Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என் பார்வையில் கண்ணதாசன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

என் பார்வையில் கண்ணதாசன்

மகாதேவஐயர் ஜெயராமசர்மான், B.A ( Hons ) Tamil Dip.in Ed, Dip.in Soc Dip.in Com M.Phil Edu SLEAS , மெல்பேண் .. அவுஸ்திரேலியா ( முன்னாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர் ) -

kannathasan_writing.jpg

காலத்தை வென்றவன்.காவியம் ஆனவன். வேதனை தீர்ப்பவன். வெற்றித்திருமகன் எனப் பலவித முகங்களில் கண்ணதாசனை நான் பார்க்கின்றேன்.சிறுகூடல் பட்டி என்னும் சிறிய கிராமத்தில் பிறந்து சிந்தனைகளின் ஊற்றாக புறப்பட்டவர்தான் கவி அரசர்.முத்தையா- கண்ணதாசன் ஆனதே ஒரு முக்கிய சம்பவம்தான். "முத்தைத்தரு" என்று அருணகியாரைப் பாடவைத்து - அவரது வாழ்க்கையையே மாற்றியது ஆண்டவனது அனுக்கிரகம். முத்தையா என்று தந்தை வைத்தபெயரும்அவரைச் சமூகத்தில் ஒரு முத்தாகவே மிளிரச்செய்தது.கண்ணதாசன் என்னும் பெயரும் அவருக்குஉலகில் பெரும் புகழைத்தேடித்தந்தது.இவையாவும் ஆண்டவனின் அனுக்கிரகத்தால் ஆகியிருக்கலாம் என எண்ணத்தோன்றுகிறது. அருணகிரியார் முருகன் அருள் பெற்றதால் மடைதிறந்த வெள்ளமெனச் சந்தப்பாடல்கள் வந்து குவிந்தன. எங்கள் கவியரசரும் ஆண்டவனின் வரம்பெற்று வந்தவராகையால் கம்பனுக்குப் பிறகு " சந்தத்தை " தமிழில் கையாண்ட பெருமைக்கு உரியவர் ஆகின்றார்.
நெற்றியில் விபூதியும், வாயிலே முருகனது நாமத்தையும் துணையென எண்ணி இருந்தவர் கண்ணதாசன். சேரக்கூடாத கூடாரத்துக்குள் சேர்ந்ததால் அவரின் பேச்சும் போக்கும் , ஏன் எழுத்தும் கூட மாறியது. ஆனால் அவரின் அடிமனத்தில் ஆழமாகப் பதிந்து நின்ற ஆண்டவன் நினைப்பு மட்டும் அப்படியேதான் அடங்கிக்கிடந்தது. கால மும்கனிந்துவரக் கடவுள் நம்பிக்கை கண்ணதாசனிடம் மேலோங்கத்தொடங்கியது. 

நாத்திகம் பேசி நாத்தழும் பேற்றியும், கடவுள் கண்டனம் செய்தும் நின்ற கண்ண தாசன் கடவுளே கதியென்னும் நிலைக்கு வந்து விட்டதை அவர் வாயிலாகவே நாங்கள் அறிந்து கொள்ளமுடிகிறது." நாத்தினாக இருந்தது இரண்டு, மூன்று , ஆண்டுகளே "  கந்தபுராணம் , பெரியபுராணம், கம்பராமாயணம், திருவாசகம், திருப்பாவை, நாலாயி ரத்திவ்யபிரபந்தம், வில்லிபாரதம் ,இவற்றை எல்லாம் கண்டனம் பண்ணப் படித்தேன் ஆனால் அவற்றைப் படிக்கப் படிக்க என்மனம் அவற்றில் ஆழ்ந்து விட்டது என்று அவரே சொல்லுகின்றார்." நாத்திக வாதம் என்பது அரசியல் நோக்கங் கொண்டது என்பதையும், உள்மனத்தின் உண்மையான உணர்வல்ல என்பதையும் உணர்ந்தேன் " என்பது கண்ண தாசனின் வாக்குமூலமாகும்.

கண்ணதாசன் அடிக்கடி விரும்பிக் கேட்கும் பாடல் என்ன தெரியுமா ? " திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே ஸ்ரீமன் நாராயணா " என்பதாகும்.அவரின் படுக்கை அறையில் வைத்திருந்த ஒரே படம் " கிருஷ்ணர்" படமாகும்

இந்தியாவிலே கடவுளை நம்பாதவர்கள் ஒரு கட்சியாகக் கூட இருந்தாலும் அவர்கள் எல்லோரும் சேர்ந்து கடவுளைக் கண்டனம் செய்தாலும் அதனால் கடவுளுக்கு எந்தவித வருத்தமும் இல்லை. அதே வேளை கடவுள் நம்பிக்கையும் இல்லாமற் போய்விடவும் இல்லை.இதில் கண்ணதாசன் மிகவும் நம்பிக்கை உடை யவராக இருந்த படியால்த்தான் படித்தவர்களும் போற்றுகிறார்கள் பாமரரும் போற்று கிறார்கள் என எண்ணத்தோன்றுகிறது.

கடவுளைப்பற்றி சந்தேகம் வருபவர்களுக்கு

" தெய்வம் என்றால் அது தெய்வம்
வெறும் சிலை என்றால் அது சிலைதான்
உண்டென்றால் அது உண்டு 
இல்லை என்றால் அது இல்லை" 


என்று சொல்லும் விளக்கத்தைவிட வேறு எப்படிச் சொல்லமுடியும். இதுதான் கண்ணதாசன். 

