Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் அரசியல்: கண்கட்டி வித்தையின் உச்சம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் அரசியல்: கண்கட்டி வித்தையின் உச்சம்

Editorial / 2019 ஏப்ரல் 02 செவ்வாய்க்கிழமை, பி.ப. 06:01 Comments - 0

image_37fded0697.jpg-அ.அகரன்

தனி மனித வாழ்வியலில், ஒருவனது நடத்தையின் பாங்கு, அவனது முன்னேற்றத்திலும் வெற்றியிலும் எவ்வாறு முக்கியத்துவம் பெறுகின்றதோ, அதனிலும் மேலாக, ஒரு நாட்டின் அதிகாரபீடத்தில் இருக்கின்றவர்களின் கருத்துகளும் செயற்பாடுகளும் அந்த நாட்டின் தலைவிதியைத் தீர்மானிக்கும் சக்திகளாக அமைகின்றன.   

இலங்கையில், நாட்டினுடையதும் மக்களினுடையதும் நலன்களைப் பின்னிறுத்தி, வெறும் சுயநல அரசியலை, கட்சி அரசியல் ஊடாகச் செய்துகொண்டிருக்கும் அரசியல்வாதிகளுக்கு இடையில் ஏற்படும் அரசியல் முரண்பாட்டின் வெளிப்பாடான காழ்ப்புணர்ச்சி கருத்துகள், சர்வதேச ரீதியாகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறுவதில்லை.   

அண்மையில் நடந்து முடிந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரின் பின்னராக, இலங்கை சார்புப் பிரதிநிதிகளின் கருத்துகள் தொடர்பில், மனித உரிமைகள் ஆணையாளர் விசனம் தெரிவித்திருந்த நிலையில், வடமாகாண ஆளுநரின் கருத்து, பெரும் சர்ச்சை நிறைந்தாகப் பார்க்கப்படுகின்றது.  

குறிப்பாக, வடமாகாண ஆளுநரைப் பொறுத்தவரையில், அரசாங்கத்தின் பிரதிநிதி என்பதற்கப்பால், ஜனாதிபதியின் விசுவாசி என்பதே யதார்த்தம். ஏனெனில், அதன் பிரதிபலிப்பானதே, ஆளுநர் பதவியும் கூட. இந்நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எவ்வாறு வடக்குக்கு தமிழர் ஒருவரை நியமித்து, தமிழ் மக்களுக்கு பூரிப்பு நிறைந்த உணர்வைக் காட்டிக்கொண்டாரோ, அதன் உள்ளார்ந்த அர்த்தத்தின் வெளிப்பாடுகளை, வடக்கு ஆளுநர் தற்போது காட்டி வருகின்றபோது, அது தொடர்பான விசனம் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டு வருகின்றது.  

இந்நிலையிலேயே, மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரின் போதும், அதன் பின்னரும் அவர் வௌிப்படுத்தியிருக்கும் கருத்துகள், அவருடைய தற்போதைய, எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பில், பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதென்பது, சாதாரண மக்களின் அரசியல் நாடித்துடிப்புகளில் இருந்து உணர்ந்து கொள்ள முடிகின்றது.

வடக்கில், இரண்டாண்டுகளையும் கடந்து நடந்துவரும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாகக் கரிசனை கொள்ளவேண்டும் என்ற எண்ணம், மத்திய அரசாங்கத்திடம் இல்லாத நிலையிலேயே, நம்பிக்கை இழப்புகளின் பின்னர், ஆளுநர் மீதான பார்வையை இம்மக்கள் திருப்பியிருந்தனர்.   

இது, நாடிபிடித்துப்பார்க்கும் ஒரு முயற்சியாக இருந்தாலும் கூட, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுடைய போராட்டத்தின் பின்னர், ஆளுநரின் ஊடாக, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளருக்கு வழங்குமாறு தெரிவித்த மகஜர்களுக்கு என்னவானதென்ற கேள்வி, தற்போது எழுந்துள்ளது. 

வெறுமனே பக்குவப்பட்டது போன்றதான வார்த்தைகளை உதிர்த்துவிட்டுப் போவதால், ஒன்றையும் சாதித்துவிட முடியாது. ஏனெனில், பாதிப்புக்குள்ளான மக்கள், யுத்தத்தின் பின்னரன 10 ஆண்டுகளில், தமிழ்த் தலைமைகளிடம் அவர்கள் கண்டுகொண்ட ஒரு விடயம், ‘பக்குவப்பட்டது’ போன்றதான கருத்துகளை மாத்திரம்தான். எனவே, இச்சூழலிலேயே வடக்கு ஆளுநரின் கருத்துகளும் இருந்துவிட்டுப் போகுமாக இருந்தால், அது ஏட்டுச் சுரைக்காயாகவே இருந்துவிடும்.   

