Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிஞர், எழுத்தாளர், கலை - இலக்கிய சமூக அரசியல் செயற்பாட்டாளர் செங்கதிரோன் த.கோபாலகிருஷ்ணன் அவர்களுடனான ஓர் இலக்கிய நேர்காணல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞர், எழுத்தாளர், கலை - இலக்கிய சமூக அரசியல் செயற்பாட்டாளர் செங்கதிரோன் த.கோபாலகிருஷ்ணன் அவர்களுடனான ஓர் இலக்கிய நேர்காணல்.

======================

01) கேள்வி :- இலங்கை மற்றும் இலண்டன் தமிழ் இலக்கிய நிறுவகம் இணைந்து ஆக்க இலக்கியப் படைப்புகளுக்கு வழங்கும் விருது இம்முறை அதாவது "இரா.உதயணன் இலக்கிய விருது - 2018" தங்களது 'விளைச்சல்' எனும் குறுங்காவிய நூலுக்கு வழங்கப்பட்டுள்ளதே. இந்த "விளைச்சல்" குறுங்காவியம் பற்றிச் சுருக்கமாகக் கூற முடியுமா ?

பதில் :- "விளைச்சல்" குறுங்காவியம் கவிஞர் நீலாவணன் எழுதிய 'வேளாண்மை'க் காவியத்தின் தொடர்ச்சியாகும். கவிஞர் நீலாவணன் மட்டக்களப்பு மண்ணின் வாழ்க்கையை இலக்கியமாக்க எத்தனித்தார். அதன் விளைவே அன்னாரின் வேளாண்மைக் காவியம். ஈழத்தமிழ் பிரதேசங்களில் தனித்துவம் வாய்ந்ததான மட்டக்களப்பு மாநிலத்தின் பாரம்பரியங்களையும் அம்மக்களின் வஞ்சகமில்லா வாழ்க்கை முறையையும் வைத்துக் காவியம் ஒன்றினை வடிப்பதற்காகவே நீலாவணன் வேளாண்மையை விதைத்தார்.

கந்தப்போடி - பொன்னம்மா மற்றும் அழகிப்போடி - கனகம்மா தம்பதிகள் (கந்தப்போடியின் தங்கை), கந்தப்போடி - பொன்னம்மா தம்பதிகளின் புதல்வன் செல்லையா, அழகிப்போடி - கனகம்மா தம்பதிகளின் புதல்வி அன்னம்மா, வண்டிக்காரச் சாமித்தம்பி, பார்வதிப் பெத்தா (கந்தப்போடி, கனகம்மாவின் தாய்) ஆகிய கதாபாத்திரங்களை மையமாக வைத்து ஒரு கதைப்பின்னலை உருவாக்கி மட்டக்களப்பின் வாழ்வியலைப் பதிவுசெய்யும் வகையில் 'வேளாண்மை'க் காவியத்தை நீலாவணன் வடித்தார்.

"இக்காவியத்தின் மூலம் இயந்திர நாகரீகத்தால் கற்பழிந்து விடாத மட்டக்களப்பின் குமரியழகையும் விருந்திருக்க உண்ணாத வேளாண்மைத் தனத்தையும் வெளியுலகிற்கு காட்டத்தான் நீலாவணன் ஆசைப்பட்டிருக்கிறார் எனத் துலாம்பரமாகிறது" என்று எழுத்தாளர் அமரர் வ.அ.இராசரெத்தினம்
வேளாண்மை காவியம் குறித்து கூறிய கூற்று இதனை மேலும் மெய்ப்பிக்கிறது.

