Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமித் ஷா குழுவின் ஆர்கெஸ்ட்ரா பொய்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறப்புக் கட்டுரை: அமித் ஷா குழுவின் ஆர்கெஸ்ட்ரா பொய்!

25.jpg

எஸ்.வி.ராஜதுரை

பல இசைக்கருவிகளை இசைத்து ஒரே இசையை இசைப்பதை நாம் ‘ஆர்கெஸ்ட்ரா இசை’ என்கிறோம். ஓர் இசைப்படைப்பை உருவாக்கியவரை இசையமைப்பாளர் என்றும், அந்த இசைப்படைப்புக்கு உகந்த இசைக்கருவிகளைக் கூடுதலாகவோ குறைவாகவோ பயன்படுத்தி அதை நிகழ்த்துபவரை ‘நடத்துநர்’ (Conductor) என்றும் அழைக்கிறோம்.

இந்த மாதம் நிறைவேற்றப்பட்டுள்ள இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டம் என்ற அபஸ்வரங்கள் நிறைந்த இசையின் மூலகர்த்தா வி.டி.சாவர்க்கர் என்றால், அதில் சில சுரபேதங்களைச் சேர்த்து புதிய ராகம் போல ஒலிக்கச் செய்பவர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பினர். பல்வேறு பெயர்களில் இயங்கிவரும் அவர்களது பரிவாரத்தினர்தான் பல்வேறு இசைக்கருவிகளை இசைப்பவர்கள்; இந்த ‘ஆர்கெஸ்ட்ரா’வின் நடத்துநர் அமித் ஷா. அவர் கையில் இருப்பது குண்டாந்தடி. பல்வேறு இசைக்கருவிகள் இசைக்கப்பட்டாலும் அது இந்தியாவில் எல்லா இடங்களிலும் வெளிப்படுத்தும் இசை என்பது ஒரே சீரான, ஒரே மாதிரியான பொய்தான்.

இந்தியா - பாகிஸ்தான் மத அடிப்படையில் பிரிவினையா?

குடியுரிமைச் சட்டத் திருத்த சட்ட முன்வரைவை அமித் ஷா லோக் சபாவில் முன்வைத்துப் பேசியபோது, 1947இல் இந்தியாவும் பாகிஸ்தானும் மத அடிப்படையில் பிரிக்கப்பட்டதாகக் கூறினார். காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெய்ராம் ரமேஷ், அமித் ஷா வரலாறு கற்காமல் பேசுகிறார் என்றும், இரு தேசக் கொள்கையை முதன்முதலில் வைத்தவர் வி.டி.சாவர்க்கர்தான் என்றும் பதிலளித்தார். உண்மையில் அமித் ஷாவுக்கும் வரலாற்று ஞானம் உண்டு. அது இளம் வயதிலிருந்தே ஆர்எஸ்எஸ் தொண்டராக இருந்த காலத்தில் அவரது ஆசான்கள் கற்பித்த பொய் மூட்டைகள் என்னும் வரலாறு. இதைப் பற்றிக் கடந்த இரு வார காலமாக நாடெங்கும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. மேலும், ஜெய்ராம் ரமேஷுக்கும் சில வரலாற்று உண்மைகள் தெரியாமல் போய்விட்டன அல்லது அவற்றை அவர் சொல்லத் தயங்கினார் என்றே தோன்றுகிறது. இதைப் பற்றிப் பின்னர் காண்போம்.