அரசியல்வாதிகள், மக்களிடம் இருந்து பல கோரிக்கைகளையும் மகஜர்களையும் கண்டவர்கள். ஆனாலும், அவற்றினூடாக எவ்வித மாற்றங்களையும் மக்களுக்குப் பெற்றுக்கொடுக்கவில்லை என்ற கருத்துப் பிரசாரத்துக்குள் சிக்கிக்கொண்டே உள்ளனர்.  

அந்த விரிசையில், அடுத்ததாக வடக்கு ஆளுநரும் வெறும் கருத்துகளால் தன்னை அலங்கரித்துவிட்டு, பாதிக்கப்பட்ட அல்லது உறவுகளைத் தொலைத்துவிட்டு, இன்றுவரை வீதியில் நின்று போராடும் மக்களுக்கான தீர்வையோ, இராணுவ ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ள மக்களின் வாழ்விடங்களையோ மீட்டுக்கொடுக்க முடியாத நிலை காணப்படுமாக இருந்தால், ஆளுநர் நியமிப்பும் பூரிப்புகளுக்கு அப்பால், முகச் சுழிக்க வைக்கும் செயலாக இருக்கலாம்.  

இன்று வடக்கில் நடந்தேறிவரும் மறைமுகக் குடியேற்றங்களும் அதனூடான தமிழ் மக்களின் வாழ்வியல் சமநிலை மாற்றத்துக்கான ஏற்பாடுகளும், காலச்சூழலில் தாக்கத்தை ஏற்படுத்தப்போகும் நிலையிலேயே, தமிழ் மக்களின் காணிகளும் அவர்களால் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ளன.  

பௌத்தர்கள் வாழாத இடங்களில், பௌத்த மேலாதிக்கத்தின் வெளிப்பாடுகளாக, புத்தரின் சிலைகள் வைக்கப்படும் நிலையில், வடக்கில் பௌத்த மாநாடு நடந்து முடிந்திருக்கின்றது.  

பௌத்த மாநாடு என்பது, காலத்தின் தேவையா என்பதான கேள்வி நிறைந்துள்ளது. ‘வடமாகாணத்தில் இருக்கின்ற மொழி, மத, கலாசார வேற்றுமைகளை ஏற்றுகொள்கின்றோம். அடுத்தவர், தம்முடைய மத, மொழி, கலாசாரத்துக்கு எந்தளவு மரியாதை கொடுக்கிறாரோ, அந்த மதிப்பையும் மரியாதையையும் கொடுப்பதற்கு, நாங்கள் இணங்குகின்றோம்’ என்பதையே, இந்த பௌத்த மாநாட்டில் எடுத்துக்கொண்ட தீர்மானமென, ஆளுநர் தெரிவித்திருந்தார்.  

இந்நிலையிலேயே, குறித்த மாநாடு நிறைவடைந்த பின்னர், ஊடகவியலாளர் ஒருவர், “வடக்கில் பல இடங்களில் தொல்பொருள் என்ற பெயரிலும் வேறு காரணங்களாலும் பௌத்த சின்னங்கள் வைக்கப்படுகின்றதே” என்ற கேள்வியை எழுப்பியிருந்த நிலையில், வடக்கில் நான்கு இடங்களிலேயே இவ்வாறான நிலை உள்ளதாகவும், அவை நீதிமன்றத்தின் கவனத்தில் உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.  

வடக்கில் பௌத்தர்கள் வாழாத பல இடங்களிலும், இன்று பெரும் பிரச்சினையை ஏற்படுத்துகின்ற பௌத்த சின்னங்கள் தொடர்பில் பல சமூக செயற்பாட்டாளர்கள் விசனம் தெரிவித்து வரும் நிலையில், இவ்வாறான கருத்தை ஆளுநர் வெளியிட்டிருப்பதானது, ஏற்கக்கூடியதான ஒன்றா என்ற ஐயப்பாடு ஏற்படுகின்றது.  

