதுகாப்பு அமைச்சகத்தின் கோப்புகளில் குறிக்கப்பட்டிருக்கிறது.

கீழ் மட்டத்திலிருந்து துவங்கி, பாதுகாப்பு செயலர் வரை இதைக் குறிப்பிட்டிருக்கிறார்கள். இப்படி இணையான பேச்சுவார்த்தை நடத்துவதென்பது, இந்தியத் தரப்பின் பேச்சு வார்த்தை வலிமையைக் குறைக்குமென குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இப்படிச் செய்தால், ஃபிரான்ஸ் நாட்டு நிறுவனம் இதனைப் பயன்படுத்திக்கொள்ளும்; அது இந்திய நலன்களுக்கு எதிராக இருக்குமென்றெல்லாம் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்தக் கோப்பு அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கருக்குச் செல்கிறது. வழக்கமாக இம்மாதிரி கோப்புகளை அவர் உடனடியாக பார்த்து அனுப்பிவிடுவார்.

ஆனால், இந்த விவகாரத்தில் பல வாரங்களாக அதை என்ன செய்வதெனத் தெரியாமல் வைத்திருந்தார் போலிருக்கிறது.

பிறகு ஒரு குறிப்பை அதில் எழுதுகிறார் பாரிக்கர்: 'இது ஓவர் ரியாக்ஷன், பிரதமரின் முதன்மைச் செயலருடன் பேசி இதைத் தீர்த்துக்கொள்ளவும்'. இந்த விவகாரத்தில் அவருக்கு அப்போது ஏதும் நிலைப்பாடு இல்லை என்று அந்தக் குறிப்புகளிலிருந்து தெரிகிறது.

ரஃபேல்படத்தின் காப்புரிமை DASSAULT RAFALE

பாதுகாப்புத் துறை செயலர் எழுதியது தவறு என பாரிக்கர் நினைத்திருந்தால், நீங்கள் எழுதியதை நான் ஏற்கவில்லையென்றல்லவா எழுதியிருக்க வேண்டும். ஆனால், அப்படி எழுதாமல் வெறும் 'ஓவர் ரியாக்ஷன்' என்று மட்டும் குறிப்பிடுகிறார். 2016 செப்டம்பரில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு சில நாட்கள் முன்பாக, மேலும் சில விஷயங்கள் நடக்கின்றன.

அந்தத் தருணத்தில், தளவாடங்கள் வாங்கும்போது கடைப்பிடிக்க வேண்டிய எட்டு விதிகள் விட்டுக்கொடுக்கப்படுகின்றன.

அவற்றில் ஊழலுக்கு எதிரான விதியும் விட்டுக் கொடுக்கப்படுகிறது. Penalty for undue influence என்பது நீக்கப்படுகிறது.

கமிஷன் என்ற பெயரில் லஞ்சம் கொடுத்தால், தண்டனை என்ற பிரிவு நீக்கப்படுகிறது. இந்த நிறுவனங்கள், நிதி ரீதியாக ஆரோக்கியமாக இருக்கின்றனவா என்பதைத் தெரிந்துகொள்ள அவற்றின் கணக்கு வழக்குகளை இந்தியாவுக்கு அளிக்க வேண்டும் என்ற விதியும் விட்டுக்கொடுக்கப்படுகிறது. இவையெல்லாம் பிரமதர் அலுவலக தலையீட்டில் கடைசி நேரத்தில் நடக்கிறது.

தஸால் நிறுவனம் நிதி ரீதியாக பல பிரச்சனைகளில் இருக்கிறது. ஆகவே Sovereign guarantee எனப்படும் உறுதியைப் பெற்றிருக்க வேண்டும். அதாவது, ஃப்ரான்ஸ் அரசு தஸால் நிறுவனத்தின் சார்பில் வாக்குறுதியளித்திருக்க வேண்டும்.

அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிகர் மற்றும் ஃபிரன்ஸின் பாதுகாப்புத் துறை அமைச்சர்படத்தின் காப்புரிமை Barcroft Media Image caption அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிகர் மற்றும் ஃபிரன்ஸின் பாதுகாப்புத் துறை அமைச்சர்

தஸால் நிறுவனம் பிரச்சனையில் இருப்பதால், இந்த நம்முடைய பேச்சுவார்த்தைக் குழுவில் உள்ள நிதி நிபுணர்கள் மூன்று பேரும் Sovereign guarantee தேவை என்றார்கள்.

