Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆகா என்ன பொருத்தம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

                                                  ஆகா என்ன பொருத்தம் !

                                                                              -    சுப.சோமசுந்தரம்

     வகுப்பில் மாணவர்களிடம் பேசும்போதும், மேடையில் பேசும் போதும் என்னிடம் நகைச்சுவை உணர்வு உள்ளதாக சமூகம் சொல்லக் கேள்வி. பலர் பல இடங்களில் சொன்னதால் ஓரளவு உண்மை இருக்குமோ என்னவோ ! எழுத்தில் வருமா என்பதைச் சோதித்துப் பார்க்க எண்ணம். எழுத நினைத்த பொருள் விழுந்து விழுந்து சிரிக்க வழியில்லை என்று உறுதியானது. உங்களையறியாமல் உதட்டோரம் ஒரு குறுநகை வர வைக்க முடிந்தால், முதல் முயற்சி வெற்றி. எங்கே வாசியுங்கள் பார்க்கலாம் ! இன்று என் பொறியில் சிக்கிய சோதனை எலி நீங்களேதான்.

காட்சி 1 : நண்பனின் தந்தை மறைந்து ஒரு வருடம் ஆன நிலையில், அவன் வீட்டில் நடைபெறும் முதல் நினைவு தின நிகழ்விற்கு அழைத்திருந்தான். வழக்கமான சடங்கியல் நிகழ்வுகளில் குருக்கள் வடமொழியில் சுலோகங்களைச் சொல்லிக் கொண்டிருந்தார். குருக்கள் பிராமணரல்லர் என்றாலும் கூட புரியாத பாடையான வடமொழியில் சொன்னால்தான் மானமிகு தமிழ்ச் சமூகத்திலேயே மரியாதை இருக்கும் என்னும் உளவியல் தெரிந்தவர். நமக்குப் புரியவில்லை, சரி. குருக்களுக்கும் புரியவில்லை என்பது அப்புறம் எனக்குப் புரிந்தது. எப்படி என்று கேட்கிறீர்களா ? தமது குருக்கள் சமூகத்தின் பெருமையை நிலைநாட்ட ஒன்றிரண்டு தமிழ்ப் பாடல்களையும் பாட வேண்டும் என்று முடிவெடுத்து விட்டார். வந்தது பார் வினை. என்னைப் போன்ற வம்புக்காரர்களை வைத்துக்கொண்டு அவர் அந்த மாதிரி விஷப் பரீட்சையில் இறங்கலாமா? பூக்களை எடுத்து நண்பனைத் தந்தையார் உருவப் படத்தின் மீது ஒவ்வொன்றாகப் போட்டு அர்ச்சனை செய்யச் சொல்லி, பின்புலத்தில் அவர் சம்பந்தரின் சீர்காழிப் பதிகப் பாடலைப் பாடினார் :

  “ மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும்

   எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலை

   கண்ணில் நல்லஃதுறு கழுமல வளநகர்ப்

   பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே ”.

       பொதுவாக சிவசக்தி வழிபாட்டிலோ அல்லது திருமண நிகழ்ச்சியில் மணமக்களை வாழ்த்தவோ இப்பாடலைப் பாடுவர். இங்கு நண்பனும் குருக்களும் நண்பனின் தந்தையார் படத்துக்கே மலர் தூவுகின்றனர். அவருக்கு ‘மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்’ என்பது ஏதும் தத்துவார்த்தமாக இருக்குமோ? பெண்ணில் நல்லாளான நண்பனின் தாய் இங்கே மண்ணில், தந்தையாரான பெருந்தகை விண்ணில். அப்புறம் எப்படி பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருத்தல்? குருக்களுக்குத் தமிழே புரியவில்லை. வடமொழி எப்படி புரியும் என்ற முடிவுக்கு இப்படித்தான் வந்தேன். ‘இதையெல்லாம் இப்படியா ஆராய்வார்கள்? இறைவனை நினைத்துத்தான் பாடினார் என்று ஏதோ மேம்போக்காக எடுத்துக் கொள்ள வேண்டும்’ என்று உங்களுக்குத் தோன்றினால், சம்பிரதாயங்களில் ஊறிப் போய்விட்டீர்கள் என்றுதான் நான் பொருள் கொள்வேன்; எனவே உடனே தாவுங்கள் காட்சி மூன்றனுக்கு. ஏனெனில் காட்சி இரண்டிலும் குருக்களை வைத்தே என் கூத்து.

