Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் நாட்டுக்கு மதுரையை இரண்டாவது தலைநகரமாக்குவது சாத்தியமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டுக்கு மதுரையை இரண்டாவது தலைநகரமாக்குவது சாத்தியமா?

  • முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பிபிசி தமிழ்
மதுரையை இரண்டாம் தலைநகரமாக்குவது சாத்தியமா?

Getty Images

தென் தமிழகத்தின் முக்கிய நகரமான மதுரையை இரண்டாவது தலைநகரமாக்க வேண்டுமென மதுரையைச் சேர்ந்த ஆளும் அ.தி.மு.கவைச் சேர்ந்த அமைச்சர்கள் கூறிவருகின்றனர். ஆனால், இந்தத் திட்டம் சாத்தியமான ஒன்றா?

சில நாட்களுக்கு முன்பாக தமிழகத்தின் இரண்டாவது தலைநகரமாக மதுரையை ஆக்க வேண்டும் என்று ஆளும் அ.தி.மு.கவின் கிழக்கு மாவட்டச் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மதுரையை தமிழ்நாட்டின் இரண்டாவது தலைநகரமாக ஆக்கினால், தென் மாவட்டங்கள் வளம்பெறும் என்று தெரிவித்தார்.

மதுரையைச் சேர்ந்த மற்றொரு அமைச்சரான செல்லூர் ராஜுவும் இந்த யோசனையை வலியுறுத்தினார். இதையடுத்து மதுரையைச் சேர்ந்த வணிகர் சங்கங்களும் இதனை ஆதரித்தன. 

அ.தி.மு.கவின் கிழக்கு மாவட்டத்தால் வலியுறுத்தப்பட்டு, வருவாய்த் துறை அமைச்சரால் முன்வைக்கப்படும் இரண்டாம் தலைநகரம் என்பதற்கு என்ன பொருள்? சென்னையில் இருப்பது போல ஒரு தலைமைச் செயலகம், சட்டப்பேரவை ஆகியவற்றை மதுரையிலும் உருவாக்க வேண்டுமா? 

இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் விதத்தில் பிபிசியிடம் விரிவாகப் பேசிய அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மதுரையில் ஒரு 'administrative block' ஒன்றை உருவாக்க விரும்புவதாகச் சொன்னார். 

"அதாவது ஒரு நிர்வாக நகரத்தை உருவாக்க வேண்டுமெனச் சொல்கிறேன். தற்போது எல்லா அனுமதிகளுக்கும் சென்னைக்குச் சென்றுகொண்டிருக்க வேண்டியிருக்கிறது. இதன் காரணமாகவே, சென்னையைச் சுற்றியே தொழிற்சாலைகள் உருவாகிவருகின்றன. பிற மாவட்டங்களில் தொழிற்சாலைகளைத் துவங்க எவ்வளவோ சலுகைகளை அளித்தும் எல்லோருமே சென்னைக்கு அருகிலேயே தொழிற்சாலைகளைத் துவங்க விரும்புகின்றனர். கன்னியாகுமரியில் வசிக்கும் ஒருவர்கூட அனுமதிகளுக்காக சென்னைக்கு வர வேண்டியிருக்கிறது. 

இதனால் தமிழ்நாட்டின் பிற பகுதிகள் சென்னையைவிட 10 ஆண்டுகள் பின்தங்கியிருக்கின்றன. தமிழ்நாடு அரசில் உள்ள 56 துறைகளுக்குமான முக்கிய முடிவுகள் சென்னையிலேயே எடுக்கப்படுகின்றன. 

நாங்கள் முன்வைப்பது என்னவென்றால் மதுரையை ஒட்டியுள்ள மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் தொடர்பான முடிவுகளை, அனுமதிகளை பெறும் வகையில் ஒரு நிர்வாக நகரத்தை அமைக்க வேண்டும். தொழிற்சாலைகளுக்கான அளவீடுகள் மதிப்பீடுகளுக்கு சென்னைக்கு வர வேண்டியதில்லை என்ற நிலையை ஏற்படத்த வேண்டும்" என தாம் முன்வைக்கும் இரண்டாவது தலைநகரம் திட்டத்தை விவரித்தார் ஆர்.பி. உதயகுமார்.

