Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசிய அரசாங்கம் அமைந்தால் அது எமக்கு இராஜதந்திர தேல்வியாக அமையும் - சிறிதரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தேசிய அரசாங்கம் அமைந்தால் அது எமக்கு இராஜதந்திர தேல்வியாக அமையும் - சிறிதரன்

தேசிய அரசாங்கம் அமைந்தால் அது எமக்கு இராஜதந்திர தேல்வியாகவே அமையும் என வீரகேசரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்தார்.

அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு,

கேள்வி:- தற்போதைய பாராளுமன்றக்காலத்தினுள் புதிய அரசியலமைப்பு ஏற்படுத்தப்பட்டு விடும் என்று நம்புகின்றீர்களா?

பதில்:- தனிப்பட்ட ரீதியில் கூறுவதாயின், இந்தப் பாராளுமன்றக்காலத்தினுள் புதிய அரசியலமைப்பு வராது என்பது தெளிவாக தெரிகின்றது. அந்தவிடயத்தில் மாற்றுக்கருத்துக்களை கூறுவதில் எவ்விதமான அர்த்தமுமில்லை. மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர் மிகக்கடுமையான பிரசாரங்களை செய்கின்றார்கள். தற்போது சமர்ப்பிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவின் இறுதி அறிக்கையிலும் திருத்தங்கள் பல செய்ய வேண்டியுள்ளது. திருத்தங்கள் செய்ய வேண்டிய இறுதி அறிக்கைக்கு எதிராகவே கடுமையான பிரசாரங்களை செய்பவர்கள் திருத்தங்கள் செய்வதற்கு இடமளிப்பார்களா? ஆகவே அடுத்த பாராளுமன்றத்தில் தான் இதுபற்றிய விடயங்களை மீண்டும் சீர்தூக்கி பார்க்க முடியும்.

கேள்வி:- புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இல்லையா?

பதில்:- தற்போதைய சூழலில் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கும் அரசியல் தீர்வினை வழங்கக்கூடிய திராணி அவர்களிடத்தில் இல்லை. தம்மையும், எஞ்சிய காலத்தில் தமது அரசாங்கத்தினை தக்கவைப்பதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளார்களே தவிரவும், அரசியல் தீர்வு வழங்க வேண்டும் என்று நேர்மனப்பாங்காக செயற்படவில்லை.

கேள்வி:- புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படாத பட்சத்தில் அடுத்தகட்டம் என்ன?

பதில்:- புதிய அரசியலமைப்பு உள்ளிட்ட அரசியல் தீர்வுக்கான விடயங்களை சுட்டிக்காட்டி பொறுப்புக்கூறலை மையப்படுத்தி அரசாங்கத்திற்கு ஜெனீவாவில் அழுத்தங்களை பிரயோகிக்கமுடியும். அதன்மூலம் அரசாங்கத்தினை தீர்வு நோக்கிய நகர்வில் வழிக்கு கொண்டுவர முடியும். ஆனால் அந்த விடயத்தில் எவ்வாறான அணுகுமுறைகளைச் செய்து களத்தை திறக்கப்போகின்றோம் என்பது தொடர்பில் எமது கட்சியிடத்தில் தெளிவான நிலைப்பாடு இல்லை. யுத்தம் நிறைவடைந்த பின்னர், அரசியல் தீர்வு, பொறுப்புக்கூறல் போன்ற விடயங்களில் சர்வதேசமும் எமக்கு வாக்குறுதிகளை வழங்கியிருந்தது. அமெரிக்கா, அயல்நாடான இந்தியா போன்றவை எமது அணுகுமுறைகள் தொடர்பாகவும் கரிசனைகளைக் கொண்டிருந்தார்கள். பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளுங்கள், அனுசரித்துச் செல்லுங்கள் போன்ற சொற்பதங்களை எமக்கு அடிக்கடி சொன்னார்கள். ஜெனீவாவில் பிரேரணைகளை அமெரிக்கா கொண்டுவந்திருந்தமையாலும், இந்தியாவை விட்டு அரசியல் தீர்வு விடயத்தினை முன்னெடுக்க முடியாது என்ற எழுதப்படாத விதியின் காரணமாகவும் அவர்களின் கருத்துக்களை உள்வாங்கி செயற்பட வேண்டிய தேவை எமது கட்சிக்கு இருந்தது. அதேபோன்று தான் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் ஆதரவைப் பெறுவதற்கான கருத்துக்களுக்கும் செவிமடுக்க வேண்டியிருந்தது. தற்போதைய சூழலில் கூட சர்வதேசத்தினைப் பயன்படுத்தி அழுத்தங்களைப் பிரயோகிப்பதே எமக்குள்ள ஒரே தெரிவு.

