Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காமன் திருவிழா எனும் காமடித் திருவிழா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காமன் திருவிழா எனும் காமடித் திருவிழா

 
 
IMG_6700.JPG

இஸ்லாமிய மதத்தைத் தேசிய மதமாகக் கொண்ட மலேசியாவில் காமத்தை பொதுப்படையாகவும், வெளிப்படையாகவும் பேசுவதில் சிக்கல் இருக்கிறது. அது சட்டரீதியான பிரச்சனையில் கொண்டு போய் சேர்த்துவிடும். மலேசியத் தமிழ் மரபு, காமம் என்பதை மூடியிருக்கும் கதவுகூட அறியக்கூடாது என்று சொல்கிறது. அந்த அளவுக்கு புனிதம் காக்கிறார்கள். மலேசியத் தமிழர்களாக இருந்தாலும், காமனுக்கு விழா எடுத்துக் கொண்டாடிய மரபு வழி வந்தவர்கள் இல்லையா நாங்கள்? காமத்தின் அர்த்தம் புரியாமலேயே
மேம்போக்கான ஓர் அர்த்தத்துடன் ஏதோ புரிந்து வைத்திருக்கிறோமே
ஒழிய நாங்கள் காதலைக்கூட சரியாகத்தான் புரிந்திருக்கிறோமா
என்றுகூடத் தெரியவில்லை.

'காமண்டித் திருவிழா’ அல்லது ”காமன் திருவிழா ”குறித்து நம்மில் பலருக்குத் தெரிந்திருக்கும். 14 மாநிலங்கள் கொண்ட மலேசியாவில்
கிட்டதட்ட எல்லா மாநிலங்களிலும் தமிழர்கள் வாழ்ந்தாலும் இந்தத்
திருவிழா இரண்டு இடங்களில் மட்டுமே கொண்டாடப்பட்டு வருகிறது. இருப்பினும் நெகிரி செம்பிலான் மாநிலத்திலுள்ள, சிரம்பான் வட்டாரத்தின் பாஜாம் எனுமிடத்தில் இந்தத் திருவிழா கொண்டாடப்பட்டது என்று கூறப்பட்டாலும் அங்கிருந்து எந்தப் பதிவையும் பெற முடியவில்லை. தற்போது அந்த இடத்தில் காமன் திருவிழா கொண்டாட்டம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுவிட்ட நிலையில் சிலாங்கூர் மாநிலத்திலுள்ள டெங்கில் வட்டாரத்தின் அம்பார்ட் தெனாங் எனுமிடத்தில் 4 தலைமுறைகளாகக் அதன் பாரம்பரியம் தவறாமல் இன்றும் கொண்டாடப்பட்டு வருகிறது.
 
IMG_6708%2B%25282%2529.JPG


காமன் திருவிழா, காமண்டித் திருவிழா என்ற சொல்லாடல்கள் காலப் போக்கில் மருவி இந்த வட்டார மக்களிடையே ’காமடி திருவிழா’ என அழைக்கும் வழக்கம் வந்துவிட்டது. சாதாரணமாகத் திருவிழாவிற்கு அழைப்பு விடுக்கும்போது காமடிக்கு வந்திருங்கள் என்றுதான் அழைக்கின்றார்கள். காமன் திருவிழா முடியும் வரை ஊர் முழுதுமே கட்டுப்பாட்டுடன் இருக்கிறார்கள். கொடியேற்றப்படத்தும் ஊர் எல்லையைத் தாண்டக்கூடாது என்ற கட்டுப்பாடு இருக்கிறது. மேலும் வெளியூர்ப் பயணங்கள் செல்வதும் தவிர்க்கப்படுகிறது.

