Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நாவும் ஜெனீவாவும்: அமெரிக்கா எதிர் சீனா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நாவும் ஜெனீவாவும்: அமெரிக்கா எதிர் சீனா

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2019 பெப்ரவரி 21 வியாழக்கிழமை, பி.ப. 07:04Comments - 0

உலகப் பொதுமன்றம், என்றும் எல்லோருக்கும் பொதுவானதாக இருந்ததில்லை. இந்தக் குற்றச்சாட்டு ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்டது முதல் சொல்லப்பட்டு வந்திருக்கிறது. இருந்தபோதும், உலக அமைதியைக் காப்பதற்குள்ள ஒரேயொரு மன்றம் என்றவகையில், உலகநாடுகள், அம்மன்றில் அங்கத்துவம் வகித்து வந்துள்ளன. இதுவரை, மூன்றாம் உலகப்போர் ஏற்படவில்லை.

ஆனால், அதையொத்த உயிரிழப்புக்களை மனிதகுலம், கடந்த அரை நூற்றாண்டுக் காலத்தில் கண்டுள்ளது. உலகம் பாதுகாப்பான இடமாக இல்லை என்பதை உலகெங்குமுள்ள சாதாரண மக்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். 

பட்டினியாலும் பசியாலும்,  நோய்களாலும் தினந்தினம் நூற்றுக்கணக்கானோர் சாகிறார்கள். ஆனால், உலக நாடுகளால் எதையும் செய்ய முடிவதில்லை. ஐக்கிய நாடுகள் சபையாலும் எதுவும் ஏலவில்லை. ஏன்? 

இலங்கையின் போர், தனது கோரமுடிவை எட்டியதன் பின்னணியில், தமிழ் மக்களின் கவனம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கரமான ஜெனீவாவில் அமைந்துள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் மீது இருந்தது. இன்று போர் முடிந்து பத்தாண்டுகள் ஆகிவிட்டன. இலங்கைக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டுவந்த அமெரிக்காவே, இன்று மனித உரிமைகள் பேரவையில் இல்லை. அமெரிக்கா, அப்பேரவை தொடர்ச்சியாக இஸ்‌ரேலுக்கு எதிராகச் செயலாற்றுகிறது என்று, பேரவையிலிருந்து வெளியேறி அவலநாடகத்தையும் கடந்தாண்டு நாம் கண்டிருக்கிறோம். 

உலகின் மிகப்பெரிய மனித உரிமைக்காவலான அமெரிக்கா,  ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலிருந்து வெளியேறியது ஆச்சரியமல்ல. ஆனால், ஏதோவொரு வகையில் ‘மனித உரிமைகளின் பேரால்’ தனக்கு உவப்பில்லாத அரசுகளைத் தண்டிக்க, இப்பேரவையை அமெரிக்கா பயன்படுத்த வந்துள்ளது. அதேவேளை, தனக்கு வேண்டிய வகையில், அரசாங்கங்களைக் கட்டுக்குள் வைக்க, ‘மனித உரிமைகள்’ என்ற பயனுள்ள ஆயுதத்தை, கடந்த இரண்டு தசாப்தங்களாகக் கையாண்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்கா ஏன் வெளியேறியது என்ற வினாவுக்கானப் பதிலை, அமெரிக்காவில் இருந்து வெளியாகும் Foreign Policy சஞ்சிகை கடந்தவாரம் வெளியிட்டது. 

மிக நீண்டகாலமாக ஐக்கிய நாடுகள் சபையின் உயர் பதவிகளுக்கு அமெரிக்காவின் ஆசிபெற்றவர்களே நியமிக்கப்படுவது வழக்கமாக இருந்து வந்திருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையினதும் அதன் துணை அமைப்புக்கள் அனைத்திலும், அமெரிக்காவின் விருப்புக்குரிய நபர்களே முக்கியப் பதவிகளிலும் கொள்கை வகுப்பாளர்களாகவும் இருந்து வந்திருக்கிறார்கள். முன்னாள் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளரான இருந்த பூட்ரஸ் காலி, தனது இரண்டாவது பதவிக்காலத்தை வகிக்க இயலாமல் போனமைக்குக் காரணம், அவர் அமெரிக்கா விருப்புக்குரியவராக இல்லாமல் இருந்ததே. இவ்வாறு ஐக்கிய நாடுகள் சபையின் பெரும்பதவிகள் அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருந்து வந்திருக்கிறது. 