கேள்வி:- புதிய அரசியலமைப்பினை முன்னிலைப்படுத்தி பல்வேறு விட்டுக்கொடுப்புக்களைச் செய்த கூட்டமைப்புக்கு அரசாங்கமும், சர்வதேசமும் பொறுப்புக்கூற வேண்டியிருக்கின்றதல்லவா?

பதில்:- ஆம், சர்வதேசம் பல சந்தர்ப்பங்களில் ஏமாற்றியுள்ளதென்ற உணர்வு எமக்குள்ளது. யுத்தகாலத்தில் கிளிநொச்சியில் உள்ள ஐ.நா அலுவலகத்தினை மூடவேண்டாம் என மக்கள் கண்ணீர்விட்டுக ;கோரியபோதும் அது நடைபெறவில்லை. அதன்பின்னரே கொத்துக்கொத்தாக மக்கள் கொல்லப்பட்டார்கள். அதன் பின்னர் அதற்கு நீதிபெற்றுத்தருவதாக சர்வதேசம் வாக்குறுதி அளித்திருந்தாலும் தற்போது நட்டாற்றில் விட்டதொரு நிலைமையே உள்ளது. சர்வதேசத்தினை நம்புகின்றோம் என்று கூறினாலும் அதிலும் கீறல்கள் ஏற்பட ஆரம்பித்துள்ளன. இருப்பினும் சர்வதேசத்திற்கு அப்பால் எமக்கு வேறொரு தெரிவு இல்லையே.

கேள்வி:- “அனுசரிப்புக்களைச் செய்யுங்கள்” எனக்கூறிய சர்வதேசத் தரப்புக்கள் தமிழர்களின் அடிப்படைக்கோட்பாடுகளில் நடைமுறை ரீதியிலான மாற்றங்களை அல்லது விட்டுக்கொடுப்புக்களைச் செய்யுமாறு அன்புக் கட்டளைகள் இட்டனவா?

பதில்:- கொள்கைரீதியாக அடிப்படைக் கோட்பாடுகளில் எவ்விதமான அழுத்தங்களையும் பிரயோகிக்கவில்லை. சித்தாந்த ரீதியான எமது அரசியலை எந்தவொரு நாடுகளும் நிராகரிக்கவில்லை. உதாரணமாக, அயல்நாடான இந்தியா கூட வடகிழக்கு இணைப்பினை கைவிடுங்கள் என்று இதுவரையில் கூறவே இல்லை. ஆனால் இத்தரப்புக்கள் எமது விடயங்களை தத்தமது வெளியுறவுக்கொள்கைகளுக்கு அமைவாக முன்னெடுகின்றபோது ஏற்படுகின்ற தாமதங்கள் எமது நம்பிக்கை மீது அழுத்தங்களை இயல்பாகவே உருவாக்குவதாக உள்ளது.

கேள்வி:- ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் மீண்டுமொரு தடவை கால அவகாசத்தினை வழங்குவதை கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளுமா?

