Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாமனிதனின் வரலாறு - ஜீவானந்தம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாமனிதனின் வரலாறு - ஜீவானந்தம்

ப. ஜீவானந்தம் - தமிழ் விக்கிப்பீடியா

 

 

எல்லோரும் சமம்; எல்லோரும் நிகர்; எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்று கருதுகிற துடிப்புமிக்க சிறுவன் அவன். எதற்கும் அஞ்சாதவன். நாகர்கோயிலில் உள்ள கோட்டாறு உயர்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த சமயம், தன்னுடன் பயிலும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவன் மாணிக்கத்துடன் மிகுந்த நட்பு கொண்டிருந்தான். அது தீண்டாமை சகதி ஊறியிருந்த காலம் என்பதால், ஆலயப் பிரவேச உரிமை தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு மறுக்கப்பட்டு இருந்தது.

இதை உணர்ந்திருந்த சிறுவன், தன் நண்பனை தீண்டாமை தாண்டவமாடிய உயர் சாதியினர் வசிக்கும் தெரு வழியாக அங்குள்ள கோயிலுக்கு அழைத்துச் சென்றான். இதை அறிந்த ஆதிக்க சாதியினர் சிறுவனை அழைத்து விசாரித்தனர்; கடிந்துகொண்டனர்; இறுதியாக மிரட்டவும் செய்தனர். ஆனால், சிறுவன் எதற்கும் அஞ்சுவதாக இல்லை. அதனால் சிறுவன் தாக்கப்பட்டான். தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த மாணவன் கோயிலுக்குள் அழைத்துச் செல்லப்பட்டதால் சிறுவனது தந்தைக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

இதில் கோபமுற்ற தந்தை சிறுவனை கடுமையாக தண்டித்தார்; கட்டுப்பாடுகள் விதித்தார். தான் செய்தது நியாயமே என்று உணர்ந்த சிறுவன் தந்தையின் கட்டுப்பாடுகளுக்கு சுனங்கினான். அதனால், வீட்டைவிட்டு வெளியேறுவதென முடிவு செய்தான்; வெளியேறினான்.

இந்தச் சம்பவம்தான் பின்னாளில் பெரியார் தலைமையில் நடைபெற்ற சாதிய அடக்குமுறைக்கு எதிரான வைக்கம் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் அவரை பங்குகொள்ளச் செய்தது.
அது வேறு யாருமல்ல. சொரிமுத்து என்று அழைக்கப்பட்டு பின்னாளில் ஒரு மாமனிதனாக உருவான மக்கள் தலைவன் ஜீவானந்தம்தான் அந்தச் சிறுவன்.
இவ்வாறு சமத்துவத்துக்கு ஆதரவாகவும் தீண்டாமைக்கு எதிராகவும் பள்ளிப் பருவத்திலேயே ஜீவானந்தம் குரல் கொடுக்க ஆதிக்க சாதியினரின் மனோபாவம் வழிவகுத்துக் கொடுத்தது.
காங்கிரஸ் இயக்கத்தின் கோட்பாடுகளின் மீது பிடிப்பு கொண்டிருந்தார் ஜீவா. அதனால், நெல்லை மாவட்டம் சேரன்மாதேவியில், காங்கிரஸ் இயக்கத் தலைவர்களில் ஒருவரான வ.வே.சு அய்யரால் நடத்தப்பட்டு வந்த ஑பரத்வாஜ்ஒ ஆஸ்ரமத்தில் ஆசிரியராக சேர்ந்தார். ஆனால், அங்கு பிராமண வகுப்பு மாணவர்களுக்கு தனியாகவும் பிற சாதி மாணவர்களுக்கு தனியாகவும் உணவு பரிமாறப்பட்டதைக் கண்டு கொதித்தார். அப்போது, ஜீவாவும் பெரியாரும் காங்கிரஸ் இயக்கத்தில் பணியாற்றிக்கொண்டு இருந்தனர். இந்தக் கொடுமைக்கு எதிராக இருவரும் குரல் கொடுத்தனர்.
காஞ்சிபுரத்தில் நடைப்பெற்ற காங்கிரஸ் மாநாட்டில் பெரியார் இதை விவாதத்துக்கு கொண்டு வந்தார். இருந்தும் காந்திஜி, ராஜாஜி போன்ற வர்ணாசிரமவாதிகளால் விவாதம் தோற்றுப்போனது. இதனால், கோபமுற்ற பெரியார் காங்கிரஸிலிருந்து விலகி ஑சுயமரியாதைஒ இயக்கத்தைத் தொடங்கினார்.
ஜீவா, ஑பரத்வாஜ்ஒ ஆசிரமத்திலிருந்து விலகி சிராவயல் ஆசிரமத்தை தொடங்கினார். இங்கு, பலரின் எதிர்ப்பையும் மீறி தீண்டாமைக்கு எதிராகப் போராடினார். அவரோடு, தடையை மீறி கோயிலுக்குள் அழைத்துச் செல்லப்பட்ட மண்ணடி மாணிக்கமும் ஜீவாவின் ஒப்பற்ற நண்பர் சி.பி.இளங்கோவும் ஆசிரமப் பணியில் ஈடுபட்டனர். தன் தோழர்கள் இருவரோடு சேர்ந்து சேரிகளில் ஜீவா கல்விப் பணி ஆற்றினார்.
ஜீவாவுக்கு இருந்த காந்திய சுதேசியக் கொள்கைப் பற்றுதலின் காரணமாக ஆசிரம மாணவர்களுக்கு காந்திய நிர்மாணத் திட்டத்தோடு தேவாரம், திருவாசகம், திருக்குறள், நிகண்டு மற்றும் பாரதியார் பாடல்கள் பயிற்றுவிக்கப்பட்டன. சிராவயல் ஆசிரமம் நடத்தி வந்த காலத்தில் சங்ககால இலக்கியம் முதல் மகாகவி பாரதி வரையிலான எல்லா நூல்களையும் படிப்பதற்கும், ஆய்வு செய்வதற்கும், ஜீவா வாய்ப்பு ஏற்படுத்திக்கொண்டார்.
முன்பு சேரன்மாதேவியில் ஏற்பட்ட கசப்பான அனுபவமும் தமிழ் மீது இருந்த பற்றும், ஜீவாவை வடமொழி எதிர்ப்பாளராகவும் தூய தமிழ்வாதியாகவும் மாற்றிவிட்டன. தூய தமிழ் உணர்வால் தனது ஑ஜீவானந்தம்ஒ என்ற பெயரை ஑உயிர் இன்பன்ஒ என மாற்றிக்கொண்டார்.
காங்கிரஸ் இயக்கத்தில் செயல்பட்டுக்கொண்டு இருந்த ஜீவா, பெரியாரின் சுயமரியாதை இயக்கத்திலும் பங்காற்றி வந்தார். அப்போது, தனித் தமிழ் ஆதரவாளரான வேதாச்சலம் (எ) மறைமலையடிகளின் தொடர்பு ஏற்பட்டு, அவர் மீது அளவுக்கடந்த அன்பு செலுத்தத் தொடங்கினார்.
ஒரு முறை மறைமலையடிகளைத் தேடி அவர் வீட்டுக்கு சென்றிருந்தபோது, அவர் ஆங்கிலத்தில் பேசியதைக் கண்டு திடுக்கிட்ட ஜீவா, வறட்டுத் தமிழ்வாதம் கூடாது என்பதை அப்போது உணர்ந்தார்.