சினிமாவுக்கு என்று எழுதப்பட்டாலும் உள்ளத்தில் இருப்பதுதானே வரமுடியும்.

" பூஜ்ஜியத்துக் குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை
ஆண்டு கொண்டு புரியாமலே இருப்பான் ஒருவன்
அவனைப் புரிந்து கொண்டால் 
அவன்தான் இறைவன் " 


பாமரரும் புரியும்படி கடவுள் தத்துவத்தைக் காட்டுவது அவரின் தனித்துவம்தானே.

ஆண்டவனின் அருள் அவருள் உறைந்து கிடந்தமையால்த்தான் அவரின் வார்த்தை களில் அத்வைதம் இருந்தது.துவைதம் இருந்தது.விசிட்டாத்வைதமும் இருந்தது.வேதாந் தமும் சைவசித்தாந்தமும் கூட இருந்தது எனலாம்.சரஸ்வதி அவரது நாவிலே சம்மா ணம் போட்டே இருந்தாள்.மேலே காட்டிய தத்துவங்களை எவ்வாறு நாசூக்காகக் கண்ணதாசன் காட்டுகிறார் பாருங்கள்.....

" தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம் 
அது தெரியாமல் போனாலே வேதாந்தம் 
மண்ணைத்தோண்டி கண்ணீர் தேடும் அன்புத்தங்கச்சி
என்னைத் தோண்டி ஞானம் கண்டேன் இதுதான் என்கட்சி
உண்மை என்ன பொய்மை என்ன 
இதில் தேன் என்ன 
கடிக்கும் தேள் என்ன ஞானப் பெண்ணே


தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு 
இந்த ஊரென்ன
சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருளென்ன
நீ வந்த கதை என்ன " 


சகல வித தத்துவங்களும் இங்கே பாமரரரும் புரியச் சொல்லி நிற்கின்றார் கண்ண தாசன் .இதனால் வெற்றித்திருமகன் தானே! 

கவிஞ்ஞன் என்பவன் ஒரு குறுகிய வட்டத்துக்குள் சிந்திக்கக் கூடாது. அவன் சொல்லும் கருத்துக்கள் உலகம் தழுவ வேண்டும் வள்ளுவர் குறள் அப்படிப்பட்டது தான்.வள்ளுவரின் பரந்து விரிந்த நோக்கால் அவரின் திருக்குறள் உலகம் தழிவிய தாக இருக்கிறது. நமது கவிஞ்ஞரும் அப்படியான ஒரு மனநிலையில்த்தான் செயற்பட நினைக்கின்றார். வள்ளுவர் -- அறம், பொருள், இன்பம் பற்றியெல்லாம் பாடினார். கண்ணதாசனும் அறத்தை , இன்பத்தை , பொருளை, எல்லாம் பாடினார்.அத்தோடு அருளையும் தமது பாட்டுக்களால் தந்தும் நின்றார். 

சங்கரமடத்தைச் சரண் அடைந்தார்.ஒருகாலத்தில் காவிகட்டியவர்களையும் சங்கரமடத்தாரையுமே சாடியவர் பின்பு தானாகவே சரண்புகுந்தார். இது அவரிடம் ஏற்பட்ட மடை மாற்றமாகும்.அதே கண்ணதாசனே " யேசுகாவியத்தை " ப்பாடி மீண்டும் தனது நோக்கை விரிவாக்கிக் கொள்கின்றார்.புத்தரைப் பாடுகிறார்.நபிகளைப் பாடுகி  றார்.சத்தியம், நேர்மை, சமத்துவம் யாவற்றையும் போற்றிப் பாடுகின்றார்.

' புத்தன் யேசு காந்தி பிறந்தது
பூமியில் எதற்காக தோழா 
பூமியில் எதற்காக .... '


என்று கேள்வி எழுப்பி தனது நிலை எமக்கெல்லாம் காட்டி நிற்கின்றார் கவியரசர் அவர்கள்.

இறையுணர்வு ஊறிவிட்டால் யாவும் சிறந்த கருத்துக்களாகவே வந்து நிற்கும். அதில் பல தத்துவங்கள் வந்துவிடும். வேதத்திலும் , உபநிடதத்திலும் , உன்னை அறிதல் என்பது பெரிய அரிய பெரிய தத்துவமாகும். " தத்துவம் அஸி ' அஹம் பிரம்
மாஸி" உபநிடதத்தின் உயிநாடியாகக் கருதப்படுகிறது. ரமண மகரிஷியும் " முதலில் நீ யார் என்பதை " அறி என்றுதான் சொல்லுகிறார். இப்படியான உயர்தத்துவக் கருத்தை கண்ணதாசன் மிகவும் எளிதாக்கி எமக்குத் தரும்விதம் அவரின் உயராற்றலைத்தான் வெளிப்படுத்துகிறது எனலாம்.

" உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் 
உலகத்தில் போராடலாம் 
வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் 
நீ வாழலாம் " 


வாழ்ந்தாலும், தாழ்ந்தாலும், வாழுவோம் என்பது எல்லோரிடத்தும் எளிதாக் வரக்கூடிய தல்ல. அதற்கு ஒரு மனப்பக்குவம் தேவை. " நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்' என்னும் நாவுக்கரசர் அஞ்சாவார்த்தை "தலை வணங்காமல்வாழுதலில்" தெரிகிறதல்லவா? 