இது ஒருபுறமிருக்க, குடியுரிமைச் சட்டத் திருத்தத்தைப் பற்றி பொதுமக்களுக்கு ‘விளக்கிச் சொல்வதற்காக’ சங் பரிவாரமும் பாஜகவும் நாடெங்கிலும் கூட்டங்களையும் பேரணிகளையும் நடத்தி வருகின்றன. 21.12.2019 அன்று தமிழகத்திலும் நடைபெற்ற பொதுக்கூட்டங்களிலும் ‘ஆர்ப்பாட்டங்களிலும்’ (இவற்றுக்கு ஆட்களை அனுப்பியவர்கள் ‘கூட்டணி தர்மத்தினர்’) பேசிய அக்கட்சித் தலைவர்கள் சிலராலும் அதே பொய்யைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை. அதாவது 1947இல் பிரிட்டிஷ் இந்தியா, முஸ்லிம் பாகிஸ்தானாகவும் இந்து இந்தியாவாகவும் பிரிக்கப்பட்டன என்று அவர்கள் கூறியதன் மூலம் இந்து மதம், இந்துத்துவம், இந்து சாதி முறை ஆகியவற்றை முற்றிலுமாக மறுத்த அண்ணல் அம்பேத்கர், ஒரு மதவாத இந்தியாவுக்கான அரசமைப்புச் சட்டத்தை வரைவதற்குத்தான் முக்கியப் பங்களிப்புச் செய்திருக்கிறார் என்ற கருத்தை மறைமுகமாகத் திணித்திருக்கிறார்கள்.

 

மத அடிப்படையில் ஒரு நாட்டை, தேசத்தை உருவாக்க வேண்டும் என்று 1940இல் ஜின்னா கோரிக்கை எழுப்புவதற்கு முன்பே, 19ஆம் நூற்றாண்டிலிருந்தே பிரிட்டிஷ் இந்தியா முழுவதும் இந்துக்களின் நாடாகவே இருக்க வேண்டும் என்ற குரல்கள் ஒலித்துக் கொண்டிருந்தன. பங்கிம் சந்திரர், அரவிந்தர், திலகர், லாலா லஜ்பதி ராய், மதன் மோகன் மாளவியா போன்றவர்கள் இந்து தேசியவாதிகளாகவே இருந்திருக்கின்றனர். கடைசி இருவரும்தான் இந்து மகா சபையைத் தோற்றுவித்தவர்கள். எனினும், இவர்களில் மிகுந்த இந்து மத வெறி பிடித்தவராகவும் இஸ்லாமிய வெறுப்புணர்வைக் கக்குபவராகவும் இருந்தவர் மதன் மோகன் மாளவியாதான்.

 

மராத்தியத்தில் தோன்றிய ஆர்எஸ்எஸ் அமைப்பு, வடஇந்திய மாகாணங்களில் வேரூன்றுவதற்கான தொடக்கக் கால உதவிகளை வழங்கியவர் மாளவியா. இந்து தர்மத்தையும் சம்ஸ்கிருதத்தையும் பாதுகாக்கும் ஒரே நோக்கத்துடன் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தைத் தொடங்கி, அதற்காக பிரிட்டிஷ் இந்திய அரசாங்கம், சமஸ்தான மன்னர்கள், உயரதிகாரிகள் ஆகியோரிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாயைத் திரட்டியவர் அவர். ஆர்எஸ்எஸ் அமைப்பு செயல்படுவதற்காக அப்பல்கலைக்கழக வளாகத்தில் தனியாக ஒரு கட்டடம் கட்டிக் கொடுத்தவர். நான்கு முறை அனைத்திந்தியக் காங்கிரஸின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், கடைசிவரை வர்ணதர்மத்தைக் காப்பதையே தம் இறுதி லட்சியமாகக் கருதியவர். எனினும், இந்துத்துவா என்னும் அரசியல், பண்பாட்டுத் தத்துவத்தை விளக்குவதற்கென்றே ஒரு தனி நூலை எழுதிய பெருமை வி.டி.சாவர்க்கருக்குத்தான் உண்டு.

30a.jpg

சாவர்க்கரின் இந்து தேசம்!