ஜீவா, சிராவயல் ஆசிரமம் நடத்தி வந்த சமயம், அவர் தலைமையாசிரியராக இருந்த ஒரு பள்ளிக்கு வ.உ.சிதம்பரம் பிள்ளை வருகை புரிந்தார். அச்சமயம், பள்ளி மாணவர்கள் கை ராட்டிணத்தில் நூல் நூற்றுக்கொண்டு இருந்தனர். அப்போது, ஆணாதிக்க மனோபாவம் கொண்டிருந்த வ.உ.சி., அதைப் பார்த்து,
஑஑ஆண்களை நூல் நூற்க வைக்கும் இந்தப் பள்ளியின் செயல்பாடு முட்டாள் தனமானதாக இருக்கிறது. வாளேந்த வேண்டிய கரங்கள் ராட்டைச் சுற்றுவதை என்னால் சகிக்க முடியவில்லைஒஒ என்று சினமுற்று அவர் சொன்ன கருத்தை ஜீவானந்தம் எதிர்த்தார். ராட்டைச் சுற்றுவதும் ஒரு தேசபக்த செயல்தான் என்றும், வ.உ.சி.யின் கூற்று முறையானதல்ல என்றும் வாதாடினார்.
அன்று மாலை அதே பகுதியில் வ.உ.சி. தலைமையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ஑பெண்களும் விடுதலையும்ஒ என்ற தலைப்பில் ஜீவா உரை நிகழ்த்தினார். உணர்ச்சிப் பொங்க அவர் ஆற்றிய அந்த உரையைக் கேட்டு வியந்துபோன சிதம்பரம் பிள்ளை பெண்கள் மீது தான் கொண்டிருந்த ஆணாதிக்க மனப்பாங்கை மாற்றிக்கொண்டதோடு மட்டுமல்லாமல், ஑஑அஞ்சுபவர்களும் கெஞ்சுபவர்களும் சுதந்திரத்தைப் பெற முடியாது. ஜீவானந்தம் போன்ற சிலர் இருந்தாலே போதும் நாடு விடுதலை அடைந்துவிடும்ஒஒ என்று கூறினார்.
1927&ம் ஆண்டு தமிழ்நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த காந்தியடிகள் ஜீவா நடத்திக்கொண்டிருந்த சிராவயல் ஆசிரமத்துக்கு வந்தார். ஜீவா, தன் கையாலேயே நூற்று வைத்திருந்த பத்தாயிரம் கெஜம் நூலை காந்திக்கு வழங்கினார். அன்போடு வழங்கிய அந்த நூலைப் பெற்றுக்கொண்ட காந்தி ஜீவாவைப் பார்த்து,
஑உங்களுக்கு எவ்வளவு சொத்து இருக்கிறதுஒ என்று கேட்டார்.
ஜீவா, ஑இந்தியாதான் என் சொத்துஒ என்று பதில் சொல்லவும்,
காந்தி, ஑இல்லை இல்லை, நீங்கள்தான் இந்தியாவின் சொத்துஒ என்று ஜீவாவின் சுதேசியத்தையும் தேச பக்தியையும் பாராட்டினார்.
இப்படி, தேசிய உணர்வும் சுதேசிய உணர்வும் கொண்டவர் ஜீவா என்பதற்கு இந்தச் சம்பவம் சாட்சியாக இருக்கிறது. இது, இன்றளவும் பலராலும் பேசப்பட்டும் மேற்கோள்காட்டப்பட்டும் வருகிற சம்பவமாகும்.
1929&ல் நெல்லிக்குப்பத்தில் நடந்த சாதி ஒழிப்பு மாநாட்டில் ஜீவா பங்கேற்றார். அதே ஆண்டில் செங்கல்பட்டில் நடந்த சுயமரியாதை மாநாட்டில் கலந்துகொண்டார். இந்த ஆண்டுதான் சிராவயலில் இருந்த ஆசிரமம் பக்கத்து ஊரான நாச்சியார்புரத்துக்கு மாற்றப்பட்டது. நாச்சியார்புரத்தில் இருக்கும்போதுதான் அவருக்கு பெரியாரோடு தொடர்பு ஏற்பட்டது. குருகுலத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த அதே வேளையில், சுயமரியாதை இயக்க மாநாடுகளிலும் கூட்டங்களிலும் பங்கேற்று தன் கருத்துக்களை வெளியிட்டார். இதே ஆண்டில் அரசால் நடத்தப்பட்ட மதுவிலக்கு பிரசார கமிட்டியிலிருந்து போதைப் பழக்கத்துக்கு எதிராக ஜீவா பிரசாரம் செய்தார்.
1930&ம் ஆண்டு வாக்கில் ஈரோட்டில் சுயமரியாதை இயக்கத்தின் இரண்டாவது மாநாடு நடைபெற்றது. ஜீவாவும் அந்த மாநாட்டில் பங்கேற்றார். வெள்ளை ஏகாதிபத்திய அரசின் ஏகபோக கொடுங்கோன்மையை எதிர்க்கும் தீர்மானத்தை ஆதரித்து, ஜீவா ஆவேசம் பொங்க உரை நிகழ்த்தினார். மாநாட்டில் தீர்மானத்தை ஆதரித்துப் பேசிய அவர்,
஑஑சாதி, மத விவகாரங்களில் மட்டும் நமது சுயமரியாதையைப் பாதுகாத்துக்கொண்டால் போதாது. அரசியல் விவகாரங்களிலும் நாம் நமது சுயமரியாதையைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்ஒஒ என்று சுயமரியாதை இயக்கத்தையும், தேச விடுதலை இயக்கத்தையும் இணைத்துப் பேசினார்.
இதன்பின்பு, 1931&ம் ஆண்டு ஜீவா கோட்டையூர் காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதுவே ஜீவாவின் முதல் அரசியல் பிரவேசம் என்று சொல்லலாம்.
பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் தீவிரமாக பங்கு கொண்டிருந்த ஜீவா தேச விடுதலைப் போராட்டத்திலும் அதே வேகத்தோடும் வீரியத்தோடும் ஈடுபட்டார். 1932&ம் ஆண்டு சட்டமறுப்பு இயக்கம் தீவிரமடைந்திருந்த சமயம், காரைக்குடியில் ஜீவா தலைமையில் போராட்டக்குழு அமைக்கப்பட்டது. எனவே, சட்டமறுப்பு இயக்க ஆதரவுக் கூட்டங்களில் ஜீவாவின் கருத்தாழமிக்க பேச்சு மக்கள் மத்தியில் உயிர் பெற்று எழுந்தது. இதைக் கண்டு அஞ்சத் தொடங்கிய அரசு, 7.1.1932 அன்று ஜீவா காரைக்குடிக் கூட்டத்தில் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தபோது, மறுநாள் முதல் அவர் எங்கும் பேசக்கூடாது என்று வாய்ப்பூட்டு சட்டம் போட்டது. ஜீவா, அந்தச் சட்டத்தை உடைத்தார். மறுநாள் கோட்டையூரில், தடையை மீறிப் பேசிய ஜீவா கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். இது ஜீவாவுக்கு முதல் சிறைவாசமாகவும் புதிய அனுபவமாகவும் அமைந்துபோனது. இது பல மாற்றங்களை நிகழ்த்தப்போகிறது என்பதை அப்போது அவர் அறிந்திருக்கவில்லை.