மனமானது சமநிலைக்கு வந்து விட்டால் எதற்கும் அது ஆயத்தமாகிவிடும். இது ஒரு யோக நிலையாகும். இதனைக்கவிஞ்ஞர் எப்படிச்சொல்கிறார் பாருங்கள்..

" நான் - கடலளவே பெற்றாலும் மயங்கமாட்டேன் -அது
கையளவே ஆனாலும் கலங்கமாட்டேன்" 

இந்த நிலை சாதாரணமாக எல்லோருக் கும் வந்து விடமாட்டாது என்பதைக் கவிஞ்ஞரின் வரிகள் மிக அற்புதமாகக் காட்டிநிற் கின்றன் அல்லவா?      குழப்பங்கள் வருவது மனித வாழ்வில் தடுக்கமுடியாத ஒன்று. ஆனால் அந்தக் குழப்பத்தையும் நாம் விளங்கி மனத்தைக் கலங்க விடக்கூடாது என்கின்றார் கவிஞர்.

" மயக்கமா தயக்கமா மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்" 


வாழ்க்கையில் குழப்பம் வந்தால் தயக்கம்வரும் அதே நேரம் நடுக்கமும் வந்தே சேரும்.அரசன் முதல் ஆண்டிவரை அனைவருக்கும் இந்த நிலை வெவ்வேறு உருவத் தில் - வெவ்வேறு விதமாக வரும். எல்லார் வீட்டுக்கும் வாசற்படி இருபது போல வேதனைகளும் வீடுதோறும் இருக்கவே செய்யும்.இது எத்தனை அனுபவமான ஒரு மிகப்பெரிய கருத்து. யாருமே வேதனைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளவே முடியாது
எனவே 

" கலங்காதிருமனமே உன்கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே " எனஆறுதலும் கூறுகின்றார் கண்ணதாசன் அவர்கள்.  அதே வேளை 

" வந்த துன்பம் எது என்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை
எதையும் தாங்கும் இதயமிருந்தால்
இறுதிவரைக்கும் அமைதியிருக்கும்
........................................................................
நாளைப் பொழுதை இறைவனுக் களித்து
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு"


என்று புத்தியும் கூறுகின்றார். அதோடு நின்றுவிடாமல் மிகவும் முக்கியமாக ஒன்றையும் சொல்லி நிற்கின்றார்..

"  உனக்குக் கீழே உள்ளவர் கோடி 
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு"


எப்பொழுதும் நாங்கள் அனைவருமே எங்களின் நிலையை மட்டுமே தினமும்

பார்த்துப்பார்து எனக்கு மட்டும் ஏன் இப்படி? அவன் நல்லாய் இருகிறானே! என்று அல்லும் பகலும் மற்றவர்களைப் பார்த்து எமக்குக் கிடைத்தவற்றையும் வீணடித்து விடுவோம்.காலுக்குச் செருப்பில்லை என்பவனுக்கும் கவலை.அதே நேரம் காலே இல்லை என்பவனுக்கும் கவலை.கஞ்சிக்கு உப்பில்லை என்பவனுக்கும் கவலை. குடி க்கக் கஞ்சி இல்லையே என்பவனுக்கும் கவலை. இதில் எது முக்கியம் என்பதை உணராமல் இருப்பதே பெரிய கவலை என்பதை யாவரும் உணர்தல் வேண்டும் என்பதை கவிஞ்ஞர் சொல்லுவதை விட யாராலும் இவ்வளவு எளிமையாகச் சொல்லி விட முடியாதல்லவா? எத்தனையோ பேர் எம்மைவிடவும் மோசமாக இருக்கிறார்கள் என்பதை ஒர் கணம் நினைத்தால் நாங்கள் படும் துன்பம் பெரிதாகவே தெரியாமல் போய்விடும் என்பதைக் கண்ணதாசன் சொல்லும் இடத்தால் அவர் உயர்ந்த கவிஞ்ஞன் ஆகி நிற்கிறார் எனலாம்.

வாழ்க்கையில் அவர் அனுபவிக்காத இன்பங்களும் இல்லை.துன்பங்களும் இல்லை எனலாம். அவற்றை யெல்லாம் அவர் எங்களுக்குத் தனது கவிதைகள் வாயிலாகத் தரவும் மறக்க வில்லை. 

"எங்கே வாழ்க்கை தொடங்கும் - அது
எங்கே எவ்விதம் முடியும் 
இதுதான் பாதை இதுதான் பயணம்
என்பது எவருக்கும் தெரியாது " 


இது பெரிய தத்துவம்தான் ஆனால் இதில் கவிஞ்ஞரின் ஒரு பங்கும் காணப்படுகிறது.சிறு கூடல்பட்டியில் இருந்து சென்னை வந்து படுக்க இடமில்லாமல் கடற்கரை ஓரத்தில் படுக்க அங்கும் படுக்க முடியாமல்
போலீஸ்காரர்களால் கண்ணாதாசன் போக்கிடம் இல்லாமல் விரட்டி அடிக்கப்படு கிறார்.அப்பொழுது அவரது வாழ்க்கைப் பயணம் எப்படி அமையப் போகிறது எங்கே முடியப்போகிறது என்பது அவருக்கே புரியாத ஒன்றாக இருந்திருக்கலாம் அல்லவா?
இதுவும் ஒருகருத்தாயும் இருக்கலாம். அதேவேளை மனித வாழ்வை நாங்கள் தீர்மானிக்கவும் முடியாதிருக்கும் என்பதும் கூட கருத்தாகலாம்தானே!

