Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டிரெண்டான ‘தலைவி’ ஹாஷ்டேக்: ஜெயலலிதா முதல் திரைப்படத்திற்கு பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா? - 68 சுவாரஸ்ய தகவல்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

டிரெண்டான ‘தலைவி’ ஹாஷ்டேக்: ஜெயலலிதா முதல் திரைப்படத்திற்கு பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா? - 68 சுவாரஸ்ய தகவல்கள்

மு. நியாஸ் அகமதுபிபிசி தமிழ்
"அவர் ஜெயலலிதா இல்லை"டிரெண்டான 'தலைவி' ஹாஷ்டேக்: 68 சுவாரஸ்ய தகவல்கள்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை குறித்து வரும் பயோபிக் 'தலைவி' திரைப்படத்தின் டீஸர் நேற்று வெளியானது. இதனைத் தொடர்ந்து தலைவி என்ற வார்த்தை இந்திய அளவில் டிரெண்டும் ஆனது.

Thalaivi என்ற ஹாஷ்டாகில் கருத்து பகிர்ந்த சிலர், படத்தில் ஜெயலலிதாவாக நடித்திருக்கும் கங்கனா ரணாவத் ஜெயலலிதா போல இல்லை என்று பலர் கருத்து பகிர்ந்து இருந்தனர்.

சில நெட்டிசன்கள், அது கங்கனா ரணாவத் போலவே இல்லை என்று கலாய்த்திருந்தனர்.

"அவர் ஜெயலலிதா இல்லை"டிரெண்டான 'தலைவி' ஹாஷ்டேக்: 68 சுவாரஸ்ய தகவல்கள்படத்தின் காப்புரிமைFACEBOOK/IYAN.KARTHIKEYAN

சரி. இந்த கருத்துகள் ஒரு புறம் இருக்கட்டும், ஜெயலலிதா குறித்த சுவாரஸ்யமான தகவல்களை இந்தக் கட்டுரையில் காண்போம்.

1. 'அம்மா' என்று அதிமுக தொண்டர்களால் அழைக்கப்பெறும் ஜெயலலிதா, 1948ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 24ம் தேதி மாண்டியா மாவட்டத்தில் உள்ள மெலுகோடேவில் பிறந்தார். அப்போது அந்த பகுதி மைசூர் மாகாணத்தில் இருந்தது.

2. அவருடைய பாட்டியின் பெயரான 'கோமளவல்லி' என்ற பெயர் முதலில் சூட்டப்பட்டது.

3. பின் அவருடைய ஒரு வயதில் அவருக்கு ஜெயலலிதா என்ற பெயரும் சூட்டப்பட்டது. மைசூரில் ஜெயலலிதா குடும்பத்தினர் இரண்டு வீடுகளில் தங்கி இருந்தனர். ஒரு வீட்டின் பெயர் 'ஜெயவிலாஸ்' மற்றொரு வீட்டின் பெயர் 'லலிதா விலாஸ்'. இதனை சேர்த்துதான் ஜெயலலிதா என்று பெயர் சூட்டினர்.

4. ஜெயலலிதா சர்ச் பார்க் என்று அழைக்கப்படும் புனித வளனார் பள்ளியில் படித்தார். பத்தாம் வகுப்பில் சிறந்த மதிப்பெண்களை பெற்று மாநில அளவில் இடம்பிடித்தார்.

5. ஜெயலலிதா சரளமாக தமிழ், ஆங்கிலம், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி மொழிகளைப் பேசுவார்.

ஜெயலலிதா

6. "தமிழ் எனது தாய்மொழி. மைசூரில் சிறு வயதில் சில காலங்கள் வரை இருந்ததால் அங்கு வீட்டில் வேலையாட்களுடனும், அக்கம் பக்கத்தில் உள்ள சிறுமிகளுடனும் பேசிப் பேசி கன்னடத்தைக் கற்றுக்கொண்டேன்" என்று கூறி உள்ளார்.

7. நான்கு வயதில் ஜெயலலிதா கர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்கு குடிபெயர்ந்தார்.

