Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாட்டுப்புறத் தெய்வங்களும் மக்கள் நம்பிக்கைகளும்

Featured Replies

நாட்டுப்புறத் தெய்வங்களும் மக்கள் நம்பிக்கைகளும்

முனைவர் கு. கண்ணன்

நம்பிக்கைகளும், பழக்க வழக்கங்களும் வாழ்க்கைத் தேவைகளால் தோன்றியவை. நம்பிக்கைகள் மக்களால் உருவாக்கப்படுகின்றன. பின்னர் அவை சமுதாயத்தால் பாதுகாக்கப்படுகின்றன. தனி மனித உணர்வாலும் சமுதாய உணர்வாலும் நம்பிக்கைகள் மேலும் வளர்கின்றன. அவை காலங்காலமாகத் தொடர்கின்றன. பெரும்பாலும் அச்ச உணர்வினாலேயே நம்பிக்கைகள் தோன்றுகின்றன. வாழ்வில் சில செயல்களுக்கு காரணம் கற்பிக்க முடியாத போது நம்பிக்கைகள் அசைக்க முடியாத உரம் பெறுகின்றன. இயற்கைக்கு அப்பாற்பட்ட நிகழ்ச்சிகளை அறிய முடியாத போதும் இவை உருவாக்கின்றன.

நாட்டுப்புறத் தெய்வம்:-

நாட்டுப்புறத் தெய்வம் என்பதை மக்களால் உருவாக்கப்பட்டதும் மக்களில் வாழ்ந்து இறந்தவர்களையும் உயர்நிலையில் வைத்து வழிபாட்டினை மேற்கொள்ளும் தெய்வத்திற்கு நாட்டுபுறத்தெய்வம் என்று அழைக்கப்பட்டது என்பர். நாட்டுப்புறத் தெய்வங்களின் தோற்றமானது மக்களின் முன்னோர்களே நாட்டுப்புறத் தெய்வங்கள் ஆகும். வாழ்வினில் பல உதவிகளை செய்தவர்கள் நற்பெயரை ஊரில் பெற்றவர்கள் அவர்கள் இறந்தவுடன், நடுகல், சுமைதாங்கி, ஆகியவற்றைப் புதைப்பர். இவ்வழியிலே நாட்டுப்புறத் தெய்வங்களின் தோற்றம் ஏற்பட்டிருக்கும் என்பர்.

நாட்டுப்புறத் தெய்வங்களை ஊர்த்தெய்வங்கள், இனத்தெய்வங்கள், குல தெய்வங்கள், மாலைத் தெய்வங்கள், சமாதித்தெய்வங்கள் துணைத் தெய்வங்கள் என ஆறுவகையாகப் பகுக்கிறார் துளசி இராமசாமி.

பெண் தெய்வங்கள்:-

காளியம்மன், துர்க்கையம்மன், செல்லியம்மன், மாரியம்மன், கரடியம்மன், காந்தாரியம்மன், வெயிலுகாத்தம்மன், உச்சிமாகாளி, காய்ச்சிக்காரம்மன், வடக்கு வாய்ச்சொல்லி, அரிய நாச்சியம்மன், வீரகாளியம்மன், அங்காள ஈசுவரி, குளத்து அம்மன், மந்தையம்மன், வடக்குத்தியம்மன், சந்தனமாரியம்மன், உமையம்மன், பெத்தனாட்சி, சோலையம்மன், காமாட்சியம்மன், மரகதவல்லி, செண்பகவல்லியம்மன், சந்திரமாகாளி, அட்டங்கம்மா, அம்மாரி, அங்கம்மா, அன்னம்மா, அரிக்கம்மா, பாலம்மா, பத்ரகாளி, செமலம்மா, தாலம்மா, தோட்டம்மா, திரௌபதி, துர்க்கா, கங்கம்மா, கூனல்மாரி, கிரிதேவி, கன்னியம்மா, கன்னிகை, கீர்மாரி, மலைமாயி, மாரம்மா, முனி, முத்தாலம்மா, பிடாரி, பூலம்மா, சப்தகன்னிகை, துர்க்கை, உடலம்மா, உக்கிரமாகாளி, உச்சினமாகாளி, வாசுகோடி, ஈலம்மா, வானமாலம்மன் முதலியன பெண் தெய்வங்களாகக் கருதப்படுகின்றன.