சுத்திச்சுத்தி கடவுளிடம்தான் கண்ணதாசன் வருகின்றார்.எதைச் சொல்லுவதானாலும் கடவுளையும் கூடவே வைத்திருப்பார். 

நல்லவர்க் கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனட்சாட்சி
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா 
நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் காட்சியம்மா 
அதுதான் உள்ளத்தின் சாட்சியம்மா --- அதுதான் உண்மையின் சாட்சியம்மா


மனிதர்களே மனட்சாட்சிக்கு மதிப்பளியுங்கள்.அல்லது தெய்வத்தை நம்புங்கள்.இப்படி செய்யாது விட்டால் அது உங்களுக்கு ஏற்றதல்ல அது நல்ல வாழ்வுக்கும் வழி வகுக்காது என்று சொல்லி எமக்கு நற்சிந்தனை வழங்குகின்றார் கண்ணதாசன் அவர்கள்.

அவரின் பாடல்கள் அழியாப் புகள் பெற்றன என்பதில் எள்ளளவும் எந்தவித ஐயமும் இல்லை. ஆனால் கண்ணதாசன் வாழ்கின்றார் என்றால் அவரின் " அர்த்த முள்ள இந்துமதம் " பெருங்காரணம் என்பதை எவருமே மறுக்க முடியாது. முப்பத்தெட்டு வருடங்கள் கவியரசனாகப் புவியையாண்டவன் கண்ணதாசன்.எழுத்தாலும்,பேச்சாலும் எம்மைக்கட்டிப்போட்டவன்." வாழநினைத்தால் வாழலாம் " என்று தைரியம் கூறிய தமிழ்க்கவிஞன்.ஆகவே அவன் காலத்தை வென்று , காவியமாக வெற்றித்திருமகனாகவே நிற்கிறான்.

 

http://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5193:2019-06-25-13-23-11&catid=2:2011-02-25-12-52-49&Itemid=19

  • 5 months later...
  • கருத்துக்கள உறவுகள்
On 6/28/2019 at 8:03 PM, கிருபன் said:

புத்தன் யேசு காந்தி பிறந்தது
பூமியில் எதற்காக தோழா 
பூமியில் எதற்காக .... '

இது ஆலங்குடி சோமு எழுதிய பாடல் அல்லவா

“ கேள்விக்குறி போல் முதுகு வளைந்து உழைப்பது எதற்ககாக?” என்ற அற்புதமான உவமை அந்தப் பாடலில் இருக்கிறது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kavi arunasalam said:

இது ஆலங்குடி சோமு எழுதிய பாடல் அல்லவா

“ கேள்விக்குறி போல் முதுகு வளைந்து உழைப்பது எதற்ககாக?” என்ற அற்புதமான உவமை அந்தப் பாடலில் இருக்கிறது

கண்ணதாசன் எழுதவில்லை என கூகிளில் தேடியபோது காட்டியது. ஆனால் பாடல் வரிகள் வாலி என்று உள்ளது.

படம்: சந்திரோதயம்

புத்தன் இயேசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக
தோழா ஏழை நமக்காக
கங்கை யமுனை காவிரி வைகை ஓடுவது எதற்காக
நாளும் உழைத்து தாகம் எடுத்த தோழர்கள் நமக்காக


கேள்விக்குறி போல் முதுகு வளைந்து உழைப்பது எதற்காக
மானம் ஒன்றே பெரிதென எண்ணி பிழைக்கும் நமக்காக

புத்தன் இயேசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக
தோழா ஏழை நமக்காக
கங்கை யமுனை காவிரி வைகை ஓடுவது எதற்காக
நாளும் உழைத்து தாகம் எடுத்த தோழர்கள் நமக்காக


நிழல் வேண்டும்போது மரம் ஒன்று உண்டு
பகை வந்தபோது துணை ஒன்று உண்டு
இருள் வந்தபோது விளக்கொன்று உண்டு
எதிர்காலம் ஒன்று எல்லோர்க்கும் உண்டு
உண்மை என்பது என்றும் உள்ளது
தெய்வத்தின் மொழியாகும்
நன்மை என்பது நாளை வருவது நம்பிக்கை ஒளியாகும்

புத்தன் இயேசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக
தோழா ஏழை நமக்காக
கங்கை யமுனை காவிரி வைகை ஓடுவது எதற்காக
நாளும் உழைத்து தாகம் எடுத்த தோழர்கள் நமக்காக


பொருள் கொண்ட பேர்கள் மனம் கொண்டதில்லை
தரும் கைகள் தேடி பொருள் வந்ததில்லை
மனம் என்ற கோயில் திறக்கின்ற நேரம்
அழைக்காமல் அங்கே தெய்வம் வந்து சேரும்
அழுதவர் சிரித்ததும் சிரிப்பவர் அழுததும்
விதி வழி வந்ததில்லை
ஒருவருக்கென்றே உள்ளதை எல்லாம் இறைவன் தந்ததில்லை

புத்தன் இயேசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக
தோழா ஏழை நமக்காக
கங்கை யமுனை காவிரி வைகை ஓடுவது எதற்காக
நாளும் உழைத்து தாகம் எடுத்த தோழர்கள் நமக்காக

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, கிருபன் said:

கண்ணதாசன் எழுதவில்லை என கூகிளில் தேடியபோது காட்டியது. ஆனால் பாடல் வரிகள் வாலி என்று உள்ளது.