வேளாண்மைக் காவியத்தின் 'குடலை', 'கதிர்' ஆகிய இரு பகுதிகளையே நீலாவணன் எழுதி முடித்திருந்தார். ஆனால் காவியம் முற்றுப்பெறவில்லை. கவிஞர் நீலாவணன் 11/02/1975 இல் காலமானார். கையெழுத்துப் பிரதியாக இருந்த வேளாண்மைக் காவியத்தின் பகுதிகளை கவிஞர் மு.சடாட்சரன் மூலம் நீலாவணனின் மனைவியிடமிருந்து பெற்றுப் படித்த வ.அ.இராசரெத்தினம் தனது அச்சுக்கூடத்தின் (தங்கம் வெளியீடு, திரிகூடம், மூதூர்) மூலம் 1982 செப்டெம்பரில் வெளியீட்டார். வேளாண்மைக் காவியத்தின் பிரதான அதே கதாபாத்திரங்களை வைத்து நானும் ஒரு மிகுதிக் கதைப்பின்னலை உருவாக்கிக் காய், பழம் ஆகிய இரு பகுதிகளைத் தொடர்ந்து எழுதி விளைச்சல் எனும் குறுங்காவிய நூலை 2017 சித்திரையில் வெளியிட்டேன்.

02) கேள்வி :- கவிதை தவிர்ந்த ஏனைய எழுத்துத் துறைகளில் தங்கள் ஈடுபாடு ?

பதில் :- சுமார் பத்துச் சிறுகதைகளையும் முப்பது உருவகக் கதைகளையும் படைத்துள்ளேன். கலை இலக்கிய மற்றும் அரசியல் கட்டுரைகள் பலவற்றை எழுதியுள்ளேன். திறனாய்வு எனக்கு ஈடுபாடுள்ள இன்னொரு துறை. நூல் வெளியீடு மற்றும் அறிமுக விழாக்களில் நூல் விமர்சன உரைகள் ஏராளம் ஆற்றியிருக்கின்றேன். இவை பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் வெளிவந்தும் உள்ளன. பத்தி எழுத்துக்களும் எழுதி வருகின்றேன்.

03) கேள்வி :- இதழியல் துறையிலும் தங்களுக்கு மிகுந்த ஈடுபாடு உண்டென்று அறிகிறோம். அது பற்றியும் சொல்லுங்கள் ?

பதில் :-மட்டு வந்தாறுமூலை மத்திய மகாவித்தியாலயத்தில் (தற்போதைய கிழக்குப் பல்கலைக்கழக கட்டிடத் தொகுதி ) கல்வி கற்ற காலத்தில் முறையே ஏழாம் வகுப்பு, உயர்தர மாணவ பருவத்தில் 'கலையமுதம், தேமதுரம்' ஆகிய கையெழுத்துச் சஞ்சிகைகளுக்கு ஆசிரியராக இருந்துள்ளேன்.

கல்கமுவ எனும் இடத்திலுள்ள இலங்கையின் நீர்ப்பாசனப் பயிற்சிக் கல்லூரியில் நீர்ப்பாசனப் பொறியியல் துறையியல் 'டிப்ளோமா' பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த காலத்தில் அங்கு நீர்ப்பாசனப் பயிலுனர் தமிழ்க்கலாமன்றம் அமைத்து செயலாளராகவும் இதழாசிரியராகவும் பணியாற்ற நேர்ந்தது. மன்றம் 1969 இல் வெளியிட்ட 'அருவி' எனும் வெளியீட்டிற்கு மலராசிரியராகச் செயற்பட்டேன்.

கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் இலக்கிய செயலாளராக செயற்பட்ட காலத்தில் அதன் மாதாந்த வெளியீடான 'ஓலை' என்ற சஞ்சிகைக்கு ஸ்தாபக ஆசிரியராக இருந்தேன். 30/01/2008 இல் தன் கன்னி இதழை மட்டக்களப்பில் விரித்த 'செங்கதிர்' எனுஞ் சிற்றிதழைத் தொடர்ந்து ஐந்து வருடங்கள் மாதா மாதம் கிரமமாக வெளிக்கொணர்ந்தேன். அறுபத்தியொரு இதழ்கள் விரித்தன.

