Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் நாள் - கோவிட்-19: முதல் குற்றவாளி யார்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் நாள் - கோவிட்-19: முதல் குற்றவாளி யார்?

covid19  

ஆதி வள்ளியப்பன்

உலகமே தன் காலடியில் விழுந்து கிடக்கிறது என்று எப்போதும் இறு மாப்புடனே வலம்வரும் மனித குலம், ஒரு குட்டியூண்டு வைரஸிடம் இன்றைக்கு மண்டியிட்டுக் கிடக்கிறது. ஒரேயொரு முற்றுப் புள்ளிக்குள் லட்சக்கணக்கான வைரஸ்களை அடைத்துவிட முடியும். அதன்காரணமாகத்தான் அது வெறும் கண்களுக்குத் தெரிவதில்லை, மாயவித்தைக்காரன் போல் எளிதாகத் தொற்றி விடுகிறது. பிறகு நம் உடலை ஆட்டிப்படைத்து தன் கட்டுக்குள் கொண்டு வந்துவிடுகிறது. மனித குலம் பூவுலகின் முதலாளிகளாகப் பிரகடனம் செய்ய முடியாது என்பது, மீண்டும் ஒரு முறை தெளிவாகியிருக்கிறது.

சரி, இந்த நாவல் கரோனா வைரஸை யார் கண்டுபிடிச்சது, சற்று விளக்கமாகக் கேட்க வேண்டுமென்றால், நாவல் கரோனா வைரஸ் இப்படி உலகை ஆட்டிப் படைப்பதற்கு முதல் காரணம் யார்?

‘வூகான் இறைச்சிச் சந்தைக்கு வந்த அலங்கு (எறும்புத்தின்னி) அல்லது மரநாய்தான் காரணம்' என்று சிலர் சொல்லலாம்.

‘இல்லையில்லை, அவற்றுக்கு தொற்றுவதற்கு முன்பு வைரஸ் தேக்கியாக இருந்த வௌவால்தான் காரணம்' என்று வேறு யாரேனும் சொல்லலாம்.

‘எல்லாத்துக்குமே இந்த சீனாக்காரன்தான் சார் காரணம்' என்று பொத்தம்பொதுவாகவும் கூறலாம். ஆனால், இவை சரியான பதில்கள் தானா?

பழைய கதை

இந்தக் கேள்விக்கு விடை தேட சில நூற்றாண்டுகள் பின்னோக்கிச் செல்ல வேண்டும். நவீன அறிவியல், அதன் விளைவாகத் தொழிற்புரட்சி தொடங்கும்வரை, மனித குலம் இயற்கையை தன் முழு அடிமையாக பாவிக்கவில்லை. இயற்கை மீதான மதிப்பும், நுண்ணுணர்வும் எஞ்சியிருந்தன.

ஐரோப்பிய நாடுகளில் தொழிற்புரட்சி தொடங்கிய பின் முதலாளித்துவமும் நாடுகளை நிர்வகித்துவந்த அன்றைய அரசாட்சிகளும் லாபம் மீது பெருவெறி கொள்ளத் தொடங்கின. பெரிய பெரிய இயந்திரங்கள் உருவாக்கப்பட்டிருந்தன. அவற்றுக்கு மூலப்பொருள் எனும் தீனியைப் போட்டாக வேண்டும். அதற்காக இயற்கை வளமும் மனித வளமும் நிறைந்திருந்த ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளை காலனி ஆட்சியாளர்கள் அடிமைப்படுத்தத் தொடங்கினார்கள்.

அதன் தொடர்ச்சியாக இன்றைக்கு உலக மக்களில் பெரும்பாலோர் மேற்கத்தியம் புகுத்திய நவீன அறிவியலின் காலடியில் வீழ்ந்துகிடக்கிறோம். இந்த இடத்தில் நவீன அறிவியலுக்கும் அறிவியல் மனப்பான்மைக்கும் இடையிலான வேறுபாட்டைப் புரிந்துகொள்ள வேண்டும். அறிவியல் மனப்பான்மை என்பது அனைத்தையும் பகுத்தாராய்ந்து முடிவெடுக்கச் சொல்வது.

இந்த பகுத்தாராயும் பண்பு விலங்குகளுக்கு இல்லாததால்தான், அவை இயற்கையைக் கட்டுப்படுத்தாமல் இயைந்து, இணக்கமாக வாழ்கின்றன. அதேநேரம் பகுத்தாராயும் பண்பு இருந்ததால்தான் மனித குலம் உலகில் வேறு எந்த உயிரினமும் அடையாத வளர்ச்சியைப் பெற்றது. ஆனால், அதே பகுத்தாராயும் பண்பு சுயநலமாக, பக்கச்சார்புடையதாக மாறும்போது அதனுடன் சேர்ந்து பிரச்சினைகளும் பூதாகரமாகத் தொடங்கிவிடுகின்றன.

அறிவியல் யாருக்கானது?