இந்நிலையில், சீனா மிகுந்த வினைத்திறனுடனும் இராஜதந்திரத்துடனும், கடந்த சில பத்து ஆண்டுகளாக ஐ.நாவில் செயலாற்றி வந்துள்ளது. இது, ஐ.நாவின் பல்வேறு மட்டங்களில், சீனர்கள் பதவிகளில் அமர்வதற்கு வழிவகுத்துள்ளது. அதேவேளை அமெரிக்காவின் மேற்குலகக் கூட்டணிக்கு மாற்றாக, ஆபிரிக்க, இலத்தீன் அமெரிக்க, ஆசிய நாடுகளை உள்ளடக்கிய தனக்கான ஆதரவுத்தளத்தை, சீனா ஐ.நாவின் அனைத்து அமைப்புக்களிலும் வலுப்படுத்தி வந்துள்ளது. 

image_a33d44bf24.jpg

கடந்தாண்டின் ஆபிரிக்காவின் பேரேரிகள் பிராந்தியத்துக்கான ஐ.நாவின் சிறப்புப் பிரதியாக சீன இராஜதந்திரி நியமிக்கப்பட உத்தேசிக்கப்பட்டது. ஆபிரிக்காவின் பேரேரிகள் பிராந்தியமானது, புரூண்டி, கொங்கோ, கென்யா, தன்சான்யா, ருவாண்டா, உகாண்டா ஆகிய நாடுகளை உள்ளடக்கியது. இப்பகுதிக்குரிய ஐ.நாவின் சிறப்புப் பிரதிநிதியாக சீன இராஜதந்திரி ஒருவர் நியமிக்கப்படக்கூடாது என்று, அமெரிக்கா கடுமையாகத் தெரிவித்தது. ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் நிக்கி ஹீலி, மிகக் கடுமையான தொனியில் இதை ஐ.நா அதிகாரிகளுக்குத் தெரிவித்தார். இது அமெரிக்காவுக்கும் ஐ.நாவுக்கும் இடையிலான மிகப்பெரிய நெருக்கடியாக உருவெடுத்தது. 

ஆபிரிக்கப் பிராந்தியத்தில் அதிகரித்துள்ள சீனா ஆதிக்கம் தொடர்பில், ஏற்ெகனவே அமெரிக்கா கவலையில் உள்ளது. இந்நிலையில் ஐ.நாவின் பிரதிநிதியாக சீன இராஜதந்திரி நியமிக்கப்படுவது ஐ.நாவைப் பயன்படுத்தி இந்நாடுகளில் செல்வாக்குச் செலுத்தும் அமெரிக்கப் பொறிமுறைக்கு பாரிய பின்னடைவைக் கொடுக்கும் என் அமெரிக்கா நன்கறியும். இதனால், இந்த நியமனத்தைத் தடுக்க அமெரிக்கா கடுமையாக முயன்றுள்ளது. 

இதன் உச்சக்கட்டமாக ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவருக்கும் ஐ.நாவின் செயலாளர் நாயகம் அந்தோனியோ குர்திரேசுக்கும் இடையிலான தனிப்பட்ட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் சீன இராஜதந்திரியின் நியமனத்தை நிறுத்தாவிட்டால், அமெரிக்கா கடுமையாக எதிர்வினையாற்றும் என்று, நிக்கி ஹீலி குர்த்திரேஸை எச்சரித்துள்ளார். அதன் ஒரு கட்டமாக அமெரிக்கா மனித உரிமைப் பேரவையில் இருந்து விலகும் என்றும் ஐ.நாவுக்கான நிதியுதவிகளை நிறுத்தும் என்றும் ஹீலி தெரிவித்துள்ளார். ஆனால் நியமனத்தை விலக்கிக் கொள்ள குர்த்திரேஸ் மறுத்துவிட்டார். 

இதற்குப் பதிலடியாக, அமெரிக்கா ஐ.நா மனித உரிமைப் பேரவையில் இருந்து விலகியது. இதன்மூலம் தனது அதிகாரத்தை நிலைநிறுத்தி, ஐ.நாவின் தனது பிடியை உறுதிசெய்ய அமெரிக்கா முயன்றது. ஆனால், கடந்த மாதம் 22ஆம் திகதி, சீன இராஜதந்திரி ஹூவாங் ஷியாவை ஆபிரிக்கப் பேரேரிப் பிராந்தியத்துக்கான சிறப்புப் பிரதிநிதியாக, ஐ.நாவின் செயலாளர் நாயகம் நியமித்தார். ஹூவாங் ஷியா நீண்டகால சீன இராஜதந்திரியாக இருந்தவர். நைகர், செனகல், கொங்கோ ஆகிய நாடுகளுக்கான சீனத் தூதுவராகக் கடமையாற்றியவர்.  

இந்த நியமனம் ஐ.நாவின் அலுவல்களில் ஒரு திருப்புமுனையாக கருதப்படுகிறது. உலகப்பெரு மன்றில் அமெரிக்காவின் குறைந்துவரும் செல்வாக்கின் உரைக்கல்லாக இச்சம்பவம் பார்க்கப்படுகிறது. அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் ஐ.நாவைப் பயன்படுத்தி ஈராக்கிலும் லிபியாவிலும் செய்ததை, சிரியாவில் செய்ய முடியவில்லை. சிரியாவில் மேற்குலகின் அவமானகரமான தோல்வியில், ஐ.நாவின் உதவியுடன் எதையும் செய்ய இயலாமைக்கு ஒரு பங்குண்டு. அதற்கு ஐ.நா பாதுகாப்புச் சபையில் சீனாவும் ரஷ்யாவும் எடுத்த கடுமையான நிலைப்பாடுகள் காரணம். 

