Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரோனா – நவீன பஸ்மாசுரன்? – நிலாந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா – நவீன பஸ்மாசுரன்? – நிலாந்தன்

March 21, 2020

 

corona-5.jpg

இந்து புராணங்களில் பஸ்மாசுரன் என்று ஓர் அசுரன் உண்டு. தான் தொட்டதெல்லாம் பஸ்பமாக வேண்டும் என்று பஸ்மாசுரன் சிவபெருமானிடம் வரம் கேட்கிறான். வரம் கிடைத்ததும் எதிர்ப்படும் எல்லாரின் தலையிலும் கைவைக்க தொடங்குகிறான். அவன் தொட்டதெல்லாம் சாம்பல் ஆகிறது. அவனைக் கண்டதும் மூவுலகதவரும் ஓடத் தொடங்குகிறார்கள். சிவபெருமானும் ஓட வேண்டியதாயிற்று. ஒரு கட்டத்தில் மகாவிஷ்ணு ஓரழகிய மோகினியாக மாறி பஸ்மாசுரனை மயக்கி அவன் தலையில் அவன் கையை வைக்க செய்கிறார்.

சீன அதிபர் கொரோனா வைரஸை ஓர் அரக்கன் என்று வர்ணித்தார். கொரோனா வைரஸிலிருந்து தப்புவது என்று சொன்னால் பஸ்மாசுரனிடமிருந்து தப்புவது போல ஒருவர் மற்றவரிடமிருந்து சற்று விலகி நிற்க வேண்டும். இப்பொழுது உலகம் முழுவதும் பிரச்சினையாக இருப்பது தொடுகை மூலம் கொரோனா வைரஸ் தொற்றிக் கொள்ளும் என்பதுதான். எனவே அதிகபட்சம் தொடுகையை தவிர்க்கும் விதத்தில் மனிதர்கள் உதிரிகள் ஆக்கப்படுகிறார்கள்.  மனிதர்கள் ஒன்று கூடுவது தடுக்கப்படுகிறது. ஒன்று கூடும் இடங்கள் மூடப்படுகின்றன. நாடுகளின் எல்லைகள் மூடப்படுகின்றன. மனிதர்கள் கைகழுவிகளாகவும் முகம் மூடிகளாகவும் மாறிவிட்டார்கள். மனிதரகள் நாளொன்றுக்கு அதிகம் தொடுவது பெற்றோர்களையா அல்லது வாழ்க்கைத் துணைகளையா அல்லது பிள்ளைகளையா அல்லது கைபேசிகளையா? இதை எதை அதிகம் தோற்று நீக்க வேண்டும்?

தொற்று நோய்க்கு இலக்கானவர்கள் அதிகம் தனிமைப் படுத்தப்படுகிறார்கள். இத்தாலி, முதியவர்களை மரணத்திடம் கையளித்து விட்டது என்று கூறப்படுகிறது. அதாவது மனிதர்கள் ஒருவர் மற்றவரிலிருந்து பிரிந்து தொடுகையின்றி தனித்திருக்குமாறு அரசுகள் உத்தரவிடும் ஒரு காலம். ஒரு நோயைப் பொது எதிரியாக கண்டு யுத்தப் பிரகடனம் செய்யும் ஒரு காலம. இத்தனைக்கும் இது இன்டர்நெட் யுகம் அல்லது ஸ்மார்ட்போன் யுகம் அல்லது செல்ஃபி யுகம். மனிதர்களும் நாடுகளும் ஒன்று மற்றதிலிருந்து பிரிக்கப்பட முடியாதபடி ஒன்று மற்றதில் தங்கியிருக்கும் ஒரு யுகம். அதைத்தான் வேறு வார்த்தைகளில் பூகோளமயமாதல் என்று கூறுகிறோம்.

