Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடலுடன் கலக்கும் ’எழுபது இலட்சம்’

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடலுடன் கலக்கும் ’எழுபது இலட்சம்’

காரை துர்க்கா   / 2020 மே 26

கொரோனாவும் அது தொடர்பிலான நிகழ்காலம், எதிர்காலத் தாக்கங்கள் குறித்து, ஊடகமொன்றுக்குக் கருத்துத் தெரிவித்திருந்த கொழும்பு பல்கலைக்கழக பொருளியல்த் துறைப் போராசிரியர் கோபாலபிள்ளை அமிர்தலிங்கம், ''ஒரு வருடத்தில் சுமார் 70 இலட்சம் ஏக்கர் கனஅடி மகாவலி நீர், திருகோணமலை, கொட்டியாரக்குடாக் கடலில் கலக்கின்றது'' எனத் தெரிவித்திருந்தார். அதாவது, மலையகத்தில் ஊற்றாகி வருகின்ற இந்தச் சொத்து (நன்னீர்) வீணே எவ்வித பிரயோசனமும் இன்றி கடலுடன் சங்கமமாகின்றது.

''இயற்கை அன்னை வழங்குகின்ற ஒரு சொட்டு நீர் கூட, வீணே கடலுடன் கல(ந்து)க்க விடக்கூடாது; அந்த நீரைச் சேமிக்க வேண்டும்; அதற்காக நீர்நிலைகள் அமைக்க வேண்டும்; அவை, எதிர்காலத்தில் மக்களின் பல்வேறுபட்ட தேவைகளுக்குப் பயன்படுத்த வேண்டும்'' எனக் கூறி, அதற்குச் செயல்வடிவமும் கொடுத்த பராக்கிரமபாகு மன்னன் வாழ்ந்த நாட்டில், நீர் இவ்வாறு வீணே கடலுடன் கலக்கின்றது.

இலங்கை சுதந்திரம் கண்ட காலங்களில், விவசாயச் செய்கையை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், இவ்வாறாக வீணே, கடலுடன் கலக்கின்ற நீரை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தும் பொருட்டும், பல விவசாய விரிவாக்கல் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதற்காகப் பல குடியேற்றத் திட்டங்கள், கிழக்கு மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டன.

ஆனால், அங்கேயேயும் இனவாத அரசியல், தவறாக ஊடுருவியது. அதாவது, நீர்ப்பாசன விவசாயத் திட்டங்களின் பிரதான நோக்கத்துக்கு இணையான நோக்கமாக, திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களும் மிகச் சூட்சுமமாக முன்னெடுத்துச் செல்லப்பட்டன. 

image_6188f8b847.jpg

அவை, வெளி மாகாணங்களில் வாழ்ந்த சிங்கள மக்களை, பெருவாரியாக கிழக்கு மாகாணத்துக்கு அழைத்து வந்து, அரசாங்கத்தின் உச்சபட்ச ஆதரவுடன், சகல வசதிவாய்ப்புகளையும் வழங்கி, நிரந்தரமாகக் குடியேற்றும் வகையில் அமைந்திருந்தது. கண்துடைப்புக்காக, சொற்ப அளவில் சிறுபான்மை மக்களும் குடியேற்றப்பட்டனர். ஆனால், அவர்களும் நாளடைவில் அவ்வப்போது இடம்பெற்ற இனக்கலவரங்களோடும் வன்செயல்களோடும் காணாமல் போகச்செய்யப்பட்டனர்.

இது போன்றே, வடக்கிலும் நிலைமைகள் உள்ளன. நீர்ப்பாசனம், விவசாய அபிவிருத்தி என்ற போர்வையில், தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை அபகரிக்கும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள், பெருமளவில் இடம்பெற்றமையால்தான், இனப்பிணக்குத் தோன்றவும் அது, பின்நாள்களில் சங்கிலித் தொடராகப் பல பிணக்குகளை ஏற்படுத்தவும் வழிவகுத்தது. 

ஆகவே, 1948ஆம் ஆண்டு தொடக்கம், இற்றை வரை ஆட்சி செய்திருக்கின்ற அரசாங்கங்கள் எவற்றின் மத்தியிலும், இது தொடர்பிலான கொள்கையில், மாற்றங்கள் தென்படவில்லை என்பதே, தமிழ் மக்களின் மன ஆதங்கமாகத் தொடர்ந்தும் உள்ளது.

இது இவ்வாறு நிற்க, ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு விவசாயத்துறை, கைத்தொழிற்றுறை, சேவைகள்துறை ஆகிய மூன்றும் பெருமளவில் பங்களிப்புச் செய்கின்றன. இலங்கையின் விவசாயத்துறையில் சராசரியாக 25 சதவீத ஊழியர்படையும் கைத்தொழிற்றுறையில் சராசரியாக 27 சதவீத ஊழியர்படையும் என, ஏறத்தாள சம அளவிலான ஊழியர்படை காணப்படுகின்றது. 