வடக்கு மாகாண சபையின் உருவாக்கத்தின் பின்னர், மக்களுடைய எதிர்பார்ப்புகள் எவ்வாறு அதிகரித்திருந்தன; அதன் பின்னரான காலப்பகுதியில், அது எவ்வாறு  மக்களின்  தூற்றுதலுக்கு உள்ளாகியிருந்ததோ, அதேபோன்ற நிலையே, இன்று தமிழ் அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் மட்டுமன்றி, தமிழர்கள் என்ற நாமத்தோடு அரசாங்கத்தில் உயர் பதவிகளை வகிப்பவர்களின் செயற்பாடுகளும் இருந்து வருகின்றன. இதில் ஆச்சரியப்பட எதுவுமில்லாதபோதிலும், எப்போது விடிவு கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்புமிக்க மக்கள் மத்தியில், இவை அனைத்தும், ஏமாற்று வித்தைகளாவும் கண்கட்டி விளையாட்டாகவுமே அரங்கேறி வருவதையே ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது.  

எனவே, மீட்பர்களாகத் தம்மை அடையாளப்படுத்த முன்னிற்கும் தமிழ் அரசியல்வாதிகள், தமக்கான சந்தர்ப்பங்கள் வருகின்ற போதெல்லாம், அதனைத் தட்டிக்கழித்துவிட்டு, பின்னர் அது தொடர்பில் அறிக்கைப்போர் நடத்துவதென்பது ஏற்புடையதாக இல்லை.  

மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில், அரசாங்கத்தின் சார்பில் சென்ற குழுவினருக்கு எதிராகத் தாம் செல்வதாகத் தப்பட்டம் அடித்துக்கொண்ட தமிழ் மக்களின் பிரதிநிதிகள் பலர், அங்கு சாதித்ததை விட, அரசாங்கத்துக்குச் சாதகமாக்கிய விடயங்களே அதிகம் எனலாம்.  

எனவே, கண்கட்டி வித்தையின் உச்சத்தைத் தொட்டுள்ள தமிழர் தரப்பு அரசியல், ஆரோக்கியமற்றுச்  செல்லும் நிலையில், அரசாங்கத்தின் உயர் பதிவிகளில் அமர்த்தப்படும் அதிகாரம்மிக்கவர்களும் தமிழர்களுக்கு மேலும் மேலும் நம்பிக்கை இழப்புகளை வழங்கி வருகின்றமை தொடர்பில் சிந்திக்க வேண்டியவர்கள் மக்களே.  

தேர்தல் காலங்களில் மாத்திரம் அரசியல் பேசிவிட்டுப் போகும் சாதாரண குடிமக்களாகவும் வாக்காளர்களாகவும் இருந்துவிட்டுப் போகின்ற நிலைமை மாற்றமடைந்து, தமது சூழலில் இடம்பெறும் அரசியல் செயற்பாடுகள் தொடர்பாக விழிப்படையும் சமூகமாக, இந்தத் தமிழ்ச் சமூகம் மாற்றமடையாத வரை, ஏமாற்று அரசியல் இருந்துகொண்டே இருக்கும் என்பது மறுப்பதற்கில்லை.  

இவ்வாறான அரசியல் தெளிவை மக்களுக்குக் கொடுக்கவேண்டிய தேவை, இளம் சமூகத்தின் முன் கொண்டுவரப்பட்டுள்ளது. எனினும், மக்களுக்கான தெளிவுபடுத்தல்கள் எங்கிருந்து நகர்த்தப்படுகின்றன என்பதான தெளிவும் அதன் விளக்கமும், மக்களுக்கும் இச்செயற்பாட்டை முன்னெடுக்கவுள்ள இளம் சமூகத்துக்கும் தெரிந்திருந்தல் வேண்டும். ஏனெனில், தமிழ்த் தரப்புக்குள் ஊடுருவியுள்ள பலர், இன்று தமிழர் அரசியலையும் சரி, மக்கள் போராட்டங்களையும் சரி, தமது கைகளுக்குள் வைத்து நகர்த்தி, அதைச் செல்லாக் காசாக்கிவிடப் பார்க்கின்றனர்.  

இதன் வெளிப்பாடே, காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டங்கள் சிலவும் திசைமாறிப் போயுள்ளதன் பின்னணியை அவதானிக்கலாம். காணாமல் போனவர்கள் தொடர்பான எவ்வித சம்பந்தமும் இல்லாத பலரும், இன்று காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டங்களைத் தமது நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றாற்போல் நகர்த்திச் செல்கிறனர். எனினும், அதன் பின்னால் செல்லும் மக்களுக்கு இது தொடர்பான தெளிவூட்டல்கள் இல்லை. பணம் சம்பாதிக்கும் வழியாக மக்கள் போராட்டங்களை மாற்றாத வரை, அவை ஆக்கபூர்வமானதாகவே இருக்கும். அதுவே, ஒரு வெகுஜன புரட்சிக்கும் அடித்தளமிடும்.   

