Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கொரோனா – இன்னொரு பிணி நுண்ணி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா – இன்னொரு பிணி நுண்ணி

லதா குப்பா

டிசம்பர் மாத துவக்கத்தில் சீனாவின் ஒரு நகரத்தில் கண்டறியப்பட்ட வைரஸ் தொற்று, அடுத்தடுத்த நாள்களில் ஏற்படுத்திய பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகளினால் சர்வதேச கவனம் பெற்றது. கொஞ்சம் தாமதமாக விழித்துக் கொண்ட சீன அரசு தங்களுடைய தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்குள் நோய்த்தொற்று மாகாணமெங்கும் பரவி இருந்தது. ”COVID-19” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த கொரோனா வைரஸ் பாதிப்பில் உயிரிழந்தவர்களின் உண்மையான எண்ணிக்கையைச் சீன அரசு மறைத்துவிட்டதாக எழும்பியிருக்கும் குற்றச்சாட்டுகள் இதன் தீவிரத்தை உணர்த்தும். மனிதர்களிடையே பரவும் இந்தத் தொற்று நோயின் தீவிரம் கருதிப் “பொது சுகாதார அவசரநிலை”யாக உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது.

virus.jpg?resize=768%2C512&ssl=1%20768w

இதை எழுதிக் கொண்டிருக்கையில், சுமார் 60 நாடுகளில் உள்ள 96278க்கும் அதிகமானோர் கொரோனோ வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு,  அவர்களில் 3304 பேர் உயிரிழந்திருக்கின்றனர். வரும் நாட்களில் இந்த எண்ணிக்கைகள் மேலும் அதிகரிக்கும் என்கிறார்கள். விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோம் என்கிற பெயரில் ஊடகங்களும் தங்கள் பங்கிற்கு அடுத்தது நீங்கள்தான் என்பதைப் போல கலவரப் பதற்றத்தையும், பீதியையும் உருவாக்கிக் கொண்டிருக்கின்றன.

இந்த இடத்தில் வைரஸ் பற்றிய பொதுவான சில புரிதல்களை நாம் உருவாக்கிக் கொள்வது அவசியம். வைரஸ் என்பவை மிகச்சிறிய புரத உறைக்குள் மரபணு கூறுகளை உள்ளடக்கிய பொருட்களைக் கொண்டவையாக இருக்கின்றன. அளவில் பாக்டீரியாவைக் காட்டிலும் மிக மிகச் சிறியவை.வைரஸ்களுக்கு உயிர் இல்லை. உயிர்த் தன்மையுடைய செல்களில் ஊடுருவி அவை தங்களை இரட்டிப்பாக்கிக் கொள்கின்றன. மிக முக்கியமாக வைரஸ்களை கொல்லவோ, அழிக்கவோ முடியாது. ஆனால் அவை மேலும் பல மடங்காகப் பெருகாமல் கட்டுப்படுத்தலாம். இந்த வேலையைத்தான் வாக்ஸின்கள் செய்கின்றன. கொரோனோ வைரசை கட்டுப்படுத்தும் வாக்ஸின்கள் இன்னும் சோதனைச் கட்டங்களில்தான் இருக்கின்றன. அவை விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்கிறார்கள்.

வைரஸ் தங்களை எப்படி இரட்டிப்பாக்கிக் கொள்கின்றன என்பதை பார்ப்போம். எந்த ஒரு வைரஸும் தன்னிச்சையாக இரட்டிப்பாகாது. ஆகவும் முடியாது. அதற்கு ஒரு தளம் தேவைப் படுகிறது. அந்த தளம்தான் நம் உடலில் உள்ள “செல்” கள். செல்களில் நுழைந்தபின்னர் தன்னை இரட்டிப்பாக்கிக் கொள்ளும் வேலையைத் துவங்கும். அதற்குத் தேவையான புரதங்களை, மரபணு கூறுகளை உருவாக்கத் துவங்கும். ஒரு கட்டத்தில் செல் தன்னுடைய தன்மையை இழந்து வைரஸ்களை இரட்டிப்பாக்கும் தொழிற்சாலைகளாகி விடும். ஒன்றிலிருந்து இன்னொன்றாக ஒவ்வொரு செல்லாக இந்த இரட்டிப்பாக்கும் செயல் பல மடங்காகப் பெருகும் போது நோய்த் தன்மையின் தீவிரம் அதிகமாகும்.