மதுரையை இரண்டாம் தலைநகரமாக்குவது சாத்தியமா?

 

சென்னைக்கு மாற்றாக மற்றொரு தலைநகரத்தை முன்வைத்து ஒரு விவாதம் 80களிலேயே துவங்கிவிட்டது. 80களின் துவக்கத்தில் எம்.ஜி. ராமச்சந்திரன் முதல்வராக இருந்தபோது, தலைநகரத்தை சென்னையிலிருந்து திருச்சிக்கு மாற்றும் திட்டத்தை பரிந்துரைத்தார். தமிழ்நாட்டில் எல்லாப் பகுதிகளில் இருந்தும் திருச்சியை வந்தடைந்துவிடலாம் என்ற எண்ணத்திலும் சென்னையில் அதிகரித்துவரும் நெருக்கடியை மனதில் வைத்தும் இந்தத் திட்டம் முன்வைக்கப்பட்டது. ஆனால், அது நடைமுறைக்கு வரவில்லை. 

அதற்குப் பிறகு கோயம்புத்தூர், திருச்சி, மதுரையில் சர்வதேச விமான நிலையங்கள், மதுரையில் உயர் நீதிமன்றத்தின் அமர்வு என வசதிகள் பரவலாக்கப்பட்ட பிறகு இந்தக் கோரிக்கை பெரிதாக எழவில்லை. இந்த மூன்று பெரிய நகரங்களிலும் உள்ள வசதிகளை மேம்படுத்த வேண்டுமென்ற கோரிக்கைகள் மட்டும் எழுந்தவண்ணம் இருந்தன.

அ.தி.மு.க. அமைச்சர்கள் வைத்த கோரிக்கையை அடுத்து, மதுரையில் உள்ள வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பான சேம்பர் ஆஃப் காமர்ஸ் இந்தத் திட்டத்தை வலியுறுத்த ஆரம்பித்திருக்கிறது.

"நாகர்கோவிலில் வசிக்கும் ஒருவர் எந்த ஒரு திட்டத்திற்கும் ஒப்புதல் வாங்க வேண்டுமானால் 800 கி.மீ. பயணம் செய்ய வேண்டியிருக்கிறது. தமிழ்நாட்டில் எந்த ஒரு இடத்திலும் 25,000 சதுர அடிக்கு மேல் கட்டடம் கட்ட வேண்டுமானால் சென்னையில்தான் அனுமதி பெற வேண்டியிருக்கிறது. தமிழ்நாட்டில் வட பகுதியிலும் மேற்குப் பகுதியிலும் உள்ள வளர்ச்சி தெற்குப் பகுதியில் இல்லை. இதற்குத் தீர்வாக, மதுரையை இரண்டாம் தலைநகரமாக்கி, சில அதிகாரங்களை பகிர்ந்துகொள்ளலாம். இதனால், சென்னையில் நெரிசல் குறையும்" என்கிறார் மதுரை சேம்பர் ஆஃப் காமர்சின் தலைவரான ஜெகதீசன்.

தமிழ்நாட்டின் வடக்கு, மேற்கு மாவட்டங்களை ஒப்பிட்டால் தென்மாவட்டங்களில் தொழிற்சாலைகளும் வேலை வாய்ப்புகளும் குறைவுதான். தென் தமிழகத்தில் ஏற்பட்ட தொடர் ஜாதி கலவரங்களை அடுத்து 1997ல் அமைக்கப்பட்ட நீதியரசர் மோகன் ஆணையம், தென் மாவட்டங்களில் வேலைவாய்ப்புகள் இல்லாததே, ஜாதிக் கலவரங்கள் அதிகம் நடப்பதற்குக் காரணம் என்று குறிப்பிட்டது.