இன்றைய சூழலில், இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ள மக்களிடத்தில், யாருக்கு எதிராக போராட்டங்கள் முன்னகர்த்தப்பட வேண்டும் என்பதான ஐயப்பாடு நிறைந்துள்ளது. ஏனெனில், தமிழ் மக்களின் பிரதிநிதிகளும் சரி, அரசாங்கத்தின் அதிகாரங்களில் ஏறும் தமிழர்களாகத் தம்மை அடையாளப்படுத்தும் அதிகாரிகளும் சரி, தமிழ் மக்களுக்கெதிரான செயற்பாட்டையே முன்னகர்த்துகின்றனர் என்கின்ற விசனம் மக்களிடம் இருக்கின்றது. 

இந்நிலையில், குறிப்பாக, தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தைக்கூட இன்று அனைவரும் கைவிட்ட நிலையில், அவர்களது கோரிக்கைகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன. உணவு தவிர்ப்புப் போராட்டத்தை அரசியல் கைதிகள் முன்னெடுக்கின்ற போது, நீ முந்தி, நான் முந்தி என அறிக்கை விடும் அரசியல்வாதிகள், அவர்கள் தொடர்பாகச் செயற்படுவதற்கான பல சந்தர்ப்பங்களை இன்றுவரை நழுவவிட்டுள்ளனர்.  

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஐந்து கட்சிகள் சேர்ந்தியங்கிய 2013 ஆம் ஆண்டு முதற்கொண்டு (இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி - ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழீழ விடுதலை இயக்கம் - டெலோ, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் - புளொட்)  அரசியல் கைதிகளின் பிரச்சினை, இன்றுபோல் இருந்துவந்த போதிலும் கூட, இதுவரை எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்றத்திலும் சரி, அதற்கு வெளியிலும் சரி, இன்று வடக்கு, கிழக்கில் மக்கள் மேற்கொண்டு வருகின்ற போராட்டம் போன்ற ஒரு செயன்முறையை கூட பிரயோகிக்கவில்லை என்பதே கவலைக்குரிய விடயமாகும். 

வரவு செலவுத்திட்டம் கொண்டு வரப்படும் காலத்தில், “நாம் கோபத்தில் இருந்தமையால், இவை தொடர்பில் பேசிக்கொள்ள முடியவில்லை” எனக் குழந்தைத்தனமாகத் தெரிவிப்பதற்காகவும் “நாம் மிகவும் கடுமையான அழுத்தங்களைக் கொடுத்தோம்” என்பதான மாயாஜாலங்களைக் காட்டிக்கொண்டு, சுயநலமும் பொறுப்புணர்வுமற்ற அரசியல்வாதிகள் காலத்தைக் கடத்தி விடுகின்ற நிலையே காணப்படுகின்றது.  

தமிழ் அரசியல்வாதிகள், தம்மை வாக்களித்துத் தேர்ந்துவிட்ட, தமது சொந்தச் சகோதர மக்கள் மீதே, இவ்வாறான சூழ்ச்சி மிகு அரசியல் மோசடிகளை, எந்தவித கூச்ச சுபாவமும் இன்றிச் செய்துவருகின்றார்கள். 

இவர்கள், இப்படிப்பட்ட வகிபாகத்தை வகித்து வருவதாலேயே,  தமிழ் மக்கள் பிரதேசங்களில், பெரும்பான்மையினத்தவர்களின் அத்துமீறிய குடியேற்றங்களும், வரலாற்றுச் சின்னங்கள் அழிப்புகளும், பௌத்த சின்னங்களின் முளைப்பும், போதைவஸ்துகளின் புளக்கங்களும், வாள்வெட்டுக் குழப்பவாதிகளின் சுதந்திர நடமாட்டங்களும் அனுமதிக்கப்பட்டு தமிழ் மக்கள் பிரச்சினைகளுக்குள்ளும் நெருக்கடிகளுக்குள்ளும் வாழ நிர்ப்பந்திக்கப்படுகின்றார்கள்.

மக்கள் பிரதிநிதிகளாகப் பதவிகளை அலங்கரிப்பவர்கள், மக்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்குத் தயாரில்லாமையே இங்கு அடிப்படைக் காரணம் என்பதை, மக்கள் தௌிவாக உணர்ந்துள்ளார்கள்; இதனை அரசியல்வாதிகள் விளங்கிக்கொண்டால் எல்லாம் நன்றாக நடக்கும். ஆனால், அவர்கள், மக்களை ‘முட்டாள்கள்’ என்றே எண்ணிப் பழக்கப்பட்டு விட்டார்கள்.     

