Jump to content

சுயஇன்பம் பற்றிய கட்டுக்கதைகளும் துரத்தும் பயங்களும்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

சுயஇன்பம் பற்றிய கட்டுக்கதைகளும் துரத்தும் பயங்களும்!

38.jpg

சுய இன்பம் என்பது எக்காலத்திலும் பேசுவதற்குத் தயங்கும் ஒரு விவகாரமாகவே இருந்து வருகிறது. மிகவும் நெருக்கமான காதல் உறவுகளில் கூட, இதைப் பற்றிப் பேசுவதற்குப் பல போராட்டங்களைச் சந்திக்க வேண்டிய கட்டாயமுள்ளது. பூட்டப்பட்ட அறைக்குள்ளோ அல்லது மிகவும் நெருக்கமான தோழமைகளுடன் கிசுகிசுக்கும் அளவுக்கோ, இது பற்றி விவாதிக்கும் சூழல் இன்றும் தொடர்கிறது. திருமணமாகாத ஆண்களுக்கோ, பெண்களுக்கோ, அது தனியொரு மனிதரின் பிரச்சினை மட்டுமே. திருமணமான ஜோடிகளுக்கு இடையே இந்த பிரச்சினை ஏற்படுத்தும் பாதிப்புகள் மிக அதிகம்.

வழக்கம்போல செக்ஸ் நடந்தாலும் கூட, கணவர் சுய இன்பத்தை நாடுகிறார் என்பது சம்பந்தப்பட்டவரின் மனைவிக்கு அமைதியின்மையையே ஏற்படுத்துகிறது. இதேபோல, மனைவி சுய இன்பத்தை நாடுகிறாள் என்பதையறிந்து அதிர்ச்சியடையும் ஆண்களும் உண்டு. ஆனால், இந்த விவகாரத்தை நினைத்து பெண்கள் வருத்தப்படுவதே அதிகம். இதுவே சுய இன்பம் மேற்கொள்ளும் வழக்கம் ஆண்களிடம் அதிகம் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது.

சில வீடுகளில் செக்ஸ் கொண்ட பிறகு சுய இன்பம் கொள்ளும் வழக்கத்தைச் சில ஆண்களும், குறைந்த அளவிலான பெண்களும் கொண்டுள்ளனர் என்பது நிச்சயம் அதிர வைக்கும் உண்மை தான். ஏனென்றால், இப்போதும் கூட சுய இன்பம் பற்றிய பல்வேறு கட்டுக்கதைகளை உள்ளடக்கியுள்ளது நம் சமூக அமைப்பு.

விரியும் கட்டுக்கதைகள்

சுய இன்பம் மேற்கொள்வதை எப்போது நிறுத்த வேண்டும்? உங்களது பாலியல் இணை எதிர்க்காத வரை அந்த வழக்கத்தைத் தொடரலாம். அதனால், உங்களது உறவு நிலையில் பிரச்சினை ஏற்படாத வரை தொடரலாம். உடல், மனம் மற்றும் மருத்துவப் பிரச்சினைகள் ஏதும் சுய இன்ப பழக்கத்தினால் ஏற்படாது. ஆனாலும் நாம் சில கட்டுக்கதைகளை இன்னும் நம்பிக் கொண்டிருக்கிறோம்.

38a.jpg

ஆண்களைப் பொறுத்தவரை, கைரேகையில் பாதிப்பு வரும் என்ற நம்பிக்கை இன்றும் தொடர்ந்து வருகிறது. பல்லாயிரம் நகைச்சுவைகள் இது பற்றி வந்தபின்னும், இளைய தலைமுறைக்கு இந்த விஷயத்தில் இன்னும் தெளிவு கிடைக்கவில்லை. இந்த பழக்கத்தினால் கண் பார்வை பறிபோகும் அல்லது பார்வைத் திறன் பாதிக்கப்படும் என்ற நம்பிக்கையும் நீண்டகாலமாக உலாவி வருகிறது.

சுய இன்பத்தினால் முகப்பரு ஏற்படாது. ஆணுறுப்பு சுருங்கிப் போகாது. மனநிலைக் கோளாறுகள் வராது. இதனால் ஆண்மைப் பிரச்சினையோ, அதீத பாலியல் கோளாறுகளோ, புற்றுநோயோ, பால்வினை நோய்களோ ஏற்படாது. இது உங்களது சமூக, உணர்வுப்பூர்வமான வளர்ச்சியை எந்தவிதத்திலும் தடுக்காது.

சுய இன்பம் என்பது இயற்கையானது. கண்டிப்பாக, இது ஒருபாலின உறவுக்கான தொடக்க நிலையல்ல. இந்த உண்மைகள் புரியவந்தால், சுய இன்பம் குறித்த பயங்கள் தொலைந்து போகும்.

பயத்துக்கு முற்றுப்புள்ளி

திருமணம் போன்ற நீண்டகால உறவுகள் வாய்த்தபின்னரும் கூட, சிலர் சுய இன்பம் மேற்கொள்ளும் வழக்கத்தைத் தொடர்கின்றனர். சுய இன்பம் குறித்த எதிர்மறையான, கலவையான தகவல் குவியல்களே சிலரைக் குழப்பத்துக்குள் தள்ளுகிறது. எத்தனை முறை சுய இன்பம் மேற்கொள்ள வேண்டுமென்பதற்கு எந்த வரையறையும் கிடையாது. அது சம்பந்தப்பட்டவரைப் பொறுத்தது.