ஆனால், மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு, விவசாயத்துறை வெறும் எட்டு சதவீதமே பங்களிப்புச் செய்கின்ற அதேவேளை, கைத்தொழிற்றுறை 30 சதவீதம் பங்களிப்புச் செய்கின்றது.
பொதுவாக, விவசாயத்துறையில் ஈடுபடுபவர்களின் வருமானம், வெள்ளப்பெருக்கு, புயல், வரட்சி போன்ற இயற்கைக் காரணிகளில்  தங்கியிருக்கின்றது. அத்துடன், கணிசமான விவசாயத்துறை ஊழியர்படை, வருடத்தில் கணிசமான காலப்பகுதியில், தொழிலற்று இருப்பது போன்ற காரணங்களே, இவ்வேறுபாட்டுக்கான பிரதான காரணங்கள் ஆகும்.

இலங்கையின் பிரதான விவசாயச் செய்கையான நெல் உற்பத்திக்கு, நிலத்தைத் தயார் செய்வதிலிருந்து, அதை அறுவடை செய்வதற்கான காலப்பகுதியை (சராசரியாக மூன்று முதல் ஐந்து மாதங்கள்) உள்ளடக்கிய பகுதியிலேயே, விவசாயத்துறையின் ஊழியர்படை, பெரும்பாலும் முழுமையாக வேலை செய்கின்றது. 

வருடத்தின் மிகுதியாக உள்ள மாதங்களில், நாட்டின் அனைத்துப் பிரதேச விவசாயிகளுக்கும், சிறுபோகச் செய்கைக்கான வாய்ப்புக் கிடைப்பதில்லை. அவ்வாறு கிடைத்தாலும், குளங்களில் இருக்கும் நீரில், மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான நிலத்துக்கு நீர் விநியோகம் செய்யவே, நீர்ப்பாசனத் திணைக்களம் உடன்படும்.

ஆகவே, பெரும்போகத்தில் நெல் விதைக்கப்படுகின்ற காணியின் அளவுடன் ஒப்பிட்டு, சிறுபோகத்திலும் முழுமையான காணிகளில் விவசாயம் செய்வது சாத்தியமில்லை. அதாவது, விவசாயச் செய்கைக்குத் தண்ணீர்த் தட்டுப்பாடு காணப்படுகின்றது என்பது தெளிவாகின்றது. இதேவேளை, வடக்கு மாகாணத்தின் பலமாவட்டங்களில், குடி நீருக்கே பெரும் தட்டுப்பாடு நிலவுகையில், சிறுபோகத்தில் எங்கே விவசாயம் செய்வது?

மேலும், யாழ்ப்பாணக் குடாநாட்டில், நெல் உற்பத்தி, மழை நீரை மட்டும் நம்பியே நடைபெற்று வருகின்றது. இயற்கை தடுமாறினால், விவசாயியின் நெல் சந்தைக்குச் செல்வதற்குப் பதிலாக, விவசாயியின் மனையாளின் தாலிக்கொடியே விற்பனைக்குச் செல்லும். அத்தகைய பயங்கர நிலை உருவாகிவிடும்.

இது தவிர, யாழ்ப்பாணத்தில் உபதானியம், மரக்கறிச் செய்கைகள், முற்று முழுதாக நிலத்தடி நீரைப் பயன்படுத்தியே நடைபெறுகிறது. இவ்வாறாக, நிலத்தடி நீரைப் பயன்படுத்துவதால், நீர் உவராவதுடன் நீரின் வளம் கெட்டுப் போதல் போன்ற பல தீமைகள், அடுக்கடுக்காக வந்து சேர்கின்றன. இதனால், அடிப்படைத் தேவைகளுக்கே, நீர்த் தட்டுப்பாடு நிலவுகின்றது.

இவ்வாறாக, பெரும்போகத்தில் மழையையும் மிகுதி மாதங்களில் தங்களது கிணற்று நீரையும் பயன்படுத்தி விவசாயத்தைச் செய்து, அதை முழுமையாக நம்பியே, தங்களது வாழ்வாதாரத்தை நகர்த்துகின்ற குடும்பங்கள், ஆயிரக்கணக்கில் வாழ்ந்து வருகின்றன.

இந்நிலையில், வடக்கு நோக்கி மகாவலி வந்தால், தன்னுடன் பெரும்பான்மை இனத்தையும் கூட்டி வந்து விடுமெனத் தமிழ் மக்களும், வடக்கு வளம் பெற்று விடுமோ என, இனவாதம் கொண்ட சிங்கள அரசியல்வாதிகளும் உள்ளுரப் பயத்துடன் இருப்பது போலவே, நிலைவரங்கள் உள்ளன.