காட்சி 2 : களம், என் சொந்தத்தில் பெண் குழந்தை ஒருத்தியின் பூப்புனித நன்னீராட்டு விழா. நாகரிக உலகில் ‘இதற்கெல்லாம் ஒரு விழாவா?’ என்று சிலர் கேட்கும் போது, நான் உணர்வுப்பூர்வமாக மதிக்கும் விழாக்களில் இது ஒன்று. அதற்கான காரணங்கள் சில. அவற்றில் ஒன்று, ‘பெண்ணின் ஒவ்வொரு நிலையும் போற்றுதற்குரியது; புனிதமானது’ என்பதைச் சமூகத்திற்கு வலியுறுத்தும் விழாவாகக் கொள்வேன். இரண்டு, தாய்வழிச் சமூகமான தமிழச் சாதியில் தாய்மாமன் எடுக்கும் விழாவிது; ‘எங்கள் குடும்ப மரபு உங்கள் வீட்டிலும் ஆல்போல தழைக்கப் போகிறது’ என்று பெண்ணின் தாய் வீட்டார் பெருமை கொள்ளும் விழாவிது. எல்லாவற்றிற்கும் மேலாக தமிழ் மண்ணுக்கே உரிய விழா. ஏன் இவ்விழா பற்றி இவ்வளவு பீடிகை? நான் இக்காட்சியில் வேடிக்கையாகப் பார்ப்பது இவ்விழாவை அல்ல என்பதை வலியிறுத்தவே. நிற்க.

          என்னதான் நம் மண்ணுக்கே உரியதாயினும், ஈராயிரம் ஆண்டு மூளைச் சலவையின் விளைவாக இந்த விழாவும் பரிணாம வளர்ச்சி காணாமலா போகும் ? புரிணாம வளர்ச்சி எனப் பெயர் கொடுக்கலாமோ ! (வேர்ச்சொல் புரிநூல் எனக் கொள்க !) காட்சி ஒன்றினைப் போல் இங்கும் குருக்கள் வந்தார். வடமொழியில் வசவுகளைப் பாடினார் (புரியாத மொழியில் வாழ்த்தென்ன, வசவென்ன?). இவரும் தமிழில் நம்மை வம்புக்கு இழுத்தார். நாவுக்கரசரின் திருத்தாண்டகத்தில் அமைந்துள்ள அகப்பாடலைப் பாடினார் :

   ‘முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்

   மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள்

   பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்

   பெயர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள்

   அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்

   அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தை

   தன்னை மறந்தாள் தன்நாமம் கெட்டாள்

   தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே ’

               பாடுவதற்கு எளிதாய் அமைந்தமையின் இவற்றைப் படித்து வைத்துக் கொண்டு எங்கே வேண்டுமானாலும் பயன்படுத்துவார் போல. பக்திப் பாடல்களில் உள்ள அகப்பாடல் இது. ஆண்டாள் நாச்சியார் தம் இறைவன் மீது பக்தியையும் காதலையும் கலக்கவில்லையா? சங்க கால நெறிமுறையின்படி இவ்வகப் பாடலை இவ்வாறு கொள்ளலாம். நாவுக்கரசர் தம்மையே தலைவியாகவும் ஆரூர் இறைவனைத் தலைவனாகவும் வரிந்து உடன்போக்கு செல்ல, தோழியொருத்தி செவிலித்தாய்க்குக் கூறுவதாய்க் கற்பிதம் செய்யலாம். ‘அன்னையையும் அத்தனையும் நீத்து, தன்னை மறந்து தலைவன் தாள்பட்டாள் தலைவி’ என்று பூப்படைந்த அப்பெண் குழந்தை முன் ‘ஓடிபோவது’ பற்றிப் பாடுவது, பாடலின் இடமும் பொருளும் புரிந்தோர்க்கு வேடிக்கையன்றி வேறென்ன? பாடுவது தவறெனச் சொல்லவில்லை. பாடலை முன்னம் ரசித்த நாம் இப்போது குறுகுறுப்பான புன்னகையுடனும் ரசிக்கலாம். ரசனைதானே இலக்கியமும் இலக்கியப் பெருவாழ்வும் !   

