Jump to content

அலி : ஒரு விமர்சகன் சொன்ன கதை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

அலி : ஒரு விமர்சகன் சொன்ன கதை

அலி : ஒரு விமர்சகன் சொன்ன கதை

லியிடம் எப்பொழுதாவது அதைக் கேட்டுவிடவேண்டும் என்று நினைத்துக்கொள்வேன். ஆனால், ‘என்ன மச்சான்… நீயே இப்புடிக் கேக்காய்?’ என்று திருப்பிக்கேட்டுவிடுவானோ என நினைத்து, தவிர்த்துவந்தேன். நிறைய நேரங்களில் அவன் ஜோக்கும் பாட்டும் சிரிப்புமாக இருக்கும்போதெல்லாம் அந்தக்கேள்வி என் அடித்தொண்டை வரை வந்துசெல்லும். அதைத் துப்பிவிடத் தகுந்த சந்தர்ப்பம் நோக்கியிருந்தேன். கூட்டாளிமாருடன் சேர்ந்து எங்காவது முசுப்பாத்தியாகச் செல்வதென்றால் அலியைத் தவறாமல் கூட்டிச்செல்வோம். செல்லுமிடங்களையெல்லாம் மகிழ்ச்சியால் நிறைத்துவிடக்கூடியவன் அவன். சிங்களப்புறத்தில் நீண்டகாலம் வேலைசெய்தவன் என்பதால், சிங்கள் செக்ஸ் ஜோக்குகள் எல்லாம் அவனுக்கு அத்துப்படி. ஒரே ஜோக்கை அவன் எத்தனை தடவைகள்தான் திருப்பித்திருப்பிச் சொன்னாலும் ஒவ்வொருமுறையும் ‘ஹோ’வென்று நண்பர்களைச் சிரிக்கச்செய்துவிடுவான். ஒரு ஜோக்கை அவன் சொல்லும்போது, கடந்த தடவை உபயோகித்த உடல்மொழியையும் வார்த்தைகளையும் அவன் உபோகிப்பது குறைவு என்பதே அதற்கான காரணம் என என்னால் துணியமுடிந்தது. அவன் ஜோக்கைச் சொல்லிமுடிக்கையில் அருகிலிருப்பவரின் தொடையில் ஓங்கித் தட்டாமல் உங்களால் சிரிக்கவே முடியாது. அதுபோலத்தான் சிங்கள பைலாப் பாடல்களை அவனுக்கு நிகராகப் பாட ஊரில் எவருமே கிடையாது.

ஊரிலிருந்து எந்த வயதைச் சேர்ந்த நண்பர் வட்டம் சுற்றுலாக் கிளம்பினாலும் அதில் அலி கட்டாயம் இடம்பெற்றிருப்பான். அவனால், தங்களைச் சிரிக்கவைக்கவும் களிக்கவைக்கவும் முடியுமென்று எல்லோரும் நம்பினார்கள். அவன் இதையெல்லாம் உங்களுக்குச் செய்யவேண்டுமென்றால் ஒரு அடிப்படையான நிபந்தனை இருக்கிறது. அவனுக்கு நீங்கள் பூரணாதி அல்லது குதிரைப்பயில்வான் அல்லது சாத்தாவரி ஆகியவற்றுள் ஏதாவதொரு லேகியத்தை வாங்கிக்கொடுக்க வேண்டும் என்பதே அது. ஆனால், அது அவன் சுயமாக லேகியம் கிண்டப் பழகிய காலப்பகுதிக்கு முன்னுள்ள காலங்களில்தான். அதன்பின்பு, தனக்குத் தேவையானதை அவனே கொண்டுவருவான். நீங்கள் விரும்பினால் அவனுக்கு கஞ்சா வாங்கிக் கொடுக்கலாம். அவன் சாராயம் குடிப்பதில்லை. அது ஹறாம். அத்தோடு அவனுக்கு அது ஒத்துக்கொள்வதுமில்லை.

லேகியத்தைப் போட்டுக்கொண்டால் அதன்பின் அவனது வாய்க்கு ஓய்விருப்பதில்லை. ஓயாமல் ஜோக் சொல்லுவான். அல்லது பாடுவான். இன்னுமொரு சிறப்பம்சம் என்னவென்றால், தமிழ்ப் பாடல்களை அவன் உள்ளது உள்ளவாறே அவன் பாடுவதில்லை. தனது சொந்தவரிகளைப் போட்டே படிப்பான். ’உள்ளதை உள்ளவாறே பாடுவதற்கு அதென்ன ஜுனைத் சேர் படிச்சித்தந்த செய்யுளா?’ என்று கேட்பான். இந்தத் திறமை எட்டாம் வகுப்புப் படிக்கும்போதே அவனுக்கு வாய்த்துவிட்டது. வகுப்பில் படிக்கும் எவனாவது அவனோடு குழம்பிவிட்டால், சினிமாப் பாட்டின் மெட்டில் சண்டையிட்டவனுடைய பட்டப்பெயர்களைச் சேர்த்துப் பாடிக்கொண்டே திரிவான். அந்தப்பாடல் வகுப்பு முழுவதும் பிரபலமாகி, எல்லோரும் பாடும் நிலையை அடைந்து பெரிய மானக்கேடாகப் போய்விடும். இக்பால் என்பவன் ஒருமுறை அலியோடு சண்டைபோட்டான். ‘கண்ணா நீ கண்ணுறங்கு… உமருக் காக்காட பேக்குரங்கு’ என்று பாட, அது பாடசாலை முழுக்கப் பிரபலமாகி இக்பாலுக்குப் பேக்குரங்கு எனும் பட்டப்பெயர் நிலைத்துவிட்டது.

நாகூர்.ஈ.எம். ஹனீபாவின் பாடல்கள் அவனது வாயில் மாட்டிக்கொண்டு படும்பாடுகள் சொல்லி மாளாது. ’கண்கள் குளமாகுதம்மா கர்பலாவை நினைக்கையிலே…’ என்பது என்னவொரு அருமையான பாடல்? அப்பாடல் மெட்டில் தனது கற்பனையை ஏற்றி ‘கண்கள் சிவப்பாகுதம்மா கஞ்சாவை அடிக்கையிலே… புண்ணாகி நெஞ்சமெல்லாம் இருமியே தொலைக்குதம்மா…’ என்று அலி பாடியபோது அவனுக்கு வயது பதினைந்து.

நீண்ட நாள் காத்திருப்புக்குப் பின், இப்படித்தான் ஒருநாள் அலி நல்ல லேகிய உஷாரில் இருக்கும்போது அதைக் கேட்டுவிட்டேன்.

’மச்சான்! நீ அந்த ஆட்டோவைக் களவெடுத்து வித்தன்டு சொல்றானுகளே உண்மையா மச்சான்?’

சாதாரணமாகக் கோபப்படுவான் என்றோ அல்லது ‘என்னடா நீயே என்னை சந்தேகப்பட்டுட்டியே?’ எனக் கேட்பான் என்றோ எதிர்பார்த்திருந்தேன். ஆனால், அவன் கெக்கெலித்துச் சிரித்தான்.

‘ஆட்டோ போனா மசிரொன்டு போகுது மச்சான்… அன்டைக்கு அலி உசிரு தப்பினது பெரிசு, தெரியுமாடா?’ என்றான். தன்னைப் படர்க்கையில் அழைக்கும் விநோதமான பழக்கம் அவனிடமிருந்தது. தன்னுடைய பெயரையும் சேர்த்து படர்க்கை வசனங்களிலேயே பெரும்பாலும் பேசுவான். ஆனால், அது என்னைப்போன்ற நீண்ட நாள் நண்பர்களிடம் மட்டும்தான் என நினைக்கின்றேன். ‘அந்த டைம்ல அலி மட்டும் புத்தியா வேலை பாக்காம விட்டிருந்தான் என்டாக் கத முடிஞ்சிருக்கும் மச்சான்…’ என்பது போன்ற வசனங்கள்.

‘அந்த சம்பவம் நடக்கக்கொள்ள ரெண்டாயிரத்தி ஒன்டு இல்லாட்டி ரெண்டா இருக்கனும்டு நினைக்கன் மச்சான். அப்ப அலி பெட்ரோல் செட்டடியில போட்டு ஆட்டோ ஓடிக்கிட்டிரிக்கான்… நீ அப்ப கெம்பஸுக்குப் பெய்த்துக்கிட்டு வந்துக்கிட்டு இருக்காய். ஞாபகமிரிக்கா?’