பதில்:- கால அவகாசம் என்பதில் மயக்கம் உள்ளது. விசாரணைகளை மேற்கொள்வதற்காகவே கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று கூறுகின்றார்கள். மறுபக்கத்தில் சர்வதேச கண்காணிப்புக்கான இடைவெளி வழங்கப்படுவதாகவும் கூறுகின்றார்கள். எவ்வாறாயினும் தொடர்ந்தும் கால அவகாசத்தினை வழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு இலங்கையினுள் நியாயமான விசாரணையொன்று நடைபெற்று நீதி கிடைக்கும் என்பது எப்போதுமே நடைபெறாதவொருவிடயம். ஆகவே சர்வதேச சமுகத்தின் கண்காணிப்பும், அழுத்தமும் அவசியமாகின்றது. ஜனாதிபதி மைத்திரியின் ஒக்டோபர் 26 அரசியல் புரட்சியின்போது, கூட்டமைப்பு நடந்துகொண்ட முறைமையை சர்வதேச நாடுகள் வரவேற்றுள்ளார்கள். அவர்களின் எம்மீதான பார்வை தொடர்ந்தும் இருக்கின்றது. ஆனாலும் காலம் செல்லச்செல்ல இலங்கைக்குள்ளேயே தீர்வுகளைத் தேடலாம். அபிவிருத்திகளை முன்னெடுக்கலாம் என்று கூறுவதற்கான சூழல்கள் உருவாகின்றமையை நோக்கிய போக்குகளே தென்படுகின்றன. அதனடிப்படையில் எமது விடயங்கள் ஆபத்தான காலகட்டத்திற்குள் செல்கின்றன.

கேள்வி:- இலங்கையின் பொறுப்புக்கூறலுக்காக மீண்டும் மனித உரிமை கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டியுள்ள சூழலில் எந்த நாடுகள் கைகொடுக்கும் என எதிர்பார்க்கின்றீர்கள்?

பதில்:- எதிர்வரும் மார்ச் மாதம் 20ஆம் திகதி இலங்கை தொடர்பில் மீண்டும் தீர்மானம் கொண்டுவரப்பட்டு அழுத்தமானதாக பிரயோகிக்கப்படலாம் அமெரிக்கா மனித உரிமைகள் பேரவையில் இருந்து வெளியேறியுள்ள நிலையில் ஜேர்மன் புதிதாக அங்கத்துவம் பெற்றுள்ளது. பிரித்தானியாவும், கனடாவும் அங்கத்துவத்தில் உள்ளன. ஆகவே இந்த நாடுகள் ஏனைய நாடுகளுடன் இலங்கை குறித்து பேச்சு நடத்தி அடுத்த கட்டத்தினை முன்னெடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

கேள்வி:- கடந்த கூட்டத்தொடரில் கூட்டமைப்பு சார்பில் தாங்கள் பங்கேற்றிருந்த நிலையில் எதிர்வரும் கூட்டத்தொடரிலும் பங்கேற்பீர்களா? கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் செல்லவுள்ளார்களா?

பதில்:- கட்சி சார்பிலோ அல்லது தனிப்பட்ட ரீதியிலோ நான் பங்கேற்பேன். கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று இம்முறை பங்கேற்பது குறித்து ஆராய்ந்து வருகின்றோம். இன்னமும் இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை. தனிப்பட்ட ரீதியில் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமக்குள்ள வசதிகளுக்கு அமைவாக ஜெனீவாவுக்கு செல்கின்றார்கள். கட்சி ரீதியாக குழுவொன்று செல்ல வேண்டும் என்ற எண்ணப்பாடு இன்னமும் உருவாக்கப்படவில்லை என்பது துரதிஸ்டவசமானது.

கேள்வி:- நீதிகோரும் தமிழ் மக்களின் ஆணையைப் பெற்றுள்ள தரப்பு அந்த விடயங்களை கையாள்வதற்கு கட்டமைக்கப்பட்ட பொறிமுறையொன்றை ஸ்தாபிப்பதில் தயக்கம் காட்டுவதேன்?

