Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரேயொரு வைத்தியரும் பல்லாயிரம் கர்ப்பிணிகளும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒரேயொரு வைத்தியரும் பல்லாயிரம் கர்ப்பிணிகளும்

மொஹமட் பாதுஷா / 2019 ஜூன் 16 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 12:29 Comments - 0

image_fdf824e4c3.jpgகுருணாகலைச் சேர்ந்த வைத்தியர் மொஹமட் சாபிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதை அடுத்து, அவர் தனிப்பட்ட ரீதியில் விமர்சனங்களுக்கும் விசாரணைகளுக்கும் முகம்கொடுக்க நேரிட்டுள்ளமை ஒருபுறமிருக்க, மறுபுறுத்தில், மருத்துவத் தொழில் மீதான வேறுபல விமர்சனங்களும் புதுவகையான நம்பிக்கையீனங்களும் தோன்றியுள்ளதைக் கூர்ந்து கவனிப்போரால் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.   

உலகெங்கும் வாழும் மனிதர்கள், கண்கண்ட தெய்வங்களாக மருத்துவர்களைப் பார்க்கின்றனர். தமது உயிரைக் காப்பாற்றுவதற்காக, ஆன்மீகத்துக்கு அப்பாற்பட்டதாக மேற்கொள்ளப்படும் சேவையாக, மருத்துவத்தைக் காண்கின்றனர்.   

இதன் காரணத்தாலேயேதான் பெருமளவுக்குத் தங்களது உளவியல், உடலியல் குறைநிறைகளை மறைக்காது, வைத்தியர்களிடம் முழுமையாகத் தங்களை ஒப்படைக்கின்றனர். இவை வைத்தியத்துறைக்கு மட்டுமேயுரிய சிறப்பம்சங்களாகும்.   

எதைச் செய்தாலும், வைத்தியர்கள் நோயாளிகளின் நலனுக்காகவே செய்கின்றனர் என்ற நம்பிக்கை, வைத்தியத்தை நாடிச் செல்லும், கிட்டத்தட்ட எல்லா நோயாளிகளிடமும் இருப்பதுண்டு; இது தவிர்க்க முடியாததும் கூட.   

அதுபோலவே, மற்றைய தொழில்களைவிட, மருத்துவத் தொழில்வாண்மை என்பது, வேறுபட்டதாகவே எப்போதும் நோக்கப்படுகின்றது. மனித உயிரோடு சம்பந்தப்பட்ட, ஆத்மார்த்தமான ஈடுபாடு கொண்ட ஒரு தொழிலாகவே, மருத்துவத்துறை காணப்படுகின்றது.   

அந்த வகையில், இலட்சக்கணக்கான வைத்தியர்கள், இந்த நாட்டு மக்களுக்கு உயிர் அச்சுறுத்தல்மிக்க சூழலிலும், இயற்கை அனர்த்தங்களின் போதும் கூட, அர்ப்பணிப்புமிக்க சேவையை வழங்கியுள்ளனர் என்பதை மறுப்பதற்கில்லை.   ஓரிரு வைத்தியர்களின் தவறுகள், குற்றங்களுக்காக ஒட்டுமொத்த மருத்துவர்களையும் அவர்களது சேவைகளையும் கொச்சைப்படுத்த முடியாது.   

இந்த நிலையில்தான், குருணாகலையைச் சேர்ந்த வைத்தியரான மொஹமட் சாபி என்பவர், சிங்களப் பெண்களுக்குச் சத்திர சிகிச்சை மூலம், பிரசவத்தை மேற்கொண்டதாகவும் இதன்போது 4,000 பெண்களுக்குக் கருத்தடை செய்ததாகவும் சிங்களப் பத்திரிகையொன்று, அண்மையில் செய்தி வெளியிட்டது. இது தொடர்பாகப் பொலிஸார் விசாரணை செய்து வருவதாக, இச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.   

உடனடியாக இது பற்றி அறிவித்த பொலிஸ் தரப்பு, அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போன்று, கருத்தடை சம்பந்தமாக எவ்வித விசாரணையும் இடம்பெறவில்லை என்றும், வைத்தியர் ஒருவர் முறைகேடாகப் பணம் சம்பாதித்தது பற்றிய விசாரணையே இடம்பெற்று வருவதாகவும் கூறியது.   

இவ்வறிக்கை வெளியாகிய சில தினங்களுக்குள், குருணாகல் வைத்தியசாலையின் வைத்திய அதிகாரியான மொஹமட் ஷாபி, பாதுகாப்புத் தரப்பினரால் கைது செய்யப்பட்டார். குறுகிய காலத்துக்குள் முறைகேடான அடிப்படையில் அதிக சொத்துச் சேர்த்தார் என்ற சந்தேகத்தின் பெயரில் ஆரம்பத்தில் கைது செய்யப்பட்டார்.   