இந்தச் சிறை வாசத்தின்போது, பகத்சிங்கின் தோழர்களான பூதகேஸ்வ தத், குந்தலால் ஆகியோரையும், வங்கப் புரட்சியாளர்களான ஜீவன்லால் கோஷ், சட்டர்ஜி ஆகியோரையும் சந்தித்தார். இவர்களுடன், சோஷலிஸம், கம்யூனிஸம் போன்ற சித்தாந்தங்கள் பற்றியும், சோவியத் யூனியன் பற்றியும் நிறையவே பேசவேண்டிய சூழல் அவருக்கு ஏற்பட்டது. அதோடு நின்றுவிடாமல் அரியபல பொதுவுடமைப் புத்தகங்களைப் படிக்கும் வாய்ப்பும் சிறையில் அவருக்கு கிடைத்தது. இந்தப் புத்தகங்கள், அவர் உள்ளத்தில் ஊறிக்கொண்டு இருந்த பொதுவுடமைக் கருத்துக்களுக்கு உரம் சேர்ப்பதாக இருந்தன. 1932 ஜனவரியில் ஒரு காங்கிரஸ்வாதியாக சிறை புகுந்த ஜீவா நவம்பரில் ஒரு கம்யூனிஸ்ட்டாக திரும்பினார்.
1932&ன் இறுதியில் பெரியார், சுயமரியாதை இயக்க ஊழியர் கூட்டத்தை சிங்காரவேலர் தலைமையில் கூட்டினார். இந்தக் கூட்டத்தில்தான் ஜீவாவுக்கு சிங்காரவேலருடன் நெருக்கம் ஏற்பட்டது. அதன் மூலம் விஞ்ஞான சோஷலிஸம், கம்யூனிஸம், நாத்திகம் ஆகியவற்றைப் பற்றி புரிந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது. மட்டுமல்லாமல், 1932&லிருந்து 1932 வரை சிங்காரவேலரின் நூலகத்திலிருந்த பொதுவுடமை நூல்களை வாசிப்பதற்கும் அவருக்கு வாய்ப்பு ஏற்பட்டது.
1933&ம் ஆண்டு டிசம்பர் மாதம், சென்னை எழும்பூர் ஒயிட்ஸ் மெமோரியல் ஹாலில் பெரியார், சிங்காரவேலர், ஜீவா ஆகியோர் பங்கு பெற்ற நாத்திகர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டைத் தொடர்ந்து, நாத்திகக் கருத்துக்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்காக சுமார் 200 பாடல்களை ஜீவா எழுதியதாக தெரிகிறது.
இந்தச் சூழ்நிலையில், வர்ணாசிர தர்மத்தையும், சோஷலிஸ சமூகமல்லாத ராம ராஜ்யத்தையும் ஆதரித்துவரும் காந்தியை புறக்கணிக்க வேண்டும் என்று ஜீவா அறைகூவல் விடுத்தார். 1934 ஜனவரி மாதம், தான் நடத்தி வந்த ஑புரட்சிஒ ஏட்டில் ஑நாத்திகப் பிரசாரம்ஒ என்ற கட்டுரையை ஜீவா எழுதினார். ஏப்ரல் இதழில் ஑குருட்டு முதலாளித்துவமும் செவிட்டு அரசும்ஒ என்ற கட்டுரை எழுதியதும் பயந்துபோன அரசு புரட்சி இதழை தடை செய்தது. அதற்கு பதிலாக ஑பகுத்தறிவுஒ என்ற பத்திரிகை வெளிவந்தது.
1934&ம் ஆண்டு ஜீவாவின் வாழ்வில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்தது. அதற்குமுன் இளைஞர்கள் பலர் வேதனையில் இருந்த நேரம். கோபத்தில் கொந்தளித்த காலம். ஜீவாவை இப்படி பார்த்த ஒரு மாணவர், அந்தச் சம்பவத்துக்குப் பிறகு கம்யூனிஸ்டாக வளர்ந்தார். அவர் பெயரை பின்னால் தெரிந்துகொள்வோம். அதற்குமுன் அவரே அந்த நிகழ்வை விவரிக்கிறார்...
஑஑பொள்ளாச்சியில் பள்ளி மாணவனாக இருந்தபொழுது ஜீவாவை முதன்முறையாகப் பார்த்தேன்.
பகத்சிங் தூக்கிலிடப்பட்ட காலம் அது. வாலிபர் உலகம் கொதித்தெழுந்த கோலம். காந்திஜி கடமையில் தவறிவிட்டார் என்று அவருக்கு இளைஞர்கள் கருப்புக் கொடி பிடித்து, ஆர்ப்பாட்டம் செய்த நேரம் அது.
கொந்தளிப்பு மிகுந்த இச்சூழலில் நான் ஜீவாவைக் கண்டேன். சர்க்கஸிலிருந்து தப்பி ஓடிய ஒரு கொடிய விலங்கினைச் சங்கிலியிட்டு, நாற்புறமும் இழுத்துப் பிடித்துக்கொண்டு, எச்சரிக்கையாக கூண்டுக்கு நடத்திச் செல்வது போன்று, ஜீவாவை போலீஸார் சங்கிலியிட்டு இழுத்துச் சென்றனர். கோவை ஜில்லாவில், ஒரு சப்ஜெயில் பாக்கியில்லாமல் அவர் இழுத்தடிக்கப்பட்டார்.
அவர் அவ்வளவு பயங்கரமான மனிதரா? பகத்சிங்கின் தோழரா? பின் ஏன் அரசாங்கம் அவரைக் கண்டு இப்படி அஞ்சுகிறது? இளம் உள்ளத்தில் அக்காட்சி எழுப்பிய ஐயம் இது.
ஆளவந்தாராலும் ஒடுக்கமுடியாத உருக்கு உள்ளம் படைத்த ஒரு வீரனின் படம் இளம் உள்ளங்களில் பசுமரத்தாணி போல் பதிந்தது. ஒரு லட்சிய வீரனைக் கண்கூடாகக் கண்டுவிட்ட பெருமிதம் உள்ளத்தை நிரப்பிற்று.
தூக்கு மேடை ஏறினார் பகத்சிங் தேசத்துக்காக; அந்த பஞ்சாப் சிங்கம் தூக்குக் கயிற்றை முத்தமிட்ட வண்ணம், தான் ஒரு கொள்கை வீரனுங்கூட என்பதை வெளிப்படுத்தும் வகையில், ஑நான் ஏன் நாத்திகன் ஆனேன்?ஒ என்ற கடிதத்தை எழுதினார்.
ஹிந்துஸ்தான் சோஷலிஸ்டுக் குழுவின் திலகமான பகத்சிங்கின் இந்த வீர காவியத்தை தமிழ்ப்படுத்தி தமிழ் மக்களுக்குத் தந்தமைக்காக சங்கிலியும் சப்ஜெயிலும் ஜீவாவுக்குக் கிடைத்தன.ஒஒ என்று கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களில் ஒருவரான கே.பாலதண்டாயும் கூறுகிறார்.