38b.jpg

பொதுவாகவே சுய இன்பம் என்பது ஒருவர் தனது பாலின உறுப்புகளில் தூண்டுதலை ஏற்படுத்திக் கொள்வதே. “ஆண், பெண் இருபாலருமே இந்த பழக்கத்தைக் கையாண்டு வருகின்றனர். பாதுகாப்பாக மேற்கொள்ளும்வரை எந்தப் பிரச்சினையும் இல்லை. மாறாக, சுய இன்பத்துடன் முரட்டுத்தனம் கலக்கும்போது பலத்த சேதம் உண்டாகும்” என்கிறார் டாக்டர் வினோத் ரெய்னா.

தவிர்க்கும் சூழல்கள்

சுய இன்பத்துக்கான தேவையை விட அதிகளவில் ஒருவர் அதனை மேற்கொண்டால் பிரச்சினை ஏற்பட வாய்ப்புண்டு. இதுவே பணி, பள்ளி அல்லது வேறு பல செயல்பாடுகளை மறந்துபோகும் நிலைக்கு ஒருவரைத் தள்ளும். தினசரிப் பொறுப்புகள், உறவுகள் போன்றவற்றில் இருந்து துண்டிக்கும். அந்த நிலையை அடையும்போது மன பாதிப்புகள் மட்டுமல்லாமல் உடலும் பல்வேறு பிரச்சினைகளுக்கு உள்ளாகும்.

பொதுவாகவே, ஆண்களைப் பொறுத்தவரை விந்து வெளியேறுதலுக்குப் பின்னர் ரத்த அழுத்தம் அதிகமாகும். இதனால் சுய இன்பத்தை மேற்கொள்ளும் ஒருவர் அதிகமாகக் களைப்படைவது இயல்பு. இது அதீதமாகும்போதே மலட்டுத்தன்மை, ஹார்மோன் குறைபாடுகள், உறுப்புக் கோளாறுகள் போன்றவை ஏற்பட்டுவிடுமோ என்ற பயம் தொற்றிக்கொள்ளும். தொடர்ச்சியாக சுய இன்பம் மேற்கொள்ளும் பழக்கத்தை கைக்கொள்வதால் செக்ஸின் போது உச்சகட்டம் அடைவதில் பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

38c.jpg

சுய இன்பம் குறித்த பழமையான நம்பிக்கைகளை முழுமையாக நம் வாழ்க்கையில் இருந்து அகற்ற முடியாது. ஆனால் அது தேவையில்லாதது என்கிறார் மும்பையைச் சேர்ந்த டாக்டர் பிரகாஷ் கோத்தாரி. சுய இன்பம் மேற்கொள்வது நோயல்ல, அது ஒரு பழக்கம் என்கிறார் இவர். “அதிகமாக சுய இன்பம் மேற்கொள்வதால் ஆணுறுப்பு பலவீனமாகும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. எப்போதும் பேசிக்கொண்டே இருப்பவருக்கு நாக்கு பலவீனமாக மாறிவிடுகிறதா அல்லது அமைதியாக இருப்பவரின் நாக்கு பலமானதாகிறதா? நாக்கைப் போலத்தான் ஆணுறுப்பும் நம் உடலில் உள்ளது. அது சுய இன்பத்தினால் கண்டிப்பாக பலவீனமாகாது” என்கிறார் பிரகாஷ். இந்த விளக்கத்தைக் குறைந்தபட்சம் 55,000 நோயாளிகளுக்கு அளித்திருப்பேன் என்கிறார்.

எதிர்பாலினத்தவரை நோக்கி ஈர்ப்பு கொள்வதற்கான வழிமுறைகளில் ஒன்றே சுய இன்பம். இதற்கு மாறாக, உங்களது இணையுடன் உள்ள நெருக்கம் சுய இன்பத்தினால் குறைவாகக் கருதினாலோ அல்லது தினசரி நடவடிக்கைகளில் இடையூறு ஏற்படுமளவுக்கு அந்த பழக்கம் விஸ்வரூபமெடுத்தாலோ மட்டுமே அது பிரச்சினையாக மாறும்.

38d.jpg

சுய இன்பம் அனுபவிப்பதை உங்களது இணையுடன் சொல்லலாமா, வேண்டாமா என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். மற்றபடி, இதன் மூலமாகச் சம்பந்தப்பட்டவரின் மன இறுக்கம் குறைவதாகவே ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதனை மீறி சுய இன்பத்தினால் பிரச்சினை ஏற்படுவதாகக் கருதினால், செக்ஸ் சம்பந்தப்பட்ட மருத்துவ நிபுணரின் ஆலோசனைகளைப் பெறுவது நலம். தேவைப்பட்டால், உங்களது இணையின் வழிகாட்டுதலையும் இந்த விஷயத்தில் பெறலாம். உலகம் முழுவதும் பல்வேறு மத நிறுவனங்கள் சுய இன்பம் மேற்கொள்வது தீயதென்றே பரப்புரை செய்கின்றன. அப்படிப் பிரச்சாரம் செய்ய வேண்டிய நிலை காலம்காலமாகத் தொடர்ந்து வருவதே, இது மனிதர்களின் இயல்புகளில் கலந்துள்ளதைக் காட்டுகிறது.

இன்பம் துய்ப்பதும், அந்த அனுபவமே இன்னொரு உயிரினத்தின் உருவாக்கத்துக்கு காரணமாக இருப்பதுமே பாலியல் இன்பத்தின் அடிப்படை. அதிலிருந்து விலகி நம்மை அயர்வுற வைக்கும் எதுவானாலும், அதனைக் களைய வேண்டும். இதனைப் புரிந்துகொண்டால் எந்த இன்பமும் துன்பமாகாது!

நன்றி: வெரிவெல் மைண்ட்

இந்துஸ்தான் டைம்ஸ்

 

 

https://minnambalam.com/k/2019/04/14/38

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.