Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீண்டும் மோடி?: தமிழர்கள் மறக்க வேண்டிய விஷயங்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் மோடி?: தமிழர்கள் மறக்க வேண்டிய விஷயங்கள்!

19.jpg

சரா சுப்ரமணியம்

எவ்வித அலையும் வீசாத 2019 மக்களவைத் தேர்தலில், மத்தியில் ஆட்சியமைக்கப் போவோருக்கு உறுதுணை புரியக்கூடிய ‘நம்பர்’ தமிழகத்திலிருந்து கிடைக்க வாய்ப்பு உள்ளதால், இம்முறை தமிழக வாக்காளர்களும் தேச அளவில் முன் எப்போதையும்விட கூடுதலாகவே கவனிக்கப்படுகின்றனர்.

2014இல் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைய உத்தரப் பிரதேசத்தின் முடிவுகள் பேருதவி புரிந்தன. நாட்டின் அதிக எண்ணிக்கையிலான மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட அந்த மாநிலத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 71 இடங்களை பாஜக கைப்பற்றியது. இம்முறை அம்மாநிலத்தில் சமாஜ்வாதியும் பகுஜன் சமாஜ் கட்சியும் இணைந்து மகா கூட்டணியை அமைத்துள்ளன. தேச அளவில் நிலவும் பொதுவான அதிருப்திகளுடன், உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசின் மீதான அதிருப்திகளும் ஒன்று சேர்ந்துள்ளன. எனவே, அம்மாநிலத்தில் கடந்த தேர்தல் போலவே அதிகப்படியான இடங்களை பாஜக பெறுவது கடினம்.

சமீபத்தில் வெளியான பல்வேறு கருத்துக்கணிப்பு முடிவுகளை ஒட்டிப் பார்த்தால்கூட, அம்மாநிலத்தில் அதிகபட்சம் 40 இடங்கள் வரையிலுமே பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது. இந்தச் சூழலில், தாம் அங்கம் வகிக்கும் அதிமுக கூட்டணி மூலம் தமிழகத்திலிருந்து அதிக இடங்கள் கிட்டினால் ஏதுவாக இருக்கும் என்று பாஜக கணக்குப் போடுகிறது. அதற்கு, தமிழக மக்கள் ஐந்து ஆண்டுக்கால மோடி ஆட்சியில் கீழ்க்கண்ட விஷயங்களை மட்டும் மறந்துவிட்டால் போதுமானதாக இருக்கும். அவை:

ரிமோட் கன்ட்ரோல்

ஜெயலலிதா மறைவுக்குப் பிந்தைய அரசியல் அமர்க்களங்களில், தமிழக மக்கள் ரசிக்காத ஓர் அம்சம், அதிமுகவை ஆட்டுவிக்கும் ரிமோட் கன்ட்ரோலை பாஜக வசப்படுத்திக்கொண்டதைச் சொல்லலாம். டெல்லியிலிருந்து தமிழகம் இயங்குவதை, அதிமுகவுக்கு வாக்களித்தவர்கள்கூட விரும்பவில்லை. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு யாருடைய கைப்பாவை என்பது தமிழகத்தில் வாக்களிக்கும் வயதை எட்டாதவர்களுக்கும் தெரியும். பாஜக தனது இருப்பைத் தமிழகத்தில் நிலைநாட்டுவதற்காக, அதிமுகவை அப்படியே ‘ஆட்டையைப்போட்ட’ அணுகுமுறை மீதான வெறுப்பைத் தமிழக வாக்காளர்கள் முதலில் மறக்க வேண்டும்.

19a.jpg

விவசாயிகள் பிரச்சினை

பாஜக அளித்த வாக்குறுதியின்படி வேளாண் விலை பொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யாத சூழலில், ஒருபக்கம் வறட்சியும் மறுபக்கம் வெள்ளப் பேரிடர்களும் விவசாயத்தை வாட்டி வதைத்தன. இதனால், வெகுண்டெழுந்த விவசாயிகள் மாதக்கணக்கில் டெல்லியில் போராட்டம் நடத்தினர். மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளுடன் தமிழக விவசாயிகளும் போராட்டத்தில் கலந்துகொண்டனர். கவன ஈர்ப்புக்காக ஆடைகளைக் களைந்து போராட்டம் நடத்தியும்கூட மோடி அரசு பேச்சுவார்த்தைக்குக்கூட முன்வரவில்லை. எனினும், தேர்தல் அறிவிப்புக்கு முன்பே 6,000 ரூபாய் வழங்கும் திட்டத்தைப் பிரதமர் மோடி அமல்படுத்தியதால், விவசாயிகளின் பிரச்சினைகளையும் தமிழக வாக்காளர்கள் மறக்க வேண்டும்.

