Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுமந்திரன் - சமுதித்த... சர்ச்சைக்குரிய பேட்டி 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Sumanthiran forced to backtrack after comments on LTTE spark Tamil ...

சுமந்திரன் - சமுதித்த.... சர்ச்சைக்குரிய பேட்டி 
சிங்களத்திலிருந்து  தமிழாக்கம் : சுவிசிலிருந்து ஜீவன்

சமுதித்த : இன்றைய அரசியல் களத்தில் சர்ச்சைக்குரிய ஒரு முக்கிய புள்ளியாக இருக்கும் ஒருவரை தேடி வந்திருக்கிறோம். அவர் யாழ்ப்பாண பாராளுமன்ற முன்னாள் உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான  M.A. சுமந்திரன் அவர்கள் வணக்கம்
சுமந்திரன்: வணக்கம்
சமுதித்த : தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்க முக்கிய காரணம் என்ன
சுமந்திரன்: உண்மையான காரணம் தான் இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு சுதந்திரம் கிடைத்த நாளிலிருந்து நியாயமான உரிமை கிடைக்கவில்லை எனும் எண்ணம்  உள்ளது.  அதை சரி செய்வதற்காக 1949 இல்  தமிழரசுக் கட்சி உருவானது. அதன் பின்னர் அதுவே வெவ்வேறு பெயர்களில் மாறி வந்து இப்போது தமிழர் தேசிய கூட்டமைப்பு என ஆகியுள்ளது.
சமுதித்த : தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது விடுதலைப் புலிகளின் அரசியல் பகுதியா?
சுமந்திரன்:  இல்லை விடுதலைப் புலிகள் உருவானது 1970 களில் 
எங்கள் கட்சி உருவானது 1949ல்
சமுதித்த : தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதலாவது கூட்டத்தைக் கூட்டியவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்
சுமந்திரன்: இல்லை
சமுதித்த : பிரபாகரன்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்குகிறார். அதில் சம்பந்தன் அவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
சுமந்திரன்: இல்லை
சமுதித்த : நீங்கள் சொல்ல வருவது விடுதலைப் புலிகளின் தேவைகளுக்காக தமிழ் தேசியக்கூட்டமைப்பு உருவாகவில்லை என்றா?
சுமந்திரன்: அப்படி உருவானதாக சொல்ல முடியாது 2001 ஆம் ஆண்டு தமிழ் தேசியக்கூட்டமைப்பு உருவானபோது போர் நிறுத்தம் ஒன்று இருந்தது . அந்தக் காலத்தில் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவானது. அப்போது விடுதலைப் புலிகளோடு  தொடர்பு இருந்தது. அரசும் அப்போது விடுதலைப் புலிகளோடு பேசிக் கொண்டிருந்த காலமாக அது இருந்தது.
சமுதித்த : தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவானபோது 7 கட்சிகள் இருந்தன . இப்போது இருப்பது மூன்று மட்டுமே புளொட் - டெலோ மற்றும் தமிழரசுக் கட்சி மட்டுமே இப்போது இருக்கிறார்கள்
சுமந்திரன்: இப்போது மூன்று கட்சிகள் இருந்தாலும் ஆரம்பத்தில் நான்கு கட்சிகள் இருந்தன. அந்த நான்கு கட்சிகளில் ஒன்றாக தான் இப்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு இருக்கிறது. காலத்திற்குக் காலம் சில கட்சிகள் உள்ளே வருகின்றன. சில கட்சிகள் வெளியே போகின்றன.
சமுதித்த : ஆனந்தசங்கரி அவர்களும் இந்த கட்சியில் இருந்தார்கள். பாசிசவாதிகளோடு என்னால் தொடர்ந்து இருக்க முடியாது என்றே அவர் வெளியே சென்றார்
சுமந்திரன்: ஆனந்தசங்கரி அவர்கள் இருந்தது தமிழர் விடுதலைக் கூட்டணியில். அந்தக் கட்சி தான் தமிழ் தேசிய கூட்டமைக்குள் இருந்தது.  தமிழரசு கட்சி அப்போது இருக்கவில்லை . ஆனந்த சங்கரி அவர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியோடு ஒரு வழக்கை தொடுத்து செயல்பட்ட போதுதான் தமிழர் விடுதலைக் கூட்டணியையும் அவரையும்  வெளியேற்றப்பட்டு தமிழரசுக் கட்சி உள்ளே வந்தது
சமுதித்த : விக்னேஸ்வரன் அவர்கள் வெளியேறி இருக்கிறார்கள். ஆனந்தி சசிதரன் அவர்கள் வெளியேறி இருக்கிறார்கள்.  அப்படி  வெளியேறிய அனைவரும் உங்கள் மேல்தான் குற்றம் சுமத்துகிறார்கள்.
