Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்மரபுரிமைச் சொத்துக்களுக்கு எதிரான யுத்தமும், கன்னியா வெந்நீரூற்றுப் பிள்ளையாரும் – நிலாந்தன்…

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்மரபுரிமைச் சொத்துக்களுக்கு எதிரான யுத்தமும், கன்னியா வெந்நீரூற்றுப் பிள்ளையாரும் – நிலாந்தன்…

June 29, 2019

 

Kinniya-vennir-uttu.png?resize=800%2C444கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் நீராவியடி இலங்கை வேந்தன் மண்டபத்தில் ஒரு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தை திருகோணமலையைச் சேர்ந்த தென் கயிலை ஆதீனமும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சைவ மகா சபையும் யாழ்ப்பாணத்தில் உள்ள சமூக விஞ்ஞான ஆய்வு மையம் என்ற அமைப்பும் ஒழுங்குபடுத்தியிருந்தன.

திருகோணமலை கன்னியா வெந்நீரூற்றுப் பிரதேசத்தில் முன்பு காணப்பட்ட ஒரு பிள்ளையார் கோவில் இருந்த இடத்தை தொல்லியற் திணைக்களம் கைப்பற்றியுள்ளது. அந்நிலத்துண்டில் முன்பு இருந்தது பிள்ளையார் கோவில் அல்ல அது ஒரு தாதுகோபமே என்று தொல்லியல் திணைக்களம் கூறுகிறது. மேற்படி கோவில் சிதைந்துபோய்க் காணப்படட ஒரு பின்னணியில் 2009 இல் ஒரு புதிய கோயிலுக்கான அத்திவாரத்தை போட்டது சம்பந்தரும் துரைராஜசிங்கமும்தான். ஆனால் அச் சதுரவடிவ அத்திவாரம் இப்பொழுது வட்டமானதாக மாற்றப்பட்டிருப்பதாக தமிழ்த் தரப்பு குற்றம் சாட்டுகிறது.அது ஒரு தமிழ் பௌத்தத் தலமாயிருக்கலாம் என்று தொல்லியல் திணைக்களம் கூறுகிறதாம்.

அக்காணித்துண்டிற்கு உரிமை கோரும் பெண்ணிற்கு இப்பொழுது அருகில் ஒரு காணித் துண்டு தரலாம் என்றும் கூறப்பட்டுள்ளதாம். ஆனால் தமக்குத் தேவை ஒரு கோவில் என்பதை விடவும் ஒரு மரப்புரிமைச் சொத்தைப் பாதுகாப்பதற்கான உரிமையே என்றுகூறும் தரப்புக்கள் அதற்காகப் போராடி வருகின்றன. அத்தரப்புகளே கடந்த ஞாயிற்றுக் கிழமை இலங்கை வேந்தன் மண்டபத்தில் மேற்படி கூட்டத்தை ஒழுங்கு படுத்தியிருந்தன.

இக் கூட்டத்தில் நல்லை ஆதீனத்தின் குரு முதல்வர், தென் கயிலை ஆதீனத்தின் குரு முதல்வர், கிராமிய உழைப்பாளர் சங்கத்தின் தலைவர், தமிழ்த்தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர், சைவ மகா சபையின் தலைவர் போன்ற பல அமைப்புக்களின் தலைவர்களும் காணப்பட்டார்கள். ஆனால் தொண்டர்களைப்பெருமளவிற்குக் காணவில்லை. மிகப்பெரிய மண்டபத்தில் மிகக்குறைந்தளவு மக்களே அதாவது அறுபது பேர்களே அங்கு காணப்பட்டார்கள். இந்துக் கோவில்களில் நடக்கும் உற்சவங்களுக்கு பக்தர்கள் நூற்றுக்கணக்கிலும் ஆயிரக் கணக்கிலும் திரள்கிறார்கள். இந்துமதம் சார்ந்த தலைப்புக்களின் கீழ் ஒழுங்கு செய்யப்படும் விவாத அரங்குகளிலும் நூற்றுக்கணக்கில் திரள்கிறார்கள். ஆனால் ஒரு பிள்ளையார் கோவில் மீது தமக்குள்ள மரபுரிமைச் சொத்துரிமையை பாதுகாப்பதற்காக அங்கு கூடியிருந்தவர்கள் மொத்தம் அறுபது பேர்தான்.