உலகத் தமிழ் சிற்றிதழ்கள் சங்கத்தின் ஐந்தாவது மாநாடு 2010 தமிழ்நாடு குற்றாலத்தில் நடந்தபோது 'செங்கதிர்' இதழுக்கு 'ஐயன் திருவள்ளுர் இலக்கியப் பேரவை விருது' கிடைத்தது. உலகத் தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கத்தின் இலங்கை கிளை பொருளாளராகவும் உள்ளேன். இலங்கை தேசிய கலையிலக்கியப் பேரவையின் வெளியீடான 'தாயகம்' சஞ்சிகையின் ஆசிரியர் குழுவிலும் இருக்கிறேன்.

04) கேள்வி :- செங்கதிர் ஏன் தொடர்ந்து வெளிவரவில்லை ?

பதில் :- வெளிப்படையாகக் கூறுவதாயின் பொருளாதாரம் தான் காரணம். தபால் செலவு உட்பட மாதம் ஐம்பதாயிரம் ரூபாய் செலவாகும். அதில் அரைவாசிதான் மீளவரும். அறுபத்தியொரு இதழ்களையும் வெளியிட்டதில் எவ்வளவு நட்டமடைந்திருப்பேன் என்று கணக்குப் பாருங்கள். இலங்கைத் தமிழ்ச் சூழலில் தனிநபரொருவர் சிற்றிதழ் ஒன்றினை வெளியிடுவதென்பது அக்கினிப் பரீட்சைதான். இலக்கிய ஆர்வமும் ஓர்மமும் தான் பல்லைக் கடித்துக்கொண்டு தொடர்ந்து ஐந்து வருடங்கள் அறுபத்தியொரு இதழ்கள் செங்கதிர் வெளியிடுவதற்கான அகத்தூண்டலை எனக்கு அளித்தன. 'செங்கதிர்' இதழின் துணை ஆசிரியர் அன்பழகன் குரூஸ் அவர்கள் எனக்கு அளித்த தார்மீக ஆதரவையும் இது விடயத்தில் தான் குறிப்பிட்டாக வேண்டும்.

05) கேள்வி :- தொழில் ரீதியாக நீங்கள் பொறியியல் துறை சார்ந்தவராக இருக்கிறீர்கள். அவ்வகையில் கலை இலக்கிய ஆர்வமும் கவிதைத் தாக்கமும் எவ்வாறு ஏற்பட்டது ?

பதில் :- மாணவப் பருவத்திலிருந்தே எந்தப் புத்தகத்தைக் கண்டாலும் எடுத்து வாசிக்கும் வழக்கம் எனது இயல்பாயிருந்தது. நான் பொத்துவில் மெதடிஸ்த மிசன் தமிழ்க் கலவன் பாடசாலையில் நான்காம், ஐந்தாம் வகுப்புகளில் படிக்கும்போதே அதே பாடசாலையில் அப்போது எஸ்.எஸ்.சி வகுப்பில் படித்துக்கொண்டிருந்த எனது தமக்கைமாரின் பாடப்புத்தகமாக இருந்த கவிமணி தேசிக விநாயகம்பிள்ளையின் கவிதை நூலான 'மலரும் மாலையும்' எனும் நூலை அடிக்கடி எடுத்து வாசித்து மகிழ்வேன். கவிமணி தேசிக விநாயகம்பிள்ளையின் கவிதைகள் இளம் பராயத்திலேயே என்னை ஈர்த்தன.

க.பொ.த சாதாரண தரத்திற்கு வந்த பின்னரே பாரதியையும் பாரதிதாசனையும் தேடிப்படித்தேன். அதனால் எனது கவிதார்வம் விசாலித்தது. மட்டு வந்தாறுமூலை மத்திய மகாவித்தியாலயத்தில் உயர்தரம் படித்துக்கொண்டிருந்த போது 1968 என நினைக்கிறேன், உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனின் அறிமுகம் எனக்குக் கிடைத்தது. அவரது 'தமிழன் கனவு' கவிதை நூலைப் பலதடவை படித்தேன். கவிதை எழுத வேண்டும் என்ற ஆர்வம் இவ்வாறேதான் ஏற்பட்டது. பின்னாளில் நீலாவணனின் கவிதைகள் என்னைப் புடம்போட்டன.

