Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான்கு தசாப்தங்களின் பின்னர் அமுலாகுமா மரணதண்டனை ?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நான்கு தசாப்தங்களின் பின்னர் அமுலாகுமா மரணதண்டனை ?

 

ஜனாதிபதி திகதியை தீர்மானித்து விட்ட நிலையில் மரண தண்டனை அமுலாக்கம் குறித்த தர்க்கங்களின் பின்னணி தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவுடன் ஒரு சந்திப்பு.

வரலாற்றுத் தர்க்கம்

ஒரு மனிதன் சமூகத்திற்கு ஆபத்தானவனாக இருக்கிறான். பாவத்தை செய்கின்றான் என்றால் சமூகத்தின் நலன்கருதி அவனைக் கொன்றுவிட வேண்டுமென மதகுருவும் தத்துவஞானியுமான தோமஸ் அக்கியுனஸின் கருத்தை பிரதிபலிப்பவர்கள் மரண தண்டனையை மீண்டும் கொண்டு வருமாறு வற்புறுத்துகின்றனர். அது குற்றங்களைத் தடுக்கும் என்பதே அத்தகையவர்களின் பிரதான வாதமாகவுள்ளது. மரண தண்டனை விதித்தல் குற்றங்களை குறைக்கும் அல்லது குற்றம் புரியாதவாறு குற்றவாளிகளைத் தடுக்கும் என்று எங்குமே நிரூபிக்கப்படவில்லை. 

மரண தண்டனையானது மனிதகுலத்தின் கௌரவத்திற்கும் மனிதஉரிமைகளுக்கும்  எதிரானது. மீண்டும் குற்றங்கள் இடம் பெறுவதை தவிர்க்கக் கூடிய திறனை மரண தண்டனை கொண்டிருக்கவில்லை. ஒரு தார்மீக மற்றும் ஒழுக்கநெறி அடிப்படையில் மரண தண்டனை நிறைவேற்றம் தர்மநெறிக்கு உகந்ததல்ல என்றும் அரசு மனித உயிர்களைப் பறித்தலாகாது என்றும் தர்க்கம் நிலவுகிறது.

இலங்கையில் மரண தண்டனை

இலங்கையில் மரண தண்டனை அமுலாக்கம் குறித்து பின்னோக்கிப் பார்த்தோமானால், இலங்கையில் தூக்குத் தண்டனை நிறைவேற்றம் இறுதியாக 1976 ஆம் ஆண்டு இடம்பெற்றது. மரண தண்டனை ஆணையில் கைச்சாத்திட்ட இலங்கையின் இறுதி ஜனாதிபதி வில்லியம் கோபல்லாவ ஆவார்.

2012 நவம்பரில், தூக்குத் தண்டணையை இல்லாதொழிப்பது பற்றிய சர்வதேச மீளாய்வு காலப்பகுதியில்  தூக்குத் தண்டனையை இல்லாதொழிப்பதைப் பரிசீலிக்குமாறு பல நாடுகள் இலங்கையை வலியுறுத்தின. கடந்த  43 வருடங்களாக தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படாத போதிலும், இலங்கை நீதிமன்றங்கள் பிரதிவாதிகளுக்கு தொடர்ந்து  மரண தண்டனை வழங்கி வருகின்றன. தற்போதைய தற்காலிகத் தடையில் உள்ள மரண தண்டனை ஆயுட் தண்டனையாக மாற்றப்படுகின்றது. நாட்டின் ஜனாதிபதியின் அவ்வப்போதைய முன்னெடுப்பாக மட்டுமே இச்செயற்பாடு நிலவி வருகிறது.

இவ்வாறிருக்கையில், 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்திற்கு பின்னரான காலத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தற்துணிவாக வெளியிட்ட கருத்தால் மரணதண்டனை குறித்து இருவேறு கருத்துக்கள் மேலெழுந்து விவாதப்பொருளாக மாறியுள்ளன. வித்தியாவின் கொடூரம், சேயாவின் கொடூர மரணம் ஆகியவற்றுக்குப் பின்னர் மரணதண்டனையை அமுலாக்கும் கோரிக்கையை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்போவதாக 2015 செப்டம்பரில் ஜனாதிபதி மைத்திரி கூறினார். 