ஆலங்குடி சோமுதான் அதை எழுதினார் என்று என்னால் நிச்சயப் படுத்த முடியாது கிருபன். ஆனால் எங்கேயோ முன்னர் வாசித்த ஞாபகம் மட்டும் இருக்கிறது.

காலத்தை வென்றவன் நீ காவியமானவன் நீ வேதனை தீர்த்தவன் விழிகளில் நிறைந்தவன் வெற்றித் திருமகன் நீ.... என்ற பாடல் கண்ணதாசனுடையது அல்ல. கண்ணதாசன் தன்னைப் பற்றி பல பாடல்களில்  உயர்த்தியும் தாழ்த்தியும் குறிப்பிட்டிருப்பார் அதை எல்லாம் விட்டு விட்டு எதற்காக இன்னொரு கவிஞரின் பாடலை கட்டுரையின் ஆரம்பத்திலேயே  கட்டுரையாளர்  எழுதினார் என்று கேள்வி எனக்கு வந்தது . அதன்னால்தான் கொஞ்சம் உள்ளே இறங்கி வாசித்தேன்

ஆலங்குடி சோமுவின் பாடல்கள் எனக்குப் பிடிக்கும்

“இருப்பதைக் கொண்டு  சிறப்புடன் வாழும்

இலக்கணம் படித்தவன் தொழிலாளி

‘தண்ணீரில் மீன் அழுதால்

கண்ணீரைக் கண்டவர் யார்

“உள்ளங்கள் நேரான வழி காண்டடும்

உறுதியிலே துன்பம் தூளாகட்டும்

“இறந்தவனை சுமந்தவனும் இறந்திட்டான் -அதை

இருப்பவனும் எண்ணிப் பார்கக மறந்திட்டான்

“கடலுக்கு நீரே பகையானால்

அங்கு கதை சொல்லும் அலைகளுக்கிடமேது

போன்ற அவர் எழுதிய பல பாடல் வரிகளை நான் இரசித்திருக்கிறேன்

‘;

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கட்டுரையாளர் காலத்தால் நின்று நிலைக்கும் பாடல்கள் எல்லாம் கண்ணதாசனின் பாடல்கள் என்று நினைத்திருக்கலாம்!

 

சந்திரோதயம் படம் யூரியூப்பில் உள்ளது. ஆனால் டைட்டில் கார்ட்டில் பாடல்கள் எழுதியவர்களின் பெயர்கள் இல்லை. இன்னொரு கட்டுரையில் ஆலங்குடி சோமுவின் பாடல் ஒன்றை வாலி எழுதியதாக டைட்டில் கார்ட்டில் உள்ளது என்றும் உள்ளது!

 

பின்னூட்டம் ஒன்று:

ஆலங்குடி சோமு பாடல் வரிகளில் அழகான உவமைகளை எளிமையாகக் கையாண்டு இருப்பார். “தண்ணீரில் மீன் அழுதால் கண்ணீரை கண்டவர் யார் ” என்று ஒரு பாடலில் அற்புதமாக கேள்வி எழுப்பி இருப்பார். ஆனால் பின்னாட்களில் திரு இராஜேந்தர் இதே வரிகளைக் கையாண்டு தன் சொந்த சரக்கு என்று பீற்றிக் கொண்டார்

 

ஆலங்குடி சோமு [பாடலாசிரியர், கவிஞர், திரைப்படத் தயாரிப்பாளர்]

தமிழ்த் திரையுலகில் 1960-களில் நுழைந்து 1990-களின் இறுதிக் காலம் வரை திரையிசைப் பிரியர்களுக்குப் பல கருத்தாழம் நிறைந்த பல வெற்றிப் பாடல்களைத் தந்தவர் ஆலங்குடி சோமு. சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை அடுத்த ஆலங்குடியைச் சேர்ந்தவர் சோமு.

1932-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12-ஆம் திகதியன்று பிறந்தவர். திரைக்கதை எழுதவேண்டுமென்ற ஆவலோடு திரையுலகை நாடி வந்த சோமுவுக்கு பாட்டெழுதும் வாய்ப்பைப் பெற்றுக் கொடுத்தவர் இவரது பள்ளித் தோழனும், பக்கத்து ஊர்க்காரருமான கவிஞர் புரட்சி தாசன். சோமுவைத் தயாரிப்பாளர் சின்னப்பா தேவரிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். ‘’யானைப்பாகன்’’ திரைப்படத்தைத் தயாரித்துக் கொண்டிருந்த தேவர் இப்படத்திற்குப் பாடல் எழுதும்படி கேட்டுக்கொண்டார். அதன்படி ஆலங்குடி சோமு எழுதிய முதற்பாடல் 1960-இல் வெளிவந்த ‘’யானைப்பாகன்’’ திரைப்படத்தில் ஏ.எல்.இராகவனும், எல்.ஆர்.ஈஸ்வரியும் இணைந்து பாடிய ’ஆம்பளைக்குப் பொம்பளை அவசியந்தான்’’ என்ற பாடல். இஃது ஓர் நகைச்சுவைப் பாடல். படத்தில் இப்பாடல் காட்சியில் நகைச்சுவைச் செம்மல் குலதெய்வம் ராஜகோபாலும் மனோரமாவும் நடித்திருந்தனர். பாடலும் வெற்றியைப் பெற்றது.