காட்சி 3 : வார விடுமுறையில் குடும்பத்துடன் கிராமத்திற்குச் சென்றிருந்தேன். கிராமமாய் இருப்பினும் அழகிய பெரிய சிவன் கோயிலும் அதன் அருகாமையில் ஓடுகிற ஆறும் அதன் தனிச்சிறப்புகள். மார்கழி மாதமாகையால் கோயில் ஒலி பெருக்கி காலை நாலரை மணிக்கே பக்திப் பரவசத்தில் ஆழ்ந்தது. தொழுதுண்டு பின்செல்லும் என்னைப் போன்ற சிலரை விடுத்து, பொதுவாக உழுதுண்டு வாழும் கிராமம்; சீக்கிரம் துயில் கொண்டு சீக்கிரம் துயிலெழுவது. எனவே நாலரை மணி பக்தி மருத நிலத்திற்கு ஏற்புடையதே. எம்.கே.தியாகராஜ பாகவதரின் திரையிசைப் பாடல்களும் ஒலித்தன. கர்நாடக இசை ரகங்களையொட்டி அவர் என்ன பாடினாலும் பக்திப் பாடலே எனும் எண்ணம் படித்தவர்களிடமே உண்டு. முற்கூறிய காரணமே இங்கும். பாடல் வரிகளில் மனதைச் செலுத்துவதில்லை. ‘உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ’ மற்றும் ‘மன்மத லீலையை வென்றார் உண்டோ’ முதலிய பிரேம கானங்களும் ஒலித்தன. கடவுளுக்குக் காதல் ஆகாது என்பதில்லை. இப்பாடல்களை இரவில் பள்ளியறை தீபாராதனை சமயத்தில் போட்டால், மக்களுக்கும் பயனுண்டு. திருப்பள்ளியெழுச்சிக்கு இவை உகந்ததல்லவே! ஒலிப்பெருக்கிக்குப் பொறுப்பேற்றவனைக் காலையில் ஆற்றில் பார்க்க நேர்ந்தது. எடுத்துச் சொன்னேன். ஏதோ நம்மால் முடிந்த ஆன்மீகச் சேவை. “அப்படியாண்ணே! அந்தப் பாட்டையெல்லாம் எடுத்து விட்டுறுதண்ணே!” என்று உளமாரச் சொன்னான். செய்தும் காட்டினான். மாலையில் வீட்டு வாசலில் நின்றிருந்த என்னிடம் ஒலிபெருக்கியில் சொல்வதைப் போல குரல்கொடுத்துக் கொண்டே சென்றான், “அண்ணே!அதையெல்லாம் எடுத்தாச்சு.” சம்பந்தமில்லாமல் பிரியா வாரியர் போன்ற கண் சிமிட்டல் வேறே!

             அதிகாலையில் கிராமத்திற்கு வரும் தம்பியின் குடும்பத்தை இரயில் நிலையம் சென்று அழைத்து வர வாகனத்தை வெளியில் எடுத்தேன். ஒலிப்பெருக்கியில் அடுத்த பாடல் ஆரம்பித்தது. மாறுதலுக்கு இப்போது T.R.மகாலிங்கம்.

  “ செந்தமிழ்த் தேன் மொழியாள்,

   நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள். . . .”

   முடிவு செய்தேன். இனி அந்த அப்பிராணி ஒலிப்பெருக்கிக்காரனைத் திருத்த முடியாது. அவள் பைங்கனி இதழில் பழரசம் தரும்முன் ஆக்சிலரேட்டரை அழுத்தினேன். செல்லும் போது யோசித்தேன். ஊரில் யாருக்கும் பிரச்சினையில்லை. நாமும் அதிகாலையில் அரைத் தூக்கத்தில் ரசிக்க வேண்டியதுதானே! அதிலும் இப்பாடல்களுக்கு நான் ரசிகன் வேறு. மருத நிலத்தின் பொழுது அதிகாலை என்போம்; காலைப் பண் காதல் ரசம் என்போம்.

காட்சி 4: என் நிறுவனத்தின் மைய மண்டபத்தில் நடந்தது ஒரு கூட்டம். நிறுவனத்தின் பெண் உயரதிகாரிக்கு ஏதோ ஒரு பாராட்டு விழா. ஒவ்வொருவராக வாழ்த்திப் பேசினர். நூலகர் - பேராசிரியர் நிகர் பொறுப்பில் உள்ளவர் - தாம் தமிழிலும் முதுகலைப் பட்டதாரியாக்கும் என நிறுவ நினைத்தாரோ என்னவோ, சிலப்பதிகாரத்திலிருந்து ஒன்றை எடுத்து விட்டாரே பார்க்கலாம்!

  ‘ மலையிடைப் பிறவா மணியே என்கோ

   அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ

   யாழிடைப் பிறவா இசையே என்கோ ’

               அஃதாவது அவ்வதிகாரி மலையிடைப் பிறவாத மணி என்றெல்லாம் பாடி, அத்துணைச் சிறப்புடையவர் எனச் சொல்ல வருகிறாராம். சிலம்பில் புகார்க் காண்டம் மனையறம் படுத்த காதையில் கோவலன், கண்ணகி இல்லற வாழ்வில் சிறந்து நிற்கையில் கோவலன் கண்ணகியின் நலம் புனைந்துரைத்துப் பாடும் பகுதி இது. தலைவன் தலைவியின் அழகையும் குணநலனையும் போற்றிப் பாடுவது. அதிகாரியைப் போற்றிப் பாடும் உணர்வில் இடம், பொருள் அனைத்தையும் காற்றில் பறக்க விட்டார் நம் நூலகர்.