அத்துடன், போதைப்பொருளை இலங்கையிலிருந்து முற்றாக களையும் போராட்டத்தில் தொடர் வர்த்தகத்தில் ஈடுபடும் பெரும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள், வியாபாரிகளுக்கு எதிராகவும், சிறைகளில் தண்டனைகளை அனுபவித்துக்கொண்டே இத்தகைய செயற்பாடுகளில் ஈடுபடுவர்களுக்கு எதிராகவும் தூக்குத் தண்டனையை நிறைவேற்றும் செயற்பாட்டினை மேற்கொள்ளப்போவதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால பகிரங்கமாக அறிவித்தார். 

முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரே அதிகளவான மரணதண்டனைக் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கியுள்ளனர். ஆனாலும் அவர்களை விடவும் ஒருபடி மேலே சென்று தன்னைக் கொலை செய்வதற்கு வந்த நபருக்கு பொதுமன்னிப்பு வழங்கிய ஜனாதிபதி மைத்திரிபால மரண தண்டனை விடயத்தில் தற்போது அவர் கடுமையான போக்கைக்கடைப்பிடித்து வருகின்றமைக்காக பல காரணங்களை மறுதலிக்க முடியாதவாறு பொது வெளியில் முன்வைத்துள்ளார்.

போதைவஸ்து கடத்தலின் பின்னணி

பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் மக்கள் பிரதிநிதிகளில் சிலர் போதைப் பொருளுடன் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க சில பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களைக் குறிப்பிட்டார் சட்டத்தை உருவாக்கும் பாராளுமன்றத்திலும் குற்றத்திற்கான தண்டனையை அனுபவிக்கும் சிறைச்சாலையிலும் நடைபெறும் விடயங்களால்;  போதைப்பொருள் முக்கிய பேசுபொருளாக மாறிவிட்டது.

வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து கொண்டு;  போதைவஸ்து வர்த்தகம் தொடர்ந்து நடைபெறுகின்றது என்பது தற்போதைய பிரதான குற்றச்சாட்டாகின்றது.

வெலிக்கடை சிறைச்சாலை நீதி அமைச்சின்; கீழாகவுள்ளது. சிறைச்சாலை ஆணையாளர், சிறைச்சாலை அதிகாரிகள் ஆகியோரின் கட்டுப்பாட்டின் கீழ்தான் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் தண்டனைகளை அனுபவிக்கின்றனர். அவ்வாறிருக்கையில், கைதிகளினால் எவ்வாறு போதைப்பொருள் வர்த்தகத்தினை நிருவகிக்க முடிகின்றது என்பது முதலில் கண்டுபிடிக்கப்படவேண்டும்  எனவே, முதலில் சிறைச்சாலை நிருவாகத்தில் காணப்படும் ஊழல்கள் மற்றும் நிருவாக சீர்கேட்டிற்கான காரணங்கள் ஆகியவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியுள்ளது. 

போதைப்பொருளைத் தயாரித்தவர்கள்இ நாட்டிற்குள் கடத்தி வந்தவர்கள் அதற்கு  ஒத்தாசை வழங்குபவர்கள், அதை விற்பனை செய்தவர்கள் என்று இந்த பாரிய குற்றச் செயலுக்கு முக்கிய காரணகர்த்தாக்கள் பலர் வெளியில் சுதந்திரமாக நடமாடித்திரிகின்ற நிலையில்  அதை உடைமையில் வைத்திருந்தவர்கள் மாத்திரமே சட்டத்தின் பிரகாரம். தண்டிக்கப்படுகின்றார்கள். 2கிராமிற்கு மேற்பட்ட போதைப்பொருளை உடைமையில் வைத்திருப்பவர்கள் மாத்திரமே தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என சட்டத்தில்; தெளிவாகக் குறிப்பிடப்படுவதால் உடைமையில் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டவர்களுக்கு மட்டும் மரணதண்டனை விதிக்கப்படலாம் என்பதன் காரணமாக சமூக பொருளாதாரதளம் இல்லாத சிறுபான்மை சமூகத்தினரும் சமூகத்தில் குறைந்த வசதிகளை கொண்டிருக்கும் ஆட்களுமே பாதிக்கப்படுகின்றனர்.

