Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரவுல் காஸ்ட்ரோவுக்கு அடுத்தபடி அதிக நாள் காத்திருந்த தலைவர் மு.க. ஸ்டாலின்தான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"ரவுல் காஸ்ட்ரோவுக்கு அடுத்தபடி அதிக நாள் காத்திருந்த தலைவர் மு.க. ஸ்டாலின்தான்"

தமிழச்சிபடத்தின் காப்புரிமைதமிழச்சி தங்கபாண்டியன்/FACEBOOK

தென் சென்னைத் தொகுதியில் தி.மு.கவின் சார்பில் தமிழச்சி தங்கபாண்டியன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டதிலிருந்தே பெரும் கவனம் அவர் மீது விழந்தது. அரசியல் பின்னணி உள்ள குடும்பத்திலிருந்து வந்துள்ள தமிழச்சி, கவிஞர், ஆங்கிலப் பேராசிரியர், நாடக ஆர்வமுள்ளவர் என பல்வேறு பரிமாணங்களைக் கொண்டவர். தன் அரசியல் பிரவேசம், தேர்தல் வெற்றிவாய்ப்பு, வாக்குறுதிகள் ஆகியவை குறித்து பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் பேசினார் தமிழச்சி. அவரது பேட்டியிலிருந்து:

கே. நீங்கள் ஒரு அரசியல் பாரம்பரியமுள்ள குடும்பத்தில் இருந்துவந்தவர் என்றாலும், நீங்கள் நேரடி அரசியலில் ஈடுபட ஆரம்பித்தது எப்படி?

ப. 2007வரைக்கும் ராணி மேரி கல்லூரியில் ஆங்கில விரிவுரையாளராக பணியாற்றிவந்தேன். 2007ல் தி.மு.க. இளைஞரணியின் வெள்ளி விழா மாநில மாநாட்டை கலைஞர் தலைமையில் மு.க. ஸ்டாலின் நடத்தினார். அந்த மாநாட்டில் கொடி ஏற்றும் மிகப் பெரிய வாய்ப்பை கருணாநிதி எனக்கு வழங்கினார். அப்போதுதான் நான் தமிழச்சி தங்க பாண்டியனாக அறிமுகப்படுத்தப்பட்டேன். அரசு ஊழியராக இருந்தபடி நேரடி அரசியலில் ஈடுபடுவது சரியாக இருக்காது என்பதால் நான் வேலையை ராஜினாமா செய்தேன். அப்படித்தான் நேரடி அரசியலுக்கு வந்தேன்.

கே. இந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு எப்படி வந்தது? இதற்கு முன்பாக நீங்கள் தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கேட்டிருக்கிறீர்களா?

ப. இதற்கு முன்பாக 2009 காலகட்டத்தில் தேர்தலில் போட்டியிட வேண்டுமென விரும்பினேன். தலைவர் கருணாநிதியும் நான் போட்டியிட்டால் சரியாக இருக்குமென நினைத்தார். ஆனால், அந்த நேரத்தில் நான் ஒரு மிகப் பெரிய விபத்தைச் சந்தித்தேன். அதனால், அது நடக்கவில்லை. அதற்குப் பிறகு கலை, இலக்கிய, பகுத்தறிவுப் பேரவையின் துணைச் செயலாளரானேன். அதற்குப் பிறகு துணைத் தலைவரானேன். அதற்குப் பிறகு கட்சியின் பிரச்சாரக் கூட்டங்களில் கலந்துகொள்வது என செயல்பட ஆரம்பித்தேன். இப்போது மீண்டும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.

தமிழச்சி

கே. உங்கள் தந்தை தங்க பாண்டியன் அமைச்சராக இருந்திருக்கிறார். சகோதரர் தங்கம் தென்னரசு அமைச்சராக இருந்திருக்கிறார். இப்போது நீங்கள் தேர்தலில் போட்டியிடுகிறீர்கள். உங்களுக்கென தனியாக கவிஞர், விரிவுரையாளர் என வேறு வேறு அடையாளங்கள் இருந்தாலும், உங்களுடைய வருகை ஒரு வாரிசு அரசியலாகத்தான் பார்க்கப்படுகிறது.