சுமந்திரன்: ஆம்! இரு சாராரும்என் மேல் குற்றம் சுமத்துகிறார்கள் . இன வாதிகளாக தன்னை காட்டிக் கொள்ளும் விக்னேஸ்வரன் அவர்களும் , ஆனந்தி சசிதரன் அவர்களும் என்  மேல் குற்றம் சுமத்துகிறார்கள். அதேபோல  தேசிய நீரோட்டத்தில் இருக்க வேண்டுமெனும் டக்ளஸ் தேவானந்தா போன்றவர்களும் என் மேல் குற்றம் சுமத்துகிறார்கள்
சமுதித்த : அவர்கள் , உங்கள் கட்சியை   ஐக்கிய தேசியக் கட்சியின் வாலில் தொங்க வைக்க முயற்சிக்கிறீர்கள் என்று சொல்கிறார்கள்.
சுமந்திரன்: அப்படி எதுவும் இல்லை. 2015 இல்  நாங்கள்தான் ஐக்கிய தேசியக் கட்சியின் ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு  ஜனாதிபதி தேர்தலில் நிற்க வேண்டாம் என்று சொல்லி, சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளரான மைத்திரிபால சேனாநாயக்க அவர்களை கொண்டுவந்து ஜனாதிபதி தேர்தலில் நிற்க வைக்க உதவினோம்.  அது  ஐக்கிய தேசிய கட்சிக்கு நாம் கொடுத்த ஆதரவாக ஒருபோதும் கருதமுடியாது
சமுதித்த : சரியாக சொல்லுங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உண்மையான தலைவர் எம் ஏ சுமந்திரனா? அல்லது சம்பந்தனா?
சுமந்திரன்: சம்பந்தன்தான்
சமுதித்த : அது வெளியில் தெரியும் பார்வை. உண்மையான தலைவர் யார்?
சுமந்திரன்: உண்மையான தலைவரும் சம்பந்தன் அவர்கள்தான்
சமுதித்த : தமிழ் தேசியக் கூட்டமைப்பை  செயல்படுத்துவது சுமந்திரன்தான் என்று நான் நேரடியாக சொன்னால்!
சுமந்திரன்: இல்லை அதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் . அதை மறுதலிக்கிறேன் . எனது செல்வாக்கு அதற்குள் இருக்கிறது . அதை நான் கொடுக்கும் அழுத்தம் என்று சொல்ல முடியாது
சமுதித்த : அதாவது நீங்கள் தலைமைக்கு அழுத்தங்களை கொடுக்கிறீர்கள்
சுமந்திரன்: சம்பந்தன் அவர்கள் எல்லா விடயத்திலும் என்னிடம் ஆலோசனை பெற்றுத்தான் சில வேலைகளை செய்கிறார்.
சமுதித்த : நீங்கள்  உத்தியோகபூர்வமற்ற தலைவர் என்கிறேன்
சுமந்திரன்: அப்படி இல்லை . நான் சொல்லும் அனைத்து ஆலோசனைகளையும் அவர் ஏற்பது இல்லை. அவர்தான் இறுதி முடிவை எடுக்கிறார்.
சமுதித்த : அப்போதிருந்த  இந்தத் தலைவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகளுக்கு பயந்து இருந்தார்கள். பிரபாகரனுக்கு பயந்து இருந்தார்கள். அதனால்தானே விடுதலைப் புலிகளுக்காக இந்த அரசியல் கட்சிகள் செயல்பட்டன.
சுமந்திரன்: அப்படி சொல்ல முடியாது. 2001லிருந்து 2004 வரையிலான காலப் பகுதியில்  விடுதலைப் புலிகளோடு இணைந்து செயல்பட்டார்கள். அந்த நேரம் இலங்கை அரசும் விடுதலைப் புலிகளோடு பேசிக் கொண்டிருந்த காலமாக அது இருந்தது.
சமுதித்த : எம் ஏ சுமந்திரன் இனவாதியா?
சுமந்திரன்: இல்லை! இனவாதி இல்லை
சமுதித்த : நீங்கள்  சிங்கள தமிழ் முஸ்லிம் இனக்குழுக்கள் ஒன்றாக வாழ வேண்டும் என்று விரும்புகிறீர்களா?
சுமந்திரன்: ஆம்! அப்படியான அனைவரும் ஒன்றாக வாழ வேண்டும் எனும்  கடும் நிலைப்பாட்டில்தான் இருக்கிறேன்.