ஞாபகமிருக்கிறது. அந்தக்காலம் மறக்கமுடியாதது. ‘ஓம் மச்சான், இருக்கு’

‘ஹாங்… அப்ப நடந்த சம்பவந்தான் அது…’ என்று ராகமாய் இழுத்துச் சொன்னான். ’என்ன நடந்தன்டா….’ என்று தொடங்கிய அலியை அப்படியே கதையைச் சொல்ல நான் அனுமதிக்க முடியாது. ஏனென்றால், அவனுடைய கதை சொல்லும் முறையில் சில சிக்கல்கள் இருக்கின்றன. நிறைய இடங்களில் தூஷண வார்த்தைகள் வரும். இடைக்கிடையே பாடவும் தொடங்கிவிடுவான். இதெல்லாம் எனக்குச் சரிப்பட்டு வராது. எனவே, அவனது கதையைக் கேட்டு நான் அதை எனது வார்த்தைகளில் சொல்லலாம் என முடிவெடுத்திருக்கிறேன்.

*********************

னது இந்த முடிவு மம்மூஸிக்குப் பிடிக்கவில்லை என்பது அவனது முகம் போன போக்கிலேயே எனக்கு விளங்கிவிட்டது. ‘என்ன மம்மூஸி?’ என்றேன்.

‘ஒன்ட எழுத்தாளத் திமிரையும் அதிகாரத்தையும் பார்த்தியா?’

எனக்கு விளங்கிவிட்டது. இன்றைக்கு எனக்குக் கட்டம் சரியில்லை. மம்மூஸியை வைத்துக்கொண்டு நான் கதை சொல்லத் துவங்கியிருக்கக் கூடாது. அவன் நல்ல படிப்பாளி. ‘கொள்ளையாப் படிச்சாலும் சிக்கல்தான்’ என்பதை இவனிடம் தான் நான் கண்டுகொண்டேன்.

‘இல்ல மம்மூஸி… என்ட கதையை எப்படி எழுதணும்டு தீர்மானிக்கிற உரிமை எனக்குத்தானே இருக்கு?’

‘ஓ… அது சரி. யாரு இப்ப இல்லன்டு சொன்ன? ஒன்ட கதய நீ எழுதக்கொள நீ விரும்புற மாதிரி எழுது. இப்ப எழுதப் போறது அலிட கததானே? அப்ப அதை அவன் விரும்புற மாதிரி அவன்ட வார்த்தையில பதிவு செய்றதுதானே நியாயம்?’

’அதுக்கில்ல மம்மூஸி, அவன்ட மொழியும் பேச்சும்…’

‘இஞ்சப்பாரு… இதைத்தான் நான் எழுத்தாளனுடைய வன்முறை என்டு சொல்லுறன். ஒன்ட திமிரு இல்லாம இது வேறென்ன? அவன்ட மொழி எப்புடி இருந்தா உனக்கென்ன? அவனை அவன்ட கதையை அப்படியே சொல்ல விடன்…’

‘நான் இப்பதான் எழுத்துத் துறைக்கு வந்திருக்கன். எனக்கு இருக்கிற மொத்த வாசகர்களே நாலுபேருதான். எனக்கும் மத்த எழுத்தாளனுகளைப் போல பெண் வாசகிகள் இருக்கணும் என்டெல்லாம் ஆசை இருக்காதா? அலியைத் தன் பாட்டுக்குச் சொல்லவிட்டா பத்து வார்த்தைக்கு மூனு தரம் பு** பு** என்டு சொல்லிக்கிட்டுப் போவான். அதைப் பார்த்தா பெண்கள் யாரும் வாசிப்பாங்களா? அதோட நான் அலிட கதையை மட்டும் சொல்லப் போகவுமில்ல… அதுக்குள்ள இன்னும் ரெண்டு மூனுபேரும் வாறாங்க…’

‘எழுத்தாளப் ***** …. பாசிஸ்ட்’ என்றுவிட்டு கையிலிருந்த சிகரெட் பாதியைக் காலில் போட்டுக் கசக்கிவிட்டுக் கோபமாக எழுந்துசென்றான் மம்மூஸி.

*****************

து சரியான பிரச்சின டைம். பின்னேரம் ஆறு மணியாகினா பெட்ரோல் செட் சந்தியத் தாண்டி நம்மடாக்கள் யாருமே போரல்ல. கடைசி பஸ் அஞ்சு மணிக்கெல்லாம் வந்திடும். ஆர்மிக்காரன்ட ‘ஸ்கொட்’ அஞ்சுமணியோட முடிஞ்சிடும். அதுக்குப் பிறகு என்னமும் அவசரக் கேஸ் என்டா மட்டும் தான் ஏதாவது வாகனம் போகும். ஆஸ்பத்திரி … மையத்து… அப்படி இப்படி…!

மனுசனுகள் எல்லாம் ஆறு மணிக்கே ஊட்டோட அடங்கின காலம் அது. அப்படியாப்பட்ட இக்கட்டான காலத்துல கூட பொதுமக்களுக்குச் சேவை செய்றதுக்காக உசுரப் பணயம் வச்சவன் தான் அலி, தெரியுமா? என்ன சேவைன்டு கேக்குறியா? நைட் ஆட்டோ சேவிஸ். கொழும்புல இருந்து வார பஸ் இரவைக்கு ஒன்னரை மணிக்கு ஓட்டமாவடிக்கு வருவான். மட்டக்களப்பு, காத்தான்குடி, கல்முனை என்டு தூரம் போர பஸ்ஸெல்லாம் பெட்ரோல் செட் சந்திக்குக் கிட்ட… அதுதான்… ரயில்வே ஸ்டேஷனுக்கு முன்னுக்குத்தான் அடிச்சிக் கிடப்பானுகள். அப்படி வார பஸ்ஸுகளில வாழைச்சேனை, பேத்தாழை, கல்குடா பகுதியைச் சேர்ந்த சில சனங்கள் வருவாங்க. அவகளுக்குப் போறத்துக்கு ஆட்டோ தேவை. அவகள ஏத்திக்கிட்டுப் போர அரும்பணியைச் செஞ்சவன் அலி.

அலிக்குக் கூட நஸீருத்தின் என்டு ஒருத்தன் இருந்தான். ஆனா அவன் ரொம்ப தூரம் என்டாப் போகமாட்டான். அப்படியான டைம்ல அலிதான் அந்த மக்களுக்கு உதவினவன். அந்தக் காலத்துல எந்தத் தமிழனும் ஆட்டோ ஓடல. தமிழ் மக்கள் உறைஞ்சு போயிருந்த நேரம்லுவா அது? வெட்டக்கிறங்காதுகள். நமக்கு ஒரு பக்கம் தான் பிரச்சினை. எல்டிடி. ஆனா, தமிழனுகள் பாவம். அங்காலயும் பயம். ஆர்மி பொலிஸ் என்டு இஞ்சாலயும் பயம்.

இது ஒரு பெரிய சேவையா என்டு நீங்க நினைக்கலாம். ஆனா, அது இல்ல விசயம். வாழைச்சேனை ஆஸ்பத்திரிக்கு அவசர கதிக்கு வார சனங்கள் சில இருக்கும். சாவு, பிள்ளைப்பெறு என்டு. அப்படிப்பட்ட சனங்களுக்கெல்லாம் மட்டும் தான் தெரியும் அலி யாரு என்டு.

நம்மட ஆக்கள் யாரும் பொலிஸ்டேசனைத் தாண்டிப் போகாததுக்குக் காரணம் ஒன்டு தான். எல்டிடி பொடியன்மாருட கண்ணுல பட்டா கத முடிஞ்சிரும். அவனுகளுக்குச் சோனிகளைக் கண்ல காட்ட ஏலா. ஒன்டு, கொண்டு போர வாகனங்களைப் பறிச்சிக்கிட்டுப் போவானுகள். இல்லாட்டி, விசாரிச்சுப் பார்த்துட்டு… யாரும் கனமான ஆக்கள் என்டா, ஆக்களையே கொண்டு பெய்த்திருவானுகள். அதால ஓட்டமாவடி மக்கள்ற உலகம் பின்னேரம் அஞ்சு மணியோட பெட்ரோல் செட்டுக்கு இந்தப் பக்கம் சுருங்கிடும்.

