Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையில் நெருங்கிவரும் அரசியலமைப்பு நெருக்கடி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையில் நெருங்கிவரும் அரசியலமைப்பு நெருக்கடி

 

“கொரோனா பொதுச்சுகாதார நெருக்கடி தொடர்பில் ஜனாதிபதியும் அவரது இராணுவமும் மருத்துவ ஆலோசகர்களும்  இதுவரையில் நடைமுறைப்படுத்திய தந்திரோபாயத்தின் மீது விமர்சன அடிப்படையிலான ஒரு பார்வையை செலுத்தவேண்டிய நேரம் இது”

பொதுச்சுகாதாரம், அரசியலமைப்பு, அரசியல் என்று இலங்கை முகங்கொடுக்கின்ற மும்முனை நெருக்கடி நாளுக்கு நாள் தீவிரமடைந்துகொண்டு வருகின்றது.முன்னரங்கக் கடமையில் ஈடுபட்டிருந்த வெலிசறை மற்றும் சீதுவை முகாம்களைச் சேர்ந்த கடற்படை வீரர்களிலும் விசேட  அதிரடிப்படை வீரர்களிலும்  பலருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறது.அதேவேளை, கொழும்பு மற்றும் கொழும்பு நகரில் குறைந்த வருமானம் பெறும் மக்கள் பிரிவினர் வசிக்கின்ற பகுதிகளுக்கும் வெளியே வைரஸினால் இதுவரையில் தீண்டப்படாத கிராமங்களில் தொற்றுநோய் பரவத்தொடங்கியிருக்கிறது.இந்த நிகழ்வுப்போக்குகள்  கொரோனாவைரஸ் தொற்றுநோயின் விளைவாகத் தோன்றிய சிக்கலான பிரச்சினைகளை மேலும் மோசமாக்குகின்றன.

அரசாங்கத்தின் இராணுவவாத சிந்தனையும் மனப்போக்கும் பின்வரும் கொள்கைப் பின்விளைவுகளுக்கு வழிவகுத்திருக்கிறது ;

♦  பொதுச்சுகாதார நெருக்கடி நிலையின்போது குடிமக்களின் ஒழுக்கம் மற்றும் நடத்தைகளை சிவில் நிருவாகம் ஒன்றின் தலைமைத்துவத்தின் கீழ் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கு ஆயுதப்படைகளின் உதவியை பெறுவதற்குப் பதிலாக, சிவில் நிருவாகக்கட்டமைப்பே இராணுவ அதிகாரத்தின் கீழ் கொண்டுவரப்பட்டிருக்கிறது.

 ♦ பயங்கரவாதத்துக்கு எதிரான தரைச்சண்டைக்கும் தொற்றுநோய்ச் சூழ்நிலையில் பொதுச்சுகாதாரத்தை முன்னைய வழமைநிலைக்கு கொண்டுவருமுகமாக ஒரு வைரஸுக்கு எதிரான சிவிலியன் நடவடிக்கைக்கும் இடையிலான அடிப்படை வேறுபாடு அலட்சியம் செய்யப்பட்டிருக்கிறது.

ccc.jpg

♦ கொரோனாவைரஸ் தொற்றுக்குள்ளாகியிருப்பதாக சந்தேகிக்கப்பட்ட நபர்களை பிடிப்பதற்கு தேடுதலுக்குச் சென்ற படையினரிடம் முகக்கவசங்களைத் தவிர, வேறு எந்தவிதமான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணமும் இருக்கவில்லை என்பது உண்மையில், கற்பனைசெய்துபார்க்கவே முடியாத ஒன்று.இந்த படையினரை முன்னெச்சரிக்கையாக தொற்றுத்தடுப்பு காவலில் வைக்காமல் அல்லது கண்டிப்பான சுகாதார ஆலோசனைகளை வழங்காமல் விடுமுறையில் அவர்களது கிராமங்களுக்கு செல்வதற்கு அனுமதித்த செயல், கொரோனாவைரஸின் இயக்கவிசையும்  நடத்தையும்  அசட்டை செய்யப்பட்டதையே காட்டுகிறது. அதை விளங்கிக்கொள்ள முடியவேயில்லை.கொரோனாவைரஸ் என்ற இந்த மிகவும் வேறுபட்ட ஒரு ' எதிரிக்கு ' எதிரான மிகவும்  வேறுபட்ட ' போரில் ' இராணுவச்சீருடைக்கும் தன்னியக்கத் துப்பாக்கிக்கும் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட ஒரு பங்கு மாத்திரமே இருக்கிறது என்பதை விளங்கிக்கொள்வது முக்கியமானதாகும்.

ஜனாதிபதி தனது சொந்த அரசியல் நிகழ்ச்சித்திட்டத்தின் பிரகாரம் ஒரு தலைப்பட்சமாக இந்த ' போரையும் ' கூட முடிவுக்குக் கொண்டுவரமுடியும் என்றும் அந்த வெற்றிக்கான பெருமைக்கும் புகழுக்கும் தானும் தனது நெருங்கிய வட்டாரங்களும் மாத்திரமே உரிமையுடையவர்களாக இருக்கவேண்டும் என்றும் கொண்டிருக்கும் நம்பிக்கை இராணுவ அணுகுமுறையொன்றின் ஊடாக கொரோனா தொற்றுநோயை தோற்கடிப்பதற்கான அவரின் தந்திரோபாயத்தின் இனனொரு வெளிப்பாடாகும். ஜனாதிபதி இப்போதாவது இரு ' போர் ' நடவடிக்கைகளுக்கும் இடையிலான அடிப்படை வேறுபாடுகளை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கவேண்டும்.