1961-இல் ‘கொங்கு நாட்டுத் தங்கம்’ படத்துக்காக ’கந்தா உன் வாசலிலே கார்த்திகைத் திருநாள்’, 1963-இல் ‘கலையரசி’ படத்தில் ’நீல வானப் பந்தலில்’, ’காஞ்சித் தலைவன்’ படத்தில் ‘அவனியெல்லாம் புகழ் மணக்கும் அம்மன் அருள்’, பி.பானுமதி பாடிய ’மயங்காத மனம் யாவும் மயங்கும்’ போன்ற பாடல்கள் ஆலங்குடியாரின் பிரபலமான பாடல்களாகும்.

1964-ஆம் ஆண்டு இரண்டு படங்களுக்குப் பாடல்கள் எழுதினார். அவை ‘தொழிலாளி’, ‘தெய்வத்தாய்’. ‘தொழிலாளி’ படத்தில் ‘ஆண்டவன் உலகத்தின் முதலாளி’ என்ற பாடல் பொதுவுடமை, சகோதரத்துவம், ஒற்றுமை என்பவற்றை அழகாக எழிய தமிழில் எடுத்துக் கூறிய பாடல். சோமு எம்.ஜி.ஆருக்காக எழுதிய முதல் பாடலும் இதுதான்.

1965-ஆம் ஆண்டு 10 படங்களுக்குப் பாடல் எழுதும் சந்தர்ப்பம் அமைந்தது. ‘இரவும் பகலும்’, ’எங்க வீட்டுப் பிள்ளை’, ‘ஒரு விரல்’, ‘கார்த்திகை தீபம்’, ‘எங்க வீட்டுப் பெண்’, ’பூஜைக்கு வந்த மலர்’, ‘நாணல்’, ’நீர்க்குமிழி’, ‘விளக்கேற்றியள்’ என்பவை அந்த பத்தில் அடக்கம். ‘இரவும் பகலும்’ படத்தில் ஆறு பாடல்களை எழுதினார். நடிகர் எஸ்.ஏ.அசோகன் பாடிய ஒரே பாடலான ‘இறந்தவன சுமந்தவனும் இறந்திட்டான்’, ரி.எம்.எஸ்.பாடிய ‘இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்றுதான்’ பாடல்கள் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றப் பாடல்களாகும். இதே ஆண்டில் ‘எங்க வீட்டுப் பிள்ளை’க்காக இவர் எழுதிய எல்.ஆர்.ஈஸ்வரி குழுவினருடன் பாடிய கண்களும் காவடிச் சிந்தாகட்டும், காளையர் நெஞ்சத்தைப் பந்தாடட்டும்’ என்ற பாடலை எழுதித்தரும்படி கேட்டவுடன் ஏழே நிமிடங்களில் எழுதிக்கொடுத்தார் ஆலங்குடி சோமு. எம்.ஜி.ஆரிடம் ஆலங்குடி சோமுவை அறிமுகப்படுத்தியவர் நடிகர் எஸ்.ஏ.அசோகன். இதே படத்தில் வரும் பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய ’மலருக்குத் தென்றல் பகையானால்’ பாடலும் இவர் எழுதியதே.

1968-இல் வெளிவந்த ‘குடியிருந்த கோயில்’ படத்தில் இவர் எழுதிய ‘ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலேதான் சுகம் சுகம் சுகம்’ என்ற ரி.எம்.எஸ், பி.சுசீலா பாடிய பாடலைக் கேட்டு ரசிக்காத உள்ளங்கள் இல்லையெனலாம். இப்படத்தின் பாடல்களை நான்கு கவிஞர்கள் எழுதினார்கள். திரையில் இந்தப் படத்தின் தலைப்புப் பட்டியலில் [டைற்றில்] ஆலங்குடி சோமுவின் பெயரும் இடம்பெற்றிருக்கும். இசைத்தட்டில் இந்தப் பாடல் கவிஞர் வாலி எழுதியதாகத்தான் குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் இணையதளங்களிலும், கவிஞர்களின் பாடல் பட்டியல்களிலும் ஆலங்குடி சோமு என்பதாகத்தானிருக்கும். இதே படத்தில் எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய ‘துள்ளுவதோ இளமை தேடுவதோ தனிமை’ என்ற பாடலும் இவர் எழுதியதுதான்.

