Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கரிகாலன் கட்டிய கல்லணை: தமிழர்களின் நீர் மேலாண்மை குறித்து நீங்கள் அறிவீர்களா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
  • மு.நியாஸ் அகமது
  • பிபிசி தமிழ்
19 ஆகஸ்ட் 2020
 

தமிழரின் நீர் அறிவை ஒரு கட்டுரையில் முழுமையாகத் தொகுத்துவிட முடியாது. இதில் தமிழர் நீர் மேலாண்மை திறன் குறித்த அடிப்படையான ஒரு சித்திரத்தை மட்டும் தருகிறோம்.

நிலம் தீ நீர்வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் என்கிறது தொல்காப்பியம். 'நீரின்றி அமையாது உலகு', நீர் 'மிகுனும் குறையினும் நோய் செய்யும்' என்கிறார் வள்ளுவர். நீரில்லாமல் இவ்வுலகம் இல்லை என்பதை பண்டைய தமிழர்கள் அறிந்து வைத்திருந்திருக்கிறார்கள் என்பதற்கான வெளிப்படையான சான்று இது.

தமிழரின் நீர் மேலாண்மை திறன் மிக தொன்மையானது. சங்ககாலம் தொட்டு நீரை கொண்டாடி இருக்கிறார்கள், அதை பாதுகாத்து இருக்கிறார்கள். சங்க காலத்தின் முந்நீர் விழவு என நீருக்கு விழா எடுத்திருக்கிறார்கள் தமிழர்கள். பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவம் தமிழர் பண்பாட்டை நீர் பண்பாடு என்கிறார்.

கல்லணையில் உள்ள கரிகாலன் சிலை
 
படக்குறிப்பு,

கல்லணையில் உள்ள கரிகாலன் சிலை

நீர் நிலைகளை குறிப்பிட தமிழகத்தில் ஏராளமான சொற்கள் சங்காலம் முதல் இருந்தன என பட்டியலிடுகிறார் சூழலியல் எழுத்தாளர் நக்கீரன்.

நீர் நிலைகளை குறிக்கும் பெயர்கள்

அகழி, அசும்பு, அலந்தை, ஆவி, ஆறு, இலஞ்சி, இலந்தை, உடுவை, உவளகம், ஊரணி, எல்வை, ஏல்வை, ஏம்பல், ஏந்தல், ஏரி, ஓடை, கண்மாய், கயம், கால், கால்வாய், கிடங்கு, கிணறு, குட்டை,குட்டம், குண்டு, குண்டம், குண்டகம், குழி, குளம், கூவல், கூபம், கேணி, கோட்டகம், சட்டம், சலதரம், சிலந்தரம், சிக்கரி, சுனை, சூழி, சேங்கை, தடம், தடாகம், தம்மம், தாகம், தாங்கல், தரவு, பாக்கம், பொய்கை, மங்கல், மடு, மடுவு, மூழி, வலயம், வாக்கம், வாய்க்கால், வாவி - இவை அனைத்தும் சங்க காலம் முதல் தற்காலம் வரை நீர் நிலைகளை குறிப்பிடும் சில பெயர்கள் என தனது நீர் எழுத்து நூலில் பட்டியலிடுகிறார் நக்கீரன்.

நீர் நிலையை குறிக்க, இத்தனை பெயர்கள் இருப்பதே தமிழர்கள் வாழ்வு நீரோடு எவ்வளவு ஒன்றி இருந்தது என்பதற்கான சான்று.

ஒரு சமூகம், நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கினால் மட்டுமே அதனை சுட்டும் இத்தனை பெயர்கள் இருக்க முடியும்.

ஹரப்பர் நாகரிகம், தமிழர் நாகரிகம் என ஐயமின்றி நிறுவப்படவில்லை என்றாலும் அந்த நாகரிகம் திராவிடர்களுடையதாக இருக்கலாம் என்று பல ஆய்வுகள் நிறுவி உள்ளன.

சென்னை நீர்நிலைகள்

பட மூலாதாரம், Getty Images

 
படக்குறிப்பு,

சென்னை நீர்நிலை 1929ஆம் ஆண்டு

இதனையும் நாம் கணக்கில் எடுத்துக் கொண்டால், இப்போதைய இந்திய நிலப்பரப்பில் வாழ்ந்த ஆதிக்குடிகளின் நீர் மேலாண்மை அறிவு நமக்கு வியப்பை ஏற்படுத்தும்.

ஹரப்பர்களின் நீர் மேலாண்மை நவீனமாக இருந்ததாக குறிப்பிடுகிறார் இந்தியாவின் தொல் வரலாறு குறித்து ஆய்வு செய்து தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வரும் டோனி ஜோசஃப்.