பகத்சிங்கின் ஑நான் ஏன் நாத்திகன் ஆனேன்?ஒ என்ற கடிதத்தை தமிழில் மொழி பெயர்த்தமைக்காக ஜீவா கைது செய்யப்பட்டபோதே அந்த நூலை ஑பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன வெளியீடுஒ மூலம் வெளியிட்டமைக்காக பெரியாரும் கைது செய்யப்பட்டார்.
பின்னர், பெரியார் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு வெளியே வந்தார். ஜீவா இதற்கு சம்மதிக்கவில்லை. கட்சியின் முடிவு என்று சொல்லவே தன் நிலையை மாற்றிக்கொள்ள நேரிட்டது. உள்ளக் குமுறலுடன் மன்னிப்புக் கடிதம் கொடுத்துவிட்டு வெளியே வந்தவர், ஜோலார் பேட்டையிலிருந்து ஑சமதர்மம்ஒ என்ற பத்திரிகையை வெளியிட்டார். அதில், ஑மன்னிப்பும் எனது நிலையும்ஒ என்று தலையங்கம் எழுதினார். இதன் காரணமாக ஜீவாவுக்கும் பெரியாருக்குமான இடைவெளி மேலும் அதிகரித்தது.
அதே ஆண்டு அக்டோ பரில், தமிழ்நாட்டில் உள்ள நாத்திகர்களை ஒன்றுபடுத்த வேண்டும் என்று நினைத்து ஑சென்னை ராஜதானி நாத்திகர்கள் சங்கம்ஒ என்ற அமைப்பை ஏற்படுத்தினார். ஑சமதர்மம்ஒ பத்திரிகையின் வாயிலாக சங்கத்தின் நோக்கங்களை வெளியிட்டார். ஆனால், மீண்டும் அரசு தனது கைவரிசையை காட்டியது. சமதர்மம் பத்திரிகை தடைப்பட்டது.
சுயமரியாதை இயக்கத்துக்குள் பொதுவுடமைக் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதை எதிர்த்து இயக்கத்திலிருந்த முக்கிய தலைவர்கள் வெளியேறினர். பெரியார், சோஷலிஸ்ட் கருத்துக்களைப் பிரசாரம் செய்வதை நிறுத்த வேண்டும் என்று அரசு அடக்குமுறையை ஏவியது; பெரியார் பொதுவுடமைப் பிரசாரத்தை நிறுத்தினார்.
இதனால், சுயமரியாதை இயக்கம் பிளவை சந்தித்தது. ஜீவா உள்ளிட்ட பலர் சுயமரியாதை இயக்கத்தைவிட்டு வெளியேறி, ஑சுயமரியாதை சமதர்மக் கட்சிஒ அல்லது ஑சுயமரியாதை சோஷலிஸ்ட் கட்சிஒ என்ற அமைப்பை உருவாக்கினார்கள்.
சுயமரியாதை சோஷலிஸ்ட் கட்சியின் இரண்டாவது மாநாட்டுக்கு கம்யூனிஸ்ட் தலைவர் எஸ்.ஏ.டாங்கே வந்தார். மாநாட்டில் சுயமரியாதை சோஷலிஸ்ட் கட்சியைக் கலைத்துவிட்டு அனைவரும் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியில் இணைய வேண்டும் என்று தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அந்தத் தீர்மானத்தின் பேரில் ஜீவாவும் மற்ற இடதுசாரி சிந்தனையாளர்களும் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியில் இணைந்தனர்.
1936&ம் ஆண்டு, நவம்பர் மாதம் தமிழ்நாடு காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியின் முதல் மாநாடு சேலத்தில் நடைபெற்றது. ஜீவா, அதன் பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். ஜீவாவின் தலைமையில், தமிழ்நாடு காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி செயல்படத் தொடங்கியது.
ஜமீன் ஒழிப்புத் தீர்மானம்
1937&ம் ஆண்டு சென்னை மாகாண சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் ஜஸ்டிஸ் கட்சி தோற்கடிக்கப்பட்டு காங்கிரஸ் மகத்தான வெற்றி பெற்றது. இந்த வெற்றி பெறுவதற்கு ஜீவா பெரிதும் உழைத்தார்.
அதே ஆண்டு, வத்தலகுண்டுவில் அகில இந்திய காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. மாநாட்டில், அ. இ. காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் தேர்வு நடைபெற்றது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பதவி என்பது மிகவும் உயரிய பதவியாகும். அந்தப் பதவிக்கு அப்போதைய சென்னை மாகாண முதலமைச்சர் ராஜாஜி, சத்யமூர்த்தி, காமராஜர் போன்ற பெருந்தலைவர்கள் போட்டியிட்டனர். இருந்தபோதும், ஜீவா அனைவரைவிடவும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 1937&ம் ஆண்டு விக்கிரமசிங்கபுரத்திலிருந்தும், 1938&ம் ஆண்டு பாளையங் கோட்டையிலிருந்தும் அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டுக்கு பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
காங்கிரஸ் மாநாட்டில், ஜமீன் ஒழிப்புத் தீர்மானம் கொண்டுவரப் பட்டது. தீர்மானத்தை எதிர்த்த சிலர், ஑மாநாடு நடைபெறுவதற்காக சில ஜமீன்தார்களும் பொருளுதவி செய்திருப்பதால், இப்படிப்பட்ட தர்மவான்களான ஜமீன்தார்கள் ஒழிப்பு அவசியமில்லைஒ என்று பேசலானார்கள். தீர்மானத்தை ஆதரித்தவர்கள்கூட அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை. ஏதோ பெரிய பாவம் ஒன்றை செய்யப் போவது போலவே பலர் எண்ணிக்கொண்டு பேசினார்கள்... ஑ஜமீன்களை ஒழிக்க வேண்டுமானால் மிகமிகத் தாராளமாக நஷ்டஈடு கொடுக்கவேண்டும்; அதுவே நீதி, நேர்மை, நியாயம், தர்மம்ஒ என்று என்னவெல்லாமோ பேசினார்கள்.
ஒட்டி உலர்ந்த வயிற்றுடன் குழிவிழுந்த கண்ணுடன் & வாழ வழியற்று சுதந்திரமாக மூச்சு விடக்கூட வக்கற்று நடைப் பிணமாகக் கிடந்து உழலும் விவசாயி ஒருபுறம்! தேசப்பற்று அணுவளவும் இல்லாமல் & சுரண்டல் வேட்டைக்காரர்களாக விளக்கும் ஜமீன்தார்கள் மற்றொரு புறம்! ஜீவா பேசத் தொடங்கினார். ஜீவா, இதை எதிர்த்துப் பேச ஆரம்பித்தபோது, பேசுவதற்குக் கொடுக்கப்பட்ட நேரம் முடிந்துவிட்டது என்று சொல்லி தலைவர் மணியடித்தார். ஆனால், கூட்டம் ஜீவாவை பேசவைக்க வேண்டும் என்று குரல் எழுப்பவே, வேறு வழியின்றி ஜீவானந்தம் பேசுவதற்கு அனுமதி வழங்கவேண்டிய நிலைக்கு கூட்டத் தலைவர் தள்ளப்பட்டார். ஜீவா பேசி முடித்தார். தர்மம் பேசியவர்கள் தலைகுனிந்தார்கள். அவர்கள் கட்டி முடித்து, மேல் மினுக்கி வைத்திருந்த விவாத மாளிகையை ஜீவாவின் பேச்சு பொடி சூரணமாக ஆக்கியது. ஆனாலும், இறுதி வெற்றி ஜீவாவை ஏமாற்றிவிட்டது. நஷ்டஈடு பற்றி மறுப்பு குறிப்பு எழுதி வைத்தார் ஜீவா. மாநாட்டை ஒட்டி நடந்த பொது மேடையில் இதுபற்றி ஜீவா பேசவில்லை. அது கட்சியின் கட்டளை!