1966-இல் ஆறு படங்களுக்குப் பாடல்கள் எழுதினார். ‘காதல் படுத்தும் பாடு’, ‘சாது மிரண்டால்’, ‘மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி’, ‘செல்வம்’, ‘தேன் மழை’, ‘நான் ஆணையிட்டால்’ ஆகிய படங்களே அவை. 1967-இல் ‘காவல்காரன்’, ‘அரசகட்டளை’, ‘பக்தப்ரஹலாதா’ போன்ற படங்களுக்கு இவர் பாடல்கள் எழுதினார். ரி.எம்.எஸ். பாடிய ‘அடங்கொப்புறான சத்தியமா நான் காவல்காரன்’ என்ற பாடல் மிக மிகப் பிரபலமானது. இதே படத்தில் மற்றொரு பாடல் ‘கட்டழகுத் தங்க மகள் திருநாளோ, அவள் கிட்டே வந்து கட்டி முத்தம் தருவாளோ’ என்ற பாடலும் மிகப் பிரசித்தம் பெற்றது. 1968-இல் ‘கணவன்’, ‘கண்ணன் என் காதலன்’, ’காதல் வாகனம்’, ‘சத்தியம் தவறாதே’, ‘தெய்வீக உறவு’, ‘பொம்மலாட்டம்’ படங்களுக்குப் பாடல்கள் எழுதினார். ‘பொம்மலாட்டம்’ படத்தில் சுசீலா பாடிய ‘மயக்கத்தைத் தந்தவன் யாரடி மணமகன் பேரென்ன கூறடி’, பாடல் ரசிகர்களை மயங்கச்செய்தது.

1969-இல் ‘அடிமைப்பெண்’, ‘அத்தை மகள்’, ’கன்னிப்பெண்’, ‘மனசாட்சி’ ஆகிய படங்களுக்கு எழுதினார். 1970-இல் ‘பத்தாம் பசலி’, ‘சொர்க்கம்’, 1971-இல் ‘குமரிக்கோட்டம்’ என்ற ஒரேயொரு படம். 1972-இல் ‘உனக்கும் எனக்கும்’, ‘வரவேற்பு’, ‘திருமலை தெய்வம்’ என்ற 3 படங்களுக்கு எட்டு பாடல்கள் எழுதினார். 1973-இல் ‘பொன் வண்டு’ என்ற ஒரே படம். 1974-இல் ‘இதயம் பார்க்கிறது’, ‘தாய் பிறந்தாள்’, ‘திருமாங்கல்யம்’ ஆகிய படங்களில் இவரது பாடல்கள் இடம்பெற்றன. 1975-இல் ‘பணம் பெண் பாசம்’, 1976-இல் ’ஆசை 60 நாள்’, 1977-இல் ’மழை மேகம்’, ’16 வயதினிலே’, ‘ரகுபதி ராகவ ராஜாராம்’ ஆகிய 3 படங்களுக்குப் பாடல்கள் எழுதினார்.

1960 தொடங்கி, 1997 வரை 35 ஆண்டுகளில் எண்பது படங்களுக்கு 170 பாடல்கள் எழுதியுள்ளார் ஆலங்குடி சோமு. இவர் கடைசியாக எழுதியது ‘பொற்காலம்’ படத்திற்கு எழுதியது 1997-இல் வெளிவந்தது. பிற்காலத்தில் பாரிஸவாத நோயினால் பாதிக்கப்பட்டு இயற்கை எய்தினார்.

இவர் கே.பாலசந்தரின் இயக்கத்தில் நாகேஷ், ஜெமினிகணேஷ், ராஜஸ்ரீ, பேபி ராஜி, வசந்தா, விஜயலலிதா நடித்த ‘பத்தாம் பசலி’ என்ற படத்தையும், ஜெய்சங்கர், ஜெயகௌசல்யா, ஜே.பி.சந்திரபாபு, சுருளிராஜன், மனோகர், ஏ.சகுந்தலா, ரமாபிரபா, ஜஸ்டின் நடித்த ‘வரவேற்பு’ என்ற படத்தையும் சொந்தமாக தயாரித்தார். இவ்விரு படங்களும் வெற்றி பெறவில்லை. ஆனால் பத்தாம் பசலியில் இடம் பெற்ற ‘அம்மாடி எம்புட்டு தூரம் நடக்குறது’, ‘வெள்ளை மனம் கொண்ட பிள்ளையொண்ணு’, ’போடா பழகட்டும் ஜோடி’, ‘பத்தாம் பசலி மாமா…. மாமோய், அந்தப் பாடம் படிக்கலாமா’ ஆகிய பாடல்கள் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது. அது போல ‘வரவேற்பு’ படத்தில் இடம்பெற்ற ‘பொன் வண்ண மாலையில் நீ தொடும்போது’, ‘வரவேண்டும் மகராஜா தரவேண்டும் புதுரோஜா’, ‘ஆடல் அரங்கம் எந்தன் விழிகள்’ ஆகிய பாடல்களும் அன்றைய காலத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற பாடல்களாகும்.

 

1973-74-ஆம் ஆண்டில் இவருக்கு தமிழக அரசின் ‘கலைமாமணி’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இலங்கை வானொலி, வர்த்தக சேவையின் ‘இன்னிசைச் சுவடுகள்’ நிகழ்ச்சியிலிருந்தும், இணையதளத்திலிருந்தும் இத்தகவல்கள் பெறப்பட்டன.

 

 

https://antrukandamugam.wordpress.com/2017/09/18/alangudi-somu-poet-lyricist-film-producer/

 

 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கிருபன் said:

கட்டுரையாளர் காலத்தால் நின்று நிலைக்கும் பாடல்கள் எல்லாம் கண்ணதாசனின் பாடல்கள் என்று நினைத்திருக்கலாம்!