உலகில் நூற்றுக்கணக்கான வைரஸ் வகைகள் இருக்கின்றன.மனிதர்கள், விலங்குகள், பறவைகள், தாவரங்கள் என ஒவ்வொன்றிலும் தனித் தன்மையான பண்புகளைக் கொண்ட வைரஸ் வகைகள் இருக்கின்றன. அவ்வளவு ஏன், ஒவ்வொரு நொடியும் நாம் மில்லியன் கணக்கான வைரஸ்களை சுவாசித்துக் கொண்டுதான் இருக்கிறோம். தற்போதைய கொரோனா வைரஸ் கூட பழந்தின்னி வௌவாலில் இருந்து விலங்குகளின் வழியே மனிதர்களுக்கு  வந்து சேர்ந்திருப்பதாக கூறுகின்றனர்.

சமீப வருடங்களில் பெருமளவு பாதிப்புகளையும், உயிர்சேதத்தையும் ஏற்படுத்திய இபோலா, சார்ஸ், ஜிக்கா, நிபா போன்ற வைரஸ்களின் வரிசையில் தற்போது புதிய கொரோனோவும் சேர்ந்திருக்கிறது. மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு தொற்றக் கூடிய வகையைச் சேர்ந்தது இந்த கொரோனோ வைரஸ். இவை மூச்சுக்குழாய் மற்றும் நுரையீரல் செல்களை குறிவைக்கின்றன. இதனால் சளித் தொல்லை, காய்ச்சல், தடுமன் போன்றவை பாதிப்பின் ஆரம்ப அறிகுறிகளாக பார்க்கப்படுகின்றன. 

கொரோனோ மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் வைரஸ் என்பதால் எப்படி பரவுகிறது என்பதை புரிந்து கொள்வதும் அவசியமாகிறது. இருமல், தும்மல் வழியே சிதறும் எச்சில், சளி வழியேதான் பரவுகின்றன. நம்முடைய கைளால் வாயை மூடிக்கொண்டு இருமினாலும் நம்முடைய கைகள் பிறரைத் தொடும்போது அவர்களுக்குப் பரவுகிறது. குறிப்பாக, மூக்கு, கண்கள், வாய் ஆகியவற்றின் வழியேதான் கொரோனா வைரஸ்கள் உடலில் தொற்ற ஆரம்பிக்கின்றன. நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பது தெரிய குறைந்தது ஐந்து நாட்கள் முதல் 24 நாட்கள் வரை ஆகிறது. 

நாளடைவில் நோய்த்தொற்று அதிகமாகும்போது தீவிரமான மூச்சுத் திணறல், ரத்த அழுத்தம் குறைதல், நுரையீரலில் நீர் கோர்த்தல் ஏற்படும். இதனால் போதிய ஆக்ஸிஜன் இன்மையால்தான் பெரும்பாலான உயிரிழப்புகள் நேர்கின்றன. இந்த இடத்தில் இன்னொன்றையும் குறிப்பிட்டாக வேண்டும். கொரோனா நோய்த் தொற்று என்பது ஒருவரின் வயது, உடல்நிலை, நோயெதிர்ப்புத் திறன் ஆகியவற்றைப் பொறுத்து பாதிப்பின் தீவிரங்கள் மாறுபடும். நோய்த் தொற்றின் பாதிப்பு குறைந்து அனேகர் வீடு திரும்பி விட்டனர் என்பதையும் இந்த இடத்தில் குறிப்பிட்டாக வேண்டும்.அதனால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் மரணித்து விடுவார்கள் என்று அச்சப்பட தேவையில்லை.