மரண தண்டனை குறித்த வாதபிரதிவாதங்களுக்கு முன்னர் போதைப்பொருள் கடத்தல் வர்த்தகத்தின் பின்னணியில் செயற்படும் சுறாக்கள் யார் என்பதை கண்டறிய வேண்டும். உண்மையான சூத்திரதாரிகள் அதிகார பலம் மிக்கவர்களாகவே காணப்படுவர் என்பது யாவரும் அறிந்ததே. இருப்பினும் அந்த சவாலை உடைத்தெறிந்து சுறாக்களை கைதாக்குவதே மிக முக்கிய செயற்பாடாக்கப்படவேண்டும். 

கைதிகள் மாற்றம்

வெலிக்கடை சிறைச்சாலையில் தொடர்ந்து போதைப்பொருள் வர்த்தகம் நடைபெறுவதை தடுக்க முடியாத அரசு தற்பொழுது போதைப்பொருள் குற்றச்சாட்டு சாட்டப்பட்டு மரணதண்டனையை எதிர்நோக்கியுள்ள கைதிகளை வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து அங்குனகொலபெலச சிறைச்சாலைக்கு மாற்றியுள்ளார்கள்.

இந்தச் செயல்பாட்டிற்கு இலங்கை மனித உரிமை ஆணைக்குழு கண்டனம் தெரிவித்துள்ளதுடன் மரண தண்டனை, வாழ்க்கை மற்றும் சுதந்திரத்திற்கான உரிமை உட்பட பல மனித உரிமை மீறல்களை மீறக் கூடிய ஒரு கொடூரமான  மனிதாபிமானமற்ற தண்டனையாகும் என்றும் கடுமையான குற்றங்களை ஒடுக்குவதற்கான ஒரு சக்திவாய்ந்த மற்றும் நீண்டகாலக் கொள்கைக் கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் எனவும் மனித உரிமை ஆணைக்குழுவின் தவிசாளர் கலாநிதி தீபிகா உடகம  குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் சாத்தியமா?

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்ட நபர்கள் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டியவர்களல்;லர். குற்றவியல் சட்டக் கோவையின் கீழ் மரண தண்டனை அளிக்கப்பட வேண்டிய ஒரு குற்றத்திற்காக ஒரு நபர் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்படும்போது அத்தண்டனையானது, ஆயுட்கால சிறைத் தண்டனையாகும்.

இது அரசியல் எதிராளிகளை தியாகிகளாக்கிவிட வேண்டியதில்லை என்ற ஒரு விருப்பத்தினால் தூண்டப்பட்டிருக்கலாம். அல்லது குற்றவியல் சட்டக் கோவையின் 296ஆம் பிரிவின்  கீழ் மரணத்தை விளைவித்ததாக தமிழ்பேசும் கைதிகளுக்கு எதிராக  குற்றச்சாட்டு தாக்கல் செய்யப்பட்டால்  எதிரிதரப்பு தமிழ்பேசும் ஜுரி சபை முன் விசாரணைக்கு  கோரலாம் அவ்வாறான நிலையில் அரச தரப்பிற்கு சாதகமான தீர்ப்பு கேள்விக்குரியதாகிவிடும் என்பதனால் தவிர்க்கப்பட்டிருக்கலாம்.

பல வழக்குகளில் முப்படையினர் பொலிஸாருக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களம்   தாக்கல் செய்த வழக்குகளில் ஜுரி  சபையை விசாரணைக்கு  கோரக்கூடிய குற்றவியல் சட்டக் கோவையின் 296ஆம் பிரிவின்  கீழ் வழக்குத் தாக்கல் செய்தனர். இவ் வழக்குகளில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட படையினர் சிங்களம் பேசும்  ஜுரிசபையைக்கோரி அதன் முன் விசாரணை இடம்பெற்று பின்னர் விடுதலை பெற்றனர். கடந்த வருடம் கொழும்பு மேல் நீதிமன்றில் நடைபெற்ற ரவிராஜ் கொலை வழக்கில் எதிரிகளை சிங்கள  ஜுரிசபை சுத்தவாளியாக அறிவித்ததையடுத்து எதிரிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

1981ஆம்ஆண்டு சித்திரை மாதம் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட குட்டிமணி என அழைக்கப்படும் செல்வராஜா யோகச்சந்திரன், தங்கத்துரை, ஜெகன் ஆகியோருக்கு எதிராக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு மரண தண்டனை வழங்கப்பட்டது.