நெருப்பையோ, சக்கரத்தையோ கண்டறிந்த நம் மூதாதையர் அதை தனி உடைமையாகவோ, லாபம் தரும் ஒரு பொருளாகவோ பார்க்க வில்லை. அனைவருக்கும் அந்த அறிவைப் பகிர்ந்துகொண்டதன் விளைவாகவே மனித குலம் அடுத்தடுத்த வளர்ச்சி கட்டங்களை நோக்கி நகர்ந்தது. ஆனால், இன்றைக்கு அறிவைப் பகிர்ந்துகொள்வது லாபத்தைப் பறித்துவிடும் என்று தடுக்கப்படுகிறது அல்லது புதிய கண்டுபிடிப்புகள் விற்பனைப் பண்டமாக மாற்றப்படுகின்றன.

மேற்கத்திய அறிவியல் அனைத்துத் துறைகளிலும் தன் ஆராயும் பார்வையைச் செலுத்தியது என்றாலும், காலனி ஆதிக்கக் காலம் முதல் இன்றுவரை நவீன அறிவியல்-தொழில்நுட்ப வளர்ச்சிகள் பெரும்பாலும் லாபத்துக்கு மட்டுமே விற்பனை செய்யப்பட்டுவருகின்றன. அவை பொது நன்மைக்காக முழுமையாகப் மாற்றப்படுவதில்லை. அது மட்டுமல்லாமல் தொழில்நுட்பமும், அது சார்ந்த பெரும் தொழிற்சாலைகளும் மட்டுமே உலகை ரட்சிக்க வந்த ஒரே அறிவியல் பிரிவு என்பது போன்றதொரு மாயை திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தக் காரணங்களின் பின்னணியில் தொழிற் புரட்சியின் தொடக்கக் காலத்தில் அழிக்கப்படத் தொடங்கிய காடுகள் இன்றுவரை இடைவெளி இல்லாமல் கபளீகரம் செய்யப்பட்டுவருகின்றன. 93 லட்சம், கிட்டத்தட்ட 1 கோடி ஏக்கர் காடு, அதாவது ஸ்விட்சர்லாந்து நாட்டின் பரப்பளவுள்ள காடு 2019-ல் அழிக்கப்பட்டிருக்கிறது.

காட்டைச் சுற்றிச் செல்லும் சாலைகள் நம்மை அயர்ச்சி அடைய வைக்கின்றன. ஒரு தாளில் சிறு கோட்டை வரைவதைப் போல் காட்டுக்குள் ஒரு சாலை, பாலம், ரயில்பாதை போன்றவற்றை அமைப்பது நமக்கு அத்தியாவசியத் தேவை என்பதுபோல் மாற்றப்பட்டுவிட்டது. இவ்வளவு காலம் சுற்றி சென்றுவந்திருந்தாலும் இப்போது வேகமே நம்முடைய ஒரே தாரக மந்திரம். தாமதமாகப் போனால் லாபம் குறைந்துவிடும், வளர்ச்சியில் பின்தங்கிவிடுவோம் என்று பொருளாதார மேதாவிகள் அச்சுறுத்துவார்கள்.

மற்றொருபுறம் காடுகளுக்குள் உறங்கிக் கிடக்கும் மரங்கள், கனிமங்கள் பெருமுதலாளி கள், அரசியல்வாதிகளின் கண்களை உறுத்திக்கொண்டே இருக்கின்றன. கனிமங்கள் காட்டுக்குள் உறங்குவதால் யாருக்கு லாபம்? எடுத்து விற்றால் தானே அனைவருக்கும் உணவிட முடியும் என்று அரசியல்வாதிகள் இனிப்பு தடவிப் பேசுவார்கள்.

காடு அழிப்பு அமைச்சகம்

கோவிட்-19 நெருக்கடி காலத்திலும் மத்திய சுற்றுச்சூழல்-காடு அமைச்சகம் ஒரேயொரு பொத்தானை அழுத்தி 30 கன்னிக் காடுகளை அழிப்பதற்கான அனுமதியை சில மணி நேரத்தில் கொடுத்தி ருக்கிறது. இந்தக் காடுகளை அழிப்பதற்கான விலையை ஒரு வேளை நாம் நேரடியாகவோ முழுமையாகவோ கொடுக்காவிட்டாலும்கூட, நம் சந்ததிகள் நிச்சயம் கொடுக்கத்தான் போகிறார்கள். நம் சொத்து நம் சந்ததிகளுக்குப் போவதுபோல், நாம் மேற்கொள்ளும் அழிவின் பலனும் அவர்களைத்தானே சென்று சேரும். காலனி ஆதிக்க வனத்துறையைப் போல் காடுகளை அழிப்பதற்கும், காடழிப்புக்குக் கதவைத் திறந்துவிடுவதாகவும் சுற்றுச்சூழல்-காடு அமைச்சகம் செயல்பட்டுவருகிறது.