மதுரையில் உயர்நீதிமன்றத்தின் கிளை செயல்பட்டுவரும் நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பாக மதுரை விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக தரமுயர்த்தப்பட்டது. விமான நிலையத்தின் ஓடுபாதையை மேலும் நீளமாக்கும் முயற்சிகளும் நடந்துவருகின்றன. எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகளும் நடந்து வருகின்றன. ஆகவே, ஒரு தலைநகருக்கான தகுதி மதுரைக்கு இருப்பதாக ஜெகதீசன் சொல்கிறார். 

"மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் கீழ் 14 மாவட்டங்கள் இருக்கின்றன. இந்தப் பதினான்கு மாவட்டங்களில் தமிழ்நாட்டின் மூன்றில் ஒரு பகுதி மக்கள் வசிக்கிறார்கள். ஆனால் தொழில்வளர்ச்சிக்கான எந்த நடவடிக்கையும் இல்லை. மதுரை - தூத்துக்குடி இன்டஸ்ட்ரியல் காரிடார் திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால், நடைமுறைக்கே வரவில்லை. மதுரையை இரண்டாவது தலைநகரமாக அறிவித்தால், இவையெல்லாம் மாறும் வாய்ப்பு இருக்கிறது" என்கிறார் ஜெகதீசன்.

மதுரையை இரண்டாம் தலைநகரமாக்குவது சாத்தியமா?
 

தமிழ்நாட்டின் பெரிய மாநகராட்சிப் பகுதிகளில் ஒன்றான மதுரை, சுமார் பதினான்கு லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட நகரம். ஆனால், மதுரை நகரத்தைப் பொறுத்தவரை மிகவும் நெரிசலான தெருக்களையும் சாலைகளையும் கொண்ட ஒரு பகுதி. இதனால், மதுரை விரிவாக்கம் குறித்து பேசும்போதெல்லாம் நகரம் இன்னும் நெரிசலாகும் என்ற அச்சம் வருவதைத் தவிர்க்க முடியாது. தவிர, நிர்வாக அலுவலகங்கள், அதை ஒட்டி ஏற்படும் தொழில்வளர்ச்சி ஆகியவற்றுக்குத் தேவைப்படும் நிலம் குறித்த கவலைகளும் இருக்கின்றன.

"மதுரையிலிருந்து தூத்துக்குடி செல்லும் வழியில் 30,000 ஏக்கர் வரை நிலமெடுக்கலாம். திருநெல்வேலி - மதுரை செல்லும் பாதைகளிலும் நிறைய வானம் பார்த்த பூமி உண்டு. இது டெல்டா பிரதேசமல்ல. ஆகவே வளமான பகுதிகள் இங்கு குறைவு. ஆகவே நிலம் ஒரு பிரச்சனையே இல்லை" என்கிறார் ஜெகதீசன்.

ஆனால், இது உண்மையிலேயே மதுரையின் வளர்ச்சிக்காக எழுப்பப்படும் கோரிக்கைதானா என்ற கேள்வியை எழுப்புகிறார் மதுரை மத்தியத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன். 

"ஆழ்ந்த முன்யோசனையுடன் இந்தத் திட்டத்தை அவர்கள் முன்வைத்திருந்தால் நாமும் அதைத் தீவிரத்துடன் விவாதிக்கலாம். அ.தி.மு.கவில் உள்ள 60 மாவட்டங்களில் ஒரு மாவட்டச் செயற்குழு நிறைவேற்றிய தீர்மானம் இது. மறைந்த முதல்வர் ஜெ. ஜெயலலிதா முன்வைத்த 'விஷன் ஸ்டேட்மென்ட் 2023'ஐ முழுமையாகப் படித்திருந்தால், இப்படி ஒரு யோசனையையே முன்வைத்திருக்க மாட்டார்கள். அந்த திட்ட ஆவணத்தில், 2023க்குள் தமிழ்நாட்டில் சர்வதேசத் தரத்துடன் பத்து நகரங்களை உருவாக்க வேண்டுமெனக் கூறப்பட்டிருந்தது. 