இந்தச் சூழ்நிலையில், நாடுமுழுக்க தொழிற்சங்கங்கள் அமைத்து தொழிலாளர்கள் போராட ஆரம்பித்திருந்தனர். தமிழ்நாட்டில் நடைபெற்ற போராட்டங்களுக்கு ஜீவா, பாட்லிவாலா, பி.ராமமூர்த்தி போன்ற தலைவர்கள் தலைமை தாங்கினர்.
பசுமலை மகாலட்சுமி மில் போராட்டம்
1937&ம் ஆண்டு மதுரை, பசுமலையில் உள்ள மகாலட்சுமி மில்லில் தொழிற்சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. இந்தச் சங்கத்துக்கு காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சித் தலைவர்களில் ஒருவரான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தலைவராகவும் ஜீவா மற்றும் டி.எல்.சசிவர்ணம் துணைத் தலைவர்களாகவும் இருந்தனர். சங்கம் தொடங்கப்பட்டதும் தொழிலாளர்கள் கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் குதித்தனர்.
ஏற்கனவே, பசும்பொன் தேவர் மீது ராஜாஜிக்கு தனிப்பட்ட முறையில் மனஸ்தாபம் உண்டு. அதைக் காரணம் கொண்டு, தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளைக் கருத்தில் கொள்ளாமல் தேவர் மீது இருந்த மனத்தாங்கலால் போராட்டத்துக்கு தடை விதித்தார் முதலமைச்சர் ராஜாஜி.
இதைத்தொடர்ந்து, ஜீவாவும் ராமமூர்த்தியும் போராட்டத்தைக் கையிலெடுத்தனர்.
வேலை நிறுத்தத்தின் எதிரொலி தமிழகம் முழுவதும் ஒலித்தது. தலைவர் முத்துராமலிங்கத் தேவர் சிறை வைக்கப்பட்டதினால் அது மிகவும் சூடேறியிருந்த சமயம். பாதுகாப்பு கருதி, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த ஆண்கள் பலர் சிறை வைக்கப்பட்டனர். எனவே, மறியலை பெண்கள் நடத்தவேண்டிய நிலை ஏற்பட்டது. போராட்டத்துக்காக பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். அதில், பெண்களே பாதிக்கும்மேல். கூட்டத்தில், ஜீவா பேசத் தொடங்கினார்... அவர் பேசப்பேச பெண்கள் தனித்தனியாகக் கூடி விவாதித்தனர். தொடர்ந்து அவர் பேச்சைக் கேட்டப் பெண்கள் கிளர்ந்தெழுந்தனர்.
மறுநாள் மறியல் துவங்கியது. பெண்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். போலீஸார் தடியடி நடத்தினர். பலருக்குப் படுகாயம். பலருக்கு சிறை வாசம். போராட்டத்தில் ஜீவாவுக்கு பலமாக தாக்கு. ஜீவா தாக்கப்பட்டதைக் கண்டு, ஆவேசம் கொண்டு கொதித்த முத்தம்மாள் என்ற பெண், ஜீவாவைத் தாக்கிய காவல் துறையின் துணை ஆய்வாளரை விளக்கு மாற்றாலேயே வாங்கிவிட்டார். இது தொழிலாளர்கள் ஆண்&பெண் பேதம் இன்றி ஜீவா மீது வைத்திருந்த அன்பைக் காட்டுகிறது.
பின்னர், போராட்டம் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. சமரசப் பேச்சுவார்த்தை தொடங்கியது. தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமென்று நிர்வாகம் எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்தது. சமரச உடன்படிக்கையில் ஜீவா கையெழுத்திட்டார். பசுமலை மில் போராட்டம் வெற்றி கண்டது.
இந்தப் பின்னணியில், தொழிலாளர்களுக்கு வழிகாட்டவும், சோஷலிஸ்ட் கருத்துக்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்லவும் ஒரு ஊடகம் தேவை என்பதை உணர்ந்த ஜீவா 1937&ம் ஆண்டு ஑ஜனசக்திஒயை தொடங்கினார்.
஑ஜனசக்திஒ பத்திரிகை வெளிவந்தவுடன், அதில் வந்த செய்திகள் அரசை உலுக்கியது. இதனால், அச்சக உரிமையாளர் காவல் துறையினரின் மிரட்டலுக்கு ஆளானார். எனவே, தன்னால் தொடர்ந்து பத்திரிகை அச்சடித்துக் கொடுக்கமுடியாது என்று கைவிரித்துவிட்டார். வேறு அச்சகத்தாரும் பத்திரிகையை அச்சடிக்க மறுத்துவிட்டனர். ஆகவே, பத்திரிகை மூன்றாவது இதழோடு தற்காலிகமாக நின்றுபோனது.
அரசின் கண்களில் மண்ணைத்தூவி கம்யூனிஸ்ட்கள் சொந்தமாக அச்சகத்தை தொடங்கினர். இதனால், 1938&ம் ஆண்டு ஏப்ரல் 6&ம் தேதி ஑சோஷலிஸ்ட் வாரப்பத்திரிகைஒ என்ற முத்திரையுடன் 1939&ம் ஆண்டு செப்டம்பர் 16&ம் தேதி வரை ஑ஜனசக்திஒ வெளிவந்தது.
1938&ம் ஆண்டு ராஜபாளையத்தில் காங்கிரஸ் அரசியல் மாநாடு நடைபெற்றது. அப்போது, காங்கிரஸ் கட்சியின் அரசியல் மாநாடு நடக்கும் இடத்துக்கு எதிரிலேயே காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியின் மாநாடும் நடைபெற்றது.
மாநாட்டில் ஜீவானந்தம் தொழிலாளர் போராட்டத்தை ஆதரித்தும் போலீஸ் அடக்குமுறையை எதிர்த்தும் குரல் எழுப்பினார். அவரது ஆவேசமான பேச்சைக் கேட்க ஆவலாக இருந்த மக்கள் மாநாட்டுத் தடுப்பையும் மீறி உள்ளே வர ஆரம்பித்துவிட்டனர். அதனால், தடுப்பு அகற்றப்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் ஜீவாவின் பேச்சைக் கேட்க அனுமதிக்கப்பட்டனர்.
1939&ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கடலூரில் நடைபெற்ற காங்கிரஸ் கமிட்டியில், தொழிலாளர் போராட்டம் நடத்திய ஜீவா மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படு ஓராண்டுக்கு கட்சியை விட்டு அவர் நீக்கப்பட்டார். இதனால், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பதவியையும், சென்னை மாகாண காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பதவியையும் அடியோடு ராஜினாமா செய்தார் ஜீவா.
