Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்த் தேசிய அரசியலின் செல்நெறி: சாணக்கியமா, சறுக்கலா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசிய அரசியலின் செல்நெறி: சாணக்கியமா, சறுக்கலா?

Editorial / 2019 செப்டெம்பர் 19 வியாழக்கிழமை, பி.ப. 07:00 Comments - 0

-இலட்சுமணன்  

ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு நாள் நெருங்குகையில், ஏட்டிக்குப் போட்டியாகப் பிரகடனங்களும் பிரசாரங்களும் சூடு பிடித்துள்ளன. இந்த வேளையில், தமிழ்த் தேசிய அரசியலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் பங்காளிகளும் ஒருபுறமாகவும், சி. வி விக்னேஸ்வரனும் சுரேஷ் பிரேமசந்திரனும் பிறிதொரு புறமாகவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்னொரு புறமாகவும் தமிழ்த் தேசியத் தேரினை வடம் பிடித்து இழுக்கின்றனர்.  

தங்கள் தங்கள், சுயநல அரசியல் இலாப நட்டக் கணக்குகளுக்கு ஏற்ப, தமிழ்த்தேசிய அரசியலைப் பயன்படுத்த முனைந்த ஒரு போக்கின் விளைச்சலையே, ‘எழுக தமிழ்’  நிகழ்வின் நடத்தைக் கோலங்கள், தமிழ் மக்களுக்கு வெளிக்காட்டி நிற்கின்றன.

தமிழர் உரிமை தொடர்பாகக் குரல் கொடுக்கும் தமிழ்த் தலைவர்களாகத் தமிழ் மக்களுக்குத் தம்மை அடையாளப்படுத்தும், அடையாளப்படுத்த முனைந்து நிற்கும் இத் தலைமைகள், தமிழர்களது அரசியல், உரிமை நலன்களை எந்தளவுக்கு உணர்வு பூர்வமாகக் கருதிற்கொண்டு செயற்படுகிறார்கள் என்பது, தமிழ் மக்களை விட, இவர்களின் மனச்சாட்சிக்கு மிகமிக நன்றாகத் தெரியும்.  

‘போராட்ட வடிவங்கள் மாறும்; போராட்டம் மாறாது’ என்பது, விடுதலைக்காகப் போராடிய இனங்கள் கற்றுத்தந்த வரலாற்றுப் பாடம். இந்த வரலாற்றுப் பாடத்தைத் தமது அரசியல் நலன்சார் நாடகமாக மாற்ற முனைவது, இன்றைக்குத் தமிழினத்தின் சாபக்கேடும் வேதனையும் ஆகும். 

இந்த வேதனையில், ‘வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல்’  தமிழர் உரிமை தொடர்பாகத் தாமே உரிமையோடும் உணர்வோடும் குரல் கொடுப்பதாக ஒப்பாரி வைக்கும் இவர்கள் எவரிடமும், தமிழர் பிரச்சினை தொடர்பான, முறையான வேலைத்திட்டங்கள் எதுவுமில்லை. 

ஆனால் இவர்கள், ஏட்டிக்குப் போட்டியாகத் தமிழரின் பலம் வாய்ந்த அமைப்பாகக் கருதப்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை, தமது வாய்க்கு வந்தபடி ‘வறுத்து எடுப்பதில்’ ஒருவரை மிஞ்சி ஒருவர் ஜாம்பவான்களாகத் திகழ்கின்றார்கள். 

கூட்டமைப்பை வாய்க்கு வந்தபடி விமர்சிக்கும் இவர்கள், தங்கள் வேலைத்திட்டங்கள் என்ன என்பதையும் அவை எதுவரை சிங்களத் தேசத்திடமும் சர்வதேசத்திடமும் தமது கட்சிகள் சார்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளன என்ற எந்தவொரு விவரத்தையும் இதுவரை ஊடகங்கள் வாயிலாகவோ, நேரடியாகவோ வெளிபடுத்தவில்லை. 

இந்த இலட்சணத்தில், தமக்குக் கிடைக்காத பதவி, கூட்டமைப்பில் இருப்பவருக்குக் கிடைத்த வயிற்றெரிச்சலின் வெளிப்பாடு தான், இவர்களது மிகமிக மலினத்தனமான அரசியல். தமிழ் இனத்தின் உரிமை எனும் வெற்றுக் கோச அரசியலாக இன்று பரிணமித்துள்ளது. இது இவர்களது சாணக்கியமா அல்லது சறுக்கலா? 

இத்தகையதொரு நிலைமையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இந்த உதிரிக் கட்சிகள் யாரை திருப்திப்படுத்த ஊடகப் பேட்டிகளை வழங்குகிறார்கள் என்பது, தமிழ் மக்களிடையே உள்ள மிகப்பெரிய வினா? இதனால் இவர்களால் தீர்வைப் பெற்றுக் கொடுக்கவும் முடியாது; பெற்றுக்கொடுக்க ஒன்றிணைந்து போராடவும் முடியாது. இது இவர்களது அரசியல் சாணக்கியமா அல்லது சறுக்காலா?  