ப. என் தந்தை 1949ல் எவ்வித அரசியல் பின்புலமும் இல்லாமல் ஒரு அடிமட்டத் தொண்டனாகத்தான் அரசியலில் சேர்ந்தார். ஒரு கட்சி, ஒரு கொடி, ஒரு தலைவர் என்று இருந்தார். என்னுடைய சகோதரரும் தான் பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு, தந்தையின் மரணத்தால் அரசியலுக்கு வந்தார். நான் 2007ல் கொடி ஏற்றும் வாய்ப்பைப் பெற்றேன். இப்போது 12 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. இதற்கிடையில் கட்சிக்காக நான் என்ன செய்திருக்கிறேன் என்பதை அவர்கள் கணக்கில் எடுத்திருப்பார்கள்.

ஆனால், தி.மு.க. குடும்பத்தினர் மீது வாரிசு அரசியல் குற்றச்சாட்டு வைப்பது சரியல்லை. இந்த வாரிசுகள் அரசியல் வருகை அவர்கள் பிறந்ததில் இருந்தே துவங்கிவிடுகிறது. தி.மு.க. நடத்தும் மாநாடுகளில் குடும்பம் குடும்பமாக போய் அமர்ந்திருப்போம். போராட்ட காலங்களில் எங்கள் தந்தை, சகோதரர்கள் சிறையில் இருந்தபோது குடும்பத்தோடுதான் போய் சிறை வாயிலில் நின்றிருக்கிறோம். என் தந்தை மிசா சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டபோது நானும் என் தம்பியும் மாணவர்கள். மதுரை, திருவில்லிபுத்தூரைச் சேர்ந்த பல கழகத் தொண்டர்களின் குடும்பத்தோடு ஆட்சியர் அலுவலகத்தின் வாசலில் நிற்கிறோம். 15 நாட்கள் கழித்துதான் எங்கள் தந்தை எங்கே இருக்கிறார் என்பதே எங்களுக்குத் தெரியும்.

என்னுடைய வளைகாப்பின்போது என் தந்தை சிறையில்தான் இருந்தார். தென்னரசு என்ற பெரியப்பாதான் வளைகாப்பை நடத்திவைத்தார். என் திருமணத்தின்போதும் சட்ட எரிப்புப் போராட்டத்திற்காக சிறை சென்றவர், கல்யாணத்திற்கு நான்கைந்து நாட்கள் முன்பாகத்தான் வெளியில் வந்தார்.

தலைவர் கருணாநிதி கைதானபோது அவர்களது குடும்பத்தினர் எத்தனை பேர் இன்னலுக்கு ஆளானார்கள்? மு.க. ஸ்டாலின் சிறைக்குப் போனபோது அவர்களது குடும்பத்தினர் எவ்வளவு இன்னலுக்கு ஆளானார்கள்? அப்போதெல்லாம் யாரும் நீங்கள் வாரிசுகள்தானே, நீங்கள் துன்பப்படுகிறீர்களே எனக் கேட்கவில்லை. வாய்ப்புகள் வழங்கப்படும்போது மட்டும் இந்தக் கேள்வியைக் கேட்கிறீர்கள்.

எங்கள் தலைவர் (ஸ்டாலின்) பதவிக்கு வருவதற்கே கிட்டத்தட்ட 45 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. உலக வரலாற்றில் எடுத்துக்கொண்டால், இம்மாதிரி அரசியல் குடும்பத்திலிருந்துவந்து, இவ்வளவு நீண்ட காலம் தலைவர் பதவிக்காக காத்திருந்தவர்கள் இருவர்தான். ஒருவர் க்யூபாவின் ரவுல் காஸ்ட்ரோ. அவர் 49 வருடங்கள் காத்திருந்தார். அடுத்தது எங்கள் தலைவர்தான். அவர் 45 வருடங்கள் காத்திருந்தார்.