சம்பவம் நடந்த காலம் எப்படிப்பட்ட காலம் என்டு நீங்க நல்லாப் புரிஞ்சிக்கணும் முதல். அப்பதான் வாழைச்சேனைப் பொலிஸ்டேஷன் ஒரு அட்டேக்ல மாட்டின நேரம். அதுல ஒரு நாலு பொலிஸ்காரனுகளும் டெலிகொம்ல வேல செஞ்ச செக்கூரிட்டி காட்டான பசீர் என்ட முஸ்லிம் பொடியன் ஒருத்தனும் இறந்துபோன டைம். அது நடந்து ஒரு அஞ்சாறு நாள் தான் ஆகியிருக்கும். அலியும் நஸீருத்தீனும் ஆட்டோ பாக்கிங்ல இருக்கம். ராவு பதினொரு மணி மட்டுல அவனுக்கு விசகளம் வந்திச்சு அவன்ட பொண்டாட்டிக்கு சுகமில்லையாம் வரட்டாம் என்டு. அதால, அவன் பெய்த்தான். இப்ப அலி மட்டும் தனியா இருக்கான்.

அதுக்கும் முதல் இன்னொரு விசயம் சொல்ல மறந்துட்டன். ஆனா, இதை யாருக்கிட்டயும் சொல்லிடக்கூடா. ச்சே! சொல்லமாட்டாய். உன்ன எனக்குத் தெரியாதா?

இரவைல சில சாவுக் கேஸுகள் வரும். வாழைச்சேனை ஆஸ்பத்திரில யாராவது செத்துப் போயிட்டா வீட்ட கொண்டு போரதுக்கு அந்த நேரத்துல எப்படி முடியும் சொல்லு? அப்படியான நேரங்களில தரணி எனக்கு விசகளம் அனுப்புவான். தரணியத் தெரியும் தானே? ஒஸ்பிட்டல்ல கம்பவுண்டரா இருந்தான்? அவன் தான். அவன்ட விசயம் ஒன்டு பிறகு சொல்லுறன்.

இப்ப என்ன நினைக்காய்? ஓம், நான் ஆட்டோவுல சவம் ஏத்திக்கிட்டுப் போர தான். இது நம்மட ஆட்டோக்கார முதலாளிக்குத் தெரியாது. தெரிஞ்சா ஆட்டோவைத் தரமாட்டான் என்ட பயத்துல நான் சொல்லல. என்ன விசயம் என்டா சவத்த ஏத்துறதுக்கு நஸீருத்தீனும் போகமாட்டான். அவனுக்குச் சவத்த ஏத்துறது கூடப் பிரச்சினை இல்ல. அங்கால தமிழ்ப் பகுதிக்குள்ள உசுரப் பணயம் வச்சுப் போரதுல தான் பிரச்சினை. காசுக்காக உசுரக் கொடுக்க ஏலா என்டு சொல்லுவான்.

நம்மளப் போல ஆக்களுக்கெல்லாம் காசு தானே வாழ்க்கை? காசு இல்லன்டா நம்மளயெல்லாம் எவன் மதிக்கப்போறான் சொல்லு. நல்லா இருந்த காலத்துல குடும்பம் கோத்திரம் எல்லாம் இருந்திச்சு. இப்ப கங்காணியார்ர பேரன் என்ட பேரைத் தவிர வேற ஒரு புடுக்கும் இல்ல. வாப்பாக்காரன் கடன்காரனுக்கு ஒளிச்சுக்கிட்டு கொழும்புல போய்க் கிடக்கான். எப்படி வாழ்ந்த மனுசன்? ஹ்ம்.

சவம் ஏத்துறதுக்கு நான் ஒத்துக்கிட்டதுக்குக் காரணம் காசைத்தவிர வேற ஒன்டுமில்ல. சமூகசேவை என்டெல்லாம் நான் சும்மா சொல்லிக்கிற. ஒருவேளை செத்துப்போனவன்ட சொந்தக்காராக்களுக்கு அது சமூக சேவையாத் தெரியுமாக்கும்.

உண்மையைச் சொல்றேனே. சவம் ஏதாவது ஏத்தப் போற என்டா… அன்டைக்கு ஒரு ‘கால்’ ஒன்டு போடணும். போட்டாத்தான் பயமில்லாமப் போய் வரலாம். உனக்கு அலியைப் பத்தித் தெரியும் தானே? பொய் சொல்லமாட்டான்.

அன்டும் இப்படித்தான் நஸீருத்தீன் பொஞ்சாதிக்குச் சுகமில்லை என்டு போனதுக்குப் பிறகு தனிய நிக்கிறதுக்குக் கொஞ்சம் பயமாத்தான் இருந்திச்சு. போன கிழமைதான் பெரிய அட்டேக் ஒன்டு இவடத்துல நடந்திச்சு. வெடில் கேக்க ஆரம்பிச்ச அடுத்த செகண்ட்டே நானும் நஸீருத்தீனும் ஆட்டோவக் கிளப்பிக்கிட்டு மாவடிச்சேனைப் பள்ளிக்குப் பக்கத்தால பறந்துட்டம். பிறகு காலத்தால தான் வந்து பாத்தம் செத்துப்போன பொலிஸ்காரனுகள்ற ‘பொடியெல்லாம்’. இப்ப தனிய நிக்கும்போது பயம் உரமா இருந்திச்சு. வீட்ட போவமா என்டுகூட யோசிச்சன். அப்ப தான் தரணி ஒரு தமிழ்ப்பொடியன அனுப்பியிருந்தான். கேஸ் ஒன்டு இருக்காம் வரட்டாம் என்டு.

கொஞ்ச நேரம் யோசிச்சன். சரி பாப்பமே என்டு போனேன். செத்தது ஒரு பெண். இளம் வயசுதான். கூட அம்மாக்காரி வந்திருந்தாள். கொஞ்சம் வயசான மனுசி. கல்மடுவுக்குக் கொண்டு போகணும் என்றாள். அது கல்குடா தாண்டி. அவ்வளவு தூரம் போவது இவ்வளவு இக்கட்டான சூழ்நிலையில் இயலாத காரியம். பக்கத்தில் என்றால் போகலாம், அவ்வளவு தூரம் போக ஏலாது என்று தரணியிடம் சொன்னபோது, “ஏலான்டு சொல்லாதே மனே… என்ட மகள வீட்டோட கொண்டுட்டு போகணும் ராசா… மஞ்சக் காச்சல் என்டு பின்னேரம் தான் ஆஸ்பத்திரியில கொண்டு வந்து சேத்தம் மனே. அம்மா வீட்ட வருவா என்டு பேரப்பிள்ளைகள் ரெண்டும் இப்ப காத்துட்டுக் கிடக்கும் ராசா… என்ன உன்ட தாயா நினைச்சுக்க மனே…” என்று கதறி அழுதாள் மனுசி.

என்னடா இது சோதனை? “இல்லகா… அவ்வளவு தூரம் என்னால வர ஏலா. இப்பதான் ஒரு அட்டேக் நடந்து முடிஞ்சிருக்கு. அடுத்தது எப்பன்டு யாருக்கும் தெரியா. பக்கத்தில என்டா ஓடிக்கீடி வந்துரலாம். அவ்வளவு தூரம் எப்படிகா நான் வார?” என்று கேட்க, படீரென்று விழுந்து கால்களைக் கட்டிக்கொண்டாள் மனுசி. “என்ட மகனே… என்னக் கைவிட்றாத ராசா… சின்னப்பிள்ளைகள் ரெண்டும் வீட்ட தனியக் கிடக்குதுகள் மனே. ஏங்கிப் பெய்த்துரும்…”

உனக்குத் தெரியும் தானே அலிக்கு இளகின மனசு. “சரிகா… சரிகா… எழும்பு… எழும்பு… கால்லயெல்லாம் உழாத…” என்டு கிழவிய எழுப்பாட்டி “ஆயிரத்தஞ்ஞூறு ரூவா தந்தா வாரன்… தருவியா” என்றேன்.

”நீ எவ்வளவு கேட்டாலும் தாரன் மனே” என்றாள். “சரி… எடு!”