இராணுவ பாணி தீர்வு கிடையாது

இந்த புதிய நிலைவரம் அரசாங்கத்துக்கும் ஜனாதிபதிக்கும்  முக்கியமான ஒரு செய்தியக் கூறுகிறது, அதாவது கொரோனா தொற்றுநோயின் பரவலினால் தோற்றுவிக்கப்பட்டிருக்கும் பொதுச்சுகாதார நெருக்கடிக்கு எந்த விதமான இராணுவ பாணி தீர்வு கிடையாது.விடுதலை புலிகளின் பயங்கரவாதத்தை தோற்கடித்த வெற்றிகரமான இராணுவ இராணுவ நடவடிக்கையுடன் அதை ஒப்பிட்டுக்கொண்டே கொாரோனாவைரஸுக்கு எதிரான ' போரை ' ஜனாதிபதி முன்னெடுத்தார்.ஆனால், தொலைக்காட்சியில் அவரது உரைகளை கேட்டவேளையில் அவதானிகள் ஊகித்துக்கொண்டவை இப்போது துரதிர்ஷ்டவசமாக உறுதிசெய்யப்பட்டுக்கொண்டிருக்கிறன ; இராணுவ அணுகுமுறையொன்று  கொரோனா நெருக்கடியைத் தீர்கப்போவதி்ல்லை, மாறாக மேலும் மோசமாக்கும். பொதுச்சுகாதார வீச்செல்லைக்கும் அப்பால் பிரச்சினை சென்று வேறு செயற்களங்களிலும் நெருக்கடிக்கு இட்டுச்செல்லக்கூடும்.

கொரோனா பொதுச்சுகாதார நெருக்கடி தொடர்பில் ஜனாதிபதியும் அவரது இராணுவமும் மருத்துவ ஆலோசகர்களும்  இதுவரையில் நடைமுறைப்படுத்திய தந்திரோபாயத்தின் மீது விமர்சன அடிப்படையிலான ஒரு பார்வையை செலுத்தவேண்டிய நேரம் இது.அரசாங்கத்தின் தந்திரோபாயத்தின் முதற்கட்டம் இப்போது, பல விவகாரங்களிலும் வெற்றியுடன் முடிவுக்கு வந்துவிட்டது போலத் தோன்றுகிறது.ஆனால், ஜனாதிபதியும் அவரது குழுவினரும் உறுதியளித்ததைப் போன்று துரிதமாக வழமைநிலையை அது கொண்டுவரவில்லை என்பது பதிராக இருக்கிறது.பொதுச்சுகாதார முனையில் காணப்பட்ட ஆரம்ப வெற்றிகளுடன் சேர்ந்து பல்வேறு வகையான சமூகப்பிரச்சினைகள் சமாந்தரமாக தோன்றியிருக்கின்றன.இந்தப் பிரச்சினைகள் இன்னமும் கவனத்திற்கொள்ளப்படவில்லை.

“தொற்றுநோயினால் தோற்றுவிக்கப்பட்ட  பல்வேறு மட்டங்களிலான நெருக்கடிக்கு இராணுவ ரீதியான தீர்வு எதுவும் கிடையாது என்று ஏற்றுக்கொள்வது பொதுச்சுகாதார நெருக்கடியைக் கையாளுவதில் இராணுவத்துக்கும் பொலிஸுக்கும் எந்த அதிகாரமும் உரிமையும் இல்லை என்று சொல்வதாகாது“

அதேவேளை, சமூகரீதியில் ஊறுபாட்டுக்கு எளிதாக உள்ளாகக்கூடிய சமூகங்களுக்கு  தொற்றக்கூடிய கட்டத்திற்குள் வைரஸ் நோய் பிரவேசிக்கும் அச்சுறுத்தலும் காணப்படுகிறது.நகர்ப்புற வறியவர்களையும் உழைக்கும் வர்க்கத்தினர் மற்றும் கிராமப்புற வறியவர்களையும் வைரஸ் இலக்குவைக்கத் தொடங்கியிருக்கிறது.வர்க்கப்பிளவுகள் நெடுகிலும் தொற்றுநோய் இயங்கத்தொடங்கியிருப்பதையே இது குறித்துக்காட்டுகிறது.பொதுச்சுகாதார சவாலின் இந்த சமூக யதார்த்தத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொள்வது விமர்சன அடிப்படையிலான மீளாய்வின் முதற்படியாக இருக்கவேண்டும்.இப்போது அரசியல், அரசியலமைப்பு, பொருளாதார மற்றும் சமூக செயற்களங்களுக்கும் பரவுகின்ற இந்த நெருக்கடியை தீர்ப்பதற்கு இராணுவரீதியான அணுகுமுறை எதுவுமம் கிடையாது என்பதை ஏற்றுக்கொண்ட பின்னர் மாதிரமே இரண்டாவது கட்டம் திட்டமிட்டு உருவாக்கப்படவேண்டும்.

தொற்றுநோயினால் தோற்றுவிக்கப்பட்ட  பல்வேறு மட்டங்களிலான நெருக்கடிக்கு இராணுவ ரீதியான தீர்வு எதுவும் கிடையாது என்று ஏற்றுக்கொள்வது பொதுச்சுகாதார நெருக்கடியைக் கையாளுவதில் இராணுவத்துக்கும் பொலிஸுக்கும் எந்த அதிகாரமும் உரிமையும் இல்லை என்று சொல்வதாகாது.

பொதுச்சுகாதார நெருக்கடியைக் கையாள்வதற்கான அரசாங்கத்தின் ஒட்டுமொத்த சிந்தனையிலும்  உடனடித் தந்திரோபாயத்திலும் இராணுவவாத சிந்தனையும் கணிப்பீடுகளும் மனப்போக்கும் இனிமேலும் ஆதிக்கம் செலுத்தக்கூடாது என்பதே அதன் உண்மை அர்த்தமாகும்.பொதுச்சுகாதார நெருக்கடியினால் விழைவிக்கப்பட்டிருக்கும் பொதுநெருக்கடியின் அரசியல், அரசியலமைப்பு மற்றும் சமூகப்பரிமாணங்களையும் ஜனாதிபதி கையாளும் முறையில் இராணுவ மனப்போக்கின் மட்டுப்பாடுகள் வெளிப்படுத்தப்படும் சாத்தியம் இருக்கிறது.