இன்டர்நெட்டும் நிதி மூலதனமும் நாடுகளையும் சந்தைகளையும் சமூகங்களையும் கண்டங்களையும் திறந்து கொண்டே போகும் ஒரு காலகட்டத்தில் ஒரு வைரஸ் வந்து எல்லாவற்றையும் மூட வைத்துவிட்டதா? பூகோளமயமாதலின் கீழ் திறக்கப்பட்ட சந்தைகள் சில மூடப்படுகின்றன. உதாரணமாக ஜெர்மனி தனது நாட்டில் உற்பத்தி செய்யப்படும் முகஉறைகளை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதித்திருக்கிறது. இத்தனைக்கும் அது ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் ஒரு நாடு. எனினும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு மாறாக முகஉறைகளை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதித்திருக்கிறது. அப்படித்தான் துருக்கியும் ரஷ்யாவும் முகஉறைகளை ஏற்றுமதி செய்வதை தடுத்திருக்கின்றன. இது பூகோள மயப்பட்ட சந்தை நடவடிக்கைகளுக்கு மாறானது.

எவையெல்லாம் மனிதனின் முன்னேற்றங்கள் என்று கருதப்பட்டனவோ அவையெல்லாம் இப்பொழுது வைரஸ் பரவுவதற்கு காரணங்கள் என்று கருதப்படுகின்றன. கொரோனா வைரஸ் பூகோளமயமாதலின் பலவீனமான இழைகளை வெளிக்காட்டி இருக்கிறது. மனிதர்கள் ஒருவர் மற்றவரோடு பிரிக்கப்பட முடியாதபடி இணைக்கப் பட்டிருப்பதே பூகோளமயமாதல் ஆகும். ஆனால் ஒரு வைரஸ் வந்து மனிதர்களை தனியன்கள் ஆக்கிவிட்டது. உதிரிகள் ஆக்கி விட்டது. வீடுகளில் இப்பொழுது தனித்திருக்கும் மனிதர்கள் இன்டர்நெட் மூலம் இணைகிறார்கள்.

நோர்வே போன்ற நாடுகளில் பாடசாலைகளும் அலுவலகங்களும் மூடப்பட்டுவிட்டன. ஆனால் வீடுகளை இன்டர்நெட் மூலம் இணைத்து அங்கே பிள்ளைகளுக்கு படிப்பிக்கப்படுகிறது, அலுவலகங்கள் இயக்கப்படுகின்றன. சீனா கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கு பெருமளவுக்கு இன்ரநெற்றைப் பயன்படுத்தியிருக்கிறது. பாதிக்கப்பட்ட மாகாணத்தில் கிட்டத்தட்ட ஒன்றரைக் கோடி மக்கள் வீடுகளை விட்டு வெளிக்கிடாமல் ஒன் லைன் மூலம் உணவை உத்தரவிட்டுப் பெற்றுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியானது ஏற்கனவே மனிதர்களை தனித்தனியாக இலத்திரனியல் கருவிகளோடு மினக்கெடுப்வர்களாக மாற்றியிருந்தது. இப்பொழுது கொரோனா வைரஸ் சமூக ஒன்று கூடலை தடுக்கும் ஒரு காலகட்டத்தில் இலத்திரனியல் கருவிகளோடு பிணைக்கப்பட்ட மனிதர்கள் முழு அளவிற்கு தனியன்களாக உதிரிகளாக மாறியிருக்கிறார்கள்.

இது இருபத்தியோராம் நூற்றாண்டில் மட்டும் தான் நடந்தது என்பதல்ல. பதினான்காம் நூற்றாண்டில் பிளேக் நோய் ஐரோப்பாவை தாக்கிய போதும் இதே நிலைமைதான். அங்கேயும் மனிதகுலத்தின் சாதனைகளாக கருதப்பட்ட விரைந்த போக்குவரத்து, தொடர்பாடல், நகரமயமாதல்  விரைந்த சமூக இடையூடாட்டம் போன்றனவே நோய் பரவுவதற்கு காரணங்களாயிருந்தன.

அப்படித்தான் கடந்த நூற்றாண்டில் 1918ம் ஆண்டு ஐரோப்பாவை தாக்கிய ஸ்பானிஷ் ஃப்ளு எனப்படும் ஒரு நோயும். அப்பொழுதும் விரைந்த தொடர்பாடலும் விரைந்த போக்குவரத்தும் தான் நோய் பரவுவதை விரைவாக்கின. 1967ல் பெரியம்மை நோய் கிட்டத்தட்ட 20 லட்சம் பேரை கொன்றது.