1940, இரண்டாம் உலகப்போர் நடந்துகொண்டிருந்த சமயம் ஜீவா மங்களூர் சென்று கம்யூனிஸ்ட் தலைவர் எஸ்.வி.காட்டேவைச் சந்தித்தார். ஏற்கனவே, யுத்த எதிர்ப்புப் பிரசாரத்தின் காரணமாகச் சீற்றம் கொண்டிருந்த வெள்ளை ஏகாதிபத்திய அரசு ஜீவாவை நாடு கடத்த தீர்மானித்தது. கம்யூனிஸ்ட்கள் மீது அடக்குமுறை ஏவப்பட்டது. பலர் தலைமறைவாகிவிட்டனர். பகிரங்கமாகச் செயல்பட்ட ஜீவா உள்ளிட்டத் தலைவர்கள் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.
ஒரு கட்டத்தில், சென்னை மாகாணத்தை விட்டு வெளியேற்றப்பட்ட ஜீவா, காரைக்காலுக்குச் சென்றார். உலக யுத்தத்தில் ஆங்கில அரசும் பிரஞ்சு அரசும் சேர்ந்திருந்தமையால் பிரஞ்சு அரசின் ஆளுகைக்கு உட்பட்ட பாண்டிச்சேரி பிரதேசத்துக்குள் ஜீவா அனுமதிக்கப்படவில்லை. எனவே, ஜீவா பம்பாய் புறப்பட்டார். அங்கு தாழ்த்தப்பட்ட தமிழ் மக்கள் மத்தியில் பணியாற்றினார். யுத்த எதிர்ப்பு இயக்கமும் தொழிலாளர் எதிர்ப்பு இயக்கமும் சேர்ந்தது. அலை அலையாக பொங்கி எழுந்த மக்களின் யுத்த எதிர்ப்பு இயக்கத்தைக் கண்டு ஆங்கில ஏகாதிபத்தியம் நடுநடுங்கியது; கம்யூனிஸ்ட்களை ஒடுக்கியது; வேட்டையாடியது.
தனது அரசியல் வாழ்வின் முதற்பகுதியில் தேச விடுதலைப் போராட்டத்திலும், சாதியக் கொடுமைக்கு எதிராகவும் குரலெழுப்பி பேர் பெற்றிருந்த ஜீவா, கம்யூனிஸ்ட் தலைவராக நாஞ்சில் நாட்டில் நுழைந்தார். தனது உணர்ச்சிமிக்க சொற்பொழிவுகள் வாயிலாகவும் இலக்கிய உரைகள் மூலமாகவும் பொதுவுடமை கருத்துக்களை நாஞ்சில் நாட்டு மக்களுடன் பகிர்ந்துகொள்ளவும், தேச விடுதலை நோக்கி அவர்களை இட்டுச் செல்லவும் ஜீவா அதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டார்.
1942, தமிழகமெங்கும் பாரதிக்கு ஜீவா விழா எடுத்தார். அது பாரதியின் மீது கடும் விமர்சனம் இருந்து வந்த காலகட்டமாகும். ஆனால், அந்த விமர்சனங்களுக்கெல்லாம் பதிலளித்த ஜீவா பாரதியை உயர்த்திப் பிடித்தார். பாரதி இன்று மறைக்கப்படாமல் இருப்பதற்கு ஜீவாவும் ஒரு காரணம் என்று சொல்லலாம். ஜீவா பங்கேற்ற கூட்டங்களில் திவான் சர்.சி.பி.ராமசாமி அய்யரின் ஆட்சி கடுமையாக விமர்சிக்கப்பட்டது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் மன்னராட்சியும் விமர்சனத்துக்கு உள்ளானதால் ஜீவா கைது செய்யப்பட்டார்.
ஆறு மாதம் சிறை தண்டனைக்குப் பிறகு, 1943 ஏப்ரல் மாதம் ஜீவா விடுதலையானார்.
1942&ல் ஜீவா மீது விதிக்கப்பட்டிருந்த தடை 1945 அக்டோ பர் 5 அன்று சென்னை மாகாண அரசால் வாபஸ் பெறப்பட்டது. ஜீவா சென்னை திரும்பினார்.
இந்திய வரலாற்றில் 1946&ம் ஆண்டு மறக்கமுடியாத ஆண்டாகும். நாட்டின் புதிய சக்தியாக தொழிலாளர்களும் ராணுவமும் ஒன்று சேர்ந்திருந்த நேரம். இரண்டாம் உலக யுத்தம் சோவியத் யூனியனுக்கு சாதகமாக அமைந்ததால், இந்த வெற்றி காலனி நாட்டு மக்களுக்கு ஊக்கத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியது.
அதே ஆண்டு பிப்ரவரி மாதம் 17&ம் நாள் இந்திய கடற்படையில் போராட்டம் மூண்டெழுந்தது. 18&ம் நாள் பம்பாய் துறைமுகத்தில் முகாமிட்டிருந்த இருபது போர்க் கப்பல்களுக்கும் இந்தப் போராட்டம் பரவலாயிற்று. 19&ம் நாள் போராட்டக் குழுவினர் பம்பாய் நகரத்தில் பெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். மாலுமிகளின் இந்தப் போராட்டம் அரசியல் திருப்பத்தை ஏற்படுத்தியது. 20&ம் நாளன்று கப்பல் படையினரின் எழுச்சியை அடக்குவதற்காக பிரிட்டிஷ் ராணுவம் பம்பாய் வந்தது. நாடெங்கும் பரவிய கப்பல் படை எழுச்சி, 21&ம் தேதியன்று போராட்டத்துக்கு ஆதரவாக கம்யூனிஸ்ட்களை அறை கூவல் விடுக்கச் செய்தது.
இந்தப் போராட்டத்தில் 300 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 1700 பேர் படுகாயமடைந்தனர். மாலுமிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்த இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியும், முஸ்லிம்லீக் கட்சியும் போராட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தின. கடைசியில் பிப்.22&ம் தேதி போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
கப்பற்படை எழுச்சியின்போது முன்னணி வகித்த தொழிலாளர்கள் மீதும், தொழிலாளர் கட்சிகள் மீதும் வெள்ளை அரசு கொடும் ஒடுக்குமுறை நடத்தியது. மாகாண அரசுகள் கம்யூனிஸ்ட்கள் மீது பொய் வழக்குகளைப் போட்டு சிறையில் அடைத்தன. கட்சியின் கட்டுப்பாட்டால் ஜீவா போன்ற தலைவர்கள் 1946 நவம்பர் முதல் 1947 ஆகஸ்ட் வரை தலைமறைவாக இருக்க நேர்ந்தது.
தலைமறைவு வாழ்க்கையின்போது கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், எம்.ஆர்.ராதா, டி.கே.எஸ். சகோதரர்கள் போன்ற கலைஞர்களும் குத்தூசி குருசாமி போன்ற திராவிட இயக்கத் தலைவர்களும் ஜீவாவுக்கு அடைக்கலம் தந்தனர்.
ஒருவழியாக 1947, ஆகஸ்ட் 15&ம் நாள் வெள்ளை ஏகாதிபத்தியத்தின் அடக்குமுறை முடிவுக்கு வந்தது. மக்கள் ஆரவாரித்தனர். இந்த ஆட்சி மாற்றத்தை ஜீவா வரவேற்கிறார்...