அவரவர் செயல்பாட்டின் அடிப்படையில்தான் பதவிகள் வருகின்றன. ஆனால், மேலோட்டமாக வாரிசுகள் என்பதால் வாய்ப்புக் கிடைத்துவிட்டதாக திரிக்கிறார்கள். சுகதுக்கங்களில் ஒன்றாக சேர்ந்திருப்பதுதான் தி.மு.க. அதுதான் முக்கியம்.

தமிழச்சிபடத்தின் காப்புரிமைதமிழச்சி தங்கபாண்டியன்/FACEBOOK

கே. இந்தத் தேர்தலில் தமிழ்நாட்டில் பல எழுத்தாளர்களுக்கு போட்டியிடும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. நாடாளுமன்றம் செல்லும் வாய்ப்புக் கிடைத்தால், அவர்களால் மற்றவர்களைவிட சிறப்பாகச் செயல்பட முடியுமென நினைக்கிறீர்களா?

ப. எழுத்தாளர்கள் இரண்டு கொம்பு முளைத்த அசாதாரணமான பிறவிகள் அல்ல. மக்களில் இருந்து வருகிறவர்கள்தானே. ஆனால், அவர்களால் மக்களின் பிரச்சனையைக் கூடுதலாகப் புரிந்துகொள்ள முடியும். எழுத்தாளர்கள் பொதுவெளியில் சமரசமில்லாமல் இயங்குபவர்களாக அறியப்படுகிறார்கள். ஆகவே மக்கள் பிரச்சனைகளிலும் அப்படியே இருப்பார்கள் என மக்கள் நம்புகிறார்கள். படைப்புகளில் எழுத்தாளர்கள் அதைத்தானே செய்கிறார்கள்? ஆகவே கூடுதல் தார்மீக வலுவோடு இதைச் செய்வார்கள் என மக்கள் நம்புகிறார்கள். இது தவிர, எழுத்தாளர் என்ற பின்னணியில் இருந்து வந்ததாலேயே அவர்கள் சிறப்பாக செயல்பட்டுவிடுவார்கள் எனச் சொல்ல முடியாது.

கே. இந்திய அரசியலில் பெண்களுக்கான வாய்ப்பு என்பது தொடர்ந்து மறுக்கப்படும் ஒரு விஷயமாகவே இருக்கிறது. தி.மு.கவைப் பொறுத்தவரை, இந்தத் தேர்தலில் நீங்களும் கனிமொழியும் மட்டும்தான் பெண்கள். வாய்ப்புக் கிடைக்க வேண்டுமென்றாலும்கூட, அவர்களுக்கு ஒரு பின்னணி தேவைப்படுகிறது.. ஏன் இப்படி?

ப. பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க தி.மு.க. தொடர்ச்சியாக போராடிவரும் ஒரு இயக்கம். இந்தக் கொள்கையில் சிறிதும் விட்டுக்கொடுக்காத இயக்கம். உள்ளாட்சித் துறையில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு, பெண்களுக்கு சொத்தில் சம உரிமை ஆகியவற்றை தி.மு.கதானே செய்தது? தொழில் வாய்ப்புகளில் 30 சதவீதத்தை அளித்ததும் தி.மு.கதான். இந்தத் தேர்தலில் இத்தனை வேட்பாளர்களுக்குத்தான் வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது என்பதை மட்டும் வைத்து இதையெல்லாம் முடிவுசெய்ய முடியாது.