8. ஜெயலலிதா தன்னுடைய சிறு வயதிலேயே எஸ்.ஜே. சரஸா என்ற சிறந்த ஆசிரியரிடம் பரதம் பயில தொடங்கினார்.

9. மே மாதம் 1960ஆம் ஆண்டு, மைலாப்பூர் ரசிக ரஞ்சினி சபாவில் அவர் நடன அரங்கேற்றம் நடைபெற்றது.

ஜெயலலிதா Image captionஎம்.ஜி.ஆர், கருணாநிதி, சிவாஜியுடன்

10. இந்த அரங்கேற்றத்தில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவாஜி கணேசன் பங்கேற்றார். ஜெயலலிதாவின் நடனத்தைப் பார்த்து வியந்த சிவாஜி, ஜெயலலிதாவுக்கு திரைப்படத்துறையில் நல்ல எதிர்காலம் இருப்பதாக ஜெயலலிதாவின் அம்மா சந்தியாவிடம் கூறினார். ஆனால், அப்போது அதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

11. நடனம் மட்டுமல்ல இசையிலும் தேர்ச்சி பெற்றவர் ஜெயலலிதா. கிளாசிக்கல் மியூசிக், மேற்கத்திய இசை தெரியும். பியானோ வாசிக்கவும் பயின்றிருக்கிறார்.

12. தொடக்கத்தில் ஜெயலலிதாவுக்கு சினிமாவில் விருப்பம் இல்லாமல் இருந்தாலும், திரைப்படத்துறை அவரை விடுவதாக இல்லை. ஆம், ஒரு முறை சந்தியா தன்னுடன் ஜெயலலிதாவை திரைப்படத் தளத்துக்கு அழைத்துச் சென்றபோது இறைவி பார்வதியின் சிறு வயது வேடத்தில் நடிக்க நேரிட்டது.

13. பதின் பருவத்தில் ஜெயலலிதா கிரிக்கெட் வீரர் பட்டோடியின் தீவிரமான ரசிகர்.

14. ஜெயலலிதா தன்னுடைய 15 வயதில் கன்னடப் படமான 'சின்னட கொம்பே' திரைப்படத்தில் அறிமுகமானார்.

கடந்து செல்க யூடியூப் பதிவு இவரது BBC News Tamil
எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

முடிவு யூடியூப் பதிவின் இவரது BBC News Tamil

15. படிப்பு எக்காராணத்தினாலும் கெடக்கூடாது. படப்பிடிப்பு பள்ளி விடுமுறை காலமான இரண்டு மாதத்தில் முடிய வேண்டும் ஆகிய நிபந்தனைகளை ஜெயலலிதாவின் அம்மா சந்தியா படப்பிடிப்பு குழுவுக்கு விதித்தார்.

16. ஜெயலலிதாவுக்கு வழக்கறிஞர் ஆக வேண்டும், கல்லூரி பேராசிரியர் ஆக வேண்டும் என பல சமயங்களில் பல கனவுகள் இருந்திருக்கின்றன.

ஜெயலலிதா Image captionபெரியாருடன்

17. ஜெயலலிதா பிரெஞ்சுப் பெண்ணாக வேடமேற்று நடித்த ஓர் ஆங்கில நாடகத்தில் அவருக்கு வில்லனாக நடித்தவர் சோ.

18. கன்னடத்தில் வெற்றிபெற்ற ஜெயலலிதாவின் திரைப்படங்கள், சின்னட கொம்பெ (1964), மவன மகளு (1965), நன்ன கர்டவ்யா (1965), படுகுவா டாரி (1966).

19. ஜெயலலிதா, 1965 - 1980 இடையேயான காலக்கட்டத்தில் தென் இந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக இருந்தார்.

20. இந்த காலக்கட்டத்தில்தான் அவர் நூற்றுக்கும் மேற்பட்ட திடைப்படங்களில் நடித்தார். அதில் பெரும்பாலான படங்கள் நூறு நாட்களுக்கும் மேலாக ஓடின.