ஆண் தெய்வங்கள்:-

இருளப்பச்சாமி, கருப்பசாமி, அய்யனார், மாடசாமி, சுடலைமாடன், முனிசாமி, தலைவாயில் கருப்பசாமி, உத்தண்டசாமி, சமயக்கருப்பசாமி, சங்கிலிக் கருப்பசாமி, பெரியாண்டவர், பசவன்னா, பதலமா, புத்தாகாசிப், எல்லைக்கறுப்பு, ஐயனார், கறுப்பண்ணா, கறுப்பு கூத்தாண்டவர், மாதேஸ்வரா, மதுரைவீரன், ஊர் அத்தியன், மகாலிங்கா, ராஜவாயன், பெரியண்ணாசுவாமி, பொதுசாட்ச போன்றவை ஆண் தெய்வங்களாகக் கருதப்படுகின்றன.

நம்பிக்கைகள்:-

மனிதன் சில நோய்கள் தெய்வத்தின் சினத்தால் உண்டாவதாகவும் அந்நோய்களை நீக்குவதற்குத் தெய்வத்தின் சினத்தைத் தணிக்க வேண்டும் என்றும் நம்புகின்றான்.

இந்நம்பிக்கைகளின் விளைவாகத் தெய்வத்தின் சினத்தைத் தனிப்பதற்குச் சில மந்திர சடங்குகளை நடத்துகின்றனர். இது போன்ற நோய் உண்டாவது பற்றிய மற்ற நம்பிக்கைகளுக்கு ஏற்பப் பல்வேறு வகையான மந்திரச் சடங்குகள் நடத்தப்படுகிறது.

மாவிளக்கு எடுத்தல்:-

குடும்பத்தில் சிறு வயதுள்ளவர் ஏதேனும் நோயிற்கு ஆட்படும் பொழுது குடும்பக் குல தெய்வத்திற்கு அரிசி மாவினால் விளக்கு செய்து அதில் எண்ணெய் ஊற்றித் திரி போட்டு ஏற்றி வைப்பர். இவ்வாறு ஏற்றப்படும் விளக்கினில் எண்ணெய் வெளிப்படாது நிலைத்து விளக்கு எரியுமானால் நோயுற்றவர் குணமடைவர் என்ற நம்பிக்கை மக்களிடம் காணப்படுகிறது.

அக்கி எழுதுதல்:-

அக்கி எழுதுதல் என்பது முகத்திலோ உடலிலோ பூச்சிக் கடியின் காரணமாகப் புண் ஏற்பட்டு அப்புண்ணிலிருந்து நீர் வடிந்து நாற்றம் வருதல். இதை தடுப்பதற்காக மக்கள் கோயில்களுக்குச் சென்று அங்குள்ள பூசாரியின் மூலமாக உடலின் மீது வேம்பிலையின் நுனியில் கோயிலில் எறியும் விளக்கின் எண்ணெய் கொண்டு தடவுவர். இதன் பயன் அவர்களது புண் நீங்கும் என்பது நம்பிக்கை. இவ் அக்கி எழுதும் வழக்கம் பூசாரிக்கு மட்டுமின்றிக் கொசவர் குலத்திலும் உண்டு.

மந்திரித்தல்:-

மந்திரித்தல் என்பது கோயிலில் அம்மனுக்குப் பூசையினை மேற்கொள்ளும் பூசாரி வேம்பிலை கொண்டு நோயுள்ளவர் அல்லது பயந்தவர் முகத்தில் அடித்தால் அவரது நோயும் பயமும் நீங்கும் என்பது நம்பிக்கை.

கயிறு மந்திரித்தல்:-

கை, கால் வீழ்ந்தவர்களுக்குக் கோயிலில் மந்திரிக்கப்பட்ட அம்மன் உருவத்தோடு பொறித்த கயிற்றினை கழுத்தினில் கட்டுவர். இதனால் இவர்களது நிலையை மேலும் žராக்கும் என்ற நம்பிக்கை மக்களிடம் உண்டு.

திருநீறு போடுதல்:-

உடல் நிலை சரியில்லாதவர்கள், கை, கால் வீழ்ந்தவர்களுக்கு அவர்களது குல தெய்வக் கோயிலில் இருந்து திருநீற்றினைக் கொண்டு வந்து உடல் நிலை சரியில்லாதவர்கள் மீது திருநீற்றினைப் பூசுவார்கள். இவை பயந்தவர்களுக்கு நன்மை பயக்கும் என்பது நம்பிக்கை.

கண்மலர் படைத்தல்:-

கண்ணில் ஏற்படும் நோய்களால் கண்ணில் பூ விழுதல், பார்க்கும் ஆற்றலை இழத்தல் முதலியவை தெய்வச் சினத்தால் விளைந்தவை என மக்கள் நம்புகின்றனர். இந்நோய்களை நீக்குவதற்கு நோயாளியோ, நோயாளியின் உறவினர்களோ சில சடங்குகளைச் செய்கின்றனர். நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கண் போன்ற உருவத்தைச் செய்து படைப்பதைக் கண்மலர் படைத்தல் என அழைக்கின்றார்கள்.