இந்தியா என்பது இந்துக்களுக்கு (இதில் பெளத்தர்கள், சமணர்கள், சீக்கியர்கள், பார்சிகள் எல்லாம் அடக்கமாம்!) மட்டுமே உரிய நாடு, மற்றவர்களெல்லாம் (கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும்) ஒன்று விருந்தினர்கள் அல்லது ஊடுருவியவர்கள் என்று ‘இந்துத்துவா - இந்துக்கள் யார்’ என்ற நூலில் 1923இல் அவர் எழுதினார். இந்தத் தத்துவத்தை மேலும் வளர்த்துச் சென்று, கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் ‘யவனப் பாம்புகள்’ என்றும் அவர்கள் இந்துக்களின் கலாச்சாரத்தை முற்றிலுமாக ஏற்றுக்கொண்டால் மட்டுமே இந்தியாவில் வாழ முடியும் என்றும் கூறியவர் ஆர்எஸ்எஸ் அமைப்பின் இரண்டாவது தலைவரும் அதன் தத்துவகர்த்தாவுமான எம்.எஸ்.கோல்வால்கர். நாஜி ஜெர்மனியில் ஹிட்லர் யூதர்களைக் ‘களையெடுத்ததன்’ மூலம் அந்த நாட்டைப் ‘புனிதமானதாக்கியதை’ சீரிய எடுத்துக்காட்டாகக்கொண்டு, இந்தியாவிலுள்ள ‘யவனப் பாம்புகள்’ விஷயத்திலும் அதைக் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்றும் போதித்தவர் அவர்.

வி.டி.சாவர்க்கர், பிரிட்டிஷாரின் நிபந்தனைகள் அனைத்துக்கும் அடங்கியொடுங்கிக் கொண்டிருந்த நாட்களில் (1923இல்) வெளியிடப்பட்ட ‘இந்துத்வா’ நூலில் இந்தியாவை 150 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டுகொண்டிருந்த பிரிட்டிஷாரைப் பற்றி ஒரு வரிகூட இல்லை என்பதையும், இரண்டாம் உலகப் போரின்போது அவர் பிரிட்டிஷ் இந்திய ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் வேலையில் ஈடுபட்டிருந்தார் என்பதையும் ‘மின்னம்பலத்தில்’ வெளியான ‘வீர்’ சாவர்க்கர் என்ற கட்டுரையொன்றில் கூறியிருந்தோம்.

 

அந்த ‘ஆள் சேர்க்கும்’ வேலை, உலகம் முழுவதையும் அச்சுறுத்திக்கொண்டிருந்த நாஜி ஜெர்மனி, பாசிச இத்தாலி, பாசிச ஜப்பான் ஆகியவற்றை முறியடிக்க வேண்டும் என்பதற்காக அல்ல; மாறாக, இந்துத்துவவாதிகள் எதிர்காலத்தில் பயன்படுத்திக் கொள்வதற்கான ராணுவப் பயிற்சி, போர்ப் பயிற்சி ஆகியவற்றைப் பெறுவதற்காகத்தான்.

பாகிஸ்தானுக்கு அடித்தளம் அமைத்த சாவர்க்கர்

1937இல் அகமதாபாத்தில் நடந்த 19ஆவது இந்து மகா சபை மாநாட்டின் தலைமையுரையில் சாவர்க்கர் கூறினார்:

“ஒன்றுக்கொன்று பகையுள்ள தேசங்கள் அருகருகே வாழ்ந்து கொண்டிருக்கும்போது சிறுபிள்ளைத்தனமான அரசியல்வாதிகள் இந்தியா ஏற்கெனவே நல்லிணக்கமுள்ள தேசமாக ஒன்றிணைக்கப்பட்டுள்ளது என்றோ, அப்படிச் செய்ய வேண்டும் என்ற ஆசையிலிருந்தாலே போதும் அதை ஒன்றிணைக்க முடியும் என்றோ கருதும் கடுமையான தவறிழைத்து வருகிறார்கள். இந்த நல்லெண்ணம் படைத்த, ஆனால் சிந்தனை செய்யாத இந்த நண்பர்கள் தங்கள் கனவுகளை, யதார்த்தங்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் அவர்கள் வகுப்பு மோதல்களைக் கண்டு பொறுமையிழந்து அவற்றுக்கான பொறுப்பை வகுப்புவாத அமைப்புகள்மீது சுமத்துகிறார்கள். ஆனால், வகுப்புவாதப் பிரச்சினைகள் என்று சொல்லப்படுபவை பாரம்பரியமாக நம்மிடம் வந்து சேர்ந்தவையும் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் நூற்றாண்டுகளாக இருந்து வந்துள்ளவையுமான கலாச்சார, மத, தேசிய பகைமைதான்… நாம் இதற்கு தைரியமாக முகம் கொடுப்போம். இன்று இந்தியா என்பதை ஒன்றுபட்ட தேசம் என்று கருத முடியாது. மாறாக இந்தியாவில் முதன்மையாக இந்துக்கள், முஸ்லிம்கள் என்ற இரு தேசங்கள் இருக்கின்றன என்றுதான் கருத வேண்டும்.”