முந்தானைத் தலைப்பைத் தேடி எடுத்து முடிச்சில் இருந்த தாள்களை எடுத்து நீட்டினாள். இருநூத்தி நாப்பது ரூவா இருந்தது. “மிச்சத்தை வீட்ட போய்த்தாரன் மனே”

“சரி… இப்படி ஒரு பத்து நிமிசம் இருந்துக்க… நான் இந்தா வாரன்” என்டு சொல்லிட்டு வெளிக்கிட அவள் தரணியின் முகத்தைப் பார்த்தாள். அவனுக்குத் தெரியும் நான் எங்கே போகிறேன் என்று. “அவன் இப்ப வருவான். கொஞ்ச நேரம் இருந்துக்க” என்றான் தரணி.

நான் ஆட்டோவைக் கிளப்பிக் கொண்டு நேரடியாக ஏஎஸ்பி ஒப்பீஸைத் தாண்டி சதாவின் வீட்டடிக்கு வந்து குரல் கொடுத்தேன். “அலி வந்திருக்கன்.” சதா பேரைக் கேட்டதும் படலையைத் திறந்தான். ”என்ன மச்சான் ஹயரோ?” என்றான். சவம் ஏத்துற நாளில மட்டும் தான் அலி குடிப்பான் என்டு சதாவுக்குத் தெரியும். இல்லாட்டிக் கஞ்சாவும் லேகியமும் தான்.

“ஓம்டா சதா. கொஞ்சம் தூரம். கல்மடு.”

“கல்மடுவா? கவனம் மச்சான். பாத்துப் போ. ரெண்டு பார்ட்டியும் திரியிரானுகள். மாட்டிக்காதே.”

“ஹ்ம்… அலிக்கிட்டயா? அதெல்லாம் நீ கவலைப் படாத சதா. என்ன இருக்கு?”

“நமக்கிட்ட வேறென்ன இருக்கிற? குரங்குதான். ஆனா சோடா ஒன்டும் இல்ல. முடிஞ்சி. பொலிஸ்காரனுகள் ரெண்டு மூனு பேரும் காக்காமாரும் வந்தவங்க. சாமானெல்லாம் முடிஞ்சி. தண்ணிதான்”

“சரி என்ன பன்டின்டாலும் பரவால்ல… எடு”

சதா கால் போத்தல் சாராயமும் தண்ணிக்கிளாஸும் ஒரு பக்கெட் பொரித்த வடைப்பருப்பும் கொண்டு வந்தான். மூனு ரவுண்ட். முடிஞ்சா? அதுக்குப்பிறகு இடுப்பு வாருக்குள்ள இருந்த செய்யது பீடி ஒன்டைக் கொழுத்தி வாயில வச்சுக்கிட்டு அலி வெளிக்கிட்டான், அலிக்கு ஆப்படிக்கப் போற பிரயாணம் என்டு அலிக்கு அப்ப தெரிஞ்சிருக்கல்ல மச்சான்.

*********

ங்காணியார் குடும்பம் என்றால் ஓட்டமாவடியில் தெரியாதவர்கள் இருக்க முடியாது. பெருத்த குடும்பம். பணம் படைத்த பரம்பரை. அலியின் தந்தையாருக்கு ஊரில் பெரிய மரக்காலை. பத்துப் பதினைந்து பேர் கூலிக்கு அவரிடம் வேலை செய்தார்கள். அலி பாடசாலைக்கு வருகின்ற நாட்களிலேயே தினமும் கைச்செலவுக்கு ஐம்பது ரூபாய் கொண்டு வருவான். அப்போதெல்லாம் நாங்கள் வெறும் ஐந்து ரூபாய் தான் கொண்டு செல்லுவோம். எங்களது நண்பர்கள் வட்டத்திலுள்ள அனைவருக்கும் பராட்டாவும் சம்பலும் வாங்கித் தருவான். என்னோடு மிகுந்த இரக்கம்.

யுத்தம் கூர்மையடைந்த காலங்களில் காட்டுமரம் வெட்டுவதிலுள்ள கெடுபிடிகள் அதிகரிக்க, அலியின் தகப்பனாரது தொழில் நலிவடையத் தொடங்கியது. நூறேக்கர் பகுதியிலுள்ள அவர்களது வயல் மிகவும் பிரசித்தமானது. இந்த காலத்து கெமிக்கல் எதுவுமின்றியே ஏக்கருக்கு எழுபது எண்பது மூடை விளைந்த வரலாறுகள் விவசாயிகளுக்குத் தெரியும். இப்போதெல்லாம் ஏக்கருக்கு நாற்பது நாற்பத்தைந்து மூடை விளைந்தாலே போதும் என்ற விவசாயிகளின் நிலை இரங்கத் தக்கது தான். அப்படிப்பட்ட பொன் விளையும் பூமியில் தங்க நிறத்தில் காய்த்துக் கிடந்த கதிர்களை அறுத்துக் கொண்டு வந்து காசாக்கி, மரத்தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டும் கனவோடு அலியின் தந்தை டிராக்டர் முழுக்கக் கூலியாட்களையும் சூடுபோடத் தேவையான சாமான்களையும் ஏற்றிக்கொண்டு சென்றார்.

வழக்கமாக அறுவடைக் காலங்களில் கூட அலியின் தந்தை வயலுக்குச் செல்வது கிடையாது. அவரது தம்பியையோ மச்சினனையோ தான் அனுப்பி வைப்பார். அவருக்கு இங்கே ஏகப்பட்ட வேலைகள் கிடக்கும். நெல் மூட்டைகள் வீடு வந்து சேரும். ஆனால், அன்றிருந்த பணமுடையின் காரணமாக அவர் வயலுக்குச் சென்றார். அறுவடை கோலாகலமாக நடந்தது. ஏக்கருக்கு அறுபத்தைந்துக்கு மேல் தேறும் என்று முல்லைக்காரன் பெருமிதமாகச் சொன்னான்.

‘அல்லாஹ் கரீம்’ என்று ஆனந்தப் பெருமூச்சு வெளிக்கிட்டது அவரது அடி நெஞ்சிலிருந்து. சுமார் ஐம்பது ஏக்கரை அண்டிய வயல். ஏக்கருக்கு அறுபது என்றாலும் மூவாயிரம் மூட்டை நெல். மனதில் சிறு கணக்கொன்று பார்த்துக்கொண்டார். ‘ஒரு மாதிரியா நிமிந்துரலாம்’ என்ற நிம்மதியோடு காவற்பரணில் சாய்ந்து படுத்துக் கொண்டார்.

அன்றிரவு முழுக்கச் சூடடிப்பு நிகழ்ந்தது. அடுத்த நாள் மதியம் மட்டில் அரைவாசி வயல் மொட்டையடிக்கப்பட்டு நெல்மணிகள் களக்கட்டில் குவித்து வைத்து சாக்கிலும் பேக்கிலுமாக அடைந்தேற்றப்பட்டு நான்கு டிராக்டர் பெட்டிகளில் ஏற்றப்பட்டன. அதில் இரண்டு டிராக்டர் அவருக்குச் சொந்தமானது. மற்ற இரண்டும் வாடகை. டிராக்டர்கள் சுமக்க முடியாத பாரத்தைச் சுமந்து அம்பாரி யானைகள் போல அசைந்து அசைந்து ஆற்றுக்கட்டைத் தாண்டி மூக்கர்ர கல் பிரதான சாலையை அடைந்த போது முன்னால் பல மாட்டு வண்டிகளும் இன்னும் சில டிராக்டர்களும் வரிசையில் நின்றன. அலியின் தந்தை டிராக்டரின் மட்கார்டிலிருந்து சரிந்திறங்கி வந்து ‘டேய் என்னடா முஸ்தபா…? யார்ர மிசினுக்குக் காத்துப் பெய்த்து…?’ என்று கேட்டார்.

முஸ்தபாவுக்குப் பின்னாலேயே லோரன்ஸ் வந்தான். லோரன்ஸ் என்றால் சும்மாவா? கேணல் லோரன்ஸ். லோரன்ஸ் ஆயுதம் எதுவுமின்றி நின்றான். அவனுக்குப் பக்கத்தில் அவனது மெய்க்காப்பாளர்கள் இருவர் முழு ஆயுதம் தரித்து நின்றனர். முகங்கள் இறுக்கமாக இருந்தன.