பதில்;:- ஜெனீவா விவகாரத்தினை கையாள்வதற்கு குழுவொன்று அமைக்கப்பட்டு அதனூடாக கையாளப்பட வேண்டுமென்ற பேச்சுவார்த்தைகள் கட்சி மட்டத்தில் பேசப்பட்டன. ஆனால் கட்டமைப்பு உருவாக்கப்பட்டு சரியான முறையில் கையாளப்படவில்லை என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அதேநேரத்தில் ஏதுவுமே செய்யவில்லை என்று கூறமுடியாது. புலம்பெயர் அமைப்புக்களுடன் இணைந்து எமது பணிகளை ஆற்றியுள்ளோம். எமது நடவடிக்கைகளின் வேகங்களில் போதாமை உள்ளமையை ஏற்றுக்கொள்கின்றோம்.

கேள்வி;:- சர்வதேச கண்காணிப்புடனான விசாரணை அவசியம் என்று நீங்கள் கூறுகின்றீர்கள். சுர்வதேச விசாரணையே நிறைவுற்றுவிட்டதென்று உங்களுடைய கட்சியிலிருந்து கூறப்படுகின்றது? நேரெதிராகவுள்ள இக்கருத்துக்களில் எதனை ஏற்பது?

பதில்:- சர்வதேச விசாரணை நிறைவுற்று விட்டது என்றால் சர்வதேச மேற்பார்வை அவசியமில்லையே. இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் பல்வேறு வழிகளில் தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. ஆனால் சாட்சியங்களிடத்தில் விசாரணைகள் நடத்தப்படவில்லை. சாட்சியங்களிடத்தில் விசாரணை நடத்துவதென்றால் சர்வதேச மேற்பார்வை அவசியம். சுhவதேச விசாரணை நிறைவுற்றுவிட்டது என்றால் அதற்கான இறுதி தீர்ப்பினை வழங்கியிருக்க முடியும் அல்லவா? மேலும் விசாரணை நிறைவுறவில்லை என்பதற்கு, இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்குதல்,பொறிமுறைகள் பரிந்துரைக்கப்படல் போன்றவையெல்லாம் சான்றாக இருக்கின்றன.

கேள்வி:- இலங்கையின் பொறுப்புக்கூறல் சம்பந்தமாக கணிசமான அழுத்தம் இம்முறை பிரயோகிக்கப்படுமா?

பதில்:- பொறுப்புக்கூறலில் இலங்கை அசமந்தமாக செயற்படுகின்றது என்று மனித உரிமைகள் ஆணையாளர் இம்முறை கூட்டத்தொடரிலும் அறிக்கை சமர்ப்பிக்கலாம். இலங்கை இறைமை உள்ள நாடு என்ற அடிப்படையில் அதற்குள் நின்று இந்த விடயங்களை ஐ.நா எவ்வாறு கையாளப்போகின்றது என்பதை திடமாக கூறமுடியதுள்ளது. பொறுப்புக்கூறலுக்கான பொறிமுறையை இலங்கை கையிலெடுக்காத நிலையில் அதற்கு அப்பால் சென்று எவ்வாறு செயற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படபோகின்றன என்ற கேள்விகள் எல்லாம் எம்முன்னே இருக்கின்றன. ஐ.நாவும், சர்வதேசமும் தங்களுடைய நலன் சார்ந்து எங்களுடைய பிரச்சினைகளை கைவிட்டுச் செல்கின்றதா என்ற ஆதங்கம் எமக்கு இல்லாமில்லை. அதற்கு எமது தரப்பும் காரணமாக இருக்கலாம். அவற்றை உடனடியாக மாற்றியமைக்க வேண்டும். ஐ.நா உட்பட சர்வதேச நாடுகள் இலங்கை மீது அழுத்தங்களை பிரயோகிக்குமாறு தொடர்ந்தும் வலியுறுத்துவோம்.

கேள்வி:- பிரதமர் ரணில் தலைமையிலான அரசாங்கம் அமைவதற்கு கூட்டமைப்பு ஆதரவளித்திருந்த நிலையில் மீண்டும் தேசிய அரசாங்கத்தினை அமைத்து கூட்டமைப்பு அரசாங்கத்தின் மீது கொண்டிருந்த “பிடியை” தளர்த்துவதற்கு முயற்சிக்கப்படுகிறது. இதன்மூலம் ஆட்சியதிகார அரசியலுக்காக கூட்டமைப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை ஏற்றுக்கொள்கின்றீர்களா?