21. தமிழக அரசின் கலைமாமணி விருதினை 1972ஆம் ஆண்டு பெற்றார் ஜெயலலிதா.

22. ஜெயலலிதா தன்னுடைய முதல் திரைப்படத்திற்கு சம்பளமாக பெற்ற தொகை ரூபாய் மூவாயிரம்.

23. அரசியலில் தனக்கு சிறு வயது முதலே ஆர்வம் இருந்ததாக பின் அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளார், "அரசியலில் தீவிரமாக இறங்கி, பெரிய அரசியல்வாதியாக வேண்டுமென்ற ஆசை சிறு வயது முதலே இருந்தது. ஒருவேளை, நான் சினிமாவுக்கு வராமல் இருந்திருந்தால்... இன்று தேர்தலுக்காக எங்காவது பேசி வெளுத்து வாங்கி கொண்டிருப்பேன்" என்றுள்ளார்.

ஜெயலலிதா Image captionஅண்ணாவுடன்

24. ஜெயலலிதா அசாத்திய தைரியம் கொண்டவர் என்பதற்கு உதாராணம், திரைப்படங்களில் நடிக்க தொடங்கிய காலத்தில் அவர் அளித்த ஒரு பேட்டி. வார இதழ் ஒன்றுக்கு, "என் பூர்வீகம் தமிழகம். நான் தமிழச்சி" என்ற தொனியில் இருந்தது அந்த பேட்டி. இந்த பேட்டி சில தீவிர கன்னட அமைப்புகளை கோபமடைய செய்தது. ஜெயலலிதா கர்நாடகாவுக்கு படப்பிடிப்புக்கு வரும்போது நூற்றுக்கணக்கானோர் அவரை முற்றுகை இட்டு அந்த பேட்டிக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிறார்கள். ஆனால், ஜெயலலிதா மறுத்துவிட்டார். "நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்? நான் தமிழச்சிதான்" என்று கூறினார்.

25. அரசியலில் உச்சம் தொட்டப்பின் அவரை 'அம்மா' என்று அனைவரும் அழைத்தாலும், இறுதிவரை அவருக்கு நெருக்கமானவர்கள் அவரை 'அம்மு' என்றே அழைத்தனர்.

26. அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் 1982ம் ஆண்டு இணைந்தார் ஜெயலலிதா.

27. அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக 1983ம் ஆண்டு நியமிக்கப்பட்டார் ஜெயலலிதா.

28. உள்ளூர் அரசியல் மட்டுமல்ல, உலக அரசியல நிலவரங்களையும் தொடக்கம் முதலே கூர்ந்து கவனித்தவர் ஜெயலலிதா. "ஜெயலலிதாவிடம் அயர்லாந்து தேர்தல் பற்றியும் உரையாடலாம். மாசேதுங் பற்றியும் விவாதிக்கலாம்" என்கிறார், 1970-களில் ஜெயலலிதாவை அதிகமுறை பேட்டி கண்ட திரைஞானி.

29. ராஜ்ய சபா உறுப்பினராக 1984ல் தேர்வானார் ஜெயலலிதா.

ஜெயலலிதா Image captionஅன்னை தெரஸாவுடன்

30. ராஜ்ய சபாவில் அவருக்கு ஒதுக்கப்பட்ட இருக்கை எண் 185. இதே இருக்கைதான் சி.என். அண்ணாதுரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த 1963 காலக்கட்டத்தில் அவருக்கு ஒதுக்கப்பட்டது.

31. எங்கு இருந்தாலும் தன்னை சுற்றி இருப்பவர்களின் கவனத்தை ஈர்க்க கூடியவர் ஜெயலலிதா. ராஜ்ய சபாவில் அவருடைய கன்னிப் பேச்சு அனைவரையும் ஈர்த்தது. சக உறுப்பினரான குஷ்வந்த் சிங், 'அறிவுடைய அழகான பெண்' என்று ஜெயலலிதாவை புகழ்ந்தார். பிரதமராக இருந்த இந்திரா காந்தியும் ஜெயலலிதாவின் பேச்சால் ஈர்க்கப்பட்டார்.