அவர் தனது ஆதி இந்தியர்கள் நூலில், "ஹரப்பர்களின் நீர் மேலாண்மைத் தொழில்நுட்பம் மிக நவீனமாக இருந்தது. பண்டைய உலக்லில் அது போன்ற ஒன்று வேறு எங்கும் இருக்கவே இல்லை, அவர்கள் நீரோடைகளின் குறுக்கே அணை கட்டுதல் உட்படப் பல வழிகளில் நீரைச் சேமிக்க முயற்சிகள் எடுத்திருக்கிறார்கள்," என குறிப்பிடுகிறார்,

தமிழரின் நீர் மேலாண்மை குறித்து குறிப்பிடும் போது, அதில் கல்லணையை குறிப்பிடாமல் இருக்க முடியாது. சர்வதேச அளவில் தமிழரின் நீர் மேலாண்மை அறிவை பறைசாற்றியது கல்லணை.

கல்லணை எனும் மகத்தான அணை

கட்டுரையின் இடை தலைப்பிற்காக கல்லணையை, மகத்தான அணை என கூறவில்லை. கல்லணையை அப்படி குறிப்பிட்டவர் பிரிட்டிஷ் பாசனப் பொறியாளர் சர். ஆர்தர் காட்டன்.

கல்லணை மணற்பாங்கான ஆற்றுக்குள் அடித்தளம் அமைக்கப் பள்ளம் தோண்டினால் நீர் ஊறிக் கொண்டே. நிச்சயம் நீர் ஊற்றில் அடித்தளம் அமைக்க முடியாது. பின் எப்படி கரிகாலன் கல்லணையை கட்டினார்?

இதனை ஆய்வு செய்த ஆர்தர் காட்டன், அணைக் கட்டின் அடித்தளத்தில் 12 அடி ஆழம் வரை குழி தோண்டிப் பார்த்திருக்கிறார். அணையின் ரகசியம் அங்கு அவருக்கு தெரிந்திருக்கிறது. அணை கட்டின் 12 அடி ஆழத்திற்கு கீழே பாறைகள் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி அணை கட்டப்பட்டு இருக்கிறது. அந்த பாறைகளின் இணைப்புக்கு களிமண் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக அவர் கல்லணையை 'மகத்தான அணை' என குறிப்பிட்டு இருக்கிறார்.

தமிழர் நீர் அறிவு: கல்லணை முதல் முறைப்பானை வரை - இவற்றை நீங்கள் அறிவீர்களா?
 

இது குறித்து 'நீர் எழுத்து' நூல் விரிவாகப் பேசுகிறது.

அது போல தமிழரின் நீர் மேலாண்மை குறித்து நீரின்றி அமையாது நிலவளம் என்ற புத்தகத்தை முனைவர் பழ. கோமதிநாயகம் எழுதி இருக்கிறார்.

அதில்,"ஆழம் காண இயலாத மணற்படுகையில் எப்படி அடித்தளம் அமைப்பது என்ற நுட்பத்தை இவர்களிடமிருந்து (கல்லணை கட்டியவர்களிடம்) தான் நாம் தெரிந்துகொண்டோம். இந்தப் பாடத்தைப் பயன் படுத்தி ஆற்றுப் பாலங்கள், அணைக்கட்டு போன்ற நீரியல் கட்டுமானங்களைக் கட்டினோம். எனவே, இந்த மகத்தான சாதனை புரிந்த பெயர் தெரியாத அந்நாளைய மக்களுக்கு நாம் பெரிதும் கடன்பட்டுள்ளோம்." என்று கல்லணை குறித்து ஆர்தர் காட்டன் கூறியதாகக் குறிப்பிடுகிறார்.

நீரியல் மற்றும் நீர்வளப் பொறியலில் முதுநிலைப்பட்டமும் அமெரிக்கா கொலராடோ பல்கலைக்கழகத்தில் நீர் மேலாண்மையில் சிறப்பு பட்டமும் பெற்றவர் பழ. கோமதிநாயகம்.

தமிழர் பாசன வரலாறு, நீரின்றி அமையாது நிலவளம், தாமிரவருணி சமூக பொருளியல் மாற்றங்கள் உள்ளிட்ட ஏராளமான நூல்களையும், தமிழர் நீர் மேலாண்மை அறிவு குறித்து ஏராளமான கட்டுரைகளையும் எழுதி இருக்கிறார் கோமதிநாயகம்.