14ஆம் நூற்றாண்டின் பிளேக் நோய் கிட்டத்தட்ட அக்காலகட்டத்தில் காணப்பட்ட ஐரோப்பாவின் மொத்த சனத்தொகையில் 60 விகிதத்தை தின்று தீர்த்ததாகக் கூறப்படுகிறது. இத்தொகையானது பிரான்சுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான நூறு ஆண்டுகால போரில் கொல்லப்பட்ட மக்களின் மொத்த தொகையை விட அதிகம். அப்படித்தான் கடந்த நூற்றாண்டில் ஸ்பானிஷ் ஃப்ளுவினால் கொல்லப்பட்டவர்களின் மொத்த தொகை பத்துக் கோடி வரை வரும் என்று பிந்திய புள்ளிவிபரங்கள் கூறப்படுகின்றன.

இது தொடர்பில் வரலாற்றறிஞர் பெனெடிக்ரோவ் என்பவர் எழுதிய ஒரு கட்டுரையில் கூறப்பட்டிருக்கிறது. இத் தொகையானது முதல் இரண்டு உலகப் போர்களிலும் கொல்லப்பட்ட மக்கள் தொகையை விடவும் அதிகம்.  (https://www.historytoday.com/archive/black-death-greatest-catastrophe-ever ) அதாவது உலகப் பெரும் தொற்றுநோய்கள் மனிதர்களின் உற்பத்தியான பெரும் போர்களை விடவும் அதிகரித்த சேதங்களை ஏற்படுத்துகின்றன.

இவ்விரண்டு நோய்த் தாக்கங்களின் போதும் இன்டர்நெட் இருக்கவில்லை. எனவே அந்நாட்களில் மனிதர்கள் நகரங்களை நீங்கி சன அடர்த்தி குறைந்த கிராமங்களை நோக்கிச் சென்றதாக வரலாற்றுப் பதிவுகள் கூறுகின்றன.

மனித நாகரிகத்தின் வளர்ச்சி எனப்படுவது மனிதர்களுக்கு இடையிலான தொடர்பாடலை மேலும் மேலும் விருத்தி செய்வதுதான். நதிக்கரைகளில் முதல் நாகரீகங்கள் தோன்றிய பொழுது அங்கெல்லாம் பிரதானமாக எண்ணும் எழுத்தும் தான் நாகரீகம் அடைந்த மனிதனை அடையாளம் காண உதவின. அதாவது எண்ணையும் எழுத்தையும் கண்டுபிடித்து அதை விருத்தி செய்ய விருத்தி செய்ய மனிதனுடைய சிந்திக்கும் திறனும் வெளிப்பாட்டு திறனும் அதிகரித்தன. அவற்றின் இறுதி விளைவுகளாக மனிதர்களுக்கிடையிலான தொடர்பாடல் அதிகரித்தது. எனவே மனித நாகரீகம் எனப்படுவது ஒருவிதத்தில் தொடர்பாடலின் வளர்ச்சிதான். தொடர்பாடலை விரைவுபடுத்தும் எல்லா வளர்ச்சிகளும் மனித நாகரீகத்தை அடுத்தடுத்த கட்ட கூர்ப்பிற்கு இட்டுச் சென்றன. அதாவது மனித நாகரீகக் கூர்ப்பு எனப்படுவது மனிதர்களை அவர்களுக்குள் இருக்கும் பல்வகைமைகளோடு ஆகக் கூடிய பட்சம் திரள் ஆக்குவதுதான்

ஆனால் அதே திரட்சிதான் தொற்று நோய்களுக்கும் அடிப்படைக் காரணமாக அமைகிறது. இப்பொழுது பெரும்பாலான அரசாங்கங்கள் திரட்சிக்கு எதிராக கட்டளைகளைப் பிறப்பித்திருக்கின்றன. அதாவது மனித குலத்தின் நாகரீகக் கூர்ப்பை ஒரு வைரஸ் சோதனைக்கு உள்ளாக்கியிருக்கிறது. மனிதர்களோடு சேரந்து கிருமிகளும் கூர்ப்படைகின்றவா?