‘போடியார்… இவ்வளவு போதும் போடியார்… இதுக்கங்கால எங்க பெடியனுகள் பாத்துக்குவாங்கள்…’

அலியின் தந்தைக்கு நிலவரம் விளங்கிக்கொள்ளச் சற்று சிரமமாக இருந்தது. ‘இன்னும் வெட்டக் கிடக்கய்யா… உங்களுக்கு வழக்கமாத் தாரது வந்து சேரும். என்ன பிரச்சினை?’ என்று லோரன்ஸிடம் பவ்வியமாகக் கேட்டார்.

லோரன்ஸ் சிரித்தான். ‘கொஞ்சம் கொஞ்மா வந்து வாங்கிக்கிட்டுப்போற காலம் பெய்த்து காக்கா. ஆமிக்காரன் எட்டிட்டாங்கள். ஸ்டொக் தேவைப்படுது. அடுத்த முறை பாத்துக்கலாம். இந்த முறை விட்டுட்டுப் போங்கோ!’

‘என்ன…? என்னத்த விட்டுட்டுப் போக? இன்னும் வெட்டக்கிடக்கு…’ என்று சொல்லி முடிக்கும் முன்னே அவன் ‘எல்லாரும் நல்லாக் கேட்டுக்கங்கோ… ஆக்கள் வீட்டோட போய்ச் சேரணுமென்டால் அப்படியப்படியே விட்டுபோட்டு நடையைக் கட்டுங்கோ… வெட்டக்கிடக்கிறத நாங்க பாத்து வெட்டி எடுத்துக்கிறம்…ம்’ என்று அதட்டலாகச் சொன்னான்.

அலியின் தந்தை அப்போது தான் கவனித்தார், மூக்கர்ர கல் வீதி முழுக்க இயக்கப் பொடியன்மார் அணிவகுத்து வந்துகொண்டிருந்தார்கள். நிலைமை ஒருவாறு விளங்கி முடியும்போது தொண்டை கமறியது. கண்களில் நீர் நிறைந்து காட்சிகள் துலக்கமற்றதாகின.

இஸ்மாயில் வட்டவிதானையார், ‘போக்கில்’ குந்தியிருந்தார். கன்னம் வீங்கியிருந்தது. கண்களில் நீர். ‘என்ட வெள்ளாம… என்ட வெள்ளாம…’ என்று ஏதோ பிதற்றுவது தெளிவின்றிக் கேட்டது.

‘தம்பி… என்ன இதெல்லாம்? கபிலனைக் கூப்பிடுங்க. நான் கதைக்கன். எல்லாம் நல்லாத் தானே போய்க்கிட்டிருக்கு? ஏன் இப்பிடியெல்லாம் செய்றிங்க?’

‘கபிலனும் வரமாட்டான்… ஒரு பு**யும் வராது. சொல்றது விளங்கேல்லையா? நான் தான் இஞ்ச எல்லாம்… உசுரு வேணுமென்டால் ஓடிருங்கோ… விளங்குதோ?’ லோரன்ஸ் கண்கள் சிவந்து கர்ஜித்தான். எல்லோரும் உறைந்துபோய் நின்றனர். லோரன்ஸ் அருகில் நின்றவனிடம் துப்பாக்கியை வாங்கி லோட் செய்து வானத்தை நோக்கிப் படபடவென்று சுட்டான். டிராக்டரில் நெல்லுச் சாக்குகளுக்கு மேல் பயத்துடன் அமர்ந்திருந்த கூலியாட்களெல்லாம் தபதபவென்று சரிந்து இறங்கினார்கள். அமைதி கூடாரமிட்டிருந்த வானில் பறவைகளெல்லாம் மூச்சடக்கிப் பறந்தன, சிறகொலியும் இன்றி. வெடிச்சத்தம் ‘கூ’வென்று தேய்ந்துசென்றது.

யாரும் எதுவும் பேசத் திராணியற்றிருக்க, இலவைத்தம்பி ஹாஜியார் தயங்கித் தயங்கி லோரன்ஸுக்கு அருகில் சென்றார். ‘தம்பி, எவ்வளவு கால உழைப்பு தம்பி எங்கட! தந்துருங்க ராசா. உங்கட சோத்துப்பாட்டுக்குத் தேவையானதை எடுத்துக்கிட்டு மிச்சத்தை விட்டுருங்க… நீங்க கும்புடுற சாமி பேரால கேக்கன். எங்கட மனிச மக்களெல்லாம் இத நம்பித்தான் வீட்டுல காத்துக் கிடக்குதுகள்…’ கெஞ்சினார்.

லோரன்ஸ் இறுக்கம் தளர்ந்து ‘ஹோஹோ’ என்று வெடித்துச் சிரித்தான். அருகில் நின்ற இயக்கப் பொடியன் மாரெல்லாம் சிரிப்பதா இல்லையா என்று தெரியாமல் முழிக்க, அவர்களைப் பார்த்து ‘பாருங்கடா இதை’ என்று அவன் சொன்ன பிறகு அவர்களும் சிரிப்பில் இணைந்துகொண்டார்கள். லோரன்ஸ் இலவைத்தம்பி ஹாஜியாரின் நெஞ்சில் துப்பாக்கி முனையைப் பதித்தான்.

அமைதியான அந்தப் பேரணி புதுவழிப் பாலத்தை அண்மித்துக்கொண்டிருந்தது. அநேகம் பேர் வந்தவழியைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே நடந்தார்கள். டிராக்டர்களும், வண்டி மாடுகளும் அவற்றிலேற்றப்பட்டிருந்த நெல் மூட்டைகளும் அவர்களை விட்டுத் தொலைவாகியிருந்தன. எல்லாரது தொண்டைகளும் அடைத்துவிட்டிருந்தன. செண்ட்ரி பொயிண்ட்டுக்குள் இருந்த இராணுவ வீரர்கள், கால்நடையாக ஊர்ந்து வரும் பேரணியைப் பார்த்துக் குழம்பித் தங்களது ஆயுதங்களை அவசர அவசரமாகத் தயார் படுத்தினார்கள். ஆயுதங்களை நீட்டியவாறே இரண்டு இராணுவ வீரர்கள் முன்னால் சில அடிகளை எடுத்து வைத்தார்கள். ஆர்மிக்காரர்களைக் கண்டவுடன் அலியின் தந்தைக்கு அவ்வளவு நேரமும் அடக்கிவைத்திருந்த வெப்பிசாரம் வெடிக்க, ‘ஓஹ்ஹோஹ்ஹஹ்ஹா’ என்று பெருங்குரலெடுத்து அழுதவாறே வீதியின் தரையில் உட்கார்ந்தே விட்டார். அழுகுரல்கள் பல அவரோடு இணைந்துகொண்டன. முன்னால் வந்த இராணுவத்தினர் விக்கித்து நின்றனர்.

*******

ருட்டுன்டா இருட்டு அப்புடி ஒரு இருட்டு மச்சான். அந்த டைம்ல ரோட்டுல ஒரு லைட்டுக் கூட இரிக்காது. ஹார்பர் கேம்ப்ல இரிக்கிற ஆர்மிக்காரன் நிப்பாட்டினான். அலிக்கு சிங்கிளம் தண்ணி மாதிரி ஓடும் தானே? விளக்கத்தைச் சொன்னன். ‘மே வெலாவட்ட கல்மடு யன்னட்ட பிஸ்ஸுத உம்பட்ட?’ என்று அதட்டினான் ஒரு ஆமிக்காரன். அதப் பாத்துட்டு உள்ளுக்கிருந்த ஈபிடிபிக்காரப் பொடியன் ஒருத்தன் ஓடி வந்தான். ஹார்பர் கேம்புல ஆமியோட சேந்து ஈபிக் காரனுகளும் இரிக்கிற அப்ப. அவனுக்கிட்ட நான் விசயத்தைச் சொன்னன். எனக்கு ஈபிடிபி சிவாவையும் தெரியும் தானே மச்சான். மறா… அவன் நிலவரத்தப் பாத்துட்டு ஆமிக்காரனுக்கிட்ட சொன்னான். இதுல என்ன விசயம் என்டா மச்சான், ஆமிக்காரனுகள் இடைக்குள்ள அம்புஸ் படுக்கிற. வாகனம் ஏதாவது வந்தா… பயத்துல இரிக்கிறவனுகள் தானே மச்சான்… அடிச்சுட்ருவானுகள். அதான் பயம்.