புதியதொரு அணுகுமுறை

தற்போதைய நெருக்கடியை கட்டுப்படுத்தி, இறுதியில் இராணுவவாதமற்ற -- இடைத்தர காலத்துக்கான ( Medium --term ) தந்திரோபாயம் அவசரமாகத் தேவைப்படுகிறது.அத்தகையதொரு புதிய அணுகுமுறையின் முதலவது அம்சமாக தற்போது முன்னெடுக்கப்பட்டிருக்கின்ற ' நடவடிக்கயை ' இராணுவமயநீக்கம் செய்யவேண்டும்.முனனர் குறிப்பிட்டதைப் போன்று, இது பொதுப்பாதுகாப்பு கடமைகளில் இருந்து அல்லது சட்டம், ஒழுங்கைப் பேணுகின்ற -- மருத்துவ மற்றும் நிர்வாக அவசரகால நிலைமைகளுடன் தொடர்புடைய பணிகளில் இருந்து ஆயுதப்படைகளையும் பொலிஸையும் அகற்றுவதாக அர்த்தப்படாது.எல்லாவற்றுக்கும் மேலாக, அவசரகால நிலைமைகள் எனப்படுபவை வழமையான சூழ்நிலைகளின் கீழ் அரசின் சிவிலியன் உத்தியோகத்தர்களுக்கு ஒதுக்கப்படுகின்ற பாதுகாப்பு மற்றும் நிர்வாகக் கடமைகளை செய்வதற்கு  நிறைவேற்று அதிகாரத்தின் பாதுகாப்புப் பிரிவைக் கொண்டுவருவதாகும்.ஆனால், அவர்களின் பங்கேற்பு சிவில் நிருவாக அதிகாரிகளையும் மருத்துவ நிபுணர்களையும் உள்ளடக்கிய கூட்டுத்தலைமைத்துவத்தின் கீழான கட்டமைப்பு ஒன்றுக்குள் ஒழுங்குபடுத்தப்படவேண்டும்.

சமாதான காலங்களில் சிவிலியன் தலைமைத்துவத்துக்கு மேலாக இராணுவத்தைப் பயன்படுத்துவதற்கு உதாரணமாக, தேர்தல் காலகட்டத்தின்போது தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பின் கீழ் பொலிலிஸையும் ஆயுதப்படைகளையும் அணிதிரட்டி தயார்நிலையில் வைத்திருப்பதைக் கூறலாம்.இங்கு வழிகாட்டும் ஆட்சிமுறைக் கோட்பாடு என்பது பொதுச்சுகாதார அவசரகால நிலையில் இராணுவத்தின் பங்கு மீது சிவிலியன் கட்டுப்பாடு இருக்கவேண்டும்  என்பதாகும்.அதேவேளை, ஜனாதிபதியின் தந்திரோபாயத்தை உருவாக்கி ஒழுங்கமைப்பதில் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பங்கு ஏற்கெனவே சர்ச்சைக்குரியதாக மாறியிருக்கிறது.அத்துடன் தற்போதைய பொதுச்சுகாதார நெருக்கடியில் பங்கும் ஈடுபாடும் கொண்ட தரப்புகளின் பரந்தளவிலான பங்கேற்பு தீர்மானங்களை எடுக்கும் செயன்முறைகளில் இருக்கவேண்டியது அவசியமும் அவசரமானதும்  என்ற உணர்வு அதிகரித்துவருகிறது.

ஜனாதிபதி தனது மனதில் உள்ளதை வெளிப்படையாகப் பேசி தனது அரசியல் செயல்வரம்பை விரிவாக்கக்கூடியதும் அரசாங்கத்தின் செயற்பாடுகள் விமர்சன அடிப்டையிலான பொதுவிவாதத்துக்குள்ளாக்கப்படுதை அனுமதிக்கக்கூடியதுமான சூழ்நிலையொன்றை உருவாக்குவதே  புதிய தந்திரோபாயத்தின் இரண்டாவது அம்சமாக இருக்கவேண்டும்.அதாவது அவர் எதிர்க்கட்சிகள் தொடர்பில் கொண்டிருக்கும் தறபோதைய சந்தேகத்தையும்  போட்டி மனப்பான்மையையும் இடைநிறுத்திக்கொள்ளவேண்டும் ; பரந்தளவிலான அரசியல் மற்றும் கொள்கைக் கலந்தாலோசனைகள், கருத்துக்கள், கருத்து முரண்பாடுகள் மற்றும் விவாதங்களில் இருந்து அரசாங்கத்தின் தந்திரோபாயம் பயன்பெறக்கூடியதாக  அவரது அணுகுமுறைகள்  இருக்கவேண்டும்.பிரத்தியேகமான உலகளாவிய மற்றும் தேசிய நெருக்கடியொன்று தோன்றியிருக்கும் ஒரு தருணத்தில் அடிப்படை அரசியல் மனப்பான்மைகளில் அத்தகையதொரு மாற்றம் ஜனாதிபதிக்கும்  எதிரணி அரசியல் கட்சிகள் மற்றும் சம்பந்தப்பட்ட ஏனைய சமூகங்களுக்கும்  இடையில் ஒரு அளவுக்கு ஆக்கபூர்வமான ஒத்துழைப்புக்கு வகைசெய்வதாக இருக்கவேண்டும்.ஜனாதிபதியிடமிருந்து இவையெல்லாவற்றையும் எதிர்பார்ப்பது மிகவும்  மிகையானதே என்றபோதிலும், அதை வலியுறுத்திக்கூறவேண்டியது அவசியமாகும்.

தற்போதைய ஆளும் கட்சிக்கும் எதிரணி அரசியல் கட்சிகளுக்கும் இடையிலான போட்டி மனப்பான்மை ஜனாதிபதி தேர்தலின்போது அதிகரித்திருந்தது. அது  அரசியல் அரங்கின் மேலாக தொடர்ந்தும் அதன் கருநிழலைப் பரப்பவே செய்கிறது.இலங்கை அரசியல் வர்க்கத்தின் இரு பிரதான முகாம்களுக்கும் இடையிலான பகைமையான உறவுமுறை அவற்றுக்கிடையே ஆழமான பரஸ்பர அவநம்பிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறது.இது அரசின் இரு பிரதான அங்கங்களான பாராளுமன்றத்துக்கும் நிறைவேற்று அதிகாரபீடத்துக்கும் இடையில் அநாவசியமான அதிகாரச்சண்டையொன்றை மீண்டும் மூளவைக்கும் ஒரு சூழ்நிலைக்கு இப்போது  வழிவகுத்திருக்கிறது.ஜனாதிபதியின் முகாம் தற்போதைய அரசியலமைப்பின் கீழ் பாராளுமன்றம் என்ற நிறுவனத்தின் மீது காட்டுகின்ற பகைமையுணர்வு இலங்கையின் ஜனநாயக  அரசியலமைப்புவாதத்திற்கு ( Democratic Constitutionalism ) நன்மைக்கான முன்னறிகுறியாகத் தெரியவில்லை.