தமிழ் நாட்டைச் சேர்ந்த முனியாண்டி என்பவர் முதன்முதலாக இந்த இடத்தில் திருவிழாவை தொடங்கியிருக்கிறார் . தமிழ்நாட்டில் அவர் எந்த மாகாணத்தைச் சேர்த்தவர் என்ற விவரமும் எதற்காகக் காமன் திருவிழாவை இங்கு தொடங்கினார் என்ற தகவலும் அது எந்த ஆண்டு தொடங்கப்பட்டது உள்ளிட்ட விவரங்களும் ஆவணப்படுத்தவில்லை. முனியாண்டி என்ற பெயரை மட்டும்வைத்துக்கொண்டு ஆராய்ந்தால் மதுரை, தஞ்சை மாவட்டங்களிலிருந்து வந்தவராக இருக்கலாம் என்று ஆருடம் கூறலாம். அந்த இடங்களில் காமன் பண்டிகை கொண்டாடியதற்கான பதிவுகள் சங்க இலக்கியங்களில் இருப்பதுடன், இன்றும் அங்கு கொண்டாடப்பட்டும் வருகிறது.

முனியாண்டியின் மகன் வழிப் பேரன் தற்போது இந்தத் திருவிழாவிற்கான முதல் மரியாதையைப் பெற்று வருகிறார். திருவிழா அவரின் தலைமையிலேயே நடத்தப்படுகிறது. முனியாண்டிக்கு அவரின் தாத்தா குறித்த விவரங்களும், திருவிழாவிற்கான நோக்கமும் தெரியவில்லை. நிறைய திருவிழாக்கள் இருக்க, முனியாண்டி காமன் திருவிழாவை முன்னெடுத்ததற்கான நோக்கம் யாருக்கும் தெரியவில்லை. பரம்பரை பரம்பரையாக அவரின் வாரிசுகள் இந்தத் திருவிழாவை ஊர் மக்களின் ஆதரவோடு நடத்தி வருகிறார்கள்.

மாசி மாதத்தில் செய்யப்படும் இந்த விழா 22 நாட்களுக்கு நடைபெறுகிறது. எனக்குத் தெரிந்த வரையில் மலேசியாவில் வேறு எந்தத் திருவிழாவும் இத்தனை நாட்களுக்குக் கொண்டாடப்படுவதில்லை. டெங்கில் வட்டாரத்தில் அம்பார்ட் தெனாங்கில் கொண்டாடப்படும் இந்த விழாவை அவ்வட்டார மக்கள் புறக்கணிப்பதில்லை. காரணம், இந்த விழாவில் கலந்துகொண்டு வேண்டிக்கொண்டால், மன்மதனும் -ரதியும் தங்கள் குறைகளைத் தீர்த்து வைப்பதாக அவர்கள் நம்புகிறார்கள்.

குறிப்பாகக் குழந்தை இல்லாதவர்கள் இந்தத் திருவிழாவின்போது விரதம் இருந்து வேண்டிக்கொள்கிறார்கள். இந்த வேண்டுதலுக்குப் பிறகு குழந்தை பாக்கியம் கைகூடும்போது பட்சத்தில், மறுஆண்டு காமன் திருவிழாவில் நேர்த்திக்கடனை நிறைவேற்றுகிறார்கள்.
 