அதைப் பற்றி எதுவும் பேசாமல் இப்படி ஒரு யோசனையை முன்வைக்கிறார்கள். மதுரையை இரண்டாவது தலைநகரமாக்குவது குறித்து அமைச்சரவைத் தீர்மானம் ஏதும் நிறைவேற்றியிருக்கிறதா,கொள்கை முடிவு எடுக்கப்பட்டிருக்கிறதா? எதுவும் இல்லை. முக்கியப் பிரச்சனைகள் குறித்து மக்களைத் திசை திருப்பவே இப்படி சொல்கிறார்கள்" என்கிறார் பழனிவேல் தியாகராஜன்.

மதுரையை இரண்டாம் தலைநகரமாக்குவது சாத்தியமா?

தமிழக முதலமைச்சரிடம் இது குறித்துத் தெரிவிக்கப்பட்டுவிட்டதா என்று ஆர்.பி. உதயகுமாரிடம் கேட்டபோது, இப்போதுதான் தீர்மானம் போடப்பட்டிருக்கிறது; அரசிடம் விரைவில் சொல்வோம் என்று தெரிவித்தார் அவர். 

தற்போதைய சூழலில் இது சாத்தியமே இல்லாத யோசனை என்கிறார் பழனிவேல் தியாகராஜன். "மாநில அரசு ஏற்கனவே பெரும் நிதி நெருக்கடியில் இருக்கிறது. கடந்த நான்கு மாதத்தில் 37 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கியிருக்கிறார்கள். 85 ஆயிரம் கோடி பற்றாக்குறை வரவிருக்கிறது. ஆகவே திட்டச் செலவுகளை, முதலீட்டுச் செலவுகளைக் குறைக்க வேண்டுமென்ற ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டாலும் அவற்றைக் கவனத்தில் கொள்ளாமல் டெண்டர்கள் விடப்பட்டுக்கொண்டேயிருக்கின்றன. இப்படியே சென்றால் ஒரு லட்சம் கோடி ரூபாய் பற்றாக்குறை ஏற்படும். இந்தச் சூழலில் இரண்டாம் தலைநகரை உருவாக்க முடியுமா?" எனக் கேள்வியெழுப்புகிறார் அவர்.

இம்மாதிரி ஒரு இரண்டாம் தலைநகரை உருவாக்க திட்டமிடலுக்கே ஒரு வருடம் தேவைப்படும். ஆனால், இந்த ஆட்சியில் இன்னும் 8 மாதங்களே மீதமிருக்கின்றன; உண்மையிலேயே இம்மாதிரி யோசனை இருந்தால் 9.5 ஆண்டுகளாக சும்மா இருந்தது ஏன் என்கிறார் பழனிவேல் தியாகராஜன்.

"நாங்கள் முன்வைக்கும் கோரிக்கை நியாயமானதா இல்லையா என்பதை மட்டும்தான் பார்க்க வேண்டும். எப்போது முன்வைக்கிறோம் என்பது முக்கியமல்ல" என பதிலளித்தார் ஆர்.பி. உதயகுமார். 

வரும் வெள்ளிக்கிழமையன்று தென் தமிழக தொழில் வர்த்தக சங்கத்தைச் சேர்ந்த தொழில்துறையினரும் வர்த்தகர்களும் மதுரையில் இது தொடர்பான கூட்டம் ஒன்றை நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளனர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தலைநகர் விவாதம்: 1981 முதல் இன்று வரை!

spacer.png

 

தமிழகத்தில் இரண்டாவது தலைநகர் என்கிற கோரிக்கை அவ்வப்போது எழுவதும் அடங்குவதுமாக இருந்து கொண்டிருக்கிறது. 1981 ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் தேதி அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர், மாநிலத்தின் தலைநகர் சென்னையிலிருந்து திருச்சிக்கு மாற்றப்பட வேண்டும் என்று கூறியதை ஒட்டுமொத்த தமிழகமே திரும்பிப் பார்த்தது. கோரிக்கைகளுக்காக பொதுமக்கள் நீண்ட தூரம் அலைச்சலுடன் பயணித்து சென்னையிலுள்ள அலுவலகங்களில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை சந்திக்க வேண்டியிருக்கிறது என்பதை சுட்டிக்காட்டி, தலைநகர் மாநிலத்தின் மையப் பகுதியில் இருக்க வேண்டும் என்று கூறினார். அவரைப் பொறுத்தவரை அது திருச்சியாக இருந்தது.