இந்தத் தோரணையில் கைது செய்யப்பட்ட முஸ்லிம் வைத்தியரான அவர் மீது, மேலே குறிப்பிடப்பட்ட சிங்களப் பெண்களுக்குக் கருத்தடை செய்தார் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. ஒருவரைக் கைது செய்து வைத்துக் கொண்டு, “இவர் மீது முறைப்பாடுகள் இருந்தால், பதிவு செய்யுங்கள்” என்று வெளியிடப்பட்ட அறிவிப்பைப் பலரும் வினோதமாகவே நோக்கினர்.  உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர், முஸ்லிம்களை அடக்கி, ஒடுக்குவதற்கான கடும்போக்குச் செயற்பாடுகள் பரவலாக இடம்பெற்று வருகின்றன.   

குருணாகல், மினுவாங்கொடை பிரதேசங்களில் முஸ்லிம்களின் சொத்துகள் எரிக்கப்பட்டதுடன், 25 இற்கு மேற்பட்ட பள்ளிவாசல்கள் தாக்கி அழிக்கப்பட்டன. அத்துடன், அமைச்சராகப் பதவி வகித்த ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக, நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்டதுடன், அதை வெற்றிபெறச் செய்வது, இலேசுபட்ட காரியமல்ல என்பது தெரியவந்ததும், ஒரு பிக்குவை உண்ணாவிரதம் இருக்கச் செய்து, முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பதவியிழக்கச் செய்யும் நகர்வை இனவாத சக்திகள் மேற்கொண்டன.   

முஸ்லிம்களின் ஆதரவைக் காலாகாலமாகப் பெற்றுவரும் பெருந்தேசியக் கட்சிகள், யாருமே முஸ்லிம்களுக்காகப் பரிந்து பேசத் தயாரில்லாத ஒரு சூழல் உருவாக்கப்பட்டது.   

இதற்கிடையிலேயே, வைத்தியர் சாபியும் கைது செய்யப்பட்டமையும் சர்வசாதாரணமாக ஒருவரது புத்திக்கு நம்ப முடியாத விதத்தில் 4,000 பெண்களுக்குக் கருத்தடை செய்தார் என்று மேலோட்டமாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டமையும் முஸ்லிம்களை நோக்கி மேற்கொள்ளப்படும் இன்னுமொரு நெருக்குவாரமா? என்ற நியாயமான சந்தேகத்தை முஸ்லிம்கள் மத்தியில் ஏற்படுத்தி இருந்ததை மறுப்பதற்கில்லை.   

வைத்தியர்கள் அர்ப்பணிப்பு மிக்கவர்கள் என்றாலும், உயிரைக் காப்பதற்காக போராடுபவர்கள் என்றாலும் மருத்துவத் துறையிலோ, மருத்துவர்களாலோ தவறுகள், குற்றங்கள் இடம்பெறவில்லை என்று யாரும் சொல்வதற்கில்லை. மருத்துவர்கள் எல்லோருமே, தொழில்தர்மத்தைக் காப்பாற்றுபவர்கள் என்று வாதிட முடியாத யதார்த்தமும் காணப்படுகின்றது.   

குறிப்பிட்டுச் சொன்னால், இலங்கையில் பல மருத்துவத் தவறுகள் இடம்பெறுகின்றன. வைத்தியசாலையில் சரியான கவனிப்பின்மையால் இறந்தவர்கள் உள்ளனர்; தையல் போடுகின்ற போது, பல தவறுகள் இடம்பெறுகின்றன; நோய் கண்டறிதல் குறைபாட்டால் நோய் தீவிரமடைகின்றது; உரிய நேரத்தில் சிகிச்சை வழங்காமையால், பல இழப்புகளைக் கண்டிருக்கின்றோம்.   

இன்னும், வைத்தியர்கள் பலர், இன்று தமது தொழிலைச் சேவையாகச் செய்யாமல், பணத்துக்காகச் செய்ய முற்படுவதால், ஒருவித வியாபாரச் சுழிக்குள் மருத்துவம் சிக்கிக் கொண்டுள்ளது. இதுதவிர, பாரிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட வைத்தியர்களையும் இலங்கை வரலாறு கண்டிருக்கின்றது.   