காவிரியின் குறுக்கே கல்லணை என்றால், வைகை ஆற்றின் குறுக்கே ஏராளமான தடுப்பு அணைகளைக் கட்டி இருக்கிறார்கள் பாண்டிய மன்னர்கள். 12ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகளே இதற்கு சாட்சி.

மதுரையை ஏழாம் நூற்றாண்டில் ஆட்சி செய்த கூன் பாண்டியனும், பராக்கிரம பாண்டியனும் வைகை ஆற்றின் குறுக்கே தடுப்பணையைக் கட்டி இருக்கிறார்கள்.

கி.பி. 650 முதல் 700 வரையிலான காலகட்டத்தில் மதுரையை ஆண்ட கூன் பாண்டியன் எனும் மன்னன் அரிகேசரி, இன்றைய குருவிக்காரன் சாலை அருகே வைகை ஆற்றில் அணை கட்டி, தண்ணீரைக் கால்வாய் வெட்டி பாசனத்திற்குக் கொண்டு சென்றுள்ளான். அந்த கால்வாய் கொந்தகை, கீழடி, திருசுழி வழியாக வீரசோழன் வரையில் இருந்திருக்கிறது என தொல்லியல் ஆய்வாளர் சொ. சாந்தலிங்கம் குறிப்பிடுகிறார்.

சங்ககாலத்தில் ஏரிகள்

தமிழரின் நீர் மேலாண்மை அறிவுக்கான முதன்மையான சான்று ஏரிகள்தான் என்கிறார்கள் வல்லுநர்கள்.

ஏரிகள் குறித்த எண்ணற்ற சான்றுகள் சங்க இலக்கியங்களில் உள்ளன. "சிறுபஞ்சமூலம்" நூலில் காரியாசான் எப்படி ஏரிகள் அமைக்கப்பட வேண்டும் என்ற சித்திரத்தை தருகிறார். அதாவது "குளந்தொட்டு கோடு பதித்து, வழி சித்து உளந்தொட்டு உழவயலாக்கி - வளந்தொட்டு பாடு படுங்கிணற் றோடென்றிவ்வைம் பாற்கடுத்தான் ஏகுசுவர்க்கத் தினிது." என்கிறது அந்த பாடல்.

தமிழர் நீர் அறிவு: கல்லணை முதல் முறைப்பானை வரை - இவற்றை நீங்கள் அறிவீர்களா?

பட மூலாதாரம், Getty Images

 

"குளம் (குளம் தொட்டு). கலிங்கு (கோடு பதித்து), வரத்துக்கால், மதகுகள், மிகைநீர் போகும் கால்கள் ஆகிய வழிகளை அமைத்தல் (வழி சித்து), பண்ணை மேம்பாட்டுப் பணிகள் மூலம் ஆயக்கட்டு பகுதிகளை உருவாக்குதல் (உழுவயலாக்கி) பொதுக்கிணறு அமைத்தல் (கிணறு).ஒரு ஏரியை இந்த ஐந்து அங்கங்களுடன் அமைப்பவன் சொர்க்கத்துக்கு செல்லுவான்," இதுதான் பாடலின் பொருள்.

இது தமிழர் வாழ்வில் நீர் மேலாண்மை எவ்வாறு ஒன்றி இருந்தது என்பதற்கான சான்று.

தற்போது மேற்பரப்பு நீர் மற்றும் நிலத்தடி நீர் ஆகியவற்றை இணைத்து பயன்படுத்த வேண்டும் என்ற கோட்பாடு உலகெங்கும் பரவி வருகிறது. இந்த சிறந்த நீர்மேலாண்மை உத்தி, சங்கம் மருவிய காலத்தில் தமிழகத்திலிருந்திருக்கிறது என்பதை இது நமக்கு உணர்த்துகிறது என்று எழுதுகிறார் பழ. கோமதிநாயகம்.

சூழலியல் பன்மயம்

ஆறுகள்தான் தமிழரின் தாகத்தை தணிக்கிறது என நினைக்கிறோம். ஆனால் உண்மையில் தமிழரின் நீர் தேவைகளை பெருமளவில் பூர்த்தி செய்பவை ஏரிகள் என்கின்றனர் நீர் வல்லுநர்கள்.

இது குறித்து நக்கீரன், " மக்கள் தொகை பெருக பெருக முதலில் ஆற்றோர பகுதியில், ஆற்று பாசனம் இருந்த பகுதியில் வசித்த மக்கள், பின்னர் பரவலாக பல்வேறு இடங்களுக்கு குடியேறுகிறார்கள். அவர்களின் நீர் தேவையை பூர்த்தி செய்ய உருவாக்கப்பட்டதே ஏரிகள். இப்போது நீங்கள் பார்த்தாலும் ஆறுகள் பாயாத இடங்களில்தான் அதிக ஏரி இருக்கும். சென்னை, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகள்" என்கிறார்.