அந்த சமயத்தில் தலைநகரை மாற்றும் முடிவுக்கு பல பகுதிகளில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரான ராம்ஜெத்மலானி, ‘மனித உடலின் மிக முக்கிய பகுதியான மூளை மையப் பகுதியில் இல்லை. அது தலையின் உச்சியில் இருக்கிறது’ என்று கூறி எம்.ஜி.ஆரின் முடிவை எதிர்த்தார்.

1981-82 காலகட்டத்தில் சென்னையில் கடுமையான குடிநீர் நெருக்கடியை ஏற்படுத்திய வறட்சி நிலைமையை காரணம் காட்டி திருச்சியை தலைநகராக மாற்றுவதற்கான திட்டத்தினை முன்னெடுத்தார் எம்.ஜி.ஆர். தலைநகர் விவகாரம் தொடர்பாக அப்போதைய திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி மற்றும் எம்.ஜி.ஆர் இடையே கடும் வார்த்தைப் போர் மூண்டது. சென்னையில் வறட்சி நிவாரணம் மற்றும் நீர் வழங்கல் நடவடிக்கைகளுக்காக கிட்டத்தட்ட 500 கோடி ரூபாய் செலவிடுவதற்கு பதிலாக, அந்த பணத்தை வைத்து திருச்சியை தலைநகராக்கிவிடலாம் என எம்.ஜி.ஆர் பரிந்துரைத்தார்.

ஆனால் திருச்சியை தலைநகராக்க குறைந்தது 1,000 கோடி ரூபாய் செலவாகும் என்று குறிப்பிட்ட கருணாநிதி, “வறட்சி நிவாரணத்திற்காக 50 கோடி செலவிட முடியாத அரசு, புதிய தலைநகருக்காக 1,000 கோடி ரூபாயை எப்படி செலவிடும்” என்று கேள்வி எழுப்பினார். மேலும், எம்.ஜி.ஆர் இந்த திட்டத்தில் தீவிரமாக இல்லை, அந்த நேரத்தில் அரசாங்கத்திற்கு எதிரான பிரச்சினைகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து கவனத்தை திசை திருப்ப விரும்புகிறார் என்றும் குற்றம்சாட்டினார்.

 

துறைமுக வசதிகளைப் பெற கடற்கரைக்கு அருகில்தான் தலைநகரம் இருக்க வேண்டும் என்று சிலர் வாதிட்டபோது “அமெரிக்க தலைநகர் வாஷிங்டன், இந்திய தலைநகர் டெல்லி ஆகிய இடங்களில் துறைமுகங்கள் இல்லை” என்று விளக்கினார் எம்.ஜி.ஆர். தலைநகர் சென்னையில் ஆளும் கட்சியான அதிமுகவிற்கு ஏற்பட்ட தொடர் தோல்விகளும், திமுகவின் வெற்றியும்தான் சென்னையிலிருந்து தலைநகரை மாற்றுவதற்கான எம்.ஜி.ஆரின் உண்மையான காரணம் என்றும் ஒருபக்கம் பேசப்பட்டது.

எனினும், எம்.ஜி.ஆர் தனது திட்டத்தில் விடாப்பிடியாக முன்னேறிச் சென்றார். திருச்சியின் புறநகர் பகுதியான நவல்பட்டில் அரசாங்கத்திற்கு நிலம் உறுதி செய்யப்பட்டதால் தலைநகருக்கு அப்பகுதி அடையாளம் காணப்பட்டது. திருச்சி வந்தால் எம்.ஜி.ஆர் தங்குவதற்கு, உறையூர் கோணக்கரையில் பங்களாவும் கட்டப்பட்டது. ஆனால், இறுதியில் அரசிற்கு வேறு சில பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்ததால் இந்த யோசனை கைவிடப்பட்டது. 1984 ஆவது வருடம் எம்.ஜி.ஆருக்கு உடல்நலமில்லாமல் போனது, பிரதமர் இந்திரா காந்தியின் இறப்பு, தேர்தல் போன்ற காரணங்களால் தலைநகர் திட்டத்தினை நிறைவேற்ற முடியவில்லை.