தற்போதைய பொதுச்சுகாதார அவசரகால நிலையின் எதிர்காலத் திசைமார்க்கம் நிச்சயமற்றதாகவும் முன்மதிப்பீடு செய்யமுடியாததாகவும் இருக்கிறது.அத்தகைய ஒரு நிலையில், அரசின் இரு முக்கிய அங்கங்களுக்கு இடையிலான உறவுகள் முறிந்துபோவதற்கான ஒரு தருணமாக அந்த சுகாதார அவசரகாலநிலை அல்லது நெருக்கடி நிலை அமைந்துவிடக்கூடாது.ஏனென்றால்,அது  ஜனநாயக ஆட்சிமுறைக்கு பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும்.பதிலாக, தற்போதைய நெருக்கடியினால் தோற்றுவிக்கப்பட்டிருக்கும் சவால்கள் குறைந்தளவில் அல்ல,  கூடுதலான அளவிலான  ஜனநாயகத்தன்மையுடன் கையளப்படவேண்டும்.அதன் காரணத்தினாலும், கொரோனா நெருக்கடிக்கான அரசாங்கத்தின் இராணுவ அணுகுமுறை கூடுதலான அளவுக்கு வெளிப்படையானதும் பலரிடையிலான  கலந்தாய்வுடனானதும் சிவிலியன்களினால் தலைமைதாங்கப்படுவதுமான ஒரு செயன்முறையினால் பதிலீடு செய்யப்படவேண்டியதாகிறது. அந்த புதிய செயன்முறை எதிரணியின் சகல அரசியல் கட்சிகளினதும் பங்கேற்புக்கும் இடங்கொடுப்பதாக இருக்கவேண்டும்.

அதனால், பாராளுமன்றம் கலைக்கப்பட்டு செயலிழந்திருக்கின்ற தற்போதைய பின்புலத்தில்,  ஜனாதிபதி தலைமையிலான நிறைவேற்று அதிகாரபீடமே சுறுசுறுப்பாக...இல்லை... மிகைப்படியான சுறுசுறுப்பாக இயங்குகின்ற அரசின் ஒரேயொரு கிளையாக இருக்கின்றது.எனவே ஜனாதிபதியைப் பொறுத்தவரை, அரசியல்ரீதியாக மனந்திறந்து வெளிப்படையாகப் பேசுவதும் தனது அரசியல் போட்டியாளர்களுக்கும் தனக்கு நெருக்கமான சொந்த ஆதரவாளர்கள் வட்டத்துக்கு  வெளியே வேறு பலருக்கும் நேசக்கரம் நீட்டுவதும் எந்த வகையிலும் கெடுதியானதாக இருக்கப்போவதில்லை.அத்தகைய திறந்த ஜனநாயக மனப்பான்மை வெற்றிக்கான நன்மதிப்பு மாத்திரமல்ல, எந்தவொரு தோல்விக்கும் அல்லது தவறுக்குமான குற்றப்பொறுப்பும் வெறுப்புணர்ச்சியின்றி சகலராலும் பகிர்ந்துகொள்ளப்படுவதையும் உறுதிப்படுத்தும். 

 ( தொடரும் )

 

- பேராசிரியர் ஜெயதேவ உயன்கொட
 

https://www.virakesari.lk/article/81348

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையில் நெருங்கிவரும் அரசியலமைப்பு நெருக்கடி - பகுதி - 2

 “பாராளுமன்ற தேர்தலு்கான புதிய திகதியை தீர்மானிப்பதற்கான சட்டரீதியாக செல்லுபடியாகக்கூடிய அதிகாரம் ஜனாதிபதிக்கா அல்லது தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கா இருக்கிறது என்ற கேள்வி தொடர்பாகவும் தகராறொன்று மூண்டிருக்கிறது.”

பாராளுமன்றம் கலைக்கப்பட்ட பிறகு அரசியலமைப்பின் ஏற்பாடுகளின் பிரகாரம் குறிப்பிட்ட காலவரையறைக்குள் பொதுத்தேர்தலை நடத்தமுடியாமல் இருப்பதனால் தோன்றியிருக்கும் அரசியலமைப்பு மற்றும் அரசியல் நெருக்கடியும் உண்மையில், முக்கித்துவம் குறைந்த ஒன்றல்ல. இந்த நெருக்கடி  பின்வரும் அம்சங்களினால் தீவிரமடைகிறது.

parliament.jpg

  •  பாராளுமன்றத் தேர்தலுக்கான புதிய தினமாக  ஜூன் 20 ஆம் திகதியை அறிவித்த தேர்தல்கள் ஆணைக்குழுவே அந்த திகதியில் தேர்தலை நடத்தமுடியுமா என்று சந்தேகத்தைக் கிளப்பியிருக்கிறது.
  • வைரஸ் தொற்றுநோய் பரவலின் புதிய போக்குகளை அவதானிக்கும்போது மேமாத இறுதிவரை தற்போதைய நிச்சயமற்ற நிலை நீடிப்பதற்கான சாத்தியம் இருப்பதாக தெரிகிறது.
  • புதிய பாராளுமன்றம் ஜூன் 2 ஆம் திகதி அளவில் தெரிவுசெய்யப்படாவிட்டால், பாரதூரமான அரசியலைமைப்பு உறுதியின்மை நிலை தோன்றும். அந்த திகதியளவில் புதிய  பாராளுமன்றம் தெரிவுசெய்யப்படாவிட்டால், மார்ச் 2 பாராளுமன்றத்தைக் கலைத்த ஜனாதிபதியின் நடவடிக்கை தன்னியல்பாகவே வலுவிழந்ததாகிவிடும்.கலைக்கப்பட்ட பழைய பாராளுமன்றமே மீண்டும் நடைமுறைக்கு வரும் என்பதே இதன் அர்த்தமாகும்.
  • அதேபோன்றே, பாராளுமன்ற தேர்தலு்கான புதிய திகதியை தீர்மானிப்பதற்கான சட்டரீதியாக செல்லுபடியாகக்கூடிய அதிகாரம் ஜனாதிபதிக்கா அல்லது தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கா இருக்கிறது என்ற கேள்வி தொடர்பாகவும் தகராறொன்று மூண்டிருக்கிறது.