32. ஒரு முறை கூட்டணி தொடர்பாக இந்திரா காந்திவுடன் பேச பத்திரிகையாளர் சோலைவுடன் ஜெயலலிதாவையும் அனுப்பி வைத்தார் எம்.ஜி.ஆர். இவர்களுக்கு இந்திரா காந்தி ஒதுக்கிய நேரம் வெறும் 10 நிமிடங்கள். ஆனால், அந்த சந்திப்பு 30 நிமிடங்களுக்கு மேலாக நீண்டது. அதற்கு ஒரே காரணம் ஜெயலலிதாவின் நாவன்மை.

33. ஆனால், இதே சந்திப்புதான் எம்.ஜி.ஆரின் கோபத்திற்கும் காரணமாக அமைந்தது. இந்திரா காந்தியை சந்தித்துவிட்டு வெளியே வந்தவுடன், சந்திப்பு குறித்து எம்.ஜி.ஆரிடம் தகவல் தெரிவிக்க சொன்னார் சோலை. ஆனால், அதை ஊதாசீனப்படுத்திய ஜெயலலிதா, எம்.ஜி.ஆரை தொலைப்பேசியில் அழைத்து தகவல் சொல்லவில்லை. இதனால், கடும் கோபமடைந்தார் எம்.ஜி.ஆர்.

34. 1984-ஆம் ஆண்டு மே மாதம் கொள்கைபரப்பு செயலாளர் பதவியை ராஜினாமா செய்து கடிதம் எழுதினார் ஜெயலலிதா. ஆனால், இந்த ராஜினாமாவை எம்.ஜி.ஆர் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், பின் இந்த ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டது.

35. இந்த காலக்கட்டத்தில் அதிமுக நாடாளுமன்ற குழுவின் துணை தலைவராக ஜெயலலிதா இருந்தார். இதிலிருந்தும் ஜெயலலிதாவை நீக்கினார் எம்.ஜி.ஆர். அப்போது எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்தார்.

ஜெயலலிதா

36. இதனை தொடர்ந்து ஜெயலலிதா அளித்த பேட்டி கட்சிக்கு உள்ளேயும், வெளியேயும் சர்ச்சைக்கு உள்ளானது. ஜெயலலிதா அந்த பேட்டியில் சொன்னது இதுதான், "கட்சிக்குள் என்ன நடக்கிறது என்று எம்,ஜி.ஆருக்கு தெரியவில்லை. கட்சிக்குள் சில குழுக்கள் தங்கள் சொந்த நலனுக்காக எம்.ஜி.ஆர் பெயரை பயன்படுத்திக் கொள்கின்றன" என்றார். இந்தப் பேட்டி எம்.ஜி.ஆர் கடும் கோபம் கொள்ள காரணமாக அமைந்தது.

37. இந்த கோபம் தணிந்து மீண்டும் செப்டம்பர் மாதம் 1985ம் ஆண்டு கட்சியின் கொள்கைபரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டார் ஜெயலலிதா.

38. எம்.ஜி.ஆர் - ன் இறுதி ஊர்வலத்தில் அவமானப்படுத்தப்பட்டார் ஜெயலலிதா. அதிமுக இரண்டாக உடைந்தது. ஓர் அணிக்கு ஜெயலலிதா தலைவராகவும், இன்னொரு அணிக்கு எம்.ஜி.ஆர்-ன் மனைவி ஜானகி தலைவராகவும் செயல்பட்டனர்.

39. ஜானகி சிறிது காலம் தமிழக முதல்வராக இருந்தார். ஆனால், மூன்று வாரங்களில் ஆட்சி கலைக்கப்பட்டது. இரட்டை இலை சின்னமும் முடக்கப்பட்டது, இதனை தொடர்ந்து நடந்த பொது தேர்தலில் ஜெயலலிதா அணி சேவல் சின்னத்திலும், ஜானகி அணி இரட்டை புறா சின்னத்திலும் போட்டியிட்டனர்.