IMG_6725%2B%25282%2529.JPG


மேலும், தன் தவக்குழந்தை ஆண் என்றால் மன்மதன் என்றும் பெண் என்றால் ரதி என்றும் பெயர் சூட்டுகிறார்கள். இதனாலேயே அந்த வட்டாரத்தில் மன்மதன்-ரதி பெயர் கொண்டவர்கள் நிறைய இருக்கிறார்கள். திருமணம் தள்ளி போவது, காதல் கைகூடுவது சொத்து பிரச்சினை, தேர்வில் வெற்றிபெறுவது உள்ளிட்ட பிரச்சனைக்கும் இந்த வட்டார மக்கள் நம்பிக்கையோடு மன்மதன் ரதியை வேண்டிக்கொள்கின்றனர். இந்த ஆண்டு (2018) காமன் பண்டிகை மாசி மாதம் 12-ஆம் நாள், அதாவது பிப்ரவரி 24 தொடங்கி மார்ச் 11 வரை நடைபெற்றது. இந்தத் திருவிழாவின் முதல் நாள் நிகழ்வு மிகவும் முக்கியமானதாகும். கரகம் பாலித்தல், பூமி பூஜை செய்து
காசு செலுத்துதல், கம்பம் நட்டுக் காப்பு கட்டுதல் உள்ளிட்ட மரபு சார்ந்த விஷயங்கள் செய்து முடிக்கப்படும். இந்தப் பூஜைகளை குறித்து சற்று விளக்கமாகப் பார்க்கலாம். கரகம் பாலித்தலில் பெரிய விளக்கம் சொல்வதற்கில்லை. அது எல்லாத் திருவிழாவிலும் நடக்கக்கூடிய முறையிலேயே இருக்கிறது.

பூமிக்கு காசு கொடுத்தல்

காமன்-ரதியிடம் நேர்த்திக்கடனை வைப்பவர்கள் கையில்  சில்லறை நாணயங்களோடு கம்பம் நடுவதற்குத் தோண்டியிருக்கும் இடத்தில் காத்திருக்கின்றனர். பூசாரி பூமி பூஜைகளின் சடங்குகளை முடித்துக்கொண்டு வேண்டுதல்காரர்களுக்கு உத்தரவிடுகிறார். மனதார பிரார்த்தனை செய்துகொண்டு குழியில் நாணயங்களைப் போடுகிறார்கள். வேண்டுதலுக்காகப் பூமிக்கு அர்ப்பணித்த காசை யாரும் மீண்டும் பெற்றுக்கொள்வதில்லை. (தற்போது சாங்கியத்திற்காக கொஞ்சம் காசை குழியில் போட்டுவிட்டு, கோயில் திருவிழா செலவிற்காக மீதி பணத்தை எடுத்துக்கொள்வதை அங்கு காண முடிந்தது.)
 
IMG_6688%2B%25282%2529.JPG

 கம்பம் நடுதல்

காமன் திருவிழாவில் இந்தக் கம்பம் நடுதல் என்பது மிக முக்கியமான
சடங்காகும். ஒரு பெரிய திடல் இதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டு காசு
போடுவதற்கான குழியும் தோண்டி வைக்கப்படுகிறது. காசுகொடுக்கும்
அந்தக் குழியில்தான் கம்பம் நடப்படும். அந்தாண்டு திருவிழாவுக்கான
தலைமை பொறுப்பை எடுப்பவர் கரும்பு, செங்கரும்பு, வேம்பு, மா உள்ளிட்ட கம்புகளாலும் வைக்கோல்களாலும் இறுக்கி கட்டப்பட்ட கொடிக் கம்பத்தை தோளில் சுமந்து வருவார். அவருக்கு முன்னால்  பறையிசை  முழங்கப்படுகிறது. தோளில் சுமந்துவரும் கம்பம், முடிந்தவரை பச்சையாக இருப்பது அவசியம். காரணம் அந்தக் கம்பம்தான் மன்மதனாகப் பாவிக்கப்பட்டு 16 நாட்களுக்கு பூஜைகள் செய்யப்படும். மன்மதன் பச்சை வர்ணம் கொண்டவன் என்பது பலருக்கும் தெரிந்த விடயம்தான்.

தமிழ்நாட்டில் பேக்கரும்பு, கொட்டா மணக்கு, சித்தகத்தி மற்றும் காதோலை, கருகமணி உள்ளிட்ட பொருள்களைக் கொண்டு இந்தக் கம்பத்தை செய்து  ஊன்றுகிறார்கள். இவை மன்மதனின் உடைமையாகவும் பாவிக்கப்படுகிறது. இவ்விருசடங்குகளுக்குப் பிறகு இத்திருவிழாவில் பொறுப்பெடுத்திருப்பவர்களுக்கு காப்புக் கட்டப்படும். இவர்கள் 16 நாள்களுக்கு நோன்பு இருக்கவேண்டும். இறுதியாகப் பிரசாதம் கொடுப்பதோடு அன்றைய நாள் முடிவடையும்.