஑஑வீழ்ந்தது யூனியன் ஜாக்! உயர்ந்தது மூவர்ணக் கொடி!ஒஒ
அதே ஆண்டில், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பத்மாவதி என்ற பெண்ணை ஜீவானந்தம் மறுமணம் செய்கிறார். தனது புதிய வாழ்க்கையை தாம்பரம் பகுதியில் புறம்போக்கு நிலத்தில் தொடங்குகிறார். தன் வாழ்வின் இறுதிநாட்கள் வரை அந்த குடிசையிலேயே வாழ்ந்தார். சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோதும் குடிசையை மாற்றவில்லை.
ஒரு முறை கூட்டம் ஒன்றுக்காக அப்பகுதிக்கு வந்த அன்றைய முதலமைச்சர் காமராஜர், ஜீவாவின் குடிசையைப் பார்த்து வறுந்தி, மாடி வீடு கட்டித்தருவதாக கூறியிருக்கிறார். ஆனால். ஜீவா அதை ஏற்கவில்லை. இங்கிருக்கிறவர்கள் எல்லாம் எப்போது மாடி வீட்டில் வசிக்கத் தொடங்குகிறார்களோ அப்போது, தானும் மாடி வீடு கட்டிக்கொள்வதாக கூறி காமராஜரின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டார்.
1948&ம் ஆண்டு கல்கத்தாவில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய இரண்டாவது மாநாடு நடைபெற்றது. அதில் இந்திய அரசை எதிர்த்து ஆயுதப்புரட்சியில் இறங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால், கம்யூனிஸ்ட் கட்சியை அரசு தடை செய்தது. கட்சியின் தலைவர்களையும் ஊழியர்களையும் கைது செய்யத் தொடங்கியது. இதனால், ஜீவா இலங்கை சென்று பி.ஜே.பிள்ளை என்ற பெயரில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் பீட்டர் கெனிமன் வீட்டில் இருந்தார்.
ஜீவா வந்திருக்கிறார் என்ற தகவலை அறிந்த இலங்கை தமிழ்ச் சங்கத்தினர், அவரை சங்கத்தில் பேச அழைப்புவிடுத்தனர். அங்கும் ஜீவாவின் பேச்சைக் கேட்க மக்கள் கூட்டம் அலைமோதியது. ஓராண்டுக்குப் பிறகு ஜீவா தமிழகம் திரும்பி தலைமறைவு வாழ்க்கையைத் தொடர்ந்தார்.
1949&ம் ஆண்டு ஜீவா மீண்டும் கைது செய்யப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் கம்யூனிஸ்ட்கள் துப்பாக்கியால் சுடப்பட்டனர். ஜீவாவும் தாக்குதலுக்கு ஆளானார்.
1952&ம் ஆண்டு சென்னை சட்டசபைக்கான பொதுத் தேர்தல் நடைபெற்றது. ஜீவா வடசென்னை வண்ணாரப்பேட்டை தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வுபெற்ற ஜீவா, சட்டமன்றத்தில் தமிழிலேயே பேசினார். முதன் முதலில் சட்டமன்றத்தில் தமிழில் பேசியவர் அவரே. சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பேசுவதற்கு நேரம் வரையறுக்கப்பட்டு இருந்தபோதும், ஜீவாவுக்கு மட்டும் அதிக நேரம் பேச அனுமதி வழங்கப்பட்டது. அவரது பேச்சில் அவ்வளவு உண்மையும் வசீகரமும் இருந்தன.
1953&ம் ஆண்டு முதலமைச்சர் ராஜகோபாலாச்சாரியார் குலக்கல்வித் திட்டத்தை அமல்படுத்தலானார். குலக்கல்வி திட்டம் என்பது ஆரம்பப் பள்ளி மாணவர்கள், காலை வேளையில் பாடங்கள் படிக்க வேண்டும். மாலை வேளையில் பெற்றோர் செய்யும் தொழிலை அடிப்படையாகக் கொண்ட வேலைகளைப் பழக வேண்டும். அதாவது, செருப்பு தைக்கிறவர் பிள்ளை செருப்பு தைக்கப் பழகவேண்டும். நாவிதரின் பிள்ளை முடிதிருத்தப் பழகிக்கொள்ள வேண்டும் என்பதுதான் குலக்கல்வி திட்டம். இந்தக் கல்வி முறை வர்ணாசிரமத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்தத் திட்டம் சட்டமன்றத்தில் விவாதத்துக்கு வந்தபோது பலத்த எதிர்ப்புக்கு உள்ளானது. ஜீவா, இந்தத் திட்டத்துக்கு எதிராக பேசினார். ஑இது மாணவர்களை சாதிய சிமிழுக்குள் அடைக்கும் முயற்சிஒ என்றார். ஆளுங்கட்சி அல்லாத அனைத்துக் கட்சிகளின் எதிர்ப்பாகவும் அது மாறியதால் திட்டம் கைவிடப்பட்டது.
1955&ம் ஆண்டு ஜீவா சென்னை பல்கலைக் கழகத்தின் செனட் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1959&ம் ஆண்டு ஑தாமரைஒ என்ற கலை இலக்கிய இதழை ஜீவா தொடங்கினர். பொதுவுடமை இலக்கியத்துக்கு அது ஒரு தூணாய் விளங்கியது. இன்றும் தாமரை வெளிவந்துகொண்டு இருக்கிறது.
சோவியத் யூனியன் மீது நீங்காத பற்றுக் கொண்டிருந்த ஜீவாவுக்கு அந்த நாட்டைப் பார்க்கும் பேறு கிட்டியது. 1962&ம் ஆண்டு மாஸ்கோவில் நடைபெற்ற உலக சமாதானக் கவுன்சிலின் சர்வதேச மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜீவா ரஷ்யா சென்றார். மாநாடு முடிந்து, இந்தியா வந்த ஜீவாவுக்கு ஒரு பேரதிர்ச்சி காத்திருந்தது.
இந்தியா&சீனா எல்லைத் தகராறு முற்றி, அது எல்லைப் போராக வளர்ச்சி பெற்றிருந்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குள் இருந்த கருத்து வேறுபாடு தீவிரமடைந்திருந்த நேரம். அதாவது, கட்சிக்குள் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டுச் சேருவது, எதிர்ப்பது என்பது பற்றி கடுமையான விவாதம் ஏற்பட்டிருந்தது.
ஜீவா, சீனாவின் நடவடிக்கையை எதிர்த்து தீவிரமாகப் பிரசாரம் செய்து வந்தாலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குள் அப்போது இருந்துவந்த சூழல் ஜீவாவை மனதளவில் பெரிதும் பாதித்தது. அந்த நேரத்தில் எது நடக்கக் கூடாது என்று அவர் நினைத்தாரோ அது நடந்தேவிட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாக உடைந்தது.
இந்தக் காலகட்டத்தில்தான் ஜீவா, தனது முதல் மனைவி காங்கிரஸ் எம்எல்ஏ குலசேகரதாஸின் மகள் கண்ணம்மாவுக்குப் பிறந்த தனது மூத்த மகள் குமுதாவை சந்திக்கிறார். அது ஓர் அதிர்ச்சிகரமான ஆச்சர்யகரமான சந்திப்பு.
பிறந்த நாள் முதலாய் தாயை இழந்து, தந்தையின் இன்முகத்தைப் பார்க்காது இருந்த குமுதா அப்போதுதான் முதன்முறையாக தன் தந்தையைப் பார்க்கிறாள். அந்தநேரத்தில், ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் குமுதா படித்துக்கொண்டிருந்தாள்.