இத்தகையதோர் அரசியல் களத்தில், ‘எழுக தமிழ்’ நிகழ்வைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கையாண்ட முறைமை, தமிழ் மக்கள் மத்தியில் ஒருபக்கம் ஆச்சரியத்தையும் மறுபக்கத்தில் ஆதங்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஏனெனில், தமிழர்களின் உணர்வெழுச்சிப் போராட்டமாகவும் பிரகடனமாகவும் காலத்துக்கு காலம் முன்னெடுத்து வரப்படும் ‘பொங்கு தமிழ்’ நிகழ்வின் தொடர் வழியாக, ‘எழுக தமிழ்’ பார்க்கப்படுகின்றது. 

இந்தச் சூழலில், சுயநல அரசியல் கட்சி சார்பு நிகழ்வாக, ‘எழுக தமிழ்’ நிகழ்வு நோக்கப்பட்டதன் விளைவு, “நாங்கள் ஆதரவு” என்பதுடன், தமிழ்த் தேசியத்தின் அடையாளமாகத் திகழும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நழுவிவிட்டது.  இதனை புளொட்டும் அடியொற்றியது. 

இந்தச் சூழலில், தமிழர் உரிமைப் பிரகடனம் என்பது, கட்சி அரசியல் பேதங்களுக்கு அப்பாற்பட்டது என வலியுறுத்தப்பட்ட போதும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதல், அனைத்துத் தமிழ்க் கட்சியினதும் நோக்கம், தமது சொந்த அரசியல் சுயநலன்கள் என்பதே, சகல நடவடிக்கைகளிலும் உறுதிப்படுத்தப்பட்டு வருகின்றது. 

ஏனெனில், உரிமை அரசியலின் இருப்பையே மூலதனமாக கொண்ட இந்த அரசியல் கட்சிகள், ‘ஆளை ஆள் வெட்டி விடும்’ சுயலாப நோக்கம் காரணமாக, மக்கள் ஒன்று சேர்வதைப் பிரித்தெடுத்துத் தடுத்தனர். இந்தச் சுயலாப அரசியல்தான் தமிழர்களின் அரசியல் சாணக்கியமா அல்லது சறுக்கலா? என்பதைத் தமிழ் மக்கள் இதயசுத்தியுடன் தீர்மானிக்கும் காலம் வந்துவிட்டது.

தமிழ்த் தேசிய விடுதலைப் போர் மௌனிக்கப்பட்டு, சர்வதேச ரீதியாக பேசுபொருளாக்கப்பட்டு, ஜெனீவா வரை சென்று, தடைகளும் தாமதங்களும் மேற்கிளம்பியுள்ள சூழல், ஒரு தசாப்தத்துக்கு மேலாக நீடித்து வருகின்றது.  

தனிநாடு, சமஷ்டி, உள்ளக சுயநிர்ணயம்,  மாகாண சபை முறைமை எனப் பல தீர்வுகள் பேசுபொருளாக இருந்தும், நடைமுறைக்கு வந்தது 13ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் கிடைத்த மாகாண ஆட்சி முறைமை மட்டுமே. இந்த முறைமை, இலங்கை - இந்திய அரசாங்கங்களால் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காணுதல் தொடர்பாகச் செய்யப்பட்ட ஒப்பந்தம் ஆகும். 

இந்த நிலையில், இந்த ஒப்பந்தத்தின் மூலம், தமிழர் உரிமை பூரணப்படுத்தப்படவில்லை என, விடுதலைப் புலிகள் தொடர்ந்து போராடி, வலுவான நிலையை அடைந்த போது, சர்வதேச ஆதரவுடனும் இந்திய ஆசீர்வாதத்துடனும் தமிழர் உரிமைப்போர் மௌனிக்கப்பட்டது. 

இத்தகைய சூழ்நிலையில், பூகோள ரீதியில் அரசியல் நலன்களுக்கு அப்பால், இந்திய அயலுறவுக் கொள்கை - நலன்கள் சிதைவுறாத வகையில், ஒரு தீர்வு முன்வைப்பது என்பது, இலங்கைத் தீவின் அரசியல், சமூக, பொருளாதார, பூகோள, கேந்திர முக்கியத்துவம் கருதி ஒருபோதும் சாத்தியப்படமாட்டாது. 

இந்த நிலைமை, ஜெனீவாத் தீர்மானங்களின் இழுத்தடிப்புக்குச் சான்றுபகர்கின்றது எனலாம். மேலும், இந்த உள்ளார்ந்த உண்மைகளைச் சரியாகப் புரிந்து கொண்ட சிங்கள அரசாங்கங்களும் மிகத் தெளிவாகத் தமிழர் பிரச்சினை தொடர்பில் இழுத்தடித்து, காய்நகர்த்தல்களைச் செய்வதுடன், தமது இனத்துவ, கட்சி நலன் சார் நடவடிக்கைகளுக்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் பயன்படுத்தி வருகிறது.