இந்த மரண தண்டனை தீர்ப்பிற்கு எதிராக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ்; கொழும்பு மேல் நீதிமன்றில் முதலாவது வழக்காக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுமீதான விசாரணை திகதி குறிப்பிடப்பட்ட நிலையில் 1983ஆம் ஆண்டு இனக்கலவரத்தில் வெலிக்கடை சிறைச்சாலையில் 1983ஆம் ஆண்டு ஆடி மாதம் 25ஆம் திகதி செல்வராஜா யோகச்சந்திரன், தங்கத்துரை, ஜெகன் ஆகிய மூவரும் மற்றைய தமிழ் அரசியல் கைதிகளும் கொடுரமாக கொலை செய்யப்பட்டனர். 

வாத குறை நிறைந்த நீதித்துறையின் விளைவு

இலங்கையில் மரண தண்டனை ஒருபோதும் இல்லாதொழிக்கப்படவில்லை. ஒவ்வொரு நாளும் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் மேல் நீதிமன்றங்கள் மற்றும் உயர் நீதி மன்றங்கள் கடும் குற்றங்கள் புரிந்தமைக்காக குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனைகளை விதிக்கின்றன. கொலையைத் தவிர, 2கிராமிற்கு அதிகமான ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருத்;தல் அல்லது கடத்தல், அரசுக்கெதிராக யுத்தம் புரிதல், பொய்யான சான்றுகளை இட்டுக்கட்டுதல் உள்ளிட்டவை தூக்குத் தண்டனைக்குரிய வேறு ஒரு சில குற்றவியல் குற்றங்களாகின்றன. 

மரண தண்டனையை மீண்டும் கொண்டுவருவதற்கு எதிரான மிக முக்கியமான வாதமாக குற்றமற்ற அப்பாவிகளுக்கு குற்றத் தீர்ப்பு வழங்கப்படும் ஆபத்து உண்டு என்பதாகும். பல காரணங்களுக்காக குற்றமற்ற ஆட்கள் குற்றங்களோடு தொடர்புபடுத்தப்படலாம்.  பொய் சாட்சி வழங்குவதும் தமது சான்றுகளை சோடிப்பதற்கும் வாய்ப்புண்டு.  குற்றமிழைத்தவர் குடும்பத்தின் ஓர் உறுப்பினராயின், ஏனைய குடும்ப உறுப்பினர்களையும் குற்றத்தோடு தொடர்புபடுத்தலாம். இது அரிதாக நடைபெறும் விடயமொன்றல்ல என்பதை வழக்குத்தொடுநர்கள் அறிவார்கள்.

பொலிஸாரும் விசாரணையும்

 

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும்  குற்றத் தடுப்புப் பிரிவு  முதலிய ஒரு சில விசேடப் பிரிவுகளைத் தவிர, இலங்கைப் பொலிஸ் குற்றங்களைப் புலனாய்வு செய்வதில் கவலைக்கி;டமான விதத்தில் திறமையற்றதாகவுள்ளது. மரபணு மற்றும் கைவிரல் அடையாளம் ஆகிய விஞ்ஞான முறைகளைப்; பயன்படுத்துவது மிகக் குறைவாகவே உள்ளது. விஞ்ஞான நுட்பங்களை பயன்படுத்துவதற்கான வளங்கள் இலங்கையில் இல்லை.