 

வி.டி.சாவர்க்கர் இந்தக் கருத்துகளைக் கூறிய மூன்றாண்டுகளுக்குப் பிறகுதான் ‘பாகிஸ்தான்’ என்ற தனி நாடு வேண்டும் என்ற கோரிக்கை லாகூரில் 1940இல் நடந்த முஸ்லிம் லீக் மாநாட்டில் எழுப்பப்பட்டன. அந்த மாநாட்டில் அந்தப் பெயரையும் பிரிவினைக் கோரிக்கையையும் முன்மொழிந்தவர் அப்போது வங்காள மாகாணத்தின் பிரதமராக இருந்த ஏ.கே.பஸ்லுல் ஹக் (அக்காலத்தில் மாகாண முதலமைச்சர்கள் ‘பிரதமர்’ என அழைக்கப்பட்டனர்). தனது தலைமையுரையில் ஜின்னா, முஸ்லிம்கள் தனி தேசமாக அமைகிறார்கள் என்ற கருத்துக்கு ஆதரவாக, வி.டி.சாவர்க்கரின் 1937ஆம் ஆண்டு இந்து மகா சபைத் தலைமையுரையிலிருந்து மேற்கோள் காட்டினார்.30c.jpg

சாவர்க்கரை முந்திய இக்பால்

இங்கு, இளம் தலைமுறையினர் தெரிந்துகொள்வதற்காக சில வரலாற்றுத் தகவல்களைச் சொல்வது நம் கடமை. முதலாவதாக, முஸ்லிம் லீக் என்னும் கட்சி ஜின்னாவால் தொடங்கப்பட்டதல்ல. 1906இல் ஒரு கலாச்சார இயக்கமாகத் தொடங்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த ஜின்னா 1913ஆம் ஆண்டில் முஸ்லிம் லீக்கிலும் உறுப்பினராக இருந்தார் (இந்து மகா சபையைச் சேர்ந்த மதன்மோகன் மாளவியா, டாக்டர் பி.எஸ்.மூஞ்செ போன்றவர்கள் காங்கிரஸிலும் இருந்ததைப் போல). 1930ஆம் ஆண்டில், கவிஞரும் தத்துவ அறிஞருமான இக்பால்தான் முஸ்லிம்கள் தனியொரு தேசமாக அமைகிறார்கள் என்றும், பிரிட்டிஷ் இந்தியாவில் முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக வசிக்கும் மாகாணங்களைக் கொண்ட தனி முஸ்லிம் தேசம் உருவாக்கப்பட வேண்டும் என்ற கருத்தை முதன்முதலில் வைத்தவர். அதற்குக் காரணம், முஸ்லிம் விரோத மனப்பான்மை இந்துமத அமைப்புகள், அரசியல் கட்சிகள் ஆகியவற்றில் மட்டுமின்றி, காங்கிரஸுக்குள்ளும் இருந்ததுதான். ஆனால், அந்த தனி தேசத்துக்கு பாகிஸ்தான் என்ற பெயர் அப்போது சூட்டப்படவில்லை. இந்திய ராணுவத்தினரால் பாடப்பட்டு வரும் ‘ஸாரே ஜஹான் ஸே அச்சா, ஹிந்துஸ்தான் ஹமாரா’ என்ற பாட்டை எழுதியவர் இக்பால்தான்.