spacer.png

இதுபோல முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைநகரை சென்னையிலிருந்து செங்கல்பட்டு மாவட்டத்திற்கு மாற்ற முடிவு செய்தார். இதற்காக கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள திருவிடந்தை பகுதியில் நிலங்கள் அடையாளம் காணப்பட்டது. ஆனால், சில மாதங்களிலேயே அத்திட்டம் கைவிடப்பட்டது. 2015ஆம் ஆண்டு பெருமழை, வெள்ளத்தால் சென்னை முழுவதும் மிகவும் பாதிக்கப்பட்ட நேரம், மீண்டும் இரண்டாவது தலைநகரம் அமைக்க வேண்டும் என்ற விவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது இரண்டாவது தலைநகர் கோரிக்கை மீண்டும் உயிர்பெற்றுள்ளது.

தென் மாவட்ட மக்களின் நலன் கருதி மதுரையை தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக அறிவிக்க வேண்டுமென அமைச்சர் உதயகுமார் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எம்.ஜி.ஆரும் மதுரையை தலைநகராக்க விரும்பியதாக கூறி அமைச்சர் செல்லூர் ராஜு இதனை வழிமொழிந்தார்.

இரண்டாவது தலைநகரமாக திருச்சியை ஆக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை எழுப்பி வரும் திருச்சி மக்களுக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திருச்சி மாவட்ட அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ப.குமார், மு.பரஞ்சோதி ஆகியோர் திருச்சியையே இரண்டாவது தலைநகராக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

spacer.png

இந்த நிலையில் திருச்சியை தலைநகராக்க வேண்டும் என அப்போதே இயக்கங்களை நடத்தியவரும், திருச்சியை தன்னுடைய பெயரிலேயே சுமந்துகொண்டிருப்பவருமான காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமியிடம் மின்னம்பலம் சார்பாக சில கேள்விகளை முன்வைத்தோம்.

“இரண்டாவது தலைநகர் திருச்சியா அல்லது மதுரையா என முடிவு செய்ய வேண்டியது அரசாங்கம்தான். அதிமுகவின் நிறுவனர் எம்.ஜி.ஆர் திருச்சிதான் தலைநகருக்கு சரியான இடம் என முடிவு செய்து அந்த காலத்திலேயே கூறினார். எம்.ஜி.ஆர் சொன்னதை அவருடைய வழித் தோன்றலான இப்போது இருக்கும் அதிமுக அமைச்சரவை ஏற்றுக்கொள்கிறதா அல்லது எம்.ஜி.ஆர் திருச்சியை தவறாகச் சொல்லிவிட்டார் என்று கூறுகிறார்களா” என்று ஆரம்பத்திலேயே கேள்விகளால் நம்மை எதிர்கொண்டார்.

எம்.ஜி.ஆருடைய விருப்பம் மதுரையை இரண்டாவது தலைநகராக்க வேண்டும் என்பதுதான் என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தித்திருக்கிறாரே?

“அமைச்சர் செல்லூர் ராஜு மிகப்பெரிய பச்சை பொய்யை சொல்லியிருக்கிறார். தெர்மாக்கோலைக் கொண்டு தண்ணீர் ஆவியாதலை தடுத்து நிறுத்த முடியும் என்ற அசகாய சூரனிடம் இதைத் தவிர வேறு எந்த உண்மையையும் எதிர்பார்க்க முடியாது. திருச்சியைத்தான் தலைநகர் ஆக்க வேண்டும் என எம்.ஜி.ஆர் சொன்னது உலகத்துக்கே தெரிந்த உண்மை. அது மிகப்பெரிய விவாதமாக மாறியிருந்தது. அந்த சமயத்தில் செல்லூர் ராஜு அரசியலுக்கு வராமல் சினிமா கொட்டகைகளில் சீட்டு கிழித்துக் கொண்டிருந்திருப்பார்.”