 

பிரதிவாதிகளும் அவரது சாட்சிகளும் கூறுவதை உறுதிப்படுத்த பொலிஸ் ஒருபோதும்; பிரதிவாதிகளை விசாரிப்பதில்லை. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பொலிஸ் பிரதிவாதிகளின் வாக்குமூலங்களை பதிவதற்குக்கூட அக்கறை கொள்வதில்லை. இதற்கு வலு சேர்ப்பதுபோல, ஆட்களை பொய்க்குற்றங்களோடு சம்பந்தப்படுத்துவதாக பொலிஸாருக்கு எதிராக எண்ணற்ற குற்றச்சாட்டுகள் உள்ளன. 

 

இதனைவிடவும் போதைப்பொருள் மற்றும் பயங்கர ஆயுதங்களை வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் பேரில் பொலிஸ் பொய்யாக ஆட்களை குற்றங்களோடு சம்பந்தப்படுத்திய கதைகள் பலவுள்ளன. குற்றமற்ற அப்பாவி மக்கள் மீது பொலிஸ் போதைப் பொருளை அல்லது குண்டுகளை பலாத்காரமாக திணித்த சம்பவங்கள் இருந்துள்ளதுடன், நியாயமற்ற விசாரணைகளின்போது குற்றமற்றவர்களின் உயிர்களும் பறிக்கப்படும் நிலை ஏற்படலாம். 

 

நீதிபதிகளுக்கும் வழக்குத் தொடுநர்களுக்கும் மற்றும் பிரதிவாதிகளின் வழக்கறிஞர்களுக்கும் இது நடப்பது நன்கு தெரியும். குறிப்பாக சம்பவமொன்றில் அடையாளம் காட்டுதல் சம்பந்தப்பட்டவிடத்து மனிதத் தவறுகள் நிகழக்கூடும். வழக்கு விசாரணைகள் மற்றும் மேன்முறையீட்டு நடைமுறை பாதுகாப்பு வழங்குகிறதென்று சிலர் வாதிடலாம். 

 

மேன்முறையீட்டு நடைமுறை

 

மேன்முறையீட்டு நடைமுறை முடிந்து போனதும் மக்கள் பிழையாக குற்றத்தீர்ப்பளிக்கப்பட்ட அல்லது பல வருடங்களுக்குப் பின்னர் புது சாட்சியங்கள் மேலெழுகின்ற அல்லது சந்தேகங்கள் எழுப்பப்படுகின்ற வழக்குகளை மீளாய்வதற்கு இலங்கையில் எவ்வித பொறிமுறையும் இல்லை. பிழையாக தீர்ப்பு வழங்கப்பட்ட வழக்குகளில் நீதிமன்றங்கள் தலையிட்டு, அல்லது சட்டத்தினால் விசேட பொறிமுறைகள் தாபிக்கப்பட்டு, பிழையாகக் குற்றத்தீர்ப்பளிக்கப்பட்ட அப்பாவி மக்கள் விடுவிக்கப்படுவது மாத்திரமின்றி, அவர்களுக்கு நட்டஈடும் வழங்கும் பாதுகாப்பான நடைமுறைகள் எவையும் இங்கு இல்லை.

 

வழக்கறிஞரை நியமித்தல்

 

மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் வழக்குத் தாக்கல் செய்த பின்னர் அந்த வழக்கு நீதிமன்றில் விசாரணைக்கு வரும் பொழுது  எதிரிக்கு தமது சார்பாக வாதாட வழக்கறிஞரை நிதித்;தட்டுப்பாடு காரணமாக அமர்த்த முடியாவிடில், நீதிமன்றத்தினால் அவருக்காக எழுமாறியாக வழக்கறிஞர்கள் அமர்த்தப்படுவார்கள். அவ்வாறு அமர்த்தப்படும் சட்டத்தரணிகள் பெரும்பாலும் இளவயதினராகவும் பயிற்சியற்றவர்களாகவும் அனுபவமற்றவர்களாகவுமே இருப்பர். இக் காரணிகளால் குற்றம் சாட்டப்பட்டவருக்கு பல சந்தர்ப்பங்களில்  நீதி கிடைப்பதில்லை 

 

சட்டத் தொழில்வாண்மைத்துவத்தின் தோல்விகள்

 

குற்றவாளி உரிய முறையில் பாதுகாக்கப்படாத பல சம்பவங்கள் உள்ளன. சிலவேளைகளில் சட்டத்தரணிகள் தமது கட்சிக்காரர் சார்பில் முன்வைக்க வேண்டிய வாதங்களை வழக்குகளில் (பாதுகாத்தல்) முன்வைக்காமல் விடுவதுண்டு அல்லது  தவறுவதுண்டு. இவ்வாறு எத்தனையோ வழக்குகளை எனது அனுபவத்தில் காணக்கூடியதாகயிருந்தது.