எனவே, எடுத்த எடுப்பில் டொக்டர் ஷாபி, ஒரு நிரபராதியாகவேதான் இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட முடியாது. ஆனாலும் அவர் கைது செய்யப்பட்ட விதமும் அவர் மீதான குற்றச்சாட்டுகளும் அவரது பின்புலம் பற்றி அறியக் கிடைக்கின்ற தகவல்களும் பல சந்தேகங்களை எழுப்புகின்றன.   

எல்லாவற்றுக்கும் மேலாக, சிசேரியனுக்கும் பிள்ளைப் பேற்றுக்கும் பொறுப்பானவர் ஒரு மகப்பேற்று மருத்துவர் (வி.ஓ.ஜி) என்றிருக்கையில், ஒரு வைத்திய அதிகாரியால், இத்தனை ஆயிரம் பேருக்குக் கருத்தடை செய்திருக்க முடியுமா என்ற கேள்விதான் மிகப் பெரியது.   

இலங்கையில், வைத்தியர்கள் மட்டும் சொத்துச் சேகரிக்கவில்லை. சட்ட விரோதமாகச் சொத்தைக் குவித்தவர்கள் வைத்தியர்கள் மட்டுமல்லர். பணக்கார வைத்தியர்கள் என்று பார்த்தால், அவ்வகுதிக்குள் ஷாபி மட்டுமே உள்ளடங்குவார் என்று சொல்வதற்கில்லை.  பல வைத்தியர்கள் தமது தொழில் தர்மத்தை மீறி, தனியார் மருத்துவமனைகளை நிறுவிப் பணம் உழைக்கின்றனர். வைத்தியசாலையை விடத் தமது சொந்த கிளினிக்குக்கு முன்னுரிமை அளிக்கின்றனர்.   

அதுமட்டுமன்றி, இலங்கையில் ஆயிரக்கணக்கான போலி வைத்தியர்கள் இருப்பதாகச் சிங்கள அரசியல்வாதிகளே சொல்லக் கேட்டிருக்கின்றோம். அத்துடன், சட்ட விரோத கருக்கலைப்பு மய்யங்கள், மருத்துவ சேவை நிலையங்கள் என்ற பெயரில் முறை தவறிய சேவைகளை வழங்கும் ஏகப்பட்ட மய்யங்கள் இருப்பதாகச் சொல்லப்படுகின்றது. இவ்வாறானவர்களைக் கைது செய்வதில், சட்டத்துக்கு இல்லாத அக்கறையை, டொக்டர் ஷாபி விடயத்தில் காண முடிகின்றது.   

உண்மையில், ஒரு சில சிங்கள வைத்தியர்கள் பெண்களின் பலோப்பியன் குழாயை நசித்துப் பிடிப்பதன் மூலம், கருத்தடையை ஏற்படுத்தலாம் என்று கூறிய தகவல்கள், சமூக வலைத்தளங்களில் பரவியிருந்தன.   
ஆனால், உண்மையில் ஒரு சத்திரசிகிச்சை நடைபெறும் போது, குறைந்தது ஆறு மருத்துவப் பணியாளர்கள் அவ்வறையில் இருப்பார்கள். அவர்களில் சிங்களவர்களே அதிகமிருந்திருப்பர். அதேபோல், ஒரு கருத்தடையைச் செய்ய, அண்ணளவாக 20 நிமிடம் தேவைப்படும் என்று கூறப்படுகின்றது.   

அப்படியாயின், அவர்களது கண்களில் எல்லாம் மண்ணைத் தூவிவிட்டு, ஒரு வைத்தியரால் அதுவும் நாலாயிரம் சிங்களப் பெண்களுக்கு, ஒரு சிறுபான்மையின வைத்தியரால் கருத்தடை செய்வது என்பது, இலகுவான விடயமா என்ற கேள்வியை, சிங்கள முற்போக்காளர்கள் இப்போது முன்வைப்பதைக் காண முடிகின்றது. இதேவேளை, கைது செய்யப்பட்டுள்ள மொஹமட் ஷாபி, மகப்பேறு தொடர்பான விடயங்களில் கைதேர்ந்தவர் என்றாலும், அவர் ஒரு பெண் நோயியல் மகப்பேற்று நிபுணரல்ல என்று பின்னர் சொல்லப்படுகின்றது.  அது உண்மையாக இருக்குமானால், பிரசவம், சத்திரசிகிச்சை நடவடிக்கைகளுக்குப் பொறுப்பானவர் என்ற அடிப்படையில், அந்த வைத்தியசாலையின் வி.ஓ.ஜி நிபுணரே, இந்தக் கருத்தடைக் குற்றச்சாட்டுக்களுக்குப் பொறுப்புக் கூற வேண்டியவராவர்.   