இப்போது ஐ.நாவில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருவதை அமெரிக்கக் கொள்கைவகுப்பாளர்கள் மிகுந்த கவலையுடன் நோக்குகிறார்கள். அமெரிக்காவின் கைப்பொம்மையாக இயங்கிவந்த ஐ.நாவின் அமைப்புக்கள் அமெரிக்க நலன்களுக்கு பாதகமாக மாறும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள். அவர்கள் அமெரிக்க நலன்களுக்குப் பாதகமான செயற்பாடுகள் என்று நோக்குவது, ஐ.நா அமைப்புக்களின் நடுநிலையானச் செயற்பாடுகளையே என்பதை இங்கு நோக்கல் தகும். 

ஊலக ஒழுங்கில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் ஒருபுறமாக நிகழ்கையில் அதன் மறுமுனையில் சர்வதேச அரங்குகளில் சீனா தவிர்க்கவியலாத சக்தியாகி வருகிறது. அமெரிக்கா செய்துவந்ததைப் போல் சீனா வலிமையின் மூலம் இதைச் சாத்தியமாக்கவில்லை. மாறாக நீண்டகாலத் திட்டமிடல் மூலோபாயம் ஆகியவற்றின் வழி இதைச் சாதித்துள்ளது. இது உலக அமைப்புக்களில் சீனாவுடன் நாடுகள் தொடர்ச்சியாக ஊடாட வேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளது. சீனா அமைதியான இராஜதந்திரத்தின் வழி தனது கட்டுப்பாட்டை நிறுவிவருகிறது. இன்றுவரை பிறநாடுகளில் தலையிடுவதற்கு ஐ.நாவை அமெரிக்கா பயன்படுத்தியது போல சீனா பயன்படுத்தவில்லை. மாறாக இவ்வமைப்புகளின் நடுநிலையான செயற்பாட்டையே இதுவரைக் கோரி வந்துள்ளது.

சீனாவின் அதிகரித்த செல்வாக்கை நடுநிலைமையுடன் செயற்படும் ஐ.நா அதிகாரிகள் மிகுந்த முற்போக்கானதாகக் கருதுகிறார்கள். அவர்கள் கொள்கை வகுப்பிலும் செயற்படுத்தலிலும் நடுநிலைமையைக் கோரும் சீனாவின் நிலைப்பாடு, பல விடயங்களில் தமக்கு பக்கபலமாக இருப்பதாக அவர்கள் நம்புகிறார்கள். அதேவேளை அமெரிக்க சீன நெருக்கடியின் சிக்கலான அத்தியாயங்கள் இனி ஐ.நாவில் அரங்கேறும் என்பதையும் எதிர்வுகூறுகிறார்கள். 

“வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு” என்பதை சீனாவின் அதிகரிக்கும் செல்வாக்கு உணர்த்தி நிற்கின்றது. ஐ.நாவின் அமைப்புகளின் இயலாமை, ஊழல், வினைத்திறனின்மை, அரசியல்மயமாக்கம் எனச் சீரழிந்துள்ள நிலையிலேயே ஐ.நாவில் சீனா முக்கிய பாத்திரமேற்க முனைகிறது என்பதை கவனிக்க வேண்டும். இதன் காட்சிகள் ஐ.நா மனித உரிமைப் பேரவையிலும் அரங்கேறும். 

மேற்குலகையும் அமெரிக்காவையும் நம்பியே தமிழ் மக்களின் எதிர்காலம் இருக்கிறது என்று ஜெனீவாவில் நம்பிக்கை வைக்கச் சொன்னவர்கள் இப்போதும் அதையே சொல்கிறார்கள் என்பதுதான் அபத்தம். மனித உரிமைகள் என்பது தேவைக்குப் பயன்படுத்தப்படும் வசதியான கருவியே என்பதைத் தமிழ் மக்கள் உணர வேண்டும். தமிழ் மக்கள் மீதான அக்கறை மேற்குலகுக்குக் கிடையாது. தமிழ் மக்கள் பகடைகளாக உருட்டப்படுகிறார்கள். சீனா என்ற எதிரியைக் காட்டி அமெரிக்காவின் உதவியைப் பெற்று தமிழ் மக்களின் உரிமையை வெல்லலாம் என்ற கணக்குகள் மோசமானவை என்பதை இன்றைய நிலவரம் விளக்குகிறது. 

2012 முதல் ‘ஜெனீவாவுக்குப் பின்’ என்று எத்தனையோ ஆரூடங்கள் சொல்லப்பட்டாயிற்று. அவை எல்லாமே கனவுக் கற்பனைகள் என்பதை நாம் இப்போதைக்கு விளங்கியிருக்க வேண்டும். ‘ஜெனீவாவுக்குப் பின்?’ என்ற கேள்விக்குரிய சரியான விடை ‘அடுத்த ஜெனீவா’ என்பதே.   

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஐ-நாவும்-ஜெனீவாவும்-அமெரிக்கா-எதிர்-சீனா/91-229918

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.