ஆனால் கொரோனா வைரஸை எதிர்கொள்வதற்காக மனிதர்களை தனிமைப்படுத்தி உதிரிகள் ஆக்குவதை விடவும் மனிதர்களுக்கு இடையிலான சமூகக் கூட்டொருமைப்பாட்டை  (solidarity ) வளர்த்தெடுப்பதே இப்போதைய அவசியத் தேவை என்று அமெரிக்க சமூகவியலாளர் கலாநிதி கிளினேன்பெர்க் கூறியிருக்கிறார். எங்களுக்கு தேவையாக இருப்பது சமூகத் தனிமைப்படுத்தல் அல்ல சமூக கூட்டொருமைப்பாடே என்று அவர் கூறியிருக்கிறார் (https://www.nytimes.com/2020/03/14/opinion/coronavirus-social-distancing.html)

சில நாட்களுக்கு முன் பிரான்சில் கொரோனா வைரசுக்கு எதிராக யுத்த பிரகடனம் செய்த அந்நாட்டின் ஜனாதிபதி பிரெஞ்சு மக்களை ஒரு தேசமாக திரள வேண்டும் என்று கேட்டிருக்கிறார். அவர் அவ்வாறு கூறுவதற்கு சில நாட்களுக்கு முன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சார்க் நாடுகளை இலத்திரனியல் கருத்தரங்கின் மூலம் ஒன்றுகூட்டி சார்க் நாடுகள் ஒரு திரளாக வைரஸை எதிர்கொள்ள வேண்டும் என்று கேட்டிருக்கிறார். கொரோனா வைரசுக்கு எதிரான ஓரு பிராந்தியத்தின் கூட்டு நடவடிக்கை அது. கொரோனாவை ஒரு பிராந்தியமாக எதிர்கொள்ளும் ஒரு முன்முயற்சி அது. கொரோனா வைரஸ் ஒரு உலகப் பொதுச் சவால். அதற்கு மொழி இல்லை, இனம் இல்லை, மதம் இல்லை, அரசியல் எல்லைகள் இல்லை, தேசிய எல்லைகள் இல்லை. எனவே அதை எதிர்கொள்வதற்கான உழைப்பும் ஒரு கூட்டு உழைப்பாக இருக்க வேண்டும். அதைப் பிராந்தியங்களாக கண்டங்களாக உலக சமூகம் முழுவதுமாகத்தான் எதிர்கொள்ள வேண்டும்.

‘நெப்போலியனால் ரஷ்யாவை வெற்றி கொள்ள முடியவில்லை. ஹிட்லரால் ரஷ்யாவை வெற்றி கொள்ள முடியவில்லை. ஆனால் பிளேக் நோய் ரஷ்யாவை வெற்றி கொண்டது’ என்று; பேராசிரியர் பெனெடிக்டோவ் கூறுகிறார்.

பிளேக் நோய் அளவுக்கு அல்லது ஸ்பானிஸ் ஃப்ளு அளவுக்கு அல்லது எபோலா அளவுக்கு கொரோனா வைரஸ் இதுவரையிலும் சேதத்தை ஏற்படுத்தவில்லை. எனினும் பூகோள மயப்பட்ட உலகில் நோய்த் தொற்றைக் குறித்த அச்சம் நோயை விட வேகமாக பரவுகிறது. அதுகுறித்த வதந்திகளும் மூடநம்பிக்கைகளும் அதைவிட வேகமாகப் பரவுகின்றன. சமூக வலைத்தளங்களில் பெருமளவுக்கு ஆக்ரமித்து இருப்பது சாமானியர்களே.

எனவே இது தொடர்பில் நிபுணத்துவ அறிவு மிகக் குறைந்த அளவுக்கே பரவுகிறது. இப்படிப்பட்ட சமூகப் பொருளாதார தொழில்நுட்ப மருத்துவ பின்னணியில் ஓர் உலகப் பெருந் தொற்று நோயின் தொற்று வேகத்தை சமூகத் தனிமைப்படுத்தல் மூலம் தடுக்கலாம். எனினும் அதற்கு எதிரான இறுதி வெற்றி எனப்படுவது சமூகக் கூட்டொருமைப்பாடு மூலமே கிடைக்கும். சீனவில் முதலில் தொற்றுத் தொடங்கிய வுகான் மாகாணத்தில் நோயைக் கட்டுப்படுத்துவதற்காக கிட்டத்தட்ட 40000 தொண்டர்கள் வெளி மாகாணங்களிலிருந்து வந்தார்கள். சில நாட்களுக்கு முன் அவர்கள் தத்தமது மாகாணங்களுக்குத் திரும்பிச் சென்றபோது அவர்களுக்கு சீனப்படைகள் சல்யூட் அடித்து வழியனுப்பி வைத்தன.