ஒகி புயலும் மீனவர்களும்

ஒகி புயலில் சிக்கிய நூற்றுக்கணக்கான மீனவர்கள் கரை திரும்பவில்லை. புயலை ஒட்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மட்டுமின்றி, புயலுக்குப் பிந்தைய மீட்பு நடவடிக்கைகளிலும் மத்திய அரசு மெத்தனம் காட்டியது என்பதற்கு மீனவக் குடும்பங்களின் கதறல்களே சாட்சி. பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இப்பிரச்சினையில் மீனவர்களை அணுகிய விதமும் தமிழக மக்களை மத்திய பாஜக அரசு எப்படிப் பார்க்கிறது என்பதற்குச் சான்று. ஒகி புயலால் உயிரிழந்த குடும்பத்தினருக்கும், பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கும் உரிய முறையில் நிவாரணம் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளை வாக்காளர்கள் மறக்க வேண்டும்.

பணமதிப்பிழப்பும் ஜிஎஸ்டியும்

கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக நம்பவைக்கப்பட்ட தோல்வி வியூகமான பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் மற்ற மாநிலங்களைப் போலவே தமிழகமும் திக்குமுக்காடியது. தனிநபர்கள் தொடங்கி தொழில் துறையினர் வரை கடுமையாகப் பாதிக்கப்பட்டது கண்கூடு. ஆனால், கறுப்புப் பணம் துளியேனும் ஒழிந்ததா என்பது விடை தெரிந்த கேள்வி. இதன் தொடர்ச்சியாக, ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை. இது வெற்றிகரமான திட்டம்தான். ஆனால், அதை நடைமுறைப்படுத்திய விதம் தவறானது என்பது பொருளாதார நிபுணர்களின் தெளிவான பார்வை. பணமதிப்பிழப்பு போலவே ஜிஎஸ்டி வரி நடைமுறைக்கு வந்த பின்னர் கோவை, திருப்பூரில் தொழில் துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. சிறு வியாபாரிகள் முதல் ஓரளவு பெரும் வர்த்தகர்கள் வரை பெரும் பாதிப்புக்கு ஆளாகினர். மாநிலம் முழுவதும் மட்டுமின்றி நாடு முழுவதுமே இதே நிலைதான். இவ்விரு நடவடிக்கைகளையும் தமிழக வாக்காளர்கள் மறந்துதான் ஆக வேண்டும்.

19b.jpg

கஜா புயலும் விவசாயிகளும்

தமிழகத்தின் 12 மாவட்டங்களைப் புரட்டிப் போட்டது ‘கஜா‘’ புயல். லட்சக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன; வேளாண் மக்களுக்கு வாழ்வாதாரமாக விளங்கிய தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தன; ஆயிரக்கணக்கான கால்நடைகள் மடிந்து போயின. உயிர்ச் சேதம் பெரிதாக இல்லாமல் முன்நடவடிக்கை எடுக்கப்பட்டது பாராட்டத்தக்கதே. ஆனால், பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகிவிட்ட சூழலில், பிரதமர் மோடி உடனடியாக நேரில் பார்வையிட வராததில் வியப்பில்லைதான். ஆம், பாஜகவுக்கு உரிய வாக்கு வங்கி உள்ள மாநிலமாகத் தமிழகம் திகழ்ந்தால்தானே பிரதமர் ஓடோடி வருவது சாத்தியமாகும். இந்தியாவின் ஒரு மாநிலம் என்ற பேச்சு எல்லாம் அப்புறம்தான். எனவே, நடந்தது எல்லாம் இயற்கைப் பேரிடர்களின் தவறு என்பதால், கஜா புயல் தொடர்பான மத்திய அரசின் அணுகுமுறைகளையும் வாக்காளர்கள் மறக்க வேண்டும்.

நீட் தேர்வு விவகாரம்

மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழகமே கொந்தளித்தது. நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட அனிதாவின் தற்கொலைக்குப் பின்பு தமிழக மக்கள் திரண்டெழுந்து போராட்டக் களம் கண்டனர். ஆனால், அதிமுக அரசின் கோரிக்கையைக்கூட மோடி அரசு செவியில் போட்டுக்கொள்வதாக இல்லை. மாறாக, கொந்தளிப்பின் தீவிரம் கண்டு நாடகமாடியது. தமிழக அரசு அவசரச் சட்டத்தை நிறைவேற்றி, மத்திய அரசை நாடினால் விலக்கு அளிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதியளிக்கிறார். ஆனால், அப்படி எல்லாம் செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் உறுதிபடத் தெரிவிக்கிறது மத்திய அரசு. இப்போதும் தன் முடிவிலிருந்து பாஜக பின்வாங்குவதாக இல்லை. கல்வித்தரம் மீதான இந்த அதீத அக்கறையைக் கருத்தில்கொண்டு நாம் நீட் தேர்வு விவகாரத்தை மறத்தல் நலம்.