சமுதித்த : உங்களுடைய சில கருத்துக்களை பார்க்கும்போது நீங்கள் ஒரு இனவாத கருத்தியல்வாதி போல  எங்களுக்கு தெரிகிறது
சுமந்திரன்: அப்படியான எந்த ஒரு அறிக்கையையும் உங்களால் காண்பிக்க முடியாது
சமுதித்த : உங்களுடைய உண்மையான அரசியல் தலைவர் யார்?
சுமந்திரன்: இன்றைக்கு என்னுடைய அரசியல் தலைவர் சம்பந்தன் அவர்கள்
சமுதித்த : நீங்கள் 2010இல் ஒரு வழக்கறிஞராக  அரசியலுக்குள்  தேசியப்பட்டியலின் ஊடாக பிரவேசிக்கிறீர்கள்.  நீங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த புலிகளுக்காக வாதாடி  , காணாமல் போனவர்களுக்காக வாதாடி , இப்படி புலிகள் சார்பான ஒரு ஈர்ப்பை எடுத்துக் கொண்டுதான் நீங்கள் அரசியலுக்குள் வருகிறீர்கள். 
சுமந்திரன்: அது விடுதலைப் புலிகளுக்காக என்று யாரும் சொல்ல முடியாது.  நான் சிவில் வழக்குகளை வழக்காடும் ஒரு வழக்கறிஞர். அதனால் நான் கிரிமினல் வழக்குகளை வாதாடவில்லை. ஒன்றிரண்டு வழக்குகளில் வாதாடி இருக்கிறேன்.  90களில் நான் இந்த தொழிலில் ஈடுபட்டேன் . அந்தக் காலத்தில் நான்  PTA வழக்குகளுக்காக   ஜேவிபி தொடர்பாக வழக்காடியுள்ளேன். அதனால் விடுதலைப் புலிகளுக்காக நான் வழக்காடி நின்றதாக யாரும் சொல்ல முடியாது.
சமுதித்த : 2015இல்  58,000 வாக்குகளை பெறுகிறீர்கள் . அதாவது நீங்கள் ஒரு பிரபல்யமான ஒரு மனிதர் . ஜேவிபிகாக மட்டும் வாதாடி நீங்கள் 58,000 வாக்குகளை யாழ்ப்பாணத்தில் பெற முடியாதுதானே?
சுமந்திரன்: பெறமுடியும் . அந்தக் காலத்தில் நான் ஜேவிபியுடன்  இணைந்து யாழ்ப்பாணத்தில் சிகப்பு சட்டை அணிந்து மேதின ஊர்வலத்தில் கலந்து கொண்டேன்.  எங்கள் மக்கள் அப்படி பார்ப்பவர்கள் அல்ல
சமுதித்த : உங்களுடைய ஐடியோலஜி அதாவது அரசியல் இருப்பது ஜேவிபி உடனா? அப்படியானால் நீங்கள் தவறான இடத்தில் இருக்கிறீர்கள்?
சுமந்திரன்: ஜேவிபியோடு கருத்தியலாக அல்ல. அப்போதையஅரசுக்கு எதிராக ஜனநாயகப் போராட்டமொன்றை நடத்தினோம்.  அதற்கு ஜேவிபியும் இணைந்தனர். அதுவும் எம்மோடு கைகோர்த்து செயல்பட்ட ஒரு அமைப்பு.
சமுதித்த :  அப்படியானால் அனுரகுமார திசாநாயக்க தானே உங்கள் அரசியல்  தலைவராக முடியும்? 
சுமந்திரன்: அப்படி ஒன்றும் இல்லை . நான் எல்லா கட்சிகளுடன் இணைந்து வேலை செய்ய விருப்பமாக இருக்கும் ஒருவன்.
சமுதித்த : யாழ்ப்பாண மக்கள் சொல்கிறார்கள் வாக்குகளைப் பெற்றதற்கு பிறகு சுமந்திரன் அந்தப் பக்கமே வரவில்லை என்கிறார்கள்? 
சுமந்திரன்: அப்படி யாரும் சொல்லவில்லை
சமுதித்த :  சுமந்திரன் இப்போது எங்கே அரசியல் கைதிகளை பற்றிப் பேசுகிறார் ?காணிகளை பற்றி பேசுகிறார்? காணாமல் போனவர்களை பற்றி பேசுகிறார்?  தேர்தல் குறித்தும் அவசரகாலச் சட்டம் குறித்தும் பேசிக்கொண்டிருக்கிறார். 
சுமந்திரன்: இவை குறித்து பேசியது நான் என்று அவர்களுக்கு தெரியும்.  அதேபோல பல அரசியல் கைதிகள் வெளியே வரவும் நான் வேலை செய்திருக்கிறேன்.  காணிகளை விடுவிக்கவும் நான் வேலை செய்திருக்கிறேன்.  அவை அவர்களுக்கு தெரியும். 