மூன்றாம் நாள்

திருவிழாவின் மூன்றாம் நாளில் ரதி மன்மதன் ஜோடியைத் தேர்ந்தெடுக்கிறார்கள். ரதியாகவும், மன்மதனாகவும் வேஷம் புனைய சிறுவர்களையே தேர்ந்தெடுக்கிறார்கள். திருவிழாவின் இறுதி நாட்களில் மன்மதனும் , ரதியும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளும்படியான ஒரு காட்சி இடம்பெறும். அதில் ஏற்படும் அசம்பாவிதத்தைத் தவிர்க்கும் நோக்கில் சிறுமிகளை இந்த வேஷம் கட்டுவதிலிருந்து தவிர்த்திருக்கலாம் என்பது என் எண்ணம். வேண்டுதலின் நோக்கத்திலோ அல்லது விருப்பத்தின்
பெயரிலோ பெயர்கள் எழுதிப்போட்டுத் தேர்ந்தெடுக்கப்படும் இரு பெயர்களில் ஒருவர் ரதியாகவும் மற்றவர் மன்மதனாகவும் வேடம் புனைவர். தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுவர்கள் காப்புக் கட்டிக்கொண்டு நோன்பைக் கடைபிடிக்கின்றனர். அவ்வருடத்தின் ரதி-மன்மதன் ஜோடியாக கடவுள் யாரைத் தேர்வு செய்கிறார் என்பதைக் காண பலரும் ஆவலாக ஒன்று கூடுகின்றனர்.

 
IMG_6684%2B%25282%2529.JPG

6-வது நாளிலிருந்து கோயில் உபயத்துடன் மன்மதன்-ரதி ஆட்டம்  நடைபெறும். பெரிய ஒரு விழாவுக்கான ஒத்திகையாகவும் மேலும் ரதி-மன்மதனே வேஷம் புனைபவர்களின் உடம்பில் இறங்கி ஆட வேண்டும் என்பதற்காகவும் தினமும் மன்மதன்-ரதி ஆட்டம் வைக்கப்படுகிறது. ஆனாலும் இந்தக் காலகட்டங்களில் அவர்கள் எந்த அலங்காரமும் செய்துகொள்வதில்லை.

காமன் பண்டிகையின் 9-ஆம் நாள் கம்பத்தைச் சுற்றி பூப்பந்தல் அமைக்கப்படும். அன்றைய தினம் ரதி-மன்மதன் ஆட்டம் ஆடுபவர்
முழு வேஷம் கட்டி ஆடுவார்கள். மேலும் பறையடித்து காமன் பண்டிகைக்கான லாவணிப்பாடலையும் பாடுவார்கள். அன்றிலிருந்து 14-ஆம் நாள்வரை வேஷம் கட்டி ஆடுதல் தொடர்ந்து நடைபெறும். இந்தத் திருவிழாவின் பெரிய கொண்டாட்டமே 15-வது நாள் இரவு தொடங்கி மறுநாள்வரை தொடர்கிறது. அந்த நாள் மாசி மாதத்தில் வரும் பௌர்ணமியாக அமைகிறது. காமன் பண்டிகையை பொறுத்தவரை காமன் பண்டிகையைக் கொண்டாடுவதற்கான வசந்தவிழா அதுதான் எனவும் கருதப்படுகிறது.