அமெரிக்காவில் தற்போதுதான் கொரோனா தன் தடத்தை பதிக்கத் துவங்கியிருக்கிறது. பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் உயர்ந்து கொண்டிருக்கின்றன. உயிரிழப்புகளும் துவங்கி இருக்கின்றன. அரசு தன்னளவில் முழுமையாக தயாராக இருப்பதாக கூறியிருக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் தனிமை படுத்தப்பட்டு தீவிர சிகிச்சையில் இருக்கின்றனர். இங்கே சிகிச்சை என்பது நோய் தொற்றின் தீவிரத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகள் மட்டும்தான்.

அமெரிக்காவோடு ஒப்பிடுகையில் இந்தியாவின் மருத்துவ கட்டமைப்புகள் மோசமான நிலையில் இருப்பது மிகவும் வருத்தமான நிதர்சனம். இந்தியாவில் எந்த மூலையில் ஒருவர் பாதிப்புக்குள்ளானாலும் அதை உறுதி செய்யும் பரிசோதனையை பூனாவில் இருக்கும் ஒரு ஆய்வகத்தில்தான் செய்ய முடியும் என்கிறார்கள். மத்திய அரசும், மாநில அரசுகளும் நிலமையைச்  சமாளிக்க முழுவீச்சில் தயாராகிக் கொண்டிருப்பதாக கூறிக் கொண்டிருக்கின்றனர். 

கொரோனா வைரஸ் பாதிப்பினால் அரசியல், பொருளாதார மட்டங்களில் குழப்பமும், சர்ச்சைகளும் துவங்கியிருக்கின்றன. கொரோனா என்பதே அமெரிக்காவுக்கு எதிரான சீனாவின் ஒரு உயிரியியல் ஆயுதம் என்றொரு சர்ச்சை குடியரசுக் கட்சியினர் பேசிக் கொண்டிருக்கின்றனர். இந்த வைரஸ் சீனாவின் ஒரு ஆய்வுக்கூடத்தில் இருந்து தற்செயலாக வெளியேறி இருக்குமோ என்கிற சந்தேகத்தை அவர்கள் முன் வைக்கின்றனர். இன்னொரு தரப்பினர் குறிப்பாக ரஷ்யர்கள் இந்த கொரோனோ வைரஸை  அமெரிக்கா தான் சீனாவின் மீது ஏவியிருக்கலாமென்று குற்றம் சாட்டிக்கொண்டிருக்கின்றனர். இந்த வாதங்களுக்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை.

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸால் சீனா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளின் ஏற்றுமதி வர்த்தகம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. தொழிற்சாலைகளின் உற்பத்தி இழப்புகள், வேலையின்மை, பணவீக்கம் போன்ற தொடர் பொருளாதார பின்னடைவுகள், அமெரிக்க பொருளாதாரத்திலும் நேரடி பாதிப்புகளை உருவாக்கி இருக்கிறது. பல அமெரிக்க நிறுவனங்களின் மொத்த வருமானத்தில் கணிசமான பகுதி, சீனாவில் உள்ள அவர்களின் தொழிற்சாலைகளில் இருந்துதான் வருகின்றன. குறிப்பாக மின்னணு பொருட்கள், உதிரி பாகங்கள், ஆட்டோமொபைல், ஆயத்த ஆடைகள், மருந்துப் பொருட்கள் என பட்டியல் நீளுகிறது.

அமெரிக்கா தனக்கான மருந்துப் பொருட்களை பெருமளவில் சீனா மற்றும் இந்தியா போன்ற வளரும் நாடுகளின் தொழிற்சாலைகளில் இருந்துதான் இறக்குமதி செய்துகொள்கிறது. தற்போதைய சூழலில் இந்திய, சீன அரசுகள் தங்கள் தேவைகளை கருத்தில் கொண்டு ஏற்றுமதியாகும் மருந்துப் பொருட்களின் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருப்பதால் அமெரிக்கா மருந்து தட்டுப்பாட்டில் சிக்கிக்கொள்ளும் ஆபத்தும் இருக்கிறது. இது தொடர்பில் ட்ரம்ப் அரசு தேவையான நடவடிக்கைகள் எடுத்து நிலைமையை சமாளிக்க வேண்டும் என்கிற குரல்கள் எழ ஆரம்பித்திருக்கின்றன.