இயற்கை அனர்த்தங்களின் போது எப்படி சமூகக் கூட்டொருமைப்பாடு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உள அரணாகவும் தெம்பாகவும் அமைகிறதோ அப்படித்தான் உலகப் பெரும் தொற்று நோய்களின் போதும் கூட்டொருமைப்பாடு அந்த நோயை எதிர்கொள்வதற்கு வேண்டிய உளவியல் பலத்தை வழங்கும். தனிமைப் படுத்தப்பட்டிருக்கும் நோயாளர்களுக்கும் நோய்க்கு அதிகம் இலக்காகக் கூடியவர்கள் என்று கருதப்படுகின்ற சமூகத்தின் மிகவும் பலவீனமான தரப்புகளுக்கும் உதவி செய்வதன் மூலம் சமூகக் கூட்டொருமைப்பாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் என்று கலாநிதி கிளினேன்பெர்க் கூறுகிறார்.

இதற்கு மற்றொரு உதாரணம் கியூபா. நடுக்கடலில் சில கொரோனாத் தொற்று உடையவர்களோடு தத்தளித்துக் கொண்டிருந்த பிரித்தானிய பயணிகள் கப்பல் ஒன்றை தமது துறைமுகங்களுக்குள் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் அனுமதிக்கவில்லை. ஆனால் கியூபா இதுவிடயத்தில் ரிஸ்க் எடுத்தது. துணிந்து அந்த கப்பலுக்கு தனது துறைமுகத்தை திறந்துவிட்டது. இதன் மூலம் அது உலகளாவிய ஜக்கியத்தை நிரூபித்திருக்கிறது. ‘இது கூட்டொருமைப்பாட்டிற்கான நேரம். சுகாதாரத்தை ஒரு மனித உரிமையாக புரிந்து கொள்வதற்கான நேரம். உலகப் பொதுச் சவால்களை எதிர்கொள்வதற்கு அனைத்துலக கூட்டிணைவை மேலும் பலப்படுத்துவதற்கான நேரம்.; எமது மக்களுடைய புரட்சியின் மனிதாபிமான நடைமுறையின் இயல்பான விழுமியங்களின் நேரம்’ என்று கியூப வெளியுறவு அமைச்சு ஓர் அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. எபோலாவைக் கட்டுப்படுத்துவதிலும் கியூபாதான் துணிந்து ஆபிரிக்காவிற்குள் இறங்கியது

ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை கியூபா யுத்த காலத்திலும் ஐநாவில் மனித உரிமைகள் பேரவையிலும் ஈழத் தமிழர்களின் பக்கம் நிற்கவில்லை. எனினும் ஓர் உலகப் பொது நோயை எதிர்கொள்வதில் கியூபா காட்டும் முன்னுதாரணம் பாராட்டப்பட வேண்டியது.

தகவல் தொழில்நுட்பம் ஒருபுறம் மக்களை தனியன்கள் ஆக்குகிறது. உதிரிகள் ஆக்குகிறது. இன்னொருபுறம் அது அவர்களை இலத்திரனியல் திரட்சி ஆக்குகிறது. ஒரே சமயத்தில் அது மக்களைத் திரட்டுகிறது உதிரிகளும் ஆக்குகிறது. இப்பொழுது ஓர் உலகப் பெரும் தொற்று நோயானது மனிதனை முன்னெப்போதையும் விட தனித்து இருக்குமாறு செய்துவிட்டது. எனினும் உலகளாவிய கூட்டொருமைப்பாட்டின் மூலமே தனிமைச் சிறையிலிருந்து மனிதகுலம் விடுதலை பெறமுடியும். #கொரோனா  #பஸ்மாசுரன் #அசுரன் #கியூபா #சிரியா
 

 

http://globaltamilnews.net/2020/138804/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.