அந்த மனுசிட வீடு கல்குடா மெயின் ரோட்ல இருந்து உள்ளுக்கு மச்சான். இடையில மணல் வேற. கஷ்டப்பட்டுத்தான் கொண்டு போய் சேர்த்த. தென்னந்தோப்புக்கிடையில ஒரு குடில் மச்சான். பக்கத்துல பெரிசா வீடுகளுமில்ல. நானும் அந்த அம்மாவும் சேர்ந்துதான் அந்த சவத்த இறக்கினம்.

ரெண்டு புள்ளைகள் மச்சான். ஒரு பொம்பிளைப் பிள்ள. பத்துப் பதினொரு வயசிருக்கும். அது முழிச்சிக்கிட்டுக் காத்துக்கிட்டு இருந்திச்சு. இன்னொரு அஞ்சாறு வயசுப் பொடியன். குடில் திண்ணையில படுத்துத் தூக்கம். ‘பசிக்குதென்டு கத்திப்போட்டுத் தூங்குறான்ம்மா’ என்றவாறு ஓடிவந்தாள் அந்தப் புள்ள. நானும் மனுசியும் கஷ்டப்பட்டுத் தூக்கிக்கிட்டுப் போய் குடில் திண்ணையில படுக்கிற பொடியனுக்குப் பக்கத்துல உடல வளத்தாட்டினம். அது சின்னப் புள்ள தானே… அதுக்கு விளங்கல்ல மச்சான். அந்தப் புள்ளைகளைப் பாக்கக்கொள செரியான துக்கம் வந்திச்சுடா. தண்ணி வேற அடிச்சிருந்த. ஒரு சாதியாப் பெய்த்து. நான் டக்கென்டு வெளிய வந்து ஆட்டோக்குப் பக்கத்துல நின்டுட்டன். அந்தப்புள்ளைகள் அழுறத்தையெல்லாம் நமக்குப் பாக்கேலா மச்சான்.

அந்தப் புள்ள, கிழவிக்கிட்ட ‘அம்மாக்கு என்னம்மா? அம்மாக்கு என்னம்மா?’ன்டு கேட்டுக்கிட்டே இரிக்கிற சத்தம் எனக்குக் கேட்டுச்சி. கிழவி, ’கொஞ்சம் இரி மனே வாறன்’ என்டு சொல்லிப்போட்டு வெளிய வந்தாள். கிட்டவந்து திடீர்ன்டு கால்ல விழுந்து காலைப் புடிச்சிக்கிட்டாள். இந்த டைம்ல நான் செஞ்ச உதவிக்காக்கும் என்டு நினைச்சிக்கிட்டு ‘செரி செரி எழும்புகா… கால்லயெல்லாம் விழாதன்டு சொல்லிருக்கன்லுவா? எழும்பு’ என்டு தூக்கி மனுசிய நிப்பாட்டினன்.

’சுணங்குதுகா… நான் போகணும்…’ இழுத்தன்… குழறிக்கிட்டே கிழவி ‘எனக்கிட்டக் காசில்ல மனே’ன்டு திருப்பியும் கால்ல விழுந்துட்டாள்றா ஓப்பாய். எனக்கி அடிச்ச வெறியெல்லாம் இறங்கிட்டு மச்சான். ’என்ன கிழவி நீ இப்புடிச் சொல்ற? உசுரப் பணயம் வச்சு வந்திருக்கன் நான்…’

கிழவி சொன்னாள், ‘இந்தப் புள்ளைகள்ற அப்பாக்காரன் மேசன் வேல செய்ற பொடியன் மனே. ஈபிக்காரனுகளோட கதைச்சயாமென்டு இயக்கக்காரனுகள் கொண்டு போய் பங்கர்ல போட்டுட்டானுகள் மனே. எப்புடியும் பொஞ்சாதிட சாவுக்கு வெளிய விடுவானுகள். அவன் வந்தவுடனே உன்ட காசைக் கொண்டு வந்து தந்துடுவன் ராசா… என்ன உன்ட தாயா நினைச்சுக்க மகனே.’

செரியான வெம்பு மணல் மச்சான் அது. ஆட்டோவைத் திருப்பி எடுக்க நான் பட்டபாடு அல்லாதான் அறிவான். மூச்சுப் பிடிச்சுக் கொஞ்ச தூரம் தள்ளின மச்சான். மெயினுக்கு ஆட்டோவைக் கொண்டு வந்ததுக்குப் பிறகுதான் ஒரு யோசின வந்திச்சு. ஆட்டோவ அப்புடியே போட்டுட்டு மணலுக்குள்ள நடந்து போனன். அந்தப் பிள்ளைகள் ‘அம்மா… அம்மா’ன்டு கத்துற சத்தம் கேட்டுச்சி. பொடியனும் எழும்பிட்டான் போல. குடிலுக்குக் கிட்டப் போனவுடனே கிழவி குழறிக்கிட்டிருந்தவள் என்னப் பாத்தாள் மச்சான். அந்த இடத்துல நீ இருந்திருந்தா என்ன மச்சான் சொல்லிருப்பாய்?

அவள் தந்த காசில சதாட வீட்ட கால் அடிச்சத்துல மிச்சம் எண்பது ரூவாயோ என்னயோ இருந்திச்சி மச்சான். ‘இந்தாகா… இத வச்சிக்க’ன்டு கிழவிட கைக்குள்ள பொத்தி வச்சான்டா அலி. கைய விரிச்சுக் காசைப் பாத்துட்டு ‘என்ட மகனே…’ன்டு கத்தினாள் ஒரு கத்துவ அந்தக் கிழவி. இப்பயும் அலிட காதுல அழுகுரல் கேட்டுக்கிட்டே இரிக்கி மச்சான். அலி அப்புடியே விருட்டென்டு நடந்து வந்துட்டான் மச்சான்.

******

பொலிந்து விளைந்த நெற்செல்வத்தையெல்லாம் கண்முன்னே பறிகொடுத்துவிட்டு வந்த நாளிலிருந்து அலியின் தந்தை பித்துப்பிடித்தவர் போலானார். அதன் பின்னர், ஓட்டமாவடியிலிருந்து யாருமே தங்களது நெற்காணிகளுக்குச் செல்வதற்குப் புலிகள் அனுமதிக்கவில்லை. அவர்களது பிரதான ஜீவனோபாயமான விவசாயம் பாழ்பட்டது. தனது தொழில்கள் இரண்டுமே சிதைந்து போனதால் கடன் தொல்லைகளால் அலைக்கழிக்கப்பட்ட அலியின் தந்தை தனக்குச் சொந்தமான காணிகள், வாகனங்கள், சொத்துக்களையெல்லாம் விற்றுப் பிழைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். குன்று போன்ற சொத்து குந்தியிருந்து தின்ன மாண்டது. யாரோ ஒரு சோதிடனின் பேச்சைக் கேட்டுத் தனக்குச் சொந்தமான வேறொரு காணியில் புதையல் இருப்பதாக நம்பி கடைசியாகத் தன்னிடமிருந்த கடையொன்றை விற்றுப் புதையல் தேடும் முயற்சியில் அந்தப் பணத்தையும் தொலைத்தார்.

கொஞ்ச நாட்களின் பின் இனி முஸ்லிம்கள் விவசாயத்தில் ஈடுபடவே முடியாதென்ற எண்ணம் அவர்களின் மனதில் மிகைத்த போது தங்களது பணத்தேவைகளுக்காக அவர்களது வயற்காணிகளை விற்கத் தொடங்கினார்கள். தற்போது ஏக்கருக்குப் பத்து லட்சம் கொடுத்துக் கூட வாங்கிவிட முடியாத அந்த செழுமையான நிலத்தை ஏக்கருக்கு எட்டாயிரமோ பத்தாயிரமோ கொடுத்து தமிழர்களில் சிலர் வாங்கினார்கள். இந்தப் பேரம் விடுதலைப் புலிகள் சிலரின் மத்தியஸ்தத்துடனே நடந்தது. ஊரிலே வேறு தொழில் முகாந்திரங்கள் இருந்தவர்களைத் தவிர ஏனையவர்களில் பெரும்பாலானோர் விற்றனர். தம்பிமுத்து வட்டவிதானை அலியின் தந்தையிடம் தூது வந்தார். புலிகளின் வார்த்தைகளை அவரது வாயினால் பேசினார். ‘இப்ப விற்றாக் காசாவது கிடைக்கும் காக்கா. இருக்கிற நிலைமைக்கு இன்னும் கொஞ்சக் காலம் போனா அதுவும் கிடைக்காமப் போகலாம்.’