சமுதித்த : இன்னும் விடுவிக்க வேண்டிய அரசியல் கைதிகள் இருக்கிறார்களா?
சுமந்திரன்: ஆம் 70 பேர் அளவு இருக்கிறார்கள்
சமுதித்த :  காணி விடுவிப்பு குறித்து மகிழ்ச்சி அடைகிறீர்களா?
சுமந்திரன்:  மகிழ்ச்சி அடையவில்லை. ஆனால் 80% ஆன காணிகள் விடுவிக்கப்பட்டு இருக்கின்றன.
சமுதித்த : காணாமல் போனோர் தொடர்பாக
சுமந்திரன்: அதுகுறித்து எதுவுமே நடைபெறவில்லை. ஓஏபி என ஒரு அமைப்பு  நிறுவப்பட்டது. அது சரியாக செயல்படவில்லை.
சமுதித்த : ஏன் நீங்கள் இலங்கையில் உள்ள அத்தனை பிரச்சினைகளையும் தூக்கிக் கொண்டுபோய் வெளிநாடுகளில் இலங்கைக்கு எதிராக கோள் மூட்டுகிறீர்கள்?
சுமந்திரன்:  இலங்கைக்கு எதிராக அல்ல. இலங்கை  சரியான நாடாக இருந்தால் அதை மறைத்து  ஒழித்துக்கொண்டு செய்ய முடியாது.  வெளிப்படையாக அவை செய்யப்படவேண்டும். அப்படி இல்லாமல் நாடு முன்னாள் நகர முடியாது.
சமுதித்த : புலிகளின் டயஸ்போராவோடு சுமந்திரனுக்கு தானே அதிக நெருக்கம் இருக்கிறது?
சுமந்திரன்: புலிகளின் டயஸ்போராவுக்கும்  எனக்கு எந்த தொடர்பும் இல்லை
சமுதித்த : ருத்ரகுமாரனோடு  உங்களுக்கு இருக்கும் தொடர்பு என்ன?
சுமந்திரன்: அப்படி ஒன்றும் இல்லை
சமுதித்த : தொலைபேசி உரையாடல் கூட இல்லையா?
சுமந்திரன்: ஒன்றிரண்டு முறை நான் பேசியிருக்கிறேன்.  அது ஒரு தொடர்பு என்று சொல்ல முடியாது . எனக்கு சில டயஸ்போறாக்களோடு சம்பந்தம் இருக்கிறது. ஜி டி எஃப்  - பி டி எஃப் - சிடிசி - ஏடிசி  நிறுவனங்களோடு எனக்கு தொடர்பு இருக்கிறது . அப்படியானவர்கள் எம்மோடு இணைந்து வேலை செய்யும் நிறுவனங்கள். 
சமுதித்த :  ருத்ரகுமாரன் உங்களோடு கடைசியாக பேசிய நாள் எப்போது என நினைவில் இருக்கிறதா?
சுமந்திரன்:  நினைவில்லை
எனக்கு 2016 அல்லது 2017ல் கலிபோர்னியாவில் இருக்கும் அவர்களது  பாராளுமன்றத்திற்கு வந்து பேசும்படி ஒரு அழைப்பு கிடைத்தது. அதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை.
சமுதித்த : ருத்ரகுமாரன் என்பவர் நாட்டுக்கு வெளியில் இன்னொரு ஈழத்தை உருவாக்க முயற்சி செய்யும் ஒரு நபர். அவருடன் ஏன் நீங்கள் உறவு வைத்திருக்கிறீர்கள்? 
சுமந்திரன்: அதுதான் சொன்னேனே எனக்கு உறவு என்று ஒன்றுமில்லையென்று. அவரது பாராளுமன்றத்திற்குள் வந்து பேச சொல்லி அழைப்பு ஒன்றை விடுத்தார் . நான் வர முடியாது என அதற்கு பதில் அளித்தேன். அவ்வளவுதான்
சமுதித்த : புலிகளின் டயஸ்போரா மூலம் வரும் பணம் முழுவதுமாக உங்கள் மூலமாகத்தானே  நாட்டுக்குள் வருகிறது. நீங்கள் தானே  அவர்களது முகவர் ? 
சுமந்திரன்: இல்லை! சில உறவினர்கள் தங்களது குடும்பங்களுக்கு பணம் அனுப்புகிறார்கள். அப்படியான பொருளாதாரம் ஒன்றுதான் வடக்கில் இருக்கிறது.  அங்குள்ள பிள்ளைகளுக்கு தொழில் வாய்ப்புகள் இல்லை. வேறு ஏதாவது செய்யக் கூட அவர்களுக்கு வாய்ப்புகளும் இல்லை. தங்கள் சொந்தங்கள் அனுப்பும் பணத்தில் தான் அந்த மக்கள் வாழ்கிறார்கள். அப்படி வேறு எந்த சம்பந்தமும் அங்கு இல்லை.