பதில்:- அதுவே நூறுவீதமான உண்மை. கூட்டமைப்பை பயன்படுத்தி ஆட்சியைப் பெற்றவுடன் எதிர்க்கட்சித்தலைவர் பதவியிலிருந்து தலைவர் சம்பந்தனை கடாசி விட்டார்கள். அதனை சம்பந்தன் ஐயாவும், தற்போது நன்றாக உணர்ந்துள்ளார். வெளிப்படையாக அதுதொடர்பில் அவர் கருத்துக்களை வெளியிடாது விட்டாலும் நூறுவீதம் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்பதை புரிந்துகொண்டுள்ளார். அத்துடன் காலம்காலமாக சிங்களத்தலைமைகள் தமிழ்த் தரப்பு மீது கொண்டிருக்கும் நிகழ்ச்சி நிரலை ரணில் விக்கிரமசிங்கவும் மேற்கொள்கின்றார். அதாவது, தமிழ் தரப்பான கூட்டமைப்பு தீர்மானிக்கும் சக்தியாக இருக்க கூடாது என்பதற்காகவே ரணில், தேசிய அரசாங்கத்தினை உருவாக்குகின்றார். தேசிய அரசு அமைக்கப்பட்டால் எமக்கு இராஜதந்திரத் தோல்வியாகவே அமையும். தற்போதைய சூழல் எமக்கு மிகவும் ஏமாற்றமான காலமாகும்.

கேள்வி:- அடுத்து வரவு-செலவுத்திட்டம் வரவுள்ள நிலையில் உங்கள் பக்கம் மீண்டும் “பிடி”திரும்புமல்லவா?

பதில்:- நாங்கள் ஆதரவளித்து நீதிமன்றம் சென்று அரசாங்கத்தினை அமைப்பதற்கு காரணமாக இருந்துவிட்டு அதே அரசாங்கத்தினை தோற்கடிப்பதற்கு காரணமாக இருக்க முடியாது. எனினும் தேசிய அரசாங்கம் அமைக்கப்படுமாகவிருந்தால் அதன் அடுத்தகட்ட செயற்பாடுகளை மையமாக வைத்து நாம் முடிவுகளை எடுப்போம். 

கேள்வி:- கூட்டமைப்பின் தலைமை தேசிய சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்றிருந்த நிலையில் அத்தினம் வடகிழக்கில் கரிநாளாக பிரகடனப்படுத்தப்பட்டு கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் தாங்கள் பங்கேற்றிருந்தீர்கள். இந்த நேரெதிரான செயற்பாடுகளின் பின்னணி என்ன?

பதில்:- சுதந்திர தினம் சம்பந்தமாக கட்சி ரீதியாக முடிவுகள் இதுவரை காலத்தில் எடுக்கப்பட்டிருக்கவில்லை. கடந்த காலத்தில் சம்பந்தன் ஐயாவும், சுமந்திரனும் சுதந்திர தின நிகழ்வுகளில் நல்லெண்ணத்தினை வெளிப்படுத்தும் வகையில் பங்கெடுத்துள்ளார்கள். மேலும் தற்போது வரையில் தேசிய நிகழ்வுகளில் பங்கேற்பதன் ஊடாக பெரும்பான்மையினரின் மனநிலையில் மாற்றத்தினை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கை சம்பந்தன் ஐயாவுக்கு உள்ளது. பெரும்மையினர் மாறமாட்டார்கள் என்பதை ஏற்றுக்கொள்ளும் மனநிலை அவரிடத்தில் இன்னமும் வரவில்லை. தற்போதுள்ள களச்சூழலின் படி தந்தை செல்வா போன்று ஈற்றில் சம்பந்தன் ஐயாவும் கடவுள் தான் தமிழ் மக்களை காப்பாற்றுவார்கள் என்று கூறுகின்றாரோ தெரியாது. என்னைப் பொறுத்தவரையில், 70ஆண்டுகளுக்கு மேலாக எம்மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுக் கொண்டிருக்கும் இனரீதியான அழிப்புக்களுக்கு மத்தியில் தேசிய கொடியின் கீழ் நிற்கக்கூடிய மனரீதியான தயார் நிலை தமிழர்களுக்கு ஏற்படவில்லை.