அமெரிக்க மருத்துவ சேவைகள் என்பவை முழுமையாக காப்பீட்டு நிறுவனங்களின் பிடியில் இருப்பவை. சமீபத்தைய கணக்கெடுப்பின் படி 27 மில்லியன் அமெரிக்கர்கள் காப்பீடு இல்லாதவர்கள். அல்லது மிகக் குறைவான தொகைக்கு காப்பீடு பெற்றிருப்பவர்கள். இவர்களில் எவரேனும் பாதிப்புக்கு உள்ளானால் அவர்களுக்கான முறையான சிகிச்சை கேள்விக்குறியாகி விடும். அதிபர் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் இது போன்ற சிக்கல்கள் ட்ரம்ப்க்கு பின்னடைவை உண்டாக்கும். கூடுதல் மருத்துவச் செலவுகளை அமெரிக்க நடுத்தர மக்கள் எவ்வாறு சமாளிக்கப் போகிறார்கள் என்ற கேள்வியும் அரசின் ஒத்துழைப்பு எவ்வாறு இருக்கப் போகிறது என்பதும் இனி வரும் நாட்களில் தெரிய வரும். 

இன்னொரு புறம் அமெரிக்க சுற்றுலாத் தொழில் கடுமையாக பாதிக்கப்படும் அபாயமும் இருக்கிறது. ஆசிய, ஐரோப்பிய சுற்றுலாப்பயணிகளால் கிடைக்கும் வருவாயை மொத்தமாக இழக்கும் ஆபத்து இருப்பதாக மற்றும் விமான நிறுவனங்கள் கவலை தெரிவித்திருக்கின்றன. இரட்டைக்கோபுர தாக்குதலுக்குப் பிறகு உள்நாட்டு விமான நிறுவனங்களும் தங்கள் சேவையைக் குறைத்துள்ளது. இந்நிலை தொடர்ந்தால் பணி இழப்புகளும், பொருளாதார மந்த நிலையும் ஏற்படும். சீனாவில் துவங்கிய இந்த பாதிப்புகள் தற்போது எல்லா நாடுகளிலும் தொடர்கதையாகி இருப்பது கவலைக்குரிய ஒன்று. ஒலிம்பிக் போட்டிகள் கூட தள்ளிப் போகும் என்கிறார்கள். இது போன்ற பாதிப்புகளின் சிற்றலைகள் பேரலைகளாகும்போது அது ஒவ்வொரு தனிமனித வாழ்விலும் பெரும் நெருக்கடிகளையும், அழுத்தங்களையும் உருவாக்குமென பொருளாதார நிபுணர்கள் அச்சம் தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வரும் தடுப்பு மருந்துகள் எதுவும் தற்போது வரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், நமக்கிருக்கும் ஒரே வாய்ப்பு வைரஸ் பரவலை கட்டுக்குள் வைப்பது ஒன்று தான். அரசும் தன் பங்கிற்கு நிறைய முன்னேற்பாடுகளை செய்து கொண்டிருக்கின்றன. இதனை அரசும் மருத்துவர்களும் மட்டுமே செய்துவிட முடியாது. நாம் அனைவருமே தன்னளவில் தீவிரமாக செய்தாக வேண்டும். காய்ச்சல்,சளி போன்ற பாதிப்புள்ளவர்களிடம் இருந்து விலகி இருப்பது.  கொரோனா பாதித்த பகுதிகளுக்கு பயணங்களைத் தவிர்ப்பது. அடிக்கடி கைகளைக் கழுவி சுத்தமாய் வைத்திருப்பது. மக்கள் கூடும் பகுதிகளைத் தவிர்ப்பது. நோயெதிர்ப்புத் தன்மையுடைய உணவுகளை எடுத்துக் கொள்வது போன்றவையே இந்த நோய் பரவலை பெருமளவில் கட்டுக்குள் கொண்டு வரும்.

வரும் முன் காப்போம்!

 

https://solvanam.com/2020/03/09/கொரோனா-இன்னொரு-பிணி-நுண்/

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.