இக்கூட்டத்தில் உரையாற்றிய கத்தோலிக்க மதகுரு ஒரு விடயத்தைத் தெளிவாகச் சொன்னார். இது மதம் சார்ந்த ஒரு விவகாரம் என்பதற்குமப்பால் மரபுரிமைச் சொத்துக்கள் சம்பந்தப்பட்ட ஒன்று. எந்த மதத்தைச் சேர்ந்ததாக இருந்தாலும் தமது மரபுரிமைச் சொத்துக்களைப் பாதுகாப்பதற்காக தமிழ் மக்கள் போராட வேண்டும் என்று அவர் சொன்னார்.

மரபுரிமை என்ற சொல் அதன் லத்தீன் மூலத்திலிருந்து வருகிறது. patrimonium  என்ற அந்தச் சொல்லின் பொருள் தந்தையின் கடமை அல்லது தந்தைக்குச் சொந்தமான பொருட்கள் என்றுள்ளது. 1964ல் இருந்து தொடங்கி மரபுரிமை என்ற சொல்லுக்கான விளக்கம் தொடர்பிலும் அது சார்ந்த உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பிலும் பரந்தளவிலான புலமைசார் உரையாடல்கள் நடந்து வருகின்றன. அச்சொல்லின் அடர்த்தியும் அதிகரித்து வருகிறது. எனினும் இக்கட்டுரையின் விரிவஞ்சி அச்சொல்லுக்கான அர்த்தத்தை பின்வருமாறு எளிமையாக விளங்கிக் கொள்ளலாம்.

ஒரு சமூகம் தலைமுறைகள் தோறும் பேணி வரும் தூலமான மற்றும் சூக்குமமான அம்சங்களின் தொகுப்பே மரபுரிமை என்று பொதுவாக அழைக்கப்படுகிறது. அதன் பிரயோக நிலையில் கூறின் மரபுரிமை எனப்படுவது இறந்த காலத்திற்கு உரியது. மரபுரிமைப் பேணுகை என்பது நிகழ்காலத்திற்குரியது. எனவே மரபுரிமையைப் பேணுவது என்பது நிகழ்காலத்தின் நோக்கு நிலையிலிருந்து இறந்த காலத்தை நிர்வகிப்பதுதான். அதாவது இதை இன்னும் ஆழமாகச் சொன்னால் நிகழ்காலத்திற்குரிய சமூக, பொருளாதார, அரசியல், உளவியல் நோக்கு நிலைகளிலிருந்து இறந்த காலத்தைப் பேணுவதே மரபுரிமைப் பேணுகையாகும். இதன்படி நிகழ்காலத்தில் அரசியல் சமூகப்பொருளாதார நிகழ்ச்சிநிரல்கள் எவையோ அவற்றிற்கேற்ப மரபுரிமைச் சொத்துக்களும் ஒன்றில் பேணப்படும் அல்லது சிதைக்கப்படும் அல்லது அழிய விடப்படும் அல்லது முன்னிறுத்தப்படும் அல்லது பின்தள்ளப்படும். உதாரணமாக சில ஆண்டுகளுக்கு முன்பு ஆப்கானில் தலிபான்களின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் புத்தர் சிலைகள் சேதமாக்கப்பட்டதை இங்கு சுட்டிக்காட்டலாம்.

மேற்கண்ட விளக்கத்தின் அடிப்படையில் இலங்கைத்தீவில் தற்போதுள்ள அரசியல் சமூகப் பொருளாதார உளவியல் நிகழ்ச்சிநிரல் எதுவென்று பார்ப்போம். 2009மேக்குப்பின்னிருந்து ‘ஒரே நாடு ஒரே தேசம்’ என்ற கோசம் முன்னிறுத்தப்படுகிறது. யாழ்ப்பாணம் மிருசுவில் சந்தியிலும், தின்னவேலி ஆலடிச் சந்தியிலும் படை முகாம்களில் பச்சை வர்ண முகப்புச் சுவர்களில் மேற்படி வாசகம் முன்பு எழுதப்பட்டிருந்தது. இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ தொலைத்தொடர்பு சேவையான மொபிட்டல் மேற்படி சுலோகத்தைப் பயன்படுத்தியது. இவ்வாறு யுத்த வெற்றி வாதமானது எப்படித் தமிழ்த் தரப்பு ஞாபகங்களை அழித்து வெற்றி பெற்ற தரப்பின் நினைவுச் சின்னங்களையும் வெற்றிச் சின்னங்களையும் நிறுவுகிறது என்று மாலதி டி அல்விஸ் ஒரு கட்டுரையில் எழுதியுள்ளார். 2009 இற்;குப் பின்னர் தமிழ்ப் பகுதிகளுக்கான உல்லாசப் பயணத்துறை எனப்படுவது யுத்த வெற்றி வாதத்தின் ஒரு பகுதிதான்.அது உல்லாசப் பயணிகளை வெற்றி பெற்ற தரப்பின் மரபுரிமைச் சின்னங்களையும் யுத்தவெற்றிச் சின்னங்களையும் நோக்கி வழிநடத்திச்செல்லும் ஒன்றாகக் காணப்படுகிறது.

இந்த யுத்த வெற்றிவாதச் சுலோகமானது மத கலாச்சாரத் தளங்களில் ‘ஒரே இனம் ஒரே மதம் ஒரே மொழி’ என்றவாறாகப் பிரயோகிக்கப்படுகிறது. மரபுரிமைச் சொத்துக்களைப் பாதுகாக்கும் அரச உபகரணங்களில் ஒன்றாகிய தொல்லியற் திணைக்களம் இந்த நிகழ்ச்சி நிரலையே முன்னெடுத்து வருகிறது.  2009ற்குப் பின் யுத்தத்தை வேறு வழிகளில் தொடரும் அரச உபகரணங்களில் தொல்லியற் திணைக்களமும் ஒன்று.  இது மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்குள் வருகிறது.  இதில் நிறைவேற்று அதிகாரமுடைய அதிகாரிகள் அநேகர் சிங்களவர்களே. இத்திணைக்களத்திற்கு இப்பொழுது பொறுப்பாக இருப்பவர் ஒரு பிக்கு.

ஆனால் 2009ற்குப் பின்னிருந்துதான் தொல்லியற் திணைக்களம் ஒரே இனம் ஒரே மதம் ஒரே மொழி என்ற நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்து வருகிறது என்பதல்ல. அதற்கு முன்னரே பல தசாப்தங்களாக அத்திணைக்களத்தின் நிகழ்ச்சிநிரல் அதுதான்.கலாநிதி யூட் பெர்னாண்டோ, நிரா விக்கிரமசிங்கபோன்ற புலமையாளர்கள் இது தொடர்பாக எழுதியுள்ளார்கள்.1977இற்குப் பின்னிருந்து அரசாங்கத்தின் தேசியவாத மற்றும் புதிய தாராண்மைவாத பொருளாதாரக் கொள்கைகளோடு சேர்ந்து இப்போக்கு மேலெழுந்ததாக அவர்கள் கூறுகிறார்கள். யூட் பெர்னான்டோ 2015 மார்ச் மாதம் கொழும்பு ரெலிகிராப்பில் ‘மரபுரிமையும் தேசிய வாதமும் – சிறீலங்காவின் விஷம்’ என்ற தலைப்பில் மிக விரிவான ஒருகட்டுரை எழுதியுள்ளார்.அக்கட்டுரையில் இது தொடர்;பான தகவல்களைத் தொகுத்துத் தந்துள்ளார்.

https://www.colombotelegraph.com/index.php/heritage-nationalism-a-bane-of srilanka/?fbclid=IwAR2E6z4DuaUvcG4EkBSAZtfsV7MQrHukSGuNoVvIU485yTAF1b4zB3ycJek

1977ல் யுனஸ்கோவின் உதவியோடு முன்னெடுக்கப்பட்ட கலாச்சார முக்கோணத் திட்டத்தில் எப்படி தமிழ் மக்களின் மரபுரிமைச் சொத்துக்கள் பின்தள்ளப்பட்டன என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாகப் பொலநறுவைப் பிரதேசத்தில் காணப்பட்ட இந்து சமய மரபுரிமைச் சொத்துக்களுக்கு போதிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார். இதையொத்த ஒரு கருத்தை சுஜாதா அருந்ததி மீகமவும் சுட்டிக்காட்டியிருக்கிறார். 1800களில் நிகழ்த்தப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் பொலநறுவைப் பிரதேசத்தில் சுமார் பதினைந்து சைவ ஆலயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன என்றும் இப்பொழுது அவ்வாலயங்களில் மிகச் சிலவற்றையே காணமுடிகிறது என்றும் சுஜாத்தா கூறுகிறார்.

கலாநிதி யூட் பெர்ணான்டோ மற்றொரு விடயத்தையும் தொட்டுச்செல்கிறார். மகாவலி அபிவிருத்தித்திட்டத்தின் பின்னாலுள்ள இனச்சாய்வுடைய நிகழ்ச்சி நிரலே அது. சிங்கள மக்களின் பெருமைக்குரிய மரபுரிமைச் சொத்துக்களில் ஒன்று நீர்ப்பாசன நாகரீகமாகும். ஆனால் இந்த மகிமைக்குரிய மரபுரிமைச்சொத்தை நவீன காலத்தில் ஓர் ஆக்கிரமிப்புத் திட்டமாக சிங்கள அரசியல்வாதிகள் மாற்றியமைத்திருக்கிறார்கள். மகாவலி அபிவிருத்தித்திட்டம் எனப்படுவது இனச்சாய்வுடையது. அது தமிழ் பகுதிகளில் குறிப்பாக முல்லைத்தீவில் அண்மை ஆண்டுகளாக நீரைக் கொடுத்து நிலத்தைப் பறிக்கும் ஒரு சூழ்ச்சித் திட்டத்தை முன்னெடுத்து வருவதாக தமிழ் மக்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.

இவ்வாறு தொல்லியல் திணைக்களம்,உல்லாசப் பயணத்துறை, புத்த சாசனத்தைப் பாதுகாப்பதற்கான அரச கட்டமைப்புக்கள, மகாவலி அபிவிருத்தித்திட்டம,; பள்ளிக்கூடப் பாடப் புத்தகங்கள் போன்ற அனைத்தும் சிங்கள – பௌத்த மரபுரிமைச் சொத்துக்களைப் பாதுகாப்பதோடு தமிழ் மக்களின் மரபுரிமைச் சொத்துக்களை ஒன்றில் அழிய விடுகின்றன அல்லது அழித்து விடுகின்றன. இந்த நிகழ்ச்சி நிரலின் பின்னணிக்குள் வைத்தே கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் கோவில் விவகாரத்தையும் விளங்கிக்கொள்ள வேண்டும்.

மரபுரிமைச் சொத்துக்களைப் பாதுகாக்கும் உரிமை எனப்படுவது எல்லா விதத்திலும் ஒரு கூட்டுரிமைதான். அது ஒரு மக்கள் கூட்டத்திற்கு பிறப்பினடியாக உரித்தாக உள்ள பண்பாட்டு உரிமைகளில் ஒன்றாகும். தமிழ் மக்களுக்கு அவர்களுடைய கூட்டுரிமைகளை உறுதிப்படுத்தும் ஒரு தன்னாட்சி கட்டமைப்பு இல்லாதவரையிலும் தமது மரபுரிமைச் சொத்துக்களைப் பாதுகாப்பது சவால்கள் நிறைந்ததாகவே இருக்கும். வெடுக்குநாரிமலையிலிருந்து கன்னியா வெந்நீரூற்று வரையிலும் இதுதான் நிலைமை.தமிழ் மக்கள் ஓர் அரசற்ற தரப்பு. ஆனால் அரசுடைய சிங்களத் தரப்பு ஒரே இனம் ஒரே மதம் ஒரே மொழி என்ற நிகழ்ச்சி நிரலை அரசின் உபகரணங்களுக்கூடாக முன்னெடுக்கும் போது அதிலும் குறிப்பாக அதனை தமக்கு வசதியான சட்டங்களுக்கூடாக முன்னெடுக்கும் போது அதை எதிர்ப்பதற்கு தமிழ் மக்களிடம் பொருத்தமான ஒரு கட்டமைப்போ அல்லது பொறிமுறையோ இல்லை.

இதில் கன்னியா வெந்நீரூற்று விவகாரம் ஓர் உதிரிப்பிரச்சினையல்ல. அது ஓர் ஒட்டுமொத்த யுத்த வியூகத்தின் ஒரு சிறு பகுதியே. வெடுக்குநாரி மலையிலும், குடும்பி மலையிலும் தமிழ் மக்களின் மரபுரிமைச் சொத்துக்கள் ஆக்கிரமிப்படுகின்றன. முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் கோவிலிலும் நாவற்குழி புகையிரத நிலையத்திற்கு அருகேயும் மரபுரிமை ஆக்கிரமிப்பு ஒன்று நடக்கிறது. மகாவலி எல் வலயம் எனப்படுவதும் அப்படியொன்றுதான். தமிழ் பகுதிகளில் உள்ள இடப்பெயர்களை சிங்களப் பெயர்களால் பிரதியீடு செய்வதும் தென்னிலங்கையில் தமிழ் மொழிபெயர்ப்புகள் தூஷணங்களாகக் காணப்படுவதும்உல்லாசப் பயணத்துறை யுத்த வெற்றிவாதத்தின் நீட்சியாகக் காணப்படுவதும் மரபுரிமை மீறல்கள்தான்.இக்கட்டுரை எழுதப்படும் இக்கணத்திலும் எங்கேயோ ஓரிடத்தில் தமிழ் மரபுரிமைச்சொத்து ஒன்று சிதைக்கப்படக் கூடும் அல்லது சதுரம் வட்டமாக மாற்றப்படக்கூடும்.

தொல்லியல் திணைக்களத்தின் ஆக்கிரமிப்புக்கள் மட்டுமல்ல கல்முனையில் ஒரு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த முடியாமல் இருப்பதும் அதற்கெதிரான போராட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான தேரர்கள்; உள்நுழைந்ததும் இதன் ஒரு பகுதிதான். அரசியல் கைதிகளை விடுவிக்க முடியாமலிருப்பதும், காணாமலாக்கப்பட்டவர்களுக்குத் தீர்வு கிடைக்காமலிருப்பதும் இதன் ஒரு பகுதிதான்.

இவை மட்டுமல்ல யாழ் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் அகற்றப்பட்ட விதமும் இதன் ஒரு பகுதிதான். யாழ்ப்பாணத்தை ஈழத்தமிழர்களின் பண்பாட்டுத் தலைநகரம் என்று கூறுவார்கள். அப்பண்பாட்டுத் தலைநகரத்திலுள்ள மிகப்பெரிய உயர்கல்வி நிறுவனத்தின் தலைவர் அவர். அவரைப் பதவியிலிருந்து அகற்றிய விதம் நாகரிகமானதல்ல. ஒரு கல்லூரி அதிபரைக்கூட அப்படி அகற்ற முடியாது. ஒரு பண்பாட்டுத் தலைநகரத்தின் உயர்கல்வி நிறுவனத்தின் தலைவரை அப்படி அகற்றுவது என்பது அத்தலைநகரத்தின் பண்பாட்டுச் செழிப்பையும் உயர்கல்விப் பாரம்பரியத்தையும் அவமதிப்பதுதான். அதுவும் ஒரு மரபுரிமை சார்ந்த விவகாரம்தான். அதற்கெதிராக யாழ்ப்பாணத்தின் கருத்துருவாக்கிகளோ சிவில் சமூகங்களோ பெரியளவில் எதிர்ப்பைக் காட்டவில்லை. துணைவேந்தரின் பதவி என்பது ஓர் அரசியல் நியமனம். அதை நீக்குவதும் ஓர் அரசியல் தீர்மானம்தான். இது தொடர்பில் அதிகம் எதிர்;த்திருக்க வேண்டியது அரசியல்வாதிகள்தான். ஆனால் யார் அப்படிப்பட்;ட எதிர்ப்பைக் காட்டினார்கள்?  இவற்றையெல்லாம் உதிரி உதிரியாகக் கையாளக்கூடாது. ஓர் ஒட்டுமொத்த வியூகத்தின் கீழ் யுத்தம் வேறு வழிகளில் எதிர்ப்பின்றி முன்னெடுக்கப்படுகிறது. இதைத் தமிழ் மக்களும் ஒட்டுமொத்த வியூகமொன்றின் மூலமே எதிர்கொள்ள வேண்டும்.

மரபுரிமையும் வரலாறும் ஒன்றல்ல.ஆனால் மரபுரிமையைப் பாதுகாப்பது என்பது அதன் பிரயோகநிலையில் வரலாற்றுத் தொடர்ச்சியைப் பாதுகாப்பதுதான். அதாவது பாரம்பரிய தாயகத்தைப் பாதுகாப்பதுதான். தமிழ் மக்களை ஒரு தேசமாகக் கட்டியெழுப்புவதற்கான கூட்டு உளவியலை வனைவதில் தொன்மங்கள் அல்லது மரபுரிமைக்கு முக்கிய பங்குண்டு. மரபுரிமைச் சொத்துக்களைப் பாதுகாக்கும் உரிமை எனப்படுவது எல்லா விதத்திலும் ஒரு கூட்டுரிமைதான்.தமது தேர்தல் விஞ்ஞாபனங்களிலும் கோஷங்களிலும் தாயகம் – தேசியம் – தன்னாட்சி என்று கூவிய அரசியல்வாதிகள் கன்னியாபிள்ளையார் கோயிலும்; உட்பட ஏனைய எல்லா மரபுரிமை தலங்களையும் பாதுகாக்க என்ன செய்யப் போகிறார்கள்? #நிலாந்தன் #திருகோணமலை #கன்னியாவெந்நீரூற்று#தமிழ்மரபுரிமைச்சொத்துக்கள் #Kinniyavenniruttu

 

http://globaltamilnews.net/2019/125576/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.