அந்த வகையில், இப்போது, ஷாபிக்கு எதிராக விசாரணை நடத்தப் போய், கிணறுவெட்டப் பூதம் கிளம்பும் அபாயம் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.   

வைத்தியர் ஷாபி, அரசியல் பின்னணியைக் கொண்டவர். வேறு வியாபாரங்களிலும் ஈடுபடுபவர் என்று சொல்லப்படுகின்றது. அத்துடன், வைத்தியசாலையில் ஒரு குறிப்பிட்ட வைத்தியருடன் முரண்பாடு உள்ளது என்பதும் சொத்துகள் கொள்வனவும் கடந்த தேர்தலில் போட்டியிட்டு பெருமளவிலான வாக்குகளைப் பெற்றிருந்தவர் என்ற விடயமும் அவர் மீது அபாண்டமான குற்றச்சாட்டுகளுக்கு இட்டுச் சென்றுள்ளதா, அல்லது ஒரு தவறு, ஒன்பது தவறாகப் பெருப்பிக்கப்பட்டதா என்பது கண்டறியப்பட வேண்டும்.   

முஸ்லிம்களின் சனத்தொகைப்பெருக்கம் அதிகம் எனத் தொடர்ச்சியாகக் கூறப்படுவதுடன், முஸ்லிம்கள், உணவுப் பொருள்களிலும் ஆடைகளிலும் கருத்தடை மாத்திரைகள், திரவங்களைப் பூசி விற்பனை செய்வதாகப் பல வருடங்களாகப் பொய்ப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, இம்முயற்சி மேற்கொள்ளப்படுகின்றதா என்பதைக் கண்டறிய வேண்டும்.   

4,000 பெண்களுக்குக் கருத்தடை செய்துள்ளதாக ஒரு செய்தி வெளியானால், அதற்கு ஆதாரம் இருக்க வேண்டும். ஆனால், இன்று வரை அத்தனை ஆயிரம் முறைப்பாடுகள் தாக்கல் செய்யப்படவில்லை. ஆரம்பத்தில், குறைந்தளவான முறைப்பாடுகளே தாக்கல் செய்யப்பட்டன.   

அதன்பிறகு, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும் என ஒரு முக்கிய அரசியல்வாதி கூறியதும், இத்தொகை திடீரென அதிகரித்தது. ஆனால், இன்னும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டவில்லை என்பது, ஏன் என்ற முஸ்லிம் சமூகத்திலுள்ள முற்போக்காளர்களின் கேள்விக்கு விடை தர வேண்டும்.   

வைத்தியர் ஷாபியோ, வேறு யாரோ இப்படிப்பட்ட ஒரு படுபாதகச் செயலை செய்திருந்தால், அதை முறைப்படி நிரூபித்து, கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதற்கு இருவேறுபட்ட கருத்துகள், நிலைப்பாடுகள் இல்லை.  

ஆனால், எந்தக் குற்றச்சாட்டும் சோடிக்கப்பட்டதாக, ஓர் இனத்தை நசுக்கும் நோக்கம் கொண்டதாக, அரசியல், இன்னபிற இலாபங்களைத் தேடுவதாக இருப்பது, நாட்டில் புதுவிதமான ‘பிரிவினைவாத நோய்க்கு’ வழிவகுக்கும் என்பதை மறந்து விடக் கூடாது.   

மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வகிபாகம்

ஒரு மருத்துவர், அவர் எந்தப் பின்னணியைச் சேர்ந்தவராக இருப்பினும் சம்பந்தப்பட்ட கர்ப்பிணிகளின் அனுமதியின்றியும் மருத்துவ விதிமுறைகளை மீறியும் கருத்தடை மேற்கொண்டிருப்பாராயின், அவர் மீது சட்டம் இரக்கம் காட்ட வேண்டியதில்லை.   

பல்லாயிரம் பேருக்கு தனியே, வைத்தியர் ஷாபியால் யாருடைய துணையும் இன்றி, கருத்தடை சத்திர சிகிச்சை மேற்கொள்வது, நடைமுறைச் சாத்தியமல்ல. அவ்வாறு நடந்திருந்தாலும், சாதாரண எம்.பி.பி.எஸ் வைத்தியரான ஷாபி அன்றி, அங்குள்ள மகப்பேற்று மருத்துவ நிபுணரே விடயதானத்துக்குப் பொறுப்புக் கூற கடமைப்பட்டவர் என்றும் சொல்லப்படுகின்றது.   