பதினைந்தாம் நாள்

பஞ்சாங்கம் பார்த்துக் கணித்த நேரத்தில் விசேஷ பூஜை, ஆராதனைகள், பிரசாதம் வழங்குதலைத் தொடர்ந்து ரதியும் மன்மதனும் முழு அலங்காரத்துடன் வேஷம் கட்டி ஆடுவார்கள். அவர்கள் ஆடுவதற்கு முன்பு ரதி-மன்மதன் ஜோடிக்கு அன்றைய விழாவின் தலைமை பொறுப்பை எடுத்தவர்களும், அவர்களின் குடும்பம் சார்ந்தவர்களும் மாலை அணிவிக்கும் சடங்கு நடைபெறும்.
 
IMG_6754.JPG


பின் மன்மதன்-ரதி இருவர் இடுப்பிலும் நீண்ட துணி கட்டப்பட்டு  அவர்களை இழுத்துப் பிடித்திருப்பார்கள். பறை அடித்து லாவணி பாட இந்த ஜோடி அருள்வந்த மாதிரி ஆடத் தொடங்குகின்றனர். எதிரியை தாக்கக் கூடிய வகையில் கண்களில் வெறியோடு அவர்கள் நெருங்கி வருவதும், அப்படி நெருங்கும்போது அதைத் தடுத்து இழுத்து நிறுத்துவதும் தொடர்ந்து சில மணி நேரங்களுக்கு நடக்கிறது. கணவன் -மனைவியான ரதியும் மன்மதனும் எதற்காக அத்தனை ஆக்ரோஷத்துடன் நடந்துகொள்கிறார்கள் என்ற கேள்விக்கு நாம் புராணக் கதையை நோக்கிப் போக வேண்டியிருக்கிறது.

‘காமுட்டி’ என்கிற காமதகனம்

சிவனின் தவத்தை கலைக்கக் கிளம்பிய மன்மதனிடம் ரதி தனது கனவில் எமன் உள்ளிட்ட பூதகணங்கள் வருவதாகக் கூறி தடுத்தாள். ஆனாலும் அதை எதையும் கேட்காமல் தனக்கிட்ட கட்டளையை நிறைவேற்றக் கரும்பு வில்லில் நாண் பூட்டி சிவனின் மீது எய்தார் மன்மதன். இதனால் சினங்கொண்ட சிவபெருமான் கோபத்தில் மன்மதனை எரித்து விடுகிறார். பின், ரதி சிவனிடம் மன்றாடி முறையிடுகிறாள். மனம் இறங்கிய சிவன் ரதிக்கு மட்டும் தெரியும்படி மன்மதனை உயிர்த்தெழச் செய்தார்.
அதாவது சிவனின் தவத்தைக் கலைக்க கிளம்பிய மன்மதனை ரதி
தடுத்து நிறுத்தும் காட்சிதான் அங்கு நிகழ்த்தப்பட்டுக்கொண்டிருக்கிறது.
 
IMG_6719%2B%25282%2529.JPG

கட்டங்கட்டமாக காமன்-ரதி ஆட்டம் தீவிரமடையும்போது இருவர் கையிலும் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வில் கொடுக்கப்படுகிறது. அதைக் கையில் பிடித்துக்கொண்டு ஒருவரை ஒருவர் நோக்கிப், போய்ப் போய்த் திரும்புவர். வில்லுக்கான நாண் இருக்காது. இவர்களை நெருங்கவிடாமல் பிடித்திருக்கும் இறுக்கம் கொஞ்சம் தளர்ந்தாலும் மிகக் கடுமையாக ஒருவரை யருவர்
தாக்கிக் கொள்கிறார்கள். இந்த அசம்பாவிதம் நடக்காமல் இருப்பது
துணியைப் பிடித்திருப்பவர்களின் கையில்தான் இருக்கிறது.

இதற்கிடையில் கடந்தாண்டுகளில் காமன் -ரதி வேஷம் புனைந்து ஆடியவர்கள் திருவிழாவிற்கு வந்திருப்பார்களேயானால் அவர்களையும்
கவனமாக கண்காணிக்கிறார்கள். காரணம், எந்த நேரத்திலும் அவர்கள் மீது மன்மதனோ, ரதியோ வந்து இறங்கி தற்போது வேஷம் புனைந்திருப்பவர்களை ஆவேசம்வந்து தாக்கக்கூடும்.