அப்படி இல்லாவிட்டால், ஏதாவது ஒரு வங்கியின் உத்தரவாதமாவது கேட்கப்பட்டது. ஆனால், அந்த விதிகள் எல்லாம் கைவிடப்பட்டன.

ஊழலுக்கு எதிரான விதிகள், வழக்கமாக கடைப்பிடிக்க வேண்டிய விதிகள் எல்லாம் இப்படி கைவிடப்பட்டது மர்மமாகத்தான் படுகிறது.

பாதுகாப்பு அமைச்சகத்தில் இருந்த நிதி நிபுணரான சுதான்ஷு மொஹந்தி எழுதிய குறிப்பையும் வெளியிட்டிருக்கிறோம்.

அதாவது பாதுகாப்பு அமைச்சர் திடீரென விதிகளை மாற்றி மொஹந்தியின் கருத்தைக் கேட்கிறார். அதை முழுமையாக படித்துப் பார்க்கக்கூட நேரம் அளிக்கப்படவில்லை.

இதனால் மொஹந்தி வேகவேகமாகப் பார்த்துவிட்டு, மூன்று குறிப்புகளை எழுதியிருக்கிறார். அதில் முக்கியமானது என்னவென்றால், தஸால் மற்றும் என்பிடிஏ நிறுவனங்களின் நிதி நிலைமை குறித்து சந்தேகம் இருப்பதால், escrow account ஒன்றை உருவாக்கலாம்.

அதாவது ஃபிரான்ஸ் அரசு ஒரு வங்கிக் கணக்கைத் துவக்க வேண்டும். இந்தியா தஸாலுக்குத் தர வேண்டிய பணத்தை அந்தக் கணக்கில் செலுத்தும். தஸால், விமானங்களை ஒழுங்காக சப்ளை செய்தால், பணம் படிப்படியாக இந்திய ஒப்புதலுடன் தஸாலுக்குச் செல்லும். ஆனால், மொஹந்தியின் கோரிக்கை ஏற்கப்படவில்லை.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், விலை அதிகம், ஒப்பந்தத்தின் ஷரத்துகள் முழுமையாக மாறிவிட்டது, ராணுவத்திற்குத் தேவையான 126 விமானங்களுக்குப் பதிலாக 36 விமானம்தான் கிடைக்கிறது என பாதகமான அம்சங்களே இந்த ஒப்பந்தத்தில் இருக்கின்றன.

தவிர இம்மாதிரி பெரிய ஒப்பந்தங்களைச் செய்யும்போது, முதலில் எவ்வளவு எண்ணிக்கையில் ஆர்டர் கொடுக்கப்பட்டதோ அதில் பாதி அளவுக்கு அதே நிபந்தனைகளுடன் ஆர்டர் கொடுக்க முடியும் என்ற ஷரத்து இருக்கும். இந்த ஒப்பந்தத்தில் அதுவும் இல்லை. ஆனால், எல்லாவற்றுக்கும் மேலாக ஊழல் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கான விதி இல்லாமல் செய்யப்பட்டிருப்பதுதான் கவலையளிக்கிறது. இதன் மூலம் அவர்களுக்கு ஒரு பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.

பிரதமர் ஃபிரான்சிற்குச் செல்கிறார். அரசுத் தரப்பில் நடத்திய பேச்சு வார்த்தைகளின் முடிவில் 36 ரஃபேல் விமானங்களை வாங்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டுவிட்டதாக அறிவிக்கிறார்.

இந்தப் பேச்சு வார்த்தைகளில் பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் பங்கேற்றதாகத் தெரியவில்லை. இந்த அறிவிப்பு வருவதற்கு சில நாட்களுக்கு முன்பாக தஸால் நிறுவனத்தின் சிஇஓ எரிக் ட்ராப்பியர் என்ன சொன்னார் என்றால், உள்நாட்டில் தயாரிக்க தேர்வுசெய்யப்பட்டிருக்கும் எச்ஏஎல் நிறுவனத்துடன் 95 சதவீத பேச்சுவார்த்தைகள் முடிந்தது என்றார்.

ஆனால், பிரதமரின் அறிவிப்பில் எச்ஏஎல் கைவிடப்படுகிறது. Make in India முழக்கம் கைவிடப்பட்டது. இது நிச்சயமாக தேசிய நலன்களைப் பாதிக்கும் ஒரு ஒப்பந்தம்தான்.