ஆனால், அவற்றையெல்லாம் தாண்டியே, அவர் மீது நூற்றுக்கணக்கானோர் முறைப்பாடுகளைத் தாக்கல் செய்துள்ளனர் என்பதும் கவனிப்புக்குரியது. எனவே, முறைப்பாடுகள் உண்மைக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்பதுடன், விசாரணைகள் நீதி நேர்மையுடன் எவ்வித அழுத்தங்களும் இன்றி மேற்கொள்ளப்படுவதும் இன்றியமையாதது ஆகும்.   

விசாரணையின் முடிவில், அவர் குற்றமிழைத்திருப்பின் அவருக்குரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதைப் போல, ஒருவேளை அவர் நிரபராதி என நிரூபணமானால், அவர் மீது அபாண்டங்களைச் சுமத்தியோருக்கு எதிராக, சட்டத்தை அமுல்படுத்தவும் தயங்கக் கூடாது.   

இவ்விவகாரத்தில், அரசாங்கம் முதன்மைப் பொறுப்பை வகிக்கின்றது; அரச மருத்துவ அதிகாரிகள் சங்கமும் தார்மீகப் பொறுப்பை கொண்டுள்ளது. 

சின்னச் சின்ன விடயங்களுக்காக எல்லாம் பெரும் போராட்டங்களை நடத்துகின்ற, நோயாளிகள் பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை தமது கோரிக்கைகள் நிறைவேற வேண்டும் என்ற கோதாவில் பணி நிறுத்தங்களை மேற்கொள்ளும் இச் சங்கம், தமது உறுப்பினரான ஷாபிக்கு ஆதரவாகக் குரல் கொடுக்க வேண்டும் என்பதில்லை.  மாறாக, ஆயிரக்கணக்கான வைத்தியர்களைக் கொண்ட ஒரு நிபுணத்துவ அமைப்பு என்ற அடிப்படையில், இவ்விவகாரத்தில் காத்திரமான வகிபாகத்தை எடுக்க வேண்டும்.   

அதனடிப்படையில், இவ்வாறான வைத்தியர் ஒருவரால் இத்தனை ஆயிரம் பேருக்கு கருத்தடை செய்வது, மருத்துவ ரீதியில் சாத்தியமா என்பதை மக்களுக்குத் தெளிவாக கூறுவதுடன், ஷாபி அவ்விதம் செயற்பட்டுள்ளாரா என்பதைத் துறைசார் அடிப்படையில் விசாரித்து, வெளிப்படுத்துவதில் முன்னிற்க வேண்டும். 

அதுமட்டுமன்றி, இலங்கையின் ஒட்டுமொத்த மருத்துவத்துறையின் முக்கிய கூறாகத் திகழும் மருத்துவர்களின் ஒழுக்கக் கோவை தொடர்பில், இன்னும் அதிக கவனத்தைச் செலுத்த வேண்டியுள்ளதாகவே தோன்றுகின்றது. வைத்தியத் தொழிலை ஏனைய தொழில்களைப் போல ஒப்பிட்டு நோக்குவது சிறந்ததல்ல; என்றாலும், சில விடயங்களை இலங்கை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மீளாய்வு செய்வது காலத்தின் அவசியம் எனலாம். 

குறிப்பாக, பல வைத்தியர்கள் அரச மருத்துவமனைகளை விட, தமது சொந்தக் கிளினிக் சிகிச்சை நிலையங்களுக்கு முன்னுரிமை அளிக்கின்றனர். அத்துடன், இதனை ஒரு சேவையாக அன்றி, பணம் உழைப்பதற்கான வியாபார நிலையமாகவே கருதுகின்றனர். இதனைச் சங்கம் ஒழுங்குபடுத்த வேண்டும். நாட்டில் உள்ள சட்ட விரோத, போலி மருத்துவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதுடன், சட்ட விரோதக் கருக்கலைப்பை மேற்கொள்ளும் ஏனைய வைத்தியர்களையும் கைது செய்ய வேண்டும். 

மிக முக்கியமாக, சில வைத்தியசாலைகளில், சில நேரங்களில் மகப்பேற்றுக்காக அனுமதிக்கப்படும் முஸ்லிம் பெண்கள், அங்கிருக்கின்ற மருத்துவப் பணியாளர்களால் மாற்றாந்தாய் மனப்பாங்குடன் நடத்தப்படுவதாக, அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் தகவல் பரிமாற்றப்படுகின்றது. எனவே, முஸ்லிம்கள், தமிழர்கள் வைத்திய சேவை நிலையங்களில் சரிசமமாக நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டிய தார்மீக பொறுப்பும் அரச வைத்திய அதிகாரிகளுக்கு இருக்கின்றது என்றால் மிகையில்லை.

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஒரேயொரு-வைத்தியரும்-பல்லாயிரம்-கர்ப்பிணிகளும்/91-234236

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.