இந்த பின்புலத்தில், வழமைக்கு மாறான ஒரு சில அரசியலமப்புக் கேள்விகள்எழுவதற்கான சாத்தியம் இருக்கிறது.உதாரணமாக, புதிய பாராளுமன்றம் ஒன்று தெரிவுசெய்யப்படாமலேயே, பழைய பாராளுமன்ற கலைப்பு காலகட்டமான மூன்று மாதங்களும் முடிவுக்கு வரும்போது அந்த பாராளுமன்றம் ஜூன் 2 ஆம்திகதி மறுபடியும் செயற்பட வைக்கப்படுமா? மறுபுறத்தில், அரசியலமைப்பினால் வேண்டப்படுகின்றவாறு புதியதொரு பாராளுமன்றத்தினால் பழைய பாராளுமன்றம் பதிலீடு செய்யப்பட முடியாமல் போகுமேயானால், அது அரசின் ஒரு நிறுவனம் என்ற வகையில்  அதன் ஆயுளை இழந்துவிடுமா? அவ்வாறு நிகழவேண்டும் என்று சிலர் திட்டமிட்டுச் செயற்படுகின்றார்களா? வெளிக்கிளம்பும் நெருக்கடிக்கு தற்போதைய அரசியலமைப்புக் கட்டமைப்புக்கு வெளியே மரபொழுங்கு சாராத தீர்வுகளுக்கான இடப்பரப்பை அது திறந்துவிடுமா? இவை பதிலளிப்பதற்கு மிகவும் சிக்கலான கேள்விகள்.இருந்தபோதிலும், இவை அருகில் நெருங்கிவந்துகொண்டிருக்கின்றன.

'“பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கு பிறப்பித்த கட்டளையொன்றை மீளப்பெறுவதற்கான தெளிவாதும் வெளிப்படையானதுமான ஏற்பாடு எதுவும் அரசியமைப்பில் இல்லை என்பது உண்மையே.ஆனால், ஜனாதிபதியைப் பொறுத்தவரை, அவரால் பிறப்பிக்கப்பட்டிருக்கக்கூடிய முன்னைய கட்டளையொன்றை மீளப்பெறுவதற்கு, அதில் திருத்தம் செய்வதற்கு அலலது ரத்துச்செய்வதற்கு அதிகாரத்தை அவர் கொண்டிருக்கிறார்.“

சகலருக்கும் பயன்தரும் ஒரு தீர்வு ?

கற்பனை செய்துபார்க்கமுடியாத அளவுக்கு கடுமையான விளைவுகளைக் கொண்டுவரக்கூடிய பெரிய அரசியல் --  அரசியலமைப்பு நெருக்கடியொன்றை இலங்கைப் பிரசைகள் சந்திக்கவேண்டிய ஆபத்து வரலாம்.எமது நாட்டில் அரசியலமைப்பு அடிப்படையிலான ஆட்சிமுறையின் இருப்பே கூட  ஆபத்துக்குள்ளாகலாம்.அதனால் நெருங்கிவருகின்ற அரசியலமைப்புப் பெருந்தீங்கை தவிர்க்கவேண்டியது அவசியமாகும்.அதற்கு கற்பனைத்திறம் வாய்ந்த, மரபொழுங்கிற்கு அப்பாற்பட்ட , துணிச்சலான சிந்தனையும் செயற்பாடும் அரசியல் தலைமைத்துவத்திடம் இருக்கவேண்டும்.

எனவே, ஜனாதிபதியும்  பிரதமரும் அவர்களது கட்சியும் எதிர்க்கட்சிகளும் நாட்டில் பொது அபிப்பிராயத்தில் செல்வாக்கு செலுத்துகின்ற குழுக்களும் முக்கியஸ்தர்களும் குறைந்தபட்சம் தற்காலிகமாகவேனும்  நெருக்கடித்தவிர்ப்பு மாற்று நடவடிக்கைத் திட்டம்  ஒன்று குறித்து கலந்துரையாடுவதற்கான தருணம் இது.

அண்மையில் ஐந்து மாதங்களுக்கு முன்னர் மக்களின் அமோக ஆணையைப் பெற்றுக்கொண்ட ஜனாதிபதியின் கருத்துக்கோணத்தில் இருந்து நோக்கும்போது  அவருக்கு இருக்கக்கூடிய தெரிவுகளில் பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதே அரசியலமைப்பு மற்றும் சட்டத்தின் வரம்புக்குள் நன்றாக  அமையக்கூடியதாக இருக்கிறது. பாராளுமன்றத்தை கலைப்பதற்கு பிறப்பித்த கட்டளையை புதியதொரு கட்டளையின் மூலமாக ரத்துச்செய்வது விளைவுளைப் பொறுத்தவரையில் குறைந்தபட்ச சிக்கலுடையதாகும்.இது முன்னுதாரணம் இல்லாத நடவடிக்கையாக இருந்தாலும் கூட பாராளுமன்றத் தேர்தலை நடத்துவது குறித்து தொடருகின்ற நிச்சயமற்றநிலை மற்றும் தொடரும் தொற்றுநோயின் விளைவாக அந்த தேர்தலை நடத்தமுடியாமல் இருப்பதன் காரணமாக எழக்கூடிய அரசியலமைப்புச் சிக்கல்களை அடிப்படையாகக்கொண்டு நோக்கும்போது நியாயப்படுத்தப்படக்கூடியதாகும்.இது தனது தெரிவுக்குரிய ஒரு நேரத்தில-- தேர்தலகள் ஆணைக்குழவுடன் கலந்தாலோசித்து --  மீண்டும் பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான வாய்ப்பையும் ஜனாதிபதிக்கு திறந்துவிடும்.

பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கு பிறப்பித்த கட்டளையொன்றை மீளப்பெறுவதற்கான தெளிவாதும் வெளிப்படையானதுமான ஏற்பாடு எதுவும் அரசியமைப்பில் இல்லை என்பது உண்மையே.ஆனால், ஜனாதிபதியைப் பொறுத்தவரை, அவரால் பிறப்பிக்கப்பட்டிருக்கக்கூடிய முன்னைய கட்டளையொன்றை மீளப்பெறுவதற்கு, அதில் திருத்தம் செய்வதற்கு அலலது ரத்துச்செய்வதற்கு அதிகாரத்தை அவர் கொண்டிருக்கிறார். ஆணைகள் வியாக்கியான ஒழுங்குவிதிகளில் ( Interpretation Ordinance  )  அதற்கு ஏற்பாடு இருக்கிறது.அதனால், ஜனாதிபதி நினைப்பதாகத் தெரிகின்றதைப் போன்று அல்லது நினைக்குமாறு ஆலோசனை கூறப்படுவதைப் போன்று பாராளுமன்றக் கலைப்பை ரத்துச் செய்வது அரசியலமைப்புக்கு முரணானது அல்ல.

பொதுச்சுகாதார அவசரகாலநிலை அல்லது நெருக்கடிநிலையொன்று தோன்றியிருப்பதாக அரசியலமைப்பின் உறுப்புரை 70 (7) இன் கீழ் பிரகடனம் ஒன்றைச் செய்வதன் மூலம் பழைய  பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கான சூழ்நிலையை உருவாக்குவது இரண்டாவது தெரிவாகும்.  அத்தகைய பிரகடனம் ஒன்று அது பிறப்பிக்கப்பட்டு மூன்று தினங்களுக்கு பிறகு, கலைக்கப்பட்டு்கிடக்கும்  பாராளுமன்றத்தை மீளக்கூட்டுவதற்கான இன்னொரு பிரகடனத்தைச் செய்வதற்கு ஜனாதிபதிக்கு இடமளிக்கும்.

கலைக்கப்பட்ட பாராளுமன்றம் ஒன்றை ஜனாதிபதியினால் மீண்டும் கூட்டமுடியும் என்பதை அரசியலமைப்பு அதன் உறுப்புரை 70 (7) யின் மூலமாக வெளிப்படையாக திட்டவட்டமாக அங்கீகரிக்கிறது.அதே போன்றே, ஜனாதிபதியினால் அவசரகாலநிலை (Proclaimation of state of emergency  ) யொன்று பிரகடனப்படுத்தப்பட்டதும் கலைக்கப்பட்ட பாராளுமன்றம் தன்னியல்பாகவே ககூட்டப்படுவதை அரசியலமைப்பு அதன் உறுப்புரை 155(4) (i ) யின் மூலமாக அங்கீகரிக்கிறது. இந்த அரசியலமைப்பு ஏற்பாடுகள் கலைக்கப்பட்ட பாராளுமன்றம் ஒன்று ஜனாதிபதியின் நேரடி நடவடிக்கையி்ன் அல்லது மறைமுக நடவடிக்கையின் மூலமாக மீளக்கூட்டப்பட முடியும் என்பதை தெளிவுபடுத்திக்காட்டுகின்றன.எனவே, கலைக்கப்பட்ட பாராளுமன்றமம் ஒன்றை கூட்டுவதற்கான தேவையை அல்லது அவசியத்தை அரசியலமைப்பு குறித்துரைக்கிறது.

அவசரகாலநிலைப் பிரகடனம் எதுவும் இன்னமும்  செய்யப்படவில்லை என்றபோதிலும், நாம் முகங்கொடுத்துக்கொண்டிருப்பது உண்மையில் ஒரு அவசரகாலநிலை சூழ்நிலையேயாகும்.பொதுச்சுகாதார அவசரகால நெருக்டியொன்று  அவசரகாலநிலைக்குரிய ஏற்பாடுகளுடன் செயற்படுவதற்கு அரசாங்கத்தை நிர்ப்பந்தித்திருக்கிறது.சுகாதார அதிகாரிகளுக்கு உதவுவதற்கு ஆயுதப்படைகளை கடமையில் ஈடுபடவைத்திருக்கும் ஜனாதிபதி தனது செயலணிக்கு தலைவராக இராணுவத்தளபதியை நியமித்திருக்கிறார்.அதேவேளை, பொலிஸ் ஜனாதிபதியின் உத்தரவின் கீழ் ஊரடங்குகளை நடைமுறைப்படுத்துகின்றது.வைரஸ் தொற்றுக்குள்ளாகியவர்கள் தொடர்புகொண்டிருக்கக்கூடியவர்களை தேடிக்கண்டுபிடிப்பதிலும் அரசாங்கம் இராணுவ புலனாய்வு அமைப்புக்களை ஈடுபடுத்தியிருக்கிறது.அது தனிநபர்களின் உரிமைகளுக்கு பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியதாகும்.ஆயுதப்படைகளை கடமையில் ஈடுபடுத்தியதன் மூலம் அரசாங்கம் மக்களைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கைகளை எடுப்பதற்கும் பொதுவாழ்வில் வழமைநிலையைப் போன்ற ஒரு தோற்றப்பாட்டை குறைந்தபட்சமேனும் பேணுவதற்கும் நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறது.

இது உண்மையில், கோட்பாட்டின் இரு அடிப்படை அர்த்தங்களில் பிரகடனப்படுத்தப்படாத ஒரு அவசரகாலநிலையேயாகும் ; (1) அரசின் நிறைவேற்று அதிகாரப்பிரிவு பாராளுமன்றத்தின் வெளிப்படையானதும் தெளிவானதுமான அங்கீகாரமின்றி பிரத்தியேக அதிகாரங்களை தனதாக்கிக்கொண்டு அவற்றை நடைமுறைப்படுத்துகிறது. (2) நிறைவேற்று அதிகார நடவடிக்கைகளின் மூலமாக பிரசைகளின் முக்கியமான குறிப்பிட்ட சில சுதந்திரங்களும் தனியுரிமைகளும் கட்டுப்படுத்தப்பட்டும் இடைநிறுத்தப்பட்டுமுள்ளன. இது அவசரகாலநிலை இல்லை என்றால், வேறு எதுதான் அவசரகாலநிலை?.