தமிழர் நீர் அறிவு: கல்லணை முதல் முறைப்பானை வரை - இவற்றை நீங்கள் அறிவீர்களா?

பட மூலாதாரம், Getty Images

 

மேலும் அவர், "ஜான் ஆம்ளர் என்கிற அமெரிக்க ஆய்வாளர் தமிழக ஏரிகளைப் பற்றி விரிவாக ஆய்வு செய்து எழுதினார். "ஏரிகள் பன்முகத் தேவைகளை நிறைவுச் செய்யும் ஒரு களஞ்சியம். அதுவொரு மீன் வளர்ப்புப்பண்ணை, மழைநீர் சேமிப்புக் குட்டை, வண்டல் தரும் உரவங்கி, கரப்பு நீர் மேம்பட உதவும் ஊற்றுக்கால், சுற்றுச்சூழலைப் பசுமையாக குளுமையாக மாற்றி வெப்பம் குறைக்கும் இயற்கைக் குளிர் சாதனம். இறுதியில் அதுவொரு பாசனக்குளம்."என குறிப்பிடுகிறார். இதன் மூலம் இயற்கையின் உயிர்சூழலில் ஏரியின் பங்கை நாம் புரிந்துகொள்ள முடியும்," என்கிறார் நக்கீரன்

நாம் காணும் எண்ணற்ற கண்மாய்களும், ஏரிகளும் தமக்குள் ஒப்பற்ற செய்திகளைப் புதைத்துப் கொண்டுள்ள வரலாற்றுப் பெட்டகங்கள். இந்த ஏரிகள் அமைக்கப்பட்டுள்ள தொழில் நுட்பங்கள், தண்ணீரைப் பகிர்வதிலும், சிக்கனமாகப் பயன்படுத்துவதிலும் தமிழர்கள் கடைப்பிடித்த நீர் மேலாண்மைக் கோட்பாடுகள் இன்றளவும் ஏற்புடையவையாக உள்ளன. என்று ஏரிகள் குறித்து எழுதி இருக்கிறார் பழ. கோமதிநாயகம்.

நீர் பங்கீடு குறித்த தரவுகள்

நீர் மேலாண்மையில் முதன்மையான விஷயம் நீர் பங்கீடுதான். இது குறித்தும் ஏராளமான தரவுகள் உள்ளன.

ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபனின் (கி.பி.815-860) கல்வெட்டு ஒன்று ஸ்ரீகண்ட வாய்க்காலில் வரும் நீரை ஒழுங்குபடுத்தி, எந்தெந்த நிலங்களுக்கு, எவ்வளவு நேரம் நீர் பாய்ச்ச வேண்டும்? இந்த நீர் பாய்ச்சலில் யார் யாருக்கு எந்த வரிசைக் கிராமத்தில் பாய்ச்ச வேண்டும் என்பதைக் குறிக்கிறது. இந்த ஒழுங்குமுறை தவறியவர்களுக்குத் தண்டனை வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது என ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார் பழ. கோமதிநாயகம்.

தமிழர் நீர் அறிவு: கல்லணை முதல் முறைப்பானை வரை - இவற்றை நீங்கள் அறிவீர்களா?

பட மூலாதாரம், Getty Images

 

அது போல, புதுக்கோட்டை மாவட்டம் நாஞ்சூர் ஏரியில் தண்ணீர் பங்கீடு செய்வதற்கு "முறைப்பானை" என்ற வழக்கம் 100 ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்ததாக, அவ்வூரார் சொல்கின்றனர் என்றும் ஒரு கட்டுரையில் பதிவு செய்கிறார் கோமதிநாயகம்.

10 முதல் 12 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு பானையின் அடிப் பாகத்தில் சிறு துளையிடப்படும். ஒரு ஏக்கருக்கு ஒரு துளை, ஐந்து ஏக்கருக்கு ஒரு துளை, 10 ஏக்கருக்கு ஒரு துளை என இந்தத் துளைகள் பல்வேறு அளவுகளில் இருந்தன. மதகைத் திறக்கும் அதே நொடியில் நீர் நிரப்பிய பானையின் துளையை திறந்துவிடுவார்கள். பானையின் நீர் முழுவதும் காலியானால் குறிப்பிட்ட அளவு நிலத்துக்கு தண்ணீர் பாய்ந்ததாக கணக்கிட்டனர். இது சுழற்சி முறை பாசனம் என்று அழைக்கப்பட்டது. தண்ணீர் திறந்துவிடும்போது நாழிகை யைக் கணக்கிட ஆட்கள் நியமிக்கப் பட்டிருந்தனர். இதில் தவறு செய்தால் தண்டனையும் வழங்கப்பட்டது. இதனைப் பின்பற்றித்தான் மொகலாயர் ஆட்சிக் காலத்தில் 'வாரபந்தி' என்கிற சுழற்சி பாசனமும், 18-ம் நூற்றாண்டில் பாலாற்று ஏரிகளில் 'மாமூல் நாமா' என்கிற சுழற்சி முறை பாசனமும் உருவாக்கப்பட்டது என்று குறிப்பிடுகிறார் கோமதிநாயகம்.