பாதீட்டுக்கு கூட்டமைப்பின் ஆதரவு நியாயமாகுமா?

 காலத்துக்குக் காலம் தேர்தல்களில் மட்டும் பேசப்படும் அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரம், கடந்த 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் போதும் பிரதான பேசுபொருளாக இருந்தது. 

ஆனால், ஆட்சி மாறிய பின்னராகவும் சரி, தேர்தல் முடிவடைந்ததன் பின்னராகவும் சரி, அந்த விடயத்தை அழுத்தமாகப் பிடித்துச் செயற்படுத்துவதற்கு, தமிழ்த் தரப்பு அரசியல்வாதிகள் தவறியுள்ளனர்.  

இவ்விடயம் தொடர்பில், வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், அண்மையில் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். 

‘சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகளுக்கான தவணைக்காலம் நீண்ட இடைவெளியைக் கொண்டுள்ளது. இவர்களுக்காக அமைக்கப்பட்ட விசேட நீதிமன்றமும் தற்போது செயற்பாட்டில் இல்லை. சிலருக்கான குற்ற ஒப்புதல் வாக்குமூலங்கள் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையிலும், அடுத்து எவ்விதமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படாமல், சிறைச்சாலையில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.   

இதைவிடவும், அரசியல் கைதிகள் தமது விடுதலைக்காகத் தாமாகவே போராட்டங்களை முன்னெடுக்கின்றபோது, தமிழ்த் தலைமைகளே நேரடியாகச் சென்று வாக்குறுதிகளை வழங்கி, போராட்டங்களை நிறைவு செய்துகொண்டு வந்துள்ளனர். அதற்குப் பின்னரான காலத்தில், கண்துடைப்புக்காக பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றதே தவிர, செயற்பாட்டு ரீதியாக, எவ்விதமான மாற்றங்களும் முன்னேற்றங்களும் இடம்பெறவில்லை’ என்கின்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.  

இன்றைக்குத் தமிழ் அரசியல்வாதிகளின்  அரசியல் போக்கைப் பார்க்கும்போது, மேற்குறித்த அறிக்கையை வெறும் அரசியல் அறிக்கை எனப் புறக்கணித்து விட முடியாது. 

எதிர்வரும் ஐந்தாம் திகதி இடம்பெறவுள்ள வரவு - செலவுத் திட்டத்தின்போது, தமிழ்த்  தேசியக் கூட்டமைப்பு, வரவு - செலவுத் திட்டத்தை ஆதரித்து வாக்களிப்பதாக இருந்தால், தமிழ் மக்கள் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகளுக்கான தீர்வை பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும். 

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும். இவ்வாறு கிடைக்கப்பெறும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தவேண்டும் என கூறிக்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் அண்மை நாள்களில் வெளியிடப்பட்ட கருத்துகள், தற்போதைய அரசாங்கத்துக்கு எதிரானதாகவும் கோபித்துக்கொள்வதானதாகவும் இருக்கின்றன.  

 எனவே, இலங்கையின் அரசியலில் உயர் பதவிகளில் உள்ளவர்களின் கருத்துகள் சர்வதேசத்தின் கோபத்துக்குள்ளாகும் நிலையில், தமிழ் மக்களின் அரசியல் இருப்பைப் பலப்படுத்தும் செயன்முறையை ஆணித்தரமாகக் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு, அரசியல்வாதிகளிடம் உண்டு.  

எனவே, தமிழ் மக்களின் விடயங்களோடு ஒன்றிப்போகும் அரசியல் நிலைப்பாட்டை தமிழ் அரசியல்வாதிகள்  எடுக்கத் தலைப்படாத நிலையில், எதிர்வரப்போகும் தேர்தல்களில், மக்கள் சிறந்த ஆசான்களாக மாறுவர் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.     

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தமிழர்-அரசியல்-கண்கட்டி-வித்தையின்-உச்சம்/91-231619

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பேசும் ஆளுநரை போட்டது எங்களுக்காக இல்லை, தங்கட அழுத்தங்களை குறைக்க. 
எல்லாம் சுயநல சந்தர்ப்பவாத அரசியல்.
பல பா.உ கள் அடுத்தமுறை வெல்லமுடியாதென்று தெரியும், கிடைப்பதை பெற்றுக்கொண்டு பேசாமல் இருக்கினம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.