06) கேள்வி:- நீங்கள் எழுதிய முதற் கவிதை எது ?

பதில் :-1961ம் ஆண்டு தமிழரசுக் கட்சி அரசாங்க கச்சேரி வாயில்களை மறித்துச் சத்தியாக்கிரகம் நடாத்திய காலம். நீதிமன்ற மொழியுரிமை சம்பந்தமான போராட்டம் அது. எனக்கு அப்போது பதினொரு வயது. அந்த வயதில் அப்போராட்டத்தின் தாற்பரியம் எனக்குப் புரிந்திருக்கவில்லை. ஆனால் மொழி சம்பந்தமாக சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையிலான ஒரு விவகாரம் போய்க்கொண்டிருக்கிறது என்பது பெரியவர்கள் பேசக் கேட்டுக் காதில் விழுந்த கதைகளால் பட்டும் படாமல் என் மனதில் பதிந்திருந்தது. "சத்தியமே இலட்சியமாய்க் கொள்ளடா.." என்று 'நீலமலைத் திருடன்' திரைப்படத்தில் வரும் பாடலின் மெட்டில்,

"தமிழ்தனையே உயிர் என்று கொள்ளடா!
தலை நிமிர்ந்து தமிழ் காக்கச் செல்லடா!!

சிங்களக் கூட்டம் வந்து குறுக்கிடும்!
சீறிப்பாய்ந்து உன்னைச் சிதைத்திடும்!!

எள்ளளவும் பயம்கொண்டு மயங்காதேடா! - நீ
இனிதான தமிழ் காக்கக் தயங்காதேடா !!.

என்று பாட்டெழுதி பாடிக்கொண்டு திரிந்தேன். இதுதான் எனது முதலாவது படைப்பு.

பின் ஏற்கனவே நான் குறிப்பிட்ட வந்தாறுமூலை மத்திய மகாவித்தியாலயத்தில் வெளியிட்ட 'கலையமுதம்', 'தேமதுரம்' ஆகிய சஞ்சிகைகளில் முறையே தாமரை, என்னென்பேன் எனும் கவிதைகளை எழுதினேன். ஆனால் முதன் முதலில் அருவி சஞ்சிகையில் 1969 இல் வெளியான நற்கவிதை வேண்டும் எனும் கவிதையே அச்சுவாகனம் ஏறியது.

"நற்கவிதை வேண்டும்" கவிதையின் ஒரு சில வரிகள்....

பூங்காவைப் பொன் நிலவைப் பூவையரின்
புற அழகைப் புகழ்ந்து பல கவிதை வேண்டாம் !
ஏங்கியின்றி எமது நாட்டின் தவித்தலைத்து
இரை தேடும் மேழைகளின் இடரைக் கண்டும்
தூங்குகின்ற மனிதரெல்லாம் அறிவுபெற்றுத்
துடித்தெழுந்து துயர் துடைத்து ஏழைகட்குப்
பாங்கான வாழ்வழிக்கப் பாதையிட்டு
பார்மகிழச் செய்வதற்குக் கவிதை வேண்டும்!

சாதிமதம் பலவகுத்துச் சண்டையிட்டு 
சமாதானம் சாவணைக்கும் காலமதில் 
பாதகங்கள் பலப்பலவோ..படுகொலைகள்!
பண ஆசை..ஐயையோ! ..கொடிது இவை!

பேதப்பேய் மடிந்துலகில் பிணக்கு எல்லாம்
பிறந்த இடம் தெரியாமல் ஓடுதற்கு
போதனைகள் புகட்டுகின்ற பொருள் பொதிந்த
புகழ் படைத்த கவிதை பல தோன்றவேண்டும்!

மங்கை பலர் மானத்தை மதிகெட்டின்று
மடுவெட்டி புதைப்பதனால் மாநிலத்தில்
பொங்குபுகழ்த் தாய்மையினம் பொலிவிழந்து ................