பொதுவாக வெளிநாட்டில் தயாரிக்கப்படும் தளவாடங்களில் 30 சதவீதம் உள்நாட்டில் தயாரிக்கவேண்டும் என்ற ஷரத்து இருக்கும்.

இந்த தஸால் நிறுவனம் 50 சதவீத விமானங்களை இந்தியாவில் தயாரிக்க ஒப்புக்கொண்டிருக்கிறது. ஆனால், அதற்கென முன்பு பேசப்பட்ட ஹிந்துஸ்தான் ஏரோ நாட்டிகல் நிறுவனம் கைவிடப்பட்டு, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிஃபன்ஸ் அந்த ஆர்டரைப் பெறுகிறது. அப்போது பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதியாக இருந்த ஒல்லாந்த், We have no option என்றுகூட கூறினார்.

இப்போது ஒப்பந்தத்தைப் பெற்றிருக்கும் ரிலையன்ஸ் டிஃபன்ஸ் நிறுவனத்தின் நிதி நிலை தெரியவில்லை. ஆனால், அனில் அம்பானி நிதி நெருக்கடியில் இருக்கிறார் என்பது தெளிவு.

ரபேல்படத்தின் காப்புரிமை Getty Images

கே. பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் எழுதிய குறிப்பை முதல் நாள் வெளியிட்ட நீங்கள், அதற்குக் கீழே அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் எழுதிய குறிப்பை வெளியிடாதது ஏன்?

ப. அன்றைக்கு எங்களுக்குக் கிடைத்த ஆவணங்களில் அவ்வளவுதான் இருந்தது. அடுத்த நாள் அந்த ஆணவத்தை அவர்களே வெளியிட்டார்கள். நாங்கள் crop செய்துவிட்டதாகச் சொல்கிறார்கள். அப்படியேதும் நாங்கள் செய்யவில்லை. ஒரு விஷயத்தை புலனாய்வு செய்யும்போது முதலிலேயே எல்லா ஆவணங்களும் கிடைத்துவிடாது. படிப்படியாகத்தான் கிடைக்கும். படிப்படியாகத்தான் வெளியிடவும் முடியும்.

இந்த விவகாரத்தில் மனோகர் பரிக்கருக்குத் தெரியாமல் பேச்சுவார்த்தைகள் நடந்தன என்றாலும் பிறகு, விதிகள் மாற்றம் போன்றவை அவருக்குத் தெரிந்தேதான் நடந்திருக்கின்றன. இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் எழுதிய கோப்பு அவருக்கு 2015 டிசம்பரில் அனுப்பப்படுகிறது.

வழக்கமாக விரைவில் முடிவெடுக்கும் அவர், மிகத் தாமதமாக 2016 ஜனவரி மாதம் பட்டுக்கொள்ளாமல் பதில் எழுதுகிறார். ஆனால், மாதங்கள் செல்லச்செல்ல ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் அவர் நேரடியாக இந்த ஒப்பந்தத்தில் ஈடுபடுகிறார்.

மனோகர் பாரிக்கர் இதில் தனக்கு நேரடியாக தொடர்பில்லையென சொல்லலாம். ஆனால், வி.பி. சிங் போன்றவர்கள் இருந்திருந்தால் ராஜினாமா செய்திருப்பார்கள்.

மோடிபடத்தின் காப்புரிமை Getty Images

கே. பாதுகாப்புத் துறை செயலர் ஜி. மோகன் குமார் இதையெல்லாம் மறுத்திருக்கிறாரே..

ப. இன்றைக்கு மறுக்கிறார். ஆனால், அன்றைக்கு ஏன் அப்படி ஒரு குறிப்பை எழுதினார்? இப்படி இணையான பேச்சுவார்த்தை நடத்துவது நம் நிலைப்பாட்டை பலவீனப்படுத்தும் என்றல்லவா எழுதினார்?

கே. ரஃபேல் விமானம் வாங்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திய குழுவுக்குத் தலைவரான ஏர் மார்ஷல் எஸ்பிபி சின்ஹா ஹிந்துவின் கட்டுரையை கடுமையாக விமர்சித்திருக்கிறார்..