             விழா முடிந்ததும் அவரிடம், “சார்! என்ன இது, இந்தப் பகுதியை எடுத்துச் சொன்னீர்கள்?” என்று விளக்கிக் கேட்டேன். “நான் ஏதோ என் நினைவில் தொடராய் நின்றதைக் கூறி விட்டேன். பொருளை யோசித்த நான் இடத்தை யோசிக்கவில்லையே” என்று என்னிடம் சமாளித்தார். அருகில் நின்றிருந்த வில்லங்கமான நண்பர் என் காதைக் கடித்தார், “அவர் வேண்டுமென்றே சொல்லியிருப்பார். வக்கிரம் புடிச்ச மனுஷன்”.

காட்சி 5: களம், சென்ற காட்சியின் அதே நிறுவன மைய மண்டபம். மேடையில் அதே பெண் உயரதிகாரியும் தேசிய அளவில் தெரிந்த ஒரு அறிவியலாளரும். அப்பெண் அதிகாரி மீது அநேகமாக எங்கள் அனைவருக்கும் மிகுந்த மரியாதை உண்டு. அவரை அதிகாரி என்பதை விட தோழர் என விழிப்பது சாலப் பொருத்தம். அவரைப் பின்னணியில் வைத்து இவ்வேடிக்கைக் காட்சிகளைப் பதிவிடுதலில் சிறிது உள்ள உறுத்தல் உண்டு. ஆனால் அவரிடம் இதனால் தான் எழுதவில்லை என்றால், ‘நல்ல வேடிக்கைதானே! ஏன் எழுதாமல் விட்டீர்கள்?’ என்று கேட்கிற அளவிற்கு நகைச்சுவையுணர்வு உள்ளவர். அத்தோழமை தரும் தெம்பில் மன உறுத்தலைக் கடக்க முடிகிறது.

                அறிவியலாளரின் பொழிவுக்குப் பின்னர் நன்றி நவில வந்தார் பேராசிரியர் ஒருவர். அந்த நன்றியுரையில் முக்கிய இடம் பெற்றவர்கள் மேடையில் இருந்த அவ்விருவரும். முதலில் சிறப்புப் பேச்சாளரான அவ்விஞ்ஞானியைப் பாராட்டினார். பாராட்டுவதும் புகழ்வதும் சரி. ஆனால் ‘ஐஸ்’ வைப்பதாய் நினைத்து ஐஸிலேயே வைத்தார். பேராசிரியர் தமது துறைக்கு மத்திய அரசு சிறப்பு நிதி கிடைக்க அன்னார் பெரும்பங்காற்றியமைக்காக தமது துறையின் ‘ஞானத்தந்தை’ (Godfather) என அவரை விளித்தார். நான் என் அருகில் அமர்ந்திருந்த சக ஆசிரியரிடம், “சார்!இப்போது பாருங்கள் வேடிக்கையை. ஞானத்தந்தை என்று சொன்னதில் தவறில்லை. ஆனால் முதலில் விவரமில்லாமல் உணர்ச்சி வசப்பட்டு இவர் அள்ளி விட்டதைப் பார்க்கும் போது, அடுத்து அந்த அம்மாவைத் தமது துறையின் ‘ஞானத்தாய்’(Godmother) எனச் சொல்லப் போகிறார்” என்றேன். “சார்! அவ்வளவு விவரமில்லாமலா உளறுவார்? மேலும் அவர் ஒரு கிறித்தவர். அவருக்குத் தெரியாதா, ஞானத்தந்தையும் ஞானத்தாயும் கணவன் மனைவியாகத்தான் இருக்க முடியுமென்று?” என்று நண்பர் நம்பிக்கை அளித்தார். ஆனால் நான் சொன்னது நடந்தே விட்டது. துதி பாடும் போது மதி வேலை செய்வதில்லை. சென்ற காட்சியில் நூலகர் கூத்து மக்களுக்குப் புரியவில்லை. ஆனால் இங்கு பேராசிரியர் அடித்த கூத்து புரிந்ததால், எல்லோரும் வாய் விட்டுச் சிரித்தனர். மேடையில் இருந்த இருவருமே நாகரிகம் கருதி அசட்டுச் சிரிப்பு சிரித்து சமாளிக்க வேண்டியதாயிற்று. சென்ற காட்சியின் இறுதியில் வந்த அந்த வில்லங்க நண்பரைப் பார்த்தேன். மனிதரிடம் அதே நமட்டுச் சிரிப்பு! 

         

Edited by சுப.சோமசுந்தரம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.