நாகதேவதை:-

பாம்பு, தேள், பூரான், எலி, நாய், வண்டு, ஆகியவை கடிப்பதினால் உண்டாகின்ற உடல் நலக் கேடுகளுக்குத் தெய்வத்தின் சினம் என்று மக்கள் நம்புகின்றனர். நாகதேவதையின் காரணமாக மனிதர்கள் பாம்புக் கடிக்கு ஆட்படுகிறார்கள் என்ற நம்பிக்கை நிலவுகிறது. ஒருவரை பாம்பு கடிப்பதால் உண்டாகின்ற உடல் நலக் கேடுகளைப் போக்குவதற்கு மந்திர சடங்கின் மூலம் தெய்வத்தின் சினத்தைப் போக்கி ஆற்றுவித்தல் வேண்டும் என நம்பப்படுகிறது. கடித்த பாம்பு கொல்லப்பட்டு விட்டால் மந்திரம் அறிந்த பூசாரி அதன் வாலில் ஒரு கயிற்றை கட்டித் தலைகீழாகத் தொங்கவிடுகிறார். பின்னர் பாம்புக்கு வாயிலிருந்து இரத்தம் கீழே வடிய வடிய நோயாளியின் உடம்பிலிருந்து நஞ்சு இறங்கும் என நம்புகின்றனர்.

இருளடித்தல்:-

குழந்தைகளை இருளில் தூக்கிச் சென்றால் இருளில் மறைந்திருப்பதாக நம்பப்படும் தீய ஆவிகளால் குழந்தைகளுக்குப் பசியின்மை, உடல் மெலிவு போன்ற நோய்கள் உண்டாவதாக நம்பப்படுகிறது. இதே போன்று குழந்தைகளை நீர் நிலைகளுக்கு அருகில் கொண்டு சென்றால் அந்த நீர் நிலைகளில் உறைந்திருப்பதாக நம்பப்படும் தீய ஆவிகளாலும் நோய்கள் உண்டாவதாகவும் நம்பப்படுகின்றன. இந்நோய்களை நீக்குவதற்குப் பூசாரி மூலம் சில மந்திரச் சடங்குகள் நடத்தப்படுகின்றன.

பேய் பிடித்தல்:-

ஆணோ, பெண்ணோ எதிர்பாரா வகையில் உடல் நிலையாலும், மனநிலையாலும் பாதிப்படைந்தால் அப்பாதிப்புக்குரிய காரணம் தீய ஆவியின் செயல் என கூறப்படுகின்றது. தீய ஆவியின் செயலால் பாதிக்கப்படுவதாக நம்பப்படுகின்ற நோயாளிகளின் உடல் மெலிந்து கொண்டே செல்லும். நோயாளிகள் தங்களை மறந்து பேசுவதும், சிரிப்பதும், அழுவதும், பாடுவதுமாக இருப்பார்கள். இத்தகைய நிலையைப் பேய் பிடித்த நிலை என்று நம்புகின்றனர். ஆண்களை விடப் பெண்களே இந்நிலைக்கு அதிகம் ஆட்படுகிறார்கள். பேய்ப்பிடித்த நிலையிலிருந்து பெண்களை மீட்பதற்கு மந்திர வாக்குகள் மூலம் சில மந்திரச் சடங்குகள் நடத்தப்படுகின்றன. வழிபாட்டுச் சடங்குகளை போன்றே மந்திரச் சடங்கு நடத்தப்படுகிறது.

தெய்வத்தின் சினமும் - நோய்களும்:-

தெய்வத்தின் சினத்தால் அம்மை நோய், வயிற்றம்மை, சுரைக்காய் அம்மை, ஒற்றம்மை, நாய்க்கணை, குன்னிருமல், உடலுறுப்பு நோய்கள், பருக்கள், பாலுண்ணிகள், அரும்பாறைகள், நச்சுக்கடி ஆகிய நோய்கள் தெய்வத்தின் சினத்தால் உண்டாவதாகவும் இந்நோய்களை நீக்குவதற்குத் தெய்வத்தின் சினத்தைத் தணிக்கின்ற மந்திரச் சடங்குகளைச் செய்கின்றனர்.