நீதிபதிகள் 

 

நீதிபதிகள் தவறிழைக்காதவர்கள் அல்லர். அவர்கள் தம் முன்னே இருக்கும் சாட்சியங்களின் அடிப்படையில் செயற்பட வேண்டியுள்ளது. சில வேளைகளில் பொய்யான சாட்சியங்கள் உண்மையானதென சமர்ப்பிக்கப்படலாம். மிகவும் புத்திகூர்மை மிக்க நீதிபதி கூட பொய்யான, புனையப்பட்ட சாட்சியங்களின் உண்மை தன்மையை கண்டறிய முடியாமல் போகலாம். சாட்சி தவறாகப் புரிந்து கொண்டுள்ளார் என்பதை அவரால் உணர்ந்துகொள்ள முடியாமல் போகலாம். நீதிபதிகளுக்கும் தமக்குரிய பாணியும் விருப்பு வெறுப்பும் உண்டு. 

 

சில நீதிபதிகள் குற்றவாளிக்கு நியாயமான விசாரணையொன்றை வழங்குவதோடு, அவர் கூறுவது உண்மையாக இருக்கலாம் என்று உணர்வார்கள். எனினும், பொலிஸார்; ஒருவித தவறும் செய்யமாட்டார்கள் என்று நம்பும் வேறு நீதிபதிகளும் உள்ளனர்.  ஒரு சில நீதிபதிகளின் திறமையும் பக்கச் சார்பின்மையும் எப்போதுமில்லாவிட்டாலும் சில வேளைகளில் கேள்விக்குரியதாக உள்ளன. 

 

மேன்முறையீட்டு நடைமுறை என்று வரும்போது, இந்த குறைகள் நிலவக்கூடும். எனினும், மேன்முறையீட்டு நீதிபதிகளுக்கு விசாரணை மட்டத்தில் உள்ள நீதிபதிகளுக்கு இருக்கும் அதே அனுகூலம் இருப்பதில்லை.  விசாரணை நீதிபதிகளிடம் இருக்கும் அதே குறைபாடுகள் மேன்முறையீட்டு நீதிபதிகளிடமும் இருக்கலாம். புதிய சாட்சியங்கள் மேன்முறையீட்டில் ஒருபோதும் அனுமதிக்கப்படுவதில்லை என்பதோடு, பிரதிவாதிகள் தரப்பிலான தவறுகள் மிக அரிதாகவே நிவர்த்தி செய்யப்படும். 

 

மரண தண்டனையின் மாற்ற முடியாத விளைவுகள் பற்றி எண்ணும்போது நியாயமற்ற அல்லது அநாவசியமான ஆனால், குழுமியிருப்போரை மனம் குளிர வைப்பதற்காக வழங்கப்படும் பிழையான தீர்ப்புகளின் விளைவுகளை எதிர்நோக்கவேண்டியிருப்பவர்கள் ஒடுக்கப்பட்டவர்களும் தாழ்த்தப்பட்டவர்களும்தான் என்று கருதாமல் இருக்கமுடியாது. 

 

நடைமுறைச்சாத்தியம்

 

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கைக்கான இரண்டாவது மூல ஒப்பந்தம் ஐரோப்பாவைப் போன்று மரண தண்டனை இல்லாதொழிக்கப்படுவதைக் கோருகின்றது. நடைமுறையில் உள்ள அரசியலமைப்பின்; 11 ஆம் உறுப்புரையின் பிரகாரம் மரணதண்டனை கொடிய, மனிதாபிமானமற்ற தண்டனைக்கு ஒப்பானதாகும் என்று வாதிப்படுகின்றது.