அரசியலமைப்பின் உறுப்புரை 70 (7)  அல்லது உறுப்புரை 155 (3) இன் கீழ் ஜனாதிபதி அவசரகாலநிலை பிரகடனம் ஒன்றைச் செய்யவேண்டுமானால், அத்தகைய பிரகடனம் கலைக்கப்பட்ட பாராளுமன்றம் மீண்டும் செயற்படுத்தப்படுவதைஅவசியமாக்குகிறது. மீண்டும் செயற்படுத்தப்படக்கூடிய பாராளுமன்றம் அவசரகாலநிலை முடிவடையும் வரை அல்லது பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் வரை நடைமுறையில் இருக்கும்.அவசரகாலநிலை முதலில் முடிவடைகிறதா அல்லது தேர்தல் முதலில் நடைபெறுகிறதா என்பதைப் பொறுத்ததே அது.

அரசியலமைப்பின் அடிப்படையிலான அந்த இரு மாற்றுத்தெரிவுகளிலும்ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுப்பதற்கு ஜனாதிபதியை எவ்வாறு  இணங்கவைப்பது என்பதே இந்த பின்புலத்தில் நாம் எதிர்நோக்குகின்ற சவாலாகும்.தற்போதைய பொதுச்சுகாதார அவசரகாலநிலையின் அரசியல் அம்சங்களை கையாளுவதற்கு இந்த இரு மாற்றுத்தெரிவுகளும் நியாயபூர்வமானவையும் அறிவுக்குப் பொருத்தமானவையாகும்.ஒன்று மாத்திரம் தெளிவானது ; கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கு ஜனாதிபதி முன்வருவதானால் கூட அது ஒருதலைப்பட்சமான ஒரு செயன்முறையாக இருக்கக்கமுடியாது.அவ்வாறு இருக்கவும் முடியாது.அது ஜனாதிபதிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையிலான -- பரஸபரம் பயன்தரத்தக்க அரசியல் பேரத்தின் விளைவான -- அரசியல் இணக்கப்பாடொன்றின் அங்கமாக இருக்கவேண்டும்.

மேற்கூறப்பட்ட மாற்றுத்தெரிவுகளில் எந்தவொன்றைத் தேர்ந்தெடுத்தாலும், அது ஒருதலைச்சார்பாகவும்   நியாயமற்ற முறையிலும் எதிரணிக்கட்சிகளுக்கு அனுகூலமாக அமையக்கூடியதாக கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கே வழவகுக்கும் என்பது   ஜனாதிபதியின்  அபிப்பிராயமாக இருக்கிறது. தற்போதைய தகராறை வெவ்வேறு நிலைப்பாடுகளுக்கு இடையிலான ஒரு  சமராக நோக்கும் ஜனாதிபதியின் முகாம் அதில் எதிரணிக்கட்சிகள் ஒரு அங்குல பயனைத்தானும் பெறுவதை விரும்பவில்லை.மேலும், பாராளுமனறம் மீண்டும் கூட்டப்படுமானால், ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் அசௌகரியத்தைக் கொடுப்பதறகாக அல்லது நிலைவரங்களைச் சீர்குலைப்பதற்காக அல்லது அரசாங்கத்தை தோற்கடிப்பதற்கு அதை எதிரணிக்கட்சிகள் பயன்படுத்திக்கொள்ளும் என்ற பயமும் அவர்களுக்கு இருக்கிறது.

இருமுகாம்களுக்கும் இடையிலான நம்பிக்கைப் பற்றாக்குறை தற்போதைய அரசியல் யதார்த்தத்தின் ஒரு பகுதியாகும். விரைவாக பாராளுமனறத் தேரதலை நடத்தினால், மாயவித்தை மூன்றில் இரண்டு பங்கு ஆசனங்களை ஆளும் கட்சியினால் கைப்பற்றக்கூடியதாக இருக்கும் என்று நம்புகின்ற ஜனாதிபதியின் முகாம் தேர்தலுக்கான புதிய திகதியை விரைவாக தீர்மானிக்கக்கூடியதாக பொதுச்சுகாதார நெருக்கடி விரைவாக வழமைநிலைக்குத் திரும்பிவிடவேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் செயற்படுகிறது.

அதனால் தீவிரமடையும் நெருக்கடிக்கு மத்தியில், ஜனாதிபதியும் அரசாங்கமும் எதிரணிக்கட்சிகளும் அறிவுக்குப் பொருத்தமான முறையிலும் செயல்நுட்ப விவேகத்துடனும் சிந்திக்கவேண்டியிருக்கிறது. ஒருதலைச்சார்பான கணிப்பீடுகளையும் ஒவ்வொருவரினதும் தன்னலனுக்கு உதவக்கூடிய நடவடிக்கைகளுக்கும் அப்பால் சிந்தித்துச் செயற்படவேண்டும்.

விவேகமான ஒரு நடவடிக்கைத் திட்டமாக பின்வரும் யோசனைகளைக் கருதலாம் ;