அம்மை என்ற நோய் மாரியம்மன் என்ற தெய்வத்தின் சினத்தால் உண்டாவதாக நம்புகின்றனர். தீய ஆவிகளை வீட்டினுள் நுழைய விடாமல் தடுப்பதற்கு வீட்டின் வாயிலில் வேப்பிலைத் தோரணங்களைக் கட்டுகின்றனர். இத் தோரணத்தைக் காப்பு என அழைக்கின்றனர். மாரியம்மனின் சினம் தனிந்து நோய் நீங்கி விட்டால் நோயாளியோ அல்லது நோயாளியின் நெருங்கிய உறவினரோ தீச்சட்டி ஏந்தி ஊர்சுற்றி வந்து அம்மனுக்குச் சமர்ப்பிப்பதாக நேர்ந்து அதன்படி சடங்கினைச் செய்து முடிக்கின்றனர். ஒரு மனிதனுக்கு தீங்கு செய்ய வேண்டுமெனில் மந்திரவாதியின் மூலம் முட்டை, பல்லி ஆகியவற்றைச் சிதைத்து மந்திரங்களை உச்சரித்து அம்மனிதன் அதிகம் நடமாடும் இடங்களில் புதைத்துவிடுவார்கள். இதனை சூனியம் வைத்தல் என்பர். இந்த மந்திரச் சடங்குகளுக்கு எதிராக அம்மனது பீடத்திலிருந்து திருநீற்றினைக் கொண்டு வந்து நோயுள்ளவரது உடலில் பூசுவர். இதனால் நோயாளி குணமடைவர் என்ற நம்பிக்கை நிலவுகின்றது.

இவை மட்டுமின்றி, வயிற்றமை, குன்னிருமல், தெக்கத்திக்கனை, பயந்த கோளாறு, இருளடித்தல், பேய்விரட்டல் போன்றவை தெய்வத்தின் சினத்தால் உண்டாவதாகவும் இந்நோய்களை நீக்குவதற்குத் தெய்வத்தின் சினத்தை தனிக்கின்ற மந்திரச் சடங்குகளைச் செய்கின்றனர். தெய்வ நம்பிக்கைகளின் பலன் மழைவருமென்றால் வரும், நோய்கள் நீங்கும், பேய்கள் விலகும், பிள்ளை வரம், செல்வம் பெருகும், சத்தியம் பலித்திடும், தொழுதால் துன்பம் நீங்கும், பகை விலகும், பிரிந்தவர் கூடுவர், கல்வி வளம் பெருகும் புத்திகிட்டும் போன்ற பலன்கள் நாட்டுப்புறத் தெய்வங்களை வணங்கினால் கிடைக்கும் என்பது மக்களின் நம்பிக்கைகள்.

ஆய்வுரை:-

* நாட்டுப்புற நம்பிக்கைகள், கிராமத்து மக்களுக்கு மட்டும் உரியனவாக இல்லாமல் நகரத்து மக்களுக்கும் உரியனவாகவும் உள்ளன.

* நாட்டுப்புறத் தெய்வங்கள் பெரும்பாலும் பெண் தெய்வங்கள்.

* பல தெய்வ வணக்கம் இம்மக்களின் பண்பாகும்.

* நம்பிக்கைகள் மக்களால் உருவாக்கப்படுகின்றன. தனிமனித உணர்வும், சமுதாய உணர்வும், நம்பிக்கைகளாக வளர்கின்றன பெரும்பாலும் அச்ச உணர்வினாலேயே நம்பிக்கைகள் தோன்றுகின்றன.

* வாழ்வில் சில நம்பிக்கை செயல்களுக்குக் காரணம் கற்பிக்க முடியாத போது நம்பிக்கைகள் அசைக்க முடியாத வரம் பெறுகின்றன. இயற்கைக்கு அப்பாற்பட்ட நிகழ்ச்சிகளை அறிய முடியாத போதும் இவை உருவாகின்றன.

* நோய்களும் அவற்றின் காரணமான நம்பிக்கைகளும் தெய்வத்தின் சினம், தீய ஆவிகளின் செயல், மந்திரவாதிகளின் செயல் என்ற அடிப்படையில் மக்கள் நாட்டுப்புறத் தெய்வங்கள் மீது அசைக்க முடியாத நம்பிக்கைகளைக் கொண்டுள்ளனர்.

* மருத்துவ மந்திரச் சடங்குகளை மந்திரிக்கிறது. திருநீறு போடுவது, வேப்பிலை அடிப்பது, அக்கி எழுதுவது, கயிறு மந்திரிக்கிறது, கண்மலர் வைப்பது, மாவிளக்கு எடுப்பது, நேர்த்திக் கடன் செய்வது, தகடு வைப்பது, ஏவல் செய்வது போன்ற பல பெயர்களால் மருத்துவ மந்திரச் சடங்குகள் நிகழ்கால நிலையில் குறிப்பிடப்படும் நம்பிக்கைகளாகும்.

நன்றி: வேர்களைத் தேடி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.