 

மறுபக்கத்தில் அரசியலமைப்பின் உறுப்புரை 11 ஆனது அடிப்படை உரிமைகள் பற்றிய இரண்டு உறுப்புரைகளுள் ஒன்றாகும். அவற்றின்;மீது எவ்வித வரம்புகளும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. இறப்பதற்கு முன்னர் கைதி பெரும் துன்பம் அனுபவிக்கிறார். எனவே, அதுவே கொடிய நடத்துகைக்கு ஒப்பானதாகும் என்ற அடிப்படையில் சரியான மனநிலையில் உள்ள எவரும் இன்னொரு மனிதரை மரண தண்டனைக்குட்படுத்துவது மனிதாபிமானமற்ற அல்லது கொடிய செயல் அல்ல என்று கூறமுடியாது என்ற தர்க்கமும் உள்ளது.  

  

மனித உரிமைகள் கோணத்திலிருந்து பார்க்கும்போது, மரண தண்டனை பலரை முகம் சுளிக்க வைக்கிறது. ஐரோப்பிய ஒன்றியம் முதல் மனித உரிமைகள், ஜனநாயக செயற்பாட்டு அமைப்புக்கள் அனைத்துமே இலங்கையில் மரண தண்டனை நடைமுறைப்படுத்தும் பேச்சுக்கே போர்க்கொடி தூக்கியுள்ளன. 

 

அதேநேரம் மரண தண்டனை விதிக்கப்பட்ட சிறைக்கைதிகள்  போதைப் பொருள் குற்றங்கள் புரியும் குற்றவாளிகளாக இருப்பது பற்றி பல அறிக்கைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஜனாதிபதி மைத்திரி கூறியதோடு, தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதற்கு தான்  உறுதி பூண்டுள்ளதாகவும் கைதிகளின் பட்டியல் தயாராகிவி;ட்டதாகவும்; மரண தண்டனையை நிறைவேற்றும் தினத்தை தான் தீர்மானித்துவி;ட்டதாகவும் கடந்த முதலாம் திகதி பகிரங்கமாக பொது வெளியில் அறிவித்தார்.

 

இலங்கையில்  நான்கு தசாப்தங்களுக்குப் பின்னர்  மரண தண்டனை நிறைவேற்றம் இடம்பெறக்கூடுமா? அல்லது வரும் வராதா?  என்ற வினா எழுந்திருக்கையில், ஜனாதிபதியின் தீர்க்கமான அறிவிப்பு கவனிக்கத்தக்கதாகின்றது. 

 

அதற்கு மேலாக, நீதியின்  வழமையான நியமம் மிகவும் பாரதூரமாக நீர்த்துப்போகச் செய்யப்பட்டுள்ள விசாரணைகளைத்; தொடர்ந்து ஆட்களை தூக்கு மேடைக்கு அனுப்புவதானது சிந்திப்பதற்கு மிகவும் கொடூரமான அம்சமென உணரப்படுமா?  

 

எழுத்தாளரும் தத்துவஞானியுமாகிய ஜே.ஆர்.ஆர் டோல்கின் கருத்துப்படி இறப்பதற்குப் பொருத்தமான பலர் வாழ்கின்றனர் அதேபோல வாழ்வதற்கு பொருத்தமான சிலர் இறக்கின்றனர். அவர்களுக்கு உங்களால் வாழ்வு கொடுக்க முடியுமா? ஆகவே, தீர்ப்பில் மரணத்தை வழங்குவதற்கு அதிகம் ஆர்வமாக இருக்காதீர்கள்.

 

இலங்கையில் உள்ள நீதிமுறையில் யார் தண்டிக்கப்படவேண்டும் யார்தண்டிக்கப்படக் கூடாது என்பதற்கான நியாயம்,ல்லை எனவே பழி தீர்ப்பதை விடுத்து உயிருககுக மதிப்பளிக்கும் கலாசாரத்தை தொடரவேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச்சபையின் ஆசிய பசுபிக் பணிப்பாளர் பிராஜ் பட்நாயக் கோரியுள்ளமை கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படுமா?

 

தொகுப்பு:- ஆர்.ராம்

 

http://www.virakesari.lk/article/53530

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.