ப. 1980க்குப் பிறகு, இம்மாதிரியான பேச்சுவார்த்தைக் குழுவில் ராணுவத்தைச் சேர்ந்தவர்கள் இடம்பெறுவதில்லை.

ஆனால், இந்தக் குழுவின் தலைவராக விமானப் படையைச் சேர்ந்தவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். எஸ்கே ஷர்மா முதல் முதலாக குறிப்பு எழுதியதை அவர் விமர்சிக்கிறார். ஆனால், பாதுகாப்புத் துறை செயலரே குறிப்பு எழுதியிருக்கிறாரே. அதற்கு அவரது பதில் என்ன?

கே. இந்த விவகாரத்தில் வெறும் விதி மீறல்கள் மட்டும் நடந்திருப்பதாகக் கருதுகிறீர்களா அல்லது ஊழல் நடந்திருப்பதாக நினைக்கிறீர்களா?

ப. இந்த விஷயத்தில் அரசியல் கட்சிகள் பேசுவதைப் போல நாங்கள் பேச முடியாது. படிப்படியாகத்தான் செல்ல முடியும்.

கே. இதற்கு முன்பாக இம்மாதிரியான பாதுகாப்புத் துறை தொடர்பான பேரங்கள் அரசுத் தரப்பு நேரடியாக ஈடுபட்டதில்லையா?

ப. ஈடுபட்டிருக்கின்றன. ஆனால் போஃபர்ஸ் விவகாரத்திற்குப் பிறகு இதற்கென விரிவான விதிமுறைகள் உருவாக்கப்பட்டுவிட்டன.

இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை, ஃபிரான்ஸ் அரசோடு பேச்சுவார்த்தை நடத்தியதாகச் சொன்னாலும், தஸால் என்பது ஃபிரான்ஸின் அரசு நிறுவனமல்ல. தனியார் நிறுவனம்தான்.

Sovereign guarantee கொடுத்திருந்தால்கூட பரவாயில்லை. அப்படியெந்த வாக்குறுதியும் அளிக்கப்படவில்லை. Letter of comfort என்ற ஓர் ஆவணத்தை ஃபிரான்ஸ் அளித்திருக்கிறது.

அதற்கு சட்ட ரீதியான எந்த அங்கீகாரமும் இல்லை. தஸால் நிறுவனம் வாக்குறுதி தவறினால், இந்த ஆவணம் எதற்கும் உதவாது.

உச்சநீதிமன்றம்படத்தின் காப்புரிமை Getty Images

கே. இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் விசாரித்து தள்ளுபடி செய்திருக்கிறது..

ப. உச்ச நீதிமன்றத்திற்கு இது சங்கடமான விவகாரம்தான். இந்த விவகாரத்தில் அவர்கள் தங்களுக்குக் கிடைத்த தவறான தகவல்களின் அடிப்படையில் முடிவுக்கு வந்துவிட்டார்கள்.

இனி, சில வழக்கறிஞர்கள் மீண்டும் நீதிமன்றத்திற்குச் செல்வார்கள் என நினைக்கிறேன். ஏன், முன்பு வழக்குத் தொடர்ந்த அருண் ஷோரி, யஷ்வந்த் சின்ஹா போன்றவர்களே சீராய்வு மனு தாக்கல் செய்திருக்கிறார்கள். ஆனால், தவறான தகவல்களின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் வழிநடத்தப்பட்டுவிட்டது என்றுதான் நினைக்கிறேன்.

பாதுகாப்பு அமைச்சகம் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தபோது, பிரதமர் அலுவலகமும் மற்றொரு பக்கம் நடத்திய பேச்சுவார்த்தைகள் குறித்தும், பல விதிகள் கைவிடப்பட்டது குறித்தும் உச்ச நீதிமன்றத்தில் அவர்கள் சொல்லவில்லையே.

கே. நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு, அரசு மாறினால் ஒப்பந்தம் ரத்துசெய்யப்படுமா?

ப. ரஃபேல் நல்ல விமானம்தான். ஆனால், யுரோ ஃபைட் என்று ஒரு நிறுவனமும் இதில் போட்டியில் இருந்தது. பிரிட்டன், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் என நான்கு நாடுகளைச் சேர்ந்த நான்கு முன்னணி ஏரோ ஸ்பேஸ் நிறுவனங்கள் ஒன்றிணைந்து ஒரு கன்சார்டியம் அமைத்திருக்கிறார்கள்.