07) கேள்வி :- இதற்குப் பின்னர் உங்கள் கவிதை ஆக்க முயற்சிகள் எவ்வாறு அமைந்தன ?

பதில் :- உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனின் "தமிழன் கனவு" நூல் என்னில் ஏற்படுத்திய தாக்கத்தினால் அப்போது தந்தை செல்வா வெளியிட்ட "தமிழ் பேசும் மக்களின் உரிமைக்குரல்" என மகுடம் தாங்கி வெளிவந்த சுதந்திரன் பத்திரிகைக்கு தமிழ்த்தேசிய விடுதலையை பாடுபொருளாக வைத்து பல கவிதைகளை எழுதியுள்ளேன்.

08) கேள்வி :- இவ்வாறான கவிதைகளை எழுதும்போது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் உருவாகியிருந்ததா ?

பதில் :- புலி இயக்கம் உருவாகியிருக்கவில்லை. ஒரு சம்பவம் அப்போது நடந்தது. மீனவர்களுக்கும் இராணுவத்தினருக்கும் வல்வெட்டித்துறையில் ஏற்பட்ட பிரச்சினையின் போது அப்போது அங்கு சென்று தலையிட்ட பருத்தித்துறைத் தொகுதி தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் துரைரத்தினம் அவர்களுக்கு இராணுவ வீரன் ஒருவன் காலால் உதைத்தான். இது குறித்து சுதந்திரனில் 'களம் தெரியுது பார்' எனும் கவிதையை எழுதியிருந்தேன்.

09) கேள்வி :- சுதந்திரன் பத்திரிகையில் வெளியான கவிதைகள் நூலாக வெளிவந்துள்ளதா?

பதில் :- இல்லை. எனது ஆக்கங்களை நூலுருவாக்குவதில் எனக்கிருந்த அசமந்தம். அது இப்போதும் உள்ளது. வெளிவந்த 'சுதந்திரன்' கவிதைகளும் என்னிடம் கைவசம் இல்லை. இவை மட்டுமல்ல பத்திரிகைகளில் சஞ்சிகைகளில் வெளிவராத பல கவிதைகளும் கூட 1983 -1990 காலப்பகுதியில் எரிந்தும் காணாமல் போயும் இடப்பெயர்வினால் இல்லாமல் போயும் இழக்கப்பட்டு விட்டன. ஆனாலும் சுவடிகள் திணைக்களத்தில் சுதந்திரன் பத்திரிகையின் பழைய இதழ்களைத் தேடி சுதந்திரன் கவிதைகளைத் தொகுத்து வெளியிடலாம்தான். ஆனால் இப்போது அக்கவிதைகளுடன் எனக்கே உடன்பாடு இல்லை.

10) கேள்வி :- ஏன் அவ்வாறு கூறுகின்றீர்கள் ?