புலிபாஞ்ச கல்லில் இருந்த புலிகளின் அரசியல் பணிமனையில் வைத்து அலியின் பரம்பரைச் சொத்து ஏக்கருக்கு எட்டாயிரம் என்று சீனித்தம்பி நொத்தாரிசால் உறுதியெழுதப்பட்டது. செங்கலடியைச் சேர்ந்த முதலாளி ஒருவருக்குப் புலிகள் அதனைக் கைமாற்றினர். அதில் கிடைத்த நாற்பதாயிரம் ரூபாய் பணத்தோடு கொழும்பைச் சேர்ந்த வெளிநாட்டு முகவர் ஒருவரோடு இணைந்து மத்திய கிழக்குக்கு ஆட்களை அனுப்பும் சப் ஏஜென்ஸியாக அவர் மாறினார். அலி ஓடாவித் தொழில் பழகினான்.

நான் என் ஜி ஓவில் பணியாற்றிய நாட்களில் பஸ்ஸுக்காகக் காத்து நின்றபோது, அலியைச் சந்தித்தேன். ஏறாவூரிலுள்ள மரக்காலை ஒன்றில் வேலை செய்வதாகவும் அவனது தந்தை ஆயுர்வேத வைத்தியராக மாறிவிட்டதாகவும் சொன்னான். அதன் பின்பு சில நாட்கள் ஆட்டோ ஓட்டினான்.

******

ல்குடா தாண்டிப் பேத்தாழையை நெருங்கிட்டன். அவடத்துல ஒரு சவக்காலை இருக்கெலுவா? அவடத்துக்குள்ளால திடீரென்டு பாஞ்சி துவக்கைக் காட்டினான் ஒருத்தன். நெஞ்சுக்குள்ள சிலீர் என்டுச்சு. அம்புஸ் படுத்த ஆர்மிக்காரனுகள்ன்டு தான் முதல் நினைச்சன். இல்ல, அது புலி! சடார்ன்டு பிரேக் அடிச்சு ஆட்டோவ நிப்பாட்டி இறங்கிட்டன். துவக்கோட வந்து என்ட கையை முறுக்கிப் பின்னால பிடிச்சிக்கிட்டான் ஒருத்தன். இன்னொருத்தன் உடம்பு ஃபுல்லா சோதனை போட்டான்.

‘எங்கருந்துடா வாராய்?’

‘கல்மடுவுக்கு ஒரு சவம் ஏத்தி வந்தன் அண்ண. நான் ஆட்டோ ஓட்ற!’

‘எந்த இடம்டா நீ?’

‘ஓட்டமாவடி.’

ஆளுக்காள் பாத்தானுகள். ஒருத்தன் கண்ணைக் காட்டுறது எனக்கு அந்த இருட்டுக்குள்ளயே விளங்கிச்சு. ஆஹா, அலிக்கு வேலைய உடப்போறானுகள்ன்டு எனக்கு விளங்கிப்பெய்த்து. ‘எனக்கு ரவியண்ணனை எல்லாம் தெரியும் அவருக்கிட்டக் கேட்டுப் பாருங்க’ன்டு சொன்னன். அத அவனுகள் காதுலயே வாங்கல. ‘ஆட்டோவ சார்ட் பண்ணாமத் தள்ளிக்கிட்டு நடடா, இதால!’ன்டு சொன்னான் ஒருத்தன். ஆட்டோவத் தள்ளிக்கிட்டு நடக்கன். உடம்பு அப்புடியே வேர்த்துத் தொப்பலாகிட்டு. மூளை கடுமையா வேல செஞ்சிச்சு. காசு பணம் முக்கியமில்ல மச்சான், உசுருதான் முக்கியம். அவனுகள் ஆறு பேரு இருந்தானுகள். ரெண்டு பேரு எனக்கு முன்னால போனானுகள். இன்னும் ரெண்டு பேரு என்னோட சேந்து ஆட்டோவைத் தள்றானுகள். மத்த ரெண்டு பேரும் பின்னால.

மெயின் ரோட்ல இருந்து உள் ரோட்டுக்கு இறங்கிப் போனா, மறா… அலியை யாராலயும் காப்பாத்த ஏலான்டு விளங்கிடிச்சு. எங்கருந்துதான் அல்லாஹ் எனக்கு அவ்வளவு தைரியத்தைக் குடுத்தானோ தெரியா மச்சான். நல்ல பிலமாப் புடிச்சு ஆட்டோவத் தள்ளிவிட்டன். தடார்ன்டு போய்ப் பிரண்டு விழுந்திச்சு. அதோட சேத்து மூனு பேரு விழுந்தானுகள். சவக்காலைக்குள்ளால எடுத்துப் புடிச்சன் பாரு ஓட்டம். காடுகந்து முறிஞ்ச ஓட்டம். ஓடத்தொடங்கின கொஞ்ச நேரத்துக்குள்ளயே பளீர்ன்டு காதுக்குள்ளால கூவினிச்சு ஒரு வெடில். நான் ஒன்டையும் பாக்கல. வாரது வரட்டும்ன்டு ஓடினன். சவக்காலைத் தொங்கல் மரத்தைத் தாண்டக்கொள மரத்துக்குப் பின்னால இருந்து மளார்ன்டு விழுந்திச்சு முகத்துல ஒரு அடி. மல்லாக்க மறையக் கொண்டுபோய் விழுந்தன். படபடபடன்டு கொஞ்ச நேரத்து வெடில். அலி புத்தியாத் தலையை சவக்கால மணலுக்குள்ள புதைக்கிட்டு அப்படியே அம்புஸாகிட்டான். அது யாரென்டு பாத்தா, அம்புஸ் படுத்த ஆமிக்காரனுகள் மச்சான். ஒரு பதினைஞ்சு பேரிருக்கும். ஃபுல் பிக்கெட்.

ஆர்மிட வெடில் சத்தத்தோட, அலியைத் திரத்தி வந்த புலியெல்லாம் பதுங்கிட்டானுகள். அப்புடியே அலிட கை ரெண்டையும் கட்டி ஹார்பர் கேம்ப்புக்குத் தூக்கிட்டு போனானுகள் ஆர்மிக்காரனுகள். அலிட முகமெல்லாம் வீங்கி ரெத்த வாறு. கொண்டுபோய் அள்ளி எறிஞ்சு போட்டு முகத்துல தண்ணி ஊத்தி… மளமளன்டு அடிச்சானுகள் கொஞ்ச நேரத்து அடி. அவனுகள் என்னைப் புலின்டு நினைச்சிட்டானுகள்றா ஓப்பாய். அதுக்குப் பிறகு ஈபிக்காரனுகள், நான் போகக்கொள நின்ட ஆமிக்காரனுகள் எல்லாம் வந்து விசாரிச்சுப் போட்டு அடுத்த நாள்தான் விட்டானுகள். அப்புடியே வந்து வாழைச்சேனை வார்ட்டுல படுத்துட்டான் அலி. அவ்வளவு அடியும் காயமும். மூனு நாள் கழிச்சுத்தான் வீட்டயே போனன் என்டாப் பார்த்துக்க.

வீட்ட போய் ரெண்டு நாள் நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு அதுக்குப் பிறகுதான் அஸீஸ் முதலாளிக்கிட்டப் போறன். யாரு அஸீஸ்? ஆ… அவரு தான்… நம்மட ஆட்டோ ஓனர். விசயத்தைச் சொன்னன். அதுக்குப் பிறகுதான் கேஸ் பாரமாகின.

‘டேய்… ஆட்டோவக் கொண்டுபோய் எங்கயோ வித்துத் தின்டுட்டு இப்ப கதையாடா சொல்றாய்?’ன்டு கேட்டான் மச்சான். அது மட்டுமில்லாம அப்படியே பொலிஸ்ல கொண்டுபோய் இறுக்கி விட்டுட்டான். பொலிஸ்ல வச்சும் நாலஞ்சு அடி. அலி இதுக்கெல்லாம் பயப்புட்ற ஆளா?

‘மசிரு அடி அடிக்கிறான் நீங்க… சந்தேகம்டா ஹார்பர்ல இருக்கிற ஆர்மிக்காரனுகளுக்கிட்டக் கேட்டுப் பாருங்க’ன்டு தைரியமாச் சொன்னன்.