சமுதித்த : நீங்கள் பிரிவினை வாதத்தை ஏற்றுக் கொள்ளும் நபரா? இல்லாவிட்டால் தனிநாடு ஒன்றை உருவாக்க விரும்பும் நபரா?
சுமந்திரன்: அப்படி நான் நினைத்ததில்லை
சமுதித்த : நாங்கள் எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
சுமந்திரன்:  ஒன்றாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் அனைத்து இனங்களுக்கும் உரிமையோடு வாழக்கூடிய தன்மை  இருக்க வேண்டும்.  அரசியல் பலத்தை அனைவரும் பாவிக்கக் கூடியதாக இந்த அரசியல் இருக்க வேண்டும்
சமுதித்த :  அப்படியானால்  தேசிய கூட்டமைப்பு ஏன் பெடரல் வேண்டும் என்று கேட்கிறது?
சுமந்திரன்: பெடரல் முறையைத்தான் நாங்கள் கேட்கிறோம். பெடரல் முறையால்தான் அனைத்து இனங்களுக்கும் ஆன உரிமை கிடைக்கும் எனும்  உறுதி  இருக்கிறது.
சமுதித்த : அதாவது இன்னொரு நாடு
சுமந்திரன்:  இல்லை ! பெடரல்  என்பது இன்னொரு நாடு என்பதல்ல
சமுதித்த : பெடரல் என்பது இன்னொரு நாடு. பெடரல் என்றதும் நாடு பிரிந்தது என்றுதான் அர்த்தம்
சுமந்திரன்: அமெரிக்காவில் இருப்பதும் பெடரல் முறை - அவுஸ்திரேலியாவில் இருப்பதும் பெடரல்முறை - கனடாவில் இருப்பதும் பெடரல் முறை - ஐரோப்பிய நாடுகளில் பல நாடுகளில் இருப்பதும் இந்த பெடரல் முறை. அவை எல்லாம் வேறு வேறு நாடுகள் என்று யாரும் சொல்வதில்லை. அவை அனைத்தும் பலமான நாடுகள். அப்படி இருப்பதால்தான் அந்த நாடுகள் பலமாக இருக்கின்றன
சமுதித்த : நீங்கள் தேசியக்கொடியை ஏற்றுக்கொள்கிறீர்களா?
சுமந்திரன்:  ஆம்! அது எங்கள் தேசியக்கொடி. அதனால் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்
சமுதித்த : தேசிய கீதத்தை
சுமந்திரன்: தேசிய கீதத்தை ஏற்றுக்கொள்கிறேன் தேசியக் கொடியை நானே ஏற்றியிருக்கிறேன். யாழ்ப்பாணத்தில் நானும்  சம்பந்தன் ஐயாவும்   மட்டும்தான் அதைச் செய்கிறோம்.
சமுதித்த : அதைத்தான் சொல்ல வந்தேன். உங்கள் கட்சியை உங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. மற்றவர்கள் அதைச் செய்கிறார்கள் இல்லை
சுமந்திரன்: அதுகுறித்து ஒரு சரித்திர பின்னணியை  நாம் பார்க்கவேண்டும்.  1972 எமது அரசியல் சாசனத்தை வரையும்போது எங்களை வெளியில் போட்டுவிட்டுதான் அதை உருவாக்கினார்கள். தமிழர்களை இணைத்துக் கொள்ளாமல் தமிழர்களது கருத்துகளை கூட கேட்காமல் அன்றைய தேசிய ஜீவனில் இருந்து எம்மை வெளியே தள்ளிவிட்டு அந்தக் கொடியை உருவாக்கினார்கள். அதனால்தான் 1976 களில் தனிநாடு ஒன்று வேண்டும் என்ற ஒரு எண்ணம் கோரிக்கையாக உருவானது. அதோடு வந்த கொடியை பலர் ஏற்றுக் கொள்ளவில்லை. அதை இன்னமும் பலர் ஏற்றுக் கொள்கிறார்கள் இல்லை. அன்று நாங்கள் ஏற்காததை மீண்டும் எப்படி நாங்கள் கைகளில் ஏந்துவது எனும் பிரச்சனை அவர்களிடம் இருக்கிறது.  எனக்கு அந்த பிரச்சினை இல்லை.
சமுதித்த : நீங்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் ஆயுதப் போராட்டத்தை ஏற்றுக் கொள்கிறீர்களா?