பதில் :- தமிழ்த் தேசிய இனத்தின் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்தின் பால் எனக்கிருந்த ஈடுபாடும் பிடிப்பும்தான் சுதந்திரனுக்குக் கவிதைகளை எழுத என்னைத் தூண்டின. ஆனால் பின்னாளில் ஈழவிடுதலைப் போராட்டத்திலிருந்த அத்தனை நியாயங்களும் 'பாசிசத்தின்' பாதணிகளின் கீழ் நசுங்குண்டு போராட்டமானது தனது தத்துவார்த்தத் தளத்தை இழந்து 'வன்முறை'யாக அறத்தைப் புறந்தள்ளிய ஆயுதக் கலாசாரமாக வடிவெடுத்தது. தந்தை செல்வா காலத்தில் தடம் பதித்த 'தமிழ்த்தேசியம்' பின்னர் தடம்புரண்டது. இப்போராட்டத்தில் களப்பலியான போராளிகளினதும் அப்பாவி மக்களினதும் விலை மதிக்க முடியாத உயிர்கள் வீணே காவுகொடுக்கப்பட்டனவாயிற்றே என்ற கவலையும் தமிழர் தம் போராட்டம் பட்டு வேட்டிக்குக் கனவு கண்டு இறுதியில் கோவணத்தையும் இழந்த கதையாகிவிட்டதே என்ற ஏக்கமும் போலித் தமிழ்த்தேசியம் பேசி அரசியல் பிழைப்பு நடாத்தும் தமிழர் தம் அரசியல் தலைமைகளின் மீது ஏற்பட்ட அருவருப்பும் எந்தவிதமான சமூக நல நாட்டமுமில்லாமல் சமூக மாற்றத்தையோ சமூக மறுமலர்ச்சியையோ சிந்தனையில் கொள்ளாது வெல்லுகின்ற தேர்தல் குதிரையைத் தேடி காசைக் கட்டிவிட்டு தேர்தலில் மக்களின் வாக்குகளைச் சூறையாடும் தமிழ் அரசியல்வாதிகளின் மீது ஏற்பட்ட அசூசையும் - மக்களின் அறியாமையையும் அவலத்தையும் தங்கள் முதலீடுகளாகக் கொண்டு அரசியல் வியாபாரம் செய்கின்ற தமிழ் அரசியல் தலைமைகள் மீதான ஆத்திரமும் உண்மையான தமிழ்த்தேசிய உணர்வாளர்களையும் தமிழ்த்தேசியத் தளத்தில் இயங்குபவர்களையும் சமூகம் அடையாளம் காணாத துர்ப்பாக்கியச் சூழலும் இப்படி ஏராளமான எதிர்க்காரணிகள் ஏற்படுத்திய மன உளைச்சல் உணர்வுகளுடன் எழுதப்பெற்ற எனது கவிதைகளையே அர்த்தமற்றதாக்கி விட்ட ஒரு புறச்சூழலில் அக்கவிதைகளின் மீது எனக்கே உடன்பாடில்லை என்ற மனோநிலை எழுந்த காரணத்தால் சுதந்திரனில் வெளியான கவிதைகளைத் தேடித் தொகுத்து நூலுருவாக்கும் எண்ணத்தை நிரந்தரமாகக் கைவிட்டுவிட்டேன்.

11) கேள்வி :- கலையிலக்கிய ஆர்வமும் படைப்பாற்றலும் உருவாகுவதற்கு உங்களின் குடும்பப் பின்னணி ஏதும் ஊக்கியாக அமைந்ததா ?

பதில் :- எனது தந்தையார் தம்பியப்பா ஓர் நாடகக் கலைஞர். ஹார்மோனியம் வாத்தியமும் நன்கு வாசிப்பார். பாடல் இயற்றி மெட்டமைப்பதிலும் வல்லவர். நாடகப்பிரதிகள் எழுதி அதனை நெறியாள்கை செய்து அவரே நடித்தும் இருக்கிறார். கிராமப்புறங்களுக்குச் சினிமா வராத காலங்களில் கிழக்கிலங்கையின் சில கிராமங்களில் நாடகக் கொட்டகைகள் அமைத்து நாடகங்களை ஒரு தொழிலாகவே நடாத்தியும் உள்ளார். துரதிஸ்டவசமாக எனது பன்னிரு வயதிலேயே தந்தையை இழந்துவிட்டேன்.

எனது தாயாரின் தங்கையின் கணவரான எனது குஞ்சப்பா சுப்பிரமணியம் ஆசிரியராக, அதிபராக இருந்தவர். அவர் ஒரு திராவிட முன்னேற்றக்கழக அனுதாபி. ஆரம்பத்தில் முருக பக்தராக இருந்து பின் பகுத்தறிவு வாதியாக மாறியவர். காரைதீவிலுள்ள அவரது வீட்டிற்குச் சென்றால் தமிழ்நாட்டுப் பத்திரிகைகளும் சஞ்சிகைகளும் தி.மு.க ஏடுகளும் இருக்கும். அவற்றையெல்லாம் நான் இளவயதிலேயே வாசித்துத் தள்ளுவேன்.