40. ஜெயலலிதா அணி 27 இடங்களை கைப்பற்றியது. ஜானகி அணி 2 இடங்களை மட்டுமே பிடித்து படுதோல்வி அடைந்தது. பின், ஜானகி அணி ஜெயலலிதா அணியுடன் இணைந்தது. இரட்டை இலை சின்னமும் மீண்டும் கிடைத்தது.

41. 1989ம் ஆண்டு ஜெயலலிதா தமிழகத்தின் முதல் எதிர்கட்சி தலைவர் ஆனார்.

ஜெயலலிதா Image captionலால் பகதூர் சாஸ்திரியுடன்

42. மார்ச் 25, 1989-ம் ஆண்டு சட்டமன்ற கூட்டத்தில் அப்போது தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி பட்ஜெட் உரையை படித்துக் கொண்டிருந்த போது, கருணாநிதி பட்ஜெட் உரையை படிக்க கூடாது என்று ஜெயலலிதாவும், அதிமுக உறுப்பினர்களும் கூச்சலிட்டதாகவும், கருணாநிதியின் மூக்கு கண்ணாடியை தள்ளிவிட்டதாகவும் கூறப்படுகிறது.இதனை தொடர்ந்து ஜெயலலிதா, தன்னை சட்டமன்றத்தில் திமுக உறுப்பினர்கள் தாக்கியதாகவும், தன் புடவையை பிடித்து இழுத்ததாகவும் குற்றஞ்சாட்டினார். இனி முதல்வராக மட்டுமே சட்டமன்றத்திற்குள் வருவேன் என்று அப்போது சபதமேற்றார் ஜெயலலிதா.

43. சபதமேற்றது போலவே மீண்டும் முதல்வராகதான் சட்டமன்றத்திற்குள் வந்தார் ஜெயலலிதா. 1991 நடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக - காங்கிரஸ் கூட்டணி 225 இடங்களை கைப்பற்றி இமாலய வெற்றி பெற்றது. தமிழகத்தின் இரண்டாவது பெண் முதல்வராக சட்டமன்றத்திற்குள் நுழைந்தார் ஜெயலலிதா.

44. 1991 -1996 ஆட்சி காலத்தின் போது ஜெயலலிதா ஈட்டிய சொத்துகளுக்காகதான் பின் சிறை தண்டனை அனுபவித்தார் ஜெயலலிதா. இந்த வழக்கில்தான் இப்போது சசிகலா சிறையில் இருக்கிறார்.

45. ஜெயலலிதாவின் பெயர் கின்னஸ் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸில் இடம் பிடித்திருக்கிறது. துரதிருஷ்டமாக, இது நல்ல விஷயத்துக்காக அல்ல. ஆம், 1995-ஆம் ஆண்டு தன்னுடைய வளர்ப்பு மகனுக்கு மிக பிரம்மாண்டமாக 1.5 லட்சம் பேரை அழைத்து திருமணம் நடத்தினார். இதுதான் கின்னஸில் இடம் பிடித்தது. உலக ஊடகங்கள் அனைத்தும் இந்த பிரம்மாண்ட திருமணம் குறித்து எழுதி இருந்தன.

ஜெயலலிதா Image captionசோனியாவுடன்

46. கும்பகோணத்தில் 1992-ம் ஆண்டு மகாமகத்தில் ஜெயலலிதா தன் தோழி சசிகலாவுடன் கலந்து கொண்டார். அப்போது அவர் முதல்வராக இருந்தார். ஜெயலலிதா மகாமகம் குளத்தில் குளிக்கவும் செய்தார். அவரை பார்க்க ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டனர். இந்த கூட்ட நெரிசலில் சிக்கி ஏறத்தாழ 50-க்கும் மேற்பட்டோர் இறந்தனர்.