சுமந்திரன்: இல்லை நான் ஏற்றுக் கொள்ளவில்லை
சமுதித்த :  ஒரு போதும் ஏற்றுக் கொள்ளவில்லை
சுமந்திரன்: நான் இதை யாழ்ப்பாணத்திலும் சொல்லுகிறேன். ஏனைய பிரதேசங்களிலும் இதையே சொல்கிறேன் . அதனால் எனக்கு எதிர்ப்புகள் இருக்கின்றன.  அவர் எங்களுக்காக தானே போராடினார் ஏன் ஏற்றுக் கொள்கிறீர்கள் இல்லை என்று என்னோடு முரண்படுகிறார்கள். அதற்கு காரணம் நான் ஆயுதப்போராட்டம் ஒன்றை ஒருபோதும் ஆதரிப்பவன் அல்ல
சமுதித்த : ஏன் மீண்டும் பாராளுமன்றத்தை கூட்ட வேண்டும் என்று இந்த அளவுக்கு நீங்கள் முயற்சி செய்கிறீர்கள்?
சுமந்திரன்: எங்கள் நாடு ஜனநாயக ரீதியான ஒரு நாடாக இருந்தால் அதற்கு பாராளுமன்றம் ஒன்று இருக்கவேண்டும். பாராளுமன்றம் ஒன்று  இல்லாத  ஜனநாயக நாடொன்று  உலகத்தில் எங்குமே இல்லை.
சமுதித்த : பாராளுமன்றத்தை அரசியல் சட்டத்தின் பிரகாரம் மீண்டும் கூட்ட முடியாது தானே ?
சுமந்திரன்:  முடியும்! அவசர நிலையொன்று ஏற்பட்டால்  70/7 ல்  கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டலாம் என இருக்கிறது
சமுதித்த :  அவசரகாலச் சட்டத்தில் அரசாங்கம் அதை சரியாக செய்து கொண்டுதான் போகிறது. அதில் திருப்தியடையவில்லையா?
சுமந்திரன்: அரசு என்பது 3 பிரிவுகள் உள்ளன.  இந்த முன்னால் இருக்கும் டிரைபோட் (கமரா ஸ்டான்ட்) போல நிர்வாகம் - நீதி மற்றும் பாராளுமன்றம்.  அதில் ஒன்று விழுந்தாலும் நாடே விழுந்துவிடும் அதனால் தான் அரசியல் அமைப்பிலேயே சொல்லப்பட்டிருக்கிறது பாராளுமன்றம் இல்லாது ஆகக் கூடியதாக மூன்று மாதம் மட்டுமே இருக்க முடியும். அப்படியான ஒரு  கடும் சட்டம் உண்டு.  அதற்குள் ஒரு அவசர நிலை உருவானால் உடனடியாக பாராளுமன்றத்தை கூட்ட வேண்டும் எனவும் அங்கே குறிப்பிடப்பட்டு  உள்ளது.
சமுதித்த :  பாராளுமன்றம்  இல்லாமலேயே  கொரோனாவை இந்த அரசு சரியாக கட்டுப்படுத்திக் கொண்டு  செல்கிறது தானே?
சுமந்திரன்: இல்லை ! அதை செய்ய முடியாது.  இப்போது புது சட்டங்களை உருவாக்க வேண்டும். கோவிட் குறித்து புதிய சட்டங்களை உருவாக்க வேண்டும். உலகத்தில் உள்ள அனைத்து பாராளுமன்றங்களும் கூடி புதிய சட்டங்களை வரைந்திருக்கிறார்கள்.  எங்களிடம் இருக்கும் சட்டம் சிடிஓ என ஒரு சட்டம் உள்ளது.  ஆயிரத்து ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் அது உருவாக்கப்பட்ட  மிகப் பழையது.  கொரைன்டைன் அக்ட் என்பது 100 ஆண்டுகளுக்கு முன்  பழமையானது.
சமுதித்த :  நீங்கள் சொல்லுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு தர்க்கமாக இருக்கிறது
சுமந்திரன்: ஒன்று கொலராவுக்காக இயற்றப்பட்ட சட்டம். அடுத்தது சின்னம்மைகாக!  அந்த சுபாவம் வேறு விதமானது. கோவிட் 19ன்  சுபாவம் வேறுவிதமானது . அதனால்தான் பிரித்தானியா - இந்தியா - சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் மட்டுமில்லை ஏனைய பல நாடுகளிலும் கோவிட் 19 ஆக்ட்  என்னும் ஒரு சட்டத்தை  அவர்கள் கொண்டு வந்திருக்கிறார்கள்.  அப்படி இல்லாமல் நிர்வாகம் மட்டும் செய்யுமானால் அது நீதித் துறையின் அனுமதி இல்லாமல் செய்வதாகவே உள்ளது.