தற்கால நிலைமை

கல்லணை முதல் முறைப்பானை வரை தமிழர் நீர் அறிவு குறித்து பெருமைப்பட்டுக்கொள்ளக் கடந்த காலங்களில் ஆயிரம் விஷயங்கள் இருந்தாலும், தற்போதைய நிலைமை எதுவும் மகிழ்ச்சி தருவதாக இல்லை.

ஏரிகள்
 
படக்குறிப்பு,

ஏரிகள்

பழம்பெருமை பேசுவது மகிழ்ச்சிதான். ஆனால், கடந்த காலங்களிலிருந்து நாம் கற்றவற்றையும், பெற்றவற்றையும் அடுத்த தலைமுறைக்கு நாம் எடுத்துச் செல்ல வேண்டாமா? இருப்பதை காக்க வேண்டாமா என்கிறார்கள் நீர் செயற்பாட்டாளர்கள்.

சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் அரசு ஆவணங்களின்படி 3,600 ஏரிகள் இருந்தன ஏரிகள் மிகுந்த மாவட்டமாக இருந்த சென்னையில் இப்போது மிச்சமிருப்பது எத்தனை ஏரிகள் என கேள்வி எழுப்புகிறார் நக்கீரன்.

ராமச்சந்திர வைத்தியநாத் எழுதிய சென்னப்பட்டணம் மண்ணும் மக்களும் எனும் நூல் சென்னையிலிருந்த ஏரிகள் குறித்து விவரிக்கிறது.

சூளைமேடு, அரும்பாக்கத்தின் ஒரு பகுதி, வள்ளுவர் கோட்டச் சாலையைக் கிழக்கு எல்லையாகக் கொண்டு, கோடம்பாக்கம் சாலையைக் கடந்து தியாகராய நகரையும் உள்ளடக்கி சைதாப்பேட்டை மர்மலாங்க் பாலம் வரை மவுண்ட் ரோட்டை எல்லையாகக் கொண்டு இரண்டு பெரிய ஏரிகள் சென்னையில் இருந்தன. 5 கி.மீ மீட்டர் நீளமும், 2 கி.மீ அகலமுள்ள அவற்றுக்கு இரட்டை ஏரிகள் என்று பெயர். கூவத்தில் வெள்ளம் பெருகினால் அதன் உபரிநீர் இவ்வேரியின் வழியாகப் பாய்ந்து அடையாற்றில் கலக்கும். இந்த ஏரிகளை கொண்டு நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை பகுதிகளில் விவசாயம் நடந்திருக்கிறது என சுட்டி காட்டுகிறது அந்த நூல்.

சென்னை பெருவெள்ளத்தைத் தொடர்ந்து நீர்வழி அமைப்பு ஓர் அறிக்கையை வெளியிட்டது.

"காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1942 ஏரிகளும், திருவள்ளூர் மாவட்டத்தில் 1646 ஏரிகளும் உள்ளதாக ஏரிகள் குறித்த அரசு ஆவணம் கூறுகிறது. இதில் ஒவ்வொரு ஏரிகளும் சூழலியலில் முக்கிய பங்காற்றின. நிலத்தடி நீரை சேமித்தன. இப்போது அதில் பெரும்பாலான ஏரிகள் பராமரிப்பு இல்லாமல் இருக்கின்றன," என்று அந்த அறிக்கை குற்றஞ்சாட்டியது.

பெருநகர சென்னை பகுதியில் மட்டும் 1971ஆம் கணக்குப்படி 142 ஏரிகள் இருந்துள்ளன. அவை 2.45 டிஎம்சி கொள்ளளவு கொண்டவை. அதாவது 68,600 மில்லியன் லிட்டர்கள் நீரை சேமிக்க வல்லவை. இதில் இப்போது எத்தனை ஏரிகள் உயிருடன் இருக்கிறது? எத்தனை காணாமல் போயின? என அந்த அறிக்கை கேள்வி எழுப்பியது.

https://www.bbc.com/tamil/india-53826135

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.