அதுதான் யுரோ ஃபைட். அவர்கள் 20 சதவீதம் தள்ளுபடி அளிக்க முன்வந்தார்கள். அந்த விமானத்தின் விலை, ரஃபேலைவிட குறைவு என நிதி நிபுணர்கள் குறிப்பெழுதியிருக்கிறார்கள்.

ஆனால், அந்த விமானத்தை வாங்கவில்லை. காரணம், ஏப்ரல் 2015ல் பிரதமர் அலுவலகம் பேச ஆரம்பித்துவிட்டது. ஆகவே, பேச்சுவார்த்தைக் குழுவின் கைகள் கட்டப்பட்டுவிட்டன. இனி இந்த ஒப்பந்தத்தை ரத்துசெய்ய முடியாது. ஆனால், விசாரணை நடத்த முடியும்.

கே. இந்தக் கட்டுரையை வெளியான பிறகு இந்து மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் எதைக் காட்டுகின்றன.

ப. அதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இப்படி ஒரு கும்பல் இணையத்தில் இயங்குகிறது. என்னை முஸ்லிம் என விக்கிபீடியாவில் மாற்றினார்கள். பிறகு அது மாற்றப்பட்டுவிட்டது. சமூக வலைதளங்களில் பொய்களைப் பரப்புகிறார்கள். வேறு எந்தத் தாக்குதலும் நடக்கவில்லை.

கே. நீங்கள் பல வருடங்களுக்கு முன்பாக போஃபர்ஸ் விவகாரத்தை அம்பலப்படுத்தியபோது உருவான எதிர்வினைக்கும் இப்போது கிடைக்கும் எதிர்வினைக்கும் என்ன வித்தியாசம்?

ப. அப்போது எதிர்வினை பெரிதாக இருந்தது. பல ஊடகங்கள் இது தொடர்பான செய்திகளை வெளியிட்டன. இப்போது சில தொலைக்காட்சிகள் இது தொடர்பாக செய்திகளை வெளியிடுகின்றன.

சமூக வலைதளங்களில் அதிகம் விவாதிக்கிறார்கள். போஃபர்ஸ் விவகாரம் வெளியானபோது, நாடு முழுவதும் அச்சுப் பத்திரிகைகள் அதனை விரிவாக விவாதித்தன. செய்திகளை வெளியிட்டன. போஃபர்ஸ் என்பது ஊழலின் மறுபெயர் என்று ஆகிப்போனது.

இப்போதுள்ள எங்களுடைய போட்டி பத்திரிகைகள், இது குறித்து விரிவாக செய்தி வெளியிடாவிட்டாலும் அவர்களால் புறக்கணிக்க முடியாது.

அப்போதைய ஃபிரான்ஸ் அதிபர் ஒலாந்துடன் இந்திய பிரதமர் மோதிபடத்தின் காப்புரிமை Getty Images Image caption அப்போதைய ஃபிரான்ஸ் அதிபர் ஒலாந்துடன் இந்திய பிரதமர் மோதி

கே. போஃபர்ஸ் ஊழல் வெளியானபோது அப்போதைய அரசிடமிருந்து அச்சுறுத்தல் இருந்ததா?

ப. இல்லை. அப்படி ஏதும் இருக்கவில்லை. ஆனால், சில வதந்திகள் இருந்தன. அருண் ஷோரி அளித்த ஒரு தகவலின்பேரில் அப்போதைய முதல்வர் கருணாநிதி எனக்கு காவல்துறையின் பாதுகாப்பை ஏற்பாடு செய்தார்.

பிறகு, நான் அதை வேண்டாமென சொல்லிவிட்டேன். ராஜீவ் காந்தியே என்னோடு பேசினார். அந்த நேரத்தில் இலங்கை விவகாரம் தொடர்பாக பல சமயங்களில் நாங்கள் பேசுவோம் என்றாலும், அப்போதெல்லாம் போஃபர்ஸ் பற்றி அவர் கேட்க மாட்டார்.

பிறகு, தனியாக ஒரு முறை சந்தித்தோம். அப்போது, இதில் என்னவெல்லாம் நடந்தெதன விவரித்தேன். அவர் எதையும் மறுக்கவில்லை. பிறகு, போஃபர்ஸ் விவகாரத்தில் உண்மையில் யார் பணம் வாங்கியிருப்பதாக நினைக்கிறீர்கள் எனக் கேட்டார்.