லாவணிப்பாடலும் (சம்வாதம்) ஒப்பாரியும்

ரதி-மன்மதன் திருவிழாவுக்கென்றே கூத்து வகையைச் சேர்ந்த பாடல்
வரிகள் இருக்கிறது. ரதி மன்மதனைப் போகவிடாமல் தடுப்பதும் அதற்கு மன்மதன் சிவனை பழித்துப் பாடுவதைப் போன்றும் சம்வாதம் நடக்கும். டெங்கில் வட்டாரத்தைப் பொறுத்தவரைகாமன் திருவிழா சார்ந்த எதையுமே ஆவணப்படுத்தவில்லை.
 
IMG_6777%2B%25282%2529.JPG

நான்கு தலைமுறைகளாக இந்தத் திருவிழாவை எப்படி வழிவழியாக
முன்னெடுக்கிறார்களோ அதேபோல இந்த விழாவுக்குப் பாடுபவர்களும்
பரம்பரை பரம்பரையாக வருகிறார்கள். இருந்தாலும் மூன்றாம் தலைமுறையோடு அதன் ஆர்வமும் பற்றும் அறுந்து தற்போது
அவர்களின் வாரிசுகள் கடமைக்காக பாடிக்கொண்டிருக்கிறார்கள். பரம்பரையாய் கைமாறி வந்த கையெழுத்துப்பிரதிகள் நடுவில்
பல பக்கங்களைத் தொலைத்துவிட்டு நிற்கிறது. அதாவது சில பாடல்களை மட்டும் வைத்துக்கொண்டு அதை விழா முடியும்வரை திரும்பத்திரும்ப பாடுகின்றனர். மேலும் பல வாரிசுதாரர்களுக்கு பாடுவதில் விருப்பமில்லாமல் ஒதுங்கியும் உள்ளனர். தற்போது மாரியாயி , நிஷா, போன்றவர்கள் கடந்த 10 ஆண்டுகளாக வாரிசுப் பாடகர்களாக இருந்து வருகின்றனர்.

மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த காமாட்சி என்பவர் தொடர்ந்து காமன் பண்டிகை திருவிழாவில் பாடி வந்தாலும் அவரிடமும் முழுமையான
பாடல்வரிகள் எதுவும் இல்லாதது வருத்தமான விஷயமாகும். மலேசியாவில் ஒரே ஒரு இடத்தில் கொண்டாடப்படுகொண்டிருக்கும் இந்தத் திருவிழாவிற்கான ஆவணங்கள் அதன் மதிப்பும் அருமையும் தெரியாமலே போய்க்கொண்டிருக்கிறது.

இங்கு காமன் பண்டிகை விழாவில் பாடப்படும் பாடலின் சில வரிகள்.

38 முனிவர்கள் எல்லாரும் (இரு முறை)
48 ரிஷிமார்கள் எல்லாரும் (இரு முறை)
உன்னை அழைத்து வரச்சொல்லி
ஆள் வந்து நிக்குதடி (இரு முறை)

சண்டைக்கு போறேனென்று
ரதி தகராறு பண்ணாதே
போனால் வரமாட்டேன்
பொடிப்பொடி ஆயிருவேன்
என்னைப் போக விடைகொடுடி
நான் போய் வரேன் தேவசபை
(மன்மதன் ரதிக்குப் பாடும் படியான பாடல் வரிகள்)

