Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘வாங்கோ ராசா வாங்கோ’

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

‘வாங்கோ ராசா வாங்கோ’

காரை துர்க்கா   / 2020 ஜனவரி 21 

  ஒரு நாட்டின் உண்மையான சோதனைக்காலம் என்பது, அந்த நாட்டில் நிகழ்ந்த யுத்த கொடூரங்களையே குறிப்பிடலாம். அந்த யுத்தகாலப் பகுதியே, அந்தத் தேசம் நோய்வாய்ப்பட்ட காலப்பகுதியாகக் கருதப்படுகின்றது.   

இலங்கை நோய்வாய்ப்பட்டிருந்த காலகட்டத்தில், அதிலிருந்து தப்பித்து விட வேண்டும் என்ற நோக்கிலேயே (பாதுகாப்பு), 1980களின் தொடர்ச்சியான காலகட்டங்களில், தமிழ் இளைஞர்கள் அடைக்கலம் தேடி, தாய் மண்ணைத் துறந்து, அந்நிய தேசங்களுக்குச் சென்றனர்.  

தமிழ், சிங்கள முரண்பாடுகள், ஆயுதப் போராக தோற்றம் பெற்ற அக்காலப்பகுதியில், ‘சுவர் இருந்தால் மட்டுமே, சித்திரம் வரையலாம்’ என்ற அடிப்படையில், அது ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தது. முடிவுறாத ஆயுதப்போரின் நீட்சி, சர்வதேசங்கள் நோக்கிய புலம்பெயர்தலை ஊக்கப்படுத்தியது; நியாயப்படுத்தியது; வேகப்படுத்தியது.  

இவ்வாறாகத் தனிநபராகச் சென்ற இளைஞன், திருமண வயதை அடைய, மணமகள் சென்றார் (அனுப்பி வைக்கப்பட்டார்). பின்னர் அவர்களது பிள்ளைகளைப் பார்க்கவும் பராமரிக்கவும் எனப் பெற்றோர் (பேரன், பேர்த்தி) சென்றார்கள். அதன் பிற்பாடு, மாமன், மச்சான், உறவுக்காரர் எனப் பலரும் சென்றார்கள். இன்றைக்கும் சென்று கொண்டிருக்கின்றனர்; இனியும் செல்வார்கள்.  

உதாரணமாக, யாழ்ப்பாணம், சாவகச்சேரியைப் பிறப்பிடமாகக் கொண்டவரும், தற்போது லண்டனில் நிரந்தரமாக வதியும் மணமகனை (மாப்பிள்ளை) மணம்முடிக்க, மானிப்பாயைச் சொந்த இடமாகக் கொண்ட மணமகள் செல்கின்றார் என எடுத்துக் கொள்வோம்.  

அங்கு அவர்களுக்கு, இரண்டு பிள்ளைகள் பிறக்கின்றனர். இந்நிலையில், யாழ். மாவட்டத்துக்குரிய மொத்த சனத்தொகையில், நால்வர் இல்லாமல் போகின்றனர். சிறுதுளி பெருவெள்ளம் போல, புலம்பெயர் தமிழர் சனத்தொகை நீண்டு செல்கின்றது.  

இவ்வாறாக, 1995இல் யாழ்ப்பாண இடப்பெயர்வோடு புலம்பெயர்ந்த ஒருவர், 1997ஆம் ஆண்டு, தனது 21ஆவது வயதில், அவுஸ்‌ரேலியாவுக்குச் சென்றவர், தற்போது முறையே 9, 7 வயதுகளில் இரண்டு பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தின் தலைவர் ஆவார்.  

“அன்றைக்குப் பயத்தின் காரணமாக, வெளிநாட்டுக்கு ஓடினோம். இன்றைக்கு சௌகரியமாக வாழ்ந்தாலும், என்னதான் வெளிநாடு என்றாலும், எங்கட ஊர் மாதிரி வராது; ஏதோ வந்திட்டோம், இருப்போம்” எனப் பெருமூச்சு விட்டுக்கொண்டிருப்பவர்கள், புலம்பெயர்ந்தவர்களின் மொத்தத் தொகையில் அரைவாசிக்கும் மேலாவர்.   

 “பிள்ளைகளுக்குத் தமிழ் மொழியில் உரையாடக்கூடிய ஆற்றல் இல்லை; அவர்களுக்குத் தமிழ் படிக்க நேரம் இல்லை; எங்களுக்குத் தமிழ் படிப்பிக்க நேரம் இல்லை” எனக் கவலைப்படுபவர்களும் அதிகம் பேர் இருக்கின்றார்கள். பல மொழிகளில் உரையாடக் கூடிய வல்லமை பொருந்திய பிள்ளைகள், தாய் மொழியில் தடுமாறுகின்றனவே எனத் தலைகுனிபவர்கள் வௌியில் காட்டிக் கொள்வதில்லை.   