47. ஜெயலலிதா முதன்முறை முதல்வராக பொறுப்பேற்ற போது, அவர் சம்பளம் பெற மறுத்தார். "எனக்கு பல்வேறு விதங்களில் நல்ல வருமானம் வருகிறது. நான் மக்கள் சேவை செய்யதான் வந்துள்ளேன். எனக்கு சம்பளம் வேண்டாம்" என்றார். ஆனால், அரசாங்க ஊழியர் நிச்சயம் சம்பளம் பெற வேண்டும் என்ற அடிப்படையில் அவர் சம்பளமாக ஒரு ரூபாய் பெற்றுக்கொண்டார்.

48. 1996-ம் ஆண்டு தேர்தலில் படுதோல்வி அடைந்தது அதிமுக. அந்த தேர்தலில் அந்த கட்சி நான்கு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

49. கலர் டிவி ஊழல் வழக்கில் டிசம்பர் 2, 1996- ஆம் ஆண்டு ஜெயலலிதா கைது செய்யப்பட்டு 30 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். அந்த சமயத்தில் முறைகேடாக சொத்து சேர்த்தது உட்பட ஆறு வழக்குகள் அவர் மீது பதியப்பட்டது.

50. அதிமுக அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையிலான கூட்டணி அரசாங்கத்துக்கு வழங்கி வந்த ஆதரவை 1999-ம் ஆண்டு திரும்ப பெற்றதனால் அந்த அரசு கவிழ்ந்தது.

51. பிளசெண்ட் ஸ்டே வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்று பிப்ரவரி 2, 2000-ம் ஆண்டு தீர்பளித்த நீதிமன்றம், அவருக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனை விதித்தது.

ஜெயலலிதா Image captionபெரியாருடன்

52. ஜெயலலிதாவுக்கும் அவரது தோழி சசிகலாவுக்கும் டான்சி வழக்கில் சிறப்பு நீதிமன்றம் இரண்டு ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்தது.

53. மீண்டும் 2001 தேர்தலில் வெற்றி பெற்றது அதிமுக. முதல்வராக பொறுப்பேற்றார் ஜெயலலிதா. ஆனால், அவர் பதவியேற்பை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்.

54. சென்னை உயர் நீதிமன்றம் சில வழக்குகளிலிருந்து ஜெயலலிதாவை விடுவித்தப்பின் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றார் ஜெயலலிதா

55. 2004 நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைத்த அதிமுக அனைத்து தொகுதிகளையும் இழந்தது.

56. 2006 ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வியுற்ற ஜெயலலிதா, மீண்டும் 2011 தேர்தலில் வெற்றி பெற்றார்.

57. முறைகேடாக சொத்து சேர்த்த வழக்கில் 2014-ம் ஆண்டு ஜெயலலிதாவுக்கு எதிராக தீர்ப்பு வந்தது. நான்கு ஆண்டு சிறை தண்டனையும், ரூபாய் 100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.

58. மேல்முறையீட்டில் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார் ஜெயலலிதா.

59. ஆர்.கே நகர் தொகுதியில் 2015-ம் ஆண்டு போட்டியிட்டு வென்று மீண்டும் முதல்வர் ஆனார் ஜெயலலிதா.

ஜெயலலிதாபடத்தின் காப்புரிமைAFP

60. 2016- ம் ஆண்டு நடந்த பொது தேர்தலில் அதிமுகவே மீண்டும் வென்றது. ஜெயலலிதா முதல்வர் ஆனார்.

60. 2016- ம் ஆண்டு நடந்த பொது தேர்தலில் அதிமுகவே மீண்டும் வென்றது. ஜெயலலிதா முதல்வர் ஆனார்.

61. 32 ஆண்டுகளுக்கு பின், தொடர்ந்து இரண்டாவது முறை தமிழக முதல்வர் ஆனவர் என்ற பெருமைக்கு உரியவர் ஜெயலலிதா.

62. ஜெயலலிதா முதல்வர், கட்சியின் தலைவர் மட்டுமல்ல, நன்கு எழுத கூடியவரும் கூட. தாய் இதழில் தொடர் எழுதி இருக்கிறார்.

63. எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தை தொடங்கியபோது அதற்கு அதிக நிதி அளித்தவர்களில் ஜெயலலிதாவும் ஒருவர். நிதி அளித்ததோடு மட்டுமல்லாமல் சத்தணவு கூடங்களை அவ்வபோது பார்வையிட்டார்.

64. ஜெயலலிதா தன் சிறு வயதில் காதலுக்கு தூது சென்றிருக்கிறார். தி. நகர் சிவஞானம் தெருவில் வசித்த போது தன் வீட்டிற்கு அருகே வசித்த பெண்ணின் காதலுக்காக துது சென்றார் ஜெயலலிதா. அந்த பெண்ணின் காதலனிடம் ஜெயலலிதா பேசிக் கொண்டிருக்கும் போது, ஜெயலலிதா வீட்டு பால்காரர் பார்த்துவிகிறார். ஜெயலலிதாதான் அந்த பையனை காதலிக்கிறார் என்று தவறாக எண்ணி, யாருக்காக ஜெயலலிதா தூது சென்றாரோ அந்த வீட்டிற்கே சென்று, ஜெயலலிதாவின் நடவடிக்கை சரி இல்லை. இனி உங்கள் பெண்ணை அந்த பெண்ணுடன் சேர அனுமதிக்காதீர்கள் என்று சொல்லிவிடுகிறார். அந்த பெண்ணும் கடைசி வரை உண்மையை சொல்லவில்லை. தூது சென்றதால் தனக்கு கிடைத்தது கெட்ட பெயர்தான். "அந்த பெண் உண்மையை சொல்லி இருந்தால் கூட எனக்கு கெட்ட பெயர் கிடைத்து இருக்காது. அவருக்காக நான் தூது சென்றேன். ஆனால், அவர் எனக்கு துரோகம் இழைத்துவிட்டார். இதை நினைத்து சிறு வயதில் பல நாட்கள் அழுது இருக்கிறேன்" என்று ஜெயலலிதாவே பின் ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார்.

p04k7vvp.jpg
 
நடிகையிலிருந்து அரசியல்வாதியாக மாறிய சகாப்தம்

65. "இந்த உலகத்தின், மிகவும் கடினமான வேலை எனக்குப் பணிக்கப்பட்டாலும், நான் அதற்கு என்னைத் தயார் செய்துக்கொள்வேன்" - இது ஜெயலலிதா அடிக்கடி தம் நண்பர்களிடம் சொல்லும் வரிகள்.

66. சிறு வயது முதலே அன்பிற்காக மிகவும் ஏங்கி இருக்கிறார் ஜெயலலிதா. ஒரு பேட்டியில் ஜெயலலிதா, "நான் இதுவரை நிபந்தனையற்ற அன்பை உணர்ந்ததே இல்லை. கதைகளில், இலக்கியங்களில், திரைப்படங்களில் வேண்டுமானால் அத்தகைய நிபந்தனையற்ற அன்பு இருக்கலாம். ஆனால், அத்தகைய அன்பு நிஜவாழ்க்கையில் இருப்பதாக நான் கருதவில்லை" என்று கூறியுள்ளார்.

67. 1998-ம் ஆண்டு ஜெயலலிதாவிடம் சாமன்ய மக்கள், ஒரு வார இதழ் மூலம் சில கேள்விகளை முன் வைக்கிறார்கள். அதில் ஒன்று, "உங்களுக்கு பின் அதிமுகவின் தலைமை பொறுப்பை ஏற்க தகுதியானவர் யார் என்று கருதுகிறீர்கள்?". அதற்கு ஜெயலலிதா , "தகுதியானவர்கள் பலர் இருக்கிறார்கள். கழக உடன்பிறப்புகள் அதனை முடிவு செய்வார்கள்"என்றார்.

68. "நான் பல நரகங்களைத் தாண்டித்தான் இந்த இடத்துக்கு வந்து இருக்கிறேன்." இதுவும் ஜெயலலிதா தனக்கு நெருக்கமானவர்களிடம் அடிக்கடி சொல்லும் வாசகம்.

https://www.bbc.com/tamil/india-46450146

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.