மிகப் பெரிய தேர்தல் கூட்டணியை அமைக்கும்போது, கூட்டணிக் கட்சிகளின் விருப்பங்கள் உள்ளிட்ட பல அம்சங்களைக் கணக்கில் கொண்டுதான் இதை முடிவுசெய்ய முடியும். தி.மு.கவைப் பொறுத்தவரை மூன்று பெண் மாவட்டச் செயலாளர்கள் இருக்கிறார்கள். அதில் இருவருக்கு எந்தப் பின்னணியும் கிடையாது. முதன் முதலில் மாநாட்டில் கொடியேற்றும் வாய்ப்பை மூவலூர் ராமாமிர்தம் அம்மையாருக்கு அண்ணா அளித்தார். இப்படி கட்டமைப்புப் பணிகளில் இருந்து, பிரச்சாரப் பணிகள் வரை தி.மு.கவில் பெண்கள் தொடர்ந்து முன்னிறுத்தப்படுகிறார்கள். ஆனால், தேர்தல் என்று வரும்போது சில சிக்கல்கள் இருக்கின்றன. ஆகவே அதை மட்டும் வைத்து பெண்களுக்கான பங்களிப்பை மதிப்பிடக்கூடாது. பொதுவாகப் பார்த்தால், பெண்களுக்கான ஒரு ஜனநாயக வெளியை உள்ளடக்கிய இயக்கம் தி.மு.க. என நான் பார்க்கிறேன்.

இங்கே பேச முடியும். இலக்கிய மேடைகளில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்களை அழைத்துவர முடியும். பெண்கள் பொது வெளிக்கு வரும்போது அவர்களுக்குப் பின்னணியில் கணவரோ, தந்தையோ, சகோதரரோ இருக்க வேண்டிய அவசியமில்லை. அந்தத் தெளிவை பெண்களும் உணர வேண்டும். அது நடந்தால் இன்னும் கூடுதலாக பெண்கள் பங்களிக்க முடியும்.

கே. ஒரு எழுத்தாளராக இருக்கும்போது நினைத்ததைச் சொல்ல முடியும். அதுதான் உங்கள் தார்மீக பலம். ஆனால், அரசியலுக்கு வந்த பிறகு ஒரு கட்சித் தலைமைக்கு கட்டுப்பட்டு இருக்க வேண்டியிருக்கும். எழுத்தாளரும் அரசியல்வாதியும் முரண்படும் சமயத்தில் அதை எப்படி எதிர்கொள்வீர்கள்?

ப. எல்லா இடங்களிலுமே அந்த முரண் இருக்கத்தான் செய்யும். ஒரு பேராசிரியராக இருக்கும்போதுகூட அந்தப் பிரச்சனை இருக்கும். முதல்வர், துறைத் தலைவர் போன்றவர்கள் எல்லாம் இருப்பார்கள். அப்போதே கட்டுப்பாடுகள் இருக்கும். ஆக, இது மாதிரி முரண்கள் எல்லா இடங்களிலும் இருக்கும். ஆனால், எதில் நீங்கள் விட்டுக்கொடுக்கிறீர்கள் என்பதைப் பார்க்க வேண்டும்.

தி.மு.கவைப் பொறுத்தவரை, அக்கட்சியின் மக்களுக்கான, சமூகத்திற்கான கொள்கைகளை நாம் அப்படியே ஏற்கக்கூடியவைதான். அதனால், அடையாளம் சார்ந்த சிக்கல்கள் வருவதற்கு வாய்ப்பே இருக்காது. ஒரு தலைமைக்குக் கட்டுப்படுவதென்பது மிக முக்கியமான விஷயம். தி.மு.கவில் தேர்தலின்போது பலர் வாய்ப்புக் கேட்பார்கள். சிலருக்குக் கிடைக்கும். சிலருக்குக் கிடைக்காது. ஆனால், வேட்பாளர் பட்டியல் அறிவித்த பிறகு, உதய சூரியன்தான் அங்கே நிற்கிறதென அனைவரும் இணைந்து பணியாற்றும் கட்சி தி.மு.கதான். ஏனென்றால், தலைவர் அறிவித்துவிட்டார்.