எனது தாய்மாமன் வி.ரி செல்லத்துரை ஒரு பண்டிதர், சைவப்புலவர், சிறந்த மேடைப் பேச்சாளர். இன்னொரு தாய் மாமன் வே.கனகசபை (அழகையா) ஓர் ஓவியக் கலைஞர். இவர்கள் எல்லோருமே இப்போது அமரர்களாகிவிட்டார்கள். எனது அம்மப்பா வேலுப்பிள்ளை கூத்துக்கலைஞர். நான் பிறக்கும் முன்னரே காலமாகிவிட்டார். ஆனால் இவர்கள் எவருமே எனக்கு வழிகாட்டும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. 'குலவிழுது கல்லாமல் பாகம்படும்' எனும் கூற்றிற்கிணங்க இவர்களது மரபணுக்கள் எனக்கும் கடத்தப்பட்டிருக்கலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரை எவரதும் வழிகாட்டலும் இல்லாமல் இயல்பாகவே எழுதத் தொடங்கினேன். எழுத்தைப் பொறுத்த வரை எனக்கு குரு என்று எவரும் இல்லை.

12) கேள்வி :- கலை இலக்கியம் சம்பந்தமாக இலக்கிய உலகிற்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் ?

பதில் :- மனித மனங்களைச் செழுமைப்படுத்தும் வல்லமை கலை இலக்கியங்களுக்கு உண்டு் என நம்புபவன் நான். எழுத்தாற்றல், இலக்கியப் படைப்பாற்றல் என்பது ஒரு விடயம். ஆனால் ஓர் எழுத்தாளன் - இலக்கியவாதிக்கு இலக்கிய நெஞ்சம் இருக்க வேண்டும். இலக்கிய நடத்தை உடையவனாக இருக்க வேண்டும். இவை இல்லாவிட்டால் அத்தகைய இலக்கியப் படைப்பாளியின் எழுத்தில் அர்த்தமில்லை. எழுத்தில் சத்தியம் வேண்டும். எழுத்து ஒரு தவம், எழுத்து ஒரு ஊழியம். உண்மையில் எழுத்து ஒரு வேள்வி.

13) கேள்வி :- இலக்கிய நெஞ்சம் - இலக்கிய நடத்தை என்று எதனைக் குறிப்பிடுகிறீர்கள் ?

பதில் :- ஓர் இலக்கியவாதிக்கு அன்பு, கருணை, பாசம், இரக்கம், சமூக அக்கறை, புரிந்துணர்வு, சகிப்புத்தன்மை, சமூகநல நாட்டம் போன்ற மனிதத்தை மேம்படுத்துகின்ற குணாம்சங்கள் இருக்க வேண்டும். இவற்றையே இலக்கிய நெஞ்சம் என்று குறிப்பிட்டேன்.

ஓர் இலக்கியவாதி தனது மனித நடத்தை மூலம் சமூகத்தில் ஓர் உதாரண புருஷராக விளங்க வேண்டும். இதைத்தான் இலக்கிய நடத்தை எனக் குறிப்பிட்டேன்.

இலக்கிய நெஞ்சமும் இலக்கிய நடத்தையும் இல்லாத ஓர் இலக்கியப் படைப்பாளியின் எழுத்தாற்றலால் சமூகத்திற்கு எந்தப் பயனும் விளையாது. ஏனெனில் கலை இலக்கியங்கள் வெறுமனே பொழுதுபோக்கிற்கானவை அல்ல. அவை மக்களுக்கானவை. மனித ஈடேற்றத்திற்கு வழி காட்டுபவை. அத்தகைய இலக்கியங்களே காலத்தை வென்று நிலைக்கும். அல்லாதவை காலவெள்ளத்தில் அள்ளுண்டு அடிபட்டுப் போய்விடும் என்றார்.

Langes FCPA FCGA 
Tamil Bc Media

Image may contain: one or more people
Image may contain: 1 person, standing
Image may contain: 1 person
 
 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.