இதில் என்ன சந்தேகம்? பெரிய இடத்துத் தொடர்பில்லாமல் நடந்திருக்குமா எனக் கேட்டேன். ஆனால், தனக்கோ தன் குடும்பத்திற்கோ இதில் தொடர்பில்லையென சொன்னார் ராஜீவ். மிகவும் கண்ணியமாக நடந்துகொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

பிறகு, வி.பி. சிங் பிரதமராகப் பதவியேற்கும்போது, பத்திரிகையாளர்கள் சிலர் போஃபர்ஸ் பற்றிக் கேட்டார்கள்.

என்னிடம் கேட்காதீர்கள், ராமிடம் கேளுங்கள். அவருக்குதான் நன்றாகத் தெரியுமென சிரித்தபடி சொன்னார்.

ரஃபேல்

கே. இந்த விவகாரத்தில் இன்னும் என்ன அம்பலப்படுத்தப் போகிறீர்கள்?

ப. இப்போது அதை சொல்ல முடியாது. ஆனால், ஆச்சரியங்கள் காத்துக்கொண்டிருக்கின்றன. பல ஆவணங்கள் வந்துகொண்டிருக்கின்றன.

கே. ஹிந்து ஓர் இடதுசாரி இதழ், ராம் ஓர் இடதுசாரி ஆகவேதான் இதைச் செய்கிறார் என்று சமூக வலைதளங்களில் விமர்சிக்கிறார்கள்

ப. இம்மாதிரி உள்நோக்கம் கற்பிப்பதற்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. நான் ஒரு முற்போக்கு இடதுசாரி எண்ணம் கொண்டவன் என்பது உண்மை. ஆனால், அதற்கும் இந்த விவகாரத்திற்கும் என்ன தொடர்பு?

ஒரு வலதுசாரியாக இருப்பவர், இம்மாதிரி எழுதினாலும் அதை மதித்தாக வேண்டும். மறுக்க வேண்டுமானால், நான் முன்வைத்த தகவல்களை மறுக்க வேண்டும். ஏன் பாரிக்கரின் குறிப்பை வெளியிடவில்லையென்பதா மறுப்பு?

சில விஷயங்களில் படிப்படியாகத்தான் வெளியிட முடியும். போஃபர்சிலும் அப்படித்தான் நடந்தது.

ரஃபேல் விவகாரம் எல்லோராலும் பேசப்படும் விவகாரமாக இருக்கிறது. அப்படியான தருணத்தில் எனக்குக் கிடைத்த ஓர் ஆவணத்தை நான் வெளியிடாமல் காத்திருக்க முடியுமா? எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் வெளியிடத்தான் நினைப்போம்.

இந்த ரஃபேல் விவகாரத்தைப் பொறுத்தவரை, முதல் கட்டுரையை வெளியிட சில சில வாரங்கள்கூட ஆயின. ஆனால், தற்போது வெளியாகியுள்ள கட்டுரைகள் முந்தைய நாட்களில் எழுதப்பட்டவை. முந்தைய நாள் இரவு பத்தரை மணி வரைக்கும்கூட எழுதி அனுப்பினோம்.

கே. இந்தியாவில் தற்போது புலனாய்வு இதழியலின் நிலை எப்படி இருக்கிறது?

ப. இம்மாதிரி எழுதக்கூடிய பல பத்திரிகையாளர்கள் இருக்கிறார்கள். ஆனால், நிர்வாகங்கள் தடுத்துவிடுகின்றன என்றுதான் நினைக்கிறேன்.

தி வயர், கேரவான், ஸ்க்ரோல், தி ஹிந்து போன்றவர்கள் இம்மாதிரி புலனாய்வில் ஈடுபடுகிறார்கள். இந்த விவகாரத்தில் கேரவான் சிறப்பாகவே செயல்படுகிறது என்றுதான் சொல்வேன்.

வங்க தேசத்தில் டெய்லி ஸ்டார் சிறப்பாக செயல்படுகிறது. அந்த இதழ் மீது பல வழக்குகளை அரசு தொடரும். இருந்தாலும் துணிச்சலோடு செயல்படுகிறார்கள். பாகிஸ்தானில் தி டான் இதழ் சிறப்பாக வெளிவருகிறது.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.