சமுதித்த :  ஏன் நீங்கள் இந்த அவசரகாலச்சட்டம் , சட்ட ரீதியானது இல்லை சட்ட ரீதியானது இல்லை என எல்லா இடத்திலும் சொல்லிச் சொல்லி  திரிகிறீர்கள்?
சுமந்திரன்: அது சட்ட ரீதியாக இல்லைதான் வேறு என்ன? யார் சொல்கிறார்கள்
சமுதித்த :  நோய்த்தடுப்பு மற்றும் நிவாரணம் குறித்த சட்டத்தில் அது சட்ட ரீதியான தாக இருக்கிறது
சுமந்திரன்: நான் வழக்கறிஞர் என்ற நிலையில் அது இல்லை என்று நான் சொல்கிறேன் . இப்படி ஒரு அவசர கால சட்டத்தை பிரகடனப்படுத்த முடியாது என நீதிமன்ற வழக்குகளில் காட்டப்பட்டுள்ளது. அதெல்லாம் தவறா?
சமுதித்த :  அப்படியானால்  நீங்கள் ஏன் மனித உரிமை கமிஷனுக்கு எழுதினீர்கள்?
சுமந்திரன்: மனித உரிமை கமிஷனுக்கு அதிகாரம் இருக்கிறது அரசுக்கு ஆலோசனை சொல்வதற்கு! நான் அவசரகால நிலை அவசியமானது எனச் சொல்லியுள்ளேன்.   அவசர காலச்சட்டம் இந்த நேரத்தில் நாட்டுக்கு தேவை. அதை முறையாக செயல்படுத்த வேண்டும். வெறுமனே ஜனாதிபதி ஊடகம் அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக அறிவிக்க முடியாது . அது முறையாக கேசட் பண்ண பட்டு  பிரசுரிக்கப் படவேண்டும். சமூகத்துக்கு தெரிய வேண்டும் எந்த நேரத்தில் இருந்து இந்த நேரம் வரை என்பது யாரிடம் இருந்து அனுமதிப்பத்திரம் வாங்குவது என்பன குறித்து அறிவிக்கப்பட வேண்டும். அவை அத்தனையும் எமது சட்டத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
சமுதித்த :  நீங்கள் பாராளுமன்றத்தை கூட்ட சொல்வதற்கு வேறு ஒரு காரணம்தான் இருக்கிறது. இது பொய் தானே. உங்களுக்குள் இருப்பது வேறு ஒரு காரணம்தானே?
சுமந்திரன்: ஜனநாயகம் என ஒன்று இந்த நாட்டில் இருப்பதாக இருந்தால் இந்த நேரத்தில் பாராளுமன்றம் செயல்பட்டே ஆக வேண்டும்
சமுதித்த :  நிலையியற் கட்டளைகள முதலில் மீறி  மீண்டும் தேர்தலை அழைக்க கூடிய ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்கத்தானே பாராளுமன்றத்தை மீண்டும் கூட்ட முயற்சிக்கிறீர்கள்? 
சுமந்திரன்: இல்லை!  இதை இப்படித்தான் பார்க்க வேண்டும். ஜனாதிபதிக்கு தேர்தலை முன்னதாக நடத்துவதற்கு அதிகாரம் இருக்கிறது .  அப்படி இல்லாவிட்டால் செப்டம்பருக்கு பின்னர்தான் பாராளுமன்ற தேர்தல் நடைபெற வேண்டும்.  அவருக்கு இருக்கும் அதிகாரத்தை வைத்து தேர்தலை முன்னதாக அழைத்துள்ளார். அதற்கு சில நிபந்தனைகள் இருக்கின்றன. நாலரை வருடங்களுக்குப் பிறகுதான் அதை செய்ய முடியும். ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்கள் அந்த நிபந்தனைகளை மீறினார் என்றுதான் உச்சநீதிமன்றம் அதை ரத்து செய்து அது செல்லாது என தீர்ப்பளித்தது. அதுபோல  வேறு நிபந்தனைகளும் இருக்கின்றன. மூன்று மாதத்திற்குள் பாராளுமன்றம் கூட்டப்பட்டே ஆக வேண்டும். அந்த நிபந்தனைகளை அவர் மீறினால்  அவர் முன்னால் தேர்தலை நடத்த வேண்டும் என்று சொன்னதும் ரத்தாகிவிடும்.