காங்கிரஸின் பங்கு

ஜின்னா காங்கிரஸ் கட்சியிலும் முஸ்லிம் லீக்கிலும் உறுப்பியம் வகித்தவர். 1916ஆம் ஆண்டில் லக்னோ நகரில் காங்கிரஸ் மாநாடும், முஸ்லிம் மாநாடும் ஒரே சமயத்தில் நடந்தன. அப்போது இந்து – முஸ்லிம் ஒற்றுமைக்காக ‘லக்னோ ஒப்பந்தம்’ உருவாயிற்று. அதன்படி மதச் சிறுபான்மையினர் உள்ள மாகாணங்களின் சட்டமன்றங்களில், மக்கள்தொகையில் அவர்களது விகிதம் எவ்வளவு உள்ளதோ, அதைவிடக் கூடுதலான பிரதிநிதித்துவம் தரப்பட வேண்டும் என்பது அந்த ஒப்பந்தத்தின் முக்கிய பகுதிகளில் ஒன்றாகும். இந்து - முஸ்லிம் ஒற்றுமை என்பதை உயர்த்துப் பிடித்துக்கொண்டிருந்தவர்தான் ஜின்னா. ஆனால், காங்கிரஸ் அந்த ஒப்பந்தத்தின்படி செயல்படவில்லை.

பிரிட்டிஷ் அரசாங்கம் கொண்டுவந்த ‘1935ஆம் ஆண்டு இந்திய அரசாங்கச் சட்டத்’தின்படி நடந்த பொதுத்தேர்தலில் அன்றைய ‘ஐக்கிய மாகாண’ (இன்றைய உத்தரப் பிரதேசம்) சட்டமன்றத்தில் தனிப்பெரும் கட்சியாக இருந்த காங்கிரஸ் தனது அரசாங்கத்தில் முஸ்லிம் லீக்கைச் சேர்ந்த இரண்டே இரண்டு பேரைக்கூடச் சேர்க்க மறுத்துவிட்டது. காங்கிரஸால் தான் அவமானப்படுத்தப்பட்டதாகக் கருதிய ஜின்னா, காங்கிரஸின் கடும் எதிரியாக மாறினார். 1940இல் லக்னோ நகரில் நடந்த முஸ்லிம் லீக் மாநாட்டில்தான் மேற்சொன்னவாறு ‘பாகிஸ்தான்’ பிரிவினைக் கோரிக்கை முதன்முதலாக எழுப்பப்பட்டது.

 

காங்கிரஸ் கட்சிக்குள் இருந்த இந்துப் பழைமைவாதிகளும், இந்து மகாசபை, ஆர்எஸ்எஸ். போன்ற இந்து மத வெறி அமைப்புகளும், அவர்களுக்கு நிதி உதவி செய்துவந்த இந்துத் தரகு வணிகர்களும் முதலாளிகளும் அன்று ஒன்றுபட்டிருந்த இந்தியாவில் முஸ்லிம்களுடன் அதிகாரப் பகிர்வு செய்வதற்கு முற்றிலும் மறுத்ததற்குப் பிறகுதான் ஜின்னாவின் தலைமையிலிருந்த அனைத்திந்திய முஸ்லிம் லீக் தனிநாட்டுக் கோரிக்கையை எழுப்பியது. அதேபோல பாகிஸ்தானைத் தனியாகப் பிரித்துக் கொடுத்துவிடுவதன் மூலம் தங்கள் நலன்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று உறுதியாக நம்பிய இந்தியப் பெருமுதலாளி வர்க்கத்தினரின் கூட்டமைப்பு - குறிப்பாக ஜி.டி.பிர்லா, லாலா சிறி ராம் போன்றவர்கள் - 1946ஆம் ஆண்டு இறுதியில் நிறைவேற்றிய தீர்மானமும் பாகிஸ்தான் பிரிவினைக்கு வழிவகுத்தது. காங்கிரஸ் கட்சிக்குள்ளிருந்த தலைவர்களில் பாகிஸ்தான் பிரிவினைக்கு முதலில் சம்மதம் தெரிவித்தவர் வல்லபபாய் படேல்தான். அந்தப் பிரிவினைக்கு காந்தியை சம்மதிக்க வைத்தவர்களில் முக்கியமானவர்கள் அவரும் சி.ராஜகோபாலாச்சாரியும் (ராஜாஜி) ஆவர்.