மிசா காலகட்டத்திலும் சரி, அதற்குப் பிந்தைய காலகட்டத்திலும் சரி, எங்களுக்கு எல்லாவற்றையும் செய்தவர் தலைவர் மு. கருணாநிதி அவர்கள். ஆகவே நாங்கள் அவருக்கும் கட்சிக்கும் விசுவாசமாகத்தான் இருப்போம். இதை ஒப்புக்கொள்வதில் என்ன பிரச்சனை? இதை நான் பெருமையோடு சொல்வேன்.

தமிழச்சிபடத்தின் காப்புரிமைதமிழச்சி தங்கபாண்டியன்/FACEBOOK

கே. நீங்கள் போட்டியிடும் தென் சென்னைத் தொகுதியின் முக்கியமான பிரச்சனைகளாக நீங்கள் எதைக் கருதுகிறீர்கள்?

ப. இங்கு தியாகராய நகர், மைலாப்பூர் போன்ற நகர்ப்புற பகுதிகளும் சோழிங்கநல்லூர் போன்ற வளர்ந்து வரும் பகுதிகளும் செம்மஞ்சேரி போன்ற மீனவர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளும் மேடவாக்கம் போன்ற ஊராட்சிகளும் உண்டு. அடிப்படைக் கட்டமைப்பு பிரச்சனைகள் இங்கே நிறைய இருக்கிறது. போக்குவரத்து நெரிசல், குடிநீர் தட்டுப்பாடு போன்றவற்றை மக்கள் இங்கே குறிப்பிடுகிறார்கள்.

சோழிங்கநல்லூர் பகுதியில் அரசு பன்னோக்கு மருத்துவமனை இல்லை என்பதை பெரிய பிரச்சனையாக சுட்டிக்காட்டுகிறார்கள். ஏதாவது ஒரு பெரிய உடல் நலப் பிரச்சனை என்றால் சென்னைக்குள்தான் வரவேண்டியுள்ளது.

குடிநீர் இங்கு முக்கியமான பிரச்சனையாக உள்ள நிலையில், வட நெம்மேலியில் கடல்நீரைக் குடிநீராக்கம் திட்டம் 2010ல் அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டது. நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இரண்டாம் கட்டமாக அந்தத் திட்டத்தை விரிவுபடுத்துவோம் என்று சொன்னோம். அடுத்து வந்த அரசு அதைச் செய்யவில்லை. நாங்கள் வந்தால் அதைச் செயல்படுத்துவோம்.

போக்குவரத்து நெரிசலைப் பொறுத்தவரை இரண்டு திட்டங்களை கலைஞரும் மு.க. ஸ்டாலினும் திரும்பத் திரும்ப சொல்லிவருகிறார்கள். ஒன்று திருவான்மியூர் முதல் மகாபலிபுரம் வரையிலான பறக்கும் ரயில் பாதை. அடுத்த கட்டமாக பாண்டிச்சேரி வரை இதனை நீட்டிக்கத் திட்டமிட்டோம். அந்தத் திட்டம் அப்படியே கிடப்பில் உள்ளது. அடுத்த கட்டமாக செயின்ட் தாமஸ் மலையிலிருந்து வேளச்சேரி வரையிலான பறக்கும் ரயில்திட்டம். அந்தத் திட்டமும் முடங்கிக் கிடக்கிறது. இவையெல்லாம் சென்னையில் போக்குவரத்து நெரிசலை அதிகரித்திருக்கின்றன.

ஆகவே, இங்கிருந்து கூடுதலாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரும்போது, நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வரும்போது இதையெல்லாம் சரிசெய்வோம் என்கிறோம்.

தமிழச்சிபடத்தின் காப்புரிமைதமிழச்சி தங்கபாண்டியன்/FACEBOOK

கே. நீங்கள் சொன்ன பிரச்சனைகள் பெரும்பாலும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் நிறைவேற்றக்கூடியவையாக இருக்கின்றன. ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் எந்த அளவுக்கு இதையெல்லாம் நிறைவேற்ற முடியும்?