கேள்வி:- 2015ஆம் ஆண்டுக்குப்பின்னர் புதிய அரசியலமைப்பு உருவாக்கம், பொறுப்புக்கூறல் ஆகிய பிரதான விடயங்களில் பின்னடைவுகள் ஏற்பட்டுள்ள நிலையில் யாழ்.தேர்தல் தொகுதியில் அதிகூடிய வாக்குகளைப் பெற்று நீங்கள் ஆணை வழங்கிய மக்களுக்கு என்ன பதிலளிக்கப் போகின்றீர்கள்?

பதில்:- அரசியல் தீர்வு, பொறுப்புக்கூறல் விடயங்களில் நாம் முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கினோம். குழப்பியவர்கள் நாங்கள் என்றாகிவிடக்கூடாது என்பதற்காக இறுதிவரையில் முயற்சித்தோம். எமது அணுகுமுறைகளை மக்கள் அறிவார்கள். ஆனால் சிங்கள பேரினவாதத் தலைவர்கள் அவற்றை உதாசீனம் செய்துவிட்டார்கள். எமது இலக்குகளை அடைவதற்கான வழிகள் திறந்து தான் உள்ளன. ஆனால் நகர்வுகளில் தடைகள் ஏற்பட்டுள்ளன. அதனை மாற்றியமைத்து அடுத்த கட்டத்திற்கு நகரவேண்டியுள்ளது. சுhவதேச தரப்புக்கள் ஊடாக நகர்வுகளைச் செய்வதே தற்போதைக்குச் சாத்தியமானதாகவுள்ளது.

கேள்வி:- அதிக ஆணைபெற்ற உங்களுடைய தரப்பின் முயற்சிகள் வெற்றிபெற்றிருக்காத நிலையில் விக்கினேஸ்வரன் தலைமையில் உருவாகும் கூட்டணி சவால்களை ஏற்படுத்துமெனக் கருதுகின்றீர்களா?

பதில்:- அந்த அணியை நான் சவாலாக கருதவில்லை. குhரணம், அவர்களின் கூட்டு இன்னமும் இறுதியாகவில்லை. விக்னேஸ்வரன், சுரேஸ், கஜேந்திரகுமார், அனந்தி, ஐங்கிரநேசன், சிவகரன் என தனித்தனியான அணிகளாகவே இருக்கின்றார்கள். அவர்களுக்குள்ளேயே இன்னமும் இணக்கப்பாடு ஏற்படவில்லை. அனைவரும் ஒன்றாகினால் ஒருவேளை சவாலான அணியாக இருக்கும் என்று கூறலாம். எதனையும் மக்களே தீர்மானிப்பார்கள். என்னைப் பொறுத்தவரையில் தனிப்பட்ட விருப்புக்களாக தொடர்ச்சியான பிளவுகள் தமிழர் தரப்பில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. இதுபெரும் குறைபாடாகும். இதனால் தென்னிலங்கை தரப்புக்களே இலாபமடையப் போகின்றன. கஜேந்திரகுமார் முதல் விக்கினேஸ்வரன் வரையில் கட்சி ஜனநாயகத்திற்காக கட்சிக்குள்ளிருந்தே போராடியிருக்க வேண்டும். தனித்தனியாக பிரிந்து செல்வதால் ஒருசிலர் தீர்மானம் எடுப்பதற்கே அது வழி சமைத்திருக்கின்றது.

(நேர்காணல்:- ஆர்.ராம்)

 

http://www.virakesari.lk/article/49866

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.