30d.jpg

முஸ்லிம் லீக் - இந்து மகா சபை கூட்டணி

1940ஆம் ஆண்டு லக்னோ முஸ்லிம் லீக் மாநாட்டில் ஜின்னா, சாவர்க்கரின் கருத்தை மேற்கோள் காட்டியது சாவர்க்கருக்கும் உவப்பானதாகவே இருந்திருக்கிறது. 1943இல் நாக்பூரில் நடந்த பத்திரிகையாளர் கூட்டத்தில் சாவர்க்கர் கூறினார்:

“ஜின்னாவின் இரு தேசக் கொள்கையுடன் எனக்கு சச்சரவு இல்லை. இந்துக்களாகிய நாங்கள் தனியொரு தேசம். இந்துக்களும் முஸ்லிம்களும் இரண்டு தனித்தனி தேசங்கள் என்பது ஒரு வரலாற்று உண்மை.”

 

அதுமட்டுமல்ல, இந்துத்துவவாதிகளால் வெறுக்கப்படும் முஸ்லிம்களின் கணிசமானோரைப் பிரதிநிதித்துவம் செய்த முஸ்லிம் லீக் கட்சியுடன் சேர்ந்து சாவர்க்கரின் தலைமையிலிருந்த இந்து மகா சபை சிந்து மாகாணத்திலும் வங்காளத்திலும் கூட்டணி அரசாங்கம் அமைத்தது. கான்பூரில் நடந்த இந்து மகாசபை மாநாட்டின் தலைமையுரையில் வி.டி.சாவர்க்கர் கூறினார்:

“நடைமுறை அரசியலிலும்கூட நியாயமான சமரசங்களைச் செய்துகொள்வதன் மூலம் முன்னேறிச் செல்ல முடியும் என்பதை இந்து மகா சபை அறிந்துள்ளது. அண்மையில் சிந்து மாகாண இந்து மகா சபை, முஸ்லிம் லீக்கிடமிருந்து வந்த அழைப்பின் பேரில் அங்கு கூட்டணி அரசாங்கத்தை நடத்த முஸ்லிம் லீக்குடன் சேர்ந்துகொள்ளும் பொறுப்பை ஏற்றுக்கொண்டது. வங்காள விஷயம் எல்லோருக்கும் நன்கு தெரிந்ததுதான். காங்கிரஸால் மிகவும் பணிந்து போய் தாஜா செய்ய முடியாமல் போன முஸ்லிம் லீக்கும்கூட, இந்து மகா சபையிடம் தொடர்பு கொண்டதுமே மிகவும் நியாயமான முறையில் சமரசத்துக்குட்பட்டதாகவும் நட்புடன் சேர்ந்து வேலை செய்யக்கூடியதாகவும் ஆகியதுடன் பிரதமர் பஸ்லுல் ஹக்கின் பிரதமர் பொறுப்பின் கீழும் நமது மதிப்புக்குரிய மகாசபைத் தலைவர் டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜியின் திறமையான வழிகாட்டுதலின் கீழும் கூட்டணி அரசாங்கம் இரண்டு சமுதாயங்களுக்குமே நன்மை பயக்கும் வகையில் ஓராண்டுக் காலம் வெற்றிகரமாகச் செயல்பட்டது.”

இந்தியா என்பது இந்துக்கள், முஸ்லிம்கள் என்ற இரு தனித்தனியான, ஒன்றுக்கொன்று பகையான தேசங்களைக் கொண்டது என்று மட்டுமல்ல; இந்தியாவிலுள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் லீக்தான் ஒரே பிரதிநிதி என்றும் அதேபோல இந்தியாவிலுள்ள எல்லா இந்துக்களுக்கும் இந்து மகா சபைதான் ஒரே பிரதிநிதி என்றும் கூறினார் சாவர்க்கர். இன்றைய உத்தரப் பிரதேசத்திலுள்ள மதுரா நகரில் நடந்த 22ஆவது இந்து மகா சபை மாநாட்டுத் தலைமையுரையில் கூறினார்:

“மேதகை வைஸ்ராய் அவர்கள் உணர்வுபூர்வமாகவும் தீர்மானகரமாகவும், இந்து சமுதாயத்தின் மிகச் சிறப்பான பிரதிநிதியாக இந்து மகா சபை இருக்கும் நிலையை அங்கீகரித்ததுடன்… முஸ்லிம் லீக் முஸ்லிம்களின் நலன்களையும் இந்து மகா சபை இந்துக்களின் நலன்களையும் பிரதிநிதித்துவம் செய்கின்றன என்ற முடிவுக்கு இறுதியில் வந்து சேர்ந்து கொண்டிருக்கிறார்.”