கிட்டத்தட்ட ஆட்சி முடிய இன்னும் 9 மாதங்களே இருக்கும் சூழலில் 10 வருடங்களாக ஆட்சியில் இருந்தவர்கள், இப்போது ஏன் இந்த கோரிக்கையை முன்வைக்கிறார்கள்?

“இது பிரச்சினைகளை திசைதிருப்பும் ஒரு யுக்தியாகவே தெரிகிறது. காரணம், இன்றைக்கு தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களும் மிகக் கடுமையான சோதனையை எதிர்கொண்டுள்ளனர். தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில் குறைந்தபட்சம் இரண்டரை கோடி பேர் அன்றாட உணவுக்கே கஷ்டப்படும் சூழலுக்கு வந்துவிட்டனர். ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல முடியாத தர்மசங்கடமான நிலைமை இருக்கிறது. இந்த பாதிப்புகளில் இருந்து மீள இன்னும் எத்தனை நாட்கள் ஆகும் எனத் தெரியவில்லை. உணவுக்கு வழிசெய்யாத அரசு, இதுபோன்ற பிரச்சினைகளில் இருந்து திசைதிருப்புவதற்கு எடுத்துள்ள முயற்சி என்று நான் கருதுகிறேன். இவர்களின் நோக்கம் மதுரையை தலைநகராக்க வேண்டும் என்பதல்ல”

எந்த ஊரை தலைநகராக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?

“ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழ் இலக்கியங்களில் ஊர் எனப்படுவது உறையூர்தான் என்று எழுதிவைத்திருக்கிறார்கள். அதுகூட வேண்டாம். பூகோள அடிப்படையில் தமிழகத்தின் மையப்பகுதி என்பது திருச்சிதான். மாநிலத்தின் அனைத்து பகுதியிலிருந்து இருந்து வருபவர்களுக்கு திருச்சிதான் மையப்பகுதி. மதுரை எனக்கு வேண்டாத ஊர் என்று சொல்லவரவில்லை, அது முக்கியமான நகரம்தான். ஆனால், தலைநகர் என்ற வசதியைப் பொறுத்து பார்த்தோமேயானால் மதுரையை விட திருச்சிதான் பொருத்தமான இடம்”

மதுரையில் எய்ம்ஸ் வரப்போகிறது, உயர் நீதிமன்றக் கிளை உள்ளது, 150 கி.மீட்டரில் துறைமுகம் உள்ளது என தலைநகராக்குவதற்கான காரணங்களை கூறுகிறார்களே?

“இதுபோன்ற அனைத்தும் சென்னையில் மட்டுமே இருப்பதால்தானே அங்கு பிரச்சினைகள் அதிகமானது. அதனால்தானே தலைநகரை மாற்ற வேண்டும் எனக் கூறுகிறார்கள். தண்ணீர் வசதியைப் பொறுத்தவரை வைகையை விட காவிரிதான் அதிக நீர்பிடிப்புள்ள பகுதி. ரயில்வே, விமான நிலையம் என அனைத்துமே திருச்சியை மையப்படுத்தி உள்ளதே. துறைமுகம் என்று எடுத்துக்கொண்டால் கூட மதுரையிலிருந்து தூத்துக்குடியை விட, திருச்சியிலிருந்து நாகைதான் அருகில் உள்ளது. தலைநகருக்கு அனைத்து வசதிகளும் உள்ள இடம் திருச்சிதான்” என்று திருச்சியை தலைநகராக்க வேண்டும் என்ற வாதங்களை முன்வைத்துள்ளார்.

சென்னையில் அதிகரிக்கும் மக்கள் தொகை நெருக்கம், குடிநீர் பிரச்சினைகள், போக்குவரத்து நெரிசல் ஆகிவற்றை குறைக்க இரண்டாவது தலைநகரம் அவசியமான ஒன்றுதான் என்கிறார்கள் பொதுமக்கள்.

 

https://minnambalam.com/politics/2020/08/19/36/the-tamilnadu-second-capital-issue

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.