Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நூல் மதிப்புரை - ஈழக்கதவுகள்,தமிழின் அடையாளங்கள்,சங்க காலத் தமிழர் சமயம்,சித்தண்ண வாயில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நூல் மதிப்புரை

ஈழக்கதவுகள்

2002 அக்டோபர் திங்களில் யாழ் நகரில் நடைபெற்ற "மானுடத்தின் தமிழ்க்கடல்" மாநாட்டுக்குச் சென்று வந்த சூரிய தீபன் நமக்கு ஈழக் கதவுகளைத் திறந்துவிட்டிருக்கிறார். இது ஒரு பயண நூல் அல்ல. தமிழீழத்தின் ஐம்பதாண்டுக் கால வரலாற்றைப் பதிவு செய்யும் வரலாற்று நூல்கூட அல்ல. தமிழீழ மக்களின் தணியாத விடுதலை வேட்கையையும் வீர உணர்வுகளையும் வடித்துத் தரும் வீர காவியம் என்று குறிப்பிடுவதே சரியாக இருக்கும்.

வியத்நாமிலும் கியூபாவிலும், பாலஸ்தீனத்திலும் நடைபெற்ற கொடுமைகளை எதிர்த்துக்குரல் கொடுத்தவர்கள் கூப்பிடு தூரத்தில் நடைபெறும் கொடுமைகளைக் கண்டும் காணாமல் இருக்கும் அவலத்தை நூலின் முன்னுரையில் சுட்டிக்காட்டும் சூரிய தீபன் உலகம் ஆதிக்கக்காரர்களை மாவீரர்களாகப் பார்க்கும் விந்தையைக் கண்டு வியப்படைகிறார். கொழும்பு விமான நிலையத்திலேயே இலங்கையில் நடப்பது இராணுவ ஆட்சி என்றும அது எவரையும் மதிக்காத ஆட்சி என்றும் தெரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது. வெடிகுறித்த எச்சரிக்கைகளும் புதையுண்டு கிடக்கும் தொடர்வண்டிப் பாதைகளும் தமிழீழ மக்கள் சமாதானத்தைக் கண்டு ஒரு தலைமுறைக்கு மேல் ஆகிவிட்டது என்னும் உறுத்தலான உண்மையை உணர்த்துகின்றன.

இலங்கைப் பேரினவாதம் எப்படி அமைதி விரும்பிகளான தமிழர்களைப் போராளிகளாக மாற்றிற்று என்று விரிவாக எடுத்துரைக்கிறார் நூலாசிரியர். "எப்போதும் ரண ஈரம் அழியாத பச்சைப் புண் ஏற்பட்ட அனுபவம்,. நினைக்கையில் என் இதயத்தில் இப்போதும் நெருப்புக் காந்துகிறது, "என்கிறார் ஈழத் தமிழர் ஒருவர் அமைதி காப்பதற்காகவென்று இலங்கை மண்ணில் நுழைந்த இந்தியப் படை ஈழத்துப் போராளிகளைக் கொன்று குவித்து, தமிழ் மக்களின் உடைமைகளைச் சூறையாடிய கொடுமையை ஆதாரங்களுடன், இந்திய படைத் தலைவர்களின் வாய்மொழி மூலமாகவே விளக்குகிறார். அந்தப் படையை உக்கிரமாக எதிர்கொண்ட பெண் புலிகளின் வீரத்தை எடுத்துரைக்க வார்த்தையில்லை. நூறு நூறு பெண்கள் தரைப் புலிகளாய், கடற்புலிகளாய், கரும் புலிகளாய் வீரச்சமர் புரிந்துகொண்டிருப்பதை அறிய நெஞ்சங்கள் பெருமிதத்தால் விம்முகின்றன.

சட்டத்தின் ஆட்சி என்பது இலங்கை மண்ணைவிட்டு குவிப்பதென்றால் வெளியேறி இரண்டு தலைமுறைக்கு மேல் கடந்துவிட்டது. தமிழர்களைக் கொன்று குவிப்பதென்றால் சட்டம், இராணுவ விதிகள், நீதி, நியாயம், நெறிமுறைகள் எல்லாவற்றையும் ஒரேடியாகக் குழிதோண்டிப் புதைத்துவிட்டு உலத்தின் மனித நேய அமைப்புகளின் குரலை இலங்கை அரசு மூர்க்கமாகப் புறக்கணிக்கும் ஆணவத்தை ஆயிரக்கணக்கான தமிழ் மகக்ள் காரணமில்லாமல், கேள்விமுறையில்லாமல் புதைக்கப்பட்டிருக்கும் செம்மணிப் புதைகுழிகள் பற்றிய கட்டுரை வெட்டவெளிச்சமாக்குகிறது.

அமைதி ஒப்பந்தம் நடைமுறையில் இருப்பதாகக் கூறுப்படும் காலத்திலும் இராணுவம் நடத்தும் அட்டுழியங்களைக் கண்டு கொதிக்கும் யாழ் மக்கள் கூறுவது இதுதான்:-

"எங்களுக்கு ஆயுதம் தாருங்கள். ஆயுதம் தாங்கிப் போரிடப் பயிற்சி அளியுங்கள். யுத்தக் களத்தில் போராளிகள் மட்டுமே நின்று போரிட வேண்டியதில்லை. நாங்களே எதிரிகளை எதிர்கொள்வோம்."

சூரிய தீபனின் நூலைப் படித்து முடித்தப் பிறகு நம் மனத்தில் தோன்றுவது வியப்பா? மலைப்பா? பெருமிதமா? வேதனையா? உளளக் குமுறலா? இவை எதுவுமே இல்லை. தடைகள் அனைத்தையும் தாண்டி இவர்கள் நிச்சயம் வென்று காட்டுவார்கள் என்ற நம்பிக்கைதான் மேலோங்கி நிற்கிறது.

- பேரா. அ. அய்யாசாமி

ஈழக் கதவுகள் - சூரிய தீபன் - தோழமை வெளியீடு, 5டி பொன்னமபலம் சாலை, கே.கே. நகர், சென்னை-600 078. பக்கம் 160, விலை ரூ.100/-

தமிழின் அடையாளங்கள்

பேராசிரியர் க. நெடுஞ்செழியன் எழுதியுள்ள இந்த நூல் நாம் இதுவரை கண்டும் கேட்டுமிராத பல புதிய அடையாளங்களைத் தக்க ஆதாரங்களுடன் தெரிவிக்கிறது. தமிழர் வழிபாடு வளமை வழிபாடு-வீர வழிபாடு-அறிவு வழிபாடு என்று மூன்று வகைப்படும் என்றும் அந்த மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்புடையன என்றும் எடுத்தியம்புகிறது முதல் கட்டுரை. கொற்றவை வழிபாட்டில் தொடங்கி தமிழர் வழிபாடு ஐயனார் வழிபாடாகப் பரிணாம வளர்ச்சி பெற்றதையும விளக்குகிறார். ஐயனாருக்குரிய யானை ஊர்தி பின்பு முருகனுக்கு ஊர்தியாயிற்று. கொற்றவை வழிபாடுபோலவே முருக வழிபாடு மிகத் தொன்மையானது என்று இரண்டாம் கட்டுரையில் நிறுவுகிறார். திருப்பரங்குன்றத்தில் வானியல் இயக்கங்கள் ஓவியமாகத் தீட்டப்பட்டிருந்தன என்று கூறித் தமிழரின் வானியலறிவு குறித்து விரிவாக ஆய்வுமேற்கொள்கிறது அதே கட்டுரை?

முச்சங்கங்கள் இருந்ததற்கான ஆதாரங்கள் இல்லையென்பவர்களின் கூற்றுகளை முறியடித்து இலக்கியச் சான்றுகள் வரலாற்றுச் சான்றுகள் அகழாய்வுச் சான்றுகள் என்று பல சான்றுகள் தந்து மூன்று சங்கங்களும் இருந்தன என்னும் உண்மையை நிறுவுகிறது. "முச்சங்க வரலாறு" என்னும் கட்டுரை. ஆதிச்ச நல்லூரில் கிடைத்த தாழி இவருக்குக் கணக்கற்ற செய்திகளைத் தருகிறது. அறிஞர்கள் பலரும் எடுத்துக்காட்டியுள்ள நற்றிணைப் பாடல் இவருக்குத் தமிழ்ச் சமுதாய அமைப்பைப் பற்றிய பல செய்திகளை அறிவிக்கிறது. சிலப்பதிகாரம் ஆசீவக சமயத்திற்கு இலக்கிய வடிவம் தந்துள்ள நூல் என்ற அடிப்படையில் அதிலுள்ள நற்செயல் கோட்பாட்டினை ஆழமான ஆய்வுக்கு உட்படுத்துகிறது வேறொரு கட்டுரை.

பேராசிரியர் நா. வானமாமலையைத் தலை சிறந்த தமிழறிஞராகப் போற்றி இலக்கிய ஆய்வுக்கு அவர் தந்துள்ள கொடையை வியந்து போற்றும் நெடுஞ்செழியன் அவரிடமுள்ள குறைகளையும் சுட்டிக்காட்டுவது அவர்தம் சான்றாண்மைக்குச் சான்று பெரியார் பற்றிய இவரது கட்டுரை இந்திய மெய்யியலை ஆய்வு செய்து அதில் பெரியாருக்குரிய ஒப்பற்ற இடத்தை விளக்குகிறது. இது ஓர் அரிய ஆராய்ச்சி நூல்.

"தமிழரின் அடையாளங்கள்", க. நெடுஞ்செழியன், பக்கம் 168, விலை ரூ.80/-

சங்க காலத் தமிழர் சமயம்

சங்க காலத் தமிழர் சமயம், சைவமும் இல்லை, வைணமும் இல்லை, ஆசீவகமே என்பது பேராசிரியர் க. நெடுஞ்செழியனின் கருத்து. இந்தக் கருத்தை எண்ணற்ற இலக்கிய, வரலாற்று, மானிடவியல், புவியியல் சான்றுகள் தந்து ஐயத்திற்கு இடமின்றி நிறுவுகிறார். இந்தியாவில் முதன் முதல் நிறுவப்பட்ட சமயம் ஆசீவகமே என்பதும் அதை நிறுவியவர்கள் தமிழர்களே என்பதும் இவர் கருத்து. சங்கப் புலவர்களான மதுரை ஓலைக் கடையத்தனார் நல்வெள்ளையரின் தற்செயலியம், பக்குடுக்கை நன்கணியாரின் இயல்புக் கோட்பாடு, மற்கலி கோசாலரின் ஊழியல் என்னும் மூன்று கோட்பாடுகளும் இணைந்து உருவானதே ஆசீவகம்.

ஐயனார் வழிபாடே தமிழின் தொன்மையான வழிபாடு என்பதும் ஐயனார் கோவில்களில் மூன்று கோலங்களில் அமர்ந்திருப்போர் ஆசீவகத்தின் நிறுவனர்கள் மூவருமே என்பதும் இன்றைய தமிழகத்திலுள்ள சிவன், திருமால், பிள்ளையார் கோயில்கள் பல தொடக்கத்தில் ஐயனார் கோவில்களாக இருந்தவைதாம் என்பதும் இவர் தெரிவிக்கும் உண்மைகள். சிலப்பதிகாரத்தில் வரும் பாசாண்டச் சாத்தன் முழு முதற் கடவுள் நிலைக்கு உயர்த்தப்பட்டிருப்பதை எடுத்துக்காட்டி, சாத்தன் ஐயனாரே என்று விளக்கியுள்ளார். சாத்தானுக்கு இந்த ஏற்றத்தை நல்கும் சிலப்பதிகாரம் சைவக் காப்பியமே அல்ல என்பதும் ஆசீவகத்தைப் பின்பற்றுவது என்பதும் இவரது மற்றொரு முடிவு.

சமணர் என்னும் சொல் ஆசீவகம், சமணர் இருகூறாரையுமே குறிக்கும் பொதுச் சொல்லாயினும் அது சிறப்பாக ஆசீவகர்களையே குறிக்கும். அருகர் என்ற சொல் சைனரையும் பவுத்தரையும் குறிக்கும். ஆசீவகர் வாழ்ந்து வந்த இடம் பாழி எனப்படும். அருகரின் வாழிடம் பள்ளி எனப்படும், பாழிகள், பள்ளிகள் அனைத்தையும் திருஞானசம்பந்தர் இடித்துத் தரைமட்டமாக்கி அங்கு சிவாலயங்களை உருவாக்கினார். அவர் காளாமுகச் சைவத்தைச் சேர்ந்தவர். காளமும் வைதீகச் சார்புடையது. அப்பரது சமயமான காபாலிகம் உலகாய்தம் சார்ந்தது, மிகவும் தொன்மையானது இறுதியில் வைதீகத்தால் விழுங்கப்பட்டது. அப்பர் பற்றிய கட்டுரையில் இவ்வுண்மைகள் விளக்கப்படுகின்றன.

கொற்றவையே தமிழகத்தின் பழமையான தெய்வம். அவளுக்குரிய அடையாளங்கள் பலவும் சிவன் மேலேற்றிச் சொல்லப்பட்டன. ஆயினும் தமிழரின் தாய்வழிச் சமுதாயத்தில் கொற்றவைக்கு இருந்த தலைமை முருகனுக்கு மாறியது என்று விளக்குகிறது ஒரு கட்டுரை.

தமிழ் நாட்டின் சமூகவியல் வரலாறு முறையாக எழுதப்படுவதற்கான முயற்சிகள்கூடத்தொடங்கப் படாத இந்த நிலையில் இத்தகைய அரியதொரு ஆராய்ச்சி நூலினை வழங்கிய பேராசிரியரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

"சங்காலத் தமிழர் சமயம், க. நெடுஞ்செழியன், பக்க்ம 196, விலை ரூ.90/-

சித்தண்ண வாயில்

பாண்டியன் கிரிவல்லபனின் ஆட்சியில் வெளியிட்ட கல்வெட்டில் "அண்ணல் வாயில்" என்று தெளிவாகக் குறிப்பிட்டிருப்பதால் சித்தர்களாகிய அண்ணல்கள் கோயில்கொண்டுள்ள இவ்வூரின் பெயர் "சித்தண்ண வாயில்" என்று கொள்வதே முறை, "சித்தன்னவாசல்" என்பது பொருத்தமாகப்படவில்லை என்று கூறும் பேராசிரியர் க. நெடுஞ்செழியன் அண்ணல்கள் என்று குறிப்பிட்டுள்ள ஆசீவகர்களின் பெருமைகளை விரிவாக உரைக்கிறார். அவர்கள் பேரண்டங்களின் தோற்ற ஒடுக்கங்களை அறிவியல் நோக்கில் கண்டுணர்ந்த சாங்கியக் கோட்பாட்டினர். கடுந்தவ நெறியை மேற்கொண்டவர்கள். அரசவையில் இடம்பெற்றிருந்தவர்கள். அவர்களே சமணர் என்றழைக்கப்பட்ட ஆசீவகர் அழிவெண்பிறப்பைக் கடந்த ஆசீவக சமய நிறுவனர்களின் சிலைகளும் ஓவியங்களுமே சித்தண்ணவாசலில் இருப்பன என்பது ஆசிரியர் கண்ட முடிவு. சித்தண்ண வாயில் மற்கலி கோசாலர் வீடு பேறடைந்த இடமாக இருக்கலாம் என்று இவர் கருதுவது பொருத்தமாகவேபடுகிறது.

ஆசீவகம் தொடக்கத்தில் சைன பவுத்த சமயங்களுக்குக் கடும் போட்டியாகத் திகழ்ந்தாலும் காலப்போக்கில் பவுத்தத்திற்கும் ஆசீவகத்திற்கும் நல்லுறவு ஏற்பட்டது. ஆனால் ஜைன-ஆசீவக எதிர்ப்புக் குறையவில்லை. ஆசீவகம் பெரிதும் பாதிக்கப்பட்டது. பின்னர் காபாலிக காளாமுகத்தவர்களின் வன்முறையால் நிலை குலைந்து போயிற்று. அதேபோல் வைதிக நெறியினரான காளாமுகத்தினரின் கொடுமை வைணவத்தையும் தாக்கிற்று. எனவே இவ்விரு சமயங்களுக்கும் தற்காலிகமாக இணக்கம் ஏற்பட்டது. இதனையே சிற்பங்களுக்கு இடையே உள்ள நாமங்கள் காட்டுகின்றன என்பது இவரது முடிவு.

சைனர்களின் முதல் திருத்தங்கரராகப் போற்றப்படும் ஆதிநாதர் சைனர்களாலும் சைவர்களாலும் ஆசீவகர்களாலும் ஒரு சேரப் போற்றப்படுகிறார். அவர் ஒரு பொது மரபின் மூல ஊற்று. எனவேதான் மற்கலி கோசாலர் தாம் தோற்றுவித்த சமயத்திற்கு ஆதிநாதரை முதல் திருத்தங்கரராக ஏற்றுக்கொள்கிறார் என்பது இந்த நூலில் தெளிவாக்கப்படும் ஒரு உண்மை.

ஆழமான-நடுநிலைமையான ஆராய்ச்சிக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த நூல்களை அறிவுலகம் வரவேற்குமாக.

சித்தண்ண வாயில், க. நெடுஞ்செழியன், பக்கம் 120, விலை ரூ.60,

மூன்று நூல்களும் வெளியீடு, பாலம், இ/7, பாரத் அடுக்ககம், ஆர்.வி. நகர், அண்ணா நகர் கிழக்கு, சென்னை - 600 102.

- பேராசிரியர் அ. அய்யாசாமி

-தென்செய்தி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.