இதேவேளை, ஊரில் தனியாக வாழும் பெற்றோர் குறித்துக் கவலை கொள்ளும் பிள்ளைகள், செய்ய வழியின்றித் தவிக்கிறார்கள். “மூன்று பிள்ளைகளைப் பெற்ற அம்மா, இன்று மூன்றாம் நபரின் தயவில் தங்கியிருக்கிறாரே” என்று தங்களைத் தாங்களே நொந்து கொள்ளும் பிள்ளைகள் அநேகம் பேர்  இருக்கின்றார்கள்.   

இரண்டு, மூன்று தசாப்தங்களுக்கு முன்னர், முதியவர் ஒருவர் நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தால், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், அயலவர்கள் எனப் பெரும் பட்டாளமே, வைத்தியசாலையைச் சுற்றி, ஏக்கத்துடன் நிற்கும். ஆனால், இன்று சில முதியவர்களுடன், ஓட்டோ சாரதி மட்டுமே நிற்கின்றார்.  

ஆனால், இலண்டன், பிரான்ஸ், ஜேர்மனி, கனடா போன்ற நாடுகளில் வாழும் பிள்ளைகளது தொலைபேசி அழைப்புகள், ஓட்டோச் சாரதிக்கு வந்து கொண்டிருக்கும். 

“அப்பாவுக்கு (அம்மாவுக்கு) என்ன நடந்தது, இப்ப என்ன மாதிரி, என்ன வருத்தமாம், கதைக்கிறாரா, எத்தனை நாள் வைத்தியசாலையில் இருக்க வேண்டுமாம்? காசைப் பற்றி யோசிக்க வேண்டாம்; கவனமாகப் பாருங்கோ” எனத் தொலைபேசி உரையாடல்கள், சாரதியுடன் தொடரும். டொலரிலும் ஸ்‌ரேலிங் பவுனிலும் பணம், இலங்கையில் உள்ள வங்கிகளை நோக்கிப் பாயும்.  

என்னதான் பணம் பாய்ந்தாலும், பெற்ற பிள்ளை(கள்) பக்கத்தில் இருந்து, தலையை வாரி, முதுகைத் தடவி, “என்னம்மா செய்யுது, தேநீர் போட்டுத் தரட்டுமா” எனக் கேட்டாலே, பாதி வருத்தம் பறந்தோடும் அல்லவா?  சில தினங்களுக்கு முன்னர், யாழ்ப்பாணத்தில் ஒரு கிராமத்தில் பிறந்து, வாழ்ந்தவரது மரண அறிவித்தல் பத்திரிகையில் பிரசுரமாகி இருந்தது. அவர், அரச சேவையில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். அவருக்கு, ஐந்து பிள்ளைகள்; அவர்கள் அனைவரும், நிரந்தரமாக வெளிநாடுகளிலேயே வசிக்கின்றனர். இதனால், இறுதிக்கிரியைகள் பற்றிய விவரங்கள், பின்னர் அறிவிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.  

ஏனெனில், பிள்ளைகள் இங்கு வந்த பின்னரே, இறுதிக்கிரியைகள் எப்போது நடத்துவது என முடிவு செய்யப்படும். சொல்லவே வருத்தமாக இருக்கின்றது; மனம் இதனை ஏற்க மறுத்தாலும், கொள்ளி வைக்கவே அவர்கள் இங்கு வருகின்றார்கள்.  

அன்று, தங்களது பிள்ளைகள் உயிருடன் வாழ வேண்டும் எனப் பாதுகாப்பு காரணங்களுக்காக வெளிநாடு அனுப்பி வைத்தார்கள். இன்று, தாங்கள் உயிருடன் இருக்கும் போது, பாதுகாப்பாக இருக்க முடியவில்லையே எனப் பல முதிர்வயதுப் பெற்றோர்கள் மனம் குமுறுகின்றார்கள். 

இன்று தாயகத்தில் வாழும் பல தாத்தாக்களும் பாட்டிகளும், புலம்பெயர்ந்து வாழும் தங்கள் பேரப்பிள்ளைகளின் புன்னகை வழியும் அழகிய முகங்களை, கணினியின் திரையிலேயே பார்த்து மகிழ்கின்றனர். வாரித் தூக்கி அள்ளி, அணைத்து ஆரத்தழுவி, கட்டி முத்தமிட வேண்டிய பேரப்பிள்ளைகளைத் திரையில் பார்ப்பது, வரமா, சாபமா?  

அத்துடன், சில தாத்தாக்களுக்கும் பாட்டிகளுக்கும் பேரப்பிள்ளைகளோடு கதைக்க மொழி தடைக்கல்லாக இருக்கின்றது. பிறரின் உதவியோடு மட்டுமே, தனது பேரப்பிள்ளையோடு கதைக்கும் பரிதாப நிலையும் தொடர்கின்றது.  

புலம்பெயர்ந்த நடுத்தர வயதையுடைய சில பெற்றோர்கள், இன்று தங்கள் பிள்ளைகளோடு தமிழில் கதைக்க, பிள்ளைகள் அந்நாட்டு மொழியில் (அல்லது ஆங்கில மொழி) பதில் வழங்கும் நிலை காணப்படுகின்றது. இந்த நிலை, தமிழில் என்ன கதைக்கின்றார்கள் என விளங்கும்; ஆனால், தமிழில் பதில் சொல்லத் தெரியாது.  