ஆனால், நாட்டினது நலன் கருதி, மகாவலியை வடக்கு நோக்கித் திருப்பினால், எவ்வித பிரயோசனமும் இன்றிக் கடலுடன் கலக்கும் மகாவலிநீர், ஆக்கபூர்வமான பல பயன்களைத் தரும். விவசாயிகள், நெற் செய்கையுடன் மட்டும் நின்று விடாது, மாற்றுப் பயிர்ச்செய்கை தொடர்பிலும் கவனம் செலுத்துவர்.

இதனால், விவசாயத்துறையின் ஊழியர்படை, ஆண்டுதோறும் உழைப்பில் ஈடுபடும். இதனால் அவர்களது உற்பத்தித் திறன் அதிகரிக்கும். நேரடியாகவும் மறைமுகமாகவும் தொழில் வாய்ப்புகள் அதிகரிக்கும். குடும்பங்களைப் பிரிந்து, தொழில் தேடி இளைஞர் யுவதிகள், மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்வதைத் தவிர்க்கலாம். 

இந்நிலையில், கொட்டியாரக்குடாவில் வீணே கலக்கின்ற மகாவலி நீரை, வடக்கு நோக்கித் திருப்பினால், வடக்கு மட்டுமல்ல, நாடே வளம் பெறும். ஆனால், அதை இதயசுத்தியுடன் மட்டும் அரசாங்கம் மேற்கொண்டால் அரசியலும் வளம் பெறும்.

தமிழ் மக்கள், தங்கள் மொழி புறக்கணிக்கப்படுவதையும் நிலம் பறிக்கப்படுவதையும் அன்று தொடக்கம் இன்று வரை, எதிர்த்தே வருகின்றனர். ஆனால், அடுத்தடுத்து ஆட்சிபீடம் ஏறிய ஆட்சியாளர்களும் அத்தகைய எதிர்ப்புகளை இல்லாது ஒழிப்பதிலேயே, கூடிய கவனம் செலுத்தி வருகின்றனர். இதனாலேயே கொடிய யுத்தம் மூண்டது.

இன்று, கொரோனா வைரஸின் கோரப் பிடியால், 70 நாள்களுக்கும் மேலாகப் பல குடும்பங்கள், வாழ்வாதாரதை இழந்துள்ளனளூ நிர்க்கதியான நிலையில் உள்ளன. 

இந்நிலையில், எழுபது வருட கொடிய யுத்தம், எவ்வாறெல்லாம் வலிகளைக் கொடுத்தது எனத் தமிழ் மக்கள் நன்கறிவர். அதை, உலகம் அறிந்து, தமக்கான தீர்வைத் தர வேண்டும் என்பதே, தமிழ் மக்களின் ஆதங்கம் ஆகும்.

இது இவ்வாறு நிற்க, அசுர வேகத்தில், வாழ்க்கைச் செலவு நாளாந்தம் அதிகரித்துச் செல்கையில், மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் வெறும் 1,000 ரூபாய் நாளாந்தச் சம்பளத்துக்கு வருடக் கணக்காகத் தவம் இருக்கின்றனர்.

நட்டத்தில் இயங்கி வருகின்ற பல அரச நிறுவனங்கள், இலங்கையில்  உள்ளன. ஆனால், அந்த நிறுவன ஊழியர்களுக்கு ஷபோனஸ்' உட்பட பல மேலதிகப் படிகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால், பெருந்தோட்ட உற்பத்திகள், இலாபம் ஈட்டி வருகின்றன. ஏன், இலங்கைப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளது என்று கூடக் கூறலாம்.

இந்நிலையில், அவர்களுக்கு 1,000 ரூபாய் அடிப்டைச் சம்பளம் கூட, ஏன் எட்டாக்கனியாக உள்ளது என்ற கேள்வியையும் பொருளியல்த்துறை போராசிரியர் கோபாலபிள்ளை அமிர்தலிங்கம் முன்வைத்தார்.

இன்றும் அவர்கள், பல நூற்றாண்டுகள் பழைமையான, இடிந்து விழுகின்ற நிலையிலுள்ள லயன் குடியிருப்புகளிலேயே வாழ்ந்து வருகின்றனர். மண்சரிவு அபாயம் என அடையாளப்படுத்தப்பட்ட இடங்களிலேயே, உபாயம் இன்றி வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், அரசாங்கங்கள் மீண்டும் மீண்டும், இனவாதம், மதவாதத்துக்குள் இன்னும் கட்டுண்டு கிடந்தால், சமூக பொருளாதார இடர்களிலிருந்து நாடு விடுபட முடியாது என்பது நிச்சயமானது. 

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கடலுடன்-கலக்கும்-எழுபது-இலட்சம்/91-250891

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.