சமுதித்த :  உடைந்துபோன ஐக்கிய தேசியக் கட்சியை இணைக்க வைக்கவும் -தேர்தலுக்கான வேறு ஒரு நாளை பெறுவதற்காகவும் தானே பாராளுமன்றத்தை கூட்ட சொல்கிறீர்கள்
சுமந்திரன்:  ஐக்கிய தேசியக் கட்சி தொடர்பாக நான் இதைச் செய்யவில்லை.  நான் இன்னொன்றையும் சொல்கிறேன்.  இன்னும் 6 மாசம் சென்றாலும் ஐக்கிய தேசியக்கட்சி ஒன்றாக இணையாது. அது எனக்கு நன்றாக தெரியும். அது நடக்கவே நடக்காது. இது ஒரு பொய்யான குற்றச்சாட்டு.
சமுதித்த :  நீங்கள் ஒரு அரசியல் சதிகாரர்தானே?
சுமந்திரன்:  (சிரிப்போடு)  நான் அரசியலில் இருப்பது இந்த நாட்டின் தேசியப் பிரச்சனைக்கு எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விதத்திலான தீர்வு ஒன்றை உருவாக்குவதற்கு ஆவலில்தான்.
சமுதித்த :  என்னை பொருத்தமட்டில் நாட்டின் நன்மைக்கான எந்த ஒரு வழக்கிலும் நீங்கள் வாதாடியது இல்லை. அனைத்தும் நாட்டிற்கு கெடுதல் விளைவிக்கும் அதேபோல் சதிகார வழக்குகளில்தான் நீங்கள் வாதாடி இருக்கிறீர்கள். பார்த்தால் இவைகளின்  பின்னால் இருப்பது சுமந்திரன்தான்.
சுமந்திரன்:  2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில்  மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி அவர்கள் செய்த செயலுக்கு எதிராக நான் வாதாடினேன். நீதிமன்றத்தில் இருந்த 7 நீதிபதிகளும் நீதி வழங்கினார்கள். அவர்களும் சதித் திட்டங்களில் ஈடுபட்டார்கள் என்றா சொல்லப் போகிறீர்கள்?
சமுதித்த :  இறுதியாக உங்கள் இதயத்தை தட்டி ஒரு கேள்வியை நான் கேட்கப் போகிறேன். நேரடியான பதிலொன்று தேவை? சிங்கள மக்களை நீங்கள் வெறுக்கிறீர்களா?
சுமந்திரன்:  இல்லை ஒருபோதும் இல்லை. நான் ஐந்து வயதிலிருந்தே கொழும்பில்தான் வாழ்கிறேன். எனது நண்பர்கள் பலர் சிங்களவர்களாக இருக்கிறார்கள். சிங்கள மக்களோடு சேர்ந்து வாழ்வது மகிழ்வானது என்றே நினைக்கிறேன்
சமுதித்த :  தெற்கில் இப்படிப் பேசும் நீங்கள் வடக்கில் போய் இன்னொரு கதை பேசுகிறீர்கள்தானே?
சுமந்திரன்: நான் வடக்கிலும் இதைத்தான் பேசுகிறேன்
சமுதித்த :  அந்த வடக்கு மக்களை உணர்ச்சி வசப்படுத்தி....
சுமந்திரன்: நான் அப்படி ஒருபோதும் செய்ததில்லை. அப்படி நான் செய்வதில்லை என்று தான் ஒரு குழுவினர் எனக்கு எதிராக செயல்படுகிறார்கள்.
சமுதித்த :  இந்த தேர்தலில் நீங்கள் வெற்றி பெறுவீர்களா?
சுமந்திரன்: நிச்சயமாக
சமுதித்த :  அந்த 58 ஆயிரமும் உங்களுக்கு கிடைக்குமா?
சுமந்திரன்: அதைவிட இரண்டு மடங்கு என்னால் எடுக்க முடியும். ஒரு லட்சத்துக்கு மேல் எனக்கு வாக்குகள் கிடைக்கும்.
சமுதித்த :  இது ஒரு சவாலா?
சுமந்திரன்: சவால்தான்
சமுதித்த :  அங்குள்ளவர்கள் சுமந்திரன் வந்தால் பார்த்துக் கொள்கிறோம் என்றுதான் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் !
சுமந்திரன்: அவர்கள் எனக்கு வாக்களிக்க தான் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்
சமுதித்த :  அவர்கள் பார்த்துக் கொண்டிருப்பது உங்களுக்கு வாக்களிக்க  இல்லை
சமுதித்த :  மிகவும் நன்றி! இதுவரை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களோடு பேட்டி கண்டோம். உங்களுக்கு நன்றி
சுமந்திரன்:  உங்களுக்கும் நன்றி

சிங்களத்திலிருந்து  தமிழாக்கம் : சுவிசிலிருந்து ஜீவன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.