தாயை இழந்து, தாத்தாவின் வீட்டில் வளர்ந்து, தாயின் தந்தையையும் தாயையுமே பெற்றோர்களாக நினைத்து வந்த குமுதாவுக்கு 17 வயதுக்குப் பிறகுதான், தான் பிறந்தவுடனே தாயை இழந்ததையும், தனது தந்தை பொதுவுடமைத் தலைவர் ஜீவாதான் என்பதையும் நண்பர்கள் வாயிலாகவும் உறவினர்கள் வாயிலாகவும் அறிகிறாள். அதன்பின்னர் தந்தையை காணவேண்டும் என்ற ஆவல் அவளுக்கு மேலிடுகிறது.
நெடுநாளாக தந்தையை பார்க்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டே கனவில் இருக்கிறாள். கனவு ஒருநாள் பலிக்கிறது.
ஆசிரியப் பயிற்சிப் பள்ளியிலிருந்தவள் தந்தையை பார்த்துவிடுவதென்று தீர்மானிக்கிறாள். சரி, அதற்கு என்ன செய்வதென்று யோசித்தவள் ஑முதன்முறையாக தந்தையைச் சந்திக்கப் போகிறோம். தனியாக எப்படிப் போவது?ஒ என்று தயங்கி, உடன் தன் தோழியையும் அழைத்துக்கொண்டு ஑ஜனசக்திஒ அலுவலகத்திற்கு பயணப்படுகிறாள் உத்தமர் ஜீவாவின் மகள்.
அலுவலகத்தில் நுழைந்ததும் சிறிதுநேரம் தந்தைக்காக காத்திருப்பு...
தந்தை வருகிறார்...
அவருக்கோ இவர்கள் யார் என்றே தெரியாது.
பார்த்தார் இருவரையும்...
஑யாரம்மா... என்ன வேண்டும்?ஒஒ என்று குமுதாவின் தோழியைப் பார்த்து ஜீவா கேட்கிறார்.
அதற்கு அவள், ஆசிரியப் பயிற்சிப் பள்ளியில் இருந்து வருவதாகவும். அவரை பார்க்க வந்திருப்பதாகவும் ஜீவாவிடம் கூறுகிறாள்.
ஜீவா மீண்டும் முதல் கேள்வியையே குமுதாவிடமும் கேட்கிறார்.
குமுதா ஜீவாவைப் பார்க்கிறாள். அழுகிறாள்...
஑என்னம்மா என்ன வேண்டும். ஏன் அழுகிறாய்...ஒ என்று ஜீவா கேட்கிறார்.
பதில் சொல்ல வாயெடுத்தாலும், இத்தனை ஆண்டுகாலமாக தந்தையை பார்க்காது இருந்த மகளுக்கு முதன்முறையாக அவரைப் பார்த்ததும் துக்கம் தொண்டையை அடைத்துவிட்டது.
தன் மகளிடம்தான் பேசிக்கொண்ரு இருக்கிறோம் என்பதை அறியாத அப்பாவைப் பார்த்து, குமுதா விம்முகிறாள்...
பின்...
஑஑எனது தாத்தாவின் பெயர் & குலசேகரதாஸ், எனது அன்னையின் பெயர் & கண்ணம்மா, நான் உங்களின் மகள்ஒ என்று எழுதி, ஒரு துண்டு சீட்டை ஜீவாவிடம் நீட்டுகிறாள்.
அதைக் கண்ட ஜீவா துடிதுடித்துப்போய், கண்களில் நீர் சுரக்க பதில் சொல்ல முடியாமல் அதே துண்டு காகிதத்தில், ஑஑என் மகள்ஒஒ என்று எழுதுகிறார்.
பின், தந்தையும் மகளும் கண்ணிராலும் அன்பாலும் அளவளாவுகிறார்கள்.
அந்தக் குமுதாதான் ஜீவாவின் இறுதிக் காலம் வரை இருந்து அவரது உடலை பேணிக்காத்தவர். மேலும், இரண்டாவது மனைவியான பத்மாவதியின் மூலம் உமா, உஷா, மணிக்குமார் என்ற மூன்று பிள்ளைகள் ஜீவாவுக்கு.
1963&ம் ஆண்டு ஜனவரி 16&ம் நாள் ஜீவா ஜனசக்தி, தாமரை பத்திரிகைகளின் பணிகளை முடித்துவிட்டு, தாம்பரத்தில் உள்ள தனது குடிசைக்குத் திரும்புகிறார். மறுநாள் இரவு 11 மணியளவில் மார்பு வலியால் மயங்கி விழுந்துவிடுகிறார். அப்போது அவர் மனைவி பத்மாவதி உடன் இல்லை. கடலூரில் கல்வி அதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்.
சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஜீவா மயக்கம் தெளிந்து, தான் மருத்துவமனையில் இருப்பதை தன் மனைவிக்கும் காமராஜருக்கும் தெரிவிக்கும்படி சொல்லிவிட்டு சற்றுக் கண்ணயர்ந்தவர் அப்படியே தூங்கிவிட்டார்.
மறுநாள்,
஑ஐயோ... என்ன ஆனது..? ஜீவா போய்விட்டாரா..!ஒ என்று ஜீவாவின் மரணச் செய்தி கேட்ட தமிழகம் கண்ணீர் வடித்தது.
பிராட்வே(பாரிமுனை)யில் உள்ள சென்னை துறைமுகத் தொழிலாளர் சங்க அரங்கத்தில் பொது மக்கள் பார்வைக்காக ஜீவாவின் உடல் வைக்கப்பட்டிருந்தது. காட்டுத் தீ போல் பரவிய மரணச் செய்தியால் மக்களும் பல்வேறு கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் ஜீவாவுக்கு அஞ்சலி செலுத்த ஓடோ டி வந்தனர்.
இறுதி ஊர்வலத்தில் மக்கள் அலைகடலென திரண்டனர். கலைஞர்கள், எழுத்தாளர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என்று பாகுபாடற்று பலரும் ஜீவாவின் உடல் அடக்கத்துக்கு வந்திருந்தனர்.
ஜீவா பலருடன் கொள்கை முரண்பாடு கொண்டிருந்த போதிலும்கூட, இறுதிவரை அவர் யாருடனும் மனதளவில் வருத்தம் கொண்டிருக்கவில்லை. எல்லோரிடத்திலும் அன்பு செலுத்துவதையே அவர் விரும்பினார்.
அவரது மரணத்தை தாங்க முடியாத எழுத்தாளர்கள், கவிஞர்கள் எழுத்தஞ்சலி செலுத்தினர். புரட்சிக் கவி பாரதிதாசனோ தன் வாஞ்சையான எழுத்தால், தேராதவர்களை உடல் தேற்றினார். ஆறாதவர்களை மனம் ஆற்றினார். அதனால், ஜீவன் போனாலும் ஜீவா போகவில்லை என்று சிலர் ஆறுதல் கொண்டனர்.
பாரதிதாசன் எழுதினார்...
஑஑தாங்கொண்ட கொள்கை தழைக்கப் பெரிதுழைப்பார்
தீங்குவரக்கண்டும் சிரித்திடுவார் & யாங்காணோம்
துன்பச் சுமை தாங்கி! சீவானந்தம் போன்ற
அன்புச் சுமை தாங்கும் ஆள்.ஒஒ

http://jeevainfo.blogspot.com/2008/10/blog-post.html

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.