‘இவன் குடிகார நாய்… எங்கயோ போய் ஆட்டோவ வச்சிக் குடிச்சிட்டு வந்திருப்பான் சேர்… இப்ப பொய் சொல்றான்… என்ட ஆட்டோவத் தரணும் இல்லாட்டிக் காசைத் தரணும்…’ என்டு சொல்லிக்கிடிருக்கான் மச்சான் இவன். கடைசில அந்த ஆர்மிக்காரக் கெப்டன் வந்து விசயத்தைச் சொல்லித்தான் நான் பொலிஸ்ல இருந்து கழன்ட. காசுகள் வந்து சேர்ந்தா அவன்ட காசை சொத்தையில விட்டெறிவான் மச்சான் இந்த அலி. அலியைப் பத்தித் தெரியா இவகளுக்கு. தெரியாத பு***மாக்கள்தான் அலி ஆட்டோவக் களவெடுத்து வித்தன்டு சொல்லிக்கிட்டுத் திரியிறானுகள்.

மச்சான், காசிருக்காடா? இருந்தா ஒரு பிளேன் டீயும் சிகரெட்டும் வாங்கித்தாவன்.

********

ல குரல் தன்மை இல்லாத ஒரு படைப்பு இது. அலியினுடைய குரலாக வருவதும் நீதான். கதை சொல்லியாக வருவதும் நீதான். எழுத்தாளத் திணிப்பும் அதிகாரமும் கதையுடைய ஒரு பக்கத்தை மட்டும் தான் காட்டுகின்றது. குடிகாரனாக இருந்தாலும் அலியை நல்லவன் என்று காட்டுவதற்கான முயற்சிதான் கதை முழுக்கத் தெரிகிறது. நான் கேள்விப்பட்ட வரைக்கும் அலிக்கும் புலிகளுக்கும் தொடர்பு இருந்ததாகவும், புலிகளுக்கு ஆட்டோ தேவைப்பட்டதால் அதைக் கொடுத்துவிட்டு புலிகளிடம் இருந்து அலி காசு வாங்கினதாகவும் தான் தெரிகிறது. புலிகளின் தரப்பில் இருந்து யாரும் இந்தக் கதையில் பேசவே இல்லை.

வாசித்துவிட்டு மம்மூஸி சொன்னான்.

’அலியுடைய கதை என்ற பேரால் நீ உன்னுடய கதையாடல்களை இதில் சாதித்திருக்கிறாய். அது மட்டுமில்லாமல் அலியின் கதை என்று சொல்லிவிட்டு அலியின் வாப்பாவின் கதையெல்லாம் வருது.’

எனக்குப் பற்றியெரிந்துகொண்டு வந்தது. ‘இஞ்சப் பாரு மம்மூஸி… உன்ட பின் நவீனத்துவ விமரிசன மசித்தையெல்லாம் எனக்கிட்டக் காட்டாத… அது அலிட வாப்பாட கதையில்ல மம்மூஸி… ’வாப்பாக்கள்ற’ கதை. எங்கட வாப்பாக்கள்ற கதை. எங்கட வாப்பாக்கள் இல்லாத இடத்துல் அவங்கட கதையை நாங்கதானே சொல்லணும்?’

சில நாட்களிலேயே ‘புனைவுகளினூடாக வெளிப்படும் யதார்த்தமானது, கட்டமைக்கப்படும் வரலாற்றுப் பொய்களோடு உடன்படும் புள்ளியைத் தான் பின்நவீனத்துவக் கோட்பாட்டாளரான …. (ஏதோ ஒரு வாயில் நுழையாத ஐரோப்பியப் பெயர்) எழுத்தாளனின் வன்முறை என வரையறுக்கின்றார்…’ எனத் தொடங்கும் விமர்சனத்தை எனது சிறுகதைக்கு எழுதியிருந்தான் மம்மூஸி. கதையை விட மூன்று பக்கங்கள் அதிகமாக இருந்தது அந்த விமர்சனம்.

************

 

http://marutthodi.com/article.php?category=fiction&post=47

 

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இனப்பிரச்சினை என்பதே இல்லை, பொருளாதார பிரச்சினைதான் இருக்கு என சொல்வதனை கேட்டு  எல்லோரும் நம்புகிறார்கள், ஆனால் ஒரு சிலர் (நீங்கள் உட்பட) மட்டும் நம்ப மறுக்கிறீர்கள், ஆகையால் நீங்கள்தான் மாறவேண்டும்😁.
    • அது வேற ஒன்றுமில்லை இந்த இரண்டு தரப்பும் குளிர்காய நாங்கள் சாக வேண்டியிருந்தது, அதனால இந்த இரண்டு தரப்பினையும் கோர்த்டுவிடுவம் என்று ஒரு முயற்சிதான்.😁
    • இந்திய மீனவர்கள் செய்வது திருட்டு , திருட்டுக்கு எப்படி நட்டஈடு கோருவது?  திருட்டுக்கு தண்டனை அடி உதை , சிறை,பறிமுதல்தான். மஹிந்த ஆட்சிக்காலத்தில் சுப்பிரமணி சுவாமி கொடுத்த ஐடியாவில் படகுகளை பறிமுதல் செய்து இலங்கை மீனவர்களுக்கு ஏலம் விடுவது,கடற்படை பாவனைக்கு வழங்குவது, கரைகளில் நிறுத்தி வைத்து ஒன்றுக்கும் உதவாமல் பண்ணுவது என்று அது ஒரு சிறந்த திட்டம்தான். இந்திய இழுவைப்படகுகள் வலைகள்  இலங்கை பெறுமதியில் கோடிகளில் பெறுமதியானவை, ஓரிரு லட்சம் பெறுமதியான மீனை திருட வந்து குத்தகைக்கு எடுத்துவரும் கோடி பெறுமதியான படகை இழப்பது மீனவர்களுக்கும், ஆபத்து படகின் உரிமையாளர்களுக்கும் ஆபத்து & பெரு நஷ்டம். பின்னாளில் இந்திய அரசின் அழுத்தத்தால் அது கைவிடப்பட்டது. அது ஒருகாலமும் சாத்தியம் இல்லை, யுத்தம் நடக்கும் ஒருநாட்டுக்குள் நுழைந்து திருட்டில் ஈடுபடும்போது அந்நாட்டு படைகளால் கொல்லப்பட்டால் அதற்கு இருநாட்டு அரசுகளும் எந்த பொறுப்பும் ஏற்காது. எந்த நட்ட ஈடும் தராது. யுத்த பூமிக்குள் அத்துமீறி நுழைந்து உயிரைவிட்டுவிட்டு, செத்துபோனோம் காசு தாருங்கள் என்றால் எந்த தெய்வம்கூட அவர்களுக்கு உதவாது. இலங்கை மீனவர்களை  சிங்களவன் கொத்தி குதறி மீன்பிடியை முற்றாக தடை செய்த காலத்தில் அந்த இடைவெளியை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் இலங்கை பரப்பில் வந்து மீனள்ளி போவது ஒருவகையில் தண்டிக்கப்படவேண்டிய இரக்கமற்ற நியாயம்தான். சில தமிழக செய்தி தளங்களில், இலங்கை அகதிகளுக்கு எப்படியெல்லாம் நாங்கள் உதவி செய்தோம், அவர்கள் நன்றிகெட்ட தனமாக இப்போது இலங்கை கடற்படைக்கு ஆதரவாக நின்று எம்மை கொல்கிறார்கள், கைது செய்கிறார்கள் என்று பின்னூட்டம் இடுகிறார்கள். அதாவது பசிக்கு சோறுபோட்டால், அவனை பட்டினிபோட்டு கொல்லவும் நமக்கு உரிமை இருக்கு என்கிறார்கள். பட்டினி போட்டு கொல்வதை நீங்கள் நியாயப்படுத்தினால் அப்புறம் ஏன் அவன் பசிக்கு சோறு போட்டதை பெருமையாக சொல்கிறீர்கள் என்பதை அவர்களிடம் கேட்டுத்தான் தெளிவு பெறவேண்டும்.
    • தமிழர்களுக்குள் இருக்கும் மொழி சார்பான புரிதல் சிங்களவர்களுக்குள் இல்லை.  எந்த விடயமாகினும் தமிழர்கள் முக்கித்தக்கி சிங்களத்தில் கதைக்க முயற்சிப்பார்கள். அவர்கள் அப்படியல்ல.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.