 

சாவர்க்கரின் மேற்சொன்ன கூற்றுகள் யாவும், மராத்தி மொழியில் வெளியான பின்வரும் புத்தகத்தில் உள்ளன: Savarkar, Samagra Savarkar Wangmaya: Hindu Rashtra Darshan, vol. 6, Maharashtra Prantik Hindusabha, Poona, 1963. இவற்றை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து தந்துள்ளவர் காந்தியவாதியான பேராசிரியர் ஷம்ஷுல் இஸ்லாம்.

30b.jpg

பிரிவினை பற்றி அம்பேத்கர்

இந்து, முஸ்லிம் வகுப்புவாத அரசியல்களுக்கிடையே நடந்து வந்த போட்டாபோட்டிகளைக் கூர்மையாகக் கவனித்து வந்த அம்பேத்கர் ‘பாகிஸ்தான் அல்லது இந்தியாவின் பிரிவினை’ என்னும் நூலில் எழுதுகிறார்:

“ஒரு தேசமா, இரு தேசமா என்ற பிரச்சினையைப் பொறுத்தவரை திரு.சாவர்க்கரும் திரு.ஜின்னாவும் ஒருவரையொருவர் எதிர்த்து நிற்பதற்குப் பதிலாக இருவரும் ஒரே கருத்தை முழுமையாக ஒப்புக்கொள்கிறார்கள் என்பது விநோதமானதாகத் தெரியலாம். இவர்கள் ஒப்புப்போவது மட்டுமல்ல, இந்தியாவில் முஸ்லிம் தேசம் என்ற ஒன்று, இந்து தேசம் என்ற மற்றொன்று ஆகிய இரு தேசங்கள் இருப்பதாகவும் வலியுறுத்துகிறார்கள். இந்த இரு தேசங்களும் எந்த நிபந்தனைகளுக்குட்பட்டு வாழ வேண்டும் என்பதில் மட்டுமே இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு உள்ளது.”

அம்பேத்கர் மேலும் கூறுகிறார்: “திரு.சாவர்க்கர் முஸ்லிம்கள் தனி தேசம் என்பதை ஒப்புக்கொள்கிறார். அவர்கள் தனி தேசியக் கொடியை வைத்துக்கொள்வதை அனுமதிக்கிறார். இருப்பினும் அவர் முஸ்லிம்களுக்குத் தனி தேசிய வாழ்விடமான (home) தனி தேசக் கோரிக்கையை எதிர்க்கிறார். இந்துக்களின் வாழ்விடமாக இந்து தேசத்தை அவர் கோருவாராகின் முஸ்லிம்களின் வாழ்விடமாக முஸ்லிம் தேசத்தைக் கோருவதை அவரால் எப்படி எதிர்க்க முடியும்?”

இந்தக் கருத்தை இசைக்குமா அமித் ஷாவின் ‘ஆர்கெஸ்ட்ரா’ குழு?

கட்டுரையாளர் குறிப்பு:

25a.jpg

எஸ்.வி.ராஜதுரை மார்க்சியச் சிந்தனையாளரும், எழுத்தாளரும் ஆவார். மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் தமிழக அரசியல் பற்றிய பல நூல்களையும் கட்டுரைகளையும் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். சிறுகதைகளையும் கவிதைகளையும் தமிழாக்கம் செய்துள்ளார். மனித உரிமை இயக்கத்தில் களப்பணி ஆற்றியவர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெரியார் உயர் ஆய்வு மையத்தின் தலைவராகப் பணிபுரிந்தவர். The Communist Manifesto என்னும் புகழ்பெற்ற நூலை ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ என்னும் தலைப்பில் தமிழாக்கம் செய்திருக்கிறார். வ.கீதாவுடன் இணைந்து மார்க்சியம், பெரியாரியம் சார்ந்த முக்கியமான நூல்களை எழுதியுள்ளார்

 

https://minnambalam.com/politics/2019/12/22/25/Amit-Shah-CAA-False-Conductor

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.