ப. நிதி ஒதுக்குவதுதான் சாத்தியம். நாடாளுமன்ற உறுப்பினரின் முதல் கடமை, தமிழக மக்களின் நலன், உரிமை, தேவை, எதிர்காலம் குறித்து குரல் கொடுப்பதுதான். தொழில்துறை வாய்ப்புகளை ஏற்படுத்துதல், பெரிய திட்டங்களைக் கொண்டுவருவது, ரயில்வே திட்டங்களைக் கொண்டுவருதல் போன்றவைதான். பெருங்குடி குப்பைக் கிடங்கை மாற்றுவது, வேளச்சேரி ஏரியை மீட்பது போன்ற பெரிய விஷயங்களையும் செய்ய முடியும். போக்குவரத்து நெரிசலைத் தீர்க்க அடுக்குமாடி பார்க்கிங் போன்றவற்றைக் கொண்டுவருதல் போன்றவற்றையும் செய்யலாம்.

கே. இந்தத் தொகுதிக்கான உங்களுடைய வாக்குறுதிகள் என்னென்ன?

ப. பெரும்பான்மையான வாக்குறுதிகள் தி.மு.கவின் தேர்தல் அறிக்கையில் இருக்கின்றன. மீனவர்களைப் பொறுத்தவரை தங்கள் பகுதிகளில் பாதாளச் சாக்கடை வசதி வேண்டுமெனக் கோருகிறார்கள். சில இடங்களில் அங்கன்வாடிகள் இல்லை. மீனவர்களுக்கு என மாநிலத்தில் அமைச்சகம் இருந்தாலும் மத்தியில் இல்லை. நாங்கள் வெற்றிபெற்று, ராகுல்காந்தி ஆட்சிப் பொறுப்பேற்றால் நிச்சயமாக மீனவர்களுக்கென ஒரு அமைச்சகத்தை பெற்றுத்தருவோம். மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்போம் என்று சொல்லியிருக்கிறோம். கடன்கள் ரத்துசெய்யப்படும், ராகுல் காந்தி அறிவித்துள்ள மாதம் 6,000 ரூபாய் திட்டத்தைச் சொல்கிறோம்.

இங்கிருக்கும் மக்கள் பெரும்பாலும் சுகாதாரம், குடிநீர், வேலைவாய்ப்பு ஆகியவற்றைத்தான் முக்கியக் கோரிக்கைகளாக முன்வைக்கிறார்கள். நான் மேலே சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றினாலே அதைச் சரிசெய்துவிட முடியும்.

கே. தென் சென்னைத் தொகுதியில் உங்களை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் ஜெயவர்தன் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார். அவருக்குப் பின்னால் ஆளும்கட்சி இருக்கிறது. உங்களுடைய பலம் என்ன?

ப. தி.மு.கவின் தேர்தல் அறிக்கைகளையும் கொள்கைகளையும் மிகப் பெரிய உந்து சக்தியாகவும் மக்களை மிகப் பெரிய பலமாகவும் நான் பார்க்கிறேன். அடுத்ததாக, நான் எளிதில் அணுகக்கூடிய ஒரு நபர். ஒரு எழுத்தாளர், நாடக தளங்களில் பல தரப்பு மக்களோடு இயங்குபவர் என்பதால் யாரும் என்னை எளிதில் அழைத்துப் பேச முடியும். இதுதான் என் பலம்.

இதுவரை சொன்னதை செய்த கட்சி என்று பார்த்தால் அது தி.மு.கதான். மாற்றத்திற்குரிய தலைவராக மு.க. ஸ்டாலின் இருக்கிறார். இதையெல்லாம் சொல்லி வாக்கு கேட்கும்போது, அவர்கள் வாக்களிப்பார்கள் என நான் நம்புகிறேன்.

https://www.bbc.com/tamil/india-47864747

யாரை எவரோட ஒப்பிடுவது என்ற விவஸ்தையே இல்லாமல் போச்சு.
தகப்பனை(ஸ்ராலின்) போல மகனும்(உதயநிதி) அழகான வேட்பாளரை வெற்றி பெற செய்யட்டாம்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.