ஸ்டெர்லைட் போராட்டம்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்துகொண்டிருந்த நேரத்திலும் மத்திய அரசு மவுனம் காத்தது. அந்தப் போராட்டத்தின் உச்சமாக, போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டபோதுகூட பிரதமர் மோடி வாய் திறக்கவில்லை. மாநில அரசு கையாளட்டும் என்று மத்திய அரசு சற்றே அமைதி காப்பதாக எடுத்துக்கொண்டால்கூட பரவாயில்லைதான். ஆனால், அப்பாவி மக்களில் 13 பேர் கொல்லப்பட்டு, தமிழகம் முழுவதும் அதிர்ச்சியும் கொந்தளிப்பும் நீடித்த சூழலில் பிரதமர் மோடி என்ன செய்துகொண்டிருந்தார் தெரியுமா? ட்விட்டரில் ‘ஃபிட்னஸ் சேலஞ்ச்’சுக்கு ஆள் பிடித்துக்கொண்டிருந்தார். ஆயினும், மக்களின் உணர்வையும் உடல்நலனையும் உயிரையும் காட்டிலும் தொழில் வளர்ச்சி முக்கியம் என்ற அடிப்படையில் இதுபோன்ற மவுனத்தை மறக்கும் பக்குவத்தை வாக்காளர்கள் பெற வேண்டியது காலத்தின் கட்டாயமே.

எட்டு வழிச் சாலைத் திட்டம்

சென்னை - சேலம் இடையே எட்டு வழிச் சாலை திட்டத்துக்காக 1,900 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்படுத்த முடிவு செய்து, அதற்கான முதற்கட்டப் பணிகளும் தொடங்கப்பட்டன. தங்கள் வாழ்வாதாரத்தை இழக்க நேரிடும் என்பதால் விவசாயிகளும் பொதுமக்களும் சாலையில் இறங்கிப் போராடத் தொடங்கினர். மத்திய அரசின் வழிகாட்டுதலுடன் போராட்டத்தை ஒடுக்குவதில் மாநில அரசு கச்சிதமாகச் செயல்பட்டது. ஆனால், இந்தத் திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்தியது செல்லாது என்று கூறி, நிலத்தைக் கையகப்படுத்துவதற்காகப் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும், தமிழகத்தில் தேர்தல் பரப்புரையிலேயே எட்டு வழிச் சாலை நிச்சயம் என்று பாஜக தலைவர்கள் வாக்குறுதி அளிக்கின்றனர். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக மக்கள் சில சேதாரங்களைத் தாங்கிக்கொள்வதும் தேசபக்தியில் அடங்கும் என்று அவர்கள் எடுக்கும் பாடத்துக்காகவே நாம் இந்தப் பிரச்சினையை மறக்க வேண்டும்.

வேலையில்லாத் திண்டாட்டம்

மக்கள் வேலையின்றி அவதிப்படுவது மட்டும் வேலையில்லாத் திண்டாட்டம் அல்ல; மிகக் குறைவான சம்பளத்தில் கடுமையாக உழைக்க வேண்டிய நிர்பந்தத்துக்குத் தள்ளப்படுவதும் இதில் அடங்கும். 'மேக் இன் இந்தியா', 'ஸ்கில் இந்தியா', 'ஸாடார்ட்அப் இந்தியா' என விதவிதமான அறிவிப்புகளை அள்ளிவிட்டது மோடி அரசு. ஆனால், கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இப்போது வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடுவதாக அதிகாரபூர்வ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒருபக்கம் வேலைவாய்ப்பு இல்லாத அவலம்; மறுபக்கம் நிலைத்தன்மையற்ற குறை ஊதிய வேலையைச் செய்ய வேண்டிய துயரம். அரசின் கொள்கைகளின் விளைவால், எந்தத் துறையிலும் நிரந்தர வேலை என்பதே எட்டாத ஒன்றாகிவிட்டது. அது மட்டுமா, அரசு வேலைகளிலும் பாதுகாப்பு இல்லை; கார்ப்பரேட் வேலைகளிலும் சரியான ஊதிய முறை இல்லை. இன்னும் சில இந்தியாக்கள் அடுத்தடுத்த ஆண்டுகளில் அறிவிப்புகளாக வரக் காத்திருப்பதைக் கருத்தில்கொண்டு, இந்த மேட்டரையும் நாம் மறந்துவிடுதல் சிறப்பு.

 

 

https://minnambalam.com/k/2019/04/18/19

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.