மத்திய அரசுத் தரவுகளின்படி கடந்த 30 ஆண்டுகளில் 23,716 தொழிற்சாலை திட்டங்களுக்காக 14,000 சதுர கிலோமீட்டர் காடு அழிக்கப்பட்டிருக்கிறது. இது நாகாலாந்து மாநிலத்தின் பரப்புக்கு இணையானது. ஒரு நாடு ஆரோக்கியமாக இருப்பதற்கு மூன்றில் ஒரு பங்கு காடாக இருந்தாக வேண்டும். இந்தியா 22 சதவீதத்தைத் தொடவே தடுமாறுகிறது. இத்தனைக்கும் உலக அளவில் அதிக காடுகளைக் கொண்ட 10-வது நாடு இந்தியா என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

15914168022958.jpg

நஷ்டமும் வருமல்லவா!

இப்படியாக இந்தியா மட்டுமின்றி உலகெங்கும் காடுகள் கட்டுமீறி அழிக்கப்படு கின்றன. அங்கு யுகம்யுகமாய் இயற்கையோடு ஊடாடி தன் உணவையும் வாழ்க்கையையும் தகவமைத்துக்கொண்டு வெற்றிகரமாக வாழ்ந்து வரும் தாவர, உயிரினங்களை மனிதர்களின் மின் ரம்பங்களும் புல்டோசர்களும் ஒரு சில மணி நேரங்களில் அறுத்தும் நசுக்கியும் போட்டுவிடுகின்றன. இப்படிக் காடுகள் அழிக்கப்படுவதால், ஏற்படும் விளைவுகளைப் பற்றி நாம் கவலைப்படுவதில்லை.

அதனால் கிடைக்கும் மூலதனமற்ற லாபத்தில் மட்டுமே கண்ணாக இருக்கிறோம். ஓர் அம்சம் அல்லது ஒரு பொருள் வியாபாரமாக-லாபமாக மட்டுமே பார்க்கப்படும்போது, அதில் நஷ்டத்துக்கான கூறுகளும் இருக்கத்தானே செய்யும். அந்த நஷ்டம்தான் நாவல் கரோனா வைரஸ் போன்ற வடிவத்தில் நம்மைத் துரத்திக்கொண்டிருக்கிறது. காடழிப்பு, உயிரினங்களைத் தொந்தரவுக்கு உள்ளாக்குவதற்கும் இதுபோன்ற பெருந்தொற்று மனிதர்களிடையே பரவுவதற்கும் இடையே நேரடித் தொடர்பு இருக்கிறது.

எந்த வௌவாலும் மரநாயும் தானாக வைரஸை பரப்புவதில்லை. அவற்றின் உடலில் உள்ள வைரஸ் மரபணு திடீர்மாற்றம் (Mutation) அடையாமல் நம் மீது தொற்றவும் முடியாது. காடுகளை அழிப்பதன் மூலம், இந்த உயிரினங்களை நாம் நெருங்கிச் செல்கிறோம் அல்லது அவை வேறு வழியில்லாமல் ஊர்களை நோக்கி நகர வழிவகுக்கிறோம். பிறகு மனிதர்களுக்கு எல்லாமே பிரச்சினையில் சென்று முடிகிறது. உலகில் இதுவரை மோசமான பாதிப்புகளை ஏற்படுத்திய பெரும்பாலான கொள்ளைநோய், பெருந்தொற்றுகளின் மூலகாரணம் காடுகளின் மீது மனிதர்கள் இடை விடாது கைவைத்துக்கொண்டே இருப்பதுதான்.

யார் காரணம்?

இப்போது நாம் மீண்டும் தொடக்கக் கேள்விக்கு வருவோம். நாவல் கரோனா வைரஸ் என்ற தூங்கிக்கொண்டிருந்த பூதத்தை தட்டியெழுப்பியது யார்? வௌவாலா, அலங்கா, மரநாயா? நிச்சயமாக ஒரு உயிரினமோ, நிகழ்வோ இதற்குக் காரணமில்லை. தன்னிச்சையாக எதுவும் நடைபெறவும் இல்லை. கடந்த ஆண்டின் இறுதியில் கோவிட்-19 நோய்த்தொற்று தொற்றத் தொடங்கியதற்கும், இன்றைக்கு அது கணக்கு வழக்கில்லாமல் பரவிவருவதற்கும், நாளை அது ஏற்படுத்தப் போகும் பாதிப்புகளுக்கும் ஒரேயொரு காரணம் மட்டுமே நம்முன் இருக்கிறது. அந்த முதல், கடைசி குற்றவாளிகள், மனிதர்களான நாம்தான். நம் போக்கை நாம் மாற்றிக்கொள்ளாதவரை, நமக்கு இருக்கும் ஆபத்தும் நிச்சயமாகத் தன் போக்கை மாற்றிக் கொள்ளாது என்பது மட்டுமே நிரந்தர உண்மை.

 

https://www.hindutamil.in/news/supplements/uyir-moochi/558104-covid19-6.html

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.