 

சந்திரோதயம் படம் யூரியூப்பில் உள்ளது. ஆனால் டைட்டில் கார்ட்டில் பாடல்கள் எழுதியவர்களின் பெயர்கள் இல்லை. இன்னொரு கட்டுரையில் ஆலங்குடி சோமுவின் பாடல் ஒன்றை வாலி எழுதியதாக டைட்டில் கார்ட்டில் உள்ளது என்றும் உள்ளது

தகவல்களுக்கு நன்றி கிருபன்.

சில சமயங்களில் தெரியாமல் தவறுகள் நடப்பதுண்டு. ஆனால்  புத்தன் யேசு காந்தி பிறந்தது...” என்ற பாடலை வாலி எழுதியிருக்கலாம். அல்லது ஆலங்குடியாராகவும் இருக்கலாம். எனக்குத் தெளிவில்லை.

திருவிளையாடல் படத்தில் இடம் பெற்றபாட்டும் நானே பாவமும் நானே?..” பாடலை கண்ணதாசன்  எழுதியதாகத்தான் திரையில் காட்டுவார்கள். அந்தப் பாடலை எழுதியவர்  கவிஞர். கா.மு. ஷெரிப். இந்த உண்மையை வெளியே சொன்னவர் எழுத்தாளர் ஜெயகாந்தன்.

இன்னுமொரு செய்தி,

எம்ஜிஆரின் திரை நாயகி  ஜெயலலிதா அவ்வப்பொழுது எம்ஜிஆருக்கு கடுப்பேத்திக் கொண்டிருப்பார்.  எம்ஜிஆருடன் நடித்துக் கொண்டிருந்த போதே சிவாஜியுடன் நடிக்கப் போய் விட்டார். மக்கள் திலகத்தின் பாசறையில் இருந்து நடிகர் திலகத்தின் பாசறைக்கு வருவது என்றால் சும்மாவா?

அந்தப் படத்தில் (கலாட்டா கல்யாணம்)ஜெயலலிதாவை வரவேற்று சிவாஜி பாடுவது போல் ஒரு பாடல் இடம் பெற்றது.

நல்ல இடம் நீ வந்த இடம்

வர வேண்டும் காதல் மகராணி

இன்று முதல் இனிய சுகம்

பெற வேண்டும் வண்ண மலர் மேனி

பாடலை எழுதியவரும் எம்ஜிஆரின் பாசறையில் இருந்து வந்தவர்தான். அவர் கவிஞர் வாலி.

எம்ஜிஆரின் அடுத்த படத்தில் (குமரிக்கோட்டம்)ஜெயலலிதாவை கேலி செய்து பாடுவது போல் ஒரு பாடல் இடம் பெற்றது.

என்னம்மா ராணி... பொன்னான மேனி

ஆல வட்டம் போடவந்ததோ

ஏறி வந்த ஏணி தேவை இல்லை என்று

ஏழை பக்கம் சாடுகின்றதோ

பாடலை எழுதியவர் ஆலங்குடி சோமு

கொஞ்சக் காலத்துக்குப் பிறகு எம்ஜிஆர் பாசறையில் இருந்து ஜெயலலிதா முற்றாக வெளியேறிய போது கண்ணதாசனும் தன் பங்குக்கு ஒரு பாடல் எழுதினார்.

சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு?

தென்றலே உனக்கேது சொந்த வீடு?

உலகம் முழுதும் பறந்து பறந்து

ஊர்வலம் வந்து விளையாடு

மரத்தில் படரும் கொடியே

உன்னை வளர்த்தவரா இங்கு படர விட்டார்?

மண்ணில் நடக்கும் நதியே

உன்னை படைத்தவரா இந்த பாதை சொன்னார்?

உங்கள் வழியே உங்கள் உலகு

இந்த வழிதான் எந்தன் கனவு

பழத்தை கடிக்கும் அணிலே

இன்று பசிக்கின்றதோ? பழம் ருசிக்கின்றதோ?

பாட்டு படிக்கும் குயிலே

நீ படித்ததுண்டோ? சொல்லி கொடுத்ததுண்டோ?

நினைத்ததெல்லாம் கிடைக்கவேண்டும்

நினைத்த படியே நடக்கவேண்டும்

வளரும் தென்னை மரமே

நீ வளர்ந்ததை போல் நான் நிமிர்ந்து நிற்பேன்

வணங்கி வளையும் நாணல்

நீ வளைவதை போல் தலை குனிவதில்லை

பார்க்கும் கண்கள் பணிய வேண்டும்

பாவை உலகு மதிக்க வேண்டும்

தெரிந்தே நடந்த தவறு ஒன்று சமீபத்தில் நான் வாசித்தது.

http://www.puthiyathalaimurai.com/news/cinema/57517-who-is-the-real-lyricist-of-sara-sara-saara-kathu-song.html

  • கருத்துக்கள உறவுகள்

Résultat de recherche d'images pour "puththan jesu kanthi""

BUTTHAN YESU GANDHI with Lyrics | Chandrodhayam | M.G. Ramachandran | T.M. Soundararajan | Vaali

KANDASAMY T S
திரைப்படம்:- சந்திரோதயம்; ரிலீஸ்:- 26th மே 1966; இசை:- MSV ; - உதவி:- R. கோவர்தனம்; பாடல்:- வாலி; பாடியவர்:- TMS; நடிப்பு:- MGR; தயாரிப்பு:- G.N. வேல்மணி; சரவணா பிலிம்ஸ்; டைரக்சன்:- K. சங்கர்.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.