இன்னும் சில ஆண்டுகளில், அடுத்த சந்ததியில் உள்ள சிலருக்குத் தமிழ் முற்றிலும் தெரியாது போகலாம். அதாவது, தமிழ் தெரியாத தமிழர்கள். 

இதற்கு விதிவிலக்காக, சில புலம்பெயர்ந்த எம்மவர்கள் முன்பள்ளிகளில் இருந்து உயர்தரம் வரை அங்குள்ள சிறார்களுக்கு தமிழ் கற்பிக்கின்றார்கள். இது, இங்கு நாம் ஆங்கிலம் பயின்றது போன்றதே.  

இன்று, ஐரோப்பிய நாடுகள், அவுஸ்‌ரேலியா, கனடா போன்ற நாடுகளை நோக்கிய, ஈழத் தமிழ் மக்களது படையெடுப்புகளைத் தடுக்கவோ, நிறுத்தவோ, குறைக்கவோ முடியாத நிலையே காணப்படுகின்றது.  

ஏற்கெனவே மூன்று தசாப்தங்களுக்கு மேலாக, நீண்ட கொடும் போர், ஆழிப்பேரலை அனர்த்தம், அவ்வப்போது இடம்பெற்ற இனக்கலவரங்கள் என்பவற்றால் இலட்சக்கணக்கில் தமிழ்மக்களின் உயிர்கள் பலி கொடுக்கப்பட்டு விட்டன.  

எந்தவொரு காரியத்துக்கும், நேர்மறையானதும் எதிர்மறையானதுமான விளைவுகள் என இரண்டும் உண்டு. ஆனாலும், தமிழ் மக்களது நாட்டை விட்டுப் புலம்பெயரும் வாழ்வு, சில நேர்க்கனிய விளைவுகளை வழங்கினாலும், ஒட்டுமொத்த ஈழத் தமிழ்ச் சமூகத்துக்கு, பல்வேறு எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்துகின்றது.  

வடக்கு, கிழக்கில் பரம்பரையாக மக்கள் வாழ்ந்த பல கிராமங்கள், வெறிச்சோடிக் கிடக்கின்றன. சில கிராமங்களில், ஒரு வகுப்பில், தனி ஒற்றை இலக்கத்தில் கல்வி கற்கும் மாணவர்களைக் கொண்ட பாடலைகள் அதிகரித்து வருகின்றன. போதிய மாணவர்கள் இன்றிப் பல பாடசாலைகள் மூடு விழாக்களை நடத்துகின்றன.  

இன்று, தமிழர்கள் தாயகத்தில் ஊரடங்குச் சட்டம் இல்லை; சுற்றிவளைப்புகள் இல்லை; கைதுகள், காணாமல் ஆக்கப்படுதல்கள் முன்னரைப் போல இல்லை; குண்டு வீச்சுகள் இல்லை; உணவுப்பொருள் தட்டுப்பாடுகள், கட்டுப்பாடுகள், மட்டுப்பாடுகள் இல்லை, ஆனால், தமிழ் மக்கள் நிம்மதியாகவும் இல்லை.  

இங்கு நிம்மதி இல்லை என்பதற்காக, புலம்பெயர்தலை நிம்மதி தருகின்ற விடயமாகப் பார்க்க வேண்டாம். அதுகூட, ‘இக்கரைக்கு அக்கரைப் பச்சை’ போன்றதே. பல இலட்சங்களைச் செலழித்து, வெளிநாடு சென்று, அங்கும் திருப்தியற்று வாழும் பலரை, அன்றாடம் பார்க்கின்றோம்.  

வெளிநாடுகளில், தமிழ் மக்கள் உயர்நிலை பதவிகள் வகித்தாலும் ‘கறுப்பன்’ எனச் சிலநாடுகளில் இரண்டாம் இடமே! அதேபோல, இங்கு தமிழன் என்றால், இரண்டாம் மூன்றாம் இடமே கிடைக்கின்றது.  

போரில் அனைத்தையும் இழந்த தமிழினம் இன்று, தனது சனத்தொகை வளத்தையும் புலம்பெயர்தல் என்ற பெயரில் இழந்து வருகின்றது. என்ன விதமான தீர்வுத்திட்டம், எப்போது கிடைத்தாலும், எங்கள் மண்ணை ஆளவும், எங்கள் மண்ணில் வாழவும் எங்களுக்கு குறிப்பிட்டளவு சனத்தொகை தேவைப்படுகின்றது.  

எங்கள் மண்ணில் வளம் ஈட்டவும் வளமாக வாழவும் முடியும். வனாந்தரமாகக் கிடக்கும் நிலங்களை சோலை வனமாக்குவோம்; எதுவந்தாலும் எங்கள் மண்ணில் வாழ்வோம்; எங்கள் மண்ணுக்காக வாழ்வோம்.  
 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வாங்கோ-ராசா-வாங்கோ/91-244286

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.