  • பாராளுமன்றம் கூட்டப்படுமானால், அரசாங்கமும் எதிரணியும்   இரு  தரப்புக்குமே பாதிப்பில்லாத  சூழ்நிலையில் இருக்கமுடியும்.அரசாங்கத்தைப் பொறுத்தவரையில், மீளக்கூட்டப்படும் பாராளுமன்றம் பழைய பொதுச்சுகாதார மற்றும் பாதுகாப்பு சட்டங்களை நவீன சமூகத்துக்கு பொருத்தமான முறையில் மாற்றியமைத்து புதிய சட்டங்களை நிறைவேற்ற உதவியாக அமையும்.மேலும், சட்டபூர்வத்தன்மை தெளிவில்லாததாக இருக்கும் ஊரடங்கை புதிய சட்டத்தின் மூலமாகவும் பாராளுமன்ற அங்ககீகாரத்தின் மூலமாகவும் செல்லுபடியானதாக்கிக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.அதேவேளை, இன்னொரு பயனையும் அரசாங்கத்தினால் பெற்றுக்கொள்ளமுடியும்.அதாவது ஏப்ரில் 30 க்குப் பிறகு அரசாங்க செலவினங்களுக்கு தேவையான நிதியை பாராளுமன்றத்தின் அங்கீகாரத்துடன் பெற்றுக்கொள்ளக்கூடியதாகவும் இருக்கும்.தற்போதுள்ள நிலைவரத்தின்படி, அரசாங்கத்தின் செலவினங்களுக்கான நிதியை அரசியலமைப்பின் உறுப்புரை 150(4) இன் அடிப்படையிலேயே பெற்றுக்கொள்ளவேண்டியிருக்கிறது.அவ்வாறு செய்வது அரசியலமைப்பிற்கு ஏற்புடையதா இல்லையா என்பதும்  தெளிவில்லாததாகவே இருக்கிறது. அரசியலமைப்புரீதியாகவும் சட்டரீதியாகவும் துலக்கமில்லாமல் கலங்கலாக ( Constitutional and legal grey zones) இருக்கின்ற பகுதிகளை -- மனக்கசப்பைத் தரக்கூடிய சட்டமூலம் ஒன்றைக் கொண்டுவருவதில் நாட்டம் காட்டாத முறையில் -- தெளிவுபடுத்திக்கொள்ளவும் முடியும்.
  •  இப்போது ஒரு தேசிய நெருக்கடியாக மாறிவிட்ட கொரோனா தொற்றுநோய் பரவலை கட்டுப்படுத்தி முடிவுக்குக் கொண்டுவரும் செயன்முறைகளில் பங்காளிகளாகுவதற்கான வாய்ப்பே எதிரணிரினரால் பெற்றுக்கொள்ளக்கூடிய ' வெற்றியாக ' இருக்கமுடியும்.முற்றிலும் அநாவசியமான அரசியலமைப்பு நெருக்கடியொன்றைத் தவிர்ப்பதற்கான சர்வகட்சி முயற்சியொன்றுக்கு பங்களிப்புச் செய்வதாகவும் அது அமையமுடியும்.

இத்தகைய பின்னணியில், கொரோனா நெருக்கடி நியாயமானளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டு,  ஒத்திவைக்கப்பட்ட பாராளுமன்றத் தேர்தலுக்கான திகதி மீண்டும் நிர்ணயிக்கப்படும் வரை ' பொறுப்புவாய்ந்த ஒத்துழைப்பை' வழங்குவதற்கு முன்வந்து கூட்டு எதிர்கட்சிகள் வெளியிட்ட அறிக்கைக்கு ஜனாதிபதி சாதகமான முறையில் பதிலளிக்கமுடியும். பாராளுமன்றத்தைக் கலைத்த கட்டளையை ரத்துச்செய்வதன் மூலமாக அல்லது அரசியலமைப்பின் உறுப்புரை 70 (7) இன் கீழ் தனக்கிருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்துவதன் மூலமாக ஜனாதிபதி பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டவேண்டும் என்பதே எதிர்க்கட்சிகள் வழங்க முன்வந்திருக்கும் அந்த ஒத்துழைப்பின் மையமாகும்.எதிரணியினால் முன்வைக்கப்பட்ட யோசனை மறைமுக அரசியல் நிகழ்ச்சித்திட்டத்தினால் உந்தப்பட்டதாகும் என்ற ஜனாதிபதி முகாமின் அச்சத்தை போக்குவதையும் நோக்கமாக கொண்டதாக எதிரணியின் கூட்டுைஅறிக்கை காணப்பட்டது.

எவ்வாறெனினும், கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீளக்கூட்டுவதற்கு ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்படக்கடிய எந்தவொரு நடவடிக்கையினதும் விளைபயன் குறித்து நாம் அளவுகடந்த நம்பிக்கையை வளர்த்துக்கொள்க்கூடாது என்பதும் முக்கியமானது.அரசியலமைப்பு மற்றும் அரசியல் நெருக்கடியைக் கையாளுவதற்கு அரசியலமைப்புக்கு இசைவான செயன்முறையொன்று முன்னெடுக்கப்படுவதற்கான புதிய அரசியல் வெளியொன்று திறக்கப்படும் என்பதே ஜனாதிபதியின் அத்தகைய நடவடிக்கையில் இருந்து  நாம் எதிர்பார்க்கக்கூடிய குறைந்தபட்ச நன்மையாக இருக்கமுடியும்.வளரும் நெருக்கடியினால் தோற்றுவிக்கப்பட்ட அரசியல் நிச்சயமற்ற தன்மையின் தற்போதைய மட்டத்தையும்  அது குறைக்கும்.பொதுச்சுகாதார நெருக்கடியையும் கொதித்துக்கொண்டிருக்கும் சமூக நெருக்கடியையும் கையாளுவதற்கான -- சகலதரப்புகளையும் அரவணைக்கும் வகையிலான புதிய தந்திரோபாயங்களை வடிவமைப்பதில் பெருமளவில் பங்கேற்பதற்கு சிவிலியன் அரசியல்  செயற்பாட்டாளர்களுக்கு  கதவுகள் திறக்கப்படும் என்றும் நம்பலாம்.

அதற்குப் பிறகு, தேர்தல் பிரசாரங்களின்போதோ அல்லது வாக்ளிப்பு தினத்தன்றோ மக்களின் உயிர்கள்  ஆபத்துக்குள்ளாகாத  வகையில்  பாராளுமன்றத் தேர்தலுக்கான தினத்தை தேர்தல்கள் ஆணைக்குழுவும் சம்பந்தப்படட மற்றைய சகல தரப்புகளும் கலந்தாலோசித்து தீர்மானித்துக்கொள்ளலாம். அதற்குப் பிறகு, கொரோனா நெருக்கடி தங்களை முன்னரை விடவும் கூடுதலானளவுக்கு பக்குவமும் அனுபவமும் கொண்டவர்களாக மாற்றியிருக்கிறது என்பதை காண்பிக்கவேண்டியது எமது அரசியல் வர்க்கத்தின் தலைவர்களைப் பொறுத்ததாகும்.

இவை  ஒன்றும் சாத்தியப்படமுடியாத எதிர்பார்ப்புகள் அல்ல, குறைந்தபட்ச விருப்பங்களின் பட்டியலேயாகும்.

( இந்தகட்டுரையின் முன்னைய வரைவுக்கு பேராசிரியர் என்.செல்வகுமாரன் தெரிவித்த கருத்துக்களுக்காகவும் யோசனைகளுக்காகவும் பேராசிரியர் உயன்கொட நன்றிகூறுகிறார் )
 

https://www.virakesari.lk/article/81422

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.