கரும்பு வில் மன்மதனே
கங்காளன் மருமகனே
அரும்பு வில் ஏந்தும் கரனே
அருங்கிளி வாகனனே

துரும்பையா ஈசனுக்கு
துணிந்தெதிர்க்கப் போகாது

குறும்பு புரிந்தோர்க்கு -அவர்
கோபமது பொல்லாது

 கனிந்தவரை யாரிப்பார்
பணிந்தவர்களுக்கு வரமளிப்பார்

துணிந்தவரை ஜெயிப்பார்
தொண்டர்களுக்கு அருள் புரிவார்

என் தந்தை பெருமைதனை
தானுரைப்பேன் கேளுமையா
அர்த்தமுள்ள மன்மதரே
அன்புடைய அங்கையரே.. (ரதி பாடும் படியான பாடல் வரிகள்)

காமனை எரித்த பிறகு பாடப்படும் ஒப்பாரிப் பாடலுக்கான வரிகள் இந்த வட்டார மக்களிடத்தில் இல்லை. ‘இலக்கியமும் பண்பாட்டு மரபுகளும்’ என்ற புத்தகத்தில் பா. ஆனந்தகுமார் எழுதியிருக்கும் காமன் பண்டிகை கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஒப்பாரிப் பாடல் இப்படிப் பாடப்படுகிறது.

இன்னக்கி தங்க டம்ளருல, தங்க டம்ளருல
நான் தண்ணீரு கொண்டு வந்தேன்
இன்னக்கி தண்ணீரு வேண்டாமுனு
எனக்கு வாச்சிட்ட சீமானே ஐயா நீங்க
ஒரு தங்க ரதம் கேட்டிங்களோ (அழுகை)
காமனை எரித்து மூன்றாவது நாள் செய்யப்படும் கருமாதி
சாங்கியத்தில் பாடப்படும் பாடல் இவ்வாறு இருக்கிறது.

'வாசவனும் கேசவனும் வாகான காசிலிங்கம்
இராவணனைக் கொன்ற லிங்கம் இராஜகோபால லிங்கம்
தட்டி எழுப்புமய்யா சாம்பலாய் போனவரை
திட்டிச் செலுப்புமய்யா திருநீறாய்ப் போனவரை'
 
IMG_6690%2B%25282%2529.JPG


பதினாறாம் நாள்

காமத்தகனமும் உயிர்ப்பித்தலும் காமன் கூத்தின் பிரதான அம்சமாக உள்ளன. அதிகாலை ஒரு மணிக்குக் காமன் - ரதி திருமணம் வைபோகம் மரபு மாறாமல் நடக்கிறது. அதன்பிறகு அதிகாலை மூன்று மணிக்குச் சிவன் தரிசனமும், மன்மதனைச் சிவன் நெற்றிக்கண்ணால் எரித்து,மன்மதனாக கருதப்படும் கம்பத்துக்கு தீ மூட்டுதல் சம்பூர்த்தியும் நடைபெறும். விடியும்போது காமனாக வைத்திருக்கப்பட்ட கம்பமும் பூப்பந்தலும் இருந்த சுவடு தெரியாமல் எரிக்கப்பட்டிருக்கும். அதன்பிறகு மிகவும் சோகமான சடங்கு நடைபெறும். தாலியினை அறுத்து ரதிக்கு வெள்ளைச் சேலை உடுத்தி வீடு வீடாக மடிப்பிச்சை எடுக்கும் சடங்கு அதிகாலை மூன்று மணிக்கு நடக்கிறது. இந்தக் காட்சியினை பெண்களும் குழந்தைகளும் காண்பதற்குத் தடை செய்யப்படுகிறது. இந்தச் சடங்கின்போது ஒப்பாரிப் பாடலைப் பாடுகிறார்கள்.

காமனை எரித்த இடத்தில் கோழிக்குஞ்சு ஒன்றைக் கட்டுகிறார்கள். இந்திய மரபில் இருக்கும் ஒரு சடங்குதான் இது என்றாலும் இப்படிக் கட்டாவிட்டால் மன்மதன் வேடம் போட்டவருக்கு ஆபத்து ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. பதினேழாம் நாள் மன்மதனுக்கு விளக்கு ஏற்றிவைத்தலும், பதினெட்டாம் நாளிலிருந்து இருபத்து ஒன்றாம் நாள் வரை பால் ஊற்றும் சடங்கும் நடைபெறும். இதற்கிடையில் மன்மதனை எரித்த மூன்றாம் நாளில் கருமாதியும் அது சார்ந்த சடங்குகளும் செய்யப்படுகிறது.

22-ஆம் நாள்தான் காமன் பண்டிகை மரபுப்படி ரதியின் வேண்டுதலுக்கு மனமிறங்கி ரதிக்கு மட்டும் தெரியும்படியாக மன்மதனை உயிர்ப்பிக்கும் சடங்கு நடக்கிறது. இதோடு இந்தக் காமன் பண்டிகை விழாவும் முடிவடைகிறது.

தமிழர்கள் வாழுமிடங்கெளெல்லாம் எங்கேயாவது ஓர் மூலையில் இந்தக் காமன் திருவிழா நடந்துகொண்டுதான் இருக்கிறது என்பதற்கு இணையப் பதிவுச் சான்றுகளின் வழி அறியமுடிகிறது. குறிப்பாக மலையகத்தில் நடக்கும் காமன்கூத்து தொடர்பாக குழந்தைவேல் ஞானவள்ளி என்பவர் எழுதியிருக்கும் கட்டுரையை வாசிக்கும்போது, மலேசியாவில் நடக்கும் காமன் பண்டிகையோடு நிறையப் பொருந்திப் போகிறது. ஆனாலும், அங்கு அதிகமான கதா பாத்திரங்களை கொண்டு வேஷம் கட்டி திருவிழாவை செழுமை செய்கிறார்கள். மலேசியாவில் இரண்டே கதாபாத்திரங்கள்தான்.
 
IMG_6754.JPG
 
 



தேவர்களுள் அழகில் மிகுதியானவனாகக் கருதப்படும் மன்மதனுக்கான பெயர்களை, காம தெய்வன், அனங்கன், மகரக் கொடியுடையோன், ரதிகந்தன், மாறன், கந்தர்வன், மதனன், புஷ்பவனன், புஷ்பதானுவன், வசந்தன் என அடுக்கிக்கொண்டே போகலாம். சங்கத் தமிழ் இலக்கியங்களில் மன்மதன் திருமாலின் மகன் என்றும் அவர் பிரம்மாவின் மானசீக புதல்வன் என்றும் இரு வெவ்வேறு கதைகள் கூறப்படுகின்றன. ரதி சிவனின் மகள் என்றும், தட்சனின்  வியர்வையிலி ருந்து தோன்றி யவள் எனவும், இரு மாறுபட்ட கதைகள் ரதிக்கும் உண்டு.

மன்மதன் - ரதி இருவருக்கும் கொஞ்சுங்கிளி வாகனமும், கரும்பு வில்லும் பொதுவாக இருந்தாலும் காமக்கணையினை தொடுக்கும் வேலையை மன்மதன் ஒருவரே செய்கிறார். ரீங்காரமிடும் வண்டுகளை நாணாக்கி முல்லை, மாம் பூ, தாமரை, அசோகம், அல்லி ஆகிய மயக்கும் மலர்களால் செய்த அம்பினை எய்யும் மகத்தான காதல் பணியை ரதி செய்தாள் என்பதற்கான சான்றை நான் எந்தப் பதிவிலும் வாசித்ததாக நினைவில் இல்லை. தாலியறுத்து, வெள்ளைசேலை அணிவிக்கப்பட்டு, ரதி புலம்புகிறாள், கடல் கடந்தும் அழுதுகொண்டே இருக்கிறாள் ஒவ்வொரு வருடமும்....

http://yogiperiyasamy.blogspot.com/2019/02/blog-post_89.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.