தமிழர்களுக்குத் தீர்வு வழங்கும் நல்லாட்சி அரசு, சிங்களத்தைக் காப்பாற்ற நாடகமாடி, தமிழரை ஏமாற்றி, நடுத்தெருவில் நிறுத்தியுள்ளது. இதற்குக் காரணம், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின், ‘எழுதப்படாத ஒப்பந்தங்கள்’ என்ற சரணாகதி அரசியல் பாரம்பரியம் ஆகும். 

இந்தக் குருட்டுச் சரணாகதி அரசியல் பாரம்பரியம், இந்தத் தேர்தலிலும் பேசுபொருளாகும் சாத்தியப்பாடு தென்பட்ட போதும், த.தே.கூ, தம்மீது உள்ள விமர்சனங்களைத் தவிர்ப்பதற்காக ‘எழுதப்படும் ஒப்பந்தம்’ பற்றிப் பேசுகிறது. இது தமிழ்த் தேசியத்தின் சாணக்கியமா அல்லது சறுக்கலா? என்பது தமிழினம் மத்தியில் எழுந்துள்ள வினாவாகும்.

இன்று ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் பலம் பொருந்தியவர்கள் எனக் கருதப்படுபவர்களில், தமிழர்களின் எதிர்ப்பைச் சம்பாதிக்காதவர் சஜித் பிரேமதாஸ; ஏனெனில், போர்க்குற்றவாளி, தமிழ்மக்கள் அழித்தொழிப்பு நடவடிக்கையிலோ, ஆட்கடத்தல் நடவடிக்கையிலோ ஈடுபடாதவர். பிரித்து அழிக்கும், இழுத்தடிக்கும் தந்திரோபாயங்களைக் கையாளாதவர். 

இவர், புரையோடிப்போன ஊழல், கொலை அரசியலுக்குள் சிக்காத புதுமனிதன்; இவரது சிந்தனைகளும் மாறுபடலாம்.  அதற்கான வாய்ப்புகள் அதிகம். இதுவே, இலங்கை மக்களின் அநேகரின் இன்றைய தேர்வும் ஆகும். 

ஆனால், ரணிலுக்குக் கடமைப்பட்ட கூட்டமைப்போ, ரணிலை ஆதரிக்க முனைந்தாலும் தவிர்க்கமுடியாமல் சஜித்தை ஆதரிக்க வேண்டிய சூழ்நிலையே உள்ளது.

ஏனெனில், ஐ.தே.கட்சியுடன் இணைந்துள்ள சிறுபான்மைக் கட்சிகளும் ஏனைய கட்சிகளும் ஐ.தே.க பெரும்பான்மையினரும் சஜித் பக்கமே உள்ளனர். ஆனால், எல்லாவிதங்களிலும் விரும்பியோ விரும்பாமலோ, ஐ.தே.கயைத் த.தே.கூ ஆதரிக்க வேண்டிய தேவை உள்ளது. ஆனாலும், மக்களுக்கு ஒரு கண்துடைப்புக்காக , “வேட்பாளரைத் தெரிவு செய்யுங்கள், எல்லா வேட்பாளர்களுடனும் பேசுவோம்; தீர்வை எழுத்துமூலம் தர வேண்டும்” எனப் பல கோஷங்களை முன்வைத்து வருகின்றது. 

இந்த வெற்றுக் கோஷங்களின் பின்னணியில், ரணில் ஜனாதிபதியானால் என்ன, சஜித் ஜனாதிபதியானால் என்ன, தமிழர் அரசியல் உரிமை என்பது, வெறும் எட்டாக் கனியே. ஏனெனில், இன்று நாடு இனவாதமும், மதவாதமும், பிரதேசவாதமும் சூழ, வெளிநாட்டு அரசியல் வியூகங்களுக்குள் சிக்குண்டு உள்ளது. 

உலகவங்கி, சர்வதேச கோட்பாடுகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழலில், சர்வதேச அரசியல் குத்து வெட்டுகளும்  இராஜதந்திர நலன்களும் தமிழருக்கு சுயநிர்ணய உரிமையைப்  பெற்றுக் கொடுப்பதற்கான வாய்ப்புகள் இப்போது இல்லை. ஒன்று, இணக்க அரசியல் அல்லது, இந்தியா தந்த மாகாண முறைமை. இதைத் தவிர வேறு எதுவும் இப்போதைக்குக் கிடைக்கப்போவதில்லை. அதற்கும் மேலாக, சர்வதேசமும் இந்தியாவும் கொடுக்க விடப் போவதுமில்லை. இது சஜித்துக்கும் நன்கு புரியும்; ரணிலுக்கும் நன்கு புரியும்; தமிழ் அரசியல் தலைமைகளுக்கும் நன்கு புரியும். 

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தமிழ்த்-தேசிய-அரசியலின்-செல்நெறி